1
கடலின் பேரோசை வெளியெங்கும் நிறைந்து கிடக்க இன்னுமவள் மணலோடுதான் புரண்டு கொண்டிருக்கிறாள். அவளுடலெங்கும் மணல் திட்டுத்திட்டாய் ஓவியம் தீட்டியிருந்தது. மூடியிருந்த கண்களுக்குள் அசையும் அவளின் கருவிழிகளைப் பார்த்தபடியே கையிலிருந்த பியரை மதி குடித்துக் கொண்டிருந்தான். அந்த கருவிழிகளின் அலைச்சல் பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தன் சொந்த நிலத்தைத் தேடும் தவிப்பின் வெக்கையாக இருக்கலாம். மதுவருந்தியிருக்கும் அவளின் நாசியிலிருந்து நீண்ட சுவாசங்கள் வெளியேறியதில் உடல் காற்றாலான பலூனைப் போல் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
கண் மூடியிருக்கும் விருப்பத்திற்குரியதொரு பெண்ணை தொந்தரவு செய்யாமல் முத்தமிட எந்த ஆணுக்குத்தான் பிடிக்காது. கன்னத்திலிருந்து காதிற்கு பிரியும் மெல்லிய இடைவெளியில் சீராக வளர்ந்திருந்த பூனை மயிர்களின் மீது முத்தமிட்டவனின் கழுத்தில் கைவைத்து அப்பால் தள்ளினாள். எழுந்து உட்கார்ந்து கொண்டவள் அவனது கண்களை எதிர்கொள்ளாமலேயே
“முதல் முறையாக கடலைப் பார்த்த போது என்னவாக இருந்தாய்?”
எனக் கேட்டாள். அவன் கடற்கரையின் ஓரத்தில் பிறந்து அந்த உப்புக்காற்றோடே வாழ்ந்தவனாதலால் கடலும் தானும் வேறு வேறல்லதானோ என்கிற குழப்பத்தில் என்ன பதிலுறைப்பதென தவித்தான்.
“அம்மாவின் தொப்பூள்கொடியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கனமே கடலின் தொப்பூள்கொடியோடு பிணைத்துக் கொண்டவன் நான். என்னில் ஒரு பாதி கடல். கடலின் ஒரு துளி நான்…”
இந்த வேளைக்கு இப்படியானதொரு பதில் அவசியமற்றது. அதிலும் பிங்கி மாதிரியான ஒருத்தி இதை எப்படி எடுத்துக் கொள்வாளென்கிற பிரக்ஞையே இல்லாமல் இப்படி சொல்லியிருக்க வேண்டாமோ என சொன்ன பின்பாகவே அவனுக்குத் தோன்றியது.
“கடலோடு பிணைய முடிதல் அதிர்ஷ்டம், இல்லையா?”
இருளிற்குள் அவன் கண்களைத் தேடியபடி கேட்டவளின் குரல் இயல்பாக இருந்தது. அவன் ஆமோதிப்பதின் அடையாளமாய் தலையாட்ட, கைநிறைய மணலை அள்ளி அவன் டீ ஷட்டிற்குள் போட்டாள். மணலின் பிசுபிசுப்பை பொருட்படுத்தாது சிரித்தவன் தானும் ஒரு கை மணலை அள்ளி அவள் மேலாடைக்குள்ளாக போட்டான். ‘
எதற்காக தொடர்பேயில்லாமல் கடலைக் குறித்து கேட்டிருப்பாள்?’ மணலைத் தட்டிவிட்டுக் கொண்டவள் எழுந்து தன் மேலாடையை அவிழ்த்து மணலை உதறிவிட்டு இவனைத் திரும்பி காலால் உதைத்தாள்.
இவன் உயரத்தில் பாதியே உயரமென்றாலும் இவனைத் தன் கைவிரல்களைப் போல் எளிதில் மடக்கி கையாளக்கூடிய சாமர்த்யங் கொண்டவள். இன்னும் மணல் உடலிலிருந்து மீள்வதாக இல்லாமல் போக உள்ளாடையையும் அவிழ்த்து உடலிலிருந்த மணலைத் துடைத்துக் கொண்டாள். பரந்து நிர்வாணமாய்க் கிடந்த கடலின் பேருடலை விடவும் தகித்து ஒளிர்ந்து நின்றது பிங்கியின் உடல். அக்னி இருளில் எரியும் போதுதான் எப்போதையும் விட வீர்யமிக்கதாகிவிடுகிறது. தீட்சண்யத்தின் பேரொளியாய் தகித்துக் கொண்டிருந்தாள். எழுந்து அவளுடலை துடைத்துவிட்டவன்
“முதல் முறையாக கடல் பார்த்தபோது என்னவாக உணர்ந்தாய்?
அவள் கேட்கையில் அந்தக் குரலிலிருந்த ஆர்வமும் அக்கறையும் இவன் அவளிடம் கேட்கையில் இல்லை. கடலிலிருந்து விலகி கரையேறி மேட்டிலிருக்கும் கடைவீதி நோக்கி இருவரும் நடக்கத் துவங்கினர். அவள் கடலைப் பொருட்படுத்தவில்லை.
“சொந்த ஊர்ல வாழ எதுவுமே இல்லாம பிழைக்கத் இங்க வந்து வாரத்துல ஒரே ஒரு நாள் அதுவும் பிற்பகல் மட்டும் ஓய்வு கிடைக்கிற அவகாசத்துல கடலைப் பார்த்தப்போ ஒன்னுமே தோணல.”
ஆச்சர்யமாய்த் திரும்பி அவளைப் பார்த்தவன்
“நிஜமாவே ஒன்னும் தோணலையா?” அவள் சிரித்தபடி இல்லையெனத் தலையாட்டினாள். அவர்களைக் கடந்து சென்ற இரண்டு ஃப்ரஞ்ச்காரர்கள் சிரித்தபடி ஹலோ சொல்ல பிங்க்கி மட்டும் பதிலுக்கு “bonjour” என்றாள். இரண்டுபேருமே நாற்பதைத் தாண்டிய பெண்கள். ஆச்சர்யமாக இந்தக் குள்ளப்பெண் சொன்ன bonjour ஐப் பார்த்துவிட்டு பதிலுக்கு bonjur என்று சொல்லிக் கடந்தனர். தன்னோடு இத்தனை நாட்கள் பேசியிருக்கிறாள். இரண்டு நாட்களாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவளுக்கு ஃப்ரஞ்ச் தெரியுமென்பதை சொல்லவில்லை என இவனுக்கு சற்று ஏமாற்றமாய் இருந்தது.
“ஃப்ரஞ்ச் தெரியுமா?” ரகசியங்களை மறைத்துக் கொள்ளும் பெண்களைக் கண்டு ஆண் அஞ்சுகிறானென்றாலும் அந்த அச்சமே அவளின் மீதான மோகத்திற்கு தூண்டுதலும்.
“பிழைப்புத் தேடி நாடோடியாப் போறவங்களுக்கு எல்லா மொழியும் சொந்தந்தான். ஒரு மொழில நாலு வார்த்தையக் கத்துக்கறதுல என்ன வந்துடப் போகுது….”
