top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

வீடு திரும்புதல்.




வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை;ஆனாலும் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார்.”

- மத்தேயு 6:26


1

அவன் பொக்காராவிலிருந்து சல்லேவிலுள்ள இந்த பண்ணைக்கு வந்து சேர்ந்த இரண்டாவது நாள் வெரோனிகாவும் ச்சாங்கும் வந்திருந்தார்கள். இவனிலும் அரையடி உயரம் கூடுதலான வெரோணிகா, தன்னை உக்ரேன் தேசத்தவளென அறிமுகப்படுத்திக் கொண்டாள். ச்சாங் தைவானிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். சசியும் ச்சாங்கும் ஒரு அறையிலும், வெரோனிகாவிற்கு தனியறையும் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கழிப்பறையும் குளியலறையும் பொதுவானவை. வெரோனிகாவும் ச்சாங்கும் ஊஃபிங்கில் ( woofing ) நிறைய முறை பயணித்தவர்களென்பதால் முற்றிலும் புதிய சூழலென்கிற பிரக்ஞை எதுவுமில்லாமல் அந்த ஊருக்கும் வீட்டிற்கும் எளிதாய் தங்களை பழக்கிக்கொண்டார்கள். சசி முதல் முறையாய் இந்த ஊஃபிங்கை பயன்படுத்துகிறவன் என்பது அவன் வெளிப்படுத்திய கூச்சமான நகர்வுகளில் தெரிந்தது. வேடிக்கையும் கேளிக்கையும் நிரம்பிய சுற்றுப்பயணங்களைப் போலில்லாமல் இயற்கையோடும் சக மனிதர்களோடும் நெருங்கி உறவாட சந்தர்ப்பங்களை ஊஃபிங் உருவாக்கித் தருவதை இங்கு வந்தபிறகு கண்கூடாகத் தெரிந்து கொண்டிருந்தான்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகள் சூழ்ந்திருக்கும் இந்த இடம் அவனது சொந்த ஊரை ஒத்திருந்தது. இந்த ஊரென்று இல்லை, மொத்த நேபாளமும் மலைகளுக்குள் தன்னை பாதுகாப்பாக ஒளித்துக் கொண்டுள்ளதாக நினைத்தான். இங்கிருக்கும் மலைகளும் மலைகளைச் சூழ்ந்த மேகங்களும் அவன் இதுவரைப் பார்த்திருந்த மலைகளைப் போல் இருந்திருக்கவில்லை. பொக்காராவின் மலைகளில் பிக்குவின் ஆழ்ந்த நிதானத்தைப் பார்த்தவனுக்கு மரங்கள் சூழ்ந்த இந்த மலைத்தொடரில் பறவைகளின் சலசலப்பும் பள்ளத்தாக்கின் வயல்களிலிருந்து எதிரொலிக்கும் நேபாள மக்களின் பழங்குடிப் பாடல்களுமாக சேர்ந்து மலைக்கோயிலில் பார்த்த வாசிமலையானின் திருவிழா நாட்களை நினைவுபடுத்தியது. மலைகளில் நிகழும் கோவில் திருவிழாக்களுக்கு என்றிருக்கும் இசையும் பாடலும் நடனமும் வேறெங்கும் காணமுடியாதது. வருடம் முழுமையும் நீண்டிருக்கும் அசாத்தியமான அமைதியையும் குளிரையும் கடந்த கொண்டாட்டத்தில் மிளிரும் தனித்துவமது.


சசியின் அப்பா கொடைக்கானலில் ஒரு ஜெர்மன்காரருக்கு சொந்தமான பண்ணையொன்றில் வேலை செய்தவர். மலைமுகடுகளும் அதிகாலைக் குளிரும் அவரது வாழ்க்கை முழுவதும் அவரை விட்டு விலகியிருக்கவில்லை, சசிக்கு அப்பாவின் நினைவென்பது ஆரஞ்சுப் பழங்களின் மணம். அந்தத் தோட்டத்தின் ஒவ்வொரு கனியிலும் அவரின் உழைப்பிருந்ததால் அந்தக் கனிகள் அபூர்வமானவை. அவனது பதினோறு வயதில் அவர் இறந்த பிறகு அந்த பண்ணைக்கும் அவனுக்குமான உறவு முறிந்து போனது. பல்லாயிரம் மைல்கள் தொலைவுகளுக்கு அப்பாலிருக்கும் இந்தத் தோட்டம் அவனது பால்ய நினைவுகளை மீட்டெடுத்ததோடு மறந்து போயிருந்த அப்பாவின் மணத்தையும் அருகாமையையும் உணரச் செய்தது. ப்ளம் மரங்கள், இஞ்சித் தோட்டங்கள், பூசணிக் கொடிகள், தக்காளிச் செடிகள், மிளகாய்ச் செடிகள் என எல்லாமும் விளையும் வளமான நிலம். நான்கு எருமை மாடுகளும் இருபது ஆடுகளும், நிறைய கோழிகளும் அந்த வீட்டிலிருந்தவர்களுக்குத் துணையாய் இருந்தன. பயணிகளாய் வருகிறவர்கள் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் வேலை செய்தால் போதுமானது. மற்ற நேரங்களில் விருப்பபடி வெளியில் சென்று வரலாம்.


அவனிடமிருந்த இந்தியத் தன்மையைக் கவனித்த வெரோனிகா, “இந்தியாவுல எந்தப் பகுதில இருந்து வர்றீங்க?” என ஆர்வமாகக் கேட்டாள். பெயர் மட்டும் தெரிந்த அறிமுகத்தில் இத்தனை நட்போடு ஒரு பெண் பேச வந்ததில் ஆச்சர்யப்பட்டவன் ‘தன்னை தென்னிந்தியனென்றான்.” அவள் முன்னிலும் ஆர்வமாய் “கேரளாவா இல்ல தமிழ்நாடா எனக்கேட்க, சசி தமிழ்நாடென்றான். வெரோனிகாவின் முகத்தில் புதுவிதுமானதொரு மகிழ்ச்சி. ”ரியலி? எனக்கு என்னோட ட்ராவல் டேஸ்லாம் நியாபகத்துக்கு வருது. போன வருஷம் கொடைக்கானல் தாண்டி ஒரு ஃபார்ம்ல மூணு வாரம் இருந்தேன்.” என்று உற்சாகமாக சொல்ல, சசி “நெஜமாவா? கொடைக்கானல் மலையடிவாரத்துலதான் என் சொந்த ஊர்..” என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல அவர்களோடு வேலை செய்து கொண்டிருந்த ச்சாங் திரும்பிப் பார்த்தான். வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த இருவரும் ஒரே நிலத்தைச் சேர்ந்தவர்களைப் போன்ற உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். பத்துப் பதினைந்து நாட்களுக்குப்பின் சசி தான் மனப்பூர்வமாக சிரித்ததை அப்போதுதான் உணர்ந்தான்.


