சுவாரஸ்யமாக எழுதினால் நல்ல இலக்கியம் இல்லையா?
- லக்ஷ்மி சரவணகுமார்

- 14 hours ago
- 5 min read

“இலக்கியம்” என்ற சொல்லைச் சுற்றி உருவாகியிருக்கும் மிகப் பழைய நம்பிக்கையில் ஒன்று, சுவாரஸ்யமாக எழுதப்படுவது நல்ல எழுத்து இல்லை என்பதுதான். ஒரு படைப்பு வாசகனை வேகமாக வாசிக்க வைத்தாலோ, அடுத்த பக்கத்தைத் திருப்ப வேண்டும் என ஆர்வப்படுத்தினாலோ அது வெகுஜன எழுத்தின் பண்பு. ஆனால் ஒரு படைப்பை வாசிக்கும்போது வாசகன் சிரமப்படுகிறான், உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அது தீவிர இலக்கியம். இவ்வாறான ஒரு மனப்பிரிவு நம் சூழலில் நீண்டகாலமாக இருக்கிறது.
இந்த மனநிலைக்குப் பின்னால் வெறும் அழகியல் மட்டும் இல்லை. ஒரு வகையான பண்பாட்டு அதிகாரமும் இருக்கிறது. எதை “உயர்ந்த கலை” என்று அழைக்க வேண்டும், எதை “வெகுஜன படைப்பு என்று தள்ளிவைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம். யார் தீவிரமான வாசகர், யார் சாதாரண வாசகர் என்பதையும் தீர்மானிக்கும் அதிகாரம். வாசகனை மகிழ்விப்பது கீழான செயல்; வாசகனைச் சிரமப்படுத்துவது உயர்ந்த செயல் என்ற விசித்திரமான ஒழுக்கம் அதன் பின்னால் இயங்குகிறது. ( இன்றைக்கு சமூக ஊடகங்களில் குட்டி போட்டு பெருகியிருக்கும் திடீர் குபீர் ரிடீங் க்ரூப்புகளின் வழியாக சில எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதை இதற்குள் நாம் சேர்க்க வேண்டியதில்லை.)
உலகம் முழுவதிலும் எழுதப்படுகிற வெவ்வேறு இலக்கிய வகைமைகளை வாசிக்கிறபோது இந்தப் பிரிவுகள் இயற்கையானது அல்ல என்பது தெரியும். மனிதன் கதை சொல்லத் தொடங்கிய காலத்திலிருந்தே கதையின் அடிப்படையான இயக்கம் சுவாரஸ்யம்தான். “அடுத்து என்ன நடக்கும்?” என்ற கேள்வியே கதையின் முதல் உயிர். வேட்டைக்காரன் திரும்பி வருவானா? அரசன் உயிர் பிழைப்பானா? துரோகி கண்டுபிடிக்கப்படுவானா? ஒரு மனிதன் இறந்தானா அல்லது உயிரோடு இருக்கிறானா? ஒரு நகரம் காப்பாற்றப்படுமா? என மனிதன் கதைகளைக் கேட்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இவைதான் அவனை அடுத்த கணத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன. அப்படியிருக்க, சுவாரஸ்யம் எப்போது இலக்கியத்திற்கு எதிரானதாக மாறியது?
நவீன தமிழ் இலக்கியம் உருவான காலத்தைப் பார்த்தால் இந்தக் கேள்வி இன்னும் சிக்கலாகிறது. அச்சு வளர்ச்சி, இதழ்களின் பெருக்கம், தொடர்கதைகள், வாசகர் வட்டத்தின் விரிவு ஆகியவை எழுத்தின் இயல்பை மாற்றின. ஒரு எழுத்தாளர் தனக்காக மட்டும் எழுத முடியாத சூழல் உருவானது. ஆயிரக்கணக்கானவர்கள் வாசிக்கத் தொடங்கினர்.. வாசகர்கள் கதாபாத்திரங்களுடன் வாழத் தொடங்கினர். அடுத்த இதழுக்காகக் காத்திருந்தனர். இந்த இடத்தில்தான் “வாசகனை ஈர்ப்பது” என்ற செயல் சந்தேகத்திற்குரியதாக மாறத் தொடங்கியது.
வாசகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அது வணிகம். குறைவானவர்கள் மட்டுமே வாசிக்கிறார்கள் என்றால் அது நல்ல இலக்கியம். இந்த சமன்பாடு இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் இடையில் போலியான உயர்வு–தாழ்வு உறவை உருவாக்கியது.
