top of page

1.06.08 அன்று இறந்து போனவனைநினைவுபடுத்துவதற்கு ஒருவருமில்லை.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 4 days ago
  • 7 min read

2008 ம் வருடம் புது எழுத்து இதழில் வெளியான சிறுகதை.
2008 ம் வருடம் புது எழுத்து இதழில் வெளியான சிறுகதை.

வெறும் உடல்தான். ஆறு மணி நேரத்திற்கு முன்பாகத் தன் இயக்கத்தினை நிறுத்திக்கொண்ட அவ்வுடலின் நிறம் இன்னதென்று அனுமானிக்க வியலாதபடி அடர்த்தியாகிக் கொண்டிருந்தது. கருமையும் சாம்பலும் கலந்த விநோத வர்ணத்தில் முன்பாக அவ்விடத்தினை முழுமையாய் ஆக்கிரமித்து விட்டிருந்த வாடையில், சவமாகிப் போன இவ்வுடலின் வீச்சமும் கரைந்து போய் விட்டிருந்தது. இறந்து கிடந்தவனின் முகத்தில் பல நாட்களாக மழிக்காமலும், பராமரிப்பின்றியும் விட்டுப் போன சிண்டு பிடித்த மயிர், குருவிக்கூட்டினை நினைவுபடுத்துகிறபடி, சுருள் மயிர்கள் அடர்ந்த தலை சற்றே சப்பளித்ததாயிருந்தது.


மாநகரின் நெரிசல் மிக்க பகுதியினை இணைக்கும் அந்தப் பாதாள நடைபாதையில் அதற்கு முந்தைய தினம் வரையிலும் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான், உடன் தன் சகாக்கள் இரண்டு பேரோடு, அந்த நடைபாதையின் இடது பக்க எல்லையில் ஒரு மருத்துவக் கல்லூரி இருந்ததால் பதின் பருவப்...


பெண்களும் பையன்களும் நடமாடியபடியே இருப்பார்கள். அவசரம் நிறைந்த மனித முகங்களையே அதிகம் பார்க்க முடிவதால் மனம் வருந்துபவன், எதற்காக இவ்வளவு அவசரம் என யாரையாவது நிறுத்திக் கேட்கலாமென நினைப்பான். மனித எண்ணிக்கையின் எந்த அடிப்படையிலும் சேராதவர்களாய் சராசரி மனிதர்கள் அவ்விடத்தைக் கடந்து போவார்களேயன்றி நின்று பேசிவிட்டுப் போகிற அளவிற்குப் பைத்தியக்காரர்களில்லை.


அவனும், அவனுடைய நண்பனொருவனுமாய் இனி இவ்விடமே கதியெனத் தஞ்சமடைந்தது சரியாக என்ன தேதி, வருடம் என்கிற விவரங்களெதுவும் இருக்கவில்லை. சுங்கு என்றுதான் அவனைக் கூப்பிடுவான், சுங்குவால் கொஞ்சம் நடக்க முடியும், கை சரியாக வராது. அவன் இவனை சப்பட்டை என்றுதான் கூப்பிடுவான்.


சப்பட்டைக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை என்பதோடு கால்களும் ஊனம். இருப்பினும் நெரிசல் மிகுந்த அந்த நடைபாதைக்கு அவர்கள் இருவர் மட்டுமே அதிபதிகளாயிருந்தனர் நெடுநாட்கள் வரையிலும். துவக்கத்தில் சில நாட்கள் பெரு வியாபாரிகள் சிலர், மாங்காய், வெள்ளரி விற்பதற்காகவோ, கைக்குட்டைகளை விற்பதற்காகவோ கடை விரிப்பதுண்டு. நாளுக்கு நாள் நாற்றமெடுக்கத் துவங்கிய அவ்விடத்தில் வியாபாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தவர்களாய் யாவரும் அங்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் இரண்டு பேருக்கு மட்டுமேயான இடமாக அவ்விடம் மாறிவிட்டிருந்தது. இரண்டு பக்கப் படிகளுக்கும் அருகாமையில் இல்லாமல் மையமான ஓரிடத்தில் போகிற வருகிறவர்களை எல்லாம் பார்க்கிற விதமாக நியூஸ் பேப்பரை விரித்து அமர்ந்து கொள்வார்கள்.


