top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

இலக்கிய பூமர்கள் ஏன் ஆபத்தானவர்கள் ?



நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பூமர்கள் சூழவே வாழ்கிறோம். உண்மையில் யார் இந்த பூமர்கள்? இவர்களை எவ்வாறு இனம் காண்பது. வெகு எளிது?

1. எப்போதும் உலகின் மீதும் பிற மனிதர்களின் மீதும் புகார்களுடன் மட்டுமே இருப்பார்கள்.

2. சுயமாக எதையும் திறனற்றவர்களாக இருப்பவர்கள், யாராவது சுயமாக இயங்கினால் அவர்களின் மீது வன்மத்தைக் கக்க்கும் முதல் நபராக இருப்பார்கள்.

3. மகிழ்ச்சியாக வாழத் தெரியாது, மகிழ்ச்சியாக வாழ்கிறவர்களைக் கண்டால் வயித்தெரிச்சலில் ஊரையே எரித்துவிடுவார்கள்.

4. எல்லாவற்றையும் விட முக்கியமாக மொத்த உலகமும் தனது விருப்பத்தின்படி இயங்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.


இந்த நான்கு அறிகுறிகளின் அடிப்படையில் நமது குடும்பத்திலும் நண்பர்களின் வட்டத்திலும் பூமர்களை அடையாளம் கண்டுகொண்டோமானால் இவர்கள் நம்மை எத்தனை மனவுளைச்சலுக்குள்ளாக்குகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த சராசரி பூமர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல இலக்கிய பூமர்கள். சராசரி பூமர்களை நாம் திருத்தவேண்டுமென நினைக்கத் தேவையில்லை, ஒதுங்கிவிடலாம் அல்லது ஒரு கட்டத்திற்குமேல் அவர்களின் செயல்களுக்கு நாம் பழகிவிடலாம். அவர்களால் பெரிதளவில் நமக்கு இழப்புகள் வராதபடி மனவுளைச்சல் ஏற்படாதபடி நம்மைக் காத்துக்கொள்ள முடியும். இலக்கிய பூமர்களிடமிருந்து நாம் தப்பிப்பதுதான் பெரும் போராட்டம்.


இலக்கிய பூமரின் முக்கியமான ஆயுதம் சமூக ஊடகங்கள். படைப்பாற்றலோ சுயசிந்தனையோ சிறிதும் இல்லாத இவர்களால் தன்னெழுச்சியாய் எந்தவொரு படைப்பையும் உருவாக்க முடியாதென்பதால் அந்த ஏமாற்றங்களையும் தோல்விகளையும் பிறரின் மீதான வெறுப்புகளாகவும் அவதூறுகளாகவும் சமூக ஊடகங்களில் கக்குவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். ( முன்னொரு காலத்தில் இப்படியானதொரு பூமராக இருந்திருக்கிறேன் என்கிற அடிப்படையில் இவர்களின் நகர்வுகளை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியும்.) இந்த பூமர்களின் வேலை நேரம் சரியாக மாலை எட்டு மணிக்குமேல் துவங்கும். ஏதாவதொரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்து நல்ல வருமானம் ஈட்டுபவராகவோ, அல்லது தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வேலை செய்கிறவர்களாகவோ இவர்களில் பெரும்பாலனவர்கள் இருப்பது கவனிக்கத் தக்கது. பணி முடிந்த பிறகான குடிவேளையில் இவர்களுக்குள்ளிருக்கும் பூமர் மிருகம் விழித்துக்கொள்ளும். முதலில் அன்றைக்கு யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்து அவர்களின் மீது சில பதிவுகளை வன்மமாகக் கக்கிவிட்டு அடுத்ததாக யாரை நிரந்தர எதிரியாகக் கருதுகிறார்களோ அவர்களின் மீது வன்மத்தைக் கக்குவது? இந்த வன்மங்களை தொடர்ந்து வாசிக்கும் ஒரு தேர்ந்த வாசகன் இந்த பூமர்களுக்கிருக்கும் மனச்சிக்கல்களையும் அடையாளச் சிக்கல்களையும் எளிதாகப் புரிந்துகொண்டு விலகிவிடுவான்.


புதிதாக வாசிக்க வருகிறவன் இதை ஒரு கலகமாக நினைத்துக்கொண்டு இவர்கள் விரிக்கும் வலையில் விழுகிறான். அவனுக்கு இலக்கியத்திலும் கலை வடிவங்களிலும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் இயல்பியே இருக்கலாம், அப்படியாகப்பட்டவனை இந்த பூமர்கள் தங்களின் வன்மக் குப்பைகளால் திசைதிருப்பி யாரையும் வாசிக்கவிடாமல் செய்துவிடுவார்கள். அவர்களின் முழுமுற்றான நோக்கமும் அதுதான்.

