top of page

நீலநதி - கிண்டில் பதிப்பு.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 3 minutes ago
  • 2 min read

குருதியில் விளைந்த கதைகள்.


சில கதைகள் நம்மால் எழுதப்படுவதில்லை. அவை நீண்ட காலம் நம்முள் தங்கியிருந்து, சரியான ஒரு தருணத்தைத் தேர்ந்தெடுத்து தாமாகவே வெளியில் நடக்கத் தொடங்குகின்றன. பல ஆண்டுகள் கழித்து அந்தக் கதைகளைத் திரும்பிப் படிக்கும் போது, அவை நம்முடையவைதானா என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது. அந்த அந்நியத்தன்மைதான் எழுத்தின் மிக அமைதியான உண்மைகளில் ஒன்று.


2007 ஆம் ஆண்டு எனது முதல் சிறுகதை வெளியானது. இலக்கியத்தின் மீதான பிடிவாதமான நம்பிக்கையோடு எழுதத் தொடங்கிய என்னை கவனித்து, தங்களது கருத்துகளாலும் விமர்சனங்களாலும் பக்குவப்படுத்திய சில மூத்த எழுத்தாளர்கள் அப்போது இருந்தது என் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். முதல் கதையிலிருந்தே கவனிக்கப்பட்ட எழுத்தாளன் என்ற உணர்வு எனக்குள் இன்றும் ஒரு மெல்லிய கர்வமாக நிலைத்திருக்கிறது. சிற்றிதழ் மரபிலிருந்து உருவான ஒருவனாகவே என்னை இன்னும் அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.


எழுத்து என்ற ஒன்று எப்படி உருவாகிறது என்பதைக் குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஒருவேளை அது நினைவுகளின் மெதுவான திணிப்பாக இருக்கலாம். அல்லது நமது  வாழ்க்கையின் அடுக்குகளுக்குள் தங்கியிருக்கும் ஒரு மங்கலான எதிரொலியாக இருக்கலாம். இந்தக் கதைகளை எழுதிய காலத்தில் தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலங்களுக்குள் பயணிக்கக் கூடிய வாழ்க்கை எனக்கிருந்தது. சேலை ஜாக்கெட் விற்பவனாகவும், கியாஸ் ஸ்டவ்வின் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் ஒருவனாகவும், கனமான மூட்டைகளோடு பேருந்துகளின் இடுக்குகளில் நின்றபடி சுற்றிய நாட்கள் இப்போது நினைவில் மிதக்கின்றன.


அந்தப் பயணங்களில் சந்தித்த மனிதர்களும் நிலங்களும் என் கதையுலகை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த என் புரிதல்களையும்  மாற்றின. சில நகரங்கள் நம்மிடம் பேசாமல் கடந்து செல்கின்றன. சில மனிதர்கள் நம்முடைய நினைவுகளில் மட்டும் நீண்ட காலம் தங்கி விடுகின்றனர். இந்தக் கதைகளின் பல மாந்தர்கள் அப்படிப்பட்டவர்களே.


பூனைகளின் வீடு, ரவிக்கையுள் மறையும் வனம், இருள் மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கெளபீகத்துணி, இருளில் தொலைந்து போனவன்—இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உலகங்களின் கதவுகளைத் திறக்கின்றன. அவற்றில் வாழும் மனிதர்கள் முழுக்க கற்பனை அல்ல. அவர்கள் ரத்தமும் காயங்களும் கொண்டவர்கள். அவர்களில் சிலரை நான் உண்மையில் அறிந்திருக்கிறேன். சில நேரங்களில் அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைதியாகத் தொடர்ந்திருக்கலாம். அல்லது நினைவுகளுக்குள் மட்டுமே வாழும் மனிதர்களாக மாறியிருக்கலாம்.


இந்தக் கதைகளை எழுதத் தூண்டிய நினைவுகளுக்குள் நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் செல்லும் போது ஒரு விஷயம் புரிகிறது. எல்லாவற்றிலிருந்தும் தப்பிப்பதற்கான ஒரு  எத்தனமே எழுதுவதின் அடிப்படையில் இருக்கிறது. அந்தத் தப்பித்தல் சில நேரங்களில் விடுதலையாகவும் மாறுகிறது. கலை மனிதர்களை அவர்களது துயரங்களிலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரே வழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நான் நம்பத் தொடங்கியது அந்த அனுபவங்களின் வழியாகத்தான்.

மிகச் சிறிய வயதில் எழுதத் தொடங்கிய என்னை பொருட்படுத்தி தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியதோடு ஆசிரியர்களாக வழிநடத்திய பல எழுத்தாளர்களை இவ்விடத்தில் நன்றியோடு நினைக்கிறேன். கோணங்கி, க.சீ. சிவகுமார், சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன், சுதீர் செந்தில், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் எனது எழுத்து பயணத்தில் முக்கியமானவர்கள். சென்னை நகரில் எனக்கென ஒரு வாழ்விடத்தைத் தேடும் என் போராட்ட நாட்களில் துணையாக இருந்த நண்பர்களும் இந்த நினைவில் இடம் பெறுகின்றனர்.


எனது முதல் நூலை வெளியிட்ட கவிஞர் மனுஷ்யபுத்திரனை இவ்விடத்தில் நன்றியோடு நினைத்துக் கொள்வதோடு, அவருக்கே இந்நூலை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


லஷ்மி சரவணகுமார்


 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page