top of page

ஆகூழ் - ஒரு கிராமம் வரலாறு ஆகும் கதை.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 4 minutes ago
  • 4 min read

ரமா சுரேஷ் தனது முந்தைய நாவலான அம்பரத்திலிருந்து  முற்றிலும் துண்டித்துக்கொண்டு புதிய களத்துக்குள் பயணித்திருக்கிறார். கதைமொழியிலும் கதாப்பாத்திர உருவாக்கத்திலும் இந்த நாவல் தனிச்சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது.  கீழ் தஞ்சை மாவட்டமான ஆம்பலாப்பட்டு என்னும் கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு பிழைக்குச் செல்கிறவர்கள் அங்கு ஏகாத்தியபத்யத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதன் வழியாக அரசியலைக் கற்றுக்  கொள்கிறார்கள்.  


இந்த நாவலைப் புரிந்துகொள்ள கணபதியின் அரசியல் வாழ்க்கையை மட்டும் பின்தொடர்வது போதாது. அவர் உருவாக்கிய சமூகத்தின் நினைவுக்குள் இறங்க வேண்டும். அந்த நினைவின் மிக முக்கியமான இடம் ஆம்பலாப்பட்டு. நாவலில் அந்த ஊர்  ஒரு புவியியல் அமைப்பு அல்ல; வர்க்க நினைவாகவும் அரசியல் நினைவாகவும் குடும்ப நினைவாகவும்   கூடிய  உயிருள்ள நிலப்பரப்பாக வெளிப்பட்டிருக்கிறது.  ஆம்பலாப்பட்டு மதுக்கூர் ஜமீனின் கீழிருந்த கிராமம். ஜமீன்தாரின் அதிகாரம் நிலத்தின் மீது மட்டும் இல்லை; அந்த நிலத்தில் உழைக்கும் மனிதர்களின்  மீதும் இருந்தது. வரி, நில உரிமை, குத்தகை, உழைப்பு என ஒவ்வொரு வழியிலும் விவசாயியும் தொழிலாளியும் அதிகாரத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர். நாவலில் ஜமீனுக்கு எதிரான எதிர்ப்பு இப்படித்தான் தனிப்பட்ட கோபமாகத் தொடங்கி, பின்னர் கூட்டு அரசியலாக மாறுகிறது.


ஆம்பலாப்பட்டின் அரசியல் விழிப்புணர்வு ஒரே நாளில் தோன்றியதல்ல. 1943-ஆம் ஆண்டில் அங்கே கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும் விவசாயிகள் சங்கமும் உருவாகின்றன. கதிரேசன் போன்றவர்கள் அந்த அமைப்புகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அதே காலகட்டத்தில் இளைஞர்கள் அரசியல் அமைப்புக்குள் திரள்கிறார்கள். ஒரு கிராமத்தில் கட்சி கிளை உருவாகிறது என்பதன் பொருள், அந்த கிராமத்தின் அன்றாட வாழ்க்கையிலேயே அரசியல் நுழைகிறது என்பதுதான். நிலம் பற்றிய பேச்சு அரசியலாகிறது; கூலி பற்றிய பேச்சு அரசியலாகிறது; ஜமீன்தாரிடம் செலுத்த வேண்டிய பணம் அரசியலாகிறது. இதுவே ஆம்பலாப்பட்டின் தனித்துவம்.


ஜமீனுக்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான மாற்றம், “ஜமீன்தாருக்கு உழைப்பைக் கொடுப்பது இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய பொருளாதார மறுப்பு போலத் தோன்றினாலும், அதன் பின்னால்  பெரிய அரசியல் மாற்றம் இருக்கிறது. தலைமுறைகளாக அதிகாரம் செலுத்திய ஜமீன்தாரிடம் கீழ்ப்படிந்து வாழ்ந்த மக்கள், ஒரு கட்டத்தில் “இல்லை” என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அந்த ‘இல்லை’தான் நாவலின் அரசியல் மொழியில் மிகப் பெரிய சொல்.


