நீலப்படம் நாவலிலிருந்து ஒரு பகுதி
- லக்ஷ்மி சரவணகுமார்

- 2 hours ago
- 5 min read

ஆனந்தி தன் அம்மாவிற்கு எழுதிய கடிதம்.
அம்மா…
’தேவ்டியா’ என்ற வார்த்தையை முதல் முறையாக எனக்கு
அறிமுகப்படுத்தியது நீதான். இப்போது வரையிலும் ஊரில் உன்னைப்
பற்றியதான நினைவுகள் எல்லோருக்கும் அப்படியாகத்தான் இருக்கிறது. அந்த
வார்த்தையில் இருந்த வசீகரம் சிறு வயதிலேயே எனக்குப் பிடித்திருந்ததால்
அது சொல்லக் கூடாத வார்த்தையென்றோ அந்த வார்த்தைக்கானவர்கள்
அருவருப்பானவர்கள் என்றோ எனக்குப் படவில்லை. சரியாகக் கணக்கிட்டு
சொல்வதானால் பதிமூன்று வயதிற்குள்ளாக பதிணெட்டு நபர்களை
அப்பாவென நான் கூப்பிட்டிருக்கிறேன். அவர்கள் அத்தனை பேருக்கும்
முகமும் உடலும் தான் வேறானதாக இருந்ததே தவிர தேவைகள்
ஒன்றாகத்தான் இருந்தது.
விடுமுறைக்கு வந்த மிலிட்டரிக்காரனோடு நீ சேர்ந்து வாழ்ந்தது
முழுதாக ஒரு மாதம். எப்போதும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு
மாறும்போது எனக்குக் தர்மசங்கடமாய் இருக்கும். இனி அந்த பழைய
அப்பாவை எங்காவது சந்திக்க நேர்ந்தால் எப்படிக் கூப்பிடுவது? உனக்கு
இதுமாதிரியான எந்தக் குழப்பங்களும் இருந்திருக்கவில்லை. உன்னால்
எல்லோரையும் மிக இயல்பாக காதலிக்க முடிந்தது. அவர்கள் புறக்கணிக்கும்
போது எந்தப் புகார்களும் இல்லாமல் அவர்களிடமிருந்து விலகி இருக்கவும்
செய்தாய். பாதி இரவிற்கு மேல் மது வாங்குவதற்காக மிலிட்டரிக்காரன் நம்
வீட்டிற்கு வந்தபோதுதான் உனக்கும் அவனுக்குமான முதல் சந்திப்பு
நிகழ்ந்ததென நினைக்கிறேன்.
அதற்கு முன்பு சில மாதங்கள் ஒரு ஒயின் ஷாப் ஓனரின் வீட்டில் நாம்
வாழ்ந்தோம். வெளித்தோற்றத்திற்கு முரட்டு மனிதராகத் தெரிந்தாலும் அந்த
அப்பா நல்ல மனிதர். இன்னும் சொல்லப்போனால் அப்பாக்களிலேயே அவர்
ஒருவர் தான் உன்னை அடித்துத் துன்புறுத்தாதவர். ஆனால் அவருக்கு உன்
மீது பெரிய ஆர்வங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும்
உன்னைப் பற்றிப் பேசுகிறார்களே என்பதால் ஒரு பெருமைக்காக உன்னுடன்
இருக்க விரும்பினார். தினமும் இரவு உன்னுடன் உறங்கி எழும் சந்தோசம்
அவருக்குப் போதுமானதாய் இருந்ததே தவிர உன்னுடலை ஆராதிக்கத்
தெரியவில்லை. நீ அதையும் சகித்துக் கொண்டுதான் இருந்தாய். அவர்
மனைவி உடலில் கெரசின் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து
கொள்வேன் என அவரை மிரட்ட, பயந்து போய் அவர் உன்னை வந்து
பார்ப்பதை நிறுத்தினார். ஆனாலும் உன் மீது அக்கறை இருந்தது. உன்
வருமானத்திற்கு ஆகுமென்றுதான் இரவில் விற்றுக் கொள்ள தினம்
கொஞ்சம் மதுபாட்டில்களை வீட்டிற்குக் கொடுத்து அனுப்பினார்.