அவள் பேசிய உடைந்த தமிழ் அவன் ஆறு வயது மகளை சிலநொடிகள் நினைவுபடுத்தின. முன்னால் ஏறிவிட்டவன் கைகொடுத்து அவளை மேலே தூக்கினான். அத்தனை நேரம் சூழ்ந்திருந்த முழு இருளும் விலகி வெவ்வேறு நிறங்களிலான வர்ண விளக்குகளின் வெளிச்சம் அந்த வீதியெங்கும் நிறைந்து கிடந்தது. “அதுசரி அவங்க ஃப்ரஞ்ச் பொண்ணுங்கன்னு எப்டி கண்டுபுடிச்ச?” சிரித்தாள். “பர்ஃப்யூம்….” அவனுக்கு அவள் சொன்னது விளங்காததால் முகத்தை சுருக்கினான். இடுங்கிய கண்கள் அவளுக்குள் எதையோ தேட
“NINA RICCI… ரொம்ப பிரபலமான ஃப்ரஞ்ச் பெர்ஃப்யூம்…. என்னோட க்ளையண்ட் ஒருத்தவங்க யூஸ் பண்ணுவாங்க… ஸோ இந்த ஸ்மெல் தெரியும்…”
அதிகம் படிக்காது போனாலும் அவள் சராசரி பெண்ணல்ல. அவன் அவளை சந்தோசமாய் அங்கீகரிப்பதைப் போல் குனிந்து வணக்கம் சொல்ல அவன் பின்புறங்களில் ஓங்கி அடித்தாள்.
நெல்சன் மாணிக்கம் சாலையிலிருக்கும் நேச்சுரல்ஸில் முதல் முறையாக இவளை அவன் சந்தித்தது சென்னை வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த சில நாட்களுக்குப் பின்பாகத்தான். இருபாலருக்குமான அந்த அழகு நிலையத்தில் பிற்பகல் வேளையில் வாடிக்கையாளர் யாருமில்லாத நேரமாக எப்போதும் போல் அவன் வந்தபோது வழக்கமாக அவனுக்கு சிகையலங்காரம் செய்துவிடும் பஷீர் வெளியே சென்றிருந்தான். அவன் வரும் வரை காத்திருக்கச் சொன்ன வரவேற்பரை யுவதியின் புன்னகை நூற்றி இருபது கிராம் லிப்ஸ்டிக்கால் நிறைந்து வழிந்தது. எவ்வித உணர்ச்சிகளுமின்றி அழகுநிலையங்களில் மட்டுமே பார்க்க முடிகிற ப்ரத்யேகமான சில சஞ்சிகைகளில் ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு உட்கார்ந்தான். மழை பெய்திருந்த பகலென்பதால் உடல் வெதுவெதுப்பாய் பூரித்துப் போயிருந்தது.
விருப்பமின்றி பத்திரிக்கையின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தவன் தற்செயலாக பெண்கள் பகுதியின் பக்கமாக பார்வையைத் திருப்ப, மற்ற பெண்களிடமிருக்கும் கூடுதலான ஒப்பனைகளின்றி சற்றே களைத்த முகமாய் பிங்கி கையில் ராபர்ட்டோ பொலனோவின் savage detectives நாவலை வாசித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு முதலில் அந்தக் காட்சி ஏதாவதொரு வெளிநாட்டுப் படத்தில் வரும் துண்டுக் காட்சியாகவே தெரிந்தது. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கவனிக்கையில் அது நிஜம் தான். இவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து கொண்டவளாய் அவளும் கவனித்து சினேகமாக புன்னகைத்தாள். எழுந்து சென்று அவளிடம் பேச எத்தனிக்கும் முன்பாகவே வெளியில் சென்றிருந்த பஷீர் திரும்பி வந்திருந்தான். எப்போதும் போல் தனக்குத் தெரிந்த சினிமா சமாச்சாரங்களை பேசியபடியே இவன் தலையைக் குதறிக் கொண்டிருந்த பஷீர் நினைவுவந்தவனாக
“ப்ரோ லாஸ்ட் டைம் கேட்டீங்கள்ல…. தாடி மீச க்ரோத்துக்கு என்ன ஆயிண்ட்மெண்ட் யூஸ் பண்ணலாம்னு… செம்ம ஐட்டம் ஒன்னு வந்திருக்கு…”
தலையின் மீது நிகழ்ந்து கொண்டிருந்த இயக்கம் பாதியில் நின்றதும் மகி “ஓ அப்டியா?” என பொதுவாக கேட்டான். பஷீர் ரிஷப்ஷன் பக்கமாகத் திரும்பி “பிங்கி அந்த ஹெர்பல் ஆயில் எடுத்துட்டு வாயேன்…” இவன் குரல் சென்ற திசையில் அவனும் பார்த்தபொழுதுதான் பொலானோவை வாசித்துக் கொண்டிருந்தவளின் பெயர் பிங்கி என்பதைத் தெரிந்து கொண்டான். அவள் முன்பைப் போலவே சினேகமாக புன்னகைத்தாள், அந்தப் புன்னகையில் லிப்ஸ்டிக்கின் சதவிகிதம் மிகக் குறைவு, அல்லது லிப்ஸ்டிக்கின் செம்மை நிறத்தை விடவும் சிவந்த உதடுகள் அவளுக்கு. பஷீர் நம்பிக்கையாக சொன்னான்
“இத ட்ரை பண்ணுங்க ப்ரோ… செம்ம ரிசல்ட்ட்….”
குடுவையை வாங்கி ஒருமுறை பார்த்துக் கொண்டவன் டேபிளில் வைத்தான். பஷீர் தொடர்ந்து சிகையலங்காரத்தை முடித்துவிட்டு கொஞ்சமே கொஞ்சமாய் இதழ்களுக்குக் கீழ் அரும்பியிருந்த மயிர்களை வழித்து பிராய்லர் கோழியைப் போல் மாற்றினான். மகிக்கு பெண்மை நிறைந்த முகத்தோடு இன்னொரு முறை பிங்கியைப் பார்க்க சங்கடமாக இருந்ததால் அவசரமாக பணத்தைக் கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்தான். எப்போதும் கதவு திறந்து அனுப்பும் பஷீர்
“என்ன ப்ரோ பிங்கி சூப்பரா இருக்கா…?” என சிரித்தான்.
சடாரென தன் ரகசியத்திற்குள் ஒருவன் அத்துமீறிவிட்ட அதிர்ச்சியிருந்தும் காட்டிக் கொள்ளாமல் மகி சிரித்தபடி வெளியேறினான்.
பின்னால் தொடர்ந்து வந்த பஷீர்
“வீக் எண்ட்ஸ் ல எங்கயாச்சும் வெளில கூட்டிட்டுப் போறதுன்னா சொல்லுங்க. நா அவகிட்ட பேசறேன்.. ஆனா தப்பா எதும் ட்ரை பண்ணிடக் கூடாது…”
மகிக்கு நம்பமுடியவில்லை. ஒரு பெண்ணைப் பார்த்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அவள் தன்னோடு இணங்கி வெளியில் வருவாளென்பது அருவருப்புமிக்கதொரு உணர்வாக மாறிப்போனது. எந்தப் பதில்களும் சொல்லாமல் அவனிடமிருந்து விடபெற்றான்.
