“மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்.”
- முமியா அல் ஜமால்.
எல்லா போராட்டங்களுக்கும் ஒரு தொடர்ச்சியுண்டு, அவை தற்காலிகமானவை அல்ல. எங்கெல்லாம் ஒடுக்குமுறையும் அத்துமீறலும் எல்லை கடந்து செல்கிறதோ அங்கெல்லாம் உறங்கிக் கிடக்கும் போராட்ட குணம் தீவிரமாய் கண்விழிக்கிறது. குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பறிக்கும் அரசு தனக்குத் தானே சதிசெய்து கொள்வதைப் போலத்தான். அரசியல் ரீதியாக உந்தப்பட்ட தனிமனிதன் தன் உரிமைகளுக்காக போராடத் துவங்கினால் அவனது எழுச்சியை எதன் மூலமாகவும் தடுத்துவிட முடியாது. புதிய இந்தியா பிறந்துவிட்டதாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் மரியாதைக்குரிய மத்திய அரசு பிரசவம் பார்த்த குருதிக் கறையோடு அறிவித்தபடியே இருக்கிறது. அவர்களுக்கு ஒரு உண்மை புரியவில்லை. எழுச்சிமிக்க ஒரு புதிய தலைமுறை எங்களிடமிருந்து உருவாகி இருக்கிறதென. அவர்கள் ரோஹித் வெமுலாவை படுகொலை செய்யலாம், கெளரி லங்கேஷை சுட்டுக் கொல்லலாம்? உரிமைகளுக்காக போராடுகிறவர்களை படுகொலை செய்வோமென எச்சரிக்கும் காலத்திலேயேதான் ஜிக்னேஷ் மோவானி மாதிரியான இளைஞர்கள் எழுந்து வருகிறார்கள். மக்கள் தங்களுக்குள் இருக்கும் கோவங்களை எல்லாம் இந்த இளைஞர்களின் எழுச்சி மிக்க பயணத்தின் வழியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
எங்களிடம் லட்சியங்களுண்டு. அடையாளமுண்டு. நாங்கள் இந்த மண்ணின் அடையாளங்களை அதன் மான்புகளை ஏன் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம். அல்லது உயிரையும் துச்சமென நினைத்து போராடத் துணிகிறொம்? ஏனெனில் எங்கள் மொழியும் நாங்களும் வேறு வேறல்ல. மொழியை நேசிப்பது மொழிக்கான அடையாளங்களோடு வாழ நினைப்பது பாசிசமென்றால் உங்களோடு நான் கொஞ்சம் உரையாட வேண்டும். உலகமே வியந்து திரும்பிப் பார்த்த நேரத்தில் கென்யாவின் மகத்தான எழுத்தாளன் மானுட குலத்தின் மிகச் சிறந்த சிந்தனாவாதி கூகி வா தியாங்கோ இனி நான் ஆங்கிலத்தில் எழுதமாட்டேன் எனது சொந்த மொழியான கிக்கியூ மொழியில் மட்டுமே எழுதுவேனென அறிவித்தாரே ஏன்? நீண்ட வரலாற்று அடையாளங்களைக் கொண்ட இனங்களிடமிருந்து அவர்களின் அடையாளங்களை பறிக்க, களவாட ஏன் எப்போதும் பெருங்கூட்டம் துடிக்கிறது. வியாபாரம் மட்டுமில்லை. அவர்களுக்காக நம்மை சிந்திக்கவும் அவர்களின் நிழலில் நம்மை அடிமையாக வைக்கவும் முயற்சிக்கிறார்கள். ஒற்றை தேசியத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாநில மக்களின் முதுகிலும் வலிய திணிக்கும் இந்தியப் பெருந்தேசியம், தாங்கள் செய்வது பாசிசம் என்பது புரியாமல் தான் தமிழனை பாசிஸ்ட் என்கிறார்கள். ஒவ்வொரு மாநிலங்களிலும் பேசப்பட்டு வந்த ஏராளமான பூர்வ குடிகளின் மொழிகளை ஒழித்து இன்று முழுக்க இந்திமய மாக்கிவிட்டார்கள். இத்தனை காலம் அந்த மொழியிலிருந்த கலை வடிவங்கள் இனி என்னவாகும்? கதைகள் என்னவாகும்? முன்னோர்களை எதன் வழியாய் அவர்கள் நினைவு கொள்ளப் போகிறார்கள். எல்லாம் வேண்டாமென உதறித்தள்ளிவிட்டு ஒற்றை தேசியத்தின் பின்னால் செல்வதன் ஆபத்தை அந்த மனிதர்களுக்கு எப்படி புரியவைப்பது?