முன்னால் ஒரு துணி விரிக்கப்பட்டிருக்கும், விருப்பமுள்ளவர்கள் பிச்சையிடுவதற்காக. சுங்கு நல்ல சங்கீதக்காரன். ஆண்டிகள் பாடும் பாடல்களை அரையும் குறையுமாய் கொஞ்சம் பாடுவான். எப்பொழுதாவது சந்தோசமாக இருந்தாலோ, அல்லது மிகுதியான சோகத்திலிருந்தாலோ உரத்த குரலில் பாடுவான். தனியாகச் சென்றிருந்தால் ஆண்டிகளைப் போன்ற தகுதியான பிச்சைக்காரர்களில் ஒருவனாயிருக்கலாம். சப்பட்டையின் மீது கொண்ட பிரியத்தின் காரணமாய் அவனை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை.


சராசரி மனிதர்களைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொண்டிராதவர்களுக்கு, தங்களுக்கென்று ஓர் வாழ்க்கை முறையிருந்தது. அதில் பெரும் மகிழ்வுடனும் களிப்புடனும் கழிந்தது அவர்களின் தினங்கள். விரும்பிய நேரத்தில் உறங்கி, விரும்பிய நேரத்தில் விழித்து இப்படி எல்லாவற்றையும் விருப்பம் போலவே செய்தனர். மலங்கழிப்பது மட்டும்தான் நேரத்திற்கு, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் முடிக்க வேண்டும். சுவரையொட்டி நீளமானதொரு காகிதத்தை விரித்து அதன் மேல் முதலில் சப்பட்டை மலங்கழிப்பான். அவ்வளவு எளிதில் அவனால் மலங்கழித்து விட முடியாது. சுங்குவின் தோளைப் பற்றியபடியே முக்கி முக்கி இருந்து முடித்தால் அவன் கழித்த காகிதத்தை மடித்து வைக்கிற போதே இன்னொரு காகிதத்தால் பிருஷ்டத்தைத் துடைத்து விடுவான். பிறகு அதேபோல் இன்னொரு காகிதத்தினை விரித்து சுங்குவும் மலங்கழித்த பின் இரண்டையும் எடுத்துக்கொண்டு வெளியில் சற்று தூரத்திலிருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டு வருவான். நடைபாதையின் ஒரு ஓரத்திலேயே சாவதானமாக சிறுநீர் கழிக்க முடியுமென்பதால் அதைப் பற்றிய கவலையில்லை, சுங்குவின் உதவியின்றி எதையும் செய்ய முடியாத அளவிற்கு சப்பட்டை அவனின் சரிபாதியாகி விட்டிருந்தான்.


சோகத்திலிருக்கையில் சப்பட்டை சொல்லும் பழைய நினைவுகளை ஒட்டிய கதைகள் எத்தனையோ முறை சொல்லப்பட்டும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தோன்றும் இருவருக்கும். பிச்சையெடுக்க வேண்டி அவனை வாங்கிச் சென்றவன் அவ்வப்போது இவன் சில்லறைக் காசுகளைத் திருடுகிறானென்பதற்காக குண்டியில் சூடு வைத்திருக்கிறான். அதற்கும் கட்டுப்படாத இவனின் சேட்டை காரணமாக அசந்த நேரமாக இவனின் ஒரு கண்ணை மட்டும் தோண்டியெடுத்து விட்டதைத் துயரத்தோடு சொல்வான். குண்டியில் பட்ட தழும்பு பல காலத்திற்குப் பின்னும் அழியாததாய் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. அவனொன்றும் அநாதையுமில்லை, ராமேஸ்வரம் ரயிலடிக்கும் கோயிலுக்குமாய் குதிரை வண்டி ஓட்டுபவராய் அப்பா இருந்தார். அம்மா அப்பாவிற்குத் தெரிந்து கூலி வேலை பார்த்தது, தெரியாமல் தாசி வேலை பார்த்தது. வீட்டிலேயே கிடக்கிற இவனால் ஏராளமான பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்ததால் தான் மதுரைக்கார ஏஜெண்ட் ஒருவனிடம் விற்றுவிட்டது. பிறகு பழனிக்கும், திருவண்ணாமலைக்குமாக மாறி மாறி அனுப்பப்பட்டவன், ஒரு கட்டத்தில் திருவண்ணாமலையிலேயே இருந்து விட, அதன் பிறகுதான் சுங்குவைச் சந்திக்க நேர்ந்தது.



