top of page

உப்புநாய்கள் நாவலிலிருந்து ஒரு பகுதி

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 2 days ago
  • 5 min read

ree

செல்வி தவுடு மற்றும் சிலரின் உறங்கும் அறை.


”துருப்பிடித்த

இரும்புக் கோடுகளினூடே

சிதறும்

பயனற்ற

உப்புநீர்ப் பறவைகள். ”

-    தருமு சிவராம்.

 

வெயில் குடித்து எரியும் இந்தச்சாலையின் இரைச்சலில், செல்விக்குக் கடந்த காலத்தின் நினைவுகள் இப்போது எழுந்தோடுகின்றன. சற்றுமுன்பாக, இப்பெரிய  கூட்டத்திற்குள் எப்போதும்போல் எளிதில் நுழைந்து பொருளோடு வெளியேறிவிடலாமென்கிற அவளின் நம்பிக்கை பொய்யாகிவிட்டிருந்தது.  வழக்கமாய், இடதுகையை மட்டுமே பர்சுகளை எடுக்க பழக்கப்படுத்தி இருந்தவள், அதற்கு எசவில்லாததால் வலதுகையைப் பயன்படுத்தினாள்.  கொஞ்சம் பிடியிலடங்காத பெரிய பேக் அது.  அந்தவீதியின் முனையிலேயே பையோடு அந்தப்பெண் பதட்டமான முகத்துடன் நடந்து வருவதைப் பார்த்ததும் செல்விக்கு அவளிடம் எடுப்பது எளிதெனப் புரிந்துவிட்டது.  சரியான இடைவெளியில் இவளும் அவளைத் தொடர்ந்து வந்தாள்.  மொத்த வீதியிலும் நல்ல கூட்டம்.  எல்லோரிடமிருந்தும் பிய்தெறியப்பட்ட வார்த்தைகள், அவ்வளவு பேரின் தலைகளுக்கு மேலாகவும் இரைச்சலாய் மிகுந்திருந்தது.  


முட்டிமோதி வீதியின் முனைவரை வந்துவிட்ட செல்வி, சரியாக இன்னும் சில அடிகள் கடந்தால் பர்சை எடுத்துவிடலாமென்கிற நேரத்தில்தான் வாட்டமில்லாமல் மாட்டிக்கொண்டாள். துணைக்கு ஆளில்லாமல் தனியாகப் போலீஸில் மாட்டிப் பலவருடங்களிருக்கும். இந்தமுறை அடி கொஞ்சம் அதிகம்தான்.  துணி முன்னெப்போதையும்விட அதிகமாக அடிவாங்கி கசங்கிப்போனது. ஒடுங்கி உடும்பைப்போலிருக்கும் அவள் முகம், இன்னும் அதிகமாய் ஒடுங்கிப்போனது.


இதழ்களிலிருந்து கசிந்து, பாதி காய்ந்துபோன குருதியின் காட்டமான நெடி பக்கத்திலிருக்கும் போலீஸ்காரிக்கு தொந்தரவாக இருக்கப்போவதில்லை, இதைப்போல இன்னும் ஆயிரமாயிரம் பேரின் உடலிலிருந்து கசிந்த குருதியின் வாடையை நுகர்ந்து பழக்கப்பட்டுப் போனவள் போல் நிதானமாயிருந்தாள்.  யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  வழக்கமாக ஊரில் பிடிபட்டதும் போலீஸ்காரர்கள் சொல்கிற ‘ஒழச்சு திங்க வேண்டிதானடி. . ’ பழகிப்போன அறிவுரைகள் எதுவுமில்லை.  எஸ்.ஐ மட்டும் பின்னால் திரும்பி இவளைக் கவனித்து, ’மாசத்துக்கு கலெக்ஸன் இன்னா வரும்?. . . ’ கேட்டாள்.  அவள் முகத்தைப் பார்க்கையில், இதைத் தெரிந்துகொண்டு போட்டிக்குத் தொழிலுக்கு வந்துவிடுவாளென்கிற எந்த அறிகுறிகளுமில்லை.  செல்வி, பதில் சொல்ல முடியாதவள்போல் மெளனமாக அவளைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.  இன்னொருமுறை அவள் கேட்கக்கூடும் என எதிர்பார்த்தவள், கேட்காமல் விட்டதில் சந்தோசமென நினைத்துக் கொண்டாள்.