ஒரு படைப்பை இலக்கியமல்ல என்று நிராகரிப்பதற்கு “வாசகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்” என்பது போதுமான காரணமா? அப்படி என்றால் மக்கள் தலைமுறைகளாக வாசித்து நினைவில் வைத்திருக்கும் ஒரு படைப்பின் பண்பாட்டு ஆற்றலை எவ்வாறு மதிப்பிடுவது? இங்கே நாம் இலக்கியத் தரத்தையும் வாசகப் பரவலையும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகக் கருதத் தொடங்கிவிடுகிறோம். உண்மையில் அவை வெவ்வேறு விஷயங்கள்.
ஒரு படைப்பு அதிகமான வாசகர்களைச் சென்றடைவதால் அது தானாகவே சிறந்த இலக்கியமாகிவிடாது. அதேபோல் குறைவான வாசகர்களை மட்டுமே சென்றடைவதால் மட்டுமே சிறந்த இலக்கியமாகவும் ஆகிவிடாது. வாசகர்களின் எண்ணிக்கை இலக்கியத் தரத்தின் அளவுகோல் அல்ல. ஆனால் வாசகர்களை ஈர்க்கும் திறனும் இலக்கியத் தரத்திற்கு எதிரான குற்றமல்ல.மட்டுமே ( கடந்த வருடத்தில் சிறந்த நாவல் என்கிற அடைமொழியோடு வெளியான ஒரு பிரதியை வாசிக்க முயற்சி செய்த என் நண்பர் ஐம்பது பக்கங்களைத் தாண்டமுடியாமல் திருப்பிக் கொடுத்தார். நான் நூறு பக்கங்கள் வரை வாசித்தேன். பிரச்சனை அந்த நாவலின் மொழி. தமிழ் அகராதியில் இருக்கும் அவ்வளவு வார்த்தைகளையும் பயன்படுத்திவிட வேண்டுமென்கிற ஒரு தீவிரம் அந்த நாவலில் இருந்தது. ஒரு உதாரணத்திற்கு இப்படி வைத்துக் கொள்ளுங்கள், வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றான் என்கிற வாக்கியத்தை அப்படியே எழுதுவதில் என்ன கோளாறு, -நடந்து சென்றான் அவன் பல வீதிகள் கடந்து பள்ளியை நோக்கி கால்கள் வலிக்க வீட்டிலிருந்து - -இப்படி எழுதினால் வாசிக்கும் நமக்கு என்ன தோன்றும்?
புதுமைப்பித்தனை நவீன தமிழ் இலக்கியத்தின் மையத்தில் வைத்துப் பார்க்கும்போது இந்த விவாதம் இன்னும் சுவாரஸ்யமாகிறது. அவருடைய கதைகளை வாசிக்கையில் நாம் ஒரு “கடினமான இலக்கிய அனுபவத்திற்குள்” நுழைகிறோம் என்கிற உணர்வு ஏற்படுவதில்லை. கதைகள் வேகமாக நகர்கின்றன, சமூக முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. நையாண்டி இருக்கிறது. பாலியல் இருக்கிறது. ஆசை இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் இருக்கின்றன. கதாபாத்திரங்களின் வாழ்க்கை நம்மை அடுத்த நிகழ்வை நோக்கி நகர்த்துகிறது. அவருடைய மொழி வாசகனைத் தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக கதையின் இயக்கத்திற்குள் வாசகனை இழுக்கிறது. அந்த சுவாரஸ்யத்தின் உள்ளேதான் அவருடைய சமூக விமர்சனம் இருக்கிறது. இதுதான் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இலக்கியம் சுவாரஸ்யத்தைத் தவிர்த்து ஆழத்தை அடைவதில்லை. சில சமயங்களில் சுவாரஸ்யத்தின் வழியாகத்தான் ஆழத்தை அடைகிறது.
ஒரு எழுத்தாளர் “வர்க்கச் சுரண்டல் மிகவும் கொடுமையானது” என்று எழுதலாம். வாசகன் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்.ஆனால் ஒரு ஏழை மனிதன் தனது மகளின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய கடைசி பொருளையும் விற்கும் காட்சியை எழுதும்போது, அந்த மனிதனின் அவமானத்தையும் பயத்தையும் வாசகன் உணர்ந்துவிட்டால், கருத்து வேறு வழியாக அவனுக்குள் சென்று விடுகிறது.
