top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

Fake



In feature films the director is God; in documentary films God is the director.

- Alfred Hitchcock


விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு கலை படைப்பு அடிப்படையில் தனக்குள் போலித்தனங்களையே அதிகமும் நிறைத்து வைத்திருக்கிறது.

- உள்ளூர்க்காரன்


திரையில் சப்டைட்டில்களுடன் ஓடிய அந்த ஆவணப்படத்தில் தடித்த மீசை வளர்த்த பெரியவர் மூன்றாவது முறையாக உரத்தக் குரலில் தங்கள் ஊருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை ரெளத்ரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். பல நூறு காலமாய் பல நூறு ஊர்க்காரர்களுக்கு நேர்ந்த அநீதிக்கெல்லாம் சேர்த்து நியாயம் கேட்கும் ஆவேசம் அவரின் குரலில். அரங்கத்திலிருந்த பாதிப்பேர் தூக்கக் கலக்கத்துடனும் எஞ்சிய பகுதியினர் தூங்கியபடியும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க அந்த அரங்கத்தின் கடைசி இருக்கையில் இருளுக்குள் தனது இடுங்கிய கண்களோடு அண்ணாமலையும் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அநீதிகள் கட்டற்று நடக்கும் போது அதை சரிசெய்ய முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல யாரோ சிலர் இருப்பார்கள். அண்ணாமலை அவர்களில் ஒருவன்.


இந்தப் படத்தைதான் எடுக்க வேண்டும் என முடிவு செய்தபோதே பல்வேறு உலகத் திரைப்பர விழாக்களில் இது விருது பெறும் என உறுதியாய் நம்பினான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. ஐம்பது முகநூல் நண்பர்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம். பல நாட்கள் வெயிலிலும் மழையிலும் பசியோடு எடுத்து முடிக்கப்பட்ட படம். துவக்கத்தில் இவனின் ஆவணப்பட முய்ற்சியை அனாவசியமான வேலையென்று சொன்ன எல்லோரும், சூடான் திரைப்பட விழாவில் ஆவணப்படங்களுக்கான பிரிவில் நடுவர்களின் சிறப்பு விருதைப் பெற்றதில் இந்தப் படத்தையும் இவனையும் மதிக்கத் துவங்கினர். அத்தோடு முடியவில்லை. பிரேசில் ஆவணப்பட விழாவில் இந்தப்படம் 6000 அமெரிக்க டாலர்களை வென்றபோது அவனுக்கு தனி மரியாதை வந்துவிட்டிருந்தது. அதன் பிறகு உலகின் அனேக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட இந்தப் படம் தொடர்ந்து தேர்வாகியபடியே இருக்கிறது.


கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவில் அவன் படம் திரையிடப்படுவதுதான் இந்தியாவில் முதல் பெரிய திரையிடல். அதனால் இங்கு வந்து கலந்து கொள்வதைப் பெரும் கெளரவமாய் நினைத்தான். அவன் படம் திரையிடப்படுவது குறித்து உள்ளூர் ஹிந்துவில் சில வரிகள் எழுதியிருந்தனர். திரையிடல் முடிந்ததும் இரண்டு பத்திரிக்கைக்காரர்கள் நேர்காணல் கூட கேட்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கையில் அண்ணாமலைக்குத் தன் பல வருட போராட்டத்திற்கு விடிவு வந்துவிட்ட நிம்மதி. அவமானங்கள், தோல்விகள் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கும் வெற்றி இது. மனப்பூர்வமாய் இந்த சில மாதங்களை அவன் கொண்டாடுகிறான். இந்த ஆவணப்படம் கொடுத்த கவனிப்பில் தான் இப்பொழுது இதையே மையமாக வைத்து ஒரு கதைப்படம் இயக்கவும் ஒப்பந்தமாகியுள்ளான். படம் எடுத்த பிறகுதான் திருமணம் என்னும் கனவு நிறைவேறாமலேயே போய்விடுமோ என்கிற கவலை இப்பொழுது இல்லை, இந்த வருடம் நிச்சயமாய்த் திருமணம்.


இதற்கு முன்பு உதவி இயக்குநராக சேர வேண்டி அவன் எடுத்த சில குறும்படங்கள் ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமானவை. தமிழ் சினிமா உதவி இயக்குநருக்கு அவ்வளவு அறிவு போதுமானதென்பதால் அவன் உடனடியாக ஒரு பெரிய இயக்குநரிடம் உதவியாளராக சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஆனாலும் தன் படம் உலக குறும்பட விழாக்களில் விருது பெற வேண்டுமென்பது அவனது அந்தரங்க விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. ஸ்டான்லி குப்ரிக் எடுத்த குறும்படங்களையும் ரோமான் பொலான்ஸ்கி எடுத்தக் குறும்படங்களையும் வெறிகொண்டு பார்த்தவன். பொலான்ஸ்கியின் பாதிப்பில் அவன் எடுத்த ஒரு குறும்படத்தை வெனிஸ் திரைப்பட விழாவிற்கு முன்பு அனுப்பி இருந்தான். எந்தப் பதில்களும் இல்லாமல் அந்தப் படம் நிராகரிக்கப்பட்ட போது அவன் அடைந்த அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.


