பிறழ் – டோபமைன் தலைமுறையிலிருந்து ஓர் கதை
- லக்ஷ்மி சரவணகுமார்

- 1 day ago
- 3 min read

எங்கோ ஒரு நேர்காணலில் ஜெயகாந்தன் சொன்ன இந்த வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அவரது கதைகளில் பெரும்பாலானவையோடு அல்லது முழுமையாகவே எனக்கு உவப்பில்லை. ஆனால் இந்த வரிகள் ஆழமாக எனக்குள் படிந்துவிட்டது. ‘எதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வையுங்கள், கடவுள், தத்துவம், கலை இப்படி ஏதாவது ஒன்றில். நம்பிக்கையோடு இருப்பது ஒரு தனிமனிதனுக்கு முக்கியம்.’ இரண்டாயிரத்திற்குப் பிறகான தலைமுறையினர் தனது முந்தைய தலைமுறையினரிடமிருந்து பல்வேறு வகைகளில் துண்டித்துக் கொண்டனர். இன்றைக்கு லட்சியவாதம் குறித்து பேசுவது அபத்தமான காரியமாகப் பார்க்கப் படுகிறது. ஆனால் இரண்டாயிரத்திற்கு முந்தையை தலைமுறையினரை ஓரளவு அவர்களது வாழ்வில் பற்றோடு இருக்க வைத்தது இந்த லட்சியவாதம் தான். கல்வி, வேலை, குடும்பம் இது எல்லாவற்றின் மீதும் குறைந்தபட்சமான பிடிப்பு வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கு போதுமானதாக இருந்தது. அந்த வாழ்க்கை சுவாரஸ்யமானதா சலிப்பானதா என்பது தனித்த விவாதத்திற்கு உரியது. ஆனால் தன்னளவில் அவர்கள் ஒரு முழுமையைக் கண்டடைந்தனர்.
இந்தப் புதிய தலைமுறை புதிய தொழில்நுட்பங்களோடு பிறந்தவர்கள். ஏதாவது ஒன்றின் மீது அதீத விருப்பம் கொள்வதும் விரைவிலேயே அதிலிருந்து வெளியேறுவதும் இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. சமூக ஊடகங்களில் வழியாக உதிர்க்கப்படும் புதிய சிக்கல்கள், குழப்பங்கள், மருத்துவத்துறை வார்த்தைகள் இவையெல்லாவற்றையும் தங்களது அலைபேசியில் ரீல்ஸை நகர்த்திப் பார்ப்பதுபோல் பார்க்கத் துவங்கிவிட்டனர்.
சில மாதங்களுக்குமுன் என்னிடம் கதை விவாதத்திற்கு ஒரு இளைஞர் வந்திருந்தார். கல்லூரி முடித்த கையோடு வந்ததால் அதிகபட்சம் இருபத்தி மூன்று வயது இருக்கலாம். உலக நடப்புகள் குறித்தும் இந்த தலைமுறை பழக்கவழக்கங்கள் குறித்தும் நல்ல ஞானமிருந்ததால் அவரோடு சில நாட்கள் உரையாட முடிந்தது. எங்கள் சந்திப்பிலேயே தனது அரசியல் நிலைப்பாடுகள், பாலியல் தேர்வுகள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டார். எல்லாவற்றிலும் மித மிஞ்சிய சலிப்பையே அவர் வெளிப்படுத்தியதில் பார்க்க முடிந்தது. ‘இளையராஜாவோட இசை பிடிக்கல, ப்ளாக் அண்ட் ஒயிட் படங்கள இப்ப பாக்க முடியல… இந்தியாவுல நக்சல் இயக்கத்த நீர்த்துப் போக வெச்சதே மார்க்சிஸ்ட் கட்சிதான்…’ என தனக்குத் தெரியாத துறைகளே இல்லை என்பது போல் பேசினார். எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது அல்ல ஏதாவதொன்றை முழுமையாகக் கற்றுக் கொள்வதுதான் ஞானம் என அவருக்குச் சொன்னேன். ‘பூமர் மாதிரி பேசாதிங்க..’ என சிரித்தார்.