தான் பிறந்த வரலாறு பற்றி அதிகம் தெரிந்து கொண்டவனில்லை சுங்கு. மூன்று, நான்கு வயதில் திருச்சி தில்லைநகர் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் அழுகிப்போன குப்பை மேட்டிற்கு அருகில் குப்பையோடு குப்பையாகக் கிடந்தவனை சாமியொன்று தன்னுடன் தூக்கி வந்து திருவண்ணாமலையில் போட்டுவிட்டது. அடிக்கடி அவன் ஆயிருந்து வைக்கிறானென்பதால் சாமியுடனிருந்தவர்கள் சங்கடப்பட, வழியின்றி அவனைப் பிச்சைக்காரர்களிடம் கொடுத்துவிட்டார். சகல ஊட்டச் சத்துகளும் கொடுத்து வளர்க்கப்பட்ட அவனை அதன் பிறகும் கூட சாமி கவனித்துக்கொள்ளத் தவறவில்லை. சாமியும் கூட முழுமையான சாமியெல்லாம் இல்லை, ஆசாமிதான். இரவுகளில் தன்னை மறந்து உறங்கும் பிச்சைக்காரர்களின் தட்டில் சில்லறை திருடுகிற பழக்கமிருந்ததை இவன் மட்டுமே அறிவான். அங்கிருந்த சாமிகள் பாடி, பாடிக் கேட்டவைதான் இவன் பாடுகிற பாட்டுகள் அனைத்தும். சப்பட்டை வந்த பிறகு அவனுக்காகவே காத்திருந்தவனைப்போல் சங்கமித்து விட்டான்.


பதின்மூன்று பதினான்கு வயதிருக்கும், முதல் முறையாக அவர்கள் சந்தித்துக்கொண்ட பொழுது. அதன்பிறகு இரண்டு மூன்று வருடங்கள் இரண்டு பேரும் ஒன்றாகவே திரிந்தனர். ஒரு வெள்ளிக்கிழமையன்று குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்த இளம் பெண்ணொருத்தி வரிசையாக ஒவ்வோர் ஆளிற்காய் சில்லறையைப் போட்டுக்கொண்டு வந்தாள். அவளுக்குப் பின்புறமாக அவளின் தங்கை என்று சொல்லக் கூடிய அளவில் இன்னொரு பெண்ணும், இரண்டு குழந்தைகளும், உடன்


இரண்டு ஆண்களுமாய் வந்து கொண்டிருந்தனர். சப்பட்டையை நெருங்கி அவள் குனிந்த போது இவன் அவளின் முலைகளில் ஒன்றைப் பிடித்து அமுக்கிவிட்டான். சில நொடிகள் என்ன நடக்கிறதென யூகிக்க முடியாமல் யாவரும் திகைத்து நிற்க, ஆ ஊவென அப்பெண் கத்தத் துவங்கிவிட்டாள். சுற்றியிருந்த யாவரும் ஓடிவந்து சரமாரியாக உதைக்கத் துவங்கிவிட்டனர். சுங்கு அவனைக் காப்பாற்றும் பொருட்டு இடையில் புகுந்து தடுக்க சரிபாதி அடிகள் அவனுக்கும் விழுந்தன. வந்தவளின் முலையைப் பிடித்து இழுத்தது இவன் குற்றமா என்ன? கனத்து உருண்ட உடலோடு குனிந்து குனிந்து வந்த பெண்ணின் உடலில் மயங்கிப் போனவன் இப்படிச் செய்து விட்டான். இரண்டு பேருக்குமே உடல் முழுக்கக் காயம் பட்டு உதிரம் வழிந்து கொண்டிருந்தது. சோர்ந்து போகும் வரை அடித்துத் துவைத்துவிட்டு சுற்றியிருந்தவர்கள் சென்றுவிட்டனர். உடனிருந்த தொழிலாள நண்பர்களும் இவர்களைப் புறக்கணித்து ஒதுக்கிவிட அன்றைய இரவில் வலியையும் மீறிய ஆர்வத்தில் சுங்கு சப்பட்டையிடம் கேட்டான்.