அதன் பிறகு மூன்று வருடங்களை தமிழ் சினிமா அவனிடமிருந்து மிக வேகமாய்ப் பிடுங்கிக் கொண்டது. தனியாக படம் இயக்க நினைத்தவன் லஷ்மி சரவணக்குமார் என்னும் அவனுக்கு பழக்கமான ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனுடன் சேர்ந்து ஒரு திரைக்கதையை உருவாக்கினான். அதை தமிழில் எடுக்க முடியாது மலையாளத்தில் எடுக்கலாம் என எழுத்தாளனின் பேச்சைக் கேட்டு சில மாதங்கள் கொச்சினுக்கும் சென்னைக்குமாக இருவரும் அலையத் துவங்கினார்கள். லஷ்மிக்கு அண்ணாமலை எடுத்த குறும்படங்களைப் பார்த்ததிலிருந்து இவனால் ஒரு இணக்கமான சினிமாவை எடுக்க முடியுமென நம்பிக்கை இருந்தது. அத்தோடு தன்னையும் ஒருவன் அறிவுஜீவியாக மதித்து சில மாதங்களுக்கான செலவுகளைக் கவனித்துக் கொள்கிறான் என்கிற பெருமிதம். இவர்களின் திரைக்கதையைக் கேட்ட ஒரு சில மலையாள திரைப்பட பிரமுகர்கள் அதைத் தயாரிக்க முன்வந்தனர்.






அண்ணாமலையும் லஷ்மியும் கொச்சினில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி கதையை விளக்கியதோடு யார் யாரெல்லாம் நடித்தால் படம் சிறப்பாக வருமென விவரமாய் எடுத்துக் கூறினர். இவர்கள் சொன்ன எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை இருந்தது. ”ஹீரோயின் மட்டும் நாங்க செலக்ட் பண்றோம்… ஷூட் முடியற வரைக்கும் அவங்க எங்களோடதான் இருப்பாங்க. அவங்க சம்பளம், மத்த விசயத்தை எல்லாம் நாங்க பேசிக்கிறோம்… உங்களுக்கு சம்மதமா?” இவர்களின் கதை முப்பதுகளைத் தாண்டிய ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை ‘காவ்யா மாதவனோ மஞ்சு வாரியாரோ நடித்தால் தான் சரியாக இருக்கும். ஆனால் இப்பொழுது தயாரிப்பாளர் தரப்பு சொல்வதைப் பார்த்தால் அவர்கள் வேறு படம் எடுப்பதற்கான ஒரு பெண்ணைத்தான் கொண்டு வருவார்களோ என இருவருக்கும் அச்சமாய் இருந்தது. அண்ணாமலை நிதானமாக அவர்களைப் பார்த்து “எங்களுக்குக் கொஞ்சம் டைம் குடுங்க ஸார்… நாங்க சென்னை போயிட்டு உங்க கிட்ட பேசறோம்..” என எழுந்து வந்துவிட்டான்.





“ஜி மஞ்சுவாரியார் இல்லாட்டி என்ன ஜி.. வர்ற லேடி எப்பிடி இருக்காங்கன்னு பாப்போம்… கொஞ்சம் சுமாரா இருந்தாக் கூட நடிப்ப நாம சொல்லிக் கொடுக்கலாம் ஜி…” லஷ்மி அண்ணாமலையிடம் இதுமாதிரி ஏராளமான சமாதானங்களைச் சொல்லி எப்படியாவது அந்த மலையாளப்படத்தை எடுத்துவிட வேண்டுமென உறுதியாய் இருந்தான். அவனுக்குக் கிடைக்கும் சம்பளம் ஒரு காரணம் என்றால் தயாரிப்பாளரின் நெல் வயலுக்கு நீர் பாய்ச்சும் நாயகிக்கு இந்தப் புல் வயல் பெரிய விசயமாய் இருக்காது என உள்ளூர ஒரு நம்பிக்கை. அண்ணாமலை விடாப்பிடியாய் அதனை மறுத்துவிட்டான். “என்ன ஜி இப்பிடி சொல்றிங்க? நல்ல படம் எடுக்கனும்னு தான நாம இவ்ளோ தூரம் வந்தோம். இந்த மாதிரி எல்லாம் செஞ்சுதான் ஒரு படம் எடுக்கனும்னா நமக்கு அந்தப் படமே வேணாம் ஜி…” என ஊருக்குக் கூட்டி வந்துவிட்டான். கோவத்தில் சில நாட்கள் லஷ்மி அண்ணாமலையின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. பிற்பாடு அறை வாடகைக்கு பணம் இல்லையென்றானதும் வேறு வழி இல்லாமல் அண்ணாமலையை சந்திக்க வந்தான். அன்றைய தினம் இரவு உணவுக்குப் பின்னர் நீண்ட பேச்சில் கடல் பகுதியை ஒட்டி வரும் அந்தப் புதிய ரசாயனக் கழிவு ஆலையைப் பற்றியும், அதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களைப் பற்றியும் இருவரும் காரசாரமாய் விவாதித்தனர்.