இலக்கிய பூமர்கள் எழுத்தாளர்களின் மீது வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு என்ன? தமிழ் இலக்கிய உலகத்தில் கும்பல மனோபாவம் அதிகரித்திருக்கிறது. யாருக்கும் விரிந்த கற்றல் ஞானமில்லை. இப்படி குற்றச்சாட்டு வைக்கிறவர்கள் எதன் அடிப்படையில் இதை எழுதுகிறார்களென நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. முதலில் இலக்கியச் செயல்பாடுகளில் சேர்ந்து வேலை செய்வதில் என்ன குற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது. மலையாளத்திலும் கன்னடத்திலும் வங்காளத்திலும் மராத்தியிலும் எழுத்தாளர்கள் இயக்கங்களாகத்தான் வேலை செய்கிறார்கள். அரசியல் சார்பு நிலைகள் சார்ந்தும் அல்லது இலக்கிய மரபுகள் சார்ந்தும் இந்த அமைப்புகள் உருவாகின்றன. இலக்கிய மரபுகள் ஒரு மொழியில் ஏன் முக்கியமென்பதை இலக்கியத்தை முழுநேர வாழ்வாகக் கொண்ட ஒருவன் மட்டுமே நன்கறியக்கூடும். பகுதிநேர இலக்கியக் குடிமகன்களுக்கு மரபுகள் குறித்து தெரிந்திருந்தால்தான் ஆச்சர்யம். நவீன தமிழ் இலக்கியத்தில் கவிதையிலும் புனைகதையிலும் எல்லா காலத்திலுமே இந்த மரபைத்தொடர்ந்து வந்தவர்களுண்டு. ஒரு எழுத்தாளன் தனது முன்னோடிகளிடமிருந்தும் அவர்களது எழுத்துச் செயல்பாடுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். அவர்களிடமிருந்து தனக்கான புதிய கதைவெளிகளைக் கண்டடைகிறான் என்பதால் அவர்களோடு உரையாடுவதும் இணைந்து பயணிப்பதும் முக்கியமானது. கருத்து வேறுபாடுகள் அரசியல் நிலைப்பாடுகள் என்பது வேறு ஆனால் முழுமுற்றாக முன்னோடிகளிடமிருந்து துண்டித்துக் கொண்டு ஒருவர் எதையும் கண்டடைந்துவிடுவதில்லை.


அடுத்ததாக எப்போதுமே டெப்ம்ளேட்டாக சில ஐரோப்பிய எழுத்தாளர்களையும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையும் அவர்களது சில அடிக்குறிப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து தமிழில் இதுபோன்றெல்லாம் எழுத ஒருவனுமில்லை. தமிழில் இலக்கியமே இல்லை என மட்டையடி அடிப்பது. இங்கு எழுதப்படும் எதையும் வாசிக்காமல் எதன் அடிப்படையில் இப்படியான ஒரு முடிவிற்கு வருகிறார்களெனத் தெரியவில்லை. மேலும் இந்த டெம்ப்ளேட்டுகளில் வரும் மேற்கத்திய எழுத்தாளர்களும் ஐம்பது வருடங்களுக்கு முந்தையவர்கள். இன்றைய சர்வதேச இலக்கியப் போக்கு என்ன? இவர்கள் பெருமிதங்களாகக் கருதும் பல கருத்துகள் காலவாதியாகிவிட்டதைக்கூட இவர்கள் அறிந்திருப்பதில்லை என்பதுதான் இதில் உச்சகட்ட துயரம். ஒரு மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படுகிற படைப்புகளோடு வாசிப்பும் உரையாடல்களும் இல்லாத ஒருவர் ஒட்டுமொத்தமாக ஒரு காலகட்ட இலக்கியச் செயல்பாட்டின் மீது சேற்றைவாரி இறைப்பது அறமற்ற செயல்.

