top of page

​‘த்தூ...’

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 7 minutes ago
  • 6 min read


( 2008 வது வருடம் வெளியான சிறுகதை)

​‘த்தூ...’


​என யாரோ யாரையாரையோ திட்டிக் கொண்டிருந்தது அந்த வீதியிலிருந்த யாவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்ததைப் போலவேதான் அவனையும் திரும்பிப்பார்க்க வைத்தது. மாநகராட்சி கட்டணக் கழிப்பறையை ஒட்டி இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமானால் சற்றே இடது புறம் அப்பால் நின்று சாலையோரத்தில் சிறுநீர் கழித்த ஒருவனை கழிப்பறைக்குக் காவலிலிருந்த பெண் திட்டிக் கொண்டிருந்ததுதான் அத்தனை பெரிய சத்தமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


அவள் உதிர்த்த இன்னபிற வார்த்தைகளை விடவும், ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவள் எழுப்பிய ‘த்தூ’வின் ஒலியும் அதனோடு சேர்ந்து தெறித்துச் சிதறிய எச்சிலுமே அவ்வளவு பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டும். சரமாரியாகத் தன்னை சிதறடித்துக் கொண்டிருந்த சொற்களைச் சமாளிப்பதற்கான வழியற்ற நிராயுதபாணியாய் நின்று கொண்டிருந்தவனுக்கு அவ்வசைகளைவிடவும் துயரம் மிகுந்ததாயிருந்தது பேன்ட்டின் ஜிப்பைப் போட்டுக்கொள்ள முடியாமல் உடலை நெளித்ததுதான். ஏற்பாடுகள் ஏதுமற்று நடத்தப்பட்ட திடீர் நாடகமாய் நிகழ்வு தன் முன் விரிந்த எத்தனையோ துயரம் படிந்த நிழல்களைப் படிய விட்டுப் போனது.


செண்பகப்பாண்டியன்


​சொக்கலிங்க நகர் 6-வது தெருவில் தற்சமயம் வசித்து வரும் செண்பகப் பாண்டியனுக்கு இப்போதும்கூட கையால் முகத்தைத் துடைக்கிறபொழுது யார் - யாரோ துப்பிய எச்சிலின் - சரம் படிந்திருப்பதாகவே தோன்றும். சிறுவயது முதலே தன் வளர்ச்சியோடு சேர்ந்து பெரிதாக வந்த நிழலைப் போல் அவன் சந்திக்க நேர்ந்த ‘த்தூ’க்களும், அவமானங்களும் அதிகமாகிக் கொண்டே இருந்தன. அவனுக்குத் தெரியாத எவ்வளவோ தெரியாதுகளில் இந்த ஒன்றைத் தெரிந்து கொள்ளாததற்குத்தான் அவன் அநேகமுறை அவமானப்பட்டதும் கேலி செய்யப்பட்டதும்.


​‘இந்தத் தண்டி ஆம்பளைக்கி டூவீலர் ஓட்டத் தெரியாதா? நல்ல ஆம்பளை...’ எனப் புதிதாகப் பழகியவர்கள் கூட சர்வ சாதாரணமாய்ப் பேசிவிட்டுப் போவதின் வலி, சிறு வயதிலிருந்தே தொடர்ந்து வருவதுதான் என்றாலும் முன்பு இதுவே வேறுவிதமாய் இருந்தது.


​‘இவ்ளோ பெரிய பயலுக்கு சைக்கிள் விடத் தெரியாதா? நண்டு சுண்டு கூட ஓட்டுதுக...’


​என மற்றவர்கள் கொடுத்த விலாசில்தான் அரைகுறையாக வேணும் பதினெட்டு வயதிற்கு மேல் சைக்கிள் விடக் கற்றுக்கொண்டிருந்தான். இப்படி அநேகம் பேரின் துவேசம்தான் எவ்விதமான குற்றவுணர்வுமின்றி இருந்தவனுக்கு இது குறித்தான குற்ற உணர்ச்சியை உருவாக்கி விட்டிருந்தது.