அந்த எதிர்ப்பு ஆம்பலாப்பட்டுக்குள் மட்டும் அடைபட்டிருக்கவில்லை. செல்லத்தூர்வெட்டிகாடு, பின்னையூர், வடவாளம், செங்கம்மேடு, நெய்வேலி, வெங்கரை, கொல்லைக்காடு, திப்பியவிடுதி, பூவாளூர் போன்ற பகுதிகளுக்கும் விவசாய சங்க அமைப்பு பரவுகிறது. இதனால் ஒரு கிராமத்தின் கோபம் சுற்றுப்புற கிராமங்களின் கூட்டு உணர்வாக மாறுகிறது. ஆம்பலாப்பட்டு இங்கே ஒரு அரசியல் மையமாக உருவாகிறது.

பொதுவாக அரசியல் வரலாறுகள் போராட்டத்தின் முன்னணியில் நின்ற ஆண்களின் பெயர்களை மட்டுமே பதிவு செய்கின்றன. ஆனால் ஒரு போராட்டம் பல நாட்கள், பல மாதங்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் அதன் பின்னால் குடும்பங்களின் உழைப்பு இருக்க வேண்டும். ஆம்பலாப்பட்டு பெண்கள் அந்தப் போராட்டத்தின் வெளிப்படாத கட்டமைப்பாக இருக்கிறார்கள். ஆண்கள் கூட்டங்களுக்குச் செல்லும்போதும், தலைமறைவாகும்போதும், காவல்துறை ஊருக்குள் நுழையும்போதும், வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள், உணவு, பாதுகாப்பு ஆகியவற்றைச் சுமப்பவர்கள் பெண்கள்தான்.  போலீஸார் ஊருக்குள் நுழைய முடியாத குறுகிய தெருக்களிலும், மக்கள் ஒதுக்கிவைத்திருந்த சேரிப் பகுதிகளிலும் மக்கள் தஞ்சம் புகுந்தனர். இளைஞர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்குக்கூடத் தெரியாத அளவுக்கு சூழல் உருவானது.


இதனால் பெண்கள் போராட்டத்தின் மறைமுகத் தகவல் வலையமைப்பாகவும், பாதுகாப்பு வளையமாகவும் மாறுகிரார்கள்.  இது வெறுமனே “பெண்களும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்” என்ற அளவிலான பதிவு அல்ல. ஆண்கள் கைது செய்யப்படலாம்; தலைமறைவாகலாம்; சிறைக்குச் செல்லலாம்; ஆனால் வீடு காலியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது பெண்களின் பொறுப்பாகிறது. போராட்டம் தெருவில் நிகழ்ந்தாலும் அதன் தொடர்ச்சி சமையலறையிலும், திண்ணையிலும், வயலிலும், குழந்தைகளின் உடலிலும் நிகழ்கிறது. அதனால்தான் பட்டுக்கோட்டை மாநாட்டில் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு வெறும் எண்ணிக்கை அல்ல. அது அந்தக் காலத்து சமூக அமைப்பின் உள்ளே ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அரசியல் மாற்றம். வீட்டுக்குள் இருந்த பெண் பொதுவெளிக்கு வருகிறாள்; ஜமீனுக்கு எதிரான கோபம் அவளுடைய குடும்பத்தின் அன்றாட வாழ்வோடு இணைகிறது. அவளுக்கு அரசியல் என்பது கோட்பாடு அல்ல; வாழ்க்கைப் போராட்டம்.