உனக்கு உடமைகளென எதுவும் இல்லை. இரண்டு சூட்கேஸ் நிறைய
உடைகளும், எனது சில பொம்மைகளும் கொஞ்சமும் குறையாத இளமையும்
தான். அதனாலேயே இடம் பெயர்வது சிரமமான காரியமாய்
இருந்திருக்கவில்லை. “உன் உடம்பு மட்டுந்தான் அம்மா உனக்குக்
கொடுத்துட்டுப் போற பெரிய சொத்து, பத்ரமா பாத்துக்க….” உனக்கே
உனக்கான புன்னகையோடு நீ சொல்லியிருக்கிறாய். ஆண்கள் அத்தனை
பேராலும் விரும்பப்படும் ஒரு உடல் வாய்ப்பது எளிதானதல்ல. உனக்கு அது
வாய்த்திருந்தது. நீ ஊரின் ஆண்களுக்கு பல காலம் விருப்பமானவளாய்
இருந்தவள். உன்னைத் தேடி வருகிறவர்களை வஞ்சிக்கவோ,
புறக்கணிக்கவோ தெரியாதவள். எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்க
உன்னிடம் காமமும் கொஞ்சமாய் காதலும் இருந்தது. யாரிடமும் நீ காதலை
வேண்டி நிற்காத போதும், உன்னைக் காதலித்தவர்களை நீயும் காதலிக்கவே
செய்தாய்.
எல்லோருக்கும் ஒரு வாசனை இருப்பது போல் உனக்கும் ஒரு
வாசனை இருந்தது. தனித்துவமானது. கடலின் உப்பிலிருக்கும் அடர்த்தியைப்
போன்ற தனித்துவம். எனது எல்லாமும் அதன் பிரதிதான். உன்னுடலின்
அத்தனை வசீகரங்களையும் சின்னப் பிசிறுகள் கூட மாறாது எனக்குத் தாரை
வார்த்திருந்தது ஆச்சர்யம். உன் நினைவு வருகிற பொழுதெல்லாம் உடலின்
அசாத்தியமான கண்கள் விழித்துக் கொள்கின்றன.
உனது உடல் பசுமை குறையாத கொடியென அந்த ஊரின் எல்லா
வீதிகளிலும் படர்ந்து கிடந்தது. எப்போதும் மலர்ந்திருக்கும் கொடி. அதன்
வாசணைக்கு அவ்வூரிலிருக்கும் அத்தனை ஸர்ப்பங்களும் எழுந்தாடின.
உன்னை எதிர்கொண்ட பெண்களின் கண்களில் பொசுக்கும் உக்ரமும்,
பொறாமையும் சேர்ந்தே கசிந்தன. பதிலாய் புன்னகைப்பதின் வாயிலாகவும்
வழியச் சென்று பேசுவதன் வாயிலாகவும் அப்பெண்களின் வெக்கையை
இன்னும் சில நிமிடங்கள் நீட்டிக்கச் செய்து ரசித்தாய். என்னிடம் எந்த
நிர்ப்பந்தங்களையும் நீ வைத்திருக்கவில்லை. ஆண்கள் பூச்சிகளை விடவும்
கோழைகள், அவர்களிடம் ஒருபோதும் பயப்படாதே என்பது மட்டுந்தான்
முதலும் கடைசியுமாய் நீ சொன்ன அறிவுரை.
மிலிட்டரிக்காரனை முதல் தடவையாய் அப்பாவெனக் கூப்பிட்ட நாள்
இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அவனுக்கு உன் மீதிருந்த காமத்தை
விடவும் என் மீது அதிகம். அருவருப்பான புழுக்களின் ஊறலை
அப்பார்வையில் கண்ட நொடியிலிருந்து அவன் வீட்டிற்குள் இருக்கும்
நேரங்களில் எங்காவது ஓடிவிட வேண்டுமெனத் தவிப்பேன்.
