top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

வாக்குமூலம் - 4



1


காலை நேரத்தின் பரபரப்பான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த கைதிகள், போலிஸ்காரர்கள் வழக்கறிஞர்களென நிரம்பியிருந்தார்கள். நுழைவாயிலை ஒட்டியிருந்த மரத்தடியில் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனருகிலேயே மூலையில் ஒருவன் மனு எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தான். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒருவன் வாகனங்களை ஓரமாக வரிசைப்படுத்திக் கொண்டிருக்க ஒரு கார் உள்ளே வந்து நிற்கிறது, அதிலிருந்து சிலர் இறங்கிச் செல்கிறார்கள். டீக்கடையின் அருகில் கைதியோடு நின்று டீ குடித்துக் கொண்டிருந்த போலிஸ்காரரிடம் ஒருவன்,


“என்ன ஸார் எதும் ஹாட் நியூஸ் இருக்கா?” எனக் கேட்க, போலிஸ்காரர்

“ரெண்டு ஆக்ஸிடெண்ட் கேஸு, டூப்ளிகேட் வெள்ளிக்குத்துவிளக்கு வித்து ஏமாத்தின கேஸ் ஒன்னு, பஸ்ல பிக்பாக்கெட் அடிச்சதுன்னு எல்லாம் வழக்கம் போலதான் கேசவா...” என சிரித்தார்.


கேசவன் சலிப்போடு “ என்ன ஸார் ஊரு இது? ஏற்கனவே பத்திரிக்கைலாம் முன்ன மாதிரி சர்குலேஷன் இல்லன்னு மூடிட்டு இருக்கானுங்க. இதுல இந்த மாதிரி நியூஸலாம் போட்டா வெளங்குமா? பேசாம நாங்களே இனி ஆள் வெச்சு க்ரைம் பண்ணினாதான் சரியா வரும் போல...” என்றதும்


“சேனல் ல டீபேட்ங்கற பேர்ல நீங்க நடத்தற க்ரைம் பத்தாதாய்யா.” என போலிஸ்காரர் சிரித்தார். அவரிடம் ஒன்றும் தேறவில்லை என்றானதும் கேசவன் வேறு இடம் நோக்கி நகர்ந்தான்.


அருணும் ஞானசேகரனும் அந்த நீதிமன்ற வளாகத்திலிருந்த ஒவ்வொரு கோர்ட் ரூமாகச் சென்று எட்டிப் பார்க்கிறார்கள். ஒரு அறையில் கேஸ் நம்பர் வாசிக்கும் சத்தம் எதிரொலிக்கிறது, இன்னொரு அறையில் வக்கீல்கள் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள், வறண்டாவில் ஆட்கள் குசுகுசுவென சத்தமில்லாமல் பேசிக் கொள்கிறார்கள். ஒரு வக்கீல் தன் க்ளையண்டிடம் “யோவ் உனக்கு நான் வாதாடத்தான் முடியும், ஜாமீனுக்கு காசும் கட்ட முடியுமா? ஏன்யா சாகடிக்கிற?” என புலம்புகிறான். எல்லா கோர்ட் ரூமும் பிசியாக இருந்ததால் இருவரும் அவர்கள் மரத்தடிக்கு வந்து சேர்கிறார்கள். நின்றிருந்த ஆட்களில் ஒருவரிடம் அருண் “ஸார் சரண்டையறதுக்கு மனு எங்க எழுதனும்?” எனக் கேட்க, அவர் வினோதமாகப் பார்த்துவிட்டு


“யாருக்குப்பா?” எனக் கேட்டார். அருண் சேகரனைக் காட்டி “எங்க மாமாவுக்கு.” என்றதும் அந்தாள் “அந்த கார்னர்ல ஒருத்தர் எழுதிட்டு இருக்காரு பாரு அங்க போங்க.” என கைகாட்டினார். நன்றி சொல்லிவிட்டு, இருவரும் மனு எழுதும் இடத்திற்குச் செல்ல அங்கு பெருங்கூட்டம் திரண்டிருக்கிறது. கூட்டத்தை மீறி எழுதும் ஆளை எட்டிப் பார்த்தவன் “ஸார் ஒரு சரண்டர் மனு எழுதனும்...” என சத்தமாய்க் கேட்க, மனு எழுதும் ஆள் ”பொறுப்பா எனக்கென்ன பத்து கையா இருக்கு..” என்றார். சுற்றியிருந்தவர்கள் திரும்பி அவர்களைப் பார்க்க, இருவரும் ஏமாற்றத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு பெரியவர் நிலத் தகராறு காரணமாய் தனக்கும் தன் தம்பிக்கும் உள்ள பிரச்சனையைப் பற்றி விலாவாரியாச் சொல்வதும் அதை மனுவிற்கு ஏற்றபடி திருத்தி எழுதுவதுமாய் இருந்ததைப் பார்த்து “இது இப்ப நடக்கற மாதிரி தெரியல அங்கிள் பேசாம நாமளே எழுதிடுவமா?” என்று அருண் கேட்க, “ம்ஹும் அவங்க எழுதினாதான் சரிப்படும். தெரியாது.... கொஞ்சம் பொறுப்போம்.” என ஞானசேகரன் மறுத்தார்.


