top of page

தெரஸா இங்கு உறங்கிக்கொண்டிருக்கிறாள்.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Aug 13
  • 9 min read

அன்று ஜூன் 26,  மதுரை–திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருமங்கலம் எல்லைக்கு அப்பால்  நிகழ்ந்த கொடூர விபத்தினால்  அதிகாலை  நான்கு மணிக்கெல்லாம் பரபரப்பு கூடியிருந்தது.  ஆம்புலன்ஸ்களின் சைரன்கள் ஓயாமல் அலறிக்கொண்டிருக்க, போலீஸ் வாகனங்களின் சிவப்பு விளக்குகள் வரிசைகட்டி நின்றன.  சாலையிலிருந்து சற்று விலகி இருந்த பள்ளத்தில் ஒரு டெம்போ வேன் தலைகீழாகக் கிடக்க, அதன் கூரை நசுங்கி கண்ணாடிகள் அனைத்தும் உடைந்திருந்தன. கடுமையாக சேதமடைந்திருந்த உடல்களை அந்த வண்டியிலிருந்து எடுக்க மருத்துவமனை ஊழியர்களும் காவல்துறையினரும்  போராடிக் கொண்டிருந்தனர்.  


அந்த அகால நேரத்திலும்  கூடியிருந்த ஜனக்கூட்டத்தில் சிலர் மீட்பு பணிகளுக்கு உதவிசெய்துகொண்டிருக்க இன்னும் சிலரோ   அலைபேசிகளில் அந்தச் சூழலைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.  தனது செல்ஃபோனில்  வீடியோ எடுத்தபடி சுற்றி  வந்த  ஒருவனை ஓங்கி அறைந்த  இன்ஸ்பெக்டர் அருணாசலம் ’ இங்க என்ன சர்க்கஸா காட்றாங்க தாயோலி... போடா முதல்ல..’ என சத்தம் போட அடிவாங்கியவன் அவரை முறைத்துவிட்டு தனது காரை நோக்கி நடந்தான். அவனைப்போலவே படம் எடுத்துக் கொண்டிருந்த மற்றவர்களும் அவசரமாக தங்களது அலைபேசியை அணைத்துவிட்டு அங்கிருந்து  நகர்ந்தனர். 


அந்த வேனிலிருந்த பதினெட்டு பேரில் பதிமூன்று பேரை சடலங்களாகவும் மிச்சம் இருந்தவர்களை குற்றுயிரும் குலையுயிரமாக மீட்டபோது விடிந்துவிட்டிருந்தது. சாலையில் இன்னும் குருதியின் சூடு அடங்கியிருக்கவில்லை. சதைகளும் குருதியும் சிதறிய வாடை காற்றில் பரவியிருக்க, பறவைகள் வட்டம் போட்டன. காகங்கள் சதைத்துண்டுகளைக் கொத்திப் பறக்க, நாய்கள் ஆவேசத்தோடு குரைத்துக் கொண்டிருந்தன. போர் முடிந்த நிலம் போல்  இன்னும் ஆவேசம் அடங்காமல் தகித்துக் கொண்டிருந்தது. கைவிடப்பட்ட வேன் முழுக்க குருதிக்கறை, நாயொன்று உலர்ந்தக் குருதித் தடத்தை நக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு ஆள் அதைத் துரத்திவிட்டார். அவரைத் திரும்பிப் பார்த்துக் குரைத்தபடியே ஓடிய நாய் நீண்ட நேரம்  குரைத்துவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.


விபத்திற்கான காரணத்தினை அறிந்துகொள்ள முடியாமல் அருணாசலம் மருத்துவமனைக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்குமாக அலைந்துகொண்டிருந்தார். ’ஸார் நீங்க கொஞ்ச நேரம் வீட்டுக்குப்போயி ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்.’ என ஒரு ஹெட்கான்ஸ்டபிள் சொல்ல,  அதனைக் காதில் வாங்கக் கூடப் பொறுமையற்றவராக அறிக்கைகளை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேசை முழுக்க பரப்பி வைக்கப்பட்டிருந்தன.  சாலையில் எந்தக் கோளாரும் இல்லை, பெரிய பள்ளமோ அல்லது தடுப்புச் சுவரில் மோதியதற்கான அடையாளமோ கூட இல்லை. வாகனத்தைச் சோதனையிட்டபோது ப்ரேக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை என அதிகாரிகள் சொன்னதோடு மருத்துவரின் அறிக்கையில் ட்ரைவர்  அது அருந்தவில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வண்டி ஏதோவொன்றில் மோதியதன் அடையாளமாக அதன் முன்பகுதி கடுமையாக சேதாரமடைந்திருந்ததை  கவனிக்க முடிந்தது. . அந்த “ஏதோ ஒன்று”  என்னவென்பதைத் தான் கண்டுபிடிக்க முடியாமகல் அவர் தடுமாறிக்கொண்டிருந்தார். 


