top of page

எஸ். திருநாவுக்கரசிற்கு​இருபத்தைந்து வயதானபோது...

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 18 hours ago
  • 3 min read
2007 ஜனவரி மாதம் புதியகாற்று இதழில் வெளியான எனது முதல் சிறுகதை.
2007 ஜனவரி மாதம் புதியகாற்று இதழில் வெளியான எனது முதல் சிறுகதை.

மிகச் சரியாகச் சொல்வதானால், அது வெம்மையற்ற உலர் தன்மையுடைய காற்றடி காலத்தின் வழக்கமானதொரு செவ்வாய்க்கிழமை. இயல்புக்கு மீறிய நாவறட்சி தொண்டையிலிருந்து பிரியும் உடலை மேலும் மேலுமென துன்புறுத்தியபடி உதிரக்கரைசலில் பெருகிக் கொண்டிருந்தது வெறுமை ஓர் அருவமான தொடர்ச்சியாய்.


​அந்தப் பேருந்தில் ஏறிய போது சுவாமிநாதனின் மகனான திருநாவுக்கரசு கறுப்பு நிற கார்கோ பேன்ட்டும், வெளிர் சாம்பல் நிற ஆரோ சட்டையும் அணிந்திருந்தான். குறிப்பாக இடது கை மணிக்கட்டில் பழைய சிட்டிசன் குவார்ட்ஸ் வாட்ச்சும் விரல்களைப் பற்றியபடியிருந்த பையில் இரண்டு செட் மாற்று உடைகளும் உள்ளாடைகளும் கைக்குட்டையும் இருந்தன, நாப்தலின் உருண்டைகளின் சுகந்தங்களைச் சுமந்தபடி.


​பெரும்பாலான மனிதர்களின் பயணங்கள் முக்கியமானதா என்பதைப் பற்றி அவனுக்குத் தெரியாதுதான், ஆனால் இப்பயணம் அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற ஒன்றென்பதால் முக்கியமானதே. பேருந்து கிளம்பிய போது சாலையோர மரங்களைக் கவனித்தான். அவற்றின் நிழல் தொடர்ந்து தரையில் விழுந்து மறைந்தபடியிருந்தது. அவ்வளவும் நிறமற்றவை, இவ்வளவிற்கும் காரணமென்னவென்று பார்க்கப் போனால், திருநாவுக்கரசு இருபத்தைந்து வயது நிரம்பியவனாகவும் கொஞ்சம் மாநிறமாகவும் அளவான உயரமுடைய பட்டதாரி இளைஞனாகவும் இருந்தான்.


சித்தர்களின் ரசவாதத்தைக் கண்டுபிடித்து இரும்பைப் பொன்னாக்குகிற அதீத முயற்சியில் இறங்கியபடி தன் ஆய்வுக்கூட செலவிற்காக நகரின் மிக முக்கிய புள்ளிகளை அணுகினான். பலனளிக்காதபடியால், வீட்டிலுள்ள தன் பங்கு உடைமைகளை விற்பதற்கு அனுமதி கேட்டான். கூட்டுறவு வங்கியொன்றில் அலுவலராயிருந்த ஒரு கை சற்றே ஊனமான அவன் தந்தை, அவனுக்குத்தப்படியாய் இருந்த தங்கைக்கு வேண்டுமெனக் கருதி எதுவும் தரமுடியாதென மறுத்துவிட்டார். அவன் எதிர்பாராத ஒன்றாகிவிட்டது இது. தவிர, எந்தவொரு வேலையையும் செய்யக்கூடிய மன நிலையில் அவன் இல்லை. ஆகையால் இன்னும் கொஞ்சம் முயன்று பார்க்கலாம் என்றுதான் தோன்றியது.


​மழைக்காலமாயிருந்த ஒருநாளின் ஈரம் கசிந்த மாலைப்பொழுதில் நிறமற்ற வானவில்லைக் கண்டபடி மொட்டைமாடியில் அவன் நின்றிருந்த சமயம், பூந்தொட்டியிலிருந்து உதிர்கிற தண்ணீர் மூர்க்கமாய் மணலைத் தாக்கியது. நாற்பது வயதில் நாய்க்குணம் என்பார்கள், நாய்க்கு என்ன குணம்? அப்பா இப்போது ஐம்பது வயதைக் கடந்து நூற்றி இருபது நாட்களைப் பூர்த்தி செய்து விட்டிருந்தார். அவ்வப்போது நரை தெரியாமல் இருப்பதற்காக டை அடிப்பதுண்டு. அரசாங்க ஊழியராயிற்றே! என்றாலும் எதற்கும் நேரங்காலம் பார்ப்பதில்லை, அளவுக்கு அதிகமான காமவேட்கை சமையலறை, குளியலறை என இடம் பொருளறியாதபடி, கிளை பரப்பத் துவங்கிவிட்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்திருந்த நேரம், அம்மாவும் கூடவா மாறிப்போய் விட்டிருக்கிறாள்? பாவம் மனுஷிதானே! இருவரும் சல்லாபித்துக் கொண்டிருக்கிற சப்தம் இவனை சலனப்படுத்தியது. சில நாட்கள் நண்பர்களுடன் மேன்ஷன்களிலும் அறைகளிலுமாய்ப் பொழுதைக் கழித்தான். என்றாலும் நிரந்தர மாற்றமே சரியெனப்பட்டது.