சில நிமிடங்களிலேயே அங்கு கூட்டம் முன்னைவிடவும் அதிகரித்ததோடு பகல் பொழுதின் வெக்கையும் கூடியிருந்ததால் இருவருக்கும் வியர்த்து சட்டை ஈரமானது. “இன்னிக்கி சரணடையாட்டி ரொம்ப சிக்கலாகிடும் ல அங்கிள்..” என அவன் சந்தேகமாகக் கேட்க அவர் ‘ம்ம்’ என தலையாட்டுகிறார். “இப்ப என்ன செய்யலாம்.?” என்று அவன் தயங்க, சேகரன் யோசித்து “வா முதல்ல டீ குடிப்போம். அப்றமா இத பாக்கலாம்.” என அவனை அழைத்துச் சென்றார். டீக்கடையின் இடது பக்கமாய் அவர் நிற்க, இவன் மட்டும் உள்ளே சென்று டீக்குச் சொல்கிறான். ஒரு வக்கீல் போலிஸ்காரரிடம் “ஏட்டய்யா இந்த மாசத்துல ஒரு கேஸ் கூட சிக்கல. ஒரு தெஃப்ட் கேஸையாச்சும் நம்ம பக்கம் தள்ளிவிடுங்க,” என்று உரிமையோடு கேட்க, “அட நீங்க வேற, இப்பல்லாம் எவன் வீடு புகுந்து திருடுறான். வேற வேற டெக்னிக்க யூஸ் பண்ணிட்டு இருக்கானுங்க. எங்களுக்கே தெஃப்ட் கேஸ் ஒன்னும் சிக்க மாட்டேங்குது...” ஏட்டு சலிப்பாய்ச் சொல்கிறார்.


அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்க்கும் அருண் “ஒரு பக்கம் என்னடான்னா கேஸ் இல்லாம அலையிறானுங்க. இன்னொரு பக்கம் நீங்க எப்பிடி சரண்டையனும்னு தெரியாம சுத்திட்டு இருக்கீங்க? நல்ல ஊரு இதெல்லாம்?” என்று சொல்ல, ஞானசேகரன் சிரிக்கிறார். கடையில் வேலை செய்யும் முதியவர் இருவருக்கும் வந்து டீ குடுத்துவிட்டுச் செல்கிறார். சூடான கண்ணாடி தம்ளரை கையில் வைத்துக் கொள்ள முடியாமல் அருண் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக் கொள்வதைக் கவனித்த ஞானசேகரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இன்னும் சரியாய் மீசைகூட அரும்பியிருக்காத இனையா நித்யா விரும்பினாள். வலிந்து தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்ள முயன்றபோதும் பள்ளிக்கூட சிறுவனாகவே சேகரனின் கண்களுக்குத் தெரிந்தான். தன்னை கவனிக்கிறார் என்பதை உணர்ந்ததும் அவரின் கவனத்தை மாற்றும் விதமாய் “நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே?” என நெருங்கி வந்தான்.


“கோச்சுகமாட்டேன் கேளு.”

“இத்தன வருஷம் அமைதியா இருந்துட்டு இப்ப ஏன் சரணடையனும்னு தோணுச்சு?”

ஞானசேகரன் அமைதியாக அவனைப் பார்த்தார்.

“நீயும் ஒரு காரணம்.” என்று சொல்ல, ”நானா?” என ஆச்சர்யமாய்க் கேட்டான்.

“ம்ம்... நான் இவாஞ்சலின லவ் பண்ணப்போ இப்ப நீ இருக்க வயசவிட பெரியவன், ஆனா அவ பிரச்சனைன்னு சொன்னப்போ அவ பக்கம் நிக்கனும்னு தோணாம பயந்தேன். நீ சின்னப் பையனா இருந்தாலும் நித்யா வேணும்னு ஸ்ட்ராங்கா இருக்க. ரிலேஷன்சிப் வேல்யூ என்னன்னு இப்பதான் புரிஞ்சது. நான் அவள வேணும்னே கொல்லல தான், ஆனா ப்ளான் பண்ணித்தான் மறச்சேன். அது கொலைய விட கொடுமையான விஷயம். தப்பு பண்ணினவனுக்கு செஞ்சது தப்புன்னு புரிஞ்சு அதுக்கான தண்டனையோ மன்னிப்போ கிடைக்கலைன்னா அது சாவ விட கொடூரமான தண்டன...”

என்றபடியே அவர் டீயின் கடைசித் துளியைக் குடிக்க, அருண் டீ குடித்த டம்ளர்களை வைத்துவிட்டு வந்தான்.


“போலிஸ் ஏன் உங்க கப்ளைண்ட் எடுத்துக்கல, நீங்க செஞ்சது க்ரைமே இல்லன்னு நினைச்சிட்டாங்களோ?” என சந்தேகமாய்க் கேட்க, ஞானசேகரன் சிரித்தார். அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த கேசவன் அருணின் தோள்களைத் தட்டிக் கூப்பிட்டான்.


“நீங்கப் பேசிட்டு இருந்ததக் கேட்டேன். என்ன மேட்டர்னு எங்கிட்ட சொன்னா நான் ஹெல்ப் பண்ணுவேன்.” என்றதும் , ஞானசேகரன் “ஒன்னும் இல்லப்பா நீ கெளம்பு நாங்க பாத்துக்கறோம்.” என்றபடி வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.


“நான் லோகல் ரிப்போர்ட்டர் ஸார். சும்மா சொல்லுங்க. போலிஸே தேடி வந்து உங்க கிட்ட கம்ப்ளைண்ட் வாங்க வெக்கிற மாதிரி செஞ்சுடறேன்.” என்று சிரிக்க அருணும் ஞானசேகரனும் அவனை நம்பிக்கையின்றி பார்த்தார்கள்.

”சரி எங்கூட வாங்க” என ஞானசேகரன் கேசவனை அழைத்துக் கொண்டு ஆளில்லாத இடம் நோக்கி நடந்தார்.