உறக்கமின்மையால் கண்கள் எரிந்தன.  நிறைய தேநீர் அருந்தியததோடு அடுத்தடுத்து சிகரெட் பிடித்ததில்  நாவில் கசப்பேறிப்போயிருந்தது. தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு சோர்வோடு நாற்காலியில் சாய்ந்தபோது  தொலைக்காட்சி சத்தம் அவரது தலைக்குள்  எதிரொலித்தது. எல்லா சேனல்களிலும் விபத்து நடந்த இடத்தைக் குறித்தும் விபத்தைக் குறித்தும் கட்டப்பட்ட கதைகள் அபத்த நாடகமொன்றைக் கேட்பதுபோலிருந்தது.


விபத்து நடந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஒரு குள்ளமான செய்தியாளர், கேமராவை நோக்கி நடுங்கும் குரலில் பேசிக்கொண்டிருந்தார்.


“...எனக்குப் பின்னால  பள்ளத்துல இருக்க வேனப் பாத்திங்கன்னா தெரியும், வண்டி முழுக்க ரத்தம்.  இந்த வண்டில இருந்தவங்கள எல்லாம் ரெகவர் பன்றதுக்கு நாலு மணி நேரம் ஆச்சுன்னு போலிஸ் தரப்புல சொல்றாங்க. இதுக்கு முன்னாடி இந்த அளவுக்கு கோரமான விபத்து இந்தப் பகுதில நடந்ததில்ல.  வண்டியில இருந்ததுல பதிமூனு பேரு இறந்துட்டாய்ங்க. இன்னும் அஞ்சு பேர் நெலமையும் கவலைக்கிடமாத்தான் இருக்கு.  விபத்துக்கான காரணம் என்னன்னு  போலீஸார் விசாரிச்சுட்டு இருக்காங்க. இதுல குறிப்பிடத்தக்க விஷயம் என்னன்னா இதே இடத்தில கடந்த இருபது வருசமா  இதே  தேதில தொடர்ந்து சரியா ராத்திரி ரெண்டு முப்பதுக்கு ஆக்ஸிடண்ட் நடந்துட்டு இருக்கு. ஒருவேள இது ஏதாச்சும் தீயசக்திகளோட வேலையா இருக்குமோன்னு பொதுமக்கள் பயப்படறாங்க...” அந்த சத்தத்தைக் கேட்ட அருணாச்சலம் கடுப்பாகி

’யோவ் அந்தக் கருமத்த நிறுத்துங்கய்யா..’என சத்தம்போட ஒரு கான்ஸ்டபிள் அவசரமாக தொலைக்காட்சியை அணைத்தார்.


தொலைக்காட்சியில் துவங்கிய கதைக்கு இணையவாசிகள் கண் காது மூக்கு வைத்து புதிய புதிய வடிவமாக மாற்றி  தங்களுக்கு விருப்பமான கதைகளாக  எழுதத்துவங்கினார்கள். அந்த நெடுஞ்சாலை நாடு முழுக்க பேசப்படும் செய்தியாக மாறியபோது   காவல் நிலையத்திலிருந்த தொலைபேசிகள் தொடர்ந்து ஒலித்தன.  மேலதிகாரிகளிடம் பதில் சொல்ல முடியாமல்  அருணாச்சலம் சோர்ந்துபோனார். மாவட்ட ஆட்சியர், எஸ்,பி, அரசியல்வாதிகள், ஊடகங்கள் என எல்லோருமாக சேர்ந்து அந்த  ஒரு கேள்வியைத் திரும்பக் திரும்பக் கேட்டார்கள். விபத்து எப்படி நடந்தது?  அருணாசலத்திடம் அதற்கான பதில் இல்லை. 

வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்த காவலர் மெதுவாக அவரை நெருங்கி ’ஸார் மேடம் டிஃபன் அனுப்பி இருக்காங்க..’ எனச் சொல்ல அருணாச்சலம் எழுந்து கழிவறை சென்றார்.


திரும்பி வந்தபோது மேசையில் அவருக்கான உணவுகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தன.  வெளியே ரைட்டரிடம் யாரோ ஒரு பெரியவர் ’தயவுசெஞ்சு அலோ பன்னுங்க ஸார். ஒரு பத்து நிமிசம் இன்ஸ்பெக்டர பாத்துட்டுப் போயிடறேன்..’ என எனக் கெஞ்சிக்கொண்டிருக்கும் சத்தமும் பதிலுக்கு ரைட்டர் ’யோவ் இங்க என்ன பிரச்சன போயிட்டு இருக்குன்னு தெரியாம நீயும் உசுரவாங்காத. என கத்தும் சத்தமும் கேட்டது. ’ஸார் நான் பாக்க வந்ததே அந்த ஆக்ஸிடெண்ட்டுக்கு என்ன ரீசன்னு சொல்லத்தான். இந்த வருசம் மட்டுமில்ல இருவது வருசமா இங்க நடக்கற ஆக்சிடெண்ட்டுக்கு என்ன ரீசன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும்..’ எனச் சொல்ல அருணாச்சலம்  வேகமாக வெளியே வந்தார். காவலர்கள்  அவசரமாக எழுந்துகொள்ள


’யாரு நீங்க? என்ன தகவல் தெரியும் உங்களுக்கு?’ என அருணாச்சலம் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்டார்.