பதினொரு வயதிருக்கும் இவனுக்கு, கோடை விடுமுறையில் ஊர் ஆலமர நிழலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு மத்தியில் இவன் தங்கை தன்னைத் தள்ளிவிட்டாளென்ற கோபத்தில், ‘த்தூ... நீயெல்லாம் வெளிய பேசிக்காத... உன்னப் பத்தி எனக்குத்தான தெரியும்...’ என ஆரம்பித்து சொற்களாலேயே இவனை நிர்மூலமாக்கியதுதான் வாழ்வில் அவன் எதிர்கொண்ட முதல் ‘த்தூ’. தான் சந்திக்கிற எல்லா மனிதர்களும் இவ்வார்த்தையை ஒருவகையில் எதிர் கொண்டிருப்பார்கள் தானெனினும் ​எத்தனைபேர் இந்த விஷயத்திற்காக இருப்பார்கள் என்பதுதான் விளங்க முடியாததாக இருந்தது.


​சிறுவயதில் குடும்பம் சகிதமாக அப்பா, அம்மாவோடு ஊரைக் காலி செய்து வந்த நாளில் தோளில் அள்ளிச் சுற்றிய சேலையும், ஓங்கரித்த ஒப்பாரியுமாய் அப்பத்தா, அம்மாவையும், அப்ப துப்பியதை இன்றைக்கும் மறக்க முடியாதுதான். சாபமோ, தற்செயலோ இந்த ஊருக்கு வந்த மிகச் சில நாட்களிலேயே குழிவெட்டு வேலைக்குப் போயிருந்த அப்பா பிணமாகத்தான் திரும்பி வந்தார். ‘நாகு, நாகு’ எனத் தன்னைச் செல்லமாய்க் கொஞ்சிய அவரைப் பற்றி நினைக்கிற பொழுதெல்லாம் அம்மாவால் உயிர்ப்பில்லாத ஒரு புன்னகையை மட்டுமே உதிர்க்க முடியும் சிலதுளிக் கண்ணீரோடு...


​நாகலெட்சுமி/பெ அம்மாசி


​பதினெட்டிற்கும் குறைவாகத்தான் இருக்கும் நாகு என்ற நாகலெட்சுமிக்குத் திருமணம் நடந்த பொழுது. மரகத நாட்டு இளவரசியை மீட்க ஏழுகடல், ஏழுமலை தாண்டி வந்த இளவரசனைப்போல், இந்த மஞ்சணத்திக் காட்டிலிருந்து தன்னையும் தூக்கிப்போக ஒருவன் வருவானென்கிற எண்ணத்திலும், புராணக்கதைகளில் கேட்ட பீமனும், அர்ஜுனனும் இன்னும் எவ்வளவோ பேரைப் போன்று தமக்கு வருபவன் இருப்பானென்கிற கற்பனையிலிருந்தவள், திருமண தினத்தன்று தன் உயரத்திற்குச் சற்றே அதிகமான உயரமும், கரு கருவென அடர்ந்த திராட்சை நிறத்திலும் தன் கணவனைப் பார்த்தபோது, தான் கேள்விப்பட்டிருந்த எத்தனையோ கதாபுருஷர்களும் இப்படித்தான் இருப்பார்களோவென நினைத்துக் கொண்டாள்.


முகூர்த்தம் முடிந்து ஆறேழு மாதங்களுக்குப் பிறகும் இவளுக்குக் கருத்தரிக்காமல் இருந்ததில் மாமியாருக்குப் பொறுக்கமாட்டாத எரிச்சலும் வெறுப்பும் உதிர, அதுவே நாளுக்கு நூறு முறை அவளைத் திட்டிக் குட்டுவதற்கும் காரணமாக இருந்துவிட்டது. அந்த வருடத்தின் முத்தாலம்மன் கோயில் கொடை நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, தீட்டுப்பட்டதோடு இவள் சமையல் கட்டிற்குள் வந்துவிட்டாளென்பதற்காக, ‘த்தூ’வென மாமியார் துப்பிய எச்சில், அடர்ந்த கோடாய் வலது புறக் கன்னத்தில் ​ஓடி தாடை வழி இறங்கிவிட்டிருந்தது. அன்று முழுக்க குமறி அழுதவள் புருசனோடு சேர்ந்து தொட்டில் எடுத்துப் போட்டதும் சட்டி எடுத்ததும் நேர்ச்சையாக மட்டுமே இருந்தது.


​இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு அவள் கருத்தரித்து விட்ட பிறகுதான் வீட்டில் புதுவிதமான ஒளி ஊர்ந்து நிறைந்து விட்டிருந்ததைப் போலிருந்தது. தனக்குப் பிடித்த மாதிரியாகவும், திருப்தியாகவும் இருப்பதற்காக மாமியார்தான் ‘செண்பகப் பாண்டியன்’ என குழந்தைக்குப் பெயர் வைத்தாள். பெயர் வைத்தாளே அன்றி இவள் வாரித் தூக்க முற்படுகிற பொழுதெல்லாம் குழந்தை அழுது அலறியது. ‘இதனால்தானோ என்னவோ, இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சக்கரை...’ என அவலட்சணமாகப் பிறந்துவிட்ட குழந்தையை அடிக்கடி குத்திக் காட்டிக் கொண்டிருந்தாள்.


நீண்ட நாட்களாகவே புருஷனுக்கு வேலை இல்லாததைக் காரணங்காட்டி அவனை வெளியூருக்கு அழைத்தபடியேதான் இருந்தாளென்றாலும், செண்பகப்பாண்டியனை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கிற காலத்தில்தான் அதற்கான சமயம் வந்தது. மாமியாரின் எத்தனையோ ‘த்தூ’க்களையெல்லாம் புறக்கணித்து விட்டிருந்தவளாய் இன்னும் சொல்லப்போனால் இனியொருவரும் அதனைத் தன்மீது பிரயோகிக்க மாட்டார்களென்கிற திருப்தியோடு அந்த ஊரிலிருந்து வெளியேறினாள்.


இரண்டாவதாகப் பிறந்திருந்த பெண் குழந்தைக்கு ‘கோமதி’ என சற்றே நாகரிகமாய்ப் பெயர் வைத்திருந்ததில் மிகுந்த மகிழ்வோடு செண்பகப்பாண்டியன் கூப்பிட்டதற்கு அவன் பெயர் பட்டிக்காட்டுத்தனமாய் இருப்பதாக அவன் உணர்ந்ததே காரணம். கோமதிக்கு ஒரு வயது முடிந்து விட்டிருந்த சிலநாட்களிலேயே சூன்யம் படர்ந்து விட்டிருந்ததைப் போலாகிவிட்டிருந்த வீட்டில், அப்பாவும் இறந்து போக, அவரது உற்ற நண்பரான தர்மராசு பெரியப்பாவின் உதவிகளால்தான் வீட்டில் சிரமங்கள் குறைந்து போயிருந்தன. பலபேர் பலவிதமாக இது பற்றி ஊருக்குள் பேசிக்கொண்ட பொழுதும் வெறும் வதந்தி என்கிற அளவிலேயே நம்பப்பட்டு வந்தன ஒருவருட காலம் வரையிலும். அவள் குழந்தைகள் சிறிதும் எதிர்பார்த்திருக்காதபடி, அவ்வதந்தியை உண்மையென மாற்றிவிட்டிருந்தது அம்மாவின் வாந்தி, கருத்தடை மாத்திரைகள் உட்கொண்ட பிறகே கலவிக்கு அனுமதித்து வந்தவள், ஒரு பிற்பகலில் தற்செயலாக இருவரும் சந்தித்துக்கொள்ள நேர்ச் சூழலும் இச்சையின் சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்து விட்டிருந்ததில் மாத்திரைகளை மறந்து போய் விட்டிருந்தாள். மருத்துவப் பரிசோதனையில் கருத்தரித்திருப்பது உறுதியான பொழுதுதான் கோமதி பிறந்த பொழுதே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி தன் கணவன் சொன்னதை மறுத்தது எவ்வளவு பெரிய தவென்பதை உணர்ந்தாள் . அறுபது கிலோமீட்டர் தள்ளியிருந்த அப்பத்தாவிற்கு இவ்விஷயம் எப்படித் தகவலாகித் தெரிந்ததெனத் தெரியவில்லை, கருக்கலைப்பு செய்துவிட்டு அம்மா வந்த நேரத்திற்கெல்லாம் அப்பத்தா இவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.


​“த்தூ அவுசாரி... இப்படி ஊரு மேயறதுக்கு நாண்டுக்குத் தொங்கக் கூடாது...?”


