ரூஹ்
- லக்ஷ்மி சரவணகுமார்

- 19 minutes ago
- 1 min read

"கானகன்" புகழ் லஷ்மி சரவணகுமார் என்றுதான் எனக்குத் தெரியும். இவருடைய கானகன் நாவலை எத்துணை பேரை படிக்கச் சொன்னேன் என்று என்னாலேயே சொல்ல முடியாது.
காட்டைப் பற்றி அது பேசியது எனில் கடல் பற்றி ரூஹ் பேசுகிறது. நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் "ரூஹ்" என்பது கோஹினூர் போல இன்னொரு வைரம். ஆனால் தெரியாதது அதனை வைத்து இப்படி ஒரு நாவல் எழுத முடியும் என்பதை.
ஒரு முன்னூறு வருடங்கள் முந்தைய வரலாறு கொண்டவர்கள் இந்தக் கதைநாயகன் ஜோதியின் மூதாதையர்கள். அவர்கள் கூத்துக்கலையைக் கைகொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள். அதன் பயன் தெரியாமலேயே, ஜோதியின் தாய், தந்தையாரால் ரகசியமாக வைக்கப்பட்ட ரூஹ் மரகதக்கல் எப்படி, ஜோதிக்குக் கிடைக்கிறது என்பதும், அதன் பின் விளைவுகளும் தான் கதைக்களம்.
நளினமான உடல் மொழியுடன் ஜோதி, அவனை அவமானப்படுத்தும் சக மனிதர்கள், மாறாக அன்பு காட்டும் ராபியா - அன்வர் தம்பதியர், ரபியா, தங்கை தேவி இவர்களிடமே அவமானப்படும் ஜோதி ஊர் விட்டு நீங்குதல், ஜோதி வீட்டு வறுமை, தங்கை தேவி திருப்பூருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் செல்லல், அதன் விளைவுகள், எந்த நேரத்திலும் ரகசியம் - ரூஹ் ரகசியம், வெளியே வருதல் அதன் பின் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று லஷ்மி சரவணகுமார் ஒரு இசைக்கச்சேரி நடத்தியிருக்கிறார்.
சில சொற்பிரயோகங்கள் பிரமாதப் படுத்துகின்றன. நைஜீரியன் ஒருவனை தேவி மணந்து கொண்டு வரும்போது, "அவள் ஒரு புதிய உறவையல்ல, ஒரு தேசத்தையே கொண்டு வந்திருந்தாள்" என்பது, ரபியா - ஜோதி இருவரின் அன்பின்மிகு உரையாடல்கள் எல்லாம் படிக்கத் தெவிட்டாதவை.
december 2019