அறுபதுகளை நெருங்கும் தோற்றம், வலுவான உடல், வழுக்கைத் தலையில் இடது வலது ஓரங்களில் மட்டும் அடர்ந்திருந்த மயிரென இருந்த அந்தப் பெரியவர் தன்னை ’மாறன்’ என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இங்க புதுநகர் ல தான் நான் குடியிருந்தேன். ஊர விட்டுப் போயி இருவது வருசம் ஆச்சு. இப்ப மங்களூர் ல செட்டில் ஆகிட்டேன்.’ என நிதானமாக தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தவரை அவசரமாக இடைமறித்த அருணாச்சலம் ’சரி விஷயத்துக்கு வாங்க.... இங்க நடக்கற ஆக்ஸிடெண்ட்க்குலாம் ரீசன் தெரியும்னு சொன்னீங்க? என்ன ரீசன்?’ என பரபரத்தார்.


தெரஸா...


மாறன் அந்தப் பெயரை உச்சரித்துவிட்டு அமைதியாக இன்ஸ்பெக்டரைப் பார்க்க சுற்றியிருந்த காவலர்கள் எல்லாம் குழப்பத்தோடும் அச்சத்தோடும் பார்த்தனர்.


’என்ன பேய்க்கதையா? அதான் எல்லா டிவிக்காரனும் சொல்லிட்டு இருக்கானுகளே... போய்யா இங்க இருந்து..’ என அருணாச்சலம் எரிச்சலோடு சொல்ல ’ஸார் ஸார் ஒரு நிமிசம் அவங்க சொல்றது எல்லாம் கத... நான் சொல்றது நிஜம்,.. தெரஸாதான் காரணம்...’ என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அருணாச்சலம்  அந்த ஆளை ஒருமுறை கவனமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். வாக்கிடாக்கியின் சத்தத்தை ஒருவர் குறைக்க, ஹாலில் ஓடிக்கொண்டிருந்த காற்றாடிகளின் சத்தமும் மட்டும் அந்தச் சூழலில் விகாரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.


’தெரஸா என்னோட முதல் மனைவி. ஜி ஹெச் ல நர்ஸா இருந்தா, கல்யாணம் ஆகி நாங்க சந்தோசமாத்தான் இருந்தோம்.  ரெண்டு பையனுங்க, ஒரு பொண்ணுன்னு எளிமையான குடும்பம்.  எங்க பிள்ளைங்கலாம் ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போயிட்டு இருந்த டைம்ல ஒருநாள் தெரஸா சூசைட் பண்ணிக்கிட்டா...” என தழுதழுத்தபடியே சொல்லிமுடிக்க அருணாச்சலம் ’சரி அதுக்கும் இந்த ஆக்ஸிடென்சுக்கும் என்னய்யா சம்பந்தம்?’ எனக் கேட்டார்...


”இருபது வருசத்துக்கு முன்ன இந்த ஹைவே போடலஸார்... டபுள் ரோடுதான். அப்ப ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் புளியமரமா இருக்கும். ஆக்ஸிடெண்ட் ஆன இடத்துல இருந்த புளிய மரத்துலதான் அவ சூசைட் பண்ணிக்கிட்டா..’ என மாறன் சொல்ல அங்கிருந்த எல்லோருக்கும் நடுக்கம் வந்தது.

 

தனது எதிரிலிருக்கும் ஆள் சொல்வது உண்மையா பொய்யா அப்படியே உண்மையாக இருந்தாலும் இறந்துபோன ஒருவள் ஏன் இருவது வருடங்களாக இப்படி விபத்துகளை ஏற்படுத்த வேண்டும் என விடை தெரியாத கேள்விகளோடு பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம்  தலைமைக் காவலரை அழைத்து ’இவர் சொல்றது எல்லாம் உண்மையான்னு செக்  பண்னுங்க...’ என உத்தரவிட மாறன்  அவசரமாக தனது ஹேண்ட்பேகை எடுத்து ஸார் ஒரு நிமிசம் என்றபடியே ஒரு பழைய செய்தித்தாளை எடுத்து மேசையில் வைத்தார்.  