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் போராட்டமொன்றை நிகழ்த்தி ஒரு வருடம் முடியப் போகிறது. எழுச்சியை, சகோதரத்துவத்தை, அன்பை, ஒற்றுமையை ஒருசேர பகிர்ந்து கொண்ட அந்த நாட்களை யாரால் தான் மறக்கக் கூடும்? வங்காள விரிகுடாவில் இப்பொழுதும் எங்களது எழுச்சி மிக்க கோஷங்களை நீங்கள் கேட்க முடியும். அந்த உப்புக் கடலில் உணர்ச்சி கொப்பளிக்கும் எங்களின் குருதி சிந்திய வாடையை இப்பொழுதும் உங்கள் நாசி உணரக்கூடும். நாங்கள் அந்தக் கடற்கரையில் நிகழ்த்தியது போராட்டம் மட்டுமல்ல. எங்கள் அடையாளத்திற்காக நாங்கள் எந்தவிதமான தியாகங்களையும் செய்வோமென உலகிற்கு தந்த செய்தி. எங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கோஷமும் மாற்றத்திற்கான சுவிசேசம். எல்லோராலும் கைவிடப்பட்டு கடற்கரையில் காக்கிகள் எங்களை கொலை செய்யக் காத்திருந்த நேரத்தில் கடல் வழியாய் வந்து உணவும் நீரும் தந்து உபசரித்த மீனவ உறவுகள் செய்த தியாகம் தான் கொஞ்சமா? அவர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு சிதைத்தபோது கூட மனம் தளராமல் அவர்கள் எங்களோடு நின்றார்கள். இந்த இளைஞர்களுக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறதென ஸோ கால்ட் மேட்டுக்குடி ஆட்கள் தங்களது வீட்டு பால்கனிகளில் பக்கோட சாப்பிடபடி பேசிக் கொண்டிருந்த நேரத்தில் “போலிஸ்காரன் தெர்த்தி அடிக்கிற புள்ள ஒவ்வொன்னும் எம் புள்ளிங்கோ, பாத்துட்டு எப்டி சும்மா இருப்போம். என் வூட்ல என் புள்ளைக்கி பாதுகாப்பு குடுப்பேன். அதுக்காக என்னயவும் தீவிரவாதின்னு சொன்னா சொல்லிட்டுப் போ’ என தை எழுச்சி நூல் வெளியீட்டு விழாவில் ஒரு அக்கா சொன்ன போது அவர்களின் கால்களைக் கட்டிக் கொள்ளலாமென மனம் தழுதழுத்தது. அவர்கள் தான் வெடிகுண்டு வீசியதாய் போலிஸ்காரர்கள் போலியான வழக்கொன்றை சித்தரிக்க முயன்றார்கள். அந்த அக்கா போலிஸ்காரர்கள் அவர்கள் வீட்டில் தூக்கி எறிந்த கையெறி குண்டை உலகிற்கே எடுத்துக் காட்டினார். மெரினாவில் கூடிய இளைஞர்களுக்கு நன்றிக்கடன் பட்டதைவிடவும் நூறு மடங்கு அதிகமாய் தமிழ் ச்சமூகம் லூர்துபுரம் மக்களுக்குத்தான் நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும். போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அதை வைத்து அரசியல் செய்தவர்கள் ஆதாயம் கண்டவர்கள் போலிஸ்காரர்கள் எங்களை அடித்து உதைத்தபோது அமைதி காத்த எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல்வாதிகள் எல்லோருக்குள்ளும் இருந்தது என்ன? இவர்கள் இனி எதற்காகவும் இப்படியொரு பெரும் கூட்டம் கூட்டக் கூடாது. உரிமைகளைக் கேட்கும் சமூக மனிதனைக் கண்டு எந்த அரசாங்கம் தான் நடுங்காமல் போகும்.? எந்தப் பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது பாதுகாப்பல்ல, சுயநலம். நமது சுயநலம் தான் அரசியல் இயக்கங்களின் மூலதனமும் லாபமும். தனது உரிமைகளுக்காகவும், தனது இனத்தின் உரிமைகளுக்காகவும் போராடாமல் ஒதுங்கிச் செல்லும் ஒருவன் தன் ஆன்மாவிற்கு துரோகமிழைக்கிறான்.