“யோவ் இதப் படமா எடுய்யா… பிகினில ஹீரோயின் ஆடறது ஹீரோ பத்து பேர அடிக்கிறது எல்லாத்தையும் எடுக்க இங்க தெருவுக்கு நூறு கழுதைங்க இருக்கு… இத யார் படமா எடுப்பா? நீ எடு…” லஷ்மி கிளப்பி விட்டதும் அண்ணாமலைக்கும் சுருக்கென வேகம் வந்தது. தான் மதிக்கும் எல்லா உலக இயக்குநர்களையும் நினைத்துப் பார்த்தான். அவர்கள் எல்லோருமே சமூக அக்கறை கொண்டவர்கள். தானும் அப்படி இருக்க வேண்டுமென நினைத்தவன் சரியான சமயத்தில் தன்னை சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வைத்ததற்காய் தன் எழுத்தாளனை கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் அப்போது குடித்திருந்த மேன்ஸன் ஹவுஸ் அந்த தருணத்தை அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணமாய் மாற்றுமென இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த விதைதான் இன்று விருட்சமாகி இத்தனை உயரத்திற்கு அண்ணாமலையைக் கொண்டு வந்திருக்கிறது.


படம் முடிந்து அரங்கில் விளக்குகள் போடப்பட்டதும் எழுந்த கைதட்டல் அடங்க நீண்ட நேரம் ஆகியது. அதே திரைப்பட விழாவில் மரபான கதைப்படப் பிரிவில் ஒரு தமிழ்ப்படமும் தேர்வாகி இருந்தது. அந்த இயக்குநரும் அந்த அரங்கத்தில் இருந்ததை அப்போதுதான் அண்ணாமலைக் கவனித்தான். லஷ்மியும் அண்ணாமலையும் போட்டிக்கு வந்திருக்கும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு பத்திரிக்கை நேர்காணலில் அந்தப் படம் குப்பை மாதிரி கூட இல்லை, கக்கா மாதிரி இருக்கிறதென உளறிக் கொட்டியிருந்தனர். அதன் பிறகு அந்த இயக்குநரை சொந்த ஊரில் எங்கும் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லாததால் பிரச்சனை இருந்திருக்கவில்லை, இப்பொழுது அவருக்கு வணக்கம் சொல்லுவதா வேண்டாமா என தயக்கமாய் நின்றான். நல்லவேளையாக அவரே வந்து கை குலுக்கினார். “வெல்டன் தம்பி… இப்பிடித்தான் இருக்கனும்… சிலபேர் கோபப்படும் போதுதான் இவன் கோவப்படறதுல தப்பில்லடான்னு தோணும். உன்னயவும் அப்பிடித்தான் பாக்கறேன்… keep it up.” சந்தேகமில்லை பெருந்தன்மையான மனிதன் தான். அடுத்த நேர்காணலில் அந்தப் படம் குறித்து யாராவது கேட்டால் அது நல்ல படமென்று சொல்ல வேண்டும்.


அரங்கத்தில் சராமாரியாகக் கேள்விகளைக் கேட்டார்கள். எல்லோருக்கும் பொறுமையாய் பதில் சொன்னான். இந்த எழுத்தாளன எழவு இவ்வளவு தூரம் கூட்டி வந்தால் வந்ததுமே குடித்துவிட்டு அறையில் சாய்ந்துவிட்டான். தனியாக பதில் சொல்லி சொல்லி ஒரே பதிலை திரும்ப திரும்பச் சொல்லுகிறோமோ என இவனுக்கு குழப்பமாக இருந்தது. இருக்கலாம் கேள்வி கேட்கிறவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் கேட்கிறார்கள். தேர்ந்த உடையணிந்த ஒரு முதியவர் ஆவேசமாக எழுந்தார்,

”அரசாங்கம் கொண்டு வர்ற எல்லாத் திட்டங்களையும் எதிர்க்கனும்னு நினைக்கிறதுக்குப் பின்னால நிறைய என்.ஜி.ஓக்களோட பணம் விளையாடுது. உங்க ஆவணப்படத்துக்கு நீங்க யார் கிட்ட எல்லாம் பணம் வாங்கினீங்கன்னு சொல்ல முடியுமா?” அண்ணாமலை அவரை முறைத்துப் பார்த்தான்.