ஒரு வாழ்க்கை முழுவதிற்குமான போகத்தை உன்னுடன் அந்த சில நாட்களிலேயே
பார்த்துவிடும் அசுர வெறி இருந்திருக்க வேண்டும் அவனுக்குள். ஒரு
மனநோயாளியைப்போல் எப்போதும் உனது அருகிலேயே சுற்றிக்
கொண்டிருப்பான். அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் அணிவது
பாவாடைகள் தான், அது எத்தனை ஆபாசமான உடை தெரியுமா? என்னால்
இயல்பாக உறங்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் எப்போதும் அவன்
கண்கள் என் தொடைகளைத் துளைத்துச் செல்வது போலவே இருக்கும்.
அந்தக் கண்கள் எப்போதும் உடலெங்கும் ஊர்ந்து பின்பு சில நாட்களில் என்
மீது சதாவும் நீந்தியலையும் மீன்களாகிவிட்டன. எனது உடலை சின்னதொரு
குளமாக்கி தன் கண்களின் மூலமாய் அவன் நீந்திக் கொண்டிருந்தான்.
நாம் மூவரும் சின்னதாக ஒரு பயணம் போனோம். அதுவும் உனக்கு
கடல் விருப்பமென்பதால், தஞ்சாவூரில் இருந்து காரைக்காலுக்குப் போன
அந்த நாள் உன் முகத்தில் நான் பார்த்திருந்த சந்தோசத்தை அதற்கு முன்
பார்த்ததில்லை. கடலை குழந்தையாக்கி அந்த இரவில் நீ பாடியது நினைவில்
இருக்கிறது. நீயும் அவனும் குடித்திருந்தீர்கள். பெளர்ணமிக்கு முந்தைய
தினமென்பதால் கடல் பூரிப்பில் பிரம்மாண்ட அலை எழுப்பி நர்த்தனமாடியது.
கடலின் நடனம் கண்ட நீயும் எழுந்து ஆடினாய். ஆடை விலகிய
பிரக்ஞையோ அது கடற்கரை என்கிற கூச்சங்களோ இல்லாமல் ஆடிய
உன்னை மிகுந்த சிரமத்துடன் அறைக்குக் கூட்டி வந்தோம். அன்றிரவு நீங்கள்
உடலுறவு கொண்டபோது உண்மையில் நான் உறங்கியிருக்கவில்லை, நான்
விழித்திருப்பது உன்னை சங்கடப்படுத்திவிடக் கூடாதென்பதற்காகத்தான்
சிரமத்துடன் கண்களை மூடிக் கிடந்தேன். நீ அவனின் கிறுக்குத்தனமான
செயல்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கியதும் தான் அவனுக்குள் சதாவும்
உறுமிக் கொண்டிருக்கும் மிருகம் தனது கொடூர முகம் காட்டியது. அவன்
உன்னை அடித்தான். உன்னை எத்தனை பேர் வேண்டுமானாலும் அடிக்க
முடியும், காயப்படுத்தி விடமுடியாது என்பதை அன்றுதான் நான் தெரிந்து
கொண்டேன்.
அவன் அவ்வளவு அடித்தும் நீ அவனைப் பார்த்து சத்தமாக
சிரித்தபடிதான் இருந்தாய். ”எப்பப் பாத்தாலும் இதக் கைலயே பிடிச்சிட்டு
இருக்கனும்னு நெனைக்கிறியே? ஏன் நாளைக்கே செத்துடுவோம்னு பயமா?
உன்னது உங்கிட்டத்தாண்டா இருக்கும். யாரும் வெட்டி எடுத்துட்டுப் போயிட
மாட்டாங்க..” நீ இப்படி சொன்னதும் அவன் கோவம் அதிகமாகியது. உன்னை
அடிப்பதற்குப் பதிலாக சுவற்றில் போய் முட்டிக் கொண்டான். ஜன்னலைத்
திறந்து வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்ற நீ, படுத்திருந்த
என்னை எழுப்பி அப்பொழுதே தஞ்சாவூருக்குக் கூட்டி வந்தாய்.