            வந்து சில மாதங்களிலேயே செல்விக்கு, இந்த நகரம் பிடித்துப் போனதற்கான ஓராயிரம் காரணங்களிருக்கின்றன.   மிகமுக்கியமாக,  ஆறு மாதத்திற்கும்மேல் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமலிருந்ததும், போதுமானளவு வருமானம் பார்க்க முடிந்ததும்தான்.  வெயில் ஒரு திமிறிய குதிரையைப்போல் நகரெங்கும் விறைப்பெடுத்துக் கிடந்தாலும் இந்தக் கசகசப்பிற்குப் பழகிப்போன பின், தொழில் மட்டுமே நினைவில் நின்றது  பிரதானமாய்.  தெரிந்ததொழிலை, தெரியாத ஊரில் செய்து பழகியபோது, புதுவிதமான சுவாரஸ்யம் இருப்பதாய் உணர்ந்தாள்.  செல்விக்குக் கன்னிராசி,  சாதகப்படி இப்போதைக்கு நேரம் நன்றாகத்தானிருக்கிறது,  பிரச்சனையில்லை.  இருந்தும் அவள் போலீஸில் மாட்டிக்கொண்டதில் தன் ராசியை சோசியக்காரன் மாற்றிக் கூறிவிட்டதாய் நினைத்துக் கொண்டாள்.   


மற்றவர்களின் பைகளுக்குள் அதிகமாக சுழன்றோடிய அவளின் கை விரல்கள் மடங்கி இப்போது கொஞ்சம் தேய்ந்தும் போயிருக்கிறது.  பர்சுகளையும்,  நகைகளையும் உருவுவதற்கானதொரு பிரத்யேகமான லாவகம், இத்தனை வருடங்களில் முழுமையாக வாய்கப்பட்டிருக்கிறதில் சந்தேகமின்றி அவளொரு தேர்ந்த  களவாணிதான்.


இன்றும்கூட அவள் மாட்டிக்கொள்ள நேர்ந்தது களவாண்டதினால் அல்ல,  பொருளைப் பறிகொடுத்தவளின் மீது கொண்ட பரிதாபத்தினால்தான்.  நெளு நெளுவென மைதா மாவின் நிறத்தில்  முட்டைக் கண்களோடு பரிதாபமாய் நின்ற அவளின் முகம் இன்னும் மிக நன்றாய் இவளுக்கு நினைவிலிருக்கிறது.  பர்ஸை எடுத்ததும் கூட்டத்திலிருந்து விலகி ஓடமுடியாமல் வேகமாகப் பின்னால் நகர்ந்து தன் பர்ஸில் பணம் தேடுகிற பாவனையில் அதனைத் துழாவினாள்.  காகிதங்கள்,  கொஞ்சம் பிளாஸ்டிக் மூக்குத்திகள்,  தோடுகள்,  பாதி வைத்திருந்த ஒரு நாப்கின்,  வெறும் செல்ஃபோன் கவர்,  இதோடு சில ரசீதுகள்,  பர்சை தவறவிட்டவளின் வாக்காளர் அடையாள அட்டையென, நிறைந்திருந்த சிறிய அறை.  கொஞ்சம் சில்லரைக் காசுகளைத் தவிர்த்து வேறு பணமென்று ஒன்றுமில்லை.  கடுப்பாகத்தானிருந்தது.  கீழே போடவும் மனமில்லை.  


ஓரமாகப் போட்டுவிடலாமென நகர்ந்தவளுக்கு முன்னால் சென்றவள் பர்ஸைக் காணோமென்று அலறிய சத்தம் கேட்க அவசரமாக அதனைத் தூக்கி தெருவோரத்தில் போட்டாள்.  தெருவில் இடைவெளியில்லாமல் கடைகள்தான்.  இவள் அப்படித் தூக்கிப் போடுவதாயிருந்தால் வேறு தெருவில் போய் போட்டிருக்க வேண்டும்.  பர்ஸ் போய் விழுந்தது கடை பெட்டியடியில்,  கடைக்காரன் அவன் பணத்தைத் திருடிவிட்டதைப்போல் கத்தி ஊரைக்கூட்ட,  கொஞ்சநேரத்தில் ஆட்கள் அவளை வளைத்து விட்டார்கள்.  தன் பர்சை பெற்றுக்கொண்ட அந்த மைதா மாவுக்காரி கடைசி வரையிலும் அதில் ரகசிய அறையில் பணமிருந்தது என்பதையும்,  ஆனால், செல்வி எதையும் திருடவில்லை என்பதையும் சொல்லாமலேயே போய்விட்டாள்.  