பார்க்கிங் ஏரியா தாண்டியிருந்த ஒரு கட்டிடத்தின் ஓரமாய் நின்றவர் எங்கிருந்து துவங்குவதென யோசித்து ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டார். இவாஞ்சலின் குறித்தும், அவளுடனான காதல் துவங்கி மரணம் வரை எல்லாவற்றையும் கோர்வையாய்ச் சொன்னார். இத்தனை வருடங்கள் யாரிடமும் சொல்லாமல் காத்து வந்த ரகசியத்தை இப்போது ஒவ்வொரு முறைச் சொல்லும்போதும் அவருக்கு யாரோ ஒருவரின் கதையைச் சொல்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. போலிஸ் ஸ்டேஷனில் தான் புகார் செய்ய சென்றதையும், குறிப்பிட்ட இடத்தில் இப்போது சிமெண்ட் ஃபேக்டரி இருப்பதால் ஸ்டேஷனில் புகார் எடுத்துக் கொள்ள மறுத்தது குறித்தும் சொன்னபோது கேசவனுக்கு முகம் வெளிறிவிட்டது. தனக்கு இன்று அதிர்ஸ்டமான தினமென மகிழ்ந்தவன் “என்ன ஸார் பயங்கரமான ஸ்டோரியா இருக்கு? இந்தக் கேஸ எப்பிடி எடுக்காம விட்டாங்க. நீங்க மனுவெல்லாம் எழுத வேணாம். நாளைக்கு சட்டமே உங்களத் தேடி வரும்.” என உற்சாகமாய்ச் சொல்லிவிட்டு அவரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான். “நீங்க இப்போதைக்கு எங்கியாச்சும் சேஃபா இருங்க.” நானே உங்களுக்கு கால் பன்றேன்.” என்றவன் அவர்களுக்கு விடைகொடுத்துவிட்டுச் சென்றான்.


2


பிரச்சனைக்கு முடிவு தெரியும் வரை, தலைமறைவாக இருக்கலாமென்கிற யோசனையில் அருணும் நித்யாவும் பெரம்பலூர் தனலஷ்மி லாட்ஜில் ஞானசேகரனைத் தங்கவைத்திருந்தனர். அறையில் முடங்கிக் கிடந்த சேகரனுக்கு சதீஷும் தன் அண்ணனும் இந்நேரம் எங்கெல்லாம் தேடிக்கொண்டிருப்பார்களோ என கவலையாய் இருந்தது. சூழ்நிலைதான் மனிதர்களை பக்குவப்படுத்துகின்றன என்னும் நிஜத்தை இந்த சிலநாட்களில் சதீஷின் நடவடிக்கைகளில் இருந்து அவர் புரிந்துகொண்டிருந்தார். குடுக்கல், வாங்கல், லாரிகளில் ஏற்படும் பிரச்சனைகள், சரியான நேரத்திற்கு ஃபேக்டரிக்கு மெட்டீரியல் டெலிவரி செய்வதென தனியாளாக எல்லா வேலைகளையும் திறம்பட செய்திருந்தான் தனக்குப் பின்னால் தொழிலையும் குடும்பத்தையும் அவனால் சரியாக வழிநடத்த முடியுமென்கிற நம்பிக்கை வந்திருந்தது.


கதவு திறக்கும் சத்தம் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டவர், உணவோடு வரும் அருணைப் பார்த்தார். தேர்வு காலத்தில் அவனது நேரத்தையும் வீணடிக்கிறோமோ என குற்றவுணர்ச்சியாய் இருந்தது. அருணின் வீட்டிற்கு விஷயம் தெரியும் முன்னால் அவனை பள்ளிக்குத் திருப்பி அனுப்பிவிடவேண்டுமென நினைத்துக் கொண்டார். ‘என்ன அங்கிள் யோசிக்கிறீங்க, வாங்க சாப்டலாம்’ என சிரித்தவனிடம், “ம்ம்ம்.. நித்யா சேஃபா இருக்காளா?” எனக் கேட்டார்.


“அவ சேஃபாதான் இருக்கா. உங்கள வீட்ல வல வீசி தேடிட்டு இருக்காங்க போல. எங்க வீட்டுக்குப் போயி கேட்டு இருக்காங்க.” என்றதும், “உனக்கு இதால ஒன்னும் பிரச்சன இல்லியே அருணு…” என பதறினார். “இதுல என்ன அங்கிள் பிரச்சன? நீங்க பேனிக் ஆகாம இருங்க.” என்றபடி உணவுப்பொட்டலத்தைப் பிரித்து அவரிடம் கொடுத்தான்.

இருவரும் சாப்பிடத் துவங்கியபோது அருண் ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியில் சத்தத்தைக் கூட்டினான். திடீரென மிகுந்த அந்த சத்தத்தைக் கவனித்தபோதுதான் அவருக்கு அங்கொரு தொலைக்காட்சி இருந்த நினைவே வந்தது. ‘என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ..’ என வாட்டசாட்டமான ஒரு பெண் கொஞ்சமே கொஞ்சமான உடைகளோடு ஆடிக்கொண்டிருப்பதை அருண் கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருக்க, ஞானசேகரன் சுவாரஸ்யமில்லாமல் அவன் வாங்கி வந்த உணவை உண்ணத் துவங்கினார்.




3


அரியலூர் மாவட்ட நீதிபதியின் வீடு. மரங்களும் செடிகளும் சூழ, பசுமை அடர்ந்திருந்தது. அதிகாலையில் உறக்கம் கலையாத கண்களோடு செய்தித்தாள் வாசிக்கும் நீதிபதிக்கு ஒருவன் வந்து தேநீர் கொடுத்துவிட்டுச் செல்ல, அதேநேரத்தில் அவரது அலைபேசியில் வாட்ஸப் செய்தி ஒன்று வந்ததற்கான நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்கிறது. செய்தித்தாளை வைத்துவிட்டு அலைபேசியை எடுத்துப் பார்க்க அதில் மாவட்ட செய்திகளிலிருந்து ஒரு துண்டு பக்கத்தை புகைப்படம் எடுத்து ஒருவர் அனுப்பி இருக்கிறார் நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை? என்று துவங்கும் அச்செய்தியை வாசிக்க வாசிக்க அவர் முகம் மாறத் துவங்குகியது. கையிலிருந்த செய்தித்தாளை மடித்து ஓரமாக வைத்தவர் மொபைலில் தன் உதவியாளரை அழைத்து

“யோவ் சதாசிவம், டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர இன்னிக்கி கோர்ட்டுக்கு வரச் சொல்லு. அப்பறம் முதல் கேஸா ஞானசேகரன் கேஸத்தான் விசாரிக்கப் போறேன். அவங்கள எப்பிடி ரீச் பண்ணி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றதுன்னு பாரு...” என உத்தரவிடுகிறார்.


