top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

The Railway man



உலகம் முழுக்கவே இணையத் தொடர்களின் மீதான மோகம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வணிக சினிமாக்களின் வியாபாரங்களுக்கு சற்றும் குறையாத சந்தையாக வந்திருக்கும் இந்தத் துறையில் ஏராளமான புதிய முயற்சிகள் உருவாகி வருகின்றன. இரண்டு மணி நேர சினிமாவில் சொல்ல முடியாத கதைகளைச் சொல்வதற்கான தளமாக இந்தப் புதிய ஊடகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெட்ஃபிலிக்ஸ், அமேஸான் ப்ரைம் உள்ளிட்ட எல்லா பெரும் நிறுவனங்களுக்குமான பிரம்மாண்டமான சந்தை நமது நாடு. நூற்றி நாற்பது கோடி மக்கள் தொகை கொண்ட நம் மக்களில் பத்து சதவிகித்தினரை சென்றடைந்தால்கூட இவர்களின் வியாபாரம் அடையப்போகும் உயரமும் லாபமும் அபரிமிதமானது. அந்தவகையில் இந்திய மொழிகளில் இணையத் தொடர்களுக்கான தேவைகளை இவர்கள் தொடர்ந்து அதிகப்படுத்தவே செய்வார்கள்.


கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்புவரையிலும் இந்த ஸ்ட்ரீமிங் தளங்கள் சுமாரான வளர்ச்சியை அடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காலகட்டம் ஒவ்வொருவரின் அலைபேசியின் வழியாகவும் இந்த ஸ்ட்ரீமிங் தளங்களே எதிர்காலம் என்பதை உணர்த்திவிட்டது. வார இறுதிகளில் நண்பர்கள் கூடுகையே இப்பொழுது ஸ்ட்ரீமிங் தளங்களில் விருப்பமான திரைப்படங்களைச் சேர்ந்து பார்ப்பதற்கானதாக மாறும் ஒரு கலாச்சாரம் உலகம் முழுக்க உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் பெரும் பார்வையாளர்களை திருப்த்திபடுத்தவேண்டிய கடுமையான நெருக்கடி படைப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உருவாகியிருக்கிறது.


வெகுசன சினிமாக்களை நீண்ட காலமாகப் பார்த்து சலித்துப்போன மக்களுக்குப் புதிய கதைகளும் காட்சியமைப்புகளும் தேவையாய் இருக்கின்றன. இன்னொரு புறம் அனிமே திரைப்படங்களும், கேமிங் ஷோக்களும் அபரிமிதமான காட்சியனுபவத்தைத் தரக்கூடிய சக்தியாய் வளர்ந்து நிற்கும் சூழலில் அவற்றோடு போட்டி போடக்கூடிய வலுவை உருவாக்கிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நூறாண்டுகால இந்திய சினிமாக்களை எடுத்துக்கொண்டால் அவை மிகச்சில கதையம்சங்களை மட்டுமே மீண்டும் கையாள்வதாக இருந்து வந்துள்ளன. சொல்லப்போனால் பெரும்பகுதி திரைப்படங்கள் காதலில் துவங்கி திருமணத்தில் முடியக்கூடியவை. எல்லா இந்திய மொழிகளிலும் இந்த ஒரு அம்சம் தொடர்ந்து சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கிறது, இப்பொழுதும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெகுசினிமாக்களில் இருந்து விடுபட்டு மாற்று சினிமா முயற்சிகளாக நிகழ்ந்திருப்பவை வெகுசொற்பமே... இந்தச் சூழலில் ஸ்ட்ரீமிங் தளங்கள் பரவலாகத் துவங்கியிருக்கும் இந்தச் சில வருடங்களில்தான் புதிய கதைகளைச் சொல்வதற்கான சாத்தியங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சேகர்ட் கேம்ஸ், லைலா, பாதாள் லோக், போன்ற கதைகளை நாம் வெகுசன சினிமாவில் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க முடியாது. குறைந்தபட்ச அரசியல் விமர்சனங்களோடு இந்தத் தொடர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதைக் கவனிக்கையில் தீவிரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மக்கள் விரும்புவார்கள் என்பது நமக்குத் தெளிவாகிறது. அந்த வகையில் சமீபத்திய வரவுதான் ரயில்வே மேன்.


