top of page

பாண்டியக் கண்ணனின் மேடை.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Feb 24
  • 4 min read


“சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ கம்பி வேலியோ அல்ல. சாதி என்பது ஒரு கருத்து நிலை, ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பெளதிகத் தன்மையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் கருத்து நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்.”

-       பாபாசாகேப் அம்பேத்கர்

 

பாண்டியக் கண்ணனின் சலவான் எனக்குப் பிடித்தமான நாவல்களில் ஒன்று. பல்வேறு இடங்களில் அந்த நாவலைக் குறித்து குறிப்பிட்டு பேசியிருக்கிறேன். திருமங்கலம் விருதுநகர் பகுதியில் வாழும் குறவர் மக்களின் வாழ்க்கைப் பின்னனியில் எழுதப்பட்ட அந்த நாவலில் வெளிப்பட்ட வாழ்க்கை நான் என் பால்யத்தில் கண்டவை. ஆனால் அந்த வாழ்க்கையை நான் பார்வையாளனாக அணுகியதற்கும் யதார்த்திற்குமான பாரிய வேறுபாட்டை அறிந்து மிகவும் தொந்தரவிற்குள்ளானேன். ஒரு மலக்கிடங்கை சுத்தம் செய்யும் காட்சி இரண்டு பக்கங்களுக்கு விரியும். அதுபோன்றதொரு காட்சியை நான் வேறு நாவல்களில் வாசித்ததில்லை. மிகவும் எளிமையான அதே நேரம் காத்திரமாக சொல்லப்பட்ட கதை சலவான். அந்த எதிர்பார்ப்பிலேயே அவரது மேடை என்கிற நாவலையும் வாசிக்கத் துவங்கினேன்.


அரசு, நிறுவனம், அரசியல் இவை எல்லாவற்றுக்குமே பல்வேறு முகங்கள் இருக்கின்றன. பணம் படைத்தவர்களுக்கும், ஆதிக்க சாதியில் பிறந்தவர்களுக்கும் தெரியும் முகமும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவனுக்கு தெரியும் முகமும் வேறு வேறானவை. ஒரு புரட்சிகர இயக்கமாகத் தந்தைப் பெரியாரால் துவங்கப்பட்ட திராவிடர் கழகம் பின்பு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியாகி ஆட்சிக்கு வந்ததன் பின்னால் எத்தனை பேரின் தியாககங்களும் உழைப்பும் இருந்தன என்பது இந்த நாவலில் ஒரு இழையாக  சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி நீண்ட போராட்டங்களுக்குப்பின் ஆட்சியதிகாரத்திற்கு வந்த இயக்கத்தின் தொண்டர்களுக்கு அவர்களது உழைப்பிற்கான பலன்கள் சம அளவில் பகிரப்படவில்லை என்பதை சொல்கிறது இந்தக் கதை. 


விருதுநகரின் குறத்தெருவில் பிறந்த பாகண் பெரிய திரைப்பட இயக்குனராகும் கனவுகளைக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்தக் கனவுகளை எட்டிப்பிடிக்கும் வழி தெரியாமல் துவக்கத்தில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக வாழ்வைத் துவங்குகிறான். பாகணின் தந்தை பாண்டி  விருதுநகர் மாவட்டத்தில் தி மு க என்னும் இயக்கத்தை வளர்க்க உழைத்தவர்களில் முக்கியமானவர். மூன்று பாண்டிகள் அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்க்க போராடினார்கள். மற்ற இரண்டு பாண்டிகளும் ஆதிக்க சாதியில் பிறந்த காரணத்தால் மந்திரிகளாக மிகப்பெரிய அதிகாரத்திற்கு வந்துவிட பாகணின் தந்தை முப்பதாண்டுகளுக்கும் மேலாக அந்த நகரின் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார். தனது நிலை மகனுக்கும் வரக்கூடாதென வைராக்கியமாக இருந்து அவனுக்கு அரசியலில் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைக்கிறார். ஆனால் சாதி  ஓட்டுகளும் பண பலமும் இல்லாமல் பதவி எப்படி கொடுப்பது என கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலில்லாமல் அமைதியாகிறார். தந்தை மகன் இருவரது நீண்ட கால உழைப்பிற்கும் ஆறுதலாக  ஒரு சிறிய அரசுப் பணி பாகணுக்கு கிடைக்கிறது.