இந்த அரசியல் எழுச்சிக்கு எதிராக அரசு பயன்படுத்திய வன்முறையும் நாவலில் முக்கியமான இடம் பெறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பிறகு ஆம்பலாப்பட்டு  சாதாரண கிராமமாக இருக்கவில்லை. தலைமறைவாக இருந்த தலைவர்களும் கட்சி ஊழியர்களும் சுற்றியுள்ள செம்பாளூர் காடுகளில் அரசியல் வகுப்புகளும் போராட்டப் பயிற்சிகளும் மேற்கொண்டனர். இதைத் தடுக்க முயன்ற நிலச்சுவான்தார்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைகிறது. சாம்பசிவ ஐயரின் வீடு தொடர்பான சம்பவம் அதற்குப் பிறகு ஆம்பலாப்பட்டின் மீது அரசு இயந்திரத்தை இறக்குவதற்கான காரணமாகிறது. அறுபத்தெட்டு பேர்மீது வழக்கு போடப்பட்டு, அவர்களைக் கைது செய்ய சிறப்புக் காவல்படை கிராமத்தை முற்றுகையிடுகிறது. போலீசார் ஊருக்குள் நுழைந்து கடுமையான அடக்குமுறையை மேற்கொள்கிறார்கள்.

இங்கே “மலபார் போலீஸ் படை” என்பது நாவலின் வன்முறை நினைவுக்குள் ஒரு தனித்த உருவமாக வாசிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்த ஆயுதம் ஏந்திய அரசு, தனது சொந்த கிராமத்திற்குள் நுழைகிறது. எதிரே நிற்பவர்கள் ஆயுதம் கொண்ட ராணுவம் அல்ல; விவசாயிகளும் தொழிலாளர்களும். அதனால்தான் ஆம்பலாப்பட்டின் தெருக்கள், வயல்கள், வீடுகள், சேரிகள் எல்லாம் போராட்டத்தின் நிலப்பரப்பாக மாறுகின்றன. போலீஸ் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாத குறுகிய தெருக்கள் மக்கள் பாதுகாப்புக்கான இயற்கையான அரண்களாகின்றன. மக்கள் சிதறி மறைகிறார்கள். இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று குடும்பத்தினருக்குக்கூட தெரியாது. இது ஒரு கிராமம் அரசை எதிர்த்து நிற்பதன் மிக அடிப்படையான காட்சி.


ஒருபுறம் ஜமீன். மறுபுறம் விவசாய மக்கள்.  ஒருபுறம் காவல்துறை. மறுபுறம் கிராமத்தின் தெருக்கள். ஒருபுறம் அரசு. மறுபுறம் நினைவையும் உறவையும் நம்பிய மக்கள். இந்த எதிர்மறைத் துருவங்களுக்கிடையேதான் ஆம்பலாப்பட்டின் அரசியல் உருவாகிறது. ஆனால் இந்த நாவலை இன்னும் ஆழமாக்குவது, இந்த அரசியல் வரலாற்றுக்கு அடியில் ஓடும் தொன்ம நினைவு.


ஒரு குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக மூத்த பிள்ளை ஊமையாகப் பிறப்பதாகச் சொல்லப்படும் சாபம் போன்ற தொன்மம், நாவலின் யதார்த்த அரசியல் வரலாற்றோடு இணையும் போது ஒரு விசித்திரமான அர்த்தத்தை உருவாக்குகிறது. இதை வெறும் மூடநம்பிக்கையாகப் பார்க்க முடியாது. ஒரு குடும்பம் தன் கடந்த காலத்தில் நடந்த சொல்லப்படாத வன்முறையை, குற்றத்தை, அல்லது நிறைவேறாத ஆசையை  “சாபம்” என்ற வடிவத்தில் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. பேச முடியாத மூத்த பிள்ளை என்ற உருவகம் இங்கே மிகவும் வலிமையானது. ஒரு கிராமம் தனது வரலாற்றைச் சொல்ல முடியாதபோது அது தொன்மமாக மாறுகிறது. குடும்பம் தன் ரகசியத்தைச் சொல்ல முடியாதபோது அது சாபமாக மாறுகிறது. அந்த வகையில் ஊமையாகப் பிறக்கும் மூத்த பிள்ளை, பேசப்படாத வரலாற்றின் உடல் வடிவமாக வாசிக்கப்படலாம்.