நீதிமன்ற வளாகத்தில் ஞானசேகரனின் குடும்பத்தினர் காத்திருக்க, அவர்கள் நின்ற இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இன்ஸ்பெக்டரோடு இரண்டு கான்ஸ்டபில்களும் படபடப்புடன் காத்திருதார்கள். பத்திரிக்கையில் வந்திருந்த செய்தியை வாசித்திருந்த ஊர்க்காரர்கள் நிறையபேர் குறிப்பிட்ட அந்த கோர்ட் ரூமின் முன்னால் திரண்டிருந்தனர். கூட்டத்திலிருப்பவர்கள் சதீஷையும் அவனோடு இருப்பவர்களையும் ஒருமாதிரியாகப் பார்க்க அவன் அவமானமாய் உணர்ந்தான். தன் முன்னால் குழைந்தவர்கள், கும்பிடு போட்டவர்கள் எல்லோரின் கண்களும் இப்போது அவனை கேலிசெய்வதைப் பார்த்தவனுக்கு கொதிப்பிலும் ஆத்திரத்திலும் ஞானசேகரன் கையில் கிடைத்தால் அடித்தே கொன்றுவிடலாமென்று தோன்றியது.

நீதிமன்றத்திலிருக்கும் அசாதாரணமான சூழலை தனக்குத் தெரிந்த போலிஸ்காரரின் மூலமாய் கேள்விப்பட்டிருந்த கேசவன் காரை நீதிமன்றத்தின் பின்வாசலில் நிறுத்தியிருந்தான். “நம்மள கூப்டற வரைக்கும் இங்கயே வெய்ட் பண்ணுவோம், அதான் சேஃப்டி” என ஞானசேகரனிடம் சொல்ல, அவர் சரியெனத் தலையாட்டுகிறார்.

சரியாக பத்து மணிக்கெல்லாம் நீதிபதி கோர்ட் ரூமிற்குள் வர, அதுவரையில்லாத பரபரப்பு சூழ்ந்துகொண்டது. தன் உதவியாளரிடம்


“டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அப்றம் அந்த ஞானசேகரன் எல்லாரையும் கூப்டுங்க...” என அவர் உத்தரவிட உதவியாளர் வாசலில் நின்ற இன்னொரு ஆள் கோர்ட்டின் பின்பக்கம் செல்ல, வாசலில் இருந்து இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து நின்று சல்யூட் அடிக்கிறார். நீதிபதி ஆமோதித்துவிட்டு காத்திருக்க சதீஷ் தன் குடும்பத்தினருடன் கோர்ட் ரூமில் வந்து ஓரமாய் நின்றான். வாசலில் ஒரு சலசலப்பு எழ, எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். கூட்டத்தை விலக்கி ஞானசேகரன் அருண் கேசவன் மூவரும் உள்ளே வந்தார்கள். ஞானசேகரன் நீதிபதிக்கு வணக்கம் வைக்க, அவரை சரியாகப் பார்த்துக் கொண்ட நீதிபதி ‘இப்டி விட்னஸ் பாக்ஸ்ல வந்து நில்லுங்க’ என்றார். ஞானசேகரன் விட்னஸ் பாக்ஸ் நோக்கி நடந்தபோது அறையின் ஒரு பக்கத்தில் சதீஷும் தன் அண்ணனும் நிற்பதை சில விநாடிகள் கவனித்தார். செருப்போடு விட்னஸ் பாக்ஸில் ஏறப்போனவரிடம் தவாலி அவசரமாய் “செருப்ப கீழயே விட்றுங்க ஸார்..” என்றான். விட்னஸ் பாக்ஸிற்கு பக்கத்திலேயெ செருப்பை விட்டுவிட்டு அவர் ஏறி நின்றார். அருண் கூட்டத்தில் அவருக்கு எதிர்ப் பக்கமாய் போய் நின்றுகொண்டான். நீதிபதி தாமதிக்க விரும்பாமல், “ஞானசேகரன் நீங்கதானா?” எனக் கேட்க, “ஆமாங்கய்யா...” என பதிலுரைத்தார்.


“ஏன் ஸார் படிச்சவர் தான நீங்க, ஒரு கேஸ்ல சரண்டராகனும்னா ஸ்டேஷன் போகனும். இல்லயின்னா கோர்ட்டுக்கு வரனும். அது விட்டுப்புட்டு பத்திரிக்கைக்காரங்க கிட்ட போய் சொல்லியிருக்கீங்க?”

“ஐயா மன்னிக்கனும். போலிஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவ போனேன். என் கேஸ எடுக்க முடியாதுன்னு அடிச்சு துரத்திட்டாங்க. கோர்ட்டுக்கு வரலாம்னு பாத்தா என் வீட்ல இருக்கவங்க என்னய அடச்சு வெச்சு டார்ச்சர் பண்ணிட்டாங்க. என்ன செய்றதுன்னு தெரியாமத்தான் அப்பிடி செஞ்சுட்டோம். மன்னிச்சுக்கோங்க.”