“உனக்கேண்டா இப்படியொரு கெட்ட எண்ணம்? அவளோடத பிடிக்கப் போறன்னு முன்னையே சொல்லியிருந்தா, பின்னாடி வந்தவளோடத நான் பிடிச்சிருப்பேன்ல... சரி எப்படி இருந்திச்சி பிடிச்சப்பம்?” எனக் கேட்கவும், வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டிருந்த சப்பட்டை, “எளவு ஒரு கையல அடங்கல பாத்துக்க. நல்ல மொசக் குட்டியாட்டம் வெது வெதுன்னு சூடா இருந்திச்சி.” இப்படிச் சொன்னவனை “அதிர்ஸ்டக் காரன்டா நீ” என அவனின் தொடை தட்டிச் சிரித்தான். பாதி இரவு தாண்டிய பின்னும் உறக்கம் பிடிக்காமல் அவ்வப்பொழுது கையை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சப்பட்டை.


அடுத்த நாளிலிருந்து அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவர்கள் மட்டுமே விலக்கப்பட்டவர்களாகிப் போயினர். இப்பொழுதுதான் தங்களை சுதந்திரமாக உணர்ந்தனர். தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிற அளவிற்கு வந்த வருமானத்தில் மிச்சம் பிடிக்கவும் பழகியிருந்த அவர்களுக்கு மிச்சப்படுத்துகிற பணத்தில் செய்வதற்கென ஏராளமான கனவுகள் இருந்தன. ஒரு நாளேனும் பெரிய ஹோட்டலுக்குச் சென்று சேரில் உட்கார்ந்து சாப்பிடுவது, தியேட்டரில் போய் படம் பார்ப்பது, வாய்ப்பிருந்தால் ஒரு விபச்சாரியைப் புணர்வது என சிறியதும் பெரியதுமாய் ஏராளமாயிருந்தன. சாப்பிடுவதற்குத் தேவையானவற்றை வாங்குவதிலிருந்து பீடி, தண்ணீர் போன்ற எல்லாவற்றிற்கும் சுங்குதான் போவான். சப்பட்டை வெளியில் எங்கும் போகமாட்டான், மிக அரிதாகக் குளிக்கப் போகிற நேரங்களைத் தவிர, அவர்கள் இருவருக்குமான உலகம் அவர்களிலிருந்து துவங்கி அவர்களுடனேயே முடிந்து விடுவதாய் இருந்தது.


பகல் நேரங்களில் கோயிலுக்கு வந்து போகிற பெண்களின் உடலை பார்வையாலேயே புணர்வது, அதைப் பற்றிய உரையாடல்களை வளர்ப்பதும்தான் அவர்களின் பிரதான ஜோலி. உடைகளையும் மீறி உடல்கள் ஏற்படுத்துகிற தாக்கம் ஒருபோதும் அவர்களால் புரிந்து கொள்ளமுடியாதவொன்று. ஒரு பெண்ணின் வாசனை, சேலை நுனி தீண்டல், வசீகரமான புன்னகை என எவ்வளவோ விஷயங்களை மிகத் தீவிரமாகக் கவனித்து அதனைப் பதிவு செய்தபடியே இருந்தனர் மனவெளியில். ஒரு நாள் மாலையில் கடைக்குச் சென்று திரும்பிய சுங்கு, ஏழெட்டு மடிப்புகளாகக் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை ரகசியமாக அவனிடம் காட்டினான்.


எழுத்துகள் எதுவும் இல்லாத அப்புத்தகத்தில் முழுக்க முழுக்க உருவங்கள்தான். நிர்வாண நிலையில் இணைந்தும் பிணைந்தும் கிடக்கிற ஆண், பெண் உருவங்கள், பல நாட்கள் வரை அந்தப் புத்தகத்தினைப் பாதுகாத்து வந்தவர்கள் நிறம் மங்கிப்போன பின்னும் விடவில்லை. அந்தப் புத்தகம் கிடைத்திருந்த மூன்றாவது நாளில் தான் அவர்களுக்கிடையேயான வேறுவொரு உறவு துவங்கி விட்டிருந்தது. சக தொழிலாள நண்பர்கள் படுத்திருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளிப் படுத்திருந்த இவர்கள் பேசியபடியே ஒருவர் மாற்றி ஒருவர் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். சுங்குவின் உடலைத் தடவிய சப்பட்டை மிகுந்த ஆர்வத்தோடு அவனின் குறியினைப் பிடித்து அமுக்கிவிட்டான். இவன் கைப்பட்ட சில நொடிகளிலேயே எதிர்பாராத பிரம்மாண்டத்தினைப் பெற்றுவிட்டிருந்தது அவனின் குறி. நெருக்கம் அதிகமாகி இருவரும் மூர்க்கமாக அணைத்து முத்தமிடத் துவங்கினர். மிகுந்த தீவிரத்தில் அவர்கள் புணர்ந்து கொண்டிருந்த சத்தம் அருகில் படுத்திருந்தவர்களின் தூக்கத்தினைக் கலைத்துவிட்டது.


