கப்பா தொலைக்காட்சியின் ம்யூசிக் மோஜோ எனக்கு விருப்பமானதொன்று. கேரளத்தில் திரைப்பட இசைக்கு வெளியே மாற்று முயற்சிகள் அனேகமுண்டு, அதனைக் கொண்டாடவும் பெருங்கூட்டமுண்டு. மாத்ரூபூமியின் கப்பா தொலைக்காட்சியில் புதிய திறமையாளர்களை ஒவ்வொரு சீசனிலும் அறிமுகப்படுத்தியபடியே இருக்கிறார்கள். இன்றைக்கு மிகப்புகழ் பெற்றவர்களாய் இருக்கும் தைக்குடம் ப்ரிட்ஜ் கோவிந்த் வசந்தா, பாடகி சிதாரா கிருஷ்ணகுமார் என அந்த வரிசை மிகப்பெரியது. நவீன மேற்கத்திய இசை வடிவங்களில் உருவான பாடல்கள் மட்டுமில்லாமல் பாரம்பரியமான இந்திய இசை வடிவங்களையும் கேரளத்தின் நாட்டார் பாடல்களையும் உள்வாங்கி நிறைய பாடல்கள் பாடப்பெறுவதுண்டு. ம்யூசிக் மோஜோவின் புதிய சீசன் செப்டம்பர் 5 ம் தேதியில் ஒளிபரப்பாகத் துவங்கியது. கடந்த வாரத்தில் ஒவ்வொரு பாடலாகக் கேட்கத் துவங்கியிருந்தேன். வழமை போலவே அபாரமான திறமையாளர்கள், சிறப்பான பாடல்களென வரிசைகட்டி நிற்கிறது.
இந்த சீசனை ஆர்வத்தோடு பார்க்கக் காரணம் எனக்கு விருப்பமான ஆர்யா தயாள். அழகான பெண், அவரை விடவும் அழகான அவரது குரல். ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரபலமானவர் என்றாலும் ம்யூசிக் மோஜோவில் அவருக்கு இது முதல் முறை அவரது பலவிதம் பாடல் பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. மாறாக டாக்டர் பினிதா ரஞ்சித்தின் ஒரு ஜனவரி பாடலும் ஸ்ரீநாத் நாயரின் gum sri meri பாடலும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
இந்த இரண்டு பாடல்களை விடவும் அதிகம் ஈர்த்தது அம்ருதம் கமயா குழுவின் நெஞ்சின் நோவு பாடல். அபிராமி சுரேஷ், அம்ரிதா சுரேஷ் இருவரும் ஏற்கனவே ம்யூசிக் மோஜோ பிரபலம் தான். அல்லாமல் மலையாள இசை ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றவர்கள். தனது தந்தையின் நினைவை ஒட்டி அபிராமி சுரேஷ் எழுதியிருக்கும் இந்தப் பாடலின் வரிகளும் இசைக்கோர்வையும் சிறப்பாக உள்ளன. சற்றே மெட்டல் ராக் வடிவத்தை ஒத்திருந்தாலும் பாடலின் இடையில் வரும் சலனமற்ற அமைதி அலாதியானதாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=TEFS0Ex-vrE
தமிழ்நாட்டில் திரைப்பட இசையைக் கடந்து மாற்று இசைவடிவங்களுக்கான வெளி சிறிதுமில்லை என்பது துயரம். இத்தனை பெரிய மாநிலத்தில் எட்டுகோடி மக்கள் கொண்ட கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான புதிய திறமையாளர்களை உருவாக்க முடியும். இயக்குநர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லஸ் கலெக்டிவ் மாதிரி பெரும் பாய்ச்சல்கள் நிகழக் கூடிய சாத்தியங்கள் உள்ளது. நமது ஊடகங்கள் இதனைத் தவிர்ப்பதன் காரணம் தான் புரிந்திருக்கவில்லை. தமிழ் சினிமாவின் பாடல்கள் உள்ளபடியே சலிப்புத் தட்டுகின்றன. மிகப் பழைய வரிகள், அதனை விடவும் பழைய மெட்டுகள் சொல்லி வைத்ததுபோல் அமைந்த பாடல் காட்சிகள் எல்லாம் இசையின் மேலிருக்கும் கொஞ்ச நஞ்ச விருப்பங்களையும் அழித்துவிடும் போல. ஒருபுறம் தமிழ்நாடு முழுக்க ஏராளமான கலை திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் கிராமியப் பாடகர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இன்னொரு புறம் கேஸ்ட்லஸ் கலெக்டிவ் போன்ற முயற்சிகளும் நடக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பெரும் பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்ல ஊடகங்கள் தான் போதுமானதாய் இல்லை. இந்த நிலை மாறியே ஆகவேண்டும்.
Comments