சேகரன் சொன்னதைக் கேட்டு இன்ஸ்பெக்டரை முறைக்கும் நீதிபதி

“ஏன் ஸார் உங்களுக்கு கன்ஃபெஷன் வாங்கறதுல என்ன பிரச்சன?” எனக் கேட்க, இன்ஸ்பெக்டர் படபடப்போடு,


“ஐயா அவர் ஃபேமிலி ல ஏகப்பட்ட பிரச்சன. அவர் கொஞ்சம் மெண்டலி அப்நார்மல் பெர்சன். அதனாலத்தான் நாங்க அவர் சொன்னதக் கன்சிடர் பண்ணல. டாக்டர்ஸ் அவரச் செக் பண்ணி ஹி இஸ் நாட் மெண்டலி ஃபிட்னு சர்டிஃபிகேட் கூட குடுத்திருக்காங்க.” என்றவர் திரும்பி கான்ஸ்டபிளைப் பார்க்க, அவர் ஒரு ரிப்பொர்ட்டை கோர்ட் அசிஸ்டெண்டிடம் குடுக்கிறார்.


அசிஸ்டெண்ட் நீதிபதியிடம் குடுக்க, அவர் அதை பிரித்து படிக்கிறார். சூழல் தனக்கு எதிராய் மாறுவதை உணர்ந்த ஞானசேகரன், “ஐயா, நான் மெண்டல் லாம் இல்லிங்கய்யா. நல்லா ஆரோக்கியமாத்தான் இருக்கேன். இந்தக் கேஸ எடுத்துக்க கூடாதுன்னு என் வீட்ல இருக்கவங்களும் போலிஸ்காரவுங்களும் சேந்து செஞ்ச வேல இது..” என்று சத்தமாய்ச் சொன்னார்.


நீதிபதி பொறுமையிழந்து, “இருங்க ஸார். அதையெல்லாம் விசாரிக்கத்தான நான் இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு திரும்பி இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். “யோவ் இந்த டுபாக்கூர் ரிப்போர்ட் லாம் செல்லாது. அரியலூர் ஜி.எச். ல இருக்க மனநல பிரிவு டாக்டர் கிட்ட செக் பண்ணி எனக்கு ரிப்போர்ட் குடுக்கனும். முறையான மெடிகல் ரிப்போர்ட் வந்ததுக்கு அப்றம் இந்தக் கேஸோட விசாரணை துவங்கும். என்றவர் அதற்குமேல் எதையும் விசாரிக்க விரும்பாதவராய் தன் உதவியாளரைப் பார்த்து ”அடுத்த கேஸக் கூப்டுங்கய்யா...” என சத்தம் போட்டார். இன்ஸ்பெக்டர் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு வெளியே செல்ல, அவருக்குப் பின்னாலேயே சதீஷும் அவன் பெரியப்பாவும் செல்கிறார்கள்.


”உங்க வீட்டுக்குப் போறதுக்கு உங்களுக்கு என்ன பயம்?” என அருண் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகத் தோன்றியதால் அவர் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். அருணின் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த சதீஷ்,

“யோவ் இங்க எதுக்கு வந்த?” எனக் கத்தினான்.


“எதுக்கு வந்தனா? இதானடா வீடு” சேகரன் அப்பாவியாகச் சொல்ல, “அந்த நெனப்பெல்லாம் இருக்கா உனக்கு? அதான் எல்லாரையும் அசிங்கப்படுத்தி தேர இழுத்து தெருவுல விட்டுட்ட ல... இன்னும் என்ன எழவக் கூட்டனும்னு வந்திருக்க? தயவு செஞ்சு எங்கியாச்சும் போயிரு. எங்க உயிர வாங்காத.” என எரிந்து விழுந்தான்.


“எங்கியாச்சும் போறதா? இது என் வீடு. நான் உழச்சு சேத்த சொத்து.”

“ஓ.. அப்போ நீயே இரு... நாங்க போறோம்..”

சதீஷ் வேகமாக உள்ளே செல்ல, ”டேய் கொஞ்சம் பொறுடா…” என

கூப்பிட்டுக் கொண்டே சேகரன் பின்னால் ஓடினார்.

“நா என்னடா தப்பு செஞ்சேன். எதுக்குடா எங்கிட்ட சண்ட போட்ற?”

சதீஷ் அம்மாவையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்ப சேகரன் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார்.


“என்ன செஞ்சியா? ஃபேக்டரிக்காரன் நம்மளுக்கு குடுத்த காண்ட்ராக்ட்ட நிப்பாட்டிட்டான். இனி பொழப்புக்கு என்ன செய்றது? உனக்கு என்ன நல்லா வாழ்ந்துட்ட, உன் மகளுக்கு இப்பயே லைஃப் செட்டில் பண்ணிட்ட. எனக்கு இனி எவன் பொண்ணு குடுப்பான். இத்தன வருஷமா குற்றவுணர்ச்சி இல்லாம இருந்தாராம், இன்னிக்கி திடீர்னு மனசு அரிக்கிதாம். நொட்டுதாம், போய் சரணடையறாராம். வாம்மா ” என அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியேறினான். அருண் வாசலில் நிற்க, இருவரும் அவனை முறைத்துவிட்டுச் செல்கிறார்கள். தனது கையறுநிலையை எண்ணி வருத்தத்தோடு ஞானசேகரன் வாசலிலேயே உட்கார்ந்துவிட, வீட்டிற்குள் இருப்பதா, சதீஷோடு செல்வதா என்கிற குழப்பத்தில் நாய் மட்டும் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது.


”ஃபேக்டரியில் முக்கிய நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கோர்ட்டிலிருந்து நேரடியாக ஃபேக்டரிக்கு வந்த இன்ஸ்பெக்டர், ‘ஒரு கிரிமினல் கேஸ்ல எவிடென்ஸ் வேணுங்கற பட்சத்துல எந்த இடத்த வேணும்னாலும் இடிக்கிறதுக்கு கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்கு. ஏதாச்சும் செஞ்சு தடுக்கப் பாருங்க.’ மேனேஜரிடம் வழக்கின் தீவிரத்தை சொல்லிவிட்டுச் சென்றார். ஊர் முழுக்க ஞானசேகரன் வழக்கோடு இப்போது இந்த ஃபேக்டரியும் ஒரு பேசுபொருளாய் மாறிப்போயிருந்தது. மேனெஜர் சுற்றி வளைத்துப் பேசி நேரத்தை வீணடிக்காமல் நேரடியாகவே அவர்களைச் சூழ்ந்த பிரச்சனையை விவரித்தார்.

