top of page

கோவை சம்பவம் : யார் மீது குற்றம் சுமத்துவது?

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 11 minutes ago
  • 3 min read
ree

கோவை விமான நிலையத்திற்கு அருகே தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மீது, மது வெறியிலிருந்த மூன்று ஆண்கள் பாலியல் வன்முறையை நிகழ்த்தியுள்ளனர்.   இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் நண்பரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏராளமான கருத்து விவாதங்கள் வழமைபோல் பொதுவெளியில் கிளம்பியுள்ளன.


அந்த நேரத்தில் அந்தப் பெண் ஏன் தனது ஆண் நண்பருடன் அங்கே செல்ல வேண்டும்.? குடி போதையில் நிதானமிழந்து??? அவர்கள் மூன்று பேரும் அந்தப் பெண்ணின் மீது அத்துமீறல் செய்துவிட்டார்கள். இதனால் அவர்களது வாழ்வே வீணாகிப் போனது.. ( குற்றம் செய்தவர்களின் மீது கரிசனம் கொள்ளும் அளவிற்கு பக்குவட்ட ஒரு சமூகத்தில் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது.) இப்படி ஏராளமான இருந்திருக்கலாம், இருந்திருக்கக் கூடாதென்கிற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி வேறு சில விஷயங்களை கவனிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.


2022 ம் வருடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 6 பேர் மதுப்பழக்கத்தின் தீவிரத்தால் மரணமடைகிறார்கள் என்கிற செய்தி கிடைக்கிறது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 360 பேர். இதில் பெரும் பகுதியினர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்திய சமூகத்தின் பெரும் நோயாக வளர்ந்திருப்பது குடிதான். குடியை அன்றாட வழக்கமாக மாற்றிக் கொண்டு விட்ட ஒரு தலைமுறையினரைப் பார்க்க அச்சமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் பண்டிகை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பது மட்டுமே நமக்கும்  குடிக்குமான உறவாக இருந்தது. நாளடைவில் வாரத்திற்கு ஒரு முறை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என அதிகரித்து இன்று தினமும் குடிப்பதை வழக்கமாக்கியிருக்கிறார்கள்.


இந்த சம்பவத்திலும் முதன்மையான காரணமாக நான் பார்ப்பது குற்றம் செய்த அந்த மூன்று பேரின் குடிப்பழக்கம் தான். தொடர்ச்சியான குடிப்பழக்கம் மனிதர்களுக்குள் தாழ்வுணர்ச்சியையும் உள்ளார்ந்த வெறுப்பையும் உருவாக்கி விடுகிறது. இந்த வெறுப்பு தான் குடி நேரங்களில் சக மனிதர்களின் மீதான வன்முறைகளுக்குத் துவக்கமாக இருக்கிறது.  சாதாரணமாக இருக்கும் நேரங்களில் இல்லாத துணிச்சல் மதுவருந்தியபின் வரக்காரணம் தன்னை மற்றவர் பொருட்படுத்த வேண்டும் என்கிற அகங்காரத்தினால் தான் வருகிறது. குடி  மனிதனுக்குள் அபரிமிதமான அகங்காரத்தை விதைக்கிறது.  


மதுப்பழக்கத்தையும் போதைப் பழக்கத்தையும்   ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்து நார்மலைஸ் செய்து வருவதின் விளைவாகவே குற்றங்கள் அதிகரித்திருப்பதை பார்க்க வேண்டும்.  குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் படிக்கிற ஏராளமான இளைஞர்கள்  போதை பழக்கத்தை மேற்கொள்வது  நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறியல்ல. வளரும் தலைமுறையின்  மனநலனில் எவரும்  அக்கறை எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.  நன்மைகளையும் தீமைகளையும் அவர்களுக்குப் புரிய வைத்து வாழ்க்கை குறித்த அடிப்படை அறங்களை போதிக்கும் பொறுப்பை பெற்றோர்களோ கல்வி நிலையங்களோ எடுத்துக் கொள்ளவேண்டும்.


கல்விமுறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இளைஞர்களைப் பண்படுத்தாமல் போகுமானால் அந்தக் கல்வியினால் என்ன பயன்? கிராமம் நகரம் என்ற வேறுபாடில்லாமல் ஏராளமான போதைப் பொருட்கள் எப்படி பரவலாக கிடைக்கின்றன. ஓரளவு பொருளாதார சுதந்திரம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமில்லாமல் அடிப்படை வசதிகளுக்கே போராடுகிற குடும்பங்களில் இருந்து வருகிற குழதைகளைக் கூட இந்தப் போதைப் பழக்கம் ஏன் வேகமாகத் தொற்றிக் கொள்கிறது? மது அருந்துவது சாகசம் என்கிற மாயையை இவர்களுக்குள் எவர் விதைக்கிறார்கள்.


இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது எழும் விமர்சனங்கள் நமது சமூக நோயின் இன்னொரு பகுதி. யார் எதை செய்யலாம்? எங்கு செல்லலாம்? யாரோடு செல்லலாம்? எத்தனை மணிக்குச் செல்லலாம்? என்பதையெல்லாம் தீர்மானிக்கிற உரிமையை நமக்கு யார் கொடுத்தது.  இது ஒரு வகையில் அந்தப் பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் கேரக்டர் அசாசினேசன். சரி பகுதி தவறு அந்தப் பெண்ணுக்கும் இருக்கிறது என சுட்டுவதன் வழியாக எவரைக் கேள்வி கேட்க வேண்டுமோ அவரைக் கேள்வி கேட்காமல் கடந்து செல்வது. பாலியல் வன்முறை சம்பவங்களில் ஆண்களிடம் வெளிப்படும் மட்டற்ற வன்முறை அவர்களது பால் அடையாளத்தின் கட்டற்ற அகங்காரம். பொது சமூகம் பெண் இப்ப்டித்தான் இருக்க வேண்டும் என நம்புகிறதின் நீட்சிதான் இந்த அதிகார மனநிலை. அதனாலேயே இப்படிக் கேள்வி கேட்கிறவர்களும் பாலியல் குற்றங்களைச் செய்கிறவர்களின் மீது கரிசனம் கொள்கிறவர்களும் ஆபத்தானவர்களாகிறார்கள்.


எனக்கும் எனது மனைவிக்கும் பதிவுத் திருமணம் முடிந்த சில நாட்களுக்குப்பின் தஞ்சையில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த கவிஞர் ஒருவர் பிற்பாடு என்னைக் குறித்து பொதுவெளியில் எழுதும் போது லஷ்மி சரவணகுமார் அன்று பெண்ணை தன்னோடு கூட்டி வந்திருந்தார் என குறிப்பிட்டிருந்தார். அவர் எழுதியதன் தொனி மட்டுமல்ல உள்நோக்கமும் மிக மோசமானது. பிற்பாடு அவர் ஆர் எஸ் எஸின் உதவியோடு நடந்த வணக்கம் காசி நிகழ்வில் கலந்துகொண்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதேபோல் இன்னொரு இலக்கியக் கூட்டம். சென்னையில் ஒரு பிரபல எழுத்தாளர் நடத்தியது. அங்கு நான் எனது மனைவியின் தோளில் கை போட்டபடி அமர்ந்திருந்தேன். கூட்டத்திலிருந்த சில தமிழ் ஆர்வலர்கள் உணவு இடைவேளையின் போது இதற்காக எங்களோடு கடுமையாக வாதம் செய்தார்கள்.  இத்தனைக்கும் அவர்கள் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த இளைஞர்கள். தங்களை பண்பட்டவர்களாக அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ளும் இலக்கியவாதிகளிடமும் பெண்கள் குறித்தும் ஆண் பெண் உறவு குறித்தும் இருக்கும் நம்பிக்கைகள் கவலைக்குரியவை.


எல்லோருடனும் சுமூகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஒரு பண்பட்ட சமூகத்தின் கடமை. நமக்கு முன் பின் தெரியாதவர்களிடம் நாம் எத்தனை கனிவோடும் கரிசனத்தோடும் நடந்துகொள்கிறோம் என்பது தான் நமது நாகரீகத்தின் அடையாளம். இதுபோன்ற அடிப்படை அறங்களைக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக நாம் மாறல் போலிஸிங் செய்வதற்கும் போதைப் பொருட்களை நார்மலைஸ் செய்வதற்கும் அடுத்த தலைமுறையை பழக்கினால் இந்தக் குற்றங்கள் குறையப் போவதில்லை.

தவறு செய்கிற பலருக்கும் தண்டனைகளைக் குறித்த அச்சங்கள் இல்லாமல் போயிருப்பது வியப்பாயிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பள்ளிக்கூட சிறுவன் ஆசிரியரை அடிக்கப் பாய்ந்ததோடு வீரவசனம் பேசிய காணொளிகள் தீவிரமாக பரவியது. அதே இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு  முன்னால் ஒரு ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கிறான். குற்றச் செயல்களை இவர்களுக்கு எவரும் கற்றுக் கொடுக்கவில்லை, அதேநேரம் நல்ல அறத்தையும் போதிக்கவில்லை.


குடி மட்டுமில்லாமல் எல்லாவகையான போதைப் பழக்கங்களுக்கும் எதிராக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பள்ளி கல்லூரி மாணவர்களும் இருவது வயதிற்குக் குறைவான இளைஞர்களும் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் தீவிரமாகக் கண்கானிக்கப்பட வேண்டும். இளம் வயதில் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறவர்களின் மீது  பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தண்டனைகள் குறித்த அச்சங்கள் எழாத வரை தனிமனித கட்டுப்பாடோ ஒழுக்கமோ வரப்போவதில்லை. அரசு மது விற்பனையை குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதோடு போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் தீவிரமாகக் கண்கானித்துக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அடுத்த சில வருடங்களில் நாம் எதிர்கொள்ளப் போகும் பெரும் சவால்கள் அத்தனையும் போதைப் பொருட்களைச் சுற்றித்தான் இருக்கப் போகிறது

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page