இதுதான் நாவலின் மிக அழகான அடுக்குகளில் ஒன்றாக இருக்க முடியும்: கணபதியின் அரசியல் வரலாறு பேசப்படுவதற்காகப் போராடுகிறது; குடும்பத் தொன்மம் பேச முடியாததைச் சுமக்கிறது. ஒன்று கோஷமாக வெளியில் வருகிறது; மற்றொன்று மௌனமாக உடலுக்குள் தங்கி விடுகிறது. இதன் காரணமாக ஆம்பலாப்பட்டு ஒரு வரலாற்று கிராமமாக மட்டுமல்லாமல், நினைவுகளின் கிராமமாக மாறுகிறது.  ஒரு மக்கள் கூட்டம் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை எப்படிச் சுமக்கிறது? சிலர் அதை அரசியலாக்குகிறார்கள். சிலர் போராட்டமாக்குகிறார்கள். சிலர் குடும்பக் கதையாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் மௌனமாகத் தங்களுடைய உடலில் சுமக்கிறார்கள்.


ஆம்பலாப்பட்டு பற்றிய இந்தப் பதிவுகள் சேரும்போதுதான் நாவலின் பரப்பு உண்மையில் விரிகிறது. கணபதி சிங்கப்பூரில் தொழிலாளர் அரசியலைக் கற்றுக்கொள்வதற்கு முன்னரே, அவன் பிறந்த மண்ணில் மக்கள் நிலத்திற்காகவும் மரியாதைக்காகவும் உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தார்கள். சிங்கப்பூரின் தொழிலாளர் அரசியலும் ஆம்பலாப்பட்டின் விவசாய அரசியலும் இரண்டு வெவ்வேறு கதைகள் அல்ல. அவை ஒரே மனிதனின் அரசியல் உணர்வை உருவாக்கிய இரண்டு கரைகள். அதனால்தான் கணபதியை உருவாக்கிய பள்ளி ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல. அவன் பள்ளி ஆம்பலாப்பட்டு.


இந்த எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்த்தால், ஆம்பலாப்பட்டு நாவலில் ஒரு இடம் அல்ல;  அரசியல் உயிரினம். அந்த உயிரினத்தின் நினைவிலிருந்துதான் கணபதி போன்ற மனிதர்கள் உருவாகிறார்கள். அதனால் இந்த நாவலின் உண்மையான பயணம் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வரை செல்லும் ஒரு மனிதனின் பயணம் அல்ல. அது ஒரு கிராமத்தின் உடலிலிருந்து ஒரு மனிதனின் அரசியல் உணர்வுக்குள் வரலாறு எப்படி நுழைகிறது என்பதன் பயணம். ஆனால் இதற்கெல்லாம் அப்பால்  முக்கியமான சில விமர்சனங்கள் உண்டு.  கதாப்பாத்திரங்கள் நிஜ மனிதர்கள், அவர்களின் பெயர்கள் சம்பவங்கள் எல்லாமே  நடந்ததை அப்படியே எழுதப்பட்டிருக்கின்றன. நடந்ததை அப்படியே சொல்ல ஒரு வரலாற்று ஆசிரியன் போதுமே? அங்கே எழுத்தாளனின் வேலையென்ன? இன்னொரு முக்கியமான சிக்கல் கதாப்பாத்திரங்கள் நாவலாசியருக்கு உறவினர்களாகவும் ஊர்க்காரர்களாகவும் இருப்பதால் அவர்களின் மீது எந்த விமர்சனங்களும் இல்லாமல் விதந்தோதல்கள் மட்டுமே மிகுந்திருக்கின்றன. சில இடங்களில் நாங்களும் கள்ளந்தாண்டா என சொல்கிற இடங்களில் அது சாதிப் பெருமிதமாக மாறிவிடக் கூடிய ஆபத்தும் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் வாழ்வையே எழுதினாலும் அதை நீங்கள் மூன்றாவது மனிதனாக இருந்து பார்ப்பது முக்கியம். இந்தக் குறைகளை கவனத்தில்ந எடுத்துக் கொண்டால் அவரது அடுத்த நாவல் இன்னும் சிறப்பாக வரும்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page