அடுத்த நாள் அவன் வீட்டிற்கு வந்தபொழுது கோவத்தின் எந்தச்
சுவடுகளையும் காட்டிக் கொள்ளாமல் நீ உணவளித்தாய். உன்னிடம்
மன்னிப்புக் கேட்டவன் இன்னும் சில நாட்களில் மீண்டும் பணிக்குத்
திரும்புகையில் அவனுடனேயே வர முடியுமாவெனக் கேட்டான். ’இத்தனை
வருடங்களில் மனைவியைக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டுமனெத்
தோன்றாத ஒருவனுக்கு உன்னைக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டுமெனத்
தோன்றியது முதலில் உன்னை ஆச்சர்யப்படுத்தினாலும் காரணத்தை நீ
உடனே புரிந்து கொண்டாய்.
‘ஏன் நீ போனதுக்கு அப்பறம் இங்க நான் வேற
யார் கூடயாச்சும் போயிருவேன்னு நினைக்கிறியா?” அவன் தடுமாறி
சமாளித்தான் ‘ச்சே ச்சே அப்டி இல்லம்மா..”
“அப்பறம்? இத்தன வருசமா பொண்டாட்டியக் கூட்டிட்டுப் போகனும்னு
தோணல… ஒரு மாசம் கூட ஆகல என்னயக் கூட்டிட்டுப் போகனும்னு
தோணுது… இதுக்கு நான் சரியா வரமாட்டேன்… வேற ஆளப் பாரு…” நீ
கோவமாக சொல்லிவிட்டுப் போய்விட்டாய். நான் அங்கு இருப்பதா
போய்விடுவதா எனத் தெரியாத குழப்பத்தில் மலங்க மலங்கப் பார்த்துக்
கொண்டு நின்றேன். தன் பையில் இருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் என்
கையில் கொடுத்தவன் உன்னிடம் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போனான்.
ஊருக்குப் போவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக அவன் மீண்டும் நம்
வீட்டிற்கு வந்தபோது அவனுடன் இன்னொரு தடியனும் வந்திருந்தான்.
இருவரும் ஒரே பட்டாலியனில் வேலை செய்கிறவர்கள். விடுமுறை முடிந்து
ஒன்றாக ஊருக்குப் போக இருப்பதால் விருந்துக்கு அழைத்து வந்திருந்தான்.
அந்தப் பிற்பகல் வீட்டில் என் இருப்பை விரும்பியிராத நீ சினிமாவிற்கு
அனுப்பினாய். நான் டிக்கட் கூட எடுக்கவில்லை தெரியுமா? ஆப்ரேட்டர் சீனு
மாமாவை உனக்குத் தெரியும் தானே? நமது வீட்டிலிருந்து இரண்டு தெரு
தள்ளி இருப்பவர்… ஆப்ரேட்டர் ரூமிற்கே கூட்டிப்போய்விட்டார். அவர் மடியில்
அமர்ந்து கொண்டுதான் முழு படத்தையும் பார்த்தேன். அன்று மட்டுமல்ல
அதற்கு முன்பும் கூட சிலமுறை அவரின் மடியில் அமர்ந்து படம்
பார்த்ததுண்டு. நான் அவ்வளவு வளர்ந்தும் என்னைக் குழந்தையைப் போல்
மடியில் வைத்துக் கொள்வார். பாதிப்படம் அவர் மடியில் உட்கார்ந்திருப்பேன்,
திடீரென அவசர அவசரமாய் கழிவறைக்கு ஓடுவார். திரும்பி வரும்போது
களைத்துப் போனவராய் மறக்காமல் இருவருக்கும் டீ கொண்டு வருவார்.
ஒரே ஒரு முறை செல்லமாய் அவரின் கன்னத்தில் நான் முத்தமிட்டு
இருக்கிறேன்.
நான் படம் முடிந்து வீடு திரும்புகையில் எந்தச் சத்தமும் இல்லாமல்
இருண்டிருந்த படுக்கையறையின் மூலையில் நீ சுருண்டு கிடந்தாய்.
நினைவுகள் இல்லாத உன்னை எழுப்ப எவ்வளவு முயன்றும் முடியவில்லை.