அரசுப் பணிக்கு வந்த பின்னாலும் பாகணின் சினிமாக் கனவுகள் ஓய்ந்தபாடில்லை. உள்ளூரில் நாடகக் குழு ஒன்றைத் துவங்கி நாடகம் போடத் துவங்குகிறான். நாடககக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் வறுமை புறக்கணிப்பு இவையெல்லாம் அவனைத் துரத்தினாலும் அவன் மன உறுதியோடு நாடகம் போடுவதைக் கைவிடுவதில்லை. ஓரளவு மக்களால் அறியப்பட்டவனாக மாறிய நேரத்தில் உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவனாக விருதுநகரிலிருந்து நாகர்கோயிலுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறான்.


நாகர்கோவிலுக்கு இடம் மாற்றக் கடிதத்தோடு வரும் பாகணின் நினைவுகளிலிருந்து கதை சொல்லப்படுகிறது. இந்தப் புதிய சூழலில் எவ்வாறு வாழ்வைத் துவங்கப் போகிறேன் என அவன் கவலைப்படுகிறான். நிலம், மொழி வாழ்க்கைச் சூழல் எல்லாம் வேறான ஒரு நிலத்தில் திடீரென ஒருநாள் வாழ்வைத் துவங்குவது எளிதான காரியமல்ல. எல்லாவற்றுக்கும் மேல் எங்கு சென்றாலும் சாதி ஒரு கத்தியாக அவனது தலைக்குமேல் எப்போதும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூகத்த்தின் புறக்கணிப்புகளாலும் சாதியப் பாகுபாடுகளாலும் எப்போதும் அலைக்கழிப்புகளுடன் வாழும் ஒருவனது மனப்போராட்டத்தைச் சொல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் புறவயமான சிக்கல்களை எதிர்கொண்டு அவன் முடங்கிப் போவதிலேயே இந்த நாவல் முடிந்துவிடுகிறது.


சலவான் நாவலில் பாண்டியக் கண்ணனின் பலமாக நான் கண்டது கதைக்களம் குறித்த தரவுகளும் பாவனையற்ற சொல்முறையும்தான். ஆனால் இந்த நாவலில் பெரும்பாலான காட்சிகளும் சம்பவங்களும் எந்தவிதமான ஆழமும் இன்றி சொல்லப்பட்டிருப்பதில் சிறிய ஏமாற்றம் மிஞ்சியது. ஒரு அரசு அலுவலகத்தில் சாதி எவ்வாறு இயங்கக்கூடும்? கடைநிலை ஊழியரிலிருந்து மேலதிகாரிகள் வரை எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை சொல்வதற்கான  வாய்ப்புகள் ஏராளமிருந்தும் அவை விரிவாக சொல்லப்படவில்லை. பாகண் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு நிற்கும் காட்சியில் அவை சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும் அதில் மேலதிகாரியின் இச்சைக்காக அவன் பழிவாங்கப்பட்டான் என்கிற செய்தியே வலுவாக சொல்லப்படுகிறது. அந்தக் கதாப்பாத்திரத்தின் ஆதார பிரச்சனை என்பது ஒருவன் தான் பிறந்த சாதியின் காரணமாக எவ்வாறு இழிவுபடுத்தப்படுகிறான் என்பதுதான்.


இந்த நாவலில் பாகண் நாடகக் கலையில் எத்தனை தீவிரமாக இயங்குகிறான் என்கிற பகுதிகள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.  சிறிய நகரங்களில்   சாதியின் காரணமாக அதிகாரம்  ஒரே ஆளிடம் நீண்டகாலம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.  பாகணும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து துவங்கும் மூவர் நாடகக்  குழு நீண்ட போராட்டங்களுக்கு நடுவே நாடககங்களைப் போடுகிறார்கள்.  வீதிமுனைக் கூட்டங்கள், நாடகங்களுக்கு அனுமதி வாங்குவதற்கும் நிதி திரட்டுவதற்கும் நடக்கும் போராட்டங்கள் ஏராளம். நாடகத்திற்கான நடிகர் நடிகைகள் அமைவதும், தொழில் நுட்பக் கலைஞர்கள் அமைவதும் எளிதாக நடக்கக் கூடியதல்ல. இவ்வளவு சிரமங்களையும் தாண்டி போராடி நிகழ்ச்சியை நடத்திவிட்டாலும் அதனால் மிஞ்சுப்போவது கடன் தான். பாகண் அப்படி தொடர்ந்து கடனாளியாகிறான். ஆனாலும் நாடகம் போடுவதைக் கைவிடுவதில்லை.  