சுஜாதா வந்தபோது இந்தப் பிரச்சினை இன்னொரு வடிவத்தை எடுத்தது. அவருடைய எழுத்து வேகமானது. உரையாடல்கள் வேகமானவை. நகர வாழ்க்கையின் மொழி இருந்தது. தொழில்நுட்பம் இருந்தது. காதல் இருந்தது. பாலியல் இருந்தது. கொலை மர்மங்கள் இருந்தன. அறிவியல் கற்பனை இருந்தது. நகைச்சுவை இருந்தது. அவர் வாசகனை மகிழ்வித்தார். இதுவே சிலருக்கு அவரை “இலக்கியத்தின் வெளியே” நிறுத்துவதற்கான காரணமாக மாறியது. ஆனால் இங்கே ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது.
ஒரு எழுத்தாளர் வாசகனை மகிழ்வித்தால் ஏன் அவர் தீவிரமான எழுத்தாளராக இருக்க முடியாது? மகிழ்விப்பதும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுக்கொன்று எதிரான செயல்களா? ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் நம்மை பரபரப்பாக வைத்திருக்கும்போது அதன் அரசியலை நாம் சிந்திக்க முடியாதா? ஒரு நாவல் நம்மை வேகமாக வாசிக்க வைத்தால் அதன் மனிதப் பார்வை ஆழமற்றதாகிவிடுமா?
சுஜாதாவின் எழுத்தில் இருந்த வேகம் வெறும் பொழுதுபோக்கு உத்தி அல்ல. அது தமிழ் உரைநடையின் ஒரு மாற்றமும் கூட. வாசிப்பின் வேகத்தை அவர் மாற்றினார். நகரத்தின் புதிய மொழியை கொண்டு வந்தார். தொழில்நுட்ப உலகத்தை கதைக்குள் கொண்டு வந்தார். ஒரு புதிய தலைமுறையை புத்தகத்துடன் இணைத்தார். ஒரு தலைமுறையை வாசிக்க வைத்த எழுத்தாளனை இலக்கியத்தின் வாசலுக்கு வெளியே நிறுத்துவது மிகவும் எளிது. அவரை உள்ளே அழைத்து, “நீ வாசகனை எப்படி விரைவாகக் கவர்கிறாய்?” என்று கேட்பது தான் சுவாரஸ்யமான இலக்கிய விமர்சனம்.
அசோகமித்திரனை எடுத்துக்கொண்டால் சுவாரஸ்யம் என்பது எப்போதும் திருப்பம், மர்மம், சம்பவம் ஆகியவற்றிலிருந்து மட்டும் வருவதில்லை என்பது தெரியும். ஒரு மனிதன் அலுவலகத்திற்குச் செல்கிறான். ஒருவரைச் சந்திக்கிறான். ஒரு சிறிய உரையாடல் நடக்கிறது. யாரோ ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார். வெளியில் எதுவும் நடக்கவில்லை போலத் தோன்றலாம். ஆனால் வாசகன் தொடர்ந்து வாசிக்கிறான்.
ஏன்?
அந்த மனிதனின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இதுவும் சுவாரஸ்யம்தான். ஒரு துப்பாக்கி வெடிப்பதைவிட ஒரு மனிதன் அமைதியாக இருப்பதன் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் சில நேரங்களில் அதிகமான பதற்றத்தை உருவாக்குகிறது. அதனால் சுவாரஸ்யத்தை “வேகம்” என்று மட்டுமே புரிந்துகொள்ளக்கூடாது. சுவாரஸ்யம் என்பது வாசகனின் ஆர்வத்தை இயக்கும் சக்தி. அந்த ஆர்வம் சம்பவத்தைப் பற்றியதாக இருக்கலாம்; மனித மனத்தைப் பற்றியதாக இருக்கலாம்; மொழியைப் பற்றியதாக இருக்கலாம்; ஒரு ரகசியத்தைப் பற்றியதாக இருக்கலாம்.
தமிழில் “வெகுஜன எழுத்து” என்ற சொல் பெரும்பாலும் நடுநிலைச் சொல் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்குள் மதிப்பீடு ஒன்று ஒளிந்திருக்கிறது. வெகுஜனம் என்றால் அதிகமானவர்கள். அதிகமானவர்கள் வாசிப்பது ஏன் குறைந்த தரமாக இருக்க வேண்டும்? ஒரு சிறிய அறையில் பத்து பேர் மட்டும் விவாதிக்கும் கருத்து உயர்ந்தது என்றும், ஆயிரம் பேர் பேசும் ஒரு கருத்து தாழ்ந்தது என்றும் சொல்ல முடியுமா? இலக்கியத்திலும் இதே பிரச்சினை. வாசகர்களின் எண்ணிக்கையை வைத்து படைப்பின் மதிப்பை தீர்மானிப்பது எவ்வளவு தவறோ, அதேபோல வாசகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதற்காக அந்த எழுத்தை விமர்சனத்திலிருந்து விடுவிப்பதும் தவறு.