“அடச்சி என்னடா செய்றீங்க? கோயில் ஸ்தலத்துல...” என குண்டி நோண்டி துரைச்சாமி கேட்கும் நேரத்திற்கெல்லாம் முக்கால் வாசிக்கும் மேலாக சுங்குவின் குறி சப்பட்டையின் பிருஷ்டத்தில் இறங்கி விட்டிருந்தது. அவசரமாக இருவரும் உடலைப் பிரித்து எழுந்ததும் சுற்றியிருந்தவர்கள் இவர்களை என்ன செய்வதென வெறியெழுந்தவர்களாய்ப் பார்த்தனர். ஒவ்வொருவரும் ஏசியதைக் கண்டுகொள்ளாதபடி இவர்கள் அவ்விடத்திலிருந்து நகர்ந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு மற்றவர்களின் இம்சை தாங்காமல் இருவரும் திருத்தணிக்குச் சென்று விட்டனர். அங்குதான் முழுக்க அவர்களுக்கான புரிந்து கொள்ளப்பட்ட உறவு பலப்பட்டிருந்ததோடு உடல்களைத் தாண்டிய பிணைப்பும் ஏற்பட்டது.


முதல் முறையாக ஒரு பெண்ணுடன் புணர நேர்ந்தது இங்குதான். நாற்பத்தேழு வயதாகிப் போன அந்தப் பெண் குளிப்பது, பல்துலக்குவது போன்ற வழக்கமான கடமைகளில் விருப்பங் கொள்ளாதவள். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவளாய்த் தோன்றும் அவள் பிச்சையெடுக்கவும் விரும்பியிருக்கவில்லை. எங்காவது ஓரமாயப் போய் படுத்துக்கொள்ளும். விருப்பப்பட்டவர்கள் அதற்கு உணவோ, டீயோ வாங்கிக் கொடுக்கலாம். இப்படி அரைகுறையாக உணவு உட்கொண்ட போதும் கூட உடல் மட்டும் பூசணிக்காயாட்டம் பெருத்துப் போயிருந்தது. சப்பட்டை முதலில் அவளைப் புணர்வதைப் பற்றிய யோசனையை சுங்குவிடம் சொல்ல...


ஓரிரவில் இருவரும் அவளை அணுகினர். மறுப்பேதும் சொல்லாததோடு கட்டணம் கேட்கவில்லை என்பதால் மறுதினம் அவர்களிருவரும் அவளுடன் சங்கமித்து எழுந்தனர். இன்னதென்று சொல்ல முடியாத துர்வாடையொன்று தீவிரமாக அவளுடலில் அடித்தபோதும் எதையும் பொருட்படுத்தாமல் சுங்கு எளிமையாகவே முடித்துவிட்டான். சப்பட்டைக்குத்தான் அவளைப் புணர்வது சவாலாகவும், சிரமமாகவும் இருந்தது. எவ்விதமான அசைவுகளுமின்றி படுத்துக் கிடந்தவளின் பிரம்மாண்ட உடலும், வீச்சமும் புணர்ச்சியின் தீவிரத்திலும் கூட சகிக்க வியலாததாயிருந்தது. அன்றோடு அவளைப் புணர்வது பற்றிய விருப்பங்கள் சப்பட்டைக்கு நீர்த்துப் போனாலும் சுங்கு மட்டும் அவ்வப்போது புணர்ந்துவிட்டு வருவான்.