இருபது வருடங்களுக்கு முந்தையது. அவர் சொன்னபடியே புளியம்ரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட தெரஸாவின் செய்தி வந்திருந்ததோடு புளியமரத்தில் தூக்கு கயிறு தொங்கிய புகைப்படமும் வெளியாகியிருந்தது.  அந்த செய்தித்தாளை அருணாச்சலமும் மற்ற காவலர்களும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒருவர் அருணாச்சலத்தை நெருங்கி வந்து ’ஸார் வண்டில இருந்த கேமரா ல இருந்து ஃபுட்டேஜ் ரெகவர் பண்ணிட்டோம் என ரகசியமாகச் சொன்னார்,  செய்தித்தாளை அப்படியே வைத்துவிட்டு எழுந்த அருணாச்சலம் ’இவருக்கு காஃபி வாங்கிக் கொடுங்க. எங்கயும் போக விட்றாதிங்க...’ என சொல்லிவிட்டு தனது கேபினுக்குத் திரும்பினார். லேப்டாப்பில் அந்த வீடியோ க்ளிப்பை ஓடவிட்டபோது இருளில் எல்லாம் அரைகுறையாகவே தெரிந்தது. 2.28


காட்சி தெளிவாக இருந்தது. ட்ரைவர்  பாடல் கேட்டபடியே பாடிக்கொண்டு இருக்கும் சத்தமும் பதிவாகி இருந்தது.


வேன் இருளை வெட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.


2.29. சாலையின் இருபுறமும் இருள். 2.30. அந்த ஒருநொடியில்

ஓட்டுநர் திடீரென்று யாரையோ பார்த்தது போல அலறும் சத்தமும் எதிரே பிரம்மாண்டமான இருளில் வண்டி மோதிய சத்தமும் அவசரமாக  அவர் ஸ்டீயரிங் வலப்புறமும் இடப்புறமும் திருப்பியதில்  வேன் சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டது.கேமரா அதிர்ந்து நின்றது. அதன்பிறகு எல்லாமே இருள்.


அருணாசலத்திற்கு குழப்பம் இன்னும் அதிகமானது. “வண்டி எதுல மோதுது?” அவரைச் சுற்றியிருந்தவர்களில் எவரும் பதில் சொல்லவில்லை. அவர்  மீண்டும் ஓட்டிப்பார்த்தார்.  அதே காட்சி, அதே கணம், அதே மோதல். ஆனால் சாலையில் ஒன்றும் இல்லை. மீண்டும்.” அவர்கள் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஓட்டுநர் எதையோ பார்த்தான். ஒவ்வொரு முறையும் வண்டி அதே இடத்தில் எதிலோ  மோதி இருந்தது. ஆனால் அங்கு  இருளைத்தவிர எதுவுமில்லை.  இதை வைத்துக்கொண்டு எப்படி அறிக்கை எழுதுவதெனத் தெரியாமல் எரிச்சலோடு அவர் ஸ்டேஷனிலிருந்து வெளியேறினார்.


ஸ்டேஷனில் ஒரு கிழவர் வந்திருப்பதும் அந்த ஆள் இருபது வருடங்களுக்குமுன் தெரஸா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டதையும் சொன்ன தகவல்கள் கசிந்து செய்திகளாகவும் கிசுகிசுக்களாகவும் இணையத்திலும்  தொலைக்காட்சிகளிலும் ஓடிக்கொண்டிருந்தது. சில மணி நேரங்களிலேயே ஒரு யூட்யூப் சேனல் காவு வாங்கும் கன்னி என ஒரு செய்தித்தொகுப்பை வெளியிட்டிருந்தது. முன்னாள் பத்திரிக்கையாளர்  ஒருவர் இருபது வருடங்களுக்குமுன் தெரஸா தற்கொலை செய்துகொண்ட போது அந்த செய்தியை தான் கவர் செய்யப்போனதைப் பற்றி விலாவரியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ( ஒரு இடைக்குறிப்பு. அந்த முன்னாள் பத்திரிகையாளர் எந்த  பத்திரிகையிலும் வேலை செயததில்லை. மதுரை டவுன் ஹால் ரோட்டில் பெண்களை வைத்து தொழில் செய்துகொண்டிருந்தவர். ஒரு வழக்கில் காவல்துறை அவரது கெண்டைக்கால் நரம்பினை அறுத்துவிட்டபின் தொழிலை விட்டுவிட்டு தன்னை சுயாதீன பத்திரிகையாளர் என அறிவித்துக்கொண்டார் – இதனை கதைசொல்லியிடம் அந்தப் பத்திரிகையாளரே சொல்லி இருக்கிறார்.)  அந்த செய்தித் தொகுப்பு வெளியான சில நிமிடங்களிலேயே வேறு சேனல்களிலும் கவர் ஸ்டோரி வரத் துவங்கியது. 

