top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கல்வி – சில விவாதங்கள்




வணக்கம் லஷ்மி சரவணகுமார்.


ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கல்வி மனிதனுக்கு முக்கியமா இல்லையா என்பதை முன்னிட்டு காரசாரமான விவாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து முகநூல் உட்பட சமூக வலைதளங்களிலும் பல்வேறான கருத்துச் சண்டைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ( நீங்களும் ஒரு பதிவு எழுதியிருந்ததைப் பார்த்தேன்.) உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு கல்வி அத்தனை அவசியமா?

நாகஜோதி

ஈரோடு


வணக்கம் ஜோதி.


கல்வி ஒரு தனிமனிதனுக்கு முக்கியமா இல்லையா என்கிற விவாதத்திற்கு வருவதற்கு முன்பாக வேறுசில விஷயங்களைக் குறித்து எழுதலாமெனத் தோன்றுகிறது. சில பத்து வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், சரியாக ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டம் வெல்வதற்கு முன்னால் இந்தியாவில் காஸ்மடிக் வியாபாரங்கள் பெரியளவில் நடந்திருக்கவில்லை. அன்றைக்கு ஐஸ்வர்யா ராய் பட்டம் வென்றதற்குப் பின்னாலிருந்தது நூறு கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தை என்கிற வியாபார கணக்குகள் மட்டுமே. அதன் பிறகு அந்த காஸ்மடிக் பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவிலிருந்த எல்லா ஊடகங்களும் போட்டி போட்டு விளம்பரங்களை ஒளிபரப்பின. உலக அளவில் இந்தியா மிக முக்கியமான நாடு. இன்றைக்கு நூற்றம்பைது கோடி மக்கள் தொகையில் சரிபாதி இளைஞர்கள் என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.


முதலில் அவர்கள் அழகு குறித்த விளம்பரங்களையும் பிறகு ஆரோக்கியம் குறித்து விளம்பரங்களையும் எடுத்து வந்தார்கள். அதன் வழியாக நமது உணவு முறைகளில் நமது வாழ்க்கை முறைகளில் நாம் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டோம். நமது பெருவாரியான ஊதியத்தை அதற்கு செலவழித்தோம். நமது உணவுகளை ஆரோக்கியமற்றவைகள் எனச் சொல்லியபடியே ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை பரவலாக்கினார்கள். இன்றைக்கும் அந்த விளம்பரங்கள் நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கார்ப்ரேட்டுகள் ஒரு வியாபாரத்தை ஊடகங்களில் விளம்பரங்களின் வழியாகவும் வேறுபல நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் வழியாகவுமே மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். இன்றைக்கு சிறு சிறு நகரங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்குக் கூட ஏதாவதொரு நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. ஏன் ஸ்பான்சர் செய்கிறார்கள்.? அவர்களது பொருட்கள் விற்பனையாக வேண்டும்.


அந்த வகையில் சமீபத்திய வருடங்களில் பரவலாகியிருக்கும் பிரச்சாரம், கல்வி அத்தனை முக்கியமில்லை. சரி படிக்காமல் முன்னுக்கு வந்துவிடலாம். நூற்றம்பைது கோடியில் சரிபாதி எழுபத்தைந்து கோடி மக்கள் இளைஞர்கள் அவர்கள் பெருமளவில் கல்வியறிவில்லாமல் போவதால் பிற நாடுகளுக்கு என்ன லாபம்? படிக்கிற எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை என்கிற வாதத்தை தொடர்ந்து வைக்கிறார்கள். அதில் ஒரு பகுதி உண்மை இருந்தாலும் நிரந்தரமாக அப்படி இருக்கப் போவதில்லை. ஏராளமான வளர்ந்த நாடுகளில் சாலைகள் அமைப்பதற்கும் கடைநிலை வேலைகளை செய்வதற்கும் குறைவான ஊதியத்தில் அவர்களுக்கு ஆட்கள் தேவை. தங்களது சொந்த குடிமக்கள் அந்த வேலைகளை செய்யும்பட்சத்தில் அதிகமான கூலி கொடுக்க வேண்டும், அல்லது நிறைய பாதுகாப்பு காரணங்கள் இருக்கும். ஆனால் கீழை நாடுகளான இந்தியா , இலங்கை பிலிப்பைன்ஸ் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து வருகிறவர்கள் அந்த வேலைகளை தயங்காமல் செய்வார்கள். கூடுதலான நேரம் வேலையும் வாங்க முடியும் என்கிற அணுகூலம் உண்டு.


இன்னொரு பக்கம் மேற்கு நாடுகளில் பொறியியல் மருத்துவம் உட்பட மேற்படிப்புகள் எல்லாமே பெரும் செலவு வைக்கக் கூடியவை. அதனாலேயே அந்த நாட்டின் குடிமக்கள் பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிட்டு கிடைத்த வேலைகளுக்குச் செல்கிறார்கள். நமக்கு அப்படியில்லை, எப்பாடுபட்டாவது பட்டப்படிப்பை முடித்துவிடத் துடிக்கிறவர்கள் அதிகம். குறிப்பாக தென்னிந்தியர்கள். கல்வியால் எந்தப் பயனுமில்லை என்கிற பிரச்சாரத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதன் வழியாக இந்த முதல்முறை பட்டதாரிகளை எப்போதும் அச்சத்திலேயே வைத்துக் கொள்ள முடிகிறது. எந்தக் கேள்விகளும் கேட்காத குமாஸ்தாக்களாக இவர்கள் இருக்க வேண்டுமானால் உன் கல்வியால் உனக்கு யாதொரு பயனுமில்லை என்கிற அச்சத்தை அவனுக்குள் உருவாக்க வேண்டும். அதைத்தான் இன்றைக்கு சில ஊடகங்களும் சில அரசியல் கட்சிகளுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.


கல்வி முறையில் சிக்கல் இருக்கிறது மாற்றம் வேண்டும் என கோரிக்கை வைப்பது வேறு, கல்வியே அநாவசியம் என்கிற பிரச்சாரத்தை முன்னெடுப்பது வேறு. கல்வியமைப்பில் மாற்றத்தை உருவாக்கக் கூட அடிப்படையாக கல்வியே தேவையாக இருக்கிறது. பன்னையார்களும் மேல்தட்டு வர்க்கத்தினரும் மட்டுமே உடமையாகக் கொண்டிருந்த கல்வி சமூக நீதியின் காரணமாக கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகத்தான் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. யோசித்துப் பாருங்கள் எழுபது வருடங்களுக்கு முன்பான பன்னை முறையை. ஊருக்கு ஒரு முதலாளி அவனை அண்டி அவன் நிலத்தில் கூலிகளாக மற்ற உழைக்கும் மக்கள்., கல்வி கிடைத்தற்கரியதாக இருந்த நிலையில் என்ன சமூக மாற்றம் நிகழ்ந்தது. எல்லோருக்கும் பரவலான பின்னால் தான் உரிமைகளைக் கேட்கவும், மனிதன் தன்னைத் தானே மதிக்கவுமான நிலை உருவானது. ’நான் இழுத்து வந்த தேரை முன்னோக்கி இழுத்துச் செல்லாவிட்டாலும் பரவாயில்லை, பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடாதீர்க.’ என அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல் கல்வியின் மூலமாய் உருவாகியிருக்கும் இந்த சமூக மாற்றத்தை நீங்கள் முன்னோக்கி நகர்த்தா விட்டாலும் பரவாயில்லை, கல்வி அனாவ்சியம் என்கிற நச்சுக் கருத்தைப் பரப்பி சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடாதீர்கள்.

215 views
bottom of page