2


நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியிருந்தது அவனது அறை. ரயில் நிலையத்தின் வாசலில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலைக்குச் செல்லும் சிறிய பாதையில் இடதுபுறம் இரண்டாவது கட்டிடம். மேன்ஷன்களின் அழுக்கு நாற்றம் பிடிக்காமல் இந்த சின்னஞ்சிறிய அறைக்கு நகர்ந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. மூன்று நிமிடங்களுக்கொருமுறை கடந்து செல்லும் மின்சார ரயில்களின் சத்தத்தோடு வாழ்வது அவனுக்குப் பிடித்துப் போயிருந்தது. இங்கு வந்தபிறகுதான் தனியாக படம் இயக்குவதற்கான எல்லா சாத்தியங்களும் கூடிவந்தன. ஆறேழு வருடங்களில் மூன்று திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்திருந்த அனுபவத்தில் அவன் தயார் செய்திருந்த கதையை சில தயாரிப்பு நிறுவனங்களிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்க்கை என்பது தினமும் மாறக்கூடியது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் படங்களில் தோல்வியுறும் படங்கள் அந்தப் படத்தின் இயக்குநரை மட்டுமல்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளரை நம்பியிருக்கும் வேறு சில இயக்குநர்களையும் பாதிக்கிறது. அபூர்வமாக கிட்டும் சிலத் திரைப்படங்களின் வெற்றி கோடம்பாக்கத்திலும் சாலிகிராமத்திலும் கே கே நகரிலும் சின்னஞ்சிறிய அறைகளில் பெரும் நம்பிக்கைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது. முதல் படத்தை இயக்குவதற்கான காத்திருப்பில் உள்ள ஒருவன் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் அத்தனைப் படங்களும் வெற்றியடைய வேண்டுமென்றே விரும்புகிறான். ஒரேயொரு வெற்றிக்காக காத்திருக்கும் மனிதனிடம் சொல்வதற்கு ஓராயிரம் கதைகள் இருக்கின்றன அதைக் கேட்பதற்குத்தான் ஒருவருமில்லை. நீண்ட காத்திருப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பின்னால் சில மாதங்களுக்கு முன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் அவன் படம் இயக்க ஒப்பந்தமானான்.


நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல கதாநாயகன், நல்ல கதையென அவன் கனவு கண்ட எல்லாமும் சாத்தியப்பட்டு படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முதலில் கதாநாயகனுக்காக சில மாற்றங்களைச் செய்ய நிர்ப்பந்தித்தார்கள். தயங்கியவனை ‘முதல் படம் சசி, நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்.’ என அவனோடிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். இரண்டாவதாக தயாரிப்பாளருக்காக சில மாற்றங்களைச் செய்யச் சொன்னபோது ஆட்சேபிக்காமலேயே சம்மதித்தான். ஆட்சேபனைகளின்றி உடன்படத் துவங்கியபின் அவனைச் சூழ்ந்த ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்ததை தனக்குப் பிடித்ததை எல்லாம் திணிக்க நினைத்தார்கள். தயாரிப்பாளருக்கு வேண்டிய நடிகை, கதாநாயகனுக்கு வேண்டப்பட்ட ஒளிப்பதிவாளர் இப்படி எல்லாமும் அவன் விருப்பமின்றி கைமீறி போனபோது ‘இது என் படம் நான் எடுக்கறதுதான் டிசிசன்” என ஒருநாள் அலுவலகத்தில் சத்தமாய்க் கத்த, தயாரிப்பாளருக்கும் அவனுக்குமான முதல் பிணக்கு துவங்கியது. எதிர்ப்புகளை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் மறைத்து வைக்கமுயலும்போது வெறுப்பாக மாறிவிடுகிறது. சசி அந்த வெறுப்பையே அன்றைய தினம் உமிழ்ந்தான். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் படப்பிடிப்புத் தளம் உட்பட எல்லாவற்றிலும் தயாரிப்பாளருக்கும் அவனுக்குமான முரண்பாடுகளும் சண்டைகளும் தொடர்ந்து கொண்டிருந்போதும் கதையின் மீதிருந்த நம்பிக்கையில் படப்பிடிப்புத் துவங்கி பத்து நாட்கள் கடந்திருந்தன. அன்றைய தினம் படப்பிடிப்பிற்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு நாய் தேவையென முன்பே சொல்லப்பட்டிருந்தது. தயாரிப்பு நிர்வாகிகள் செய்த குழப்படியால் பழக்கப்படுத்தப்பட்ட நாய் கிடைக்காமல் அவசரத்திற்கு தயாரிப்பாளர் வீட்டில் வளர்க்கும் ராட்வீலர் நாயை அழைத்து வந்திருந்தனர். நாயை வைத்து அவன் எடுக்க நினைத்த ஒரு ஷாட்டைக் கூட அவனால் எடுக்க முடியவில்லை. தயாரிப்பாளரின் தம்பி சசியின் அருகிலிருந்து அதற்கான கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கூட்டத்தையும் படப்பிடிப்பு சூழலையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த நாய் ஒரு கட்டத்தில் சுற்றி இருந்த எல்லோரையும் கடிக்கப் பாய்ந்தது. எதிர்பாராத அதன் மூர்க்கத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஓட, சசி உச்சபட்ச எரிச்சலில் ‘ஓத்தா ஒரு ட்ரெய்ண்ட் நாயக் கூட்டிட்டு வர்றதுக்கு உங்களுக்கு என்னடா வலிக்கிது ?, நாயா இருந்தாலும் ப்ரட்யூசர் வீட்டு நாய்தான் நடிக்கனுமா..” என கத்தியதை அவன் கையிலிருந்த ஒலிப்பெருக்கி மொத்த படப்பிடிப்புக் குழுவினருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டது. உறவினர் என்கிற வகையில் தயாரிப்பாளர் தேர்வு செய்திருந்த கதாநாயகி, அவன் நாயைத் திட்டவில்லை தன்னைத் தான் திட்டுகிறானென நினைத்து அழுதபடியே படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறிவிட்டாள். அதன்பிறகு நடந்தவை எல்லாம் அவனைப் போலவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரோ சிலரின் படங்கள் வெற்றியடைய வேண்டுமென பிரார்த்திக்கொண்டிருக்கும் எந்த உதவி இயக்குநருக்கும் நடக்கக் கூடாதது.


எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத பருவமென்று எல்லா மனிதர்களுக்கும் எதோவொரு காலகட்டமிருக்கும், அப்படியானதொரு காலகட்டத்தில் அறிமுகமாகி இப்போதுவரை இவனை முழுமையாக சகித்துக் கொண்டிருப்பது ஜோசஃப் தான். மனம் உடைந்து கதறியழ நினைக்கையில் ஆறுதலுக்காக தோள்சாயத் தேடும் உற்ற நண்பன் எங்கோ தூர தேசத்தில் சில ஆயிரம் டாலர்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பானென்றால் அந்த இருவருமே துரதிர்ஸ்டசாலிகள். தன் தகப்பன் இறந்தபோதுகூட கண்ணீர் சிந்தாத சசி அந்த நாள் மொத்த வாழ்க்கைக்குமாக அழுது தீர்த்தான்.

“பத்து வருஷம் டா, இவ்ளோ உழச்சு, காத்திருந்து, அசிங்கப்பட்டு, எவ்வளவோ தியாகம் பண்ணியும் இப்போ நான் ராசி இல்லாதவனாப் போயிட்டேன். படம் எடுத்துத் தோத்துப் போறவனவிட எடுக்காம பாதில விட்டவன் சபிக்கப்பட்டவண்டா…” என்று ஜோசப்பிடம் ஃபோனில் அழுது அரற்றியபோது அவனுமே உடைந்து போனான். சசி ஒரு இயக்குநராக வேண்டுமென்பது அவனுடைய கனவு மட்டுமல்ல, ஜோசப்பைப் போல் சசியை நேசிக்கும் மிகச் சிலரின் கனவும் கூட. கலைஞனுக்கு மட்டுந்தான் அவன் கனவுகளைத் தங்களின் கனவுகளாகப் பார்க்கும் நண்பர்களும் உறவுகளும் கிடைக்கிறார்கள்.


”திரும்ப ப்ரட்யூசரப் போய் பாத்து பேசுடா… என்ன கோவம்னாலும் நீ நேர்ல பாத்து பேசினா சரியாகிடும்.” என்று ஜோசப் நம்பிக்கையாகச் சொல்ல,

“இல்லடா பேச்சுவார்த்தைல சரி செய்ற கட்டத்தல்லாம் தாண்டிப் போயிருச்சு.”

என்று கதறியழுதான். தொடர்ந்து பேசமுடியாமல் இணைப்பைத் துண்டித்தவன் அறையின் கதவை சாத்திக்கொண்டு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டான். இரண்டு பகல்கள் இரண்டு இரவுகள் அறையை விட்டு எங்கும் நகராமல் முடங்கிக் கிடந்தவனுக்கு ரயில் சத்தம் இப்பொழுது அச்சுறுத்தியது. எல்லா ரயில்களும் அவன் மீதேறி அவனுடலை நசுக்கிச் செல்வதுபோல் துர்கனவு கண்டான்.உயிர் வாழ்வதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாக தனக்குத் தோன்றவில்லையென விரக்தியில் ஜோசப்பிற்கு புலனத்தில் செய்தி அனுப்பிய அடுத்த நிமிடம் ஜோசப் அவனை அழைத்தான்.


“எத்தன நாளக்கி இப்டி முடங்கிக் கெடப்ப, எதுவும் முடிஞ்சு போயிரல. எனக்கு உன் திறமை மேல நம்பிக்க இருக்கு. அம்மா, அக்கா ரெண்டுபேரையும் நெனச்சுப் பாரு. நாம வியந்து பாக்கற பல பேர் வாழ்க்கைல பல விஷயங்கள்ல தோத்து அந்த வலில இருந்து மீண்டு வந்தவங்கதான். கிளம்பி எங்கியாச்சும் ட்ரிப் போயிட்டு வா.”


என்று சொல்ல, அதுதான் சரியென சசிக்கும் புரிந்தது. வழக்கமான பயணமாக இருக்கவேண்டாமென யோசித்தபோது ஜோசப் ஊஃபிங் குறித்து அவனுக்கு எடுத்துச் சொல்லி நேபாள பயணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான்.







3


சல்லேயின் இதமான குளிருக்கு அதிகாலையில் விழத்து, வீட்டிற்கு அருகிலிருக்கும் முகட்டிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பது அற்புதமானது. கால்நடைகள் வளர்க்கப்படும் வீடுகளுக்கென தனித்த வாசணையுண்டு. மாடுகளின் மேலிருந்து ஒரு விதமாகவும், அதன் சாணம் மற்றும் சிறுநீரிலிருந்தும் இன்னொரு விதமாகவும் வெளியேறும் வாசணை ஒன்றாகக் கலந்து காற்றில் பரவியிருக்கும். அதிகாலையில் எருமை மாடுகளிடம் பால் கறப்பதிலிருந்து துவங்கம் வேலை. எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் சூடான இஞ்சித் தேநீருக்குப் பிறகு வீட்டைச் சுற்றிலும் சிறு சிறு வேலைகள் செய்ய வேண்டும். மாடுகளுக்கான தீவணத்தை எடுத்துப் போடுவது, சாணத்தை அள்ளி உரத்திற்கென சேமிப்பது, ஆடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதென எளிமையான வேலைகள். சசி இரண்டாவது நாளே வீட்டின் முதலாளியான லஷ்மணுக்குப் பதிலாக பால் கறக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். மாடுகளின் அருகில் நெருங்கிச் சென்றபோது வயது குறைந்து பால்யம் அன்மித்தது. கைவிரல்களில் விளக்கெண்ணையைத் தேய்த்துக் கொண்டவன் மாட்டின் மடியையும் அடிவயிற்றையும் சில நிமிடங்கள் தடவிக் கொடுத்தபின் நிதமானமாய் அமர்ந்து பால் கறக்கத் துவங்கினான்.


வாழைத் தோட்டங்களும், தானிய வயல்களும், ஏராளமான முதிய மரங்களும் நிரம்பிய இந்த பள்ளத்தாக்கில் வீடுகள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு சொற்பமாய் இருந்தன. தங்களின் வாழ்வை நிறைவாய் வாழ்வதற்குத் தேவையான எல்லாமும் அவர்களுக்கு அருகிலேயே கிடைத்ததால் மக்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தனர். தோட்டங்களில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் தங்கள் தேவைக்கு எடுத்துக் கொண்டதுபோக அருகிலுள்ள சல்லேவின் சந்தையில் விற்று வருவார்கள். சசி, வெரோனிகா, ச்சாங், மூவரும் காலை நேரங்களில் லஷ்மணின் தோட்டத்தில் வேலை செய்தனர். வெற்றுக் கால்களோடு தோட்டத்து மணலில் புதிதாகச் செடிகளை நடவும், கொய்யா மரங்களில் பழுத்தக் கொய்யாக்களை சரியாகப் பறித்து கூடையில் சேர்க்கவும் அவனுக்குப் பிடித்திருந்தது.

