top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

Toby -ராஜ் பி ஷெட்டியின் முந்தைய படங்களான ஒரு மொட்டையன் கத, கருட காமனா வ்ருஷப வாகனா என இரண்டுமே எனக்கு விருப்பமானவை. கதாப்பாத்திரங்களை உருவாக்குவதில் அவரிடமுள்ள தனித்துவம்தான் அவரது படங்களின் மீதான ஈர்ப்பிற்கான காரணம். ஒவ்வொருவரும் ஒரு கதையை ஒவ்வொரு விதமாக அணுகுவார்கள். ஒரு கதையிலிருந்து திரைக்கதையாக விரியும்போது சூழலின் அடிப்படையில் கதையை விரிவாக்குவது ஒருமுறை. ஒரு சிக்கலில் இருந்து கதையின் முடிச்சுகளை விரித்து எடுத்துச் செல்வது, ஒரு உதாரணத்திற்கு முதல்வன் படத்தை எடுத்துக் கொண்டால் அதில் வரும் பஸ் ஸ்ட்ரைக் அதில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கு புகழேந்தி கதாப்பாத்திரம் எதிர்வினையாற்றுவதன் வழியாய் அந்தக் கதாப்பாத்திரம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் பின் அடுத்த முடிச்சு முதலமைச்சரை நேர்காணல் செய்வதில் துவங்கி கதையின் அடுத்த தளம் நோக்கி நகரும். இங்கு முக்கிய கதாப்பாத்திரம் தனித்துவமானது என்பதை விட அந்தக் கதையின் சூழல்தான் முக்கியத்துவமாகிறது.


திரைக்கதை அமைப்பின் இன்னொரு வகையானது, ஒரு கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்துவது. இயக்குநர் பாலாவின் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் கதாப்பாத்திரங்களின் செயல்களிலிருந்து விரிவடைந்த கதைகளாக இருக்கும். அந்தத் திரைப்படங்களின் தனித்துவமே அதன் கதாப்பாத்திரங்கள்தான். பிதாமகனாகட்டும், நந்தாவாகட்டும் ,சேதுவாகட்டும் பிரதானக் கதாப்பாத்திரங்களின் செயல்களும் விழைவுகளுமே கதையின் வளர்ச்சிக்கான ஆணிவேராகின்றன. இங்கு இயக்குநர் பாலாவின் திரைப்படங்களை நான் குறிப்பிடுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. ராஜ் பி ஷெட்டியின் மூன்று படங்களும் இந்த வகையானவை. முக்கியமாக டோபியின் கதாப்பாத்திர உருவாக்கத்தில் பிதாமகனின் தாக்கத்தை அழுத்தமாகவே உணரமுடிகிறது.


இந்தத் தாக்கம் என்பது எந்த வகையிலும் டோபியின் தனித்துவத்தைக் குறைக்கவில்லை, மாறாக அந்தக் கதாப்பாத்திரத்தை மேலும் வலிமையாக்குகிறது.


கன்னடத் திரைப்படங்களுக்கு எப்போதுமே இரண்டு வகையான போக்குகள் உண்டு. ஒன்று காசரவள்ளி, கர்னட் மாதிரியான தீவிரமான இயக்குநர்களின் கலைப்படங்கள் இன்னொருவகை சற்றேறக்குறைய தெலுங்கு சினிமாவிற்கு நெருக்கமான வணிகத் திரைப்படங்கள். ஆனால் இந்த இரண்டு போக்கிலிருந்தும் துண்டித்துக் கொண்டு புதிய வகையிலான திரைப்படப் போக்கு ஒன்று லூசியா திரைப்படத்திலிருந்து துவங்கியதாகக் கொள்ளலாம். இந்தத் திரைப்படங்கள் கர்நாடகத்தின் புதிய தலைமுறை இயக்குநர்களாலும் கதை சொல்லிகளாலும் உருவானவை. இந்த புதிய போக்கில் பிரஷாந்த் நீலும், ரிஷப் ஷெட்டியும் வணிக சினிமாவின் உச்சத்தில் இருப்பவர்களென்றால் ராஜ் பி ஷெட்டி அதைப் பற்றின பெரிய அக்கறைகளெதுவும் இல்லாமல் தனித்ததொரு வகையில் இயங்குகிறவராய் இருக்கிறார்.