“இதுவரைக்கும் யாரும் முன்வந்து கொடுக்கல… யாராச்சும் கொடுத்தா வாங்கிட்டு கண்டிப்பா உங்களுக்குத் தகவல் சொல்றேன்…” அரங்கில் சிலர் சிரித்தனர். ஆனால் அவர் விடுவதாக இல்லை. “இந்தத் திட்டத்துல எதிர்க்கிறதுக்கு போராட்டக்காரர்கள் சொல்ற எல்லாக் காரணங்களும் புல்ஷிட்….” அண்ணாமலைக்கு அவரின் பிடிவாதமான அரசாங்கத்தின் மீதான கரிசனம் எரிச்சலூட்டியது. ”ரொம்ப மகிழ்ச்சி… அப்படின்னா அந்த ரசாயன ஆலைய உங்க ஊர் கடலுக்குப் பக்கத்துலயே நீங்க கொண்டு வந்து வச்சிருக்கலாமே… உங்க மாநிலத்துக்கும் பெரிய வருமானம் இருக்கும்… என்ன சொல்றிங்க? வேனும்னா அதுக்காக சேந்து ஒரு போராட்டம் பன்னுவோம்…”


அண்ணாமலையின் பதில் முன்பு இருந்ததைப் போல் இப்பொழுது சாதாரணமாக இல்லாமல் கோவமாக இருப்பதைப் புரிந்து கொண்ட பெரியவர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அங்கிருந்து வெளியேறிப் போனார்.





இன்னும் சில சுவாரஸ்யமில்லாத கேள்விகள், அவனுக்கு தேநீர் அருந்த வேண்டும் போலிருந்தது. அடுத்தத் திரையிடல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டதும் அண்ணாமலைதான் முதல் ஆளாக அரங்கை விட்டு வெளியில் வந்தான். தொலைபேசியில் லஷ்மிக்குக் கூப்பிட அவன் தனது பெங்காலியத் தோழியோடு அங்கு வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். (எழுத்தாளனுக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் பேசத் தெரியாது. ஆனாலும் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் அவனது கதை மொழியாக்கம் செய்து வாசிக்கப்பட்டது. அப்பொழுது அங்கு வந்திருந்தவள் இந்த பெண் தோழி. அவளது கதையையும் ஆங்கிலத்தில் வாசித்தார்கள். பரஸ்பர அறிமுகம். ஒரு மதிய உணவு எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட பின் பொதுவாக எண்களைப் பகிர்ந்து கொண்டனர். வழக்கமாக இப்பிடி பகிர்ந்து கொள்ளும் எண்ணிலிருந்து அழைப்புகள் வருவதில்லை. ஆனால் லஷ்மி இவளை சந்திக்க வேண்டுமென்பதற்காகவே கொல்கத்தா வந்திருந்தவன். இத்தனை தூரம் தன்னைத் தேடிவந்தவனை தோழிக்கும் பிடித்துப் போனது.) எரிச்சலோடு ஃபோனை வைத்த அண்ணாமலை “பாஸ்டர்ட் எங்க போனாலும் பொம்பளைக கூடத்தான் சுத்தனும்னு நெனைக்கிறான்.” எனப் புலம்பிக் கொண்டான்.


உள்ளூர் வார இதழ் ஒன்றின் நிருபர் இவனிடம் நேர்காணலுக்காக காத்திருந்தான். புன்முறுவலோடு அவனிடம் கை குலுக்கிக் கொண்ட அண்ணாமலையை அவர்கள் முதலில் சில புகைப்படங்கள் எடுத்தனர். அதன் பிறகு நடந்த உரையாடலின் சுருக்கமான வடிவம் கீழே.


