top of page

பயணம் செய்யாத நாட்களில் நான் என்னவாகிறேன்?

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 15 hours ago
  • 6 min read

Anywhere out of the world.


Life is a hospital where every patient is obsessed by the desire of changing beds. One would like to suffer opposite the stove, another is sure he would get well beside the window.

It always seems to me that I should be happy anywhere but where I am, and this question of moving is one that I am eternally discussing with my soul.

"Tell me, my soul, poor chilly soul, how would you like to live in Lisbon? It must be warm there, and you would be as blissful as a lizard in the sun. It is a city by the sea; they say that it is built of marble, and that its inhabitants have such a horror of the vegetable kingdom that they tear up all the trees. You see it is a country after my own heart; a country entirely made of mineral and light, and with liquid to reflect them."

My soul does not reply.

"Since you are so fond of being motionless and watching the pageantry of movement, would you like to live in the beatific land of Holland? Perhaps you could enjoy yourself in that country which you have so long admired in paintings on museum walls. What do you say to Rotterdam, you who love forests of masts, and ships that are moored on the doorsteps of houses?"

My soul remains silent.

"Perhaps you would like Batavia better? There, moreover, we should find the wit of Europe wedded to the beauty of the tropics."

Not a word. Can my soul be dead?

"Have you sunk into so deep a stupor that you are happy only in your unhappiness? If that is the case, let us fly to countries that are the counterfeits of Death. I know just the place for us, poor soul. We will pack up our trunks for Torneo. We will go still farther, to the farthest end of the Baltic Sea; still farther from life if possible; we will settle at the Pole. There the sun only obliquely grazes the earth, and the slow alternations of daylight and night abolish variety and increase that other half of nothingness, monotony. There we can take deep baths of darkness, while sometimes for our entertainment, the Aurora Borealis will shoot up its rose-red sheafs like the reflections of the fireworks of hell!"

At last my soul explodes! "Anywhere! Just so it is out of the world!"


Baudelaire ன் இந்தக் கவிதையை தற்செயலாக வாசித்துக் கொண்டிருந்தபோது இந்த இரண்டு மாதங்களாக நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என யோசிக்கத் துவங்கினேன். அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதிமுடித்துவிடும் பதற்றமும் உடனடியாக இன்னொரு திரைப்படம் இயக்க வேண்டுமென எனக்கு நானே உருவாக்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியும் என்னை பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது. எப்போது உறங்குகிறேன் எப்போது எழுகிறேன் எனத் தெரியாமல் எதையாவது வாசித்து எதையாவது எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதற்றங்கள் அல்லது குழப்பங்கள் எதனால் வருகிறது என நிதானமாக யோசித்துபோது நான் பயணம் செய்வதைக் குறைத்துவிட்டிருக்கிறேன் என்பது புரிகிறது. இன்னொருபுறம் நிறைய பயணங்களைத் திட்டமிட்டு கைவிடுவதாகவும் இருக்கிறது. உண்மையில் பயணம் செய்யாத நாட்களில் என்னதான் நடக்கிறது?


இங்குதான் பதலரின் கவிதையும் எனக்கு நெருக்கமாக மாறுகிறது. இந்தக் கவிதையின் மையத்தில் இருக்கும் ஆசை மிகவும் எளிமையானது போலத் தோன்றுகிறது. இங்கிருந்து வேறு எங்காவது சென்றுவிட வேண்டும். இந்த இடம் வேண்டாம். இன்னொரு நகரம், இன்னொரு நிலப்பரப்பு, இன்னொரு வானம், இன்னொரு வாழ்க்கை வேண்டும். ஆனால் போத்லேர் அந்த ஆசையை ஒரு சுற்றுலாப் பயணியின் உற்சாகத்தோடு எழுதுவதில்லை. அது ஒரு தப்பித்தல். தன்னிடமிருந்தே தப்பித்தல். இருப்பின் சலிப்பிலிருந்து தப்பித்தல். ஒரே இடத்தில், ஒரே மனிதனாக, ஒரே நினைவுகளுடன் தொடர்ந்து இருப்பதன் தாங்க முடியாத சோர்விலிருந்து தப்பித்தல். —நானும் இப்படித்தான் பயணிக்க நினைக்கிறேனா?