கருடகாமனாவின் சிவா விற்கும் இந்தத் திரைப்படத்தில் வரும் டோபிக்கும் அடிப்படையில் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே கைவிடப்பட்டவர்கள், இருவருமே சின்னதொரு அன்பிற்காகவும் அரவணைப்பின் கதகதப்பிற்காகவும் தவித்துக் கிடப்பவர்கள். இருவருக்குள்ளுமே யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷமும் வன்முறையுணர்வும் உள்ளது. கருடகாமனாவில் நண்பனிடம் இருக்கும் பாசப்பிணைப்பு இங்கு மகளின் மீது. மேற்பார்வைக்கு ஒரே போல் தோன்றும் இரண்டு கதாப்பாத்திரங்களும் உண்மையில் இரண்டு வெவ்வேறு உலகங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. டோபியின் உலகம் உத்தர கர்நாடகத்தின் ஒரு சின்னஞ்சிறிய நகரத்தை மையப்படுத்தியது. கைவிடப்பட்ட ஒரு சிறுவன், பெயர் கூட இல்லாதவனுக்கு ஒரு பாதிரியார் பெயர் வைக்கிறார். கூர்நோக்கு இல்லத்தில் வளரும் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் சண்டையும் வன்முறையும் மட்டுமே. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வருகிறவனை இந்த உலகம் அவனது இயல்புகளோடு ஏற்றுக் கொள்ளவில்லை.


சில நாட்கள் தனக்கு பெயர் வைத்த பாதிரியாரின் அரவணைப்பில் இருப்பவன் பின்பு தற்செயலாக அறிமுகமாகும் ஒரு மனிதனோடு அவன் வேலை செய்யும் இடமான பிணவறையில் வாழத் துவங்குகிறான். டோபி தனது உலகைக் குறித்து எந்த அருவருப்புகளையும் தயக்கங்களையும் கொள்ளவில்லை. அவன் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்கிறான். ஒரு கதாப்பாத்திரத்தின் வாழ்வை திரைக்கதையாசிரியன் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அது திரைக்கதையில் பிரதிபலிக்காமல் போகலாம், ஆனால் அவனது இயல்பை அவன் உடல்மொழியும், உரையாடலும் வெளிப்படுத்தியபடியே இருக்க வேண்டும். ராஜ் பி ஷெட்டியின் படங்களில் கதாப்பாத்திரங்கள் முழுமையாக இருப்பது அந்தக் கதாப்பாத்திரங்களின் வாழ்வு முழுமையாக இருப்பதனால்தான்.


டோபியின் கதாப்பாத்திரம் போலவே ஜென்னியின் கதாப்பாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பிதாமகனின் முதல் காட்சியில் எங்கிருந்தோ மயானக்கரைக்கு வரும் பெண் அங்கேயே பிள்ளையைப் பெற்றுப் போட்டுவிட்டு செத்துவிடுகிறாள். இங்கு பெற்றவள் எவளென்றே தெரியாதபடி அந்தக் குழந்தை ஆற்றங்கரையோரத்தில் கிடக்கிறது. எல்லோரும் சுற்றி நின்று என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருக்கையில் டோபி தயங்காமல் சென்று எடுத்து அந்தக் குழந்தையை வளர்க்கத் துவங்குகிறான். யதார்த்தத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி நமக்கெழாத வண்ணம் அந்தக் கதாப்பாத்திரம் அதற்கு முன்பே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான் அதன் சிறப்பம்சம். டோபியின் வாழ்வை மட்டுமில்லாமல் ஜென்னியின் வாழ்வையும் சேர்த்து விவரிக்கிறது இந்தக் கதை. கைவிடப்பட்ட இருவர் தந்தை மகளாகிறார்கள். அந்தப் பந்தத்தை அந்த ஊர் எந்த குழப்பமுமில்லாமல் ஏற்றுக்கொள்கிறது. எந்த மகளுக்காக டோபி எல்லா வன்முறைகளையும் துறந்தானோ அதே மகளுக்காக இன்னொரு முறை தன் பழைய நிலைக்குச் செல்ல வேண்டிய சூழல். அங்கிருந்து வீசத் துவங்கும் புயல் அவர்கள் இருவரது வாழ்வையுமே சிதைக்கிறது. டோபியிடம் வந்து சேரும் ஜென்னி வளரும் வரை கதை நீரோடை போல் அழகாக செல்கிறது. முழுக் கதையையும் எழுதுவது ஒரு நல்லத் திரைப்படத்திற்கு செய்யும் அவமரியாதை என்பதால் அதனைத் தவிர்க்கிறேன்.