அன்றைய பிற்பகல் உணவுக்குப்பின் லஷ்மண் ’வாங்க நாம ஒரு ஹைக்கிங் போகலாமெனச்’ சொன்னபோது அவர்கள் மூவரும் உற்சாகமடைந்தனர். உடலை உறுத்தாத மெல்லிய உடைகளில் நான்குபேருமாக தென் திசையிலிருந்த குன்றை நோக்கி நடக்கையில் ஓரிடத்தில் நான்கைந்தடி உயரத்தில் மரத்தாலும் வைக்கோல் கூரையாலுமான சிறிய கூடாரத்தைக் கவனித்த சசி

”எதுக்காக இந்தக் கூடாரம்? என்று கேட்டான்.

”ராத்திரி காவலுக்கு இங்க ஒரு ஆள் தங்குவாங்க. மனுஷங்க யாரும் திருட்டுக்கு வர்றதில்ல, ஆனா பன்னிங்க கூட்டமா வரும். அப்பிடி வந்துட்டா வெடி போட்டு துரத்துவாங்க.”

என்று சொல்லிவிட்டு லஷ்மண் முன்னோக்கி நடந்தான். கால்களில் செடிகளும் ஆளுயரப் புற்களும் உரசும் சத்தம் பெருமளவில் எதிரொலித்தன. லஷ்மணுக்கு அடுத்ததாக நடந்து கொண்டிருந்த தைவான் இளைஞன்

“நான் இதுவரைக்கும் கடற்கரை இருக்கற ஊர்கள் ல மட்டுந்தான் ஊஃபிங் போயிருக்கேன். ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு வர்றது இதுதான் முதல் தடவ.”

என்று சொல்ல, ஆச்சர்யத்தோடு அவனைத் திரும்பிப் பார்த்த லஷ்மண்

“அட, எவ்ளோ வருஷமா ஊஃபிங் போறீங்க?”

“ரெண்டு வருஷம். இதுவரைக்கும் ஆறு ட்ரிப் போயிருக்கேன். எல்லாமே பீச்சஸ் தான்.”

”ஸோ சரியான பார்ட்டி பாய் அப்டித்தான?”

வெரோனிகா அவனிடம் வேடிக்கையாகக் கேட்டாள்.

“அப்டிலாம் இல்ல. எனக்கு ஃபிஷ்ஷிங் பிடிக்கும். அப்பறம் கடற்கரைல இருக்க வெயிலும் உப்புக் காத்தும்.”

சிரித்துக் கொண்டவன் சசியிடம்,

“நீங்க என்ன மாதிரி ட்ராவல் பண்ணுவிங்க?” என்று கேட்க,

என்ன சொல்வதெனத் தெரியாமல் சசி தயங்கினான். உண்மையில் அவனொரு பயணியோ பயணங்களில் விருப்பங்கொண்டவனோ இல்லை. “நான் பெருசா ட்ராவல் பண்ணது இல்லங்க. சொல்லப் போனா என்னோட வேலைக்காகன்னு இல்லாம நான் ட்ராவல் பன்றது இதுதான் முதல் தடவ?” அவனோடிருந்த மூவரும் வியப்போடு பார்த்தார்கள்.

“ஷசி, நம்மளுக்கு கடவுள் ஏன் கால்களக் குடுத்திருக்காருன்னு தெரியுமா? ட்ராவல் பன்ன. ஒரு மனுஷன் எப்பிடி ஒரே இடத்துல இருக்க முடியும்?” ந்ன்று வெரோனிகா கேட்க,


“ட்ராவல் பன்றதுக்கான சூழல் அமையல. லைஃப் ஸ்டைல் அப்பிடி?”


“ஓ … ஆனா உன்னப் பாத்தா ஒன்பது டூ அஞ்சுன்னு ரெகுலரா ஆஃபிஸ் போற ஆள் மாதிரி தெரியலையே…”

“நான் சினிமால வேல பாக்கறேன். எங்களுக்கு வேலை செய்யற நேரத்தவிட வேலைக்காக காத்திருக்கற நேரம் அதிகம். காத்திருக்கறதுலயே வாழ்நாளோட பாதிக் காலம் போயிடும்.”

அவன் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் அவர்கள் ஆமோதித்து தலையசைத்தனர்.

உச்சியை நோக்கி நடக்கையில் சசிக்கு மூச்சுவிட சிரமாமயிருந்தது. லஷ்மண் அவன் தோள்களைப் பிடித்து

“இங்க பாரு, மூச்ச ஆழமா இழுத்து வாய் வழியா விடு” என்று அவனை மலையேற்றத்துக்கு பழக்கினான்.

அவன் நிதானமாய் மூச்சை இழுத்து வாய் வழியாய் வெளியேற்றியபோது வியர்வை குறைந்து உடல் இலகுவானது. இதமான காற்றிலும் வெயிலிலும் இருந்த உயிர்ப்பை உணர்ந்து கொண்டான். ஒன்றரை மணி நேர நடைக்குப்பிறகு மலையின் இன்னொரு பக்கத்து உச்சிக்கு சென்றிருந்தனர். சசி முகட்டிலிருந்து பார்த்தபோது தூரத்து மலைச்சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் எறும்புகளை விடவும் சின்னதாய்த் தெரிந்தன. மலைத்தொடரிலிருந்து நிழல் மெல்ல தவழ்ந்து வெளிச்சத்தை ஆக்ரமித்து இன்னொரு எல்லைக்குச் சென்ற சில நொடிகளுக்குப் பின் வெயில் அதே லாவகத்தோடு நிழலை விலக்கிச் சூழ்ந்தது. மனதிலிருக்கும் குழப்பங்களும் வெறுமையும் இப்படி சலனமில்லாமல் விலகிவிட்டால் எத்தனை நிம்மதியாய் இருக்குமென ஏக்க பெருமூச்சு விட்டான். மலைகளுக்கப்பால் அன்றைய சூரிய அஸ்தமனத்தின் மகோன்னதமான தருணங்களை ரசித்தபிறகு வீட்டை நோக்கித் திரும்பி நடந்தனர்.


வெரோனிகா உரையாடலை விரும்பக்கூடியவளாய் இருந்தாள். சூழ்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு அவளிடம் கதைகளிருந்ததைப் போலவே மற்றவர்களின் கதைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தாள். மனிதர்களை அவர்களின் கதைகள் வழியே புரிந்து கொள்ளும் குணமவளுக்கு. இரவு உணவு தயாரிப்பதில் லஷ்மணின் மனைவியோடு வெரோனிகாவும் சசியும் இணைந்து கொண்டனர். லஷ்மணின் மனைவி ரொட்டி தயாரிக்க சசி தானே முன்வந்து உருளைக் கிழங்கு சப்ஜி செய்யத் துவங்கினான். அந்த வேலையைச் செய்யும் போது இந்த உலகில் இப்போதைக்கு வேறெதுவும் முக்கியமில்லை என்கிற தீவிரத்திலிருந்தவன் முகத்தைக் கவனித்த வெரோனிகா


“ஷசி, ஏன் இவ்ளோ சீரியஸா முகத்த வெச்சிருக்க?”