​என இவளைப் பார்த்த மாத்திரத்தில் அவிழ்ந்து கிடந்த தன் கேசத்தை அள்ளி முடிந்தபடி சண்டைக்கு நின்றவளைப் பார்த்ததும் இவ்வளவு நாட்கள் இருந்த பொறுமையெல்லாம் உடைந்து வெடிக்கும்படியாய், “அடச்சி நாற முண்ட... நா எப்படியும் போறேன் உனக்கென்னடி? புருஷன் இருந்த காலத்திலேயே ஊருமேஞ்சு, கட்டுன புருஷனுக்கு வெசத்த வெச்சுக் கொண்டவ நீ. இப்ப என்னமோ ஒழுக்க மயிராட்டம்மா பேச வந்திட்ட!” என கடந்த காலத்தைப் போட்டு உடைத்ததில் அத்தனை பேருக்கு மத்தியில் நிர்வாணப்படுத்தப்பட்டதான அவமானங்களோடு மாமியார் திரும்பிப் போனாள்.


​இனி பொருட்படுத்துவதற்கு எதுவுமில்லை என்றானதும் நிம்மதியாகிவிட்டாள் நாகு. செண்பகப் பாண்டியன் சற்றே வளர்ந்த பிறகு தன் தங்கையின் எதிர்காலம் கருதி ஒருநாள் வீட்டிற்கு வந்த தர்மராசுவிடம் மல்லுக்கு நின்றான். இதனை எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ, எவ்விதமான சலனமுமின்றி நாகு, அவர் வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உனக்கு உரிமையில்ல, இஷ்டம்னா இரு. இல்லையின்னா வெளிய போயிடு...’ என்று சொல்லிவிட, இயல்பிலேயே யாவர்க்கும் பயந்து போகிற சுபாவம் கொண்ட அவன், அடுத்து என்ன செய்வதெனக் குழம்பிப் போனான். அப்பாவுக்கு உடைமையான ​இடத்தில் இன்னொருவனை வைத்துப் பார்க்க முடியாதுதான் என்றாலும் வீட்டை விட்டு வெளியேறுகிறபட்சத்தில் தன்னால் சுயமாக எதையும் செய்ய முடியாது எனப் பயந்தவனாய், அமைதியாக இருந்து விட்டான்.


அப்பத்தா இறந்த தினத்தன்று


​முகந்தெரியாத எவ்வளவோ மனிதர்களுக்கு மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதாய் வருந்திய அப்பத்தா, அந்த வலியிலேயே மெல்ல சிதைந்து போனதோடு நாகு அப்படிக் கேட்ட பிறகுதான் எத்தனையோ வருடங்களாய் மறந்து போயிருந்த அவனை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாள். இந்த ஊர் ஆட்கள் கருதுறுப்பிற்கென்று வயக்கரைப் பக்கமாக போனால் இரண்டு மாதங்களாவது ஆகும் திரும்பி வர. அப்புச்சி முன்பு இப்படிப் போன நாட்களில் அப்பத்தாவின் கவலை சொல்லி மாளாததுதான். என்றாலும் காலப்போக்கில் பழகிப் போயிருந்ததோடு ஏதாவது அவசர உதவியென்றால் செய்வதற்கு பாப்பாத்தி புருஷன் இருந்ததில் பெரிய சிரமம் எதுவும் இருந்திருக்கவில்லை , சினேகமாக இருந்ததுதான் ஊருக்குள் காதும் காதுமாக சாடை பேசி எள்ளு கொள்ளாகி எறும்பு யானையாகிப் போயிருந்தது.


பாப்பாத்தி புருஷனுக்கும், அப்பத்தாவிற்கும் தொடுப்பு என ஊருக்குள் கசிந்த பேச்சு கசிந்த வேகத்திலேயே அப்புச்சி காதுக்கும் எட்டிவிட வயக்கரையில் இருந்து பாதியிலேயே திரும்பியவர் ஊரே பார்க்கும்படி அப்பத்தாவைத் துவம்சம் செய்தார். அவள் அடிவாங்கியதைப் பார்த்த பயத்திலேயே பாப்பாத்தி புருஷன் அவசர அவசரமாக அங்கிருந்து தலைமறைவாகி விட்டிருந்தான். அதன்பிறகு நெடுநாட்கள் வரை இருவரும் பேசிக் கொள்ளாதவர்களாகவே இருந்தனர். சில மாதங்களிலேயே குழந்தை பிறந்து விட, ஊரில் யாவரும் குழந்தை பாப்பாத்தி புருஷனின் சாயலில் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். வெறியேறிய அப்புச்சி மறுபடியும் ஒருநாள் அடித்துத் துவம்சம் செய்தார்.