நிருபர் : “முதலில் வாழ்த்துக்கள். இந்தப் பிரச்சனைய உலகத்துக்கு சொல்லனும்னு உங்களுக்கு எப்போ தோணுச்சு…”


அண்ணாமலை : “ஒரு எட்டு மாசம் இருக்கும், இந்தப் பிரச்சனை சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த சமயம். நான் தொடர்ந்து பத்திரிக்கைகள்ல அதப்பத்தி படிச்சிட்டு இருந்தேன். வெவ்வேறு இடங்கள்ல மாணவர்கள் நடத்தின போராட்டங்கள் எல்லாத்துலயும் கலந்துக்கிட்டேன். ஒருநாள் நேரடியா அந்தக் கிராமத்துக்குப் போயி போராட்டக் குழு தலைவர சந்திக்கனும்னு தோணுச்சு. அந்த மக்களோட மக்களா அங்கயே இருக்கனும்னு தோணுச்சு. என் எழுத்தாள நண்பரையும் கூட்டிக்கிட்டு அந்தக் கடற்கரை கிராமத்துக்கு நேர்ல போனோம். போராட்டக் குழுவினர சந்திச்சுப் பேசி அப்படியே அந்தப் ஃபேக்டரியால ஊர்ல என்னென்ன விளைவு எல்லாம் வரும்னு கிராமங்கள சுத்திப் பாத்துட்டு வந்ததுக்கு அப்பறம் அப்பிடியே அதிர்ந்து போயிட்டேன். உண்மையச் சொல்லனும்னா அப்போ நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு படம் பண்ண கமிட் ஆகியிருந்த நேரம். ஆனா அது என் வேலை இல்லைன்னு தோணுச்சு. இந்த பிரச்சனைய உலகத்துக்கு சொல்லனும்னு தோணுச்சு…. உடனே கேமராவோட கிளம்பிப் போயிட்டேன்.


நிரு : “இந்தப் படம் எடுக்கும் போது என்னென்ன நெருக்கடிகள் வந்தது? எப்படி சமாளிச்சிங்க?”


அண் : “அதிகாரத்துக்கு எதிரா நிக்கனும்னு எப்பவும் நான் உறுதியா இருப்பேன். அந்தப் பகுதில இருந்து சில லோக்கல் அரசியல் வாதிங்க, சாதிக்கட்சிக் காரங்க எல்லாம் மிரட்டிப் பாத்தாங்க நான் மசியல….. க்யூ ப்ராஞ்ச் போலீஸ் மூணு நாலு முறை கூட்டிட்டுப் போயி வார்ன் பண்ணி அனுப்பினாங்க… நான் வெறும் ஃபோட்டோஸ் தான் எடுக்கறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பறம் படம் எடுத்து முடிச்சதுக்கு அப்பறம் அதைத் திரையிட விடாம செய்யனும்னு தடுத்தாங்க. உலகத் திரைப்பட விழாவுல விருது வாங்கினதும் கொஞ்சம் அமைதியாகிட்டாங்க. ஆனாலும் அவங்க கோவம் அடங்கல, இப்பவும் நிறைய கொலை மிரட்டல் வருது… எந்த நேரத்துலயும் கொலை செய்யப்படலாங்கற நிலையிலதான் நான் இருக்கேன்.”


நிரு : “பொருளாதார ரீதியா எப்படி சமாளிச்சிங்க?”


அண் “ மக்கள் பிரச்சனையைப் பேசற விசயம். அதனால மக்கள் கிட்டத்தான் போய் நின்னேன். சோஷியல் நெட்வொர்க்ல ஒரு பேஜ் ஸ்டார்ட் பண்ணினோம். நிறைய நண்பர்கள் உதவி செஞ்சாங்க.”


நிரு : “அந்தக் கிராமத்துல போயி படத்த திரையிட்டீங்களா?”

அண்ணாமலை இந்த இடத்தில் சின்னதாக அதிர்ந்து போனான். ( நிஜமாகவே அதிர்ந்து தான் போனான். )


அண் : “இல்லைங்க… இன்னும் எனக்கு அந்தப் பகுதிகள்ல கொலை மிரட்டல் இருக்கிறதால போகப் பயமா இருக்கு. சீக்கிரமா போகனும்…”


நிரு : “போராட்டம் இன்னும் தொடர்ந்துட்டு இருக்கு. அரசாங்கம் எப்பிடியும் அங்க ஃபேக்டரியக் கொண்டு வருவோம்னு சொல்லி வேலைய முடிச்சு திறக்கவும் போறாங்க. உங்க படம் ஏதாவது ஒரு வகையில போராடறவங்களுக்கு ஆதரவான வேலைகள் செஞ்சிருக்கதா நினைக்கிறீங்களா?”


அண் : “கண்டிப்பா… என்னதான் இண்டர்நெட் நியூஸ் சேனல்னு மக்கள் கிட்ட இந்தப் பிரச்சனை போனாலும் ஒரு டாக்குமெண்ட்ரியா உலகம் முழுக்கப் போய்ச்சேரும்போது அந்த மக்களோட நிஜமான வலிய இன்னும் அழுத்தமா உணர முடியுதே. இந்தப் படத்தப் பாத்த ஒரு ஜெர்மன் இயக்குநர் இந்தக் கிராமத்து மக்களோட போராட்டத்துக்கு ஆதரவா அறிக்கை கூட விட்டாரே பாக்கலையா நீங்க…?”