கோயில் ஸ்தலங்களே வேண்டாமென்னும் முடிவுடன் இம்மாநகருக்கு வந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை முறை மிகச் சுருக்கமானதாகப் போயிருந்ததோடு புணர்ச்சி என்பது அவர்களிருவருக்குமானதாக மட்டுமே சுருங்கிப் போனது. 'காதலின் தீவிரம் மிகுந்த நாட்களில் ஒரு ஆணும் ஆணும் புணர்வதைவிட சுவாரஸ்யமானதில்லை ஒரு பெண் பெண்ணுடன் புணர்வது' என்பதைத்தான் நிஜமென நம்பினர் இருவரும்.


இதனைச் சலனப்படுத்தும்படி அந்நடைபாதையே தஞ்சமென இன்னொரு ஜீவனும் ஒருநாள் அங்கு வந்து சேர்ந்தது. பிற்பகலைத் தாண்டி அவள் வந்தபோது அவ்வளவு பெரிய இடத்தில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருப்பதைப் பார்த்ததும் அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாமென்கிற எண்ணத்தில் தானாகவே போய் அறிமுகப்படுத்திக்கொண்டாள். வடிவம்மையென தன் பெயரைச் சொன்னவளை வட்டாமைய என்றுதான் இவர்களிரண்டு பேரும் கூப்பிட்டனர். மொத்தமே முப்பது நாற்பது கிலோவிற்குள்தான் இருக்கும் அவளுடல். எழுந்தெல்லாம் நடக்க முடியாது, கால்களைப் பரப்பி கைகளை ஊண்டித்தான் நடக்கும். அவள் பேசுவதில் பாதிக்கும் மேல் புரியாததாயிருந்தது. ஆந்திரக்காரியாக இருக்கலாம். நிறம் மங்கிப் போன பச்சை நிற ஆடையொன்றை அணிந்து அதற்கு மேலாக பெயருக்கு ஒரு துணியைப் போட்டிருந்தாள்.


ஒரே குடும்பமாகிப்போன அவர்கள் அன்று மாலைக்குள்ளாகவே நிறைய பேசிவிட்டனர். அன்றைய இரவில் மூவருக்குமாகச் சேர்த்து சுங்கு உணவு எடுத்து வந்தான். உலர்ந்த இட்லியென்று சொல்ல முடியாத கொஞ்சம் இட்லிகளையும், ஒரு பிளாஸ்டிக் கவரில் கொஞ்சம் சாம்பாரையும் கொண்டுவந்திருந்தான். சாம்பாரில் மூத்திரம் இருந்து கொடுப்பார்கள் போல, நுரை நுரையாய் அப்படியொரு வீச்சம். அருகருகே அமர்ந்து மூவரும் பேசியபடியே சாப்பிட, வந்ததிலிருந்து ஒட்டித் தொங்கிப்போன அவளின் முலைகளை கவனித்துக் கொண்டிருந்த சப்பட்டை, விசுக்கென பிடித்துக் கசக்கினான். “ஒரே ஏமிரா நுவ்வு... தேவுடியாப்பயலே... வுட்ரா... வுட்ரா...” என தெலுங்கிலும் தமிழிலுமாய் மாறி மாறி கத்தத் துவங்கினாள். பொறுத்துப் பார்த்த சுங்கு முடியாமல் போகவே அவளைப் பின்னால்


இழுப்புச் சாய்க்க எதுவும் செய்ய முடியாதவளாய் வீழ்ந்தாள். வன்மத்துடன் அவள் மேலேறி சப்பட்டை புணர்ந்தான். சுங்குவிற்குப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ஒன்றும் செய்ய முடியாதவளாய், “அய்யோ ஏன் சாமி அவசரப்படுறீங்க? பொறுமையா ஒருத்தொருத்தரா செய்ய வேண்டியதுதான...” என முனகினாள். சிரித்தவனாய் சப்பட்டை விலகி சுங்குவிற்கு வழிவிட்டான். சுங்குவின் மூர்க்கத்தைப் பொறுக்க முடியாமல் கண்ணை இறுக மூடியவளாய்க் கிடந்தவளைப் பார்த்த சப்பட்டை சிரித்துக் கொண்டான். அவன் விலகிச் செல்லும் நொடியினை எதிர்பார்த்தபடி, உடலை இறுக்கினாள். இவ்வளவையும் கவனித்தப்படியோ, அல்லாமலோ வேகமாக விடிந்து கொண்டிருந்தது அன்றைய இரவு. மறுநாள் பிற்பகல் வரையிலும் உறங்கிக் கொண்டிருந்த வட்டாமையைச் சாப்பிடுவதற்கு சப்பட்டை எழுப்பிய போது ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள். பிறகு சிரித்தபடியே நகர்ந்து சுவரையொட்டி மூத்திரம் பெய்யப் போய்விட்டாள். கறைபடிந்த அவளின் பற்கள் சிரிக்கையில் வசீகரமாவே இருப்பதாகப் பட்டது இவர்களிருவருக்கும்.