ஒரு புதிய இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் அது வெறும் புதிய இடங்களைப் பார்ப்பதற்கான ஆசை அல்ல என்று இப்போது தோன்றுகிறது. நான் பயணிக்க விரும்புவது ஒருவேளை புதிய நகரத்தைக் காண்பதற்காக அல்ல; நான் இப்போது இருக்கும் என்னிடமிருந்து சிறிது காலம் விலகி நிற்பதற்காக. என்னைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையின் தொடர்ச்சியான பொறுப்புகள், செய்ய வேண்டிய வேலைகள், எதிர்பார்ப்புகள், பணம், திட்டங்கள், தோல்விகள், முடிக்கப்படாத எழுத்துகள், தொடங்கப்படாத விஷயங்கள்—இவை எல்லாவற்றிலிருந்தும் ஒரு சிறிய இடைவெளி வேண்டும். பயணம் அந்த இடைவெளியை எனக்கு உருவாக்குகிறது.

புதிய


நான் பயணிக்கும்போது நான் யார் என்பதைக் கொஞ்சம் மறந்துவிட முடிவது விசித்திரமான விடுதலை. ஒரு ரயிலில் அல்லது விமானத்தில் அமர்ந்திருக்கும்போது, ஜன்னலுக்கு வெளியே நகரம் பின்னோக்கிச் செல்லும்போது, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் அடையாளங்களும் என்னிடமிருந்து பின்னோக்கிச் செல்வது போல இருக்கும். என்னுடைய அறை இல்லை. மேசையின் மீது கிடக்கும் முடிக்கப்படாத புத்தகம் இல்லை. தொலைபேசியில் பதிலளிக்க வேண்டிய செய்திகள் இல்லை. நாளை என்ன செய்ய வேண்டும் என்கிற பட்டியல் இல்லை. நான் யாரிடம் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறேன் என்பதும் அந்தச் சில மணி நேரங்களுக்கு முக்கியமில்லை. நான் பெயரற்றவனாகிவிடுகிறேன். அந்தப் பெயரற்ற நிலைதான் பயணத்தின் மிகப்பெரிய இன்பமாக இருக்கலாம்.


ஆனால் போத்லேரின் கவிதை என்னை இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. எங்காவது வெளியேறிவிட்டால் மட்டும் போதுமா? நான் எங்கே சென்றாலும் என்னையே கூட்டிக்கொண்டு செல்ல வேண்டியதுதானே? என் நினைவுகளையும், தோல்விகளையும், ஆசைகளையும், பயங்களையும், நான் என்னைப் பற்றி உருவாக்கிக்கொண்டிருக்கும் கதைகளையும் என்னுடன் எடுத்துக்கொண்டுதானே போவேன்? அதனால் பயணம் தப்பித்தல் என்றால், அது முழுமையான தப்பித்தல் அல்ல.


நாம் இடத்தை மாற்றுகிறோம்.ஆனால் நம்மை மாற்றாமல் எடுத்துக்கொண்டு செல்கிறோம்.

அதற்காகப் பயணம் தேவையற்றது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சில சமயங்களில் நம்மிடமிருந்து முழுமையாகத் தப்பிக்க முடியாவிட்டாலும், நம்மைப் பார்க்கும் தூரத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஒரே அறையில் பல மாதங்கள் வாழ்ந்த பிறகு, அந்த அறையின் சுவர்கள் நம்முடைய எண்ணங்களின் சுவர்களாக மாறிவிடுகின்றன. அதிலிருந்து வெளியேறி இன்னொரு நகரத்தின் தெருவில் நடக்கும்போது, நம்முடைய வாழ்க்கையை வேறு ஒரு ஜன்னல் வழியாகப் பார்க்க முடிகிறது.


பயணம் என்னை மாற்றுகிறது என்று நான் சொல்வதற்குக் காரணம் இதுதான்.