விளக்கைப் போட்டபோது அந்த அறை முழுக்க உன் குருதி பரவிக் கிடந்தது.
கண்கள் மட்டும் பாதி திறந்திருக்க அப்போதும் இந்த உலகத்தின்
அருவருப்பான எல்லாவற்றைக் கண்டும் சிரிப்பவள் போல் உன் வாய்
சின்னதாய் புன்னகைத்தபடி இருந்தது. மூச்சு சீராக இருந்ததால் நான்
வேகமாக ஓடிப்போய் பக்கத்தில் இருப்பவர்களைக் கூட்டி வந்தேன்.
நீ முழுஆரோக்யத்தோடு இருக்கையில் உன்னைத் தொட்டுப் பேச விரும்பிய
எல்லோரும் அன்று அருவருப்பாகப் பார்த்தனர். மருத்துவமனையில்
உன்னைச் சேர்ந்த பின்பாகத்தான் உன் யோனியின் கிளிட்டோரியஸை அந்த
மிருகங்கள் கடித்துத் துப்பியிருந்தது தெரிந்தது. உடல் தான் மூலதனமென நீ
சொல்லிக் கொடுத்த அவ்வளவும் அதன்பிறகு என்னை அச்சுறுத்தியது. என்
அருகில் வரும் ஒவ்வொரு ஆணும் என் கிளிட்டோரியஸை கடித்துத் துப்பும்
வன்மங் கொண்டவனாகவே எனக்குத் தெரியத் துவங்கினான்.
இரண்டாவது நாள் நினைவு திரும்பிய நீ அந்தப் பிற்பகல் நடந்ததைச்
சொன்னாய், தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் ஒரு பெண்ணின் மீது
நிகழ்த்தப்படுக்ம் வன்முறையை விடவும் கொடூரமானது இவ்வுலகில்
வேறெதுவும் இல்லை. ஆனாலும் நீ கொஞ்சம் தைர்யமானவள் தானே?
இரண்டு பேரில் ஒருவனின் குரல் வளையை மட்டுமாவது நீ கடித்துக்
கொன்றிருக்கலாம். எந்தப் பிசிறுகளும் இல்லாமல் எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒரு பெண்ணைப் புணர்ந்தபடி அந்த மிருகங்கள் உல்லாசமாக
வாழ்கிறார்கள் என்பதை நினைக்கையில் சத்தியம் தர்மம் எல்லாவற்றின்
மீதும் காறி உமிழவேத் தோன்றுகிறது. உன்னைக் குணப்படுத்துவது
மருத்துவர்களுக்கு அத்தனை எளிதான காரியமாய் இல்லை. அங்கிருந்து
சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்,
யாரையுமே தெரியாத இந்த நகரில் நாம் ஒவ்வொரு வேளை உணவுக்கும்
யாரோ ஒருவரின் கருணையை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்களானோம். நல்ல
வேளையாக சர்ச்சிலிருந்து வந்த சிஸ்டர்கள் நமக்குக் கொஞ்சம் இரக்கம்
காட்டினார்கள். அடிக்கொருதரம் உனக்கு உடல்நலமில்லாமல் போனதால்
பெரும்பாலும் நீ மருத்துவமனையிலேயேதான் இருந்தாய். அந்த
மருத்துவமனைதான் என்றெறைக்குமாய் உன்னை என்னிடம் இருந்து
பிரித்துக் கொண்டு போனது.
உன்னைத் தகனம் செய்து வந்த நாளிலும் அதன்
பிறகு அபூர்வமாய் உன் நினைவு வருகிற நாளிலும் தவறாது ஒன்றை
மட்டுந்தான் திரும்பத் திரும்ப யோசிக்கிறேன். ‘அடுத்த பிறப்பில் நான் உன்
காதலனாய்ப் பிறக்க வேண்டும். நீ பார்த்திராத அனுபவித்திராத மகத்தான
காதலை உணரச்செய்யும் காதலனாய். வேறு எந்த உயிர்களை விடவும்
உன்னை அதீதமாய்க் காதலிக்கிறேன் அம்மா….’
முத்தங்களுடன்…
ஆனந்தி.