“பழகிடுச்சு. படப்பிடிப்புல, கதை விவாதத்துல லாம் ஃபோகஸா இருக்கனும்னு சொல்லி சொல்லியே எந்த வேல செஞ்சாலும் அந்த மாதிரி ஆகிடுது. அதுமில்லாம நார்மலாவே என் மூஞ்சி அப்பிடித்தான்.”


”ஓ… அப்போ சிரிக்க சொல்லிக் கேட்டா க்ரடிட் கார்ட் வாங்கி ஸ்வைப் பண்ணிட்டுத்தான் சிரிப்பியா?” என அவள் கேட்க,

சசி சத்தமில்லாமல் சிரித்தான். சிரிப்பென்றும் புன்னகையென்றும் பிரித்தறிய முடியாத அற்புதமது. அவன் சமைக்கும் சப்ஜியின் மணம் வீடு முழுக்க பரவத் துவங்கியபோது லஷ்மண் ஆர்வமாக வந்து எட்டிப் பார்த்தபடி

“ஏ சசி மேஜிக் எதும் பன்றியா? சப்ஜில இவ்ளோ அரோமா இருக்கும்னு இன்னிக்கித்தான் தெரியுது.”


“இது சவுத் இந்தியன்ஸ் செய்ற சிம்பிளான சப்ஜி.”

என்று சசி உற்சாகமாகச் சொன்னான்.


வீட்டின் முற்றத்தில் எல்லோரும் வட்டமாய் அமர்ந்து சாப்பிடத் துவங்கினார்கள். ரொட்டி, சப்ஜி, சுத்தமான எருமைப்பாலில் தயாரிக்கப்பட்ட தயிர் லஷ்மணும் அவன் மனைவியும் ரொட்டியைக் குறைவாகவும் சப்ஜியை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள, வெரோனிகா மட்டும் “லஷ்மண் சப்ஜி ரொம்ப ஸபைசி கேர்ஃபுல்.” என கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னபோது, சசி அவசரமாய் இடைமறித்து

“இந்த மசாலாவும் ஸ்பைசியும் இல்லாம எங்களால உயிர் வாழ முடியாது தெரியுமா?” என்றான். உணவு முடிந்து உறங்கச் செல்வதற்கு முன்னால் வீட்டிற்கும் தோட்டத்திற்குமான இடைவெளியில் சின்னதாய் நெருப்பு மூட்டி எல்லோரும் வட்டமாய் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் அவரவரின் கதைகளைச் சொல்லி களைத்துப்போன நிமிடத்தில் லஷ்மணின் மனைவி பாடத் துவங்கினாள். நேபாளி பெண்களுக்கேயான மயக்கும் குரல். நீண்டு ஒடுங்கிய முகத்தில் அகன்ற நெற்றிப் பொட்டு. அவள் பேசும்போது வெகு சாதாரணமாய்த் தோன்றிய அவளின் குரல் பாடும்போது அபூர்வமானதாய் மாறியிருதது.



“சூறக்காத்துல படபடக்குற

பட்டுத்துணியாட்டமா

மனசுக் கெடந்து தவிக்குது மாமா!

பறக்கவா இருக்கவான்னு புரியாம

இந்த மலமேட்டுலேயே

குத்தவெச்சுக் காத்துக் கெடக்கேன் மாமா!

குட்டிகளத் தேடியோடற

நாயாட்டும் பூனையாட்டம்

நம்ம நேசம்

திக்குத் தெரியாம சுத்தித் திரியுது மாமா !

ஒத்தக்கொழல் ரெட்டக்குழல் துப்பாக்கி

மானப்புடிக்க பாத்திருந்தாலும்

என் மனசு மட்டும் எம்மானத்தான்

குறிவெச்சிருக்கு

யேரோப்ளேன்ல போவோம்

மோட்டார் சைக்கிள்ல போவோம்

அதுவுமில்லையா மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போவோம்

எம்மனசு உனக்கு புரிஞ்சதுன்னா

எங்கிட்ட வந்துரு மாமா!

என் ஆச கன்னுக்குட்டி ஒன்னு

ஒத்தையா மலையுச்சியில மாட்டிக்கிட்டு

அழுவுறத கேக்க

முடியல மாமா !

வாறியா நாம போய்

அதக் கூட்டியாருவோம் மாமா!



அந்த அறை முழுக்க இஞ்சியின் வாசணை. மேசையில் மலையென குவிக்கப்பட்ட இஞ்சியைத் தோலுரித்துக் கொண்டிருந்தனர். உள்ளூரில் தயாரிக்கப்படும் ஒரு வகை குளிர்பானத்திற்காகவும் மிட்டாய்க்காகவும் இந்தப் பகுதி முழுக்க இஞ்சி பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.


“எப்டி உன்னால இவ்ளோ இடங்களுக்கு ட்ராவல் பண்ண முடியுது வெரோனிகா?”


“நான் ஒரு ஸ்ட்ரிப்பர் ஷசி. ஏதாவதொரு ஊருக்குப் போய் மூணு மாசம் ஸ்ட்ரிப்பிங் க்ளப் ல வேல செய்வேன். அடுத்த மூணு மாசம் ட்ராவல் பண்ணுவேன். கடைசியா மூணு மாசம் மணிலா ல இருந்தேன். அடுத்து ஏஜெண்ட் எங்க பிக்ஸ் பண்ணிக் குடுக்கறானோ அங்க போயிடுவேன்..”

“ஸ்ட்ரிப்பர்?”


சசி புரிந்தும் புரியாமலும் கேட்க, அவனை வினோதமாய்ப் பார்த்தவள்,

“ஓ மை காட், இதுக்கு முன்ன ஸ்ட்ரிப் க்ளப் எதும் போனதில்லையா?”


அவன் இல்லையென்று தலையசைக்க ச்சாங்கும், வெரோனிகாவும் சத்தமாய் சிரித்தார்கள்.


“சரி அதனால ஒன்னும் கெட்டுப் போயிடல. எப்பவாச்சும் போக வாய்ப்பு கெடைக்கிறப்போ பாத்து தெரிஞ்சுக்கோ.” என்று சொல்லிவிட்டு


தோலுரிக்கப்பட்ட இஞ்சியை ஒரு பெரிய கூடையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.


வேடிக்கையும் உற்சாகமுமாய் இருக்கும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனதிலிருந்த வருத்தங்கள் மறைந்து அவனுக்கு இனம்புரியாதவொரு மகிழ்ச்சி பெருகும். தனித்துவமான நீலநிறக் கண்களும், கூர்நாசியும் கொண்ட அவள், லஷ்மணின் தோட்டத்துச் செடிகளிலிருந்து பீன்ஸ் சேகரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது வான்காவின் ஓவியத்தில் உறைந்துபோன அழிவற்றப் பெண்களை ஒத்திருந்தாள்.