விக்ஷேசமானவளென சொல்ல முடியாத அவளின் இயல்புத்தன்மை தான் தொடர்ந்து அவளைக் குறித்து யோசிக்கும்படி தூண்டியது. ஏதாவதொரு வகையில் அவளது அருகாமை தன்னை உற்சாகப்படுத்தக் கூடுமென நம்பியவன் அந்த வார இறுதியில் நண்பர்களுடன் அவுட்டிங் போவதாக முன்னமே மனைவியிடம் சொல்லி வைத்தான். நினைத்த மாத்திரத்தில் ஊர் சுற்றும் அவனின் குணம் அறிந்திருந்ததால் அவளும் மறுப்பேதும் தெரிவித்திருக்கவில்லை. நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பஷீரிடம் தொலைபேசியில் விஷயத்தை சொல்ல
“இதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க? நான் உங்க நம்பர் அவகிட்ட குடுத்து கூப்ட சொல்றேன்…”
என்று உற்சாகமாக சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான். அவனோ அவளோ திரும்ப அழைக்கும் தருணத்திற்காக காத்திருந்தவன் அலைபேசியை அடிக்கொருதரம் கையிலெடுத்துப் பார்த்தபடி இருந்தான். ஒரு குறுஞ்செய்தி வர அவசரமாக திறந்து பார்த்தான். ‘ஆண்மை வீர்யமடைய எளிய மருத்துவம்.. தொடர்புக்கு 91782 88734 என வழமைபோல் எரிச்சலூட்டக்கூடிய ஒன்றைப் பார்த்த கோவத்தில் மிக மோசமானதொரு வசையை யாருமில்லா வெளியில் சத்தமாகவே உதிர்த்தான்.
எதிர்பார்த்திருந்து தவித்த எந்த பதட்டங்களும் அவள் அழைத்துப் பேசுகையில் உணரவில்லை. அதிக தூரமில்லாததொரு பயணத்திற்கு இசைந்தவள் தான் மதுவருந்துவதில் சங்கடமேதுமில்லையே என்பதை நாகரீகமாக விசாரித்துக் கொண்டாள்.
“நீங்க உங்களுக்குப் புடிச்ச மாதிரி இருக்கலாம்… no problem…” அவன் பூரித்தான்.
“சரி அப்போ ஸாட்டர்டே ஈவ்னிங் என்ன லயோலா சிக்னல்ல பிக்கப் பண்ணிக்கங்க.” பேச்சின் இறுதியில் சின்னதொரு சிரிப்பை இரவலாகத் தந்து விடைகொடுத்தாள்.
2
மலையாள மனோரமா : நாள் 13.01.2016 : நான்காவது பக்கத்தில் வந்த செய்தி.
திருவணந்தபுரம்.
வேற்று மாநிலத்தவர்கள் கேரளம் முழுவதிலும் எல்லா வேலைகளிலும் ஆக்ரமித்து வருவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அஸ்ஸாம், மிஸோரம் மாநிலங்களில் இருந்தும் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளத்திலிருந்தும் நிறைய கூலித்தொழிலாளர்கள் நாள்தோறும் வந்தபடியே இருக்கிறார்கள். அத்தோடு அதிகரித்து வரும் குற்றச் செயல்களிலும் அவர்களுக்கு பெருமளவு பங்கிருப்பதும் புள்ளிவிவரங்களில் பதிவாகியபடி உள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்தவர்களின் வருகை மற்றும் வேலை விவகாரங்களை முறைப்படுத்தக் கோரி நேற்று கேரளம் முழுமைக்குமாக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்டிரைக் எந்த சச்சரவுகளுமில்லாமல் பெரும்பாலும் முடிந்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வன்முறை நடக்காமலில்லை. திருவணந்தபுரத்திலிருந்து கொல்லம் வர்கலா செல்லும் சாலையில் இயங்கிய சில வாகனங்களின் மீது கேரள இளைஞர் கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். காவல் துறையினருக்கு வந்த புகாரையடுத்து வர்கலா நகர காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மேத்யூஸ் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றது. சம்பவ இடத்தில் பாலாவிலிருந்து ரப்பர் டின்கள் ஏற்றிவந்த ஒரு 407 வேன் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நிகழ்த்தியிருந்ததோடு ஓட்டுநரும் தாக்கப்பட்டிருந்தார். ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள இளைஞர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான அச்சுதன் மற்றும் அவரது நண்பர்கள் கோபாலன், மணியன், சத்யன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
********************************************************************************************************************
மனிதன் சில விஷயங்களில் கண் மூடித்தனமாக பொதுநம்பிக்கைக்குள் வந்துவிடுவதுண்டு. கடந்த சில வருடங்களாக கேரளம் முழுக்க வடகிழக்கவர்களின் ஆக்ரமிப்பு அதிகரித்திருப்பதாக எழும் எதிர்ப்பு குரலில் அச்சுதனுடையதும் முக்கியமானது. இதற்கு முன் பல முறை சிறை சென்று வந்த போதில்லாத கவனம் இம்முறை அவன் மீது திரும்பியிருந்தது. சிலர் அவனை புதிய நம்பிக்கையின் அடையாளமாக பார்த்த அதே வேளையில் அவன் வசித்த பகுதியிலேயே இருந்த வடமாநிலத்தவர்கள் அச்சத்தோடு பார்க்கத் துவங்கினர். தனது அரசியல் அடையாளங்களுக்காக மனிதன் முதலில் பலிகொடுப்பது பெரும்பாலும் அருகிலிருப்பவர்களையும் அதிகம் தெரிந்தவர்களையும் என்கிற வரலாறு சொந்த நிலத்தில் வாழக் கொடுத்து வைக்காதவனுக்கு எப்போதும் புரியும். அச்சுதன் இயல்பாகவே தனது உடை பேச்சு எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான்.
வழக்கின் முதல் விசாரணைக்கு போய் வந்த நாளில் அவனுக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. சடாரென பொறுப்புகள் அதிகமாக வேண்டியதற்கான தருணமொன்றில் தள்ளபப்ட்டுவிட்டதாக நம்பியவன் அதனை சாத்தியப்படுத்துவதற்கான வழிகளைத் தீவிரமாக உருவாக்கிக் கொண்டான். வரலாற்றின் நீண்ட காலத் தேவைக்கான மாற்றத்தை உருவாக்கப் போகும் லட்சியவெறி அவனுக்குள் சுழன்றது. யாரும் கவனிக்கவில்லையென்றாலும் அதன் தீவிரம் அவன் அறிந்ததே.
ஒரு நல்ல தலைமையை அமைத்துக் கொள்ள விரும்பிய அச்சுதன் தன் சகாக்களின் மூலமாய் முன்னெடுத்தது கேரளம் முழுக்க எல்லா நகரங்களிலும் தொடர் கூட்டங்களை ஒருங்கிணைத்ததும் ஊர்வலங்களை நடத்தியதும் தான். அவன் சார்நந்த மத அமைப்பு அவனது எல்லா செயல்களுக்கும் பின்னால் வலிமையான பாதுகாப்பாய் இருக்க அவர்கள் போராட்டத்தின் வடித்தை மாற்றி நேரடியாக தாக்குதல்களில் இறங்கினர். அச்சத்தின் வழியாய் தங்களைச் சுற்றி உருவாகிக் கொண்டிருந்த பொதுமக்களின் கவனமே இனி அடுத்த கட்ட நகர்விற்கான படிகளென்பதை அவர்கள் உறுதியாய் நம்பினர்.