​உங்களுக்கு இந்திராவைப் பற்றித் தெரிந்திருக்கலாம், ஒருவேளை நீங்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவராயிருந்தால். திருவைப் போன்ற மா நிறந்தான் என்றாலும் கொஞ்சம் அழகானவள். அதில் அவளுக்கு கர்வமும் உண்டு. திருவின் தங்கையாக இருப்பதற்காக பலமுறை சுயவருத்தம் கொண்டிருக்கிறாள். அவனால் பைசா பிரயோஜனம் இல்லை என்கிற வெறுமை, திருவும் கூட, 'இந்த சனியனாலதான் என் வாழ்க்கையே நாசமாகுது!' என இந்த வார்த்தைகளை அவள் முன் பிரயோகிப்பதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான், வாய்க்காமலா போகும்? வாய்த்தது.


சம்பந்தமில்லாத ஒரு சமயத்தில், இளங்காலைப் பொழுதொன்றில் நகரிலிருந்து பிரிகிற நெடுஞ்சாலையின் பெருவழியில் அவன் தங்கை யாரோ ஓர் இளைஞனுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். இரு சக்கர வாகனத்தின் நிழல் அவர்களைப் பின்பற்றியபடியே சாலையில் ஊர்ந்தது. இது பெரிதுபடுத்துவதற்கான விஷயமில்லை என்று தோன்றலாம், ஆனால் இதற்கான பயணச்செலவாக இரண்டு நாட்களுக்கு முன்பாக அப்பாவிடம் அவள் பெற்றுக் கொண்ட தொகை இரண்டாயிரத்தைத் தொடும், தனக்குக் கிடைக்காததில் இல்லாத பெருவருத்தம் தங்கைக்குக் கிடைப்பதிலிருந்து. ஏதாவது செய்து வீட்டிலிருந்த அவளின் அதீத உரிமைகளைத் தட்டிப்பறிக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆராய்ந்த போது,


​அ) இந்திராவுக்கு அநேக ஆண் நண்பர்கள் இருப்பதும்


​ஆ) அவ்வப்போது தன் ஆண் நண்பர்களோடு சினிமாவிற்குப் போயிருக்கிறாளென்பதும்


​இ) சிலசமயம் தம் நண்பர்களோடு பேசுவது அம்மாவிற்கும் தெரியும் என்றாலும் அதனை பெரிதுபடுத்தியிருக்கவில்லை என்பதும்


​ஈ) இந்திராவின் கடந்த பிறந்த தினத்தன்று குறிப்பிடும்படியாக வேணு என்கிற இளைஞன் ஆர்டின் உருவங்கொண்ட இரண்டு பக்கங்களிலும் லவ் பேர்ட்ஸ் பறவைகளிருக்கிற பரிசொன்றை அளித்துக் கீழே, 'ஆல்வேஸ் வித் யூ' என எழுதியிருந்தது. அது இன்னும் பத்திரமாக அவளின் அறையில் இருக்கிறது.


​இதைப் போன்று இன்னும் சில தகவல்களைத் தெரிந்து கொண்டவன் எப்படியாவது இதனை ஒரு கதையாக்கிவிட்டால் மற்றது தானே நடக்குமென யோசித்தான். இச்சமயத்தில் அவனுடைய புத்திசாலித் தங்கை இவற்றையெல்லாம் அறிந்து கொண்டுவிட்டாள்.


​“உனக்கு என்ன ப்ராப்ளம் திரு?”


​“நீதான்.”


​“நானா?” எனச் சிரித்தவள் “சரி அதுக்கு என்ன பண்ணலாம்?” எனக் கேட்க...


​“உன்னோட உரிமைகளை விட்டுக் கொடுக்கணும்!” எனச் சொல்லியபடியே தலையைக் குனிந்து கொண்டான். அவள் சிரித்தாள்.


​“உருப்படியா ஏதாவது வேலைக்கிப் போ, எல்லாந்தானா வரும்.”


​அவள் அறிவுரை சொன்னாளா அல்லது கேலிக்குச் சொன்னாளா என்பது புரிந்தபாடில்லை. ஏனோ அதன்பிறகு அவனுக்கு அந்த நினைப்பே அற்றுப் போயிருந்தது.


​இருபத்தைந்து வயதில் நீங்கள் காதல் வயப்பட்டவரா என்பது தெரியாது. திரு காதல் வயப்பட்டிருந்தான். அவள் அழகானவளில்லைதான் என்றாலும் மாதம் நான்காயிரத்து ஐந்நூறு ரூபாய் ஊதியம் பெறக்கூடியவளாய் இருந்தாள். இவனைப் போன்ற மாநிறம், சம உயரம், சற்று கனத்த சரீரம். மிக விரும்பினாள் இவனை, வேலையற்றவனாய் இருப்பினும் இவனுடைய நேர்மை காரணமாக. வெயிலற்ற ஓர் பகல் பொழுதில் மதுரையிலிருந்து புறநகர்ப் பகுதியை நோக்கிச் செல்கிற மாநகரப் பேருந்தொன்றில் இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றி அவர்களறியாத விஷயங்களைப் பரிமாறிக் கொண்டபடி, வெயிலோடு ஊர்ந்து செல்லும் நிழலைப் பின்தொடர்ந்தவர்களாய், நீண்டு குறுகிய மேற்தட்டு வீதிகளிலும், ஆரவமற்ற பகல் நேரப் பூங்காக்களிலும் பேசித் தீர்த்தனர். தன் லட்சியம் பற்றி அவன் சொன்ன பிறகு இன்னும் ஆழமாய் அவனை நேசித்தாள்.


​பின்னிரவில் தொலை பேசி வழியே நிறைய பேசிக்கொண்டார்கள். பெரும்பாலும் வார்த்தைகள் ஏதுமற்ற மௌனங்களையே...


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page