நமக்குத் தேவைப்படுவது இரண்டிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமல்ல. எது நன்றாக எழுதப்பட்டுள்ளது? எது மனிதனை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது? எது மொழியை மாற்றுகிறது?எது நினைவில் நீடிக்கிறது? எது வாசகனின் பார்வையை மாற்றுகிறது?
இந்தக் கேள்விகள்தான்.
இன்றைய வாசகனின் உலகம் முற்றிலும் மாறிவிட்டது. அவன் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான கதைகளைச் சந்திக்கிறான். சமூக ஊடகம், சினிமா, தொடர்கள், யூடியூப், செய்தி ஊடகங்கள், பாட்காஸ்ட் என கதைகளின் போட்டி மிகப்பெரியது. இந்தச் சூழலில் ஒரு எழுத்தாளர் “நான் வாசகனை ஈர்க்க வேண்டியதில்லை” என்று நினைப்பது தனது சொந்த கலையைப் பற்றிய அலட்சியம். வாசகனை ஈர்ப்பது வணிகத்தின் அடையாளம் அல்ல. வாசகனை ஈர்க்க முடியாத எழுத்தும் உயர்ந்த இலக்கியம் அல்ல. ஒரு படைப்பின் முதல் கடமை வாசகனை அதன் உலகிற்குள் அழைப்பது. அதன்பிறகு தான் அது அவனை மாற்ற முடியும். ஒரு கதையின் முதல் பக்கம் வாசகனிடம், “என்ன நடக்கப் போகிறது?” என்று கேட்கச் செய்யலாம். பத்தாவது பக்கம், “இந்த மனிதன் ஏன் இப்படிச் செய்கிறான்?” என்று கேட்கச் செய்யலாம். நூறாவது பக்கம், “நான் இருந்தால் என்ன செய்வேன்?” என்று கேட்கச் செய்யலாம். கடைசிப் பக்கம், “நான் நம்பிக்கொண்டிருந்த விஷயமே தவறா?” என்று கேட்கச் செய்யலாம்.
இந்தப் பயணம்தான் இலக்கியம்.
நம்முடைய இலக்கியச் சூழலில் இன்னொரு சுவாரஸ்யமான முன்முடிவு இருக்கிறது. பேய், கொலை, மர்மம், பாலியல், சாகசம், குற்றம் போன்றவை வந்துவிட்டால் அது தீவிர இலக்கியமாக இருக்க முடியாது என்று கருதுவது. ஆனால் மனிதனின் அடிப்படை அச்சங்களே இலக்கியத்தின் மிகப் பழைய பொருட்கள். மரணம். பயம். காதல். காமம். துரோகம். குற்றம். அதிகாரம். பைத்தியம். பேய். இவை எல்லாம் மனிதனின் ஆழமான உளவியலுடன் தொடர்புடையவை. ஒரு பேய்க்கதை வெறும் பேயைப் பற்றிய கதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது சமூகத்தால் மறக்கப்பட்ட பெண்ணின் நினைவாக இருக்கலாம். ஒரு கொலைக்கதை வெறும் கொலையாளியைத் தேடும் கதையாக இருக்க வேண்டியதில்லை. அது அதிகாரம் எப்படி உண்மையை உருவாக்குகிறது என்பதற்கான கதையாக இருக்கலாம். ஒரு பாலியல் கதை வெறும் உடலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை. அது உடலின் மீது யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைக் கேட்கலாம்.
அதாவது, வகை இலக்கியம் இலக்கியத்திற்கு எதிரானது அல்ல; அந்த வகையை எழுத்தாளர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம்.
ஒரு நல்ல அரசியல் நாவல் அரசியல் கோஷங்களால் நிரம்பியிருக்க வேண்டியடில்லை. ஒரு அரசியல்வாதி என்ன பேசுகிறார் என்பதைவிட, அவர் பேசாதபோது அவரைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதிலேயே அரசியல் இருக்கலாம். ஒரு காவல்துறை அதிகாரியின் அதிகாரத்தைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக, ஒரு சாதாரண மனிதன் காவல் நிலையத்திற்குள் நுழையும்போது அவனுடைய உடல் எவ்வாறு மாறுகிறது என்பதை எழுதலாம். இவை எல்லாம் இலக்கியமாக மாறக்கூடிய தருணங்கள்.அதனால் சுவாரஸ்யமான கதையை எழுதுவது என்பது கருத்துகளை விட்டுவிடுவது அல்ல. கருத்துகளை கதையின் உடலுக்குள் மறைப்பது.