போராட்டம் துவங்கிய போது இத்தனை தூரம் அது வளருமென எங்களில் யாரும் நம்பியிருக்கவில்லை. ஒருவகையில் ஊடகங்கள் எங்களைப் பயன்படுத்திக் கொண்டது போல் நாங்கள் ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லலாம். பெரும் கூட்டத்தை கடற்கரை நோக்கி திரட்டிக் கொண்டு வந்ததில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. அரசியல்வாதிகளோ தலைவர்களோ இல்லாமல் வழிநடத்தப்பட்ட போராட்டத்தில் தெளிவான நோக்கமிருந்தது. ஏன் நாங்கள் அரசியல்வாதிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்பதற்கு கடந்த காலத்தை பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும். சாதாரண மனிதர்களின் தியாகங்களை அவர்கள் ஓட்டுகளாக மாற்றிக் கொண்டார்கள். செங்கொடி, முத்துக்குமார் எத்தனை எத்தனை தோழர்கள்? அவர்கள் என்றென்றைகும் மக்களால் நினைக்கப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தின் துவக்கம் முதலே பெரும்பாலான கட்சிகள் வேடிக்கை தான் பார்த்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் கைவிட்டபோதும் எப்போதும் போல் எங்கள் இடதுசாரித் தோழர்கள்தான் முதலாவதாக களமிறங்கினார்கள். பெரும் போராட்டமொன்றை நிகழ்த்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களின் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்ட வமுறை சகிக்க முடியாதது. பெண் தோழர்களின் மீது பாலியல் ரீதியாய் அத்துமீறின அந்த போலிஸ்கார்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை. தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையிலிருந்த தோழர்களை கைது செய்ய காவல்துறை துடித்தது. தமிழ் சமூகத்தில் எல்லா பிரச்சனைகளின் போதும் கம்யூனிஸ்டுகள் தான் முதலாவதாக போராட களமிறங்குகிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்குஒரு பிரச்சனை என்று வரும்போது தமிழ் சமூகம் தயக்கமே இல்லாமல் ‘இவங்களுக்கு வேற வேலயே இல்லயா எப்ப பாத்தாலும் கோஷம் போட்டுக்கிட்டு’ என தங்களிடமிருந்து விலக்கியே வைத்துவிடுகிறது. இந்தக் காலகட்டத்தின் மாபெரும் தேவை நாம் நம் உரிமைகளைப் புரிந்து கொள்வதும் அதைப் பெறுவதற்காக போராடுவதும்தான். நாம் ஜனநாயகத்தின் பக்கமாய் நின்று உரிமைகளுக்காக ஒருங்கிணையாத போதே மதவாதிகளும் சாதியவாதிகளும் சாமர்த்தியமாய் தங்கள் பக்கமாய் வளைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
திடீர்ப் போராளிகள் வந்து வழக்கம் போல் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள், தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார்கள், இரண்டு டிகிரி வெயில் அதிகமானாலே ‘நான் ஒரு கோடி நிதி தருகிறேன்’ என அறிவிப்பு மட்டுமே விடுக்கும் நடிகர் வழக்கம் போல் போராட்டத்திற்கும் ஒரு கோடி அளிப்பதாக அறிவித்தார். இந்த ஒரு கோடியை ஓவ்வொரு முறையும் அவர் யாரிடம் கொடுக்கிறார் என யாரேனும் ஆராய்ந்து கண்டுபிடித்தால் நலம். இப்படி தன்னெழுச்சியாய் வந்த பொதுமக்களின் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்ட பொறம்போக்குகளும் இந்தக் கூட்டத்தில் அனேகம். முதலாவதாக கடற்கரையில் வந்து கூடியது சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், பின்பு பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் தோள் கொடுத்தார்கள். ஒரு மாலையைக் கடந்து போவதற்கு முன்னால் களைந்து போய்விடுவார்களென நினைத்திருந்தது அரசு. அங்கே அலங்காநல்லூரில் மக்கள் வேறு வழியில்லாமல் களைந்து போக தொலைக்காட்சிகள் மெரினாவில் கூடியிருந்த மாணவர்களின் போராட்டத்தை உலகிற்கு காட்டிக் கொண்டே இருந்தன. அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்தார்கள். ஒருபோதும் வாடிவாசலையோ ஜல்லிக்கட்டையோ பார்த்திராத பெருநகர இளைஞர்கள் நமக்காக போராடிக் கொண்டிருக்கையில் நாம் ஏன் பின் வாங்க வேண்டும்? ஆம் இந்தப் போராட்டம் பெண்களால் தான் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தை முடித்து வைக்க காவல்துறை அராஜகம் செய்தபோது அடைக்கலம் கொடுத்து பாதிக்கப்பட்டதும் பெண்கள் தான். குறிப்பாக உழைக்கும் பெண்கள். மெரினா புரட்சியின் அடையாளம் தமிழ் சமூகத்தின் உழைக்கும் பெண்கள் தான்.