செல்வி தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிடவும் அந்த மைதாமாவுக்காரிக்காகத்தான் அதிகம் பரிதாபப்பட்டாள்.  இந்தமுறை போகப்போவது புது இடம்.  பார்க்கலாம், எத்தனை நாட்களென நினைத்தபடி, அவள் அடுத்த தினங்களைப்பற்றிச் சிந்திக்கத் துவங்கிவிட்டாள்.   ஆட்கள் அடித்திருந்ததில் முகத்தில் கொஞ்சம் வீக்கம்.   


            செல்வியும், அவள் மதினி தவுடும் தங்களின் கணவர்களோடு இந்த மாநகருக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தன.  திருச்சியும், மதுரையும் அதற்கு முன்பு வரையிலும் இவர்களை சகித்துக் கொண்டிருந்தது.  ஒரு இரவில் இரண்டு சிறுநகரங்களுமே சலித்துப்போக நால்வரும் கிளம்பி இம்மாநகருக்கு பயணப்பட்டார்கள்.  சாமர்த்யம் கொண்டவர்களுக்கு எல்லா ஊரும் பிழைக்க வாய்பிருக்க ஊர்கள்தான்,  இவர்களுக்கு பெருஞ்சாமர்த்யம் இருந்தாலும்,  தடயமில்லாது களவாண்டு இருளுக்கு மட்டுமே பரிச்சயமான இவர்களின் பாதடிகளை ஊர்க்காரர்களும் பின்தொடர்ந்து  பரிச்சயமாக்கிக் கொண்டிருந்தார்கள்.  வீடுகளில்  முடியாதென்றானதும், எப்போதாவது போகிற கடைவீதித் திருட்டினை வழக்கமாக்கிக் கொள்ளப் பழகினர்.   இறைச்சலான கடைவீதிகளிலும்,  பேருந்துகளிலும் செல்வியின் கைகள் சாமர்த்யமாக ஆட்களின் உடைகளுக்குள் போய் வரப்பழகியது.  தவுடு மட்டும்தான் அவ்வளவு எளிதில் பழக்கப்படாமலிருந்தாள்.  கூட்டத்திற்குள் பதட்டமான அவளின் விழிகளும், முகமுமே திருடியென பாதி காட்டிக்கொடுத்துவிடும்.  


சமயங்களில் வெற்றிகரமாக முடியும் அவள் களவில், அதிகபட்சமாய் கிடைப்பதென்னவோ ஐம்பதும் நூறுமாகத்தானிருக்கும்.  காற்றில் தடமின்றி நகர்ந்துசெல்லும் விரல்கள் வாய்கப்பெறும்போதுதான் வேலை எளிமையாய் முடியுமெனப் புரிந்து கொண்டிருந்த செல்வி, விரல்களைத் தடமின்றி அலையவிட பழகிக் கொண்டாள்.  தவுடு, தன் விரல்களை வளைக்க முடியாததொரு குச்சியாய் சுழற்றிக்கொண்டிருக்க அது சுருங்கி மறைந்துபோகின்ற நாள் வெகுதொலைவில் இல்லையென செல்விதான் நம்பிக்கையாய் பேசியபடியிருந்தாள்.  


             சித்திரை மாதத்தின் வெக்கைமிக்க இரவொன்றில் மாட்டுத்தாவணியிலிருந்து திருப்பத்தூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருவரும் பாதி உறக்கத்திலிருக்கையில் பின்னிருக்கையிலிருந்து கருத்து,  தடித்த ஒரு கை விரல்கள் தன் மார்பின் ஓரங்களில் குறுகுறுப்புடன் ஓடுவதை உணர்ந்து விழித்த செல்வி, ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்தாள்.  அவன் அசந்து உறங்குகிறவனாய் கண்களை மூடிக்கொண்டு கிடந்தான்.  மீண்டும் ஜன்னலோரமாய் தலையை சாய்துப் படுத்துக்கொண்டவளிடமிருந்து எதிர்வினைகள் எதுவுமில்லாமல் போகவும்,  தனக்குக் கிடைத்துவிட்ட சம்மதமென நினைத்துக் கொண்டு,  இந்தமுறை தன் கை முழுமையாக நுழைத்து அவளை தடவத் துவங்கினான்.  