சந்தோசமும் இணக்கமும் நிறைந்த இவர்களின் நாட்களில் துவக்கத்தில் சுங்குவைப் பார்த்து இருந்த பயங்கூட அவளுக்கு நாளடைவில் மறைந்துவிட்டிருந்தது. சப்பட்டைக்குச் செய்வது போலவே சகல காரியங்களையும் இவளுக்கும் செய்வதற்குப் பழகிவிட்டிருந்தான். அருவருப்பின்றி தன் மலத்தினைத் தொட்டு எடுத்துப் போடுவது வட்டாமெக்கும் பிடித்திருந்தது. எதிர்பாராதவிதமாய் அடுத்து சில நாட்களுக்குள்ளாகவே பால்வினை நோயின் தீவிரத்தில் சுங்குவின் குறியைச் சுற்றிலும் வெண் படலமாய் சீழ் படியத் துவங்கிவிட்டிருந்தது. கடும் வீச்சத்தினைக் கசியவிட்டபடி. அவனும் தனக்குத் தெரிந்த கை வைத்தியங்களை எல்லாம் செய்து பார்க்காமலில்லை, அப்படியும் அதிகரித்ததே ஒழிய குறைந்திருக்கவில்லை. சப்பட்டையே கூட சிலசமயங்களில் பயப்படும் அளவிற்கு மாறிப்போனதால் அவனை அருகில் விட மறுத்துவிட்டாள் வட்டாமைய. ஆதரவாக சப்பட்டையும் பேசிய போதுதான் சுங்குவிற்கு ஆத்திரமாயிருந்தது. வழியின்றி அவர்களை சில நாட்களுக்குத் தவிர்த்து விட்டான் இவனும். கொஞ்சமாய்


பாதிப்புகள் குறைந்ததைப் போலாகி விட்டிருக்க, மீண்டும் அவளைப் புணர வேண்டுமென தீவிரமாக இருந்தவனிடம் இனியொருபோதும் படுக்க முடியாதென மறுத்து விட்டாள். இவள் வெறுத்து ஒதுக்கிய தினங்களில் சப்பட்டை தன்னை முழுமையான பெண்ணாய் அவனுக்குக் கொடுத்தான். அவள் உடலின் மீது கொண்டிருந்த வெறியனைத்தையும் இவனைப் புணர்கையில் சுங்கு வெளிப்படுத்த வெறி சூழ்ந்த அவனை சமாளிக்க முடியாதவனாய் சப்பட்டையும் அவனைத் தவிர்க்கத் துவங்கினான். தான் தனிமைப்படுத்தப்படுவதான ஏக்கம் நாளுக்கு நாள் சுங்குவிற்கு அதிகரித்திருந்தது.


அவனோடு நெருங்கிப் பழகும் பட்சத்தில் தங்களைப் புணரக் கேட்பானோ என்னும் அச்சத்தில் அவர்களிருவரும் மிகக் குறைவாகவே சுங்குவிடம் பேசினர். இவன் எப்பொழுதும் போல் அவர்களுக்குச் சாப்பாடு வாங்கி வந்து கொடுப்பது, கழித்து வைக்கிற மலத்தினை எடுத்துப் போடுவது என எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான். விருப்பமற்ற அவ்விடத்திலிருந்து வேறெங்காவது சென்றுவிடலாமென அவள் அடிக்கொருதரம் தூண்டிக் கொண்டிருந்தாள். சுங்குவின் மீது கோபமும் வருத்தமும் இருப்பினும் அவனை முழுமையாக விலக்கிச் செல்வதனை இவன் விரும்பியிருக்கவில்லை. சுங்குவிற்குமே புணர்ச்சி பற்றிய எண்ணங்கள் வடியத் துவங்கி விட்டிருந்ததோடு உடலும் தளர்ந்து போயிருந்தது.