முகநூல் சினிமா பதிவர்கள் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிப்பதுண்டு. வெளியான காலத்தில் ஓடாமல் போனத் திரைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து ‘தமிழ் சமூகம் கொண்டாட மறந்த அற்புதம்’ என்கிற போலியான புகழ்மொழியோடு அந்தத் திரைப்படங்களை சில காலம் எழுதுவது. இதன் நோக்கம் அந்தத் திரைப்படத்தை முக்கியத்துவப்படுத்துவதென்பது அல்ல, தம்மை முதன்மைப்படுத்திக் கொள்வது. இலக்கியப் பூமர்கள் இந்தக் காரியங்களை நாசூக்காகச் செய்வதுண்டு. முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் சுமாராக எழுதி கவனிக்கப்படாமல் மறைந்துபோன ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து இவரைப்போல் எழுத ஒருவருமில்லை என தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளும் காரியத்தைச் செய்வது. இதில் அவர்கள் அந்த எழுத்தாளனையும் வாசிக்காமல் இந்தக் காலகட்டத்தில் எழுதுகிறவனையும் வாசிக்காமல் நடுவில் தனியாகக் கம்பு சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தேவை அந்த வாரத்தில் கிடைக்கும் ஐம்பது விருப்பக்குறிகள். இந்த விருப்பக்குறிகளுக்காக இவர்கள் செய்யும் குற்றங்களை நினைத்தால் சலிப்பாக இருக்கிறது.


எல்லா காலத்திலுமே இதுபோன்ற பூமர்கள் இலக்கியத்தைச் சுற்றி இயங்கியிருக்கிறார்களென்றாலும் இந்தக் காலகட்டத்தில் சமூக ஊடகம் இவர்களுக்கு பெரும் வசதிகளைத் தந்துவிட்டிருக்கிறது. எழுதுகிறவர்களின் மீது வக்கிரங்களை கக்குவதை முழுநேர வேலையாகச் செய்யும் இவர்கள் உண்மையில் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்.? செயலூக்கமற்ற மனிதர்கள் தொடர்ந்து அவதூறுகளை உக்கிரமாக எழுதுவதன் வழியாக இலக்கியச் செயல்பாடுகளை நோக்கி வரும் இளைஞர்களிடம் ஒரு அவநம்பிக்கையை உருவாக்குவதோடு பொதுசமூகத்தின் மனநிலையில் தமிழ் எழுத்தாளர்கள் மரியாதைக்குரியவர்கள் அல்ல என்கிற கண்ணோட்டத்தையும் உருவாக்குகிறார்கள். எழுத்தாளனைக் குறித்து பொதுசமூகம் கொண்டிருக்கும் குடிகாரன், பெண்பித்தன் என்கிற மேம்போக்கான நம்பிக்கைகளை அதிகப்படுத்துவது உண்மையில் இதுபோன்ற பூமர்கள்தான்.


நவீன தமிழ் இலக்கியத்தை வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். பத்துகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மொழியில் ஒரு நவீன எழுத்தாளனின் புத்தகம் ஐநூறு பிரதிகள் விற்பனையாக பெரும் போராட்டங்களைக் காணவேண்டியிருக்கிறது. ஓரளவு பிரபலமான எழுத்தாளரென்றால் ஐயாயிரம் பிரதிகள். மொத்தமாக ஒரு லட்சம் பேர் அளவிற்கு மட்டுமே கொண்ட இந்த சிறிய பரப்பில் இயங்கும் ஒருவனைத்தான் இந்த பூமர்கள் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் எதிரானவனாகச் சித்தரிக்கிறார்கள். இந்த குறும் பரப்பில் ஒருவன் கவனம் பெறுவதுதான் இவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறதென்றால் இவர்கள் எத்தனை பலவீனமானவர்கள்? உண்மையில் கும்பல் மனோபாவம் என்பது என்ன? பெருங்கூட்டத்திலிருந்து விலகி சுயமாக ஒன்றைச் சிந்தித்து இந்தச் சமூகத்தின் மீதான விமர்சனங்களாக படைப்புகளாக வெளிப்படுத்துவதா? இல்லை. படைப்பாளர்களின் மீது வெகுசன மக்களுக்கு இருக்கும் வெறுப்புகளையும் காழ்ப்புகளையும் இலக்கியத்தின் போர்வையில் அப்படியே பிரதிபலிப்பதுதான் கும்பல் மனோபாவம். வெகுசனங்களுக்கு கலைஞர்களின் மீதும் படைப்பாளர்களின் மீதும் இருக்கும் கசப்புகளை அதிகமாக்குவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பதால்தான் இந்த பூமர்கள் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிடுகிறேன். கும்பல் மனோபாவம் குறித்தெல்லாம் தவதாயப்படுகிற இவர்களுமே ஒரு கும்பலாகச் சேர்ந்து இயங்குவதுதான் இதில் பெரும் நகைமுரண்.

413 views
bottom of page