நிரு : “எக்ஸ் க்யூஸ் மீ… அவர் உலகம் முழுக்க இதுமாதிரி ரசாயன ஃபேக்டரிகள் வரக்கூடாதுன்னு தொடர்ந்து போராடறவரு… நீங்க படம்லாம் எடுக்கறதுக்கு முன்னாடியே இந்த ஃபேக்டரி வந்தா அந்தப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவாங்கன்னு பிபிசி ல ஒரு பேட்டில சொல்லி இருக்காரு. இன்னும் சொல்லப்போனா அவர் அந்த அறிக்கை விட்ட பிறகுதான் உங்க படத்தைப் பார்த்திருக்கார்.


அண் : “ஓ… இந்த பிபிசி விசயம் எனக்குத் தெரியாது ஸாரி…”


நிரு : “தங்கள் வாழ்க்கையக் காப்பாத்திக்கிற மக்களோட போராட்டத்த நீங்க படமாக்கிக் காசா மாத்திட்டு இருக்கீங்கன்னு உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே நீங்க அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க?”


அண்ணாமலைக்கு சடாரென கோவம் வருகிறது.


அண் : “நான்சென்ஸ்… நாலு செட் துணிமனிதான் இப்பவும் நான் சேர்த்திருக்கற சொத்து. அடுத்த மாச ரூம் வாடகைக்கு காசில்லாமத்தான் இப்பவும் இருக்கேன். நிஜமாவே அந்த மக்கள் பக்கமா நிக்கனும்னு நெனச்சேன். இந்தப் படம் எடுத்தேன். பணம் சம்பாதிக்க எனக்கு நிறைய வழிகள் இருக்கு… பத்திரிக்கைகள், சேனல்ஸ் எல்லாம் நியூஸ் போடறாங்களே, அதுவும் காசு பாக்கத்தானா?”


தன்னை மடக்கி விட்டதாக நினைத்து அவன் சொன்ன முட்டாள்த்தனமான வார்த்தைகளைக் கேட்ட நிருபர் சிரித்தபடியே தனது முகபாவனையை மாற்றிக் கொள்கிறார். இந்த நேரத்தில் லஷ்மியும் சரியாக அங்கு வந்துவிட அண்ணாமலை பேட்டி எடுப்பபரிடம் அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறான். பதிலுக்கு லஷ்மி தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்க அண்ணாமலைக்கு ஒரு நொடி சர்வமும் அடங்கிப் போனது. “தோழின்னா ஏதோ சப்பட்டையா ஒரு பொண்ணக் கூட்டிட்டு வருவான்னு பாத்தா.. இவ்ளோ அழகா ஒருத்தியா? இவனுக்கு வந்த யோகத்தப் பாருய்யா…” உதடுகள் தானாகவே முனுமுனுத்துக் கொண்டன. நிருபர் சிரித்தபடி மீண்டும் கேள்விகளைத் தொடர்கிறார்.


நிரு : “கொல்கத்தாவுல எங்க போகனும்னு விரும்பறீங்க…”


அண் : “சத்யஜித்ரேவோட வீட்டுக்கு… அது எனக்குக் கோவில். இன்னும் சொல்லப் போனா ரேவும், கட்டக்கும் இல்லாம நான் இல்லைன்னு சொல்லலாம். கொல்கத்தா எனக்கு மானசீகமா தகப்பன் வீடு.”


நிருபர் அவன் சொன்ன பதிலைக் கேட்டு சிரிக்கிறார்.


நிரு : ”தமிழ்நாட்டுல இன்னும் சில பிரச்சனைகள் நடந்துட்டு இருக்கு… அதுப்பத்தியும் ஆவணப்படங்கள் எடுத்துட்டு இருக்காங்க. ஆனா அந்தப் படங்களுக்கு இல்லாத முக்கியத்துவம் இந்தப் படத்துக்கு ஏன் இருக்குன்னு நம்பறீங்க?”

அண்ணாமலைக்குமே இந்தக் கேள்விக்கான பதில் உண்மையில் தெரியவில்லை.

அண் : “வெல், படங்களோட நேர்த்தி ஒரு முக்கியமான காரணம். அடுத்ததா பார்க்கிறவங்களுக்கு நாம சொல்ற விசயம் எவ்ளோ தூரம் அழுத்தமா போய்ச் சேருதுங்கறதும்…”


நிரு : “பொதுவா ஆவணப்படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்குமான வித்யாசமா எதப் பாக்கறீங்க?”