அவன் விரல்கள் இடையில் நுழைந்து மேலேறும் வரை பொறுத்தவள் அதற்கும்மேல் முடியாமல்,  பாதி வாயைத்திறந்து  உறங்கிக்கொண்டிருந்த தவுடை எழுப்பினாள். கண்களைத் துடைத்தபடியே காதுக்குள் அவள் சொன்னதைக் கேட்டவள்,  திரும்பி பின்னாலிருந்தவனைப் பார்த்தாள்.  அவன் இப்போதும்  நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.  தவுடு எழுந்துபோய் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்,  மிகத் தற்செயலாய் கண்விழித்து இவளைப் பார்ப்பவனைப்போல் திரும்பியவன், உடலைச்சுருக்கி அவள் அமர்கிற அளவிற்கு ஜன்னலோரமாக நகர்ந்து உட்கார்ந்தான்.  தவுடு, அவன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.  


அவன் மறுபடியும் கண்களை மூடியபோது இவளின் கையிலிருந்து கம்பளிப் புழுக்கள் ஊர்ந்து அவன் பேண்டின் மேல் ஊர்ந்து போனது.  கம்பளிப் புழுக்கள் ஊர்வதில் மெல்லிய குறுகுறுப்பு கொண்டவனாய் தன் கால்களை இன்னும் விரித்து புழுக்கள் நன்றாக ஊர்ந்து பரவிச்செல்ல வழிவிட்டான்.  புழுக்கள் ஊர்ந்து மெதுவாக வேகம் குறைந்து ஒரு ஆணியின் தீவிரத்தோடு குத்துவதை உணர்ந்தவன் வலியைக் காட்டிக்கொள்ளாமல் லேசாக கண்களைத் திறந்தான்.  ஆணியின் கூர்மை இன்னும் அதிகமாக இப்போது சில துளிக் குருதி அவன் உள்ளாடைகளுக்குள் கசிந்து விட்ட வலியிருந்தது.  அருகிலிருந்தவளின் கைகளை உதறி எறிய முயன்றான்.  அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பவளைப் போல் முன்னாலிருக்கும் இருக்கைகளைப் பார்த்தபடி தவுடு அமர்ந்திருந்தாள்.  வலி அதிகரித்து இப்போது உள்ளாடை நன்றாக நனைகிற அளவிற்கு குருதி வழிந்திருந்தது.  வலுவற்ற தன் கைகள் அவளின் விரல்களை பிரித்தெடுக்க முடியாதுபோன தோல்வியும் வதைக்க பல்லைக் கடித்துக்கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.  சத்தம் எழும்பாதளவிற்கு. . .  


”எக்கா உட்றுக்கா. . . வலிக்கிதுக்கா. . . . இனிமே தொடமாட்டேன் விட்றுக்கா. . . ”

குரல் கம்மிப்போனவனின் முகத்தினை அப்போதும் கவனிக்காமலேயே எழுந்து, மறுபடியும் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.  இன்னொருமுறை அவள் வாயைத்திறந்து ஆழ்ந்த உறக்கத்திற்குப்போன சில நிமிடங்களிலேயே திருப்பத்தூர் வந்துவிட்டிருந்தது.  பின் சீட்டிலிருந்தவன் இவர்களின் பக்கம் திரும்பாமலேயே பஸ் ஸ்டாண்டிலிருந்த டீக்கடையொன்றில் ஒதுங்கி ஒரு சிகரெட் வாங்கினான்.  உடலில் இன்னும் நடுக்கம் இருந்தது அவனுக்கு.  சிகரெட்புகை உள்ளே போய்வர, கொஞ்சம் ஆசுவாசங்கொண்டவனாய் இவர்களைத் தெளிவாகப் பார்த்தான்.  செல்வி அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இன்னும் புருஷன் வந்து சேராததைப் பற்றி தவுடிடம் பேசிக்கொண்டிருந்தாள்.


            பாதிக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டுவிட,  பேருந்துகள் வருவதும் அனேகமாய் குறைந்துபோயிருந்தது.  பகல்நேரத்தின் மிச்சவெக்கை உடலை வதக்கி எடுத்துக்கொண்டிருக்க பிசுபிசுப்பான ஈரத்தில் இவர்கள் இரண்டு பேருக்கும் கழுத்து வியர்த்திருந்தது.  பின்னாலிருந்து சொத்தென பொடனியில் அறை விழுந்ததும் ஒரு நொடி செல்வி சுருண்டு விழுந்தாள்.  கண்கள் மங்கிப்போய் கிறக்கம் தட்டி நிற்க, எதிரில் தவுடும் அடி வாங்கும் சத்தம் கேட்டது.  சில நொடிகளுக்குப் பின்பாகத்தான் போலீஸ்காரர்கள் ரெண்டுபேர் நின்றிருப்பது தெரியவும் வேகமாக ஓடிப்போய்