“மரண வளைவு.” “தெரஸாவின் சாலை.” என தங்களுக்குப் பிடித்த பெயர்களில் எல்லாம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


ஒரு சேனலில்  இருபது வருடங்களின் விபத்துகளைத் தொகுத்து செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். பின்னனி இசை, க்ராஃபிக்ஸ் என பக்கா செட் அப்.

1999 — ஜூன் 26.

2000 — ஜூன் 26.

2001 — ஜூன் 26.


அதன்பிறகு ஒவ்வொரு வருடமும்.  இரவு 2.28. பின் 2.30க்கு அருகில். வீடியோவில் ஒரு பழைய புகைப்படம் தோன்றியது. அது  தெரஸா. இருபது  வருடங்களுக்கு முந்தைய புகைப்படத்தில் வலிமையானவளாகத் தோன்றினாள். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பலவீனமான முகமாகத் தெரியவில்லை.  அவள் தூக்கில் தொங்கியதாக சொல்லப்பட்ட மரம் க்ராஃபிக்ஸில் வந்து பின் மறைந்தது. குரல் அந்த செய்தியை சொல்லி  முடித்தபோது எந்த தொடர் மரணங்களுக்கு முடிவென்ன? தெரஸாவின் கோவத்திற்கு காரணமென்ன? என கேள்விகள் திரையில் அப்படியே நின்றன.  


அருணாச்சலம் ஸ்டேஷன்  திரும்புவதற்குள் தெரஸா நாடு  முழுவதும் அறியப்பட்டிருந்தாள்.  ’ஸ்டேஷன் ல இருந்து எப்பிடியா நியூஸ் வெளில போச்சு..? என காவலர்களைப் பார்த்து சத்தம் போட்டார். ஒருவரும் பதில் சொல்லவில்லை. நடந்த களேபரங்கள் எதற்கும் தொடர்பில்லாததைப் போல் மாறன் அமைதியாக அமர்ந்திருதார்.


’இங்க பாருய்யா... நடந்தது ஆக்ஸிடெண்ட். கேஸ எப்பிடி முடிக்கறதுன்னு எனக்குத் தெரியும்.. நீ பொச்ச பொத்திட்டு இங்க இருந்து கிளம்பு... வெளியபோயி பத்திரிகைகாரனுக கிட்ட இந்தக் கதைய சொல்லிட்டு இருந்தன்னா உன்னயுத் தூக்கி உள்ள வெச்சிருவேன்... என அருணாச்சலம் அவரைப் பார்த்துக் கத்தினார்.

”ஸார் ஒரு தடவ நடந்தா ஆக்ஸிடெண்ட். ஒவ்வொரு வருசமும் அதே நாள் அதே நேரத்துக்கு நடந்தா அது ஆக்ஸிடெண்ட் இல்ல... நான் இனிமேலும் அப்படி நடக்கக் கூடாதுங்கற அக்கறைல தான் வந்திருக்கேன்...’ என மாறன் நிதானமாகச் சொல்ல அருணாச்சலத்திற்கு அந்தப் பேய்க்கதையை தொடர்ந்து கேட்பதா அல்லது அந்த ஆளை அடித்துத் துரத்துவதா என குழப்பமாக இருந்தது.


’அவ சூசைட் பண்ணல ஸார். நாந்தான் கொன்னுட்டேன்...’ ’ நீண்டகாலமாக தனக்குள் வைத்திருந்த ரகசியத்தை சொல்லும் நடுக்கத்தோடு மாறன் சொல்ல ஸ்டேஷனிலிருந்த எல்லோரும் அதிர்ந்தார்கள். ’யோவ் இது என்ன புது கதையா?” என அருணாச்சலம் முறைத்தார்,


’இல்ல ஸார்... உண்மையத்தான் சொல்றேன்.’ இந்தமுறை மாறனின் குரலில் தெளிவிருந்தது. ’நான் டூரிஸ்ட் கைடா வேல பாத்துட்டு இருந்தேன். அப்பநிறைய ஃபாரினர்ஸோட பழக்கம்.... இங்க வார ஒவ்வொரு நாட்டுக்காரனுக்கும் என்ன மாதிரி ரசனை இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம்... அப்பத்தான் சில பேர் செக்ஸ் டூரிஸமுக்கு வராங்கன்னு தெரிஞ்சது....’ எனச் சொல்லிவிட்டு தன்னைச் சுற்றியிருந்த எல்லோரையும் பார்த்தார்.


அடுத்து என்னச் சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் அப்பட்டமாக வெளிப்பட்டது, தண்ணீரை எடுத்துக் குடித்தவர்.