அண் : “அஃப்கோர்ஸ் வியாபாரம் தான். கமர்சியல் படம் எடுக்கறவன் ஒரே வருசத்துல கார் பங்களான்னு வாங்கி செட்டில் ஆகறான்… எங்கள மாதிரி இருக்கறவனுக்கு காலம் முழுக்கவும் பேச்சிலர் ரூம் தான்.


நிரு : “ஸோ உங்களுக்கு பணம் சம்பாதிக்கிறதுல விருப்பம் இல்லைன்னு புரிஞ்சுக்கலாமா?”


அண் : “இப்போதைக்கு இல்ல….”


நிரு : “நல்லது… நீங்க விரைவில ஒரு கதைப்படம் எடுக்கப் போறதாவும் கேள்விப்பட்டேன் அதற்காக இன்னொரு வாழ்த்துக்கள்…”


இருவரும் கை குலுக்கி விடைபெறுகின்றனர்.


லஷ்மியும் அவனின் பெங்காளியத் தோழியும் ட்ரூஃபோவின் 400 ப்ளோஸ் படம் குறித்து சற்றுத் தள்ளி அமர்ந்து தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். “தாயோளி இவனெல்லாம் சினிமா பத்தி பேசறானா?” ஓங்கி அவன் முதுகில் குத்தவேண்டுமென அண்ணாமலை நினைத்துக் கொண்டதை மறைத்து சிரித்தபடியே அவர்களின் உரையாடலில் சென்று கலந்து கொண்டான். இன்னும் ஒரு மணி நேரத்தில் விருது அறிவிப்பு இருக்குமென்பதால் இருந்துவிட்டேப் போகலாமென முடிவு செய்தனர். லஷ்மியின் தோழி இவனது ஆவணப்படம் குறித்து இரண்டொரு வார்த்தைகள் பேசினாள். ”உங்களால மரியாதைக்குரிய ஒரு கதைப்படத்தை இயக்க முடியும்னு நம்பிக்கை வருது… ரிதுபர்னோ கோஷ் மாதிரியான ஒரு ஆளுமையா நீங்க வருவீங்க..” அவள் சொன்ன கடைசி சில வார்த்தைகளைக் கேட்டதும் அவனுக்கு புல்லரித்துப் போனது. அவள் சம்மதித்தால் அண்ணாமலை அப்போது அவளுக்கு முத்தமே கொடுத்திருப்பான். இத்தனை வருடத்தில் தனது ஆளுமையை புரிந்து கொண்ட பெண். ”வாங்களேன் பக்கத்துல காஃபி ஷாப் இருந்தா போகலாம்..?” அண்ணாமலையே அவர்களை அழைக்க, மூவரும் அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்பிற்குச் சென்றனர்.


சாலையின் இரைச்சலும் சூடான காஃபியுமாய் மகத்துவமான மாலை நேரம் அது. இப்படியானதொரு மாலையில் சாவகாசமான ஒரு காஃபிக்காக கொஞ்சம் சம்பாதிக்கத்தான் வேண்டியிருக்கிறதென நினைத்து அண்ணாமலை சிரித்தான். லஷ்மி இவர்களின் உரையாடலில் அதிகம் கலந்துகொள்ளவில்லை. அவனுக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது ஒரு காரணமென்றாலும் அறையிலிருந்து கிளம்பும் முன் குடித்த கொஞ்சம் பிராந்தியும் இன்னொரு காரணம். கூடவே தனது தோழியுடன் அண்ணாமலை மாய்ந்து மாய்ந்து பேசுவதன் உளவியல் காரணங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. என்னதான் உருண்டு கும்பிட்டாலும் தன்னிடமோ அண்ணாமலையிடமோ அவள் ஒரு புன்னகையைத் தாண்டி வேறு எதையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. ஆனாலும் ஒரு நப்பாசை.