“ஃபேக்டரிக்காக வளச்சுப் போட்டதுல பாதிக்கும் மேல பொறம்போக்கு இடம். ஏற்கனவே சுத்தி இருக்க ஊர்க்காரனெல்லாம் ஃபேக்டரியால தண்ணி பிரச்சன வந்துடுச்சு, ஏர் பொல்யூஷன் ஆகிடுச்சுன்னு ஏகப்பட்ட கேஸ் போட்றுக்கான். இப்ப இந்தக் கேஸ் மட்டும் விசாரணைக்கு வந்தா இதையே சாக்கா வெச்சு ஃபேக்டரிக்கு சீல் வெக்க பாப்பானுங்க. எதாச்சும் செஞ்சு கேஸ எடுக்க விடாம செய்யிங்க. முக்கியமா அந்த ஞானசேகரன் கோர்ட்டுக்குப் போகக் கூடாது.” என அழுத்தமாகச் சொல்ல அங்கிருந்தவர்களும் சரியென தலையாட்டினார்கள்.


4


நீதிமன்ற உத்தரவின்படி அரசுமருத்துவமனை மனநல மருத்துவரிடம் சேகரன் அழைத்துவரப்பட்டிருந்தார். இத்தனை நாட்களாய் அரியலூர் மருத்துவமனையில் இப்படியொரு பிரிவு இருப்பதையே அறிந்திருக்காத பலரும் செய்தித்தாளில் ‘ஞானசேகரனுக்கு இன்று மனநல மருத்துவர் பரிசோதனை’ என்கிற செய்தியைப் பார்த்து அங்கு திரண்டிருந்தனர். இது மருத்துவமனை ஊழியர்களுக்கு புதுவிதமான வேடிக்கையாய் மாறிப்போயிருந்தது. ஞானசேகரனைப் பரிசோதித்த மருத்துவர் , “மெண்டலி உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே அப்பறம் ஏன் உங்களுக்கு அப்பிடி சர்டிஃபிகேட் குடுத்தாங்க.?” என ஆச்சர்யமாய்க் கேட்க,

“நானும் ஆரம்பத்துல இருந்து அதான் டாக்டர் சொல்றேன். எனக்கு மெண்டலி ஒரு பிரச்சனையும் இல்ல. இந்தக் கேஸ விசாரிக்கக் கூடாதுங்கறதுக்காக பெத்த புள்ளையே அப்பனுக்கு பைத்தியம்னு சர்டிஃபிகேட் வாங்கி இருக்கான்.” என கவலையோடு சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த மருத்துவர் ,“டோண்ட் வொர்ரி. நான் கோர்ட்டுக்கு ரிப்போர்ட் அனுப்பிடறேன். நீங்க தைரியமா போங்க.” என நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.


மருத்துவரின் அறிக்கை அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்குபின் மறுபடியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். முந்தைய நாளை விடவும் பார்வையாளர் கூட்டம் அதிகரித்திருந்ததைப் பார்த்த வழக்கறிஞர் ஒருவர், பேசாம பார்வையாளர் கட்டணம்னு ஒரு டோக்கன் போட்டு உக்காந்தா நல்லா கல்லா கட்டும் என சிரித்தார். கோர்ட் ரூமில் மூச்சு சப்தத்தைக் கேட்க முடிகிற அளவிற்கு நிசப்தம். அரசு தரப்பு வக்கீல் கொடுத்த அறிக்கையை வாசித்துப் பார்த்த நீதிபதி திரும்பி இன்ஸ்பெக்டரை முறைத்தார். “வாய்யா இங்க..” இன்ஸ்பெக்டர் தயங்கி முன்னால் செல்ல கையிலிருக்கும் மருத்துவரின் ரிப்போர்ட்டைக் காட்டி, “ஒரு கேஸ ஒழுங்கா விசாரிக்கத் துப்பில்லன்னா கம்ப்ளைண்ட் குடுக்கறவன மெண்டலா ஆக்கிடுவீங்களா? எவன் யா உங்களுக்கு சட்டம் சொல்லிக் குடுத்தது?” என கோவமாய்க் கேட்டார்.


“ஐயா அவங்க ஃபேமிலில அந்த மாதிரி செஞ்சதால தான் நாங்க கேஸ் எடுக்க முடியல.”

“போலிஸ்காரனாய்யா நீ, சின்னப்பயலுக மாதிரி சாக்கு சொல்லிட்டு இருக்க. உன்னய நம்பி இனி பத்துக்காசு பிரயோஜனம் இல்ல. இந்தக் கேஸ விசாரிச்சு அறிக்கை குடுக்கும்படி அரியலூர் எஸ்.பிக்கு உத்தரவிடுகிறேன்.”