3
”எந்த வயசுல உன்னோட வெர்ஜினிட்டிய இழந்த?”
முதல் சந்திப்பின் நீண்ட நேர உரையாடலும் ஆறேழு சுற்று விஸ்கியும் முடிந்த பின் மகி கேட்டான். அவள் சிரித்தாள். கையிலிருந்த சிகரெட்டின் கடைசி புகையை இழுத்துக் கொண்டு நீண்ட நேரமாக வெளியே விடாமல் எங்கோ வெறித்தாள். கண்கள் குடியினாலோ ஏக்கத்தினாலோ வெறுமையின் உலர் ரேகைகளை சுமந்ததாலோ சிவந்து போயிருந்தன.
“ஒரு பொண்ணோட வெர்ஜினிட்டி ஏன் ஆம்பளைங்கள எப்பவும் தொந்தரவு பண்ணுது.? நான் வெர்ஜின் இல்லைன்னு எது உன்ன நம்பச் சொல்லுது? நான் உன்னோட வந்து குடிக்கிறதாலயே நான் வெர்ஜின் இல்லைன்னு நம்பறியா?”
அவள் குரலில் கோவமே இல்லாத ஏளனம். யோசித்துப் பார்த்தான். தனது கன்னித்தன்மையை குறித்து அவள் எதுவும் சொல்லாத சூழலில் அதுகுறித்து கேட்டிருக்கக் கூடாது. தான் வாசித்த கதைகளில் வரும் பெண்களிலொருத்தியாக அவளை நினைத்திருக்க வேண்டும். அல்லது தனக்கு முன்பே அறிமுகமான பெண்களின் வரிசையில் இவளையும் வைத்துப் பார்த்திருக்கலாம். அவன் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.
“ஹலோ ரொம்ப யோசிக்காத. நான் வெர்ஜின் இல்ல. அதுக்காக எந்த வயசுல யார் கிட்ட ஃபர்ஸ்ட் செக்ஸ் வெச்சுக்கிட்டேன்னு உங்கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல…”
எப்போதும் வெட்டி வீழ்த்த தயாராயிருக்கும் கத்தியொன்றின் கூர்மையோடுதான் அவளின் பெரும்பாலான சொற்களும் வந்து விழுந்தன. அவன் அவளிடம் அபரிமிதமாய் ரசித்ததும் அதையே தான். ”நீ பைசெக்ஷூவலா?” அவளின் இந்தக் கேள்வி ஒரு நொடி அவனை உலுக்கிப் போட்டது. இல்லையென தீர்மானமாக மறுத்தான். அவன் கண்களை அழுத்தமாகப் பார்த்தவள் “பொய் சொல்ற…” என சிரித்தாள். அவன் பதட்டத்தில் வேகமாக அடுத்த சுற்று விஸ்கியை குடித்தான். முகம் இறுக்கமானதோடு
“this is none of ur business….”
அவனது குழந்தைத்தனமான இந்த பாவனைகள் அவளுக்கு சுவாரஸ்யமாகிவிட “இவ்ளோ சீரியஸா ஆக வேணாமே மகி… எல்லாமே உடல் தான். நிறம், அளவு, பாலினம் எல்லாமே ஒருவித அடையாளம். அப்பறம் பொதுபுத்தி நம்மளுக்கு பழக்கப்படுத்தின தேர்வு. ஒருத்தரோட பாலியல் தேர்வு எதுவா வேணாலும் இருக்கட்டுமே அதனால என்ன வந்துடுச்சு ஏன் மறைக்கனும்? I didn’t expect this from u… நீ மெச்சூர்டானவன்னு நெனச்சேன்…”
தன்னைச் சுற்றி வளையமிட்ட மகியின் பதட்டங்கள் கேள்விகள் எல்லாவற்றையும் அவன் பக்கமாக திருப்பிவிட்டு வெகு இயல்பாக அவள் மதுவருந்துவதைத் தொடர்ந்தாள். அவளோடு அந்த இரவு வெளியில் வந்திருக்கவே கூடாதென்கிற அளவிலான வெறுப்பில் எழுந்து கொண்டான்.
“தூங்கறேன்… காலைல பேசுவோம்…”
அவள் அவனை நிறுத்த எத்தனிக்கவில்லை.
“தனியாவா தூங்கப் போற?”
அவன் இது தனக்கான அழைப்பா அல்லது கேலியா என்கிற சந்தேகத்தில்
“இல்ல ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் தான். நீயும் வந்து தூங்கு… ஆனா நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.”
வலிய வந்த சிரிப்பை அவளுக்குத் தந்துவிட்டு அறை நோக்கிச் சென்றான்.
நிதானமாக யோசித்தபோது அவள் தன்னிடம் எதிர்பார்த்தது முழு முற்றான வெளிப்படைத் தன்மையைத் தான் என்பதைப் புரிந்து கொண்டான். அடிக்கடி சந்தித்துக் கொள்வதையோ மொபைலில் பேசுவதையோ அவள் விரும்புவதில்லை. அரிதாக இரவு நேர உணவுக்கு எங்காவது வெளியில் அழைத்தால் கூட நேரமில்லை என்பாள். தி.நகரிலிருக்கும் Main land china உணவகம் அவனுக்கு விருப்பமான இடங்களில் ஒன்று. அவளை அழைத்துப் போகலாமென தொலைபேசினான்.
“ஏன் எப்பவும் ஒரு பொண்ணோட அருகாமை தேவைப்படுது உனக்கு? உனக்கு வெளில சாப்டனும்னு தோணுச்சுன்னா நண்பர்களோட போகலாமே?”
அவள் கேள்வி நியாயமானதுதான், ஆனால் எந்த ஆணும் தான் அந்தரங்கமாக செலவு செய்ய நினைக்கும் சில மணி நேரங்களை தனக்கு விருப்பமான பெண்ணோடு கழிக்கத்தானே விரும்புகிறான்.
“எனக்கு பெண்கள பிடிச்சிருக்கு. அதிலயும் என்னய எல்லா விதத்துலயும் கட்டுப்படுத்தற என்மேல ஆதிக்கம் செலுத்தற பெண்கள் எனக்கு என்னோட குழந்தமைய நினைவுபடுத்தறாங்க… அதனாலதான் பெண்களோட அருகாமைய விரும்பறேன்…”
தேர்ந்தெடுத்த சொற்களால் நிதானமாகப் பேசினான்.
”ஆம்பள தனக்கு ஒரு காரியம் நடக்கனும்னு எவ்ளோ சாதுரியமா பேசறீங்கடா.. அவ்வளவும் பசப்பல். என்னால நீ கூப்ட்டு நேரத்துக்கெல்லாம் வரமுடியாது. வேற யாரையாச்சும் கூட்டிட்டுப் போ…”
தேர்வைப் பொறுத்தவரை அவள் தெளிவாக இருந்தாள்.
இரண்டாது முறை வெளியில் சென்ற போது அவனாகவே தான் இருபால் ஈர்ப்புடையவன் என்பதை ஒப்புக் கொண்டான். அவள் அதற்கும் ஒரு சியர்ஸ் சொல்லி உற்சாகப்படுத்தினாள்.