வெரோனிகாவோடு பீன்ஸ் சேகரித்துக் கொண்டிருந்த ச்சாங் தயங்கியபடியே அவளிடம்,

“வெரோனிகா, இந்த ஷசிக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். அவன் தூக்கத்துல அடிக்கடி பயந்து எந்திரிச்சிடறான், இல்லன்னா பயத்துல எதையாச்சும் உளறிட்டு இருக்கான். நீ அவங்கிட்டப் பேசினா ஒருவேள அவனுக்கு ஆறுதலா இருக்கும்.” என்று சொல்ல, வெரொனிகா திரும்பி அறைக்குள் இஞ்சியை கழுவிக் கொண்டிருக்கும் சசியைப் பார்த்தாள். அப்பாவித்தனமும் ஏமாற்றங்களும் நிரம்பிய அவனது முகத்தில் துயரம் அழுத்தமான நிழலென படிந்திருந்தது.

“அவன் ஏதோ பிரச்சனைல இருக்கான்னு எனக்கும் தெரியும். நாமளே கேக்கறது நாகரீகம் இல்லன்னுதான் எதும் கேக்கல. சரியான நேரம் வரட்டும், அவன்கிட்ட பேசறேன்.” என்று ச்சாங்கிடம் சொல்லிவிட்டு பீன்ஸ் சேகரித்தக் கூடையோடு நகர்ந்து சென்றாள்.


அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று வந்த லஷ்மண் சசியை அழைத்தான். “சசி உனக்குப் புடிச்ச ஒரு வேலைய செய்வமா?”

எனக் கேட்க,

“ஓ செய்யலாமே. என்னன்னு சொல்லுங்க.”

என ஆர்வமானான்.

“நம்ம கிராமத்துல இருக்கற குழந்தைங்களுக்கு கேமராவ எப்பிடி பயன்படுத்தறதுன்னு சொல்லிக் குடுக்க முடியுமா? இன்னிக்கி மதியம் நாம அங்க போகலாம்.”

சசி தயங்கினான்.


“உனக்கு சிரமம்னா வேணாம்.”


“சிரமம் இல்ல, நாம போகலாம்”


என அவன் சிரித்தபடி சொன்னபோதும் அவனிடமிருந்த தயக்கத்தை வெரோனிகா புரிந்து கொண்டிருந்தாள்.


“ஏன் எல்லாத்தில இருந்தும் உன்ன விலக்கி வெச்சிட்டு இருக்க?”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.


“நாம மத்தவங்க கிட்ட எவ்ளோ நட்பாவும் இணக்கமாவும் இருக்கமோ வாழ்க்கையும் அவ்ளோ இணக்கமா ஈசியா இருக்கும் ஷசி. அதனால நிறைய பேசு.”

அவனுக்கு கண்கள் கலங்கின, அழுகையை விரும்பாத அந்த முகத்திற்கு கண்ணீர் பொறுத்தமாய் இல்லை.


“நான் ஸ்டோரி டெல்லர் வெரோனிகா, என்னோட அடையாளமே பேச்சும் ஸ்டோரிஸும் தான். ஆனா இந்த கொஞ்ச நாள்ல உடஞ்சு நொறுங்கின கண்ணாடி பொம்மையா ஆகிட்டேன். என்னோட ஆசை கனவு லட்சியம், எதெல்லாம் என்னோட வாழ்க்கைனு நம்பினனோ அதெல்லாமே…”


வெரோனிகா ஆறுதலாய் அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தாள்.

“உன்னோட ஆசை லட்சியம் கனவெல்லாம் உன் வாழ்க்கையோட ஒரு சின்ன பகுதிதான் ஷசி. அது மட்டுமே வாழ்க்கை இல்ல. உன்னய வலிமையான மனுஷனா வெச்சுக்கற எவ்வளவோ விஷயம் உங்கிட்ட இருந்தும் நீ ஏன் பலவீனமானவனா மாத்திக்கிற…. வெளில வா..”


“ஒரு விஷயத்துல போராடித் தோக்கறவனுக்குக் கூட போராடினோம்னு ஒரு சந்தோசம் இருக்கும். ஆனா அந்த விஷயத்த செய்யவே தகுதி இல்லன்னு பாதில துரத்தப்பட்டவன்கிட்ட ஏமாற்றத்த தவிர என்ன இருக்கும்? ஏழு வருஷம் அசிஸ்டெண்ட்டா வொர்க் பண்ணிட்டு அதுக்கு அப்றம் ஸ்க்ரிப்ட் பண்ணி ரெண்டு வருஷம் நாயா அலஞ்சு ஒரு படம் கமிட் ஆகி பத்து நாள் ஷூட்டும் பண்ணதுக்கு அப்றம் அது நின்னுடுச்சுன்னா நான் வெய்ட் பண்ண பத்து வருஷத்துக்கும் அர்த்தமே இல்லியே.”


“எனக்கு உன்னோட உணர்வுகள புரிஞ்சுக்க முடியுது, ஆனா இத ஏன் உன்னோட முடிவுன்னு நினைக்கிற, ஒரு சின்ன தடுமாற்றம்னு எடுத்துக்க. லைஃப ஸ்ப்ரிண்டரா அனுகாத ஷசி மராத்தான் ல ஓட்ற வீரனா உன்னய மாத்திக்கோ. செர்னோபிள் ஆக்‌ஸிடெண்ட் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?”


“ம்ம்ம்ம்…”


”அந்த இடம் எங்க உக்ரைன்லதான் இருக்கு. நாங்க ரெண்டு தலைமுறையோட வாழ்க்கையவே இழந்துட்டோம். இன்னும் எத்தன தலைமுறைக்கு அதோட பாதிப்பு இருக்கும்னு தெரியல. பல வருஷத்துக்கு குழந்தைங்க அணுக்கதிர்வீச்சோட பாதிப்புலதான் பொறக்கப் போறாங்க. அதுக்காக நாங்க சோர்ந்து போயிடலயே… யுத்தத்துல, பெரிய விபத்துகள் ல இறந்து போற மக்கள் லாம் எத்தன கனவுகளோட வாழ்ந்திருப்பாங்க. ஒரு நொடில அதெல்லாம் இந்த உலகத்துல இல்லாமப் போயிடுது. நீ உன்னோட லட்சியத்துல ஜெயிக்கிறது எவ்வளவு முக்கியமோ அதவிடவும் சந்தோசமா வாழ்றது முக்கியம்.”


அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தவள்

“உன்னோட கவலைகளுக்கெல்லம் கண்ட்ரோல் ஆல்ட் டிலீட் குடுத்துட்டு வாழ்க்கையோட புது ஸ்க்ரீன் ப்ளேவ எழுத ஸ்டார்ட் பண்ணு.”

என்று சொல்ல,

சசி சரியெனத் தலையாட்டினான்.