என அந்த வழக்கு சம்பந்தப்பட்ட காகிதங்களில் அவர் குறிப்பெழுத, விட்னஸ் பாக்ஸில் நின்றுகொண்டிருந்த ஞானசேகரன் அவசரமாய்

“ஐயா எதுக்கு விசாரிக்கிறீங்க. டாக்டர் சொல்லிட்டாரே நான் பைத்தியம் இல்லன்னு. கொல செஞ்சவனே குத்தத்த ஒத்துக்கிட்டேன். என்னய ஜெயில்ல போடுங்க..” என கத்தினார். நீதிபதி எரிச்சலாகி,

”உன் இம்ச பெரிய இம்சையா இருக்கும் போலயே... கோர்ட் ல இனிமே நான் சொன்னா மட்டுந்தான் பேசனும். எங்க வேலைய எப்பிடி பாக்கனும்னு எங்களுக்குத் தெரியும். நீங்க பேசாம இருந்தா மட்டும் போதும். எப்ப பாரு ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்குப் போறேன்னு கத்திக்கிட்டு... காவல்துறைக்கு பத்து நாள் அவகாசம்.அதுக்குள்ள முழுசா விசாரிச்சு ஆதாரத்தோட எனக்கு சப்மிட் பண்ணனும்.” என்று உத்தரவிடுகிறார்.


புதிதாக கட்டிமுடிகப்பட்ட எஸ்.பி அலுவலகம் பிரம்மாண்டமாய் விரிந்திருந்தது. இன்ஸ்பெக்டர் வண்டியிலிருந்து இறங்கிச் சென்றபோது மஃப்டியிலிருந்த காவலர்கள் அவரைப் பார்த்துச் சிரித்தனர். அவர் ஸ்டேஷன் ஆட்களில்லை. ஆனாலும் அன்றைய தினம் கோர்ட்டில் நடந்தது எல்லா ஸ்டேஷனுக்கும் காற்றை விட வேகமாய்ப் பரவியிருந்தது. இரண்டாவது தளத்திலிருக்கும் எஸ்.பியின் அறையை அடைவதற்கு முன்பாகவே அவருக்கு வியர்த்து தாகம் எடுத்ததோடு இன்னொரு புறம் மூத்திரமும் முட்டிக்கொண்டு வருவது போலிருந்தது. செந்துரை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் எஸ்.பியோடு பேசிக் கொண்டிருந்ததால் இவர் வெளியே காத்திருந்தார். இரும்பு நாற்காலிகளை ஒட்டி வைக்கப்பட்டிருந்த குடி தண்ணீர் கேணிலிருந்து இரண்டு மூன்று தம்ளர்கள் தண்ணீரைக் குடித்து முடித்தபோது எஸ்பியின் உதவியாளர் அவரிடம் வந்து, “ஸார் ஐயா கூப்டறாங்க என பவ்யமாய்ச் சொன்னார். சட்டையில் வழிந்த தண்ணீரைத் துடைத்துக்கொள்ளும் பொறுமையின்றி அவசரமாய் உள்ளே சென்று சல்யூட் அடித்தார்.


”இதுக்கொன்னும் கொறச்சல் இல்லயா?”

என எஸ்.பி கேலியாகச் சொல்ல, இன்ஸ்ப்கெடர் தலையைக் குனிந்துகொண்டார்.

“ஏய்யா ஒரு வேலையா நாலு வேலையா ஆக்கறீங்க? அன்னிக்கே கம்ப்ளைண்ட் எடுத்திருக்கலாம்ல.”

“ஸார் அந்தாளு கொல பண்ணி பாடிய மறச்சதா சொல்ற இடத்துலதான் இன்னிக்கி சிமெண்ட் ஃபேக்டரி இருக்கு. எவிடென்ஸ் வேணும்னா ஃபேக்டரிய இடிச்சாதான் முடியும். அது என்ன லேசான வேலையா?’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, எஸ்,பி எரிச்சலாகி

“எங்க இருந்துய்யா இந்த மாதிரி க்ராக்கெல்லாம் வர்றானுங்க. ச்சை... சரி நீங்க இன்ஷியலா அந்தப் பொண்ணு காணாம போன கேஸ ரீ ஓபன் பண்ணி விசாரிங்க. இது இப்ப என் தலையில தான் விடிஞ்சிருக்கு. நானே ஒரு டீம் போட்டு விசாரிக்கச் சொல்றேன். ” என சலிப்போடு சொல்லிவிட்டு அவரைக் கிளம்பச் சொல்லி கையை அசைத்தார். இன்ஸ்பெக்டர் இன்னொருமுறை விறைப்பாய் சல்யூட் அடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.


5


ஞானசேகரன் வீடிருக்கும் வீதி. தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்க, நாய்கள் மட்டும் குரைத்துக் கொண்டிருக்கின்றன. நித்யா தன் குழந்தையுடன் அறையில் உறங்க்கிக் கொண்டிருக்க, உறக்கம் வராத ஞானசேகரன் ஹாலில் தனியாக அமர்ந்திருந்தார். வீட்டில் எல்லோருடனும் சந்தோசமாக இருந்த தருணங்கள் நினைவுக்கு வந்து அவர் மனதை வாட்டியது. தன்னை மீறி எழும் அழுகையை அடக்க முடியாமல் கிடந்தவரின் எண்ணங்களை கலைக்கும்படியாய் ஜன்னல் கண்ணாடியில் வேகமாய் வந்த ஒரு கல் பட்டுத் தெறிக்கிறது. சேகரன் பதறி எழுந்து ஓடிவர, வரிசையாக ஏராளமான கற்கள் ஜன்னலிலும் கதவிலும் விழுகின்றன. நித்யா பதறியடித்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள். “அப்பா... என்னாச்சுப்பா.” பதட்டத்தோடு அவள் கத்த, ஒன்னுமில்லம்மா. நீ பயப்படாத... அங்கியே இரு. நான் வர்றேன்..” என பதிலுக்கு சத்தம் கொடுத்தார்.