”நான் முதல்ல செக்ஸ் வெச்சுக்கிட்டவனும் ஒரு பை செக்ஷுவல் தான். உனக்கும் அவனுக்குமான நிறைய நடவடிக்கைகள் ஒத்துப் போச்சு, அதனாலதான் நான் அன்னிக்கு அப்டிக் கேட்டேன்.”
இரண்டாவது சந்திப்பின் போது கடற்கரையோர வீட்டின் மாடியில் திறந்து வைக்கப்பட்ட ஜன்னலின் வழி நிறைந்திருந்த கடலின் குளிர்ச்சியோடு உடலுறவு கொள்கையில் அவன் காதுகளில் சொன்னாள். அவ்வார்த்தைகள் தூண்டலில் பொருட்டு ஏவப்பட்ட சாத்தானென அவனுக்குள் சுழல அவளை நெருப்பின் தீவிரத்தோடு இறுக்கிக் கொண்டான். கடலின் பேரோசை மேலேறி அறைக்குள் சூழ்ந்து நிறைகையில் விடிந்து போயிருந்தது.
4
கோழிக்கோடு, கொச்சி, திருவணந்தபுரமென கேரளத்தின் பெரும்பாலான நகரங்களிலும் வெளி மாநிலத்தவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இரண்டு தினங்களுக்கு முன் கைரளி தொலைக்காட்சியின் ஒரு நேரலை விவாதத்தில் அச்சுதனும் ஒரு சமூக ஆர்வலரும் நீண்ட நேரம் கருத்து விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
“அடிப்படை கட்டுமானத்தை விரிவுபடுத்தறத விட்டுட்டு வாழ்க்கை தேடி வந்த மக்கள் மேல நம்மளோட கோவம் திரும்பறது சரியான விசயமில்ல. நீங்க இத சமூகத்தின் கூட்டு மனசாட்சின்னு போலியா நம்ப வைக்கறதோட அதையே மக்கள் மனசுல விதைக்கப் பாக்கறீங்க..”
அந்த சமூக ஆர்வலர் மூக்கு விடைக்கு இவனிடம் விவாதித்த பல கேள்விகளுக்கு இவனால் பதில் சொல்ல முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததுமே அவனை இடுப்பிற்கு கீழ் உதைத்து முடமாக்கிவிடலாமாவென வெறி இவனுக்குள். அதற்கும் சாத்தியமில்லாதபடி பாதுகாப்பாக அவனை தொலைக்காட்சி ஊழியர்கள் அனுப்பிவைத்துவிட்டனர்.
விவாத நிகழ்ச்சியின் கோவம் முழுக்க அடுத்த தினம் கொல்லத்தில் நடந்த ஒரு ஊர்வலத்தின் போது பிரதிபலித்தது. அன்றைய தினம் அங்கு நடந்த கண்டன ஊர்வலத்திற்கு அச்சுதனே தலைமை. நேரடியாக அவனது உரை வெளிமாநிலத்தவர்களின் மீதான வெறுப்பாக இருந்ததுடன் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் வெளிப்பட்டது. சக மலையாளிகளே சங்கடத்துடன் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆர்.பி மால் இருக்கும் வீதியில் ஊர்வலம் திரும்பிய போது எதிரில் வந்த நான்கு மணிப்பூர் இளைஞர்களை நோக்கி கூட்டத்தினர் ஆபாசமான வசைகளை வீசினர். அந்த இளைஞர்கள் மருண்டு ஓட கூட்டத்தில் எல்லோருக்கும் பலத்த சிரிப்பு. சில வெளி மாநிலத்தவர்களின் கடைகளின் முன்னால் நீண்ட நேரம் கோசங்களை எழுப்பினர். கடைக்குள்ளிருந்து எதிர்வினை வரும்பட்சத்தில் எல்லாவித தாக்குதல்களுக்கும் தயாராகவே இருந்ததை அவர்களின் குரல்களில் இருந்த ரெளத்ரம் உணர்த்தியது. யாரும் எந்த எதிர்வினையும் செய்யாமல் போக ஊர்வலம் வன்முறையின்றி முடிந்தது. அச்சுதன் அந்த ஊர்வலத்தை உள்ளுர ஒரு வெற்றியாகவே எண்ணினான்.
நான்கு நாட்களுக்குப் பிறகு கொல்லம் நகரில் நடந்த வெவ்வேறு திருட்டுகளின் பிண்ணனியில் வடமாநிலத்தவர்களின் பங்கிற்கே சாத்தியமென்று காவல்துறை பக்கம் பக்கமாக செய்தித் தாள்களில் பேட்டி கொடுத்திருந்தது. வதந்திகள் செய்திகளாகி செய்திகள் உண்மைகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் பிழைப்பிற்காக பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்த ஒவ்வொருவரின் வாழ்வும் அங்கு கேள்விக்குறியானது. ஒரு பத்திரிக்கையாளர் காவல் ஆணையரிடம் எதன் அடிப்படையில் இந்த திருட்டை செய்தது வடமாநிலத்தவர்கள்தான் எனச் சொல்கிறீர்களெனக் கேட்க பதிலுக்கு அவர்
“நாலு இடத்துலுயும் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் புதுசா இருக்கு. அத்தோட நம்ம ஊர்ல இருந்த பழைய திருடனுங்களோட ஸ்டைல் இல்ல இது. முக்கியமா தடயப்படி இந்த சம்பவங்கள செய்தவங்க குள்ளமானவங்களா இருக்கனும். அதனால தான் நாங்க உறுதியா இது வடகிழக்கு ஆட்களா இருக்கலாம்னு நம்பறோம்..”
உறுதிபட கூறினார். யாரோ சிலரின் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டு மக்களுக்குள் இவர்களின் மீதான வெறுப்பு திணிக்கப்பட்டது.
வாட்ஸப்பில் வந்த ஒரு வீடியோவின் அடிப்படையில் காவல்துறை சிலரை கைது செய்திருந்தது.
அதனடிப்படையில் போடப்பட்டிருந்த சார்ஜ் ஷீட் பின்வருமாறு:
Case number 5784. Kollam town station. 25.2.2016
கொல்லம் டவுனில் 20.2.2016நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக நகர க்ரைம் ஸ்டேசன் சார்பில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கிடைத்த முக்கியத் துப்பாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபரின் எண்ணிலிருந்து வேகமாக பரவின வாட்ஸப் வீடியோ எடுத்துக் கொள்ளப்படுகிறது, இந்த வீடியோவில் நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டின் ஜன்னலை உடைக்க முயற்சிப்பது மங்கலான வெளிச்சத்தில் தெரிகிறது. மேலும் அவர்களின் கைகளில் அச்சுறுத்தக் கூடிய ஆயுதங்கள் இருப்பதும் தெளிவாகிறது. வீடியோவில் வரும் வீடு குற்றம் நடந்த வீடுகளில் ஒன்றைப் போலிருப்பதால் இது உறுதியாக அன்றைய தினம் எடுக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும். மேலும் இந்த வீடியோவின் அடிப்படையில் காவல் துறை ஆய்வாளர் பிஜு மேற்கொண்ட விசாரணையில் கொல்லம் கொட்டாரக்கரா சாலையில் திவ்யா மோட்டார்ஸை ஒட்டியிருந்த ஸேவியர்ஸ் ரெஸிடன்ஸி இது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீடிருக்கும் சாலையில் அமைந்த உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த நிஷாந்த்,அனூப்,ஷைனி,அஜய் என்கிற நான்கு மணிப்பூரி இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். வேலை இல்லாத நேரங்களில் அந்த வீட்டைக் கவனித்து வந்தவர்களுக்கு விரைவில் பணம் சம்பாதித்து சொந்த ஊருக்குப் போய்விட வேண்டுமென்கிற ஆசை வந்திருக்கிறது. சரியான நேரத்திற்காக காத்திருந்த நால்வரும் கொள்ளை குறித்து விரிவான திட்டம் தீட்டினர். இதனடிப்படையில் சம்பவம் நடந்த அன்று ஸேவியர்ஸ் ரெசிடன்ஸியில் ஒருவரும் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டபின் அச்சுறுத்தக் கூடிய ஆயுதங்களான சுத்தியல் இரும்பு கம்பிகளை எடுத்துக் கொண்டு போய் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். மேலும் திருடிய பொருட்களில் கொஞ்சத்தை அவர்கள் தாங்கள் தங்கியிருந்த அறையில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் நகரில் நடந்த மற்ற திருட்டுகளோடு இவர்களுக்கு சம்பந்தம் இல்லையென்பதும் உறுதிசெய்யப்பட்டது.