​‘இவ பொழப்பு இப்படியாப் போவணும்’ என ஊர்ப் பொம்பளைகள் மாய்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள் மணியக்காரர் தோட்டத்தில் நஞ்சு பரவிய உடலில் நீலம் ஏறியவராய் அப்புச்சி இறந்து கிடப்பதைப் பார்த்து அவரை

​சர்ப்பம் தீண்டியதாகப் பேசிக்கொண்டனர். இப்படி காலம் தனக்குள் சுவீகரித்துக் கொண்ட அனேக நிகழ்வுகளை அசைபோட முடியாதவளாய் உடல் குறுகி குறுகி அவமானத்தின் சுவடுகள் ரேகைகளாய்ப் படர்ந்து விரிந்து கொண்டிருக்க, பௌர்ணமிக்கு முந்தைய ஒரு செவ்வாய்க்கிழமை இரவில் அவள் மூச்சு நின்று போயிருந்தது. வேண்டா வெறுப்பாக வேணும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்கிற எண்ணத்தோடு நாகு செண்பகப்பாண்டியனோடு அங்கு போய்ச் சேர்ந்த போது, ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த கிழவிகளில் ஒருத்தி, ‘ஏண்டி ஊரக் கொடுத்த தேவுடியா, எம்புட்டு ஏத்தம்னா செய்யிறதையும் செஞ்சுட்டு நெஞ்சழுத்தமா வந்து நிப்ப ....?’ என நாகுவின் குடுமியைப் பிடித்து உலுக்க, சுற்றியிருந்த பெண்களும் சேர்ந்து கொண்டனர். எதுவும் தெரியாதவனாய் நின்று கொண்டிருந்த இவனை ஒரு பெண், “த்தா... ஆத்தா ஊரு மேய்றா புள்ள வெளக்குப் புடிக்கிறியாக்கும்...?” எனக் காறித்துப்பினாள். எவ்விதமான பிரக்ஞை மாற்றமுமின்றி வேறு திசையில் திரும்பி நின்று கொண்டான். அடிகள் ஓய்ந்து அம்மா வெளிப்படுகையில் உதடு கிழிந்து வாய் திறக்கவியலாத படி கண்கள் வீங்க வேகவேகமாய் நடந்து போய்விட்டாள். வரும் போது பேருந்தில் அவளே டிக்கெட் எடுத்ததும், திரும்பிச் செல்வதற்குத் தன்னிடம் பணமில்லை என்பதும் நினைவிற்குவர, ஒருகணம் ஊருக்கு எப்படித் திரும்பிச் செல்வதென யோசித்தான், அதற்குள் நாகு அவன் பார்வையிலிருந்து மறைந்து விட்டிருந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் அவன் வீட்டிற்குத் திரும்பியபொழுது நாகு வீட்டில் இல்லாமலிருந்தது ஸ்திரமான ஓர் நிம்மதியை அவனுக்குள் உணர்த்தியது.


பழனி அடிவாரத்தில் நாகுவைப் பார்த்தபோது...


​சரிந்து விழும் சீட்டுக்கட்டுகள் போல் காலம் ஒரே சீராய் கடந்துகொண்டேதான் இருந்தது. நாகு தொலைந்து போன, அல்லது ஒளிந்து கொண்ட பிறகு அவளைத் தேட வேண்டுமென இவனுக்குத் தோன்றியிருக்காததில் பெரிய ஆச்சரியம் இருக்கப் போவதில்லை. சொந்த பந்தமாய்ப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து வைக்க கோவில்பட்டியில் ஒரு ​பெண்ணைப் பார்த்தனர். மெலிந்து முன் பற்கள் தெற்றியபடி சிரிக்கும் போது மட்டும் ஒருவிதமான முக அமைப்புடைய அப்பெண்ணே தனக்குப் போதுமானவளென்று திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள, மிகச் சில உறவினர்களின் மேற்பார்வையில் (ஆசிர்வாதத்தில்) சங்கரன் கோவிலில் இவர்களுக்குத் திருமணம் நடந்தது.