சில நிமிடங்களுக்குப்பின் கல் விழும் சத்தம் நின்றுபோனதும் மெதுவாக ஜன்னல் அருகே வந்து பார்த்தார். வாசலில் சிலர் கையில் ஆயுதங்களுடன் நின்றார்கள். கூட்டத்திலிருந்த ஒருவன், “யோவ் பெருசு எங்க எல்லார் பொழப்புலயும் மண்ணப் போட பாக்கறியா? ஒழுங்கா கேஸ வாபஸ் வாங்கு. இல்ல அடுத்த தடவ இப்பிடி வாசல்ல நின்னு கல்ல எறிய மாட்டோம். மொத்தமா வீட்டோட கொழுத்திருவோம்..” என்று சொன்னபடியே கையிலிருந்த கல்லை அவர் நின்ற ஜன்னலை நோக்கி எறிந்தான். கல் ஜன்னலைப் பிளந்து வீட்டிற்குள் வந்து விழுந்தபோது அச்சத்தில் அவருக்கு படபடவென அடித்துக் கொண்டது. பைக்கில் அங்கு வந்த சதீஷ், “அந்த கெழட்டுத் தாயோலி வெளிய வந்தா மொத்தமா முடிச்சு விட்றுங்கய்யா. இருக்கற எல்லாரையும் சாகடிக்கிறான்.” என அடியாட்களிடம் சொன்னான். தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவனைத் தெளிவாகப் பார்த்த சேகரன், “அடேய் சதீஷு அப்பனக் கொல்லச் சொல்ற, நீயெல்லாம் வெளங்காமத்தாண்டா போவ...” என ஆத்திரத்தோடு கத்தினார்.

”ஆமா இப்ப மட்டும் என்ன வாழுது. வெளங்காமத்தான் போயிருக்கு.. த்தூ..”

“என் பாவம் உன்னிய சும்மா விடாதுடா..”

அவர் பேசுவதைக் கேட்டு கடுப்பாகும் சதீஷ் அடியாளிடம் இருந்து ஒரு கல்லை வாங்கி ஜன்னலை நோக்கி எறிய, சேகரன் விலகி உள்ளறைக்கு ஓடினார்.


ஞானசேகரன் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் பயம் அவரைச் சூழத் துவங்கியிருந்தது. பாதி இரவில் அவர் வீட்டிற்குச் செல்லும் மின்சார வயர்களைத் துண்டித்துவிட்டதால் வீடு இருட்டில் மூழ்கியது. ஈபி அலுவலகத்தில் எத்தனை முறை புகாரளித்தும் ஒருவரும் வந்து சரி செய்வதாய் இல்லை. வெக்கையும் புழுக்கமும் நிரம்பிய வீட்டிற்குள் நித்யாவின் குழந்தை அழுதபடியே இருக்க, அவளும் சேகரனும் குழந்தையை சமாதானம் செய்யப் போராடினர். ஈபி பிரச்சனை சரியானபின் காய்கறி கடைக்குச் சென்றவரின் மீது பைக்கில் வந்த ஒருவன் சாணியடித்துவிட்டுச் சென்றான். அவர் அப்படியே உறைந்து போய் நிற்க, தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். இத்தனை வருடங்கள் செய்த பாவத்தை மறைத்து வாழ்ந்த நாட்களில் பெரிய மனிதனென மரியாதை கொடுத்த அத்தனை பேரும் உண்மையைச் சொன்னதும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அவருக்கு எல்லோரின் மீதும் வெறுப்பாய் இருந்தது. சட்டப்படி கிடைக்கப்போகும் தண்டனையை விடவும் சக மனிதர்கள் வெளிப்படுத்தும் இந்த வெறுப்பும் புறக்கணிப்பும் அவர் மனதை சுக்கு நூறாக்கிக் கொண்டிருந்தது.

அந்த ஊரில் அவருக்கென ஆதரவாய் ஒருவருமில்லாததோடு, தன் பொருட்டு நித்யாவும் பாதிக்கப்படக் கூடாதென நினைத்து விடிந்தும் விடியாத காலையில் அவளை அழைத்துக்கொண்டு ஜட்ஜ் வீட்டிற்கு வந்தார். நேரங்கெட்ட நேரத்தில் அவரைப் பார்த்த நீதிபதி குழப்பமானார்.


“கேஸ் கோர்ட்ல இருக்கறப்போ இப்பிடிலாம் வந்து பாக்கறது தப்பு ஞானசேகரன்..” கண்டிப்போடு சொல்ல,

“ஐயா, அன்னிக்கே என்னிய ஜெயில்ல போடுங்கன்னு கேட்டேன். நீங்க விசாரிக்கனும்னு சொல்லிட்டிங்க. இன்னிக்கி என்னடான்னா போறவன் வாறவன் லாம் என்னயக் கொல்லப் பாக்கறான். எப்ப என்னாகும்னு தெரியாம உயிரக் கைல புடிச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கேன். நான் செஞ்ச தப்புக்கு என்னயத் தூக்குல போடுங்க. சந்தோசமா சாகறேன், ஆனா என் உயிர் அனாமத்தா போகக் கூடாது..” என சேகரன் கையெடுத்து அவரைக் கும்பிட்டார். அவர் சொல்வதிலிருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்ட நீதிபதி தனது மொபலை எடுத்து ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்தார்.


“ஹலோ நான் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜ் பேசறேன்...ம்ம் வணக்கம் வணக்கம். இந்த ஞானசேகரன் கேஸ் விசாரிக்கச் சொன்னனே.... ஆமா. அவருக்கு மத்தவங்களால ஆபத்து இருக்கு போல. அதனால விசாரண முடியற வரைக்கும் அவருக்கு போலிஸ் பாதுகாப்பு குடுங்க.” என உத்தரவிட்டவர் “ஒன்னும் கவலப்படாதிங்க. இனி உங்ககூட எப்பயும் ரெண்டு போலிஸ்காரங்க இருப்பாங்க.” என தைரியமூட்டினார். கையெடுத்துக் கும்பிட்டு அவருக்கு நன்றி ஞானசேகரன் தற்காலிகமாக எந்த பிரச்சனைகளும் இல்லையென்கிற நிம்மதியாய் மூச்சுவிட்டார்.






33 views

Comments


bottom of page