பிஜூ தாமஸ்
ஆய்வாளர்
கொல்லம் நகர காவல் நிலையம்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த அன்று இரவில் மீண்டும் நான்கு இடங்களில் ஒரே மாதிரியான கொள்ளை சம்பவம் நடந்தன.
5
நீண்ட தூர பயணத்திற்கான விருப்பத்தை மகியிடம் முன்வைத்தது பிங்கிதான். அவளை பெயருக்கு பிங்கியென அழைக்கிறானே ஒழிய அசலான பெயரை இப்போது வரையும் கேட்டுக்கொள்ளவில்லை. இத்தனை முறை சந்தித்து உரையாடி உறவாடின பிறகும் கூட அவள் சலிப்பதாக இல்லை. உண்மையில் ஆண்கள் சலிப்பூட்டக்கூடியவர்கள். எரிச்சல் மிக்கவர்களென்பதை பெண்கள் பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை. பிங்கிக்கு எந்த தயக்கமும் இல்லை.
“நாலு மணி நேரம் ஆகிட்டா நீ பேசறத கேக்கவே எரிச்சலா இருக்கு. சுத்தி சுத்தி ஒரே விஷயத்த பேசற. ஆனாலும் உன்னோட இருக்கறது நல்லா இருக்கு. ஏன் தெரியுமா? அவனிடம் சொல்ல அவன் சிரித்தபடி ஏனென்றான்.
“ஏன்னா மத்தவங்க உன்னவிட போரடிக்கிறாங்க. பெண்ணோட உடம்பத் தாண்டி அவளப் பத்தி தெரிஞ்சுக்க ஆண்கள் எதையும் விரும்பறதில்ல… இல்லியா?”
அவன் உறுதியாக மறுத்தான்.
“ச்சே ச்சே அப்டில்லாம் இல்ல. நான் முதல் தடவ உன்ன கவனிச்சதே நீ பொலானோவோட நாவல வாசிச்சிட்டு இருந்ததால தான்… ஒரே மாதிரியான வாசிப்பும் ரசனையும் இருக்க பொண்ணோட வர்ற நட்பு ஆரோக்யமானதில்லையா?” சிரித்தான். அவன் கண்களுக்குள் அவள் மீதான தனது கண்ணியத்தை வெளிப்படுத்தும் நிறைவு. ஒரு நொடியில் அதை சரித்துவிடும்படி
“ஓ.. நீ வேற டைப் இல்லியா? ஸோ கால்ட் இண்டலக்சுவல். உனக்கு ஒரு பொண்ணு பார்ட்னரா இருக்கனும்னா கூட அவளுக்கு இலக்கிய அறிவு இருக்கனும். Fucking frudalist….” எந்த எல்லையிலிருந்தும் அவள் ஈகோவுடன் அவனால் நெருங்க முடியவில்லை, ஆனாலும் அவள் அனுமதிக்கும் தூரத்திற்குள் உரையாடுவதே அவனுக்குப் போதுமானதாயும் நிறைவாயும் இருந்தது.
வர்கலாவையும் இந்தக் கடலையும் ரொம்பவே நேசித்தாள். கடல் மற்ற ஊர்களைக் காட்டிலும் இங்கு மகோன்னதமானதொரு சூழலில் இருந்தது. மனதின் சிறு சிறு திறப்புகளைக் கூட கடந்து செல்லும் வினோத அலை. பார்க்கும் போதே ஆனந்தக் களிப்பில் உடல் ஆர்ப்பரிக்கும். கடல் குழந்தைமையின் பேருரு. அதற்கு எப்போதும் வருத்தங்களில்லை. கொண்டாட்டம் அல்லது பெருங்கொண்டாட்டம். கஃபே பாரிஸில் உணவுக்காக ஒதுங்கிய நேரத்தில் விழித்துக் கொண்டிருந்த எல்லோரின் கண்களிலும் போதை நர்த்தனமாடியது. ஒரு போத்தல் பியரும் வறுத்த மீனும் வாங்கிக் கொண்டவள் இரண்டு கைகளாலும் எடுத்து சாப்பிட்டாள். மகிக்கு பியர் போதுமானதாயிருந்தது. உணவகத்தில் மெல்லிய ஒலியில் இசைத்துக் கொண்டிருந்த ஆஃப்ரோ ஜாஸ் இசைக்கு சாப்பிட்டபடியே பிங்கியின் கால்கள் தானாக ஆடிக் கொண்டிருந்தன.
“செக்ஸ்,போதைய விட இந்த ம்யூஸிக் எவ்ளோ ஃபேண்டஸி இல்ல…”
கடைசி மிடறு பியரைக் குடித்தபடி அவனிடம் கேட்டாள். அவனுக்கு ஆஃப்ரோ ஜாஸின் மீது பெரிய விருப்பமில்லை. இசையை பொறுத்தவரை அவனது தேர்வு கிளாசிக்கலை சுற்றியே தான் இருந்தது. அவன் அந்த நேரத்திற்கு ஹூவ்வாலிப் பாடல்களையோ ஹிந்துஸ்தானி இசையையோ தான் கேட்க விரும்புவான். ஆனாலும் அவள் பொருட்டு ஆமென்று தலையாட்டினான். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து நடனமாடத் தூண்டினாள்.
“அய்யோ வேணாம் பிங்கி ரூம் போலாம்..”
