top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

cigarette girl



இந்தோனேஷியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லஷ்மி பமன்ஜக்கின் அம்பா என்ற நாவல் எனக்கு மிக விருப்பமான நாவல்களில் ஒன்று. இந்தியாவைப் போன்றே தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் கொண்ட நாடு இந்தோனேஷியா. குறிப்பாக ராமாயணக் கதைகளையும் பெயர்களையும் இந்தோனேஷியர்களின் வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாது. ஜாவா தீவின் ஜோ ஜகார்த்தாவிலுள்ள இந்து கோயிலின் எச்சங்கள் இதற்கு மிக முக்கியமான சான்று. இந்தோனேஷியாவின் நில அமைப்பும் வினோதமானது, அடர்ந்த மலைக்காடுகள், கடல், எரிமலைகள் என எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த நாட்டில் ஜாவானிய மக்களுக்குத் தனித்த கலாச்சாரம் உண்டு. மற்ற இந்தோனேஷியத் தீவுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், நம்பிக்கைகள் என அவர்கள் தனித்த அடையாளங்களைக் கொண்டிருப்பார்கள். ஜாவானியப் பெண்களைக் காதலிகளாகக் கிடைக்கப்பெற்றவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான். அம்பா வும் காதலை மையப்படுத்திய நாவல்தான் என்றாலும் அதன் முக்கிய பேசுபொருள் ஒரு நூறாண்டுகாலத்தில் மாறிப்போன இந்தோனேஷியாவின் அடையாளங்களும் அரசியலும்.


இந்தோனேஷியத் திரைப்படங்கள் பெரும்பாலும் பேய்க்கதைகளை மையப்படுத்தி வரக்கூடியவை. இந்தப் படங்களை அடியொட்டிதான் மலாய் மற்றும்க் தாய்லாந்து நாட்டின் வணிகப்படங்களும் அதிகம் வரும். இந்தோனேஷியர்களுக்கு பேய்களைக் குறித்து இருக்கும் நம்பிக்கைகளைக் கேட்டால் சில சமயங்களில் வேடிக்கையாகக் கூட இருக்கும். கடவுளை விடவும் ஆவிகளை நம்பக்கூடியவர்கள். அரிதாகவே அவர்கள் கலைப்படங்களை முயற்சிக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் கடந்த சில வருடங்களில் மாறத் துவங்கி உலகப் பட விழாக்களின் அரங்கங்களில் அவர்களின் திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சிகரெட் கேர்ள் என்ற இந்த சமீபத்திய இணையத் தொடர் என்னை வெகுவாக கவர்ந்தது. ஸ்ட்ரீமிங் தளங்களின் படங்கள் பெரும்பாலும் போதைப்பொருள் மாஃபியா, அடிதடிகள், சைக்கோ கொலைகாரன் என படங்களை உற்பத்தி செய்யும் வேளையில் இது ஒரு காதல் கதை. நான் குறிப்பிட்ட அம்பா நாவலைப் போல் அரசியல் இதன் ஒரு மெல்லிய இழையாக வருகிறதே ஒழிய நாவல் பிரதானமாகப் பேசுவது காதல் தான். சிறப்பான நடிகர்கள், சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களென அட்டகாசமான காட்சியனுபவத்தைத் தந்தது.

முன் பின்னாக செல்லும் இந்தக் கதையில் 1960 களில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள ஒரு சிறு நகரத்தில் நடக்கிறது கதை. சிகரெட் தயாரிக்கும் சிறு சிறு ஆலைகள் நிறைய உள்ள அந்த ஊரில் இரண்டு சிகரெட் கம்பெனி முதலாளிகளுக்கு நடுவில் நீண்டகால போட்டியுண்டு. தொழிலையும் தாண்டி அவர்களுக்குள் தனிப்பட்ட முறையிலும் சில பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. சிகரெட் ஆலையில் முக்கியமான பகுதி புகையிலையோடு ரசாயனத்தைக் கலக்கும் அந்த இடம் தான். இந்த மிக்ஸிங் தான் சிகரெட்டுகளின் தரத்தைத் தீர்மாணிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த மிக்ஸிங் வேலைக்கு மட்டுமில்லாமல் மிக்ஸிங் நடக்கும் இடத்திற்குள்ளேயே பெண்கள் வரக்கூடாதென்கிற வினோதமான கட்டுப்பாடு அந்த நகரத்தில் உண்டு. நாயகியான தேசியாவிற்கு மிகச் சிறந்த கலவையில் உயர்தரமான சிகரெட்டை உற்பத்தி செய்யக்கூடிய ஆளாக வரவேண்டுமென்பது ஆசை. தந்தை முதலாளியாக இருந்தாலும் அவளால் அந்த மிக்ஸிங் அறைக்குள் செல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் தான் வேறு ஒரு தீவில் அங்கு பிழைக்க வரும் ராயாவோடு அறிமுகம் ஏற்படுகிறது. அவன் இவர்களின் ஆலையில் வேலை செய்யத் துவங்குகிறான். அவனக்கு இருக்கும் கல்வியறிவு வேலைத்திறன் எல்லாம் பிடித்துப்போய் நாயகியின் தந்தை அவனை தனது வீட்டோடு வைத்துக் கொள்ள சில காலத்திலேயே ராயாவிற்கும் தேசியாவிற்குமிடையில் காதல் அரும்புகிறது. நிறைவேறாத இந்தக் காதல் வெவ்வேறு திசைகளிலும் காலங்களிலும் பயணித்த அடுத்த தலைமுறையினரையும் ஒரு புள்ளியில் வந்து இணைக்கிறது. நேர்கோட்டில் சொல்லியிருந்தால் சோர்வாக முடிந்துபோயிருக்கக் கூடிய சாத்தியங்கள் இருப்பதால் கதையை முன்பின்னாக நகர்த்தியிருக்கிறார்கள். ஆனால் பரபரப்பிற்காக எந்தக் காட்சியையும் சேர்க்கவில்லை.


பார்வையாளன் இதைத்தான் ரசிப்பான் என்கிற குருட்டுத்தனமான நம்பிக்கைகள் உலகம் முழுக்கவே எல்லா மொழி சினிமாக்காரர்களிடமும் ஏராளமிருக்கின்றன. ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக ஓடக்கூடிய இந்தத் தொடரில் காட்சிகள் மிக நிதானமாகவே நகர்கின்றன. அதைவிடவும் முக்கியமாக கதையின் முக்கிய அம்சமாக வரக்கூடிய அரசியல் புரட்சியை பெரிதாகக் காட்சிப்படுத்த முயலவில்லை. அந்த அரசியல் புரட்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதித்தது என்பதை அந்த வீட்டை மையப்படுத்தியே காட்சியமைத்திருக்கிறார்கள். இந்த எளிமைதான் இந்தத் தொடரின் சிறப்பம்சமாகத் தெரிகிறது. கதை சொல்லுதலில் எங்கெல்லாம் எளிமையான உத்திகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கு இந்தத் தொடர் நல்லதொரு உதாரணம். அவசியம் காணப் பரிந்துரைக்கிறேன்.

125 views

Comentarios


bottom of page