எங்கள் கதை விவாதம் அத்தனை சிறப்பாக செல்லவில்லையென்றாலும் இந்தத் தலைமுறை இளைஞர்களைப் புரிந்துகொள்ள ஒரு துவக்கமாக இருந்தது. ஓரிரு வாரங்களிலேயே அவரது நம்பிக்கைகள் மாறக்கூடியதாக இருந்தன. தேவைக்கு அதிகமான தகவல்கள் இவரை சோர்வுறச் செய்திருக்கலாமோ என நினைத்துக் கொண்டேன். பிற்பாடு ஒரு கல்லூரியில் பேசச் சென்றபோது முதல் நாற்பது நிமிடங்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் முடிவோடு எனது இலக்கிய அறிவைக் கொட்டினேன். பின்பு கேள்வி பதில் நேரம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு இளைஞர் ‘நீங்க என்ன பேசினீங்கன்னு பாதி மேட்டர் புரியல…’ என்றார். எனக்கு சோர்வாகிவிட்டது. இந்தத் தலைமுறைக்குப் புரிவது போல் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்று புரிந்துகொண்டேன்.
நிற்க… இப்படி இந்தத் தலைமுறையினரின் உளச் சிக்கல்கள் நடவடிக்கை மாற்றங்கள் என பேசினால் அது முந்தைய தலைமுறை பூமரின் புலம்பலாக மாறிவிடக் கூடிய அபாயம் உண்டு. ஆனால் நான் அவர்களையும் அவர்களது சிக்கல்களையும் புரிந்துகொள்ளும் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டுமென நினைக்கிறேன். பள்ளிக்கூட வயதிலேயே கடுமையான உளச்சோர்வு, மனச்சிதைவு, panic attack போன்ற சிக்கல்கள் கொண்டவர்களை இன்றைக்கு ஏராளமாக பார்க்க முடிகிறது. உடலைப் போலவே மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்கிற விவாதம் இன்றைக்கு முக்கியத்துவம் அடைந்திருக்கிறது.
ஒரு இலக்கியவாதியாக இந்த உளச்சிக்கலுக்கான காரணங்களைத் தேடிக் கண்டடைய வேண்டியதும் அது குறித்து உரையாட வேண்டியதும் அவசியம். அந்த வகையில் நிஜந்தனின் பிறழ் என்னும் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. தத்துவம்,உடல், சமூகம் என பல்வேறு காரணிகளின் வழியாக ஒரு இளைஞன் எவ்வாறு மனச்சிதைவுக்கு உள்ளாகிறான் என்பதே இந்த நாவலின் மையமாக இருப்பதோடு எல்லாவற்றையும் அபத்தமாகப் பார்க்கக் கூடிய நிலைக்கு வரும்போது அச்சம் அவனை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது.
இந்த வகையான கதைகள் உலகம் முழுக்கவே ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்றும் எழுதப்படுகின்றன. தமிழில் சம்பத்தையும் கோபி கிருஷ்ணனையும் முக்கியமான உதாரணமாகச் சொன்னாலும் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளும் இந்தத் தலைமுறை சந்திக்கும் பிரச்சனைகளும் முற்றிலும் வேறானது. இந்தக் கதையின் நாயகன் பிறழ்விற்கு உள்ளாக முக்கியமான காரணமாக அவன் தன்னைக் கைவிடப்பட்டவனாக உணர்கிறான். ட்யூசனுக்கு செல்லும் வழியில் ஒரு மனநலம் பிறழ்ந்த மனிதன் அல்லது அவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்படுபவன் இவனை வழிமறித்து இவனது வாயில் குறியைத் திணித்து பாலியல் வல்லூறு செய்கிறான். அந்தத் திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து போகும் நாயகன் தனக்கு நேர்ந்த வன்முறையை தான் அதிகம் நம்பும் பவானி அக்காவிடம் போய்ச் சொல்ல அவள் அதையே சாக்காக வைத்துக் கொண்டு மிரட்டி அவனிடம் பாலியில் அத்துமீறலில் ஈடுபடுகிறாள்.
இன்றைக்கு பாலியல் திரைப்படங்களைப் பார்ப்பதும் அது குறித்து உரையாடுவதும் சகஜமாகிவிட்டது. ஆனால் உடல் குறித்தும் பாலியல் விருப்பங்கள் குறித்தும் ஆரோக்கியமாக உரையாடப்பட்டவில்லை. வன்முறையும் அத்துமீறலையும் ஒரு சுவையாக சமூக ஊடகங்கள் கற்றுக் கொடுப்பதால் எதைத் தேர்வு செய்வதென்கிற குழப்பம் அனேகரிடத்தில் உள்ளது. உடலின் இன்பம் பற்றிய சிந்தனைகளை விடவும் உடலின் மீதான சலிப்பு அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
அவன் தன் மீது நிகழும் இரண்டு அத்துமீறல்களில் நம்பிக்கையிழக்கும் போது, ஏதோவொரு புள்ளியில் மனிதர்களை எதிர்கொள்ள அச்சம் கொள்கிறான். இதில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. நாம் எதிர்கொள்ளும் வன்முறைகளை நிச்சயமாக மற்றவர்களிடம் பகிர வேண்டும், அதே சமயம் யாரிடம் பகிர்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சிதைவுகளையும் உளச்சிக்கல்களையும் குறித்து தங்களது குழந்தைகள் பகிர்ந்துகொண்டால் அதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். சமூகப் பாதுகாப்பு இல்லாத சூழலில் குழந்தைகளின் ஆக இறுதியான நம்பிக்கை பெற்றவர்கள் மட்டுந்தான்.