பயணம் முடிந்து திரும்பி வரும்போது நான் முற்றிலும் வேறு மனிதனாகி விடுவதில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் கொஞ்சம் மாறியிருக்கும். சில விஷயங்கள் முக்கியமில்லாமல் தோன்றும். சில மறந்துபோன ஆசைகள் மீண்டும் நினைவுக்கு வரும். சில மனிதர்களின் மீதான கோபம் குறையும். சில மனிதர்களை விட்டு விலக வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். எழுத வேண்டிய ஒரு வாக்கியம் திடீரென மனதில் தோன்றும். பல மாதங்களாக நகராமல் கிடந்த ஒரு கதை திடீரென நகரத் தொடங்கும். யோசித்துப் பார்த்தால், பயணம் வெளியில் செல்வது அல்ல. ம்முடைய உள்ளே தேங்கிக்கிடக்கும் காற்றை மாற்றுவது.


பயணம் செய்ய முடியாத நாட்களில்தான் இதன் எதிர்மறையான உண்மை எனக்குப் புரிகிறது.

பயணம் செய்ய முடியாத நாட்களில் என் உடலும் மனமும் ஒருவிதமாக முடங்கிவிடுகின்றன. எதையும் செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. வேலை செய்கிறேன். மனிதர்களிடம் பேசுகிறேன். எழுத முயற்சிக்கிறேன். புத்தகம் படிக்கிறேன். ஆனால் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நகர மறுக்கிறது. சிந்தனைகள் ஒழுங்காக வருவதில்லை. ஒன்று தோன்றுகிறது; அதன் எதிரில் இன்னொன்று உடனே வந்து நிற்கிறது. நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று யோசித்தால், அதற்குப் பதிலாக நான் என்ன செய்ய முடியவில்லை என்பதற்கான நீண்ட பட்டியல் மனதில் திறக்கிறது. அப்போதுதான் தனிமை மிகவும் சோர்வூட்டக்கூடியதாகிறது.


தனியாக இருக்கும்போது மனிதன் தன்னையே நெருக்கமாகப் பார்க்கத் தொடங்குகிறான். மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது நாம் ஒரு உருவமாக இருக்கிறோம். ஒரு எழுத்தாளர். ஒரு நண்பன். ஒரு கணவன். சமூகத்தில் இயங்குகிற மனிதன். இந்த அடையாளங்கள் எல்லாம் நம்மை ஒரு வடிவத்தில் வைத்திருக்கின்றன. ஆனால் தனியாக இருக்கும்போது அந்தப் பெயர்கள் மெதுவாக உரிந்து விழுகின்றன. அப்போது எஞ்சியிருப்பவன் யார்? அவனைப் பார்க்க எனக்கு எப்போதும் விருப்பமில்லை. ஏனென்றால் அவன் மிகவும் சோர்வூட்டக்கூடியவன். அவன் எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறான். நடந்துபோனவற்றை மீண்டும் நினைக்கிறான். நடக்காதவற்றை கற்பனை செய்கிறான். செய்ய வேண்டியவற்றைப் பற்றி கவலைப்படுகிறான். ஏற்கெனவே செய்தவற்றை சந்தேகிக்கிறான். எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுகிறான்; அதே நேரத்தில் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்று அஞ்சுகிறான். ஒரு எண்ணம் எழுந்தவுடன் அதற்கு எதிரான இன்னொரு எண்ணத்தை உருவாக்குகிறான். ஒரு முடிவை எடுத்தவுடன் அதன் மீது சந்தேகம் கொள்கிறான்.


அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று சில நேரங்களில் தோன்றுகிறது.

அதற்காகத்தான் நான் பயணிக்க விரும்புகிறேனா என்று இப்போது நினைக்கிறேன்.

புதிய இடம் எனக்கு புதிய மனிதனைக் கொடுக்கிறது. குறைந்தபட்சம் சில நாட்களுக்கு.