ஒருநாள் காலையில் வழக்கம்போல் வட்டாமைய கழித்த மலத்தை எடுக்கப் போன சுங்கு சாதாரணமாக அவள் குறியைத் தொட்டு விட கோபங் கொண்டவளாய் அவள் அவனைத் தள்ளிவிட்டாள். சப்பட்டையும் வெறிகொண்டு திட்டத் துவங்க எதுவும் பேசமுடியாதவனாய் வெளியேறிப் போனான். பகல் முழுக்க அவன் திரும்பியிருக்கவில்லை, மீண்டும் தன் இருப்பிடத்திற்குத் திரும்புகிற நேரத்தில் பெருமளவு புற உலக இயக்கம் குறைந்து போய்விட்டிருந்தது. கீழே வழக்கம் போல் சப்பட்டையும், அவளும் புணர்தலின் தீவிரத்தில் பிணைந்து கிடந்தனர். திரும்பிச் சென்றுவிடலாமென ஒருபுறம் தோன்றினாலும், இன்னொரு புறத்தில் வேதனை மிகுந்த தன் மனதினை மேலும் காயப்படுத்துகிற விதமாய் அவர்கள் புணர்ச்சி கொள்கிறார்களோவென வெறியெழுந்தது. சாதாரணமாக அவர்கள் புணருகையில் இவன் விழித்திருப்பதைக் காண நேர்ந்தால் கொள்ளும் சலனங்கூட இன்றில்லை. கால்களைப் பரப்பிப் போட்டபடி சப்பட்டையின் உடலுக்கு மேலாக அவள் ஏறியிருந்தாள்.


மெல்ல இறங்கி வந்தவன் “சப்பட்ட...” எனத் தயங்கியபடியே “நான் ஒருக்கா செஞ்சிக்கிறண்டா...” எனக் கேட்டான். கோபமுற்றவனாய் சப்பட்டை அவளைத் தன்னুদலிலிருந்து விலக்கி இவனைப் பிடித்துக் கீழே தள்ளினான். பதிலுக்கு இவனை எட்டி உதைக்க வந்த சுங்குவை குறுக்காகப் புகுந்து வட்டாமைய கீழே தள்ள சப்பட்டையும் நகர்ந்து வந்து சேர்ந்து கொண்டான். இருவரையும் ஏதாவது செய்ய வேண்டுமென அவனுக்கு மனம் கொதித்தது. ஒருபுறம் சப்பட்டை மாறி மாறி இவன் முகத்தில் குத்த அவள் வலிமையற்ற தன் கரங்களால் வயிற்றில் சீராகக் குத்துவதும், குரல்வளையைப் பிடித்து நெரிப்பதுமாக இருந்தாள்.


அந்த இரவில் அய்யோ அம்மாவென சுங்கு அலறுகிற சத்தமும், கெட்ட வார்த்தைகளால் சப்பட்டை திட்டுகிற சத்தமும் விகாரமாய் எதிரொலித்த படியிருந்தது. அவளை விலக்கி சப்பட்டை திரும்பிய நேரத்தில் வலிமை முழுக்கத் திரட்டி தன் காலால் சுங்கு ஒரு உதை விட்டான். தடுமாறிப் போய் உருண்டு விழுந்த சப்பட்டையின் குரல்வளையில் ஏறிவிட்டிருந்தது உடைந்து போன பீர்பாட்டிலொன்று. அசைவேயில்லாமல் சாய்ந்து விட்ட சப்பட்டைக்கு உண்மையில் என்ன நிகழ்ந்துவிட்டது என்பதையே இவர்களால் கொள்ள முடியவில்லை. சில நொடிகளுக்குப் பின் வட்டாமைய அங்கிருந்து வெளியேறி ஓடிப்போனாள். இவ்வளவு நாட்களும் தன்னோடு பாதியாய் இருந்தவனின் உடலுக்கு அருகில் அடுத்து சில நொடிகளுக்கு மேல் இவனால் நிற்க முடியவில்லை. அவள் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் இவனும் வெளியேறி ஓடிப் போனான்.


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page