முன்பின்னாக நகர்வதான திரைக்கதையின் போக்கு கதைக்குள் நிகழும் காலத்தைக் கடப்பதற்கான உத்தியாக இருந்தாலும் வெவ்வேறு கதாப்பாத்திரங்களின் வழி சொல்லும் போது அந்தக் கதாப்பாத்திரங்கள் கதைக்குள் தங்களையும் அழுத்தமான ஒன்றாக மாற்றிக்கொள்கின்றன. நேரடியாக திரைக்கதை எழுதப்பட்டிருந்தால் ஒருவேளை இவர்களுக்கான முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கலாம். ராஜ் பி ஷெட்டியும் அவருக்கு மகளாக நடித்திருக்கும் சைத்ராவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் துவங்கி டோபியின் கதாப்பாத்திரம் நமக்கு அறிமுகமாக பதினைந்து நிமிடங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து நிமிடங்கள் நமக்கு கதைக்குள் இரண்டரை மணிநேரம் பயணிப்பதற்கான உந்துதலையும் இந்தக் கதை நிகழும் களம், அந்த ஊரின் வாழ்க்கைப் பின்னனி சடங்குகள் அவ்வளவும் கச்சிதமாகச் சொல்லப்பட்டுவிடுகின்றன. ஜென்னி தனது தகப்பனை நான்கு நாட்களாகக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் கல்லெறியும் போதுதான் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது கவனத்திலும் கல்லெறியப்படுகிறது. இதுவரையிலுமான கதை இந்த ஊரைப்பற்றியது, இனிவரும் கதை டோபியினுடையது. இதற்குப் பிறகு வரும் அத்தனைக் கதாப்பாத்திரங்களும் டோபியையும் ஜென்னியையும் மட்டுமே பேசப் போகின்றன.


டோபிக்கும் பாதிரியாருக்குமான உறவு, டோபிக்கும் பிணவறையில் வேலை செய்கிறவருக்குமான உறவு, டோபிக்கும் ஜென்னிக்குமான உறவு, டோபிக்கும் சாவித்திரிக்குமான உறவு இவை எல்லாவற்றிலுமே தெளிவான சமபவங்களும் முழுமையும் இருக்கின்றன. ஒரு திரைக்கதையில் இந்தக் கச்சிதம் அமைவது ஆச்சர்யம்தான். இந்தக் கதாப்பாத்திரங்களுக்கு தேர்வுசெய்யப்பட்ட நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருடகாமனா படத்தைப் போலவே இங்கும் தனிமனிதக் குற்றத்திலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாய் மாறுவதற்கான திருப்பமென்பது தற்செயலாகத்தான் நிகழ்கிறது. சொல்லப் போனால் இங்கு அந்தப் பெருங்குற்றங்களுக்கான இடமும் பெரியளவில் இல்லைதான். ( கடத்தல், அரசியல்... போன்றவை..) அவை இல்லாமலும் இந்தக் கதை முழுமையானதுதான். இங்கு ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்குமென இருக்கும் பிரத்யேகமான தேர்வுகள், விருப்பங்கள், வெறுப்புகள் அதனைச் சார்ந்துதான் கதையுலகம் இயங்குகிறது. டோபியைப் போன்றதொரு மூர்க்கனுக்கு சாவித்திரியை அடைவது பெரிய காரியமில்லை. ஆனால் அவன் அவளைத் தொடுவது கூட இல்லை. ‘நான் உடலை விற்கும் தொழில் செய்பவள் என்னால் உன்னோடு வாழமுடியாது, வேண்டுமானால் நண்பர்களாக இருக்கலாம்’ என அவள் சொல்லும்போது தயக்கத்தோடு ஏற்றுக்கொள்கிறான். அவள் மீது இச்சை இருந்தும் அவன் அத்துமீறவில்லை. தன்னை அரவணைக்கிறவர்களுக்கு டோபி தரும் அன்பும் பணிவும் அசாத்தியமானதாய் இருக்கிறது. பாதிரியாருக்காகட்டும், ஜென்னிக்காகட்டும், சாவித்திரிக்காகட்டும் எல்லோருக்குமே அவர்கள் தந்த அன்பை விடவும் அதீதமாகவே டோபி திருப்பித் தருகிறான். சொல்லப் போனால் இந்த அதீதம் தான் டோபி. இந்த அதீதம் தான் ராஜ் பி ஷெட்டியின் கதாப்பாத்திரங்கள்.


சினிமாவின் வியாபார கணக்குகளுக்கு அப்பால் தொடர்ந்து தனக்கு விருப்பமான ராஜ் பி ஷெட்டி இதுபோன்ற படங்களை இயக்குவது கன்னட மொழியின் புதிய தலைமுறை திரைக்கலைஞர்களில் அவரைத் தனித்துவமாகக் காட்டுவதோடு அவரைத் தொடர்ந்து புதிதாக வருகிறவர்களுக்கும் உற்சாகமளிக்கக் கூடியதாய் இருக்கிறது. வணிக சினிமாக்கள் நிலத்துடன் சினிமாவிற்கு இருக்கும் உறவுகளைத் துண்டித்துக் கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற திரைப்படங்கள்தான் புதுவிதமான திரையனுபவத்தை நமக்குத் தருகின்றன.

693 views

Comments


bottom of page