சாதாரணமாக அவள் பேசுகிறபோதே பெரும் ஒலியெழுந்ததை அவன் கவனித்தது முதலிரவில் தான். ஒரு ஆசையில் அவள் இடையில் இவன் கிள்ளிய பொழுது ‘ஆ’ வென இவள் கத்தியதில் மாமியார், மாமனார் வந்து கதவைத் தட்டிக் கூப்பிடுகிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தது. இருப்பினும் இவளை இவனுக்குப் பிடித்ததைப் போலவே அவளுக்கும் இவனைப் பிடித்திருந்தது. மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கிடைத்திருந்த குமாஸ்தா வேலை காரணமாக அவர்கள் மதுரைக்குக் குடி வந்த பிறகு தினமும் இரவு நேரங்களில் சினிமாவிற்குப் போவதும், விடுமுறை நாட்களில் ஊர்சுற்றவும் தவறவில்லை .


எதிர்பாராதவிதமாகப் பிரச்சனையே அங்கிருந்து துவங்கும்படி ஆகிவிட்டிருந்தது. எல்லா இடங்களுக்கும் நடக்க விட்டே கூட்டிப்போவதில் வெறுத்துப் போனவள், அவனுக்கு டூவீலர் ஓட்டத் தெரியாததைக் குத்திக்காட்டத் துவங்க, இவனும் அவளை வெளியில் கூட்டிப் போவதை நிறுத்தி விட்டிருந்தான். மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கும் போது இதையெல்லாம் விசாரிக்க முடியுமா என்ன? பொறுக்க முடியாதவனாய் ஒருநாள் அவளை அடித்து விட, சமயம் எதிர்பார்த்துக் காத்திருந்தவள் இதுதான் சாக்கென கோவில்பட்டிக்கே திரும்பிச் சென்றுவிட்டாள். சற்று நிதானித்து யோசித்தவனுக்குத் தான் செய்தது தவறே என்றாலும், மன்னிப்புக் கேட்டு அவளைக் கூட்டி வந்துவிடலாம் என எண்ணியபடி சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


அவளைத் தன்னோடு சேர்த்து வைக்க வேண்டுமென்கிற பிரார்த்தனைகளோடு பழனிக்குப் பாதயாத்திரை சென்றவன், தைப்பூசக் கூட்டத்தில் மலையடிவாரத்திற்கு அருகிலிருந்த மடத்துப் பக்கமாக ஆசுவாசப் படுத்திக்கொள்ள ஒதுங்கினான். மடத்தில் அமர்ந்திருந்த பத்துப் பதினைந்து பிச்சைக்காரர்களுக்கு மத்தியில் நாகுவைப் பார்த்த போது ஒருவிதமான பரபரப்பு இவனுக்குள் ஓடி மறைந்தாலும், அவள் எந்தவிதத்

​தடுமாற்றமுமில்லாமல் எல்லோரிடமும் கேட்பது போலவே ‘அய்யா சாமி..’ என இவனிடமும் தட்டை நீட்டினாள். இடுப்பில் மடித்து வைத்திருந்த ரூபாய்த் தாள்களிலிருந்து பத்து ரூபாயை மட்டும் போட்ட போது ஒருகணம் இது அதிகமோ என்று நினைத்தான். மேற்கொண்டு அங்கு நிற்பதற்கு விருப்பமற்றவனாய் அவசர அவசரமாக நகர்ந்து மறைந்த போது, எத்தனையோ பேர்களுக்குள் தொலைந்து போனான்.

​அங்கிருந்து ஊருக்குத் திரும்பிய பின்பாகத்தான் எவ்வளவோ அவமானங்களை அவள் பொருட்டு சந்திக்க நேர்ந்திருப்பினும், பல சமயங்களில் ஒரு அம்மாவாய் அவள் தன்னிடம் காட்டிய அன்பை நினைத்து சத்தமாக அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அப்பொழுதும் அவளைத் தன்னுடன் கூட்டி வரவேண்டுமெனத் தோன்றவில்லை.


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page