’மூணு புள்ளைங்கள கர சேக்கனுமே ஸார்... அதான் என் மனைவிக்குத் தெரியாம அவகூட உறவு வைக்கிறப்பல்லாம் கேமராவுல படமா எடுத்து அத ஸ்பெஷல் வீடியோன்னு வித்துட்டு இருந்தேன்... எல்லாம் ஃபாரினர்ஸ்கிட்டத்தான்...’ எனச் சொல்ல அருணாச்சலம் அந்த ஆளை அருவருப்போடு பார்த்தார்.


’ஒருநாள் இந்தவிஷயம்  தெரஸாவுக்குத் தெரிஞ்சு சண்டையாகிடுச்சு.  அவங்க வீட்ல சொல்லி பிரச்சனையாக்கனும்னு கிளம்பிட்டா... நான் பேசிப்பாத்தேன். கெஞ்சினேன், கால்ல விழுந்தேன். ஆனா அவ சமாதானமாகற மாதிரி இல்ல. கோவத்துல புடிச்சு தள்ளிவிட்டேன்.. அவ பதிலுக்கு என்னய அடிக்க நானும் அடிக்கன்னு பெரிய சண்டையாகிடுச்சு.,.. ஆத்திரத்துல கழுத்துல அவ சேலையக் கட்டி தொங்கவிட்டுட்டேன்..’ என சொல்லி முடித்தார்.


ஸ்டேஷனில் நீண்ட அமைதி. ’வீட்டுல தொங்கவிட்டவ எப்பிடி ஹைவே ல இருந்த புளிய மரத்துக்கு வந்தா?’ அருணாச்சலம் கேட்டார்.


’அது என் சொந்த வீடுஸார்... நாளப்பின்ன யாருகிட்டயாச்சும் விக்கனும்னா இதையே காரணமா வெச்சு எவனும் வாங்காம போயிடுவானோன்னு யோசிச்சுட்டு நாந்தான் அவள கார்ல ஏத்திட்டுப்போயி ராத்திரி யாருக்கும் தெரியாம அந்தப் புளிய மரத்துல தொங்கவிட்டேன்.’ மரத்துல அவ தொங்கறப்பதான் தெரிஞ்சது... அது வரைக்கும் மூச்சு இருந்திருக்குன்னு... அன்னிக்கி தேதி ஜூன் 26.. நேரம் ராத்திரி 2.30..’ என அந்தக் கதையின் கடைசி முடிச்சையும் சொல்லி முடித்தபோது அருணாச்சலம் உட்பட காவலர்கள் அத்தனை பேரும் அவரிடமிருந்து பார்வையை விலக்கினார்கள்.


“ இந்த இருபது வருஷமும் ஏன் அமைதியா இருந்தீங்க முன்னயே வந்து சரண்டர் குடுத்திருக்கலாமே?” என அருணாசலம் கேட்டார்.


“அமைதியா இல்ல ஸார்.’ மாறன் தலையைக் குனிந்துகொண்டார். முதல் வருசம் நடந்தப்போ எல்லாரையும் மாதிரி நானும் அத செய்தியா கடந்து போயிட்டேன்.  அடுத்தடுத்த ரெண்டு வருசமும் விபத்து நடந்ததப் பாத்தப்போதான் எனக்கு கலக்கமா ஆகிடுச்சு... போலிஸ்ல வந்து சரனடையலாம்னு நெனச்சா பிள்ளைங்க என்னாகும்னு நெனச்சு பயம். அதனாலதான் ஊரவிட்டுப் போனேன். அடையாளத்த மாத்திக்கிட்டேன்.”


’இப்ப நீங்க சரணடஞ்சுட்டா பிரச்சன முடிஞ்சிருமா? அடுத்த வருசம் ஆக்ஸிடெண்ட் ஆகாதா”


”தெரியல ஸார். ஆனா உண்மைய சொல்லாமப் போயிட்டா இதுக்கு அப்பறம் நானே என்னய மன்னிக்க மாட்டேன்... ஒவ்வொரு வருசமும் இந்தத் தேதிய கடக்கறப்போலாம்  நா அடையற மனவேதன கொஞ்சம் நஞ்சமில்ல... ஆக்ஸிடெண்ட் ஆகக் கூடாது. யாருக்கும் எதும் ஆகிடக்கூடாதுனு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே இருப்பேன். ஆனா  அடுத்த நாள் செய்தியப் பாத்ததும் மனசு ஒடஞ்சு போயிரும். அவளுக்குக் கோவம் என்மேலதான்னா நியாயமா தண்டிக்கப்பட வேண்டியது நாந்தான ஸார்...”

நீண்டநேரமாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவரிடமிருந்து வெளிப்பட்டது.


 புரிந்துகொண்ட  அருணாச்சலம் தலைமைக் காவலரை அழைத்தார். ’அந்தாள ரிமாண்ட் பன்னி வைங்க...’ என உத்தரவிட்டார்.