“ஸார் விடுங்க ஸார். . . எதுக்கு அடிக்கிறீங்க. . . விடுங்க ஸார். . . ”


தவுடை கையைப்பிடித்து முறுக்கியிருந்த ஒரு போலீஸ்காரன் “ஏண்டி நீங்க ரெண்டு பேரும் எனக்கு மாமன் மகளுக பாரு,  ஒங்ககூட அடிச்சு விளையாட?. . . களவாணிச் சிறுக்கிகளா. . . எங்கடி உங்க ரெண்டுபேரு புருஷங்களும். . . . ”

இரண்டுபேருக்குமே ஒரு மாதிரியாக விசயம் புரிந்தது.  பயல்கள் எங்கேயோ கை வைத்திருக்கவேண்டும். அதற்காக இப்போது ஒத்துக்கொண்டால் மொத்தமாக தூக்கிவிடுவார்கள்.  செல்வி அசரவில்லை.  


“பொட்டலம் வித்த கேசுல போனமாசம் பிடிச்சுக் கொண்டுபோயி மதுரைல வெச்சதுதேன் ஸார். . இன்னும் சாமீன் எடுக்கக்கூட ஆளு இல்ல. . . ”


தவுடு நடப்பது எதையும் புரிந்துகொள்ள முடியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்.  அவளின் கையை முறுக்கியிருந்தவன் இன்னும் விட்டிருக்கவில்லை.  கை வலி உயிர்போனது ஒருபக்கமென்றால்,  கடையில் நின்றிருந்த பின் சீட்காரன் துணி விலகியிருக்கும் இவள் உடலைப் பார்ப்பதும் இவள் அடிவாங்குவதைப் பார்த்து சிரிப்பதுமாயிருந்தான்.  இப்போதைக்கு விட்டால் ஓடிப்போய் அவன் கொட்டையை அத்துவிட்டுத்தான் அடுத்த வேலை.   அவன் மூஞ்சியைப் பார்க்க ஆத்திரம் கொப்பளித்தது.   போலீஸ்காரன் இவள் மூஞ்சியில் ஒரு குத்துவிட “ஆத்தே வலிக்கிது ஸார். . . அடிக்காதிய. . ” கத்தி விலகினாள்.  முறுக்கியிருந்த கையில் வலி உயிர் போனது.

போலீஸ்காரர்கள் இரண்டுபேரின் தலைமுடியையும் கொத்தாகப்பிடித்து  ”யார் களவாண்டதுன்னு பெறகு பேசிக்குவோம். . . ரெண்டுபேரும் வண்டில ஏறுங்க. . . ”

பேச்சை விட்டுவிட்டுத் தரதரவென இழுத்துக்கொண்டு போனார்கள்.


விடுங்க ஸார் விடுங்க ஸார் என இவர்கள் இருவரும் கத்திய சத்தம், பஸ்ஸ்டாண்ட் முழுக்க எதிரொலித்தாலும் யாரும் என்ன ஏதென்று கேட்டுக்கொள்ளவில்லை.  ரெண்டு போலீஸ்காரர்களில் ஒருவன், செல்வியை முதுகில் அடிக்கிற சாக்கில் அவளது இடது மார்பை பிடித்து ஒரு அமுக்கு அமுக்கினான்.  முதலில் தற்செயலென விட்டுவிட்டவள் இரண்டாவது, மூன்றாவது முறையும் அதேபோல் கைபடவும்,  வேகமாகத் திரும்புகிற சாக்கில், அவன் வயிற்றில் ஒரு  குத்துவிட்டாள்.  பல்லைக் கடித்தபடி போலீஸ்காரன் அவள் முதுகில் குத்தினான்.  இரண்டுபேரையும் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பின வண்டி, சில நொடிகள் அங்கு நடந்த தடயங்களெதுவும் இல்லாத அளவிற்குப் புழுதியை அள்ளிவீசிச் சென்றது.  ஆள் நடமாட்டம் குறைந்த பேருந்துநிலையத்தில் பதட்டமேயில்லாமல் இன்னும் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.  இவர்கள் அடிவாங்குவதை முழுக்க சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்த கடைசி ஸீட்காரன், கடைசி இழுப்போடு அந்த சிகரெட்டைத் தூக்கிப்போட்டு சிறுநீர் கழிக்க ஒதுங்கினான்.  குறி நசுங்கிய வலி இன்னும் குறையாமல் சில நிமிடங்கள் சிரமத்துடன் முக்கி நின்றபின் சிறுநீர் கழித்தவனின் கால்கள் மூத்திரம் படிந்து கிடந்தது.  

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page