தாளத்தோடு இசைய முடியாமல் அவன் கால்கள் பிசிறின. அவன் இடுப்பிற்கு கொஞ்சம் அதிகமான உயரத்திலிருந்த அவள் தாளத்தில் எங்கும் பிசிறாமல் அழகாக ஆடினாள். மேசைகள் நாற்காலிகள் எதுவும் அவள் ஆடுவதைத் தொந்தரவு செய்யவில்லை. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் அவள் ஆடுவதை ரசித்துப் பார்ப்பதை மகி விரும்பவில்லை. அவனுக்கு தன்னால் ஆடமுடியவில்லையே என பொறாமையுணர்ச்சி கூட எழுந்தது. உணவகத்திலிருந்தவன் அவளுக்காக இசையின் சத்தத்தை சிறிது கூட்டினான். அவள் இன்னும் மூர்க்கமாக ஆடினாள். கடலின் நடனம். கடல் கரையைத் தொட எத்தனிக்கும் இறுதி நொடியில் நிகழும் பெரு நடனம். ஓய்வதாக இல்லை. சுழன்று நிமிர்ந்து வளைந்து யாரும் கற்றுக் கொடுக்காமல் பழகிப்போன நடனம். நெருப்பிற்கு ஒளிர யார் கற்றுக்கொடுக்க முடியும்? ஆடி ஓய்ந்து இருக்கையில் அமர்ந்தாள். கேட்காமலேயே இன்னொரு பியரைக் கொண்டு வந்து பரிசாரகன் தந்தான். “தாங்க்ஸ்” மூச்சு வாங்க அவனைப் பார்த்து சிரித்தவள் பியரை எடுத்து குடித்தாள். ஒரே உறிஞ்சலில் முழு பியரையும் அவள் குடித்து முடிக்க அங்கிருந்தவர்கள் கைதட்டி அவளை உற்சாகப்படுத்தினர்.
“நடனத்தின் போது சில சடங்குகள் முக்கியமில்லையா? இதுவும் அப்டித்தான்.” மகியைப் பார்த்துக் கண்ணடித்தாள். அவன் அவள் காதுகளில் முத்தமிட்டு
“சரி வா.. லேட் ஆச்சு ரூம் போகலாம்…” தன் தோள்களோடு அணைத்துக் கூட்டிப் போனான்.
அறை கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்ததால் இருவரும் ஆட்டோவிற்கு காத்திருந்தனர். அந்த அகால வேளையில் ஒரு பெரிய விடுதிக்கு செல்லும் பாதையிலிருந்த மின்கம்பத்திற்குக் கீழ் அமர்ந்து ஒரு வெள்ளைக்காரன் கஞ்சா அடித்துக் கொண்டிருந்தான். நாற்பது வயதிருக்கலாம். குளிரைப் பொருட்படுத்தாத உடல். சட்டையில்லாமல் குளிரை ஸ்வீகரித்துக் கொள்ளும் மூர்க்கத்தோடு கஞ்சாவை இழுத்தவனை பார்த்தவளுக்கு அவனிடமிருந்து கஞ்சாவை வாங்கி ஒருமுறை முயற்சிக்கலாமாவென ஆசை எழுந்தது. ஆனாலும் அறைக்கு செல்லத் துடிக்கும் மகியின் தவிப்பை பொருட்படுத்தி தவிர்த்தாள். ஆட்டோ வருவதாக இல்லை. “பாதி தூரம் வந்துட்டோம். அப்டியே நடந்துடலாமா?” அவள் கைவிரல்களைப் பற்றிக் கொண்டு கேட்டான். அவள் மறுக்கவில்லை. அவனுக்கு முன்பாக எட்டு வைத்து நடந்தாள். இருள் ஒவ்வொரு அடியிலும் வெவ்வேறானதாய் தொடர்ந்து வந்தது. கடற்கரையிலிருந்து நகர நகர காற்றின் ஒலி குறைந்து நிரம்பத் துவங்கியிருந்த நித்சலனம். தூரத்திலொரு நாய் யாருக்காகவோ குரைத்துக் கொண்டிருந்தது.
அடைக்கப்பட்ட ஒரு கடைக்கு முன்பாக சில இளைஞர்கள் மதுவருந்திக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து மகியும் பிங்கியும் நடந்தபோது அவர்களில் ஒருவன் காலியான கோக் பாட்டிலை அவள் மீது எரிந்தான். இருளில் அங்கு எத்தனை பேர் இருந்தனர் என்பதை அவதானிக்க முடியாமல் போனாலும் எரிந்தவனைக் கண்டு கொண்டு வேகமாகப் போய் ஒரு அறை விட்டாள். ஆங்காங்கு உட்கார்ந்திருந்தவர்கள் வேகமாக வந்து சேர்ந்தனர். மகிக்கு சூழலின் விபரீதம் புரிய ஓடிப்போய் அவர்களை சமாதானம் செய்தான். மன்னிப்பு கேட்டான். அவர்களில் ஒருவனும் அவளை மன்னிக்கத் தயாராய் இல்லை.
“நீ தமிழன் தான… இங்க இருந்து ஓடிரு.. உன்ன ஒன்னும் செய்ய மாட்டோம். இவள விட்டுட்டுப் போ…” மகி மன்றாடினான்.
“பாஸ் புரிஞ்சுக்கோங்க.. .இவ என்னோட ஃப்ரண்ட்… எனக்காக மன்னிச்சு விடுங்க..” அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே ஒருவன் ஓங்கி அவனையும் அறைந்தான்.
நீ யாரு இவளுக்கு?” மகி என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் தவித்தான்.
“ஸார்… அவங்க என்னோட ஃப்ரண்ட்…” அவர்கள் சிரித்தார்கள்.
“ஐட்டம்னு சொல்லு… ஃப்ரண்டாம்? உன் பேரென்னடா? எந்த ஊரு?”
மகி நெருக்கமாகச் சென்று சமாதானப்படுத்தும் விதமாய்
“என் பேரு மகேந்திரன் ஸார். சென்னை. நா ஒரு மேகஸின் ல எடிட்டரா இருக்கேன்…” ஒருவன் இப்பொழுது முன்னைவிடவும் நக்கலுடன் “கல்யாணம் ஆகிடுச்சா?” எனக் கேட்க பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றான். பளாரென ஒரு கை மட்டும் வந்து அறைந்து விட்டுப் போனது. பிறகு சராமாரியாக அவன் மீது அடிகள் விழ, தாங்கமுடியாமல் அங்கிருந்து வேகமாக விடுதியை நோக்கி ஓடினான். இருளில் அவன் ஓடி மறைந்ததை சலனமேயில்லாமல் பிங்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.
6
பின்னிரவைத் தாண்டியும் பிங்கி அறைக்குத் திரும்பவில்லை. காவல்துறையில் சென்று புகார் கொடுக்கவும் அச்சமாயிருந்தது. விசாரணை தனக்கே விரோதமாக முடியக்கூடுமெனபதால் உதவிக்கு யாரைக் கூப்பிடுவதெனவும் தெரியாமல் தவித்தான். அலைபேசியை சில நிமிடங்களுக்கு ஒருமுறை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தவன் இதற்கும் மேல் தாமதிக்க முடியாதென வரவேற்பரைக்கு வந்து இரவு நேர பணியிலிருந்த ரூம் பாய் ஒருவனிடம் பணத்தைக் கொடுத்து விஷயத்தைச் சொன்னான்.
“என்ன ஸார் இது? இவ்ளோ லேட்டா சொல்றீங்க?”
கடிந்து கொண்டு அவசரமாக தனது மொபைலை எடுத்து கடற்கரையில் உணவகம் வைத்திருந்த நண்பனை அழைத்தான். பேசிவிட்டுத் திரும்பி வந்தவனின் முகத்தில் இவன் மீதான கோவம்.