சிறு வயதிலிருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டையும், கரடிக்கல், பாலமேடு ஜல்லிக்கட்டையும் வெவ்வேறு வருடங்களில் பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால் தொலைக்காட்சியில் கூட ஜல்லிக்கட்டைப் பார்க்காத இளைஞர்களால் எப்படி கொந்தளிப்போடு ஒருங்கிணைய முடிந்தது? ஏன் காவல்துறையின் இத்தனை தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டார்கள். அடையாளம், வீரம், தமிழர் பண்பாடு எல்லாவற்றையும் தாண்டி அவர்களின் கோவம் வெறுமனே ஜல்லிக்கட்டு தடைக்கான எதிர்ப்பு மட்டுமேயல்ல, பல காலமாய் தமிழ் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட எல்லா வன்முறைகளுக்குமான கோவம். ஆனால் அதை சரியான அளவில் நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாமென உயிரின் ஆழத்திலிருந்து கத்திப் பார்த்தோம். ஆனால் அந்தப் பெருங்கூட்டத்தில் எங்களைக் களைத்துவிட இருந்த ஆட்கள் அந்தக் குரலை எழாமல் பார்த்துக் கொண்டார்கள். ஜல்லிக்கட்டிற்காக போராடுவது தேவையற்றதென அறிவுஜீவுகள் அனேகம் கருத்துச் சொன்னார்கள். மொழியையும் அடையாளத்தையும் உரக்க பேசுவது பாசிச மனோபாவமென சமூகத்திற்காக எந்த சின்னஞ்சிறிய புல்லையும் புடுங்கிப் போடத் துப்பில்லாத அவர்கள் எப்போதும் போல் நூறு பேர் மட்டுமே வாசிக்கக் கூடிய சிற்றிதழ்களில் எழுதி கிலேசமடைந்தார்கள். அறிவு அவசியமில்லாமல் வெறுமனே அரிப்பாகி சுற்றும் மனிதர்களை என்ன செய்ய? சிந்தனை என்பது ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கானதாய் அல்லாத போது அதனை நாம் கேள்விகேட்டாக வேண்டும். அன்று எங்களோடு இன்னும் சிலர் நீட் தேர்விற்காக ஒருங்கிணைந்து குரல் எழுப்பியிருந்தால் எங்கள் தங்கை அனிதாவை இழந்திருக்க மாட்டோம். ஜல்லிக்கட்டிற்காக எழுந்த எழுச்சி அனிதாவுக்காகவும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்காகவும் எழாத போது மனமுடையாமல் எப்படி இருக்கும்?
போராட்டத்திற்கான தேவைகள் இருந்தபடியேதன இருக்கின்றன. ஒருங்கிணையும் மனவலிமைதான் நம்மிடையே குறைந்து கொண்டே போகிறது. மெரினா எழுச்சி என்பது இனி பல காலத்திற்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஓர் அடையாளம். எல்லாவற்றையும் நாம் வேடிக்கை பார்த்தபடியே கடந்து போய்விட முடியாது நண்பர்களே. இந்த ஒரு வருட காலத்தில் நாம் இழந்தவை ஏராளம். ஆயிரத்திற்கும் பக்கமாய் விவசாயிகள் மரணித்த போதும் முன்னைப் போல் நாம் களமிறங்கி இருக்கவில்லை. கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே, மெரினா இப்போதும் ரத்த சாட்சியாய் நம் கண் முன்னால் தான் இருக்கிறது. மக்களின் மீதும் சமூகத்தின் மீதும் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் நாம் கவனம் கொள்வோம், நேசிப்போம். அன்பிற்கு லட்சியங்கள் இல்லை, அது புரண்டோடும் வெள்ளம் போல் கரை அணையென எந்த எல்லைக்குள்ளும் ஒளித்துக் கொள்ள முடியாத நதி, மூர்க்கமானதாயும் இலக்கற்றதாயும் இருக்குமதற்கு எக்காலத்திலும் வரம்புகள் இல்லை. இந்த ஜீவிதத்தின் கடைசி நாள் வரை ப்ரியத்திற்குரியவர்களென நாம்நேசிக்கும் ஒவ்வொருவருக்குமாகவே நாம் இருக்க வேண்டும். மக்களை நேசிப்போம், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம், அவர்களுக்காக போராடுவோம்.
Kommentare