ஒரே நம்பிக்கையாய் இருக்கும் வாசிப்பின் வழியாக அந்த இளைஞன் இடதுசாரி இயக்கங்களோடு இணைந்து வேலை செய்கிறான். ஆனால் அங்கும் களத்திற்கு வரனும் என அழைப்பு விடுக்கும் அமைப்பு அவனை முழுமையாக ஆதரிக்கிறதா என்றால் இல்லை. அமைப்புகளுக்குள் இருக்கும் பிற்போக்குத்தனங்கள், கலை வடிவங்களை பிரச்சாரமாக மட்டும் பார்ப்பது, எதைப் பேசவேண்டும் யாரோடு பேச வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இவையெல்லாம் அவனை சலிப்படையச் செய்வதோடு ஒரு போராட்டத்தின் போது இவனை கைவிடுவதால் அவன் முழுமையாக் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழக்கிறான்.
மனச்சிதவிக்குப் பிறகான காலகட்டத்தில் மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு சோதனை எலிகளாகப் பார்க்கின்றன என்பதிலும் அவனது உளச்சிக்கல் அதிகமாகிறது. தனக்கு விருப்பமான கதாப்பாத்திரத்தோடு நிகழும் உரையாடலை மட்டுமே அவன் நிஜமென நம்புகிறான். தான் நம்பும் ஒரு கற்பனை உலகத்திற்கு முழுமையாக தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவதால் யதார்த்தத்தில் தன்னுடைய இருப்பைக் கண்டு அச்சப்படுகிறான். இந்த நாவலில் சம்பவங்கள் துண்டு துண்டாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் கூர்மையான கத்தியொன்றால் நம்மைக் கீறிப் பார்ப்பதுபோல் அந்த சம்பவங்கள் தொந்தரவு செய்கின்றன. மனநல மருத்துவமனை கழிவறையில் இருப்பவனிடம் ஒருவன் அத்துமீறி உள்ளே நுழைந்து இவனது வாயில் மலத்தைத் திணிக்கும் போதும் எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் இருக்கிறான். கைவிடப்பட்டவர்களின் மீது காலமும் சமூகமும் என் கருணை காட்டுவதில்லை.
வாழ்வின் மீதான சலிப்பும் கசப்பும் நிரம்பிய இந்த நாவலில் ஏதாவதொரு இடத்தில் அந்த இளைஞன் தன்னைம் மீட்டுக் கொள்ளமாட்டானா என வாசிக்கும் பூமர்த்தனமான மத்திய வயது மனிதனாக நானும் யோசிக்கிறேன். ஆனால் பாலியத்தில் அனேக முறை பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளான சொந்தத் தந்தையாலும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான ஒரு மனிதனாக அதையெல்லாம் பேச எனக்கு எத்தனை காலம் ஆனது என்பதை யோசித்துப் பார்க்கிறேன். முப்பது வயதுகளைக் கடந்தபின்னால் தான் என்னால் முடிந்தது.
வன்முறைகளையும் அத்துமீறல்களையும் எதிர்கொண்டாலும் நம்பிக்கையோடு பற்றிக்கொள்ள யாரோ சிலர் கிடைத்ததால் நான் தப்பியிருக்கிறேனோ என இப்போது யோசிக்கிறேன். இந்த நாவலில் வரும் இளைஞன் நமக்கு இந்தத் தலைமுறையை உற்றுக் கவனிக்கவும் அவர்களோடு உரையாடவும் வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறான். எல்லாவற்றையும் விட குழந்தைகளுக்கு பெற்றவர்களிடமிருந்து emotional presence எத்தனை முக்கியம் என்பதை அடையாளப்படுத்திய வகையிலும் இந்த நாவல் முக்கியமானது. கதை சொல்லப்பட்ட விதத்திலும், மொழித் திறனிலும் பண்பட்ட ஒரு எழுத்தாளனின் ஆற்றல் வெளிப்படுகிறது.
அனைவரையும் வாசிக்கப் பரிதுரைக்கிறேன்.