லஷ்மி தன்னை நினைத்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். அதிகபட்சமாய் அவள் தரப்போவது இந்தப் பயணத்தின் போது அவளுடன் சுற்றிய ஒரே சந்தோசத்தை மட்டும்தான். நல்லது இப்போதைக்கு இதுவே பெரிய ஆறுதலென்று அமைதியாய் இருந்தான். அவன் தங்களின் உரையாடலில் நாட்டமில்லாது இருப்பதைக் கவனித்த தோழி “உன்னோட கதையவே இவருக்குக் குடேன் படமா எடுக்கட்டும்…” என அவனையும் உள்ளே இழுத்தாள். ஜனநாயகவாதி. லஷ்மி அதை பிரமாதமானதொரு ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் சத்தமாகவே சிரிக்க அண்ணாமலையும் “அவர் தான் என்னோட படத்துக்கு ரைட்டர் இதுல என்ன சந்தேகம்? சொல்லுங்க ஜி..” என தன் பங்குக்கு தன் எழுத்தாளனை கொஞ்சம் குளிப்பாட்டினான். ஆளை விட்டால் போதுமடா சாமி என நினைத்துக் கொண்ட எழுத்தாளன் “சரி நீங்க பேசிட்டு வாங்க…. நான் ரெஸ்ட் ரூம் போகனும்…” தனது 34 சைஸ் பேண்ட்டும் இறுக்கமாகிவிட்ட கவலையோடு எழுந்து வேகமாக திரையரங்கிற்கே நடந்தான். அவன் உயரத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவன் தொப்பை உருண்டு திரண்ட ஒரு நடமாடும் பிள்ளையாரகவே அவனைக் காட்டியது. அதைக் குறைத்துவிட வேண்டுமென இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவன் எடுத்த எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை, பாதிக்கும் மேல் நள்ளிரவு பிராந்தியும் பிரியாணியும் சேர்ந்த கலவை அந்தத் தொப்பை. இந்த நூற்றாண்டில் குறையுமா என்ன?


அண்ணாமலையின் படத்திற்குத்தான் விருது அறிவிக்கப்பட்டது. வானத்து தேவதைகள் எல்லாம் மலர் தூவ, தேவகுமாரன் படிகளில் நடந்து செல்வதற்குப் பதிலாக மிதந்து சென்று அந்தப் பரிசை வாங்கிக் கொண்டான். அவனிடம் மைக் வந்த பொழுது படத்தின் சாரமான விசயங்களைக் கண்ணீரோடு மேடையில் பேசினான். நிகழ்ச்சி அறிவிப்பாளனும் விருது கொடுத்தவருமே கூட அவன் பேச்சில் கரைந்து போயிருந்தனர். பார்வையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்து அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த லஷ்மி அண்ணாமலை ஒரே சமயத்தில் அங்கிருக்கும் எல்லோருக்கும் ப்ளோ ஜாப் செய்து விடுவது போன்ற அருவருப்பை உணர்ந்தான். எழுந்து போய்விடத் தோன்றியது, அடக்கிக் கொண்டான். இப்போது அவனை பகைத்துக் கொள்ள முடியாது. இத்தனை நாட்களும் அவன் நண்பன், இப்பொழுது முதலாளி.


விழா முடிந்து அறைக்குத் திரும்பினார்கள். தன் பர்ஸில் இருந்து ஒரு ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்த அண்ணாமலை

“ஜி நீங்க இங்க இருந்து சென்னை போக வேணாம், நேரா அந்தக் கிராமத்துக்கு போங்க… படத்த நம்ம போராட்டக் குழுவுக்கு போட்டுக் காட்டுங்க… எவனப் பாத்தாலும் ஏன் இன்னும் அங்க படம் போடலன்னு கேட்டு தாலிய அறுக்குறானுக… நான் இங்க இருந்து டெல்லி போறேன்… இன்னும் பத்து நாள்ல என் படம் ஆம்ஸ்டர்டாம்ல ஸ்க்ரீன் பன்றாங்க இல்லையா? அங்க போறேன்…”


( என் படம் என அவன் சொன்னதை எழுத்தாளன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். )

எல்லாவற்றுக்கும் சரி சரியென தலையாட்டிக் கொண்ட லஷ்மி அறையை காலி செய்யும்போது லெட்ஜரைக் கவனித்தான். அண்ணாமலையின் பெயருக்கு அருகில் assistant – l.saravanakumar இருக்க தனது பெயரின் மேல் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு அசிஸ்டெண்ட்டை மட்டும் அப்படியே வைத்தான். அண்ணாமலை கொடுத்த ஐயாயிரத்தில் இரண்டாயிரம் ரூபாய்க்கு காஸ்ட்லியான ஒரு ஒயினை வாங்கியவன் தோழியுடன் அன்றைய இலக்கிய விருந்தைக் கொண்டாடினான். அண்ணாமலை நாளையோ நாளை மறுநாளோ டெல்லிக்குப் போகக் கூடும். அவனை ஆம்ஸ்டர்டாம் அழைக்கிறது.


அங்கே….


இன்னும் சில தினங்களில் ஃபேக்டரியைத் திறந்துவிட்டால் நடக்கும் பயங்கரங்களை நினைத்து அஞ்சி அந்த கிராம மக்கள் இரவு பகலாக எப்போதும் போல் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


( 2014 ம் வருடம் எழுதப்பட்ட கதை.)

261 views

Recent Posts

See All
bottom of page