“நீங்ல்லாம் என்ன மனுஷன் ஸார்… நாலஞ்சு பேர் இருந்தா உங்களக் காப்பாத்திக்கிட்டு தப்பிச்சு வருவீங்களா? அவங்க அந்தப் பொண்ண பீச்சுக்குத் தான் தூக்கிட்டுப் போயிருக்காங்க. வாங்க போவோம்…”
வாசலையொட்டி இருளில் சாய்ந்து அமைதியாய்க் கிடந்த ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான். அவனோடு வண்டியில் ஏறிக்கொண்ட மகிக்கு பிங்கியின் நிலை குறித்த கவலையில் உடல் வியர்த்து படபடத்தது.
விடிவதற்கு அருகிலிருந்த வேளை. நீலமும் வெண்மையும் கலந்த வானில் புதிய நாளில் மழை பெய்வதற்கான அறிகுறிகளைத் தாங்கிய கருமை. மகியோடு வந்த ரூம் பாய் டார்ச் அடித்தபடி முன்னால் நடந்தான். நீண்ட தூரம் நடந்த பின் மேட்டிலிருந்து இறங்கிய ஒரு சிறிய ஊற்றில் ஒரு உருவம் முக்கால் நிர்வாணத்தில் சாய்ந்து கிடப்பது தெரிந்தது. இருவரும் வேகமாக அங்கு ஓட, உள்ளாடை மட்டுமே அணிந்து உடல் முழுக்க காயங்களோடு மயங்கிய அந்த உடலின் மீது டார்ச்சின் வெளிச்சம் ஓரிடத்தில் நிற்க முடியாமல் அலைபாய்ந்தது. அவளேதான். மயக்கமாய் இருந்தாள். மகி அவளைத் தட்டி எழுப்பினான். கன்னத்தில் அடித்தான். அவள் டார்ச் வெளிச்சத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்டாள். இதழ் ஓரங்களில் கசிந்த குருதியையும் மீறி சின்னதாக அவளால் சிரிக்க முடிந்தது.
மகி அவள் உடல் முழுக்க கைகளால் துலவி காயங்களைப் பார்த்தான்.
“வா… நாம உடனே ஹாஸ்பிடல் போலாம்…
கை கொடுத்து தூக்கினான். அவனோடு வந்தவனும் உதவ பிங்கி இருவரையும் உதறித் தள்ளினாள். ஊற்றிலிருந்து கசிந்த நீரை சிரமத்தோடு கொஞ்சம் அள்ளிக் குடித்தவள். மூச்சு வாங்கிக் கொண்டு
“என்னயத் தொடாத… எந்தப் பொண்ணையும் தொட அருகதையில்லாதவன் நீ… இவ்ளோ நேரமா என்னயக் காப்பாத்திக்க தெரிஞ்ச எனக்கு இனியும் தெரியும்… நீ போ…” அவனைத் தள்ளிவிட்டு உடன் வந்த ரூம் பாயின் தோள்களில் சாய்ந்து எழுந்து நின்று கொண்டாள்.
“உங்க ஷர்ட்ட கொஞ்சம் தர்றீங்களா? ஹோட்டல் வந்ததும் திருப்பித் தர்றேன்..” ரூம்பாயிடம் கேட்க அவன் அழுக்கேறிய தனது சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். மகிக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை.
“ஸாரிம்மா.. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல… உயிரக் காப்பத்திக்கனும்னு அற்பத்தனமா ஓடிட்டேன்… மன்னிச்சுக்கோ… ப்ளீஸ்… ப்ளீஸ்…”
கெஞ்சி அவள் முன்னால் மண்டியிட்டான்..
“நீ உன் உயிருக்கு பயந்து ஓடல மகி… என் மேல அக்கறை இல்லாததால தான் ஓடியிருக்க. இப்பக் கூட ஓடிவந்து என்னாச்சுன்னு கேட்டுட்டே உன் கை முதல்ல எங்க போச்சு என்னோட வெஜனைவுக்கு. ச்சீய்ய்… என்ன ப்ரூட்டலா ரேப் பண்ணினாங்களா இல்ல சாதாரணமாவான்னு தெரிஞ்சுக்க நெனைக்கிற குரூர புத்தி… த்தூ….”
மகி அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்து தன்னை வெறுத்தான். அவளை நெருங்க எந்தத் தகுதியும் இல்லைதான். என்ன சொல்லி மன்னிப்புக் கேட்பது. அவளை இந்தத் துயரிலிருந்து மீட்டுவிட முடியுமா?
“என்னால அஞ்சு பேர் கூடயும் சண்ட போடமுடியாதுதான் மகி, ஆனா என்ன பாதுகாத்துக்கத் தெரியும்… அங்க ஒருத்தன் சரிஞ்சு கிடப்பான் பாரு…. ரெண்டு பேரு என் உடம்ப சிதைச்சானுங்க… வலி, வேதனை கோவம் எல்லாத்தையும் என்ன செய்றதுன்னு தெரியல.. மூணாவதா வந்தவன புடிச்சுக்கிட்டேன். விடவே இல்ல… அவனால அசைய முடியாதளவுக்கு அவனோட குறிய புடிச்சுக்கிட்டேன். அவன் அலறின சத்தத்துல மத்தவனெல்லாம் ஓடிட்டான். இதுக்கு மேல சாவுதான்னு ஆகிட்டா எல்லா மிருகத்துக்கும் எதிர்க்க வெறி வரும்… எனக்கு இருந்ததும் அதுதான். நியாயமா நான் உன்னயத்தான் இப்பிடி கசக்கி போட்றுக்கனும். உன் பயம் உன்னக் காப்பாத்திடுச்சு… போயிடு…. இனி எப்பவும் என் முகத்துல முழிக்காத…”
தடுமாறி தடுமாறி நடந்தவளை மகி அதற்கு மேல் தொடரவில்லை.
தன்னை தாங்கிப் பிடித்திருந்தவனை நிற்கச் சொல்லிவிட்டு கடலை நோக்கி நடந்தாள். மெதுவாக விடியத் துவங்கியிருந்த கடற்கரையில் அந்த நகரை முழுக்க ஆக்ரமித்திருந்த வெள்ளைக்காரர்கள் காலை நடைக்கும் வாலிபால் விளையாடவும் ஆங்காங்கு குழுமியிருந்தனர். உப்பு நீரில் காயங்களை கழுவித் திரும்பியவள் கடலைப் பார்த்து அமர்ந்தபடி சிறுநீர் கழிக்கத் துவங்கினாள். அந்த அதிகாலையில் தளர்ந்த உடலுடன் ஒரு பெண் கடலை நோக்கி செய்யும் வினோத சடங்கென நினைத்த சிலர் அவளைப் போலவே கடலைப் பார்த்து சிறுநீர் கழித்தனர். எல்லோரும் வெவ்வேறு மொழி பேசக் கூடிய வெவ்வேறு நிலத்தவர்கள். அவர்கள் நின்ற இடத்திலிருந்து சற்று தூரத்தில் குறிநசுக்கப்பட்டு எழ முடியாத வேதனையில் மயங்கிக் கிடந்த ஆளை அடையாளம் கண்டுகொண்ட ஒரு உள்ளூர்க்காரன் ”இது நம்ம அச்சுதன் இல்ல..” தன்னுடன் இருந்தவனிடம் சொல்லிக் கொண்டான்.
Comentarios