நீண்டகாலம் ஒன்றாகப் பழகும் நண்பர்கள்  மற்ற பகுதிகளில் நாடகம் போடுகையில் எந்த புகாருமில்லாமல் இருக்கிறார்கள். பாகணின் சொந்த வீதியில் நாடகம் போடுவதற்காக பேச்சு எழுகிறபோது விருப்பமில்லாமல் பிரிகிறார்கள். நாடகத்தை பாகணோடு இணைந்து எழுதும் பாலு  நாடகப் பிரதியைக் கிழித்துவிடுகிறான். நடிக்க வரவேண்டியவர்கள் வராமல் போகிறார்கள். அப்படியென்றால் இத்தனை நாளும் அவனிடம் அவர்கள்  வெளிப்படுத்திய நட்பு எத்தனை போலியானது? அவனது இயலாமையை நாடகம் ஒருங்கிணைக்கும் விழாக்குழுனரைப் போலவே அவனது மேலதிகாரியும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறபோதுதான் அவன் வெகுண்டு எழுகிறான். அவனது எதிர்ப்பு கேள்வி கேட்டது மட்டுந்தான்.  அரசு அலுவலகங்களில் நீண்டகாலம்  வேலை செய்ய விரும்புகிறவன் கண், காது வாய் இவற்றை நிரந்தரமாக மூடிக்கொள்ள வேண்டும். விழிப்போடு இருப்பது அவனை பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கும்.


இந்தப் பணிக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது தந்தையின் நீண்டகால அரசியல் பணி.   1989 வது வருடம் எம்.ஜி.ஆரின் இறப்பிற்குப் பின்னால் வரும் தேர்தல்  முக்கியப் பகுதியாக இடம் பெற்றுள்ளது. நீண்டகாலம் பதவியில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பாகணைப் போன்ற பல்லாயிரக் கணக்கானோர்  பாடுபட்டார்கள். ஒரு ரிக்‌ஷா தொழிலாளியாக இருக்கும் பாகண் தேர்தல் வேலைகளை  இரவு பகல் பாராமல் செய்கிறான்.  


சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் தேர்தல் என்பது இன்னொரு திருவிழா.  தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகள், ஊரின் சுவர்களை ஆக்ரமிக்கும் போஸ்டர்கள், மக்களின்  முகங்களில் வெளிப்படும் திடீர் சிரிப்பு, இருபத்தி நாலு மணி நேரமும் இடைவிடாமல் ஒலிக்கும் ஒலிப்பெருக்கிகள் என அந்தக் காட்சிகளை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் பார்க்க முடியும். அப்படி தனித்துவமான தருணங்களை உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றபின்  பாகணும் அவனைப் போன்றவர்களும் தங்களது முந்தைய வாழ்விலிருந்து எந்த முன்னேற்றத்தையும் காணாமல் இருக்கிறார்கள். எந்தக் கட்சிக்காக உழைத்தார்களோ அந்தக் கட்சியால் கைவிடப்படுகிறார்கள்.  


கலை, அரசியல், அதிகாரம் என எந்த இடமென்றாலும்  அங்கு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கான உரிமைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. மற்றவர்களை விட அதிகமாக உழைக்கிறபோதிலும் அவர்களி விட குறைவான அணுகூலங்களையே பெற முடிகிறது.  இந்த மூன்று தளங்களிலும் இயங்குவதற்கான சாத்தியங்கள் உள்ள இந்த நாவல்  எந்தவொன்றையும் தீவிரமாக வெளிப்படுத்தாமல் அரைகுறையாக சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் களத்தில் சிறிய பதவிகள் கூட கிடைக்காமல் தங்களது வாழ்வைத் தொலைத்த பல்லாயிரம் பேரில் ஒருவரான பாகணின் தந்தையின் கதையில் சொல்வதற்கு எத்தனையோ செய்திகள் இருந்தும் சொல்லப்படாமல் தவிர்த்தது ஏன் எனத் தெரியவில்லை.


திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர் கலைஞர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் என எல்லோருடையப் பெயர்களையும் நேரடியாகக் குறிப்பிட்டு கதைக்குள் எழுத முடிந்திருக்கிறது. ஆனால் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியை சந்திக்கிற இடத்தில் அவரது பெயரைக் குறிப்பிடாமல் சந்தன ராமன் என்று எழுதுவதுதான் ஏன் எனப் புரியவில்லை. சுந்தர ராமசாமியை  பாகண் சந்திக்கும் அந்தக் காட்சியில் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்றுதான் குழப்பமாக இருக்கிறது. இத்தனைக்கும் சுரா நல்லவிதமாகவே சொல்லப்பட்டிருக்கிறார். விமர்சனமோ விலக்கமோ இல்லை. அவரது பெயரையே குறிப்பிட்டிருக்கலாமே?  அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் விமர்சிக்க முடிந்த ஒரு பிரதியில் பிள்ளை கெடுத்தாள் விளை மாதிரியான ஒரு கதையை எழுதிய சுந்தர ராமசாமியின் மீது மட்டும் இத்தனை கரிசனம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.  

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page