”ஸார் சும்மா ஸ்டேட்மெண்ட்ட வெச்சு எப்பிடி ஸார் ரிமாண்ட் பன்றது?’ என தலைமக் காவலர் கேட்க ’நீங்க ரிமாண்ட் பண்ணுங்க... கேஸ ரீ ஓபன் பன்றதுக்கு என்ன ஃபார்மலிட்டிஸோ அத நான் பாத்துக்கறேன்...’ என்றார் அருணாச்சலம்.


அடுத்தநாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி துவங்க இருந்ததால் இந்த செய்தியை எல்லோரும் மறந்திருந்தனர்.  மாறனிடம் வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த மரணம்  கொலை வழக்காகத் திறக்கப்பட்டது. பழைய சாட்சிகள் அழைக்கப்பட்டார்கள். கோப்புகள் திறக்கப்பட்டன. மருத்துவ அறிக்கை மீண்டும் பார்க்கப்பட்டது.


தெரஸாவின் கழுத்தில் இருந்த காயத்தின் வடிவம் தற்கொலையுடன் முழுமையாகப் பொருந்தவில்லை. மாறனின் பழைய வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்தன. அவர் சொன்ன நேரங்களும் மருத்துவ அறிக்கையில் இருந்த நேரங்களும் ஒன்றாக இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பு முடிந்துவிட்டதாக நினைத்த வழக்கு, திடீரென்று உயிருடன் வந்து நின்றது. இத்தனைக்கும் அப்பால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காமல் இருந்தது.


விபத்துகள்?


ஒருவேளை தெரஸாதான் அந்த விபத்துகளுக்குக் காரணமென்றால் அவளை எப்படி சமாதானப்படுத்துவது. பேய்கள் பழியெடுக்கும் என்பது எத்தனை வேடிக்கையான கதை. படித்த அறிவுள்ள ஒரு மனிதன் இப்படி சிந்திக்க முடியுமா? அருணாச்சலத்தால் அந்த வழக்கையும் தெரஸாவையும் எளிதில் கடந்து வரமுடியவில்லை. ஒரு வாரத்திற்குப்பின் தெரஸாவின் பிள்ளைகள் அவரைப் பார்க்க வந்திருந்தனர்.


”ஸார் அந்த விபத்து நடக்கற இடத்துப் பக்கத்துல எங்கம்மாவுக்கு ஒரு நினைவுத்தூண் வைக்கனும் ஸார். நீங்கதான் பெர்மிஷன் வாங்கிக் கொடுக்கனும்.” என கோரிக்கை வைத்தனர். அவர் சம்மதிக்க, அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் பளிங்குக் கல் வைக்கப்பட்டது. அதில்

தெரஸா இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற குறிப்பு மட்டும்.


அதற்கு கீழே வேறு எதுவும்  எழுதப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்ததால் மாறன் திருமங்கலத்திலேயே தங்கிவிட்டான். ஒருநாள் அதிகாலை தெரஸாவின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுக் கல்லைப் பார்க்க வந்தவன்  நீண்ட நேரம் அசையாமல் நின்றான். பின் மண்டியிட்டு அழுதான்.

நாட்கள் வேகமாக கழிந்தன. அடுத்தவருடம் ஜூன் 26 வந்தபோது வழக்கு விசாரணை முடிந்துவிட்டிருந்தது. தொலைக்காட்சிகளும் யூட்யூபர்களும் தெரஸாவின் வளைவு என மீண்டும் செய்தித் தொகுப்பை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். தேவையற்ற பரபரப்பைத் தவிர்க்க போலிஸ்காரர்கள் இரவில் காவலுக்கு இருந்தார்கள்.


2.20.

2.25.

2.29.

சாலை வழக்கம்போலச் சென்றுகொண்டிருந்தது.

2.30.

எதுவும் நடக்கவில்லை.

2.31.

எதுவும் இல்லை.

2.32. தொலைவில் ஒரு கார் திடீரென்று பிரேக் போட்டது. அருணாசலம் அந்தத் திசையை நோக்கிப் பார்த்தார்.

கார் சில அடி தூரத்தில் நின்றிருந்தது. அருணாச்சலமும் இன்னும் சில போலீஸ்காரர்களும் பதறியடித்து ஓடினார்கள். அந்தக்காரின்  இண்டிகேட்டரின் சத்தமும் ஹாரன் சத்தமும் விகாரமாய் ஒலித்துக்கொண்டிருக்க, அருணாச்சலம் அவசரமாகச் சென்று வண்டியை ஆஃப் செய்தார்.  ஓட்டுநர்  இருக்கையிலிருந்தவனும் அருகில் அமர்ந்திருந்த பெண்ணும் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். கதவைத் திறந்து அவர்கள் கீழே இறங்கியபின்னும் நடுக்கம் குறைந்திருக்கவில்லை. அவர்களை உலுக்கிய அருணாச்சலம் “என்னாச்சு?”ம் எனக் கேட்டார்...