இந்திய அளவில் கடந்த சில வருடங்களாகத்தான் சூழலியல் குறித்தான புரிதல்களும் விவாதங்களும் உருவாகியிருக்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் சுரண்டல்களுக்காக இத்தனை காலமும் நமது இயற்கை வளங்களை காவு கொடுத்துள்ளோம் என்பதை நினைத்துப் பார்க்கையில் நாம் இழந்தவற்றின் மதிப்பு அச்சுறுத்துகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் இங்கு உருவாக்கப்பட்ட பெருவாரியான நிறுவனங்களால் பாதகமான விளைவுகளே ஏராளம். அதிலும் குறிப்பாக இந்த பெரு நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் எல்லாக் காலங்களிலும் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில பத்து வருடங்களில் நடந்த பெரும் போராட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், ஓ என் ஜீ சிக்கு எதிரான வேங்கைவயல் மக்களின் போராட்டம், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான போராட்டம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்... இந்தப் போராட்டங்களில் எல்லாம் மக்களை அரசு அதிகாரம் எப்படி ஒடுக்கியது இன்னும் ஒடுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மக்களின் தோழன் என்று சொல்லிக் கொள்கிற சி பி எம் கட்சி பல வருடங்களாக கூடங்குளம் அணுவுலைத் திட்டத்தை ஆதரித்து வந்தது. ( ரஷ்ய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆலை என்கிற ஒரே காரணத்திற்காக) நியூட்ரினோ திட்டத்தை இன்றளவும் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


1984 ம் வருடம் போபால் யூனியன் கார்பைட் ஆலையில் நடந்த பெரும் விபத்திற்குப் பின்னால் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் மடிந்தார்கள். அதன் பிறகு பல பத்தாண்டுகள் வரை அங்கு பிறக்கும் குழந்தைகள் உடற்குறைபாடுகளுடன் பிறந்தார்கள். அந்தப் பேரழிவிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயம் கிடைத்ததா என்கிற கேள்விகள் எல்லாம் ஒருபுறம். அந்தப் பேரழிவைக் குறித்த நியாயமான பதிவுகள் நம்மிடம் என்ன இருக்கிறது என்று தேடிப்பார்த்தால் அப்படி ஒன்று உருவாகாமல் இங்கிருக்கும் அதிகார வர்க்கத்தினர் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் நிஜம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அது சாத்தியப்பட்டிருக்கிறது.


விபத்த நிகழ்ந்த அந்த ஒரு நாளை எடுத்துக் கொண்டு அந்த ஒருநாளில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களின் கதையின் வழியாக இந்தத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள். விபத்து நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே இந்த ஆலையில் பிரச்சனை இருக்கிறது என்பதையும் இங்கு உருவாகும் வாயுவில் நச்சுத்தன்மை இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து அறிக்கை அனுப்பியும் கூட யூனியன் கார்பைட் நிறுவனம் அந்த ஆலையை மூடுவதற்கான எந்த வேலைகளையும் செய்திருக்கவில்லை. இந்த விவரங்களோடு துவங்கும் கதையில் ஆலையை ஒட்டியிருக்கும் ஒரு ரயில்வே நிலையம், அந்த ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி, அந்த ரயில் நிலையத்திற்கு கொள்ளையடிக்க வரும் கொள்ளையன், அன்று புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் இளைஞன், இந்த ஆலையின் தீமைகளைத் தொடர்ந்து எழுதிவரும் பத்திரிக்கைகாரன் என ஏராளமானக் கதாப்பாத்திரங்கள். அவர்களின் பின்னனிகள். விபத்து நடந்த அந்த இரவு போபால் நகரில் என்ன நடந்தது எல்லோராலும் கைவிடப்பட்ட அந்த நகருக்கு ஆபத்து அறிந்து இந்திய ரயில்வே ஊழியர்கள் எவ்வாறு கை கொடுத்து உதவினார்கள் என்பதுதான் அடுத்தடுத்த காட்சிகளாக வருகின்றன. தேர்ந்த நடிகர்கள், சிறப்பான உருவாக்கம் என எல்லா வகையிலும் கட்டிப்போடும் இந்தத் தொடரைப் பார்த்து முடிக்கையில் நமக்கு ஏராளமான கேள்விகள் வருகின்றன. இன்றைக்கும் நாடு முழுக்க இதுபோன்ற ஏராளமான கம்பெனிகள் உள்ளன. அணுவுலைகள் உள்ளன. அவையெல்லாம் பாதுகாப்புதானா? வளர்ந்த நாடுகளே தங்களது அனுவுலைகளை ஒவ்வொன்றாக மூடிக் கொண்டிருக்கும் சூழலில் நம் நாட்டில் எதற்காக இத்தனை அணு உலைகள். தொடரின் முதல் காட்சியில் யூனியன் கார்பைடின் சி இ ஓ மேட்சன் தனி விமானத்தில் அரச பாதுகாப்போடு தப்பித்து தன் சொந்த நாட்டிற்குச் செல்வார். அவரை அன்று காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தது யார்? இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமான அவர் தண்டிக்கப்பட்டாரா? இன்றைக்கும் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பல்வேறு பொருட்கள் நம் நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன... இது எப்படி சாத்தியமானது? ஒரு சினிமாவோ இணையத் தொடரோ பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தருகிறதா என்பது முக்கியமில்லை ஒரு பிரச்சனை குறித்து கேள்வி கேட்கத் தூண்டுகிறதா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் சரியாகவே நிறைவேறியுள்ளது.

42 views

Comentarios


bottom of page