அந்த மனிதன் காலையில் எழுந்ததும் கடந்த பத்து வருடங்களின் கணக்கை நினைத்துக்கொண்டு இருப்பதில்லை. அவனுக்கு அந்த நகரத்தின் தெருக்கள் தெரியாது. அங்கே அவனுக்கு எந்த வரலாறும் இல்லை. அவன் நடந்துசெல்லும் தெருவில் அவனை யாரும் அடையாளம் காண்பதில்லை. ஒரு சிறிய தேநீர்க்கடையில் அமர்ந்திருக்கும்போது, அவன் யாருக்கும் ஒன்றுமில்லை. அந்த அந்நியத்தன்மை எல்லா மனிதர்களுக்கும் முக்கியமானதென நம்புகிறேன். ஆனால் வாழ்க்கை எப்போதும் நம்முடைய ஆசைகளுக்கு இணையாக நகர்வதில்லை.


பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு முறையும் பொருளாதாரம் என்னைத் தடுத்து நிறுத்துகிறது. பணம் என்பது வெறும் செலவுக்கான ஒரு பொருள் மட்டுமல்ல; அது சில நேரங்களில் நம்முடைய கற்பனையின் எல்லையாகவும் மாறிவிடுகிறது. ஒரு இடத்திற்குச் செல்லலாம் என்று நினைத்தவுடன், அதற்கான செலவு நினைவுக்கு வருகிறது. விமானம். தங்குமிடம். அடுத்த மாதச் செலவுகள். ஏற்கெனவே இருக்கும் பொறுப்புகள். இன்னும் செய்ய வேண்டிய வேலைகள்.

அதற்குப் பின்னால் இன்னொரு கேள்வி வந்து நிற்கிறது: “அங்கிருந்து திரும்பி வந்த பிறகு என்ன செய்வாய்?” இந்தக் கேள்விதான் என்னை அதிகமாக முடக்குகிறது. யோசித்துப் பாருங்கள் இருபத்தைந்து நூல்கள் எழுதிய ஒரு எழுத்தாளனுக்கு வருடத்திற்கு ஐம்பாதாயிரம் ரூபாய்கூட ராயல்டியாக வருமானம் கிடைப்பதில்லை என்கிற இடத்தில் பயணம் எத்தனை ஆடம்பரம் அவனுக்கு?


பயணம் என்பது சில நாட்களுக்கான சுதந்திரம். ஆனால் வாழ்க்கை திரும்பி வந்து கதவைத் திறந்து காத்திருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொண்ட கமிட்மெண்ட்கள் இருக்கின்றன. பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. தொடங்கியதை முடிக்க வேண்டும். மற்றவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அதனால் நான் செல்ல நினைக்கும் ஒவ்வொரு பாதைக்கும் முன்பாக இன்னொரு பாதை வந்து நிற்கிறது—பொறுப்பின் பாதை. நான் செல்ல விரும்பும் இடத்திற்கும், நான் செல்ல வேண்டிய இடத்திற்கும் இடையில் ஒரு நீண்ட தூரம் இருக்கிறது. அந்தத் தூரத்தில்தான் சில சமயம் மனம் சிக்கிக்கொள்கிறது.


அப்போது பயணம் செய்ய முடியாதது ஒரு சாதாரண பொருளாதாரத் தடையாக இருப்பதில்லை. அது என் உள்ளே ஒரு அடைப்பு போல மாறுகிறது. உலகம் பெரியதாக இருக்கிறது என்று தெரியும். ஆனால் நான் ஒரு சிறிய அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது. செல்ல வேண்டிய ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பார்க்க வேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள். வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இருக்கின்றன. எழுத வேண்டிய கதைகள் இருக்கின்றன. ஆனால் உடல் அசையவில்லை. மனம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் பயணம் எனக்கு தேவை. நான் புதிய உலகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. என்னுடைய உலகம் சுருங்கிவிடாமல் இருப்பதற்காக.


போத்லேரின் அந்தக் கவிதையை வாசித்தபோது எனக்குள் மீண்டும் மீண்டும் வந்த வரி இதுதான்: Anywhere out of the world. உலகத்திலிருந்து எங்காவது வெளியே. ஆனால் உலகத்திலிருந்து வெளியேற முடியுமா?


நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் நம்முடைய நிழல் முன்பே சென்று நிற்கிறது. நாம் எவ்வளவு தொலைவு சென்றாலும் நம்முடைய நினைவுகள் நம்மைவிட வேகமாகப் பயணிக்கின்றன. நாம் ஒரு கடற்கரையில் அமர்ந்திருந்தாலும், நம்முடைய கடந்த காலம் நம்முடன் அமர்ந்திருக்கும். மலை உச்சியில் நின்றாலும், நம்முடைய அச்சங்கள் கீழே பள்ளத்தாக்கில் காத்திருக்காது; அவையும் நம்முடன் மேலே வந்திருக்கும். எனவே பயணம் நம்மிடமிருந்து முழுமையான தப்பித்தல் அல்ல.

அது நம்மைச் சிறிது தூரத்திலிருந்து பார்ப்பதற்கான ஒரு வழி. சில சமயங்களில் அந்தத் தூரம் போதுமானது.


நான் என்னை மிகவும் நெருக்கமாகப் பார்த்துக்கொண்டே இருந்தால், எனக்கே ஒரு சோர்வூட்டக்கூடிய மனிதனாகிவிடுகிறேன். என்னுடைய குறைகள் பெரிதாகத் தெரிகின்றன. தோல்விகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. எதிர்காலம் முடிவில்லாத கணக்குப் புத்தகமாகத் தெரிகிறது. என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி, என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை விழுங்கிவிடுகிறது. அப்போது நான் பயணம் செய்ய விரும்புகிறேன். ஒரு நகரத்தின் பெயரைச் சொல்ல முடியாமல் கூட இருக்கலாம். எங்கேயாவது. ஒரு ரயில் போகும் திசையில். ஒரு கடற்கரை நகரத்துக்கு. எனக்குத் தெரியாத மொழி பேசப்படும் ஒரு தெருவில். காலையில் விழித்ததும் ஜன்னலுக்கு வெளியே என்ன இருக்கிறது என்று தெரியாத ஓர் அறையில். இப்படி அந்த அறியாமை எனக்கு இன்பம் தருகிறது.


ஏனென்றால் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்கள் நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதாக நடிக்கிறோம். என்ன செய்ய வேண்டும், எங்கே போக வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும், எவ்வளவு சம்பாதிக்க வேண்டும், எதை முடிக்க வேண்டும் என்று திட்டத்தோடு வாழ்கிறோம்.

பயணம் அந்தத் திட்டத்தை சில நாட்களுக்கு கிழித்தெறிகிறது. அப்போது நான் மீண்டும் ஒரு மனிதனாக மட்டுமே இருக்கிறேன். ஒரு பாதசாரி, அந்நியன், பார்வையாளர், ஒரு உடல், ஒரு மனம்.

அந்த மனம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல், அது என்னென்ன எண்ணங்களை உருவாக்குகிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன்.


ஒருவேளை அதனால்தான் நான் பயணிக்க வேண்டும். உலகத்தைப் பார்ப்பதற்காக அல்ல.

என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சோர்வூட்டக்கூடிய மனிதனிடமிருந்து சில நாட்களாவது விலகி நிற்பதற்காக. அவனிடமிருந்து முழுமையாகத் தப்பிக்க முடியாது என்பதை அறிந்தபடியே. ஏனென்றால் போத்லேர் கற்றுத்தருவது அதுதான். நாம் எங்கே சென்றாலும் நம்முடைய ஆன்மாவை நம்முடன் எடுத்துக்கொண்டு செல்கிறோம். ஆனால் சில இடங்களில், சில மாலைகளில், ஒரு அந்நிய நகரத்தின் பெயரற்ற தெருவில் நடக்கும்போது, அந்த ஆன்மா நம்மை கொஞ்சம் குறைவாகத் தொந்தரவு செய்கிறது. அப்போது நாம் அதைத் தூரத்தில் இருந்து பார்க்க முடிகிறது. அது நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாமும் அதை பார்க்கிறோம்.

அந்தச் சிறிய இடைவெளிதான் பயணம். அந்த இடைவெளி கிடைக்காத நாட்கள்தான் எனக்கு மிகவும் இருண்ட நாட்கள்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page