வீட்டிலிருந்து சல்லே முனிசிபல் அலுவலகத்திற்குச் செல்லும் பாதை கல்லும் மண்ணுமாயிருந்தது. ஏற்ற இறக்கங்களோடு ஒரு ஆள் மட்டுமே நடக்கக் கூடிய அகலத்திலிருந்த பாதையின் இரு புறங்களிலும் நீண்ட திணை வயல்கள். பொக்காராவில் சில புகைப்படங்கள் எடுத்தபிறகு இப்போதுதான் சசி தன் கேமராவை வெளியில் எடுத்திருந்தான். வெரோனிகா அவன் எடுத்த புகைப்படங்களை கேமராவில் நகர்த்திப் பார்த்தபடியே வந்தவள்

“ஓ மேன் … எதையும் அழகா பாக்கற கண்ணு உனக்கு. “

என பாராட்டினாள். ஒரு ஏற்றத்தில் மரங்கள் சூழ அமைந்திருந்த முனிசிபல் அலுவலகத்தின் முன்னால் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த ஊருக்கு வெளிநாட்டவர்கள் வந்து செல்வது புதிதில்லை என்பதால் இவர்களைப் பார்த்து எந்த ஆராவாரத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மாறாக தூரத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களைப்போல் உற்சாகமாய் கையசைத்து வரவேற்றனர். சசி தனக்குள்ளிருந்த மனத்தடை எல்லாம் நீங்கி ஆறுதலாய் உணர்ந்தான். முனிசிபல் அலுவலகத்திலிருந்தவர்கள் லஷ்மணோடு வந்த மூவரையும் வரவேற்று தேநீர் கொடுத்தனர். பார்த்த மாத்திரத்தில் நட்பாகிவிடும் அந்நியோன்யம் ஒவ்வொரு நேபாளியின் முகத்திலுமிருக்கும். தேநீருக்குப் பிறகு அலுவலகத்தின் முன்புறத்தில் வட்டமாய் அமர்ந்திருந்த சிறுவர்களிடம் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டவன் கேமராவை பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். ஒளியும் நிழலுமாய் அந்தச் சிறுவர்களின் முகத்தில் விருப்பமான ஒன்றை நெருக்கமாய்த் தெரிந்து கொண்ட பூரிப்பு. அந்தக் குழந்தைகளை நிறைய படமெடுத்தான். மலைகள் பூக்கள் செடிகள் எல்லாமும் அன்று அற்புதமானவையாய்த் தெரிந்ததால் எல்லாவற்றையும் படமெடுத்தவன் கிளம்புவதற்கு முன்பாக வெரோனிகா ச்சாங் லஷ்மண் மூவரையும் ஒன்றாக நிற்கவைத்து படமெடுத்தான். எத்தனை வலிகள் என்றாலும் ஒரு கலைஞனுக்கு அவன் விரும்பும் கலையே மருந்து. வீடு திரும்பும் வழியில் லஷ்மணின் கைகளைப் பற்றிக் கொண்டு நன்றி சொன்னான்.

லஷ்மண் தனது ட்ரக்கில் அருகிலிருந்த மலைப்பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான். உள்ளூர்க்காரர்களைத் தவிர்த்து வேறு ஒருவரும் வாகனத்தைச் செலுத்த முடியாத அளவிற்கு சவாலான சாலைகள். குண்டும் குழியுமாய் சில இடங்களில் முரட்டுப் பாறைகளும் இடைமறிக்கும், காத்மாண்டுவை இணைக்கும் பிரதான சாலையைத் தவிர்த்து மற்ற சாலைகள் எல்லாமே இப்படித்தான். சுந்தரிஜல் – ஒக்ரேனி ஹைக்கிங் இந்தப் பயணத்தில் பிரதானமென்பதால் வெரோனிகா லஷ்மணிடம் வற்புறுத்தி கேட்டிருந்தாள். அன்றைய இரவு லாகென்கெல்லில் தங்கினார்கள். சிறிய விடுதி, பெரும்பாலும் ஹைக்கிங் வருகிற வெளியூர் ஆட்களே நிரம்பியிருந்ததால் லாகன்கெல் அந்த இரவிலும் பரபரப்பாயிருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு நேரத்தோடு உறங்கிப்போனவர்கள், அதிகாலையில் மலையேறும் குழுவோடு இணைந்துகொண்டனர். காலை நேரத்தின் குளிர் விலகி சூரிய வெளிச்சம் சோம்பலாய் எழுந்து கொண்டிருக்க, இரண்டிரண்டு பேராய் மலையேற்றக் குழுவினர் காட்டுப் புற்கள் அடர்ந்த பாதையில் நடந்து சென்றனர். உடைக்கு வெளியே குளிரையும் உடைக்குள் வெப்பத்தையும் உணரச் செய்யும் வினோத காலநிலை. வெரோனிகா உள்ளங்கைச் சூட்டிற்காக சசியின் வலது கரம் பற்றியிருந்தாள்.

”உனக்கு கேர்ள்ஃப்ரண்ட் இருக்காங்களா ஷசி”

“பொருளாதார ரீதியா செட்டில் ஆகாத ஒருத்தனுக்கு எங்க ஊர்ல காதல்ங்கறது லக்‌ஷுரியான விஷயம் வெரோனிகா.”

“அட, காதலுக்கும் உன்னோட வருமானத்துக்கும் என்ன சம்பந்தம்? நான் நிறைய ஊர்களுக்குப் போயிருக்கேன், மக்கள் எந்த இடத்துல வாழ்ந்தாலும் நல்ல துணையோடவும் காதலோடவும் மகிழ்ச்சியா இருக்கத்தான் விரும்பறாங்க. பெருசா சாதிக்கனுங்கற உன்னோட சுயநலத்துக்காக நீ பெண்கள அணுக பயப்படற.”

“ஆசை இல்லாம இல்ல. ஆனா எனக்கு வேணாம்னு ஒதுங்கி இருக்கேன்.”

“அப்போ உன் கதைகள் ல பெண்களே இல்லியா? ஒரு பொண்ணுகிட்ட முழுமையா சரணடையறப்போதான் ஒருத்தனுக்கு பெண்களப் பத்தின குறைந்தபட்ச புரிதல் வரும். அவளோட பழகி, ட்ராவல் பண்ணி உறவு வெச்சு கஷ்ட நஷ்டங்களப் புரிஞ்சுக்கறதுதான் அனுபவம், அந்த அனுபவம் சேரும்போதுதான் உன் கதைகள் யதார்த்தமாவும் நெருக்கமாவும் இருக்கும். உணர்ச்சிகள கறபனையா எப்பிடி உருவாக்குவ சசி?”