“மரம்.”

“என்ன?”

“சார்... ரோட்டு மேல திடீர்னு ஒரு மரம் இருந்துச்சு. புளியமரம்.”

அருணாசலம் சாலையைப் பார்த்தார். இப்போது அங்கே எதுவும் இல்லை.


“அந்த மரத்துல ஒருத்தி தொங்கிட்டு இருந்தா..” என அவன் நடுங்கியபடியே ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான்.  ஓட்டுநர் விரல் நீட்டிய இடத்திற்கு சற்று தூரத்தில் தெரஸாவின் நினைவுத்தூண் இருந்தது. அருணாசலம் அந்தக் கல்லை நோக்கி நடந்தார். அதன் பின்னால் அடர்த்தியான இருள் சூழ்ந்திருந்தது.  அவர் இன்னும் இரண்டு அடிகள் முன்னால் செல்ல, அந்தக் கணத்தில் காற்று வீசியது. கல்லின் அடியில் கிடந்த உலர்ந்த புளியமரத்து இலைகள் சாலையில் உருண்டு வந்து அவனது காலில் பட்டது. அருணாச்சலம் சுற்றிலும் நோட்டம் விட்டபோது எங்குமே  புளிய மரங்கள் இல்லை என்பது புரிந்தது.  சொல்லப்போனால் இருபது வருடங்களாக இல்லை.


அதன்பிறகு அந்த இடத்தில் பெரிய விபத்துகள் நடக்கவில்லை. ஆனால் ஜூன் 26 இரவு அந்தச் சாலையைக் கடக்கும் சில ஓட்டுநர்கள், தங்களுக்கு முன்னால் ஒரு மரம் தோன்றியதாகச் சொன்னார்கள். சிலர் ஒரு பெண்ணைக் கண்டதாகச் சொன்னார்கள்.


அருணாசலம் ஓய்வு பெற் பிறகு ஒருமுறை அந்தப் பழைய கோப்பைத் திறந்து பார்த்தான். தெரஸாவின் கொலை.  அதன் கீழ் அவளுடைய மாறனின் ஒப்புதல் வாக்குமூலம். அத்தோடு இருபது வருடங்களின் விபத்து அறிக்கைகள்.

அவர் ஒவ்வொரு விபத்தின் நேரத்தையும் ஒரு காகிதத்தில் எழுதினான்.

2.28.

2.31.

2.29.

2.34.

2.30.

2.27.

2.32.

அவற்றை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர்  அவற்றின் அருகில் தெரஸாவின் மரண நேரத்தை எழுதினார்.  2.30.

அந்த இருபது வருடங்களில் நடந்த ஒவ்வொரு விபத்துக்கும் இடையே இருந்தது சில நிமிடங்களின் வேறுபாடு மட்டுமே. ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருந்தன. அருணாசலம் அந்தக் காகிதத்தை மடித்துவைத்தார்.  அந்த இரவில் முதன்முறையாக ஒரு சந்தேகம் வந்தது. விபத்துகள் தெரஸாவை நினைவுபடுத்தியதா? அல்லது தெரஸாவின் மரணம் அந்தச் சாலைக்கு ஒரு நேரத்தை விட்டுச்சென்றதா? அவருக்குத் தெரியவில்லை. அந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கான துணிச்சல் அவருக்கில்லை.


ஆனால் அடுத்த வருடம் ஜூன் 26 அன்று, இரவு இரண்டு முப்பது மணிக்கு, அவர்  வீட்டிலிருந்த கடிகாரம் திடீரென்று நின்றுவிட்டதைக் கவனித்தார்.


காலையில் அவர் அதனை சரி செய்தார். அதற்கடுத்த வருடமும் அதே நாளில்— அதே நேரத்தில்— கடிகாரம் நின்றது.


மூன்றாவது வருடம்  இரவு அவர் உறங்கவில்லை.  கடிகாரத்தை அறையிலிருந்து எடுத்துவிட்டு அலமாரிக்குள் வைத்தார்.  அந்த இரவு இரண்டு முப்பது ஆனபோது, அலமாரிக்குள் இருந்து ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.

டிக்.

டிக்.

டிக்.

அவர்  கதவைத் திறக்கவில்லை. அதன்பிறகு ஒருபோதும் தன் வாழ்நாளில் அந்தக் கடிகாரத்தைத் திறக்கவில்லை.  அவரது மரணத்திற்குப்பின் கடிகாரம் வைக்கப்பட்டிருந்த  சுவரில், யாரோ ஒருவரால் பென்சிலால் எழுதப்பட்டிருந்த ஒரு சொல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.


தெரஸா.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page