ஒரு நல்ல எழுத்தாளர் வாசகனுக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே சொல்ல வேண்டியதில்லை. அவன் வாசகனை ஒரு தவறான பாதையில் அழைத்துச் செல்லலாம். அவனுடைய எதிர்பார்ப்பை உடைக்கலாம். கதாபாத்திரத்தைப் பற்றி அவன் உருவாக்கிய நம்பிக்கையைத் தலைகீழாக மாற்றலாம். ஆனால் ஒரு முக்கியமான நிபந்தனை இருக்கிறது. எழுத்தாளர் வாசகனை ஏமாற்றலாம்; ஆனால் தன்னை ஏமாற்றிக்கொள்ளக் கூடாது.
திருப்பம் வைக்க வேண்டும் என்பதற்காகத் திருப்பம் வைத்தால் அது செயற்கையாகத் தெரியும். மர்மம் வேண்டும் என்பதற்காகத் தகவலை மறைத்தால் அது வெறும் தந்திரமாகத் தெரியும். அதிர்ச்சி வேண்டும் என்பதற்காக வன்முறையைப் பயன்படுத்தினால் அது மலிவாகிவிடும். சுவாரஸ்யம் கதையின் இயல்பான விளைவாக இருக்கும்போது அது உயிரோடு இருக்கும்.
அப்படியானால் நல்ல இலக்கியத்தின் அளவுகோல் என்ன?
சுவாரஸ்யமா? இல்லை. சிக்கலான மொழியா? இல்லை. பெரிய கருத்துகளா? அதுவும் இல்லை. ஒரு படைப்பு மனித அனுபவத்தை எவ்வளவு தீவிரமாகவும் உண்மையாகவும் கலைரீதியாகவும் மாற்றுகிறது என்பதுதான் முக்கியம். அந்தப் படைப்பை வாசிக்கும்போது நாம் ஒரு உலகத்திற்குள் செல்கிறோம். அங்கேயிருந்து வெளியே வரும்போது நம்முடைய உலகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. அதுதான் இலக்கியம்..
சுவாரஸ்யத்தை எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நல்ல எழுத்தாளர் வாசகனைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவனுடைய கவனத்தைப் பெற வேண்டும். அவனை அடுத்த பக்கத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்குப் பிறகு அந்த வாசிப்பின் வழியாக அவனைத் தன்னிடம் இருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டும். அவன் தனது வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். தான் வெறுக்கும் மனிதனைப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் சிக்க வேண்டும். தான் நம்பிய வரலாற்றை சந்தேகிக்க வேண்டும். தன் உடலைப் பற்றி, தன் ஆசையைப் பற்றி, தன் அதிகாரத்தைப் பற்றி, தன் பயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அப்போது சுவாரஸ்யம் வெறும் சுவாரஸ்யமாக இருப்பதில்லை.அது இலக்கியத்தின் கருவியாகிறது.
வாசகனைப் பக்கத்தைத் திருப்ப வைப்பது கதை சொல்லும் திறன்.அவன் ஏன் அந்தப் பக்கத்தைத் திருப்பினான் என்று அவனையே பின்னர் சிந்திக்க வைப்பது இலக்கியம். தமிழ் இலக்கியம் சுவாரஸ்யத்தைக் கண்டு பயப்பட வேண்டிய காலம் கடந்துவிட்டது. வாசகன் புத்தகத்தைத் திறக்கும்போது அவனிடம் சொல்ல வேண்டியது: “இது இலக்கியம். பொறுமையாக வாசி” என்பதல்ல. அதற்குப் பதிலாக, “உள்ளே வா. ஒரு கதை இருக்கிறது.” என்ற சொல்ல வேண்டும். அவன் உள்ளே வந்த பிறகு— அவன் எதிர்பார்த்த கதையை மட்டும் காட்டாமல், அவன் இதுவரை பார்க்காத அவனையே அவனுக்குக் காட்ட வேண்டும்.
அங்கேதான் சுவாரஸ்யம் இலக்கியமாகிறது.