என அவள் கேட்டதற்கு அவனிடம் பதிலில்லை. முன்னைவிடவும் அழுத்தமாக அவள் கையைப் பற்றிக் கொண்டு முன்னோக்கி நடந்தான். லட்சியத்தைத் தேடி ஒடின நாட்களில் எதையெல்லாம் இழந்திருக்கிறோமென்பதை அவளின் அருகாமை உணர்த்தியது. மனிதர்களின் வாழ்க்கை வெற்றி தோல்விகளில் முடிந்துபோவதில்லை. மலையுச்சிக்கு அவர்கள் வந்தபோது அவர்களுக்கும் முன்பாகவே சூரியன் அங்கிருந்து.

“ஃபார்மிங், அப்றம் எல்லோருமா சேந்து வாழ்றதுன்னு ஊஃபிங் சிம்பிளான கான்செப்ட் சசி.” என்று ஜோசஃப் சொன்னபோது அந்த எளிமையின் விஸ்தாரம் இவனுக்குப் புரிந்திருக்கவில்லை. தனக்குத் தேவையானவற்றை வாழிடத்திலேயே பயிர் செய்து உறவுகள் சூழ வாழ்வதோடில்லாமல் தன் மலைக்கிராமத்தைத் தேடி தொலைதூரங்களில் இருந்து வருகிறவர்களுக்கும் அந்த வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். “குறைவா கன்ஸ்யூம் பன்றதுதான் நிறைவா வாழ்றதுக்கான அடிப்படை” என லஷ்மண் சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட சசி, ஹைக்கிங் முடிந்து சல்லேவை நோக்கித் திரும்புகையில் ட்ரக்கில் அயர்ந்து உறங்கினான். எந்தவிதமான மனத் தொந்தரவுகளும் இல்லாத நிம்மதியான உறக்கம்.


குளிர் காற்று உடலைத் தழுவ, லஷ்மண் வீட்டு வாசலில் பால் கலக்காத தேநீரோடு நட்சத்திரங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனைத் தவிர எல்லோரும் படுக்கைக்குச் சென்றிருந்தனர். சசிக்கு கடந்த காலத்தின் மகிழ்ச்சியான இரவுகள் நினைவுக்கு வந்தன. அப்பா வேலை செய்த எஸ்டேட்டில் உயரம் குறைவான வீட்டிற்குள் ஆரஞ்சுப் பழக் குவியல்களுக்கு நடுவே கதை கேட்டபடி உறங்கிப்போன சிறுவனுக்கு, பின்னொரு நாள் எல்லோருக்கும் கதை சொல்வதையே தொழிலாகக் கொள்வோமென்கிற எதிர்பார்ப்புகள் இருந்திருக்க சாத்தியமில்லை. சொந்த ஊரிலிருந்து வெளியேறி வாய்ப்புத் தேடி அலைந்த நாட்களில், எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பசிக்கு உணவளித்த பல நூறு நண்பர்களின் நினைவு வந்தது. “ஜோசஃப் இல்லாம உன் வாழ்க்கைல நிறைய நண்பர்கள் இருதிருப்பாங்கள் ல ஷசி, கடைசியா அவங்க கிட்டல்லாம் எப்போ பேசின?” என வெரோணிகா கேட்டபோது அவனுக்கும் நினைவில்லை. நினைத்த மாத்திரத்தில் முகம் பார்த்துப் பேசக்கூடிய நிறைய செயலிகள் வந்துவிட்டாலும், அந்த தொழில்நுட்பங்கள் நம்மீது அன்பு கொண்டவர்களை முன்னைவிடவும் தூரமாகவே விலக்கி வைத்திருக்கின்றன. வாய்ப்புத்தேடி சென்னைக்குச் செல்வதற்காக முயனறு கொண்டிருந்த நாட்களில் ஊரிலிருந்தவர்கள் “நம்மூர் மாதிரி இல்லய்யா மெட்ராஸூ. அங்க பூராம் களவாணிப்பயலுக, நேரம் பாத்து கழுத்தறுத்துருவானுங்க.” என்று சொல்லி அச்சுறுத்தினார்கள். பத்துவருட அனுபவத்தில் அப்படி வஞ்சித்தவர்களென ஒருவரைக்கூட அவன் எதிர்கொள்ளவில்லை. தங்குவதற்கு அறை இல்லாத நாட்களில் இடம் கொடுக்கவும், தனக்கிருக்கும் உணவில் கொஞ்சத்தை பகிர்ந்தளிக்கவும் மனிதர்கள் அருகிலிருந்தனர். ஒரு கருத்தரங்கில் சந்தித்து அறிமுகமான நண்பர்களின் அறையில் ஒன்றரை வருடம் தங்கியிருந்தான். அவர்கள் ஒருமுறை கூட அவனிடம் அறைக்கான வாடகையையோ, அவனுக்கு செலவு செய்த பணத்தைத் திருப்பியோ கேட்டதில்லை. அந்த இளைஞர்கள் வழக்கமாக சாப்பிடும் மெஸ்ஸில் முதல் இரண்டு மாதங்கள் நண்பர்களே அவனுக்கும் சேர்த்து உணவிற்கான பணத்தைக் கட்டினர். மூன்றாவது மாதம் மெஸ் நடத்திய ஜானகியம்மா, ‘டேய் அவனுக்கு எதுக்கு நீங்க துட்டு குடுக்கறீங்க, ஊர்ல இருந்து வந்திருக்கான். சான்ஸ் தேடி அலஞ்சுட்டு இருக்கான்னு எனக்குத் தெரியாதா? எங்கூட்ல இருக்க இன்னொரு புள்ளைன்னு நெனச்சுக்கறேன் சசிக்கு இனி யாரும் காசு குடுக்க வேணாமெனச் சொல்லிவிட்டார். வெற்றியை நோக்கின ஓட்டத்தில் நாம்தான் அவர்களை மறந்துவிட்டிருக்கிறோமென குற்றவுணர்ச்சி கொண்டான்.


ஊருக்குத் திரும்பும் நாளில் ஆட்டிறைச்சியால் சமைக்கப்படும் டாஸ் என்ற உணவை சமைத்திருந்தார்கள். எலும்பு நீக்கப்பட்ட மட்டன் துண்டுகளோடு இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சைமிளகாய் மிளகு எல்லாம் சேர்த்து உருவாக்கப்படும் இந்த உணவு நேபளியர்களின் விசேஷமான உணவுகளில் ஒன்று. பயணம் முடிந்து கிளம்பப் போகிறோமென்கிற ஏமாற்றம் இருந்தபோதும் முப்பது வருடங்களில் இல்லாத புது மனிதனாய் மாறியிருப்பதில் மகிழ்ச்சியாய் இருந்தான். சாப்பாட்டு வேளையின்போதே வெரோனிகாவும் அவனை வழியனுப்ப வருவதாகச் சொல்லிவிட்டாள். அவன் மனதில் இப்போது சங்கடங்களோ வருத்தங்களோ இல்லை. எல்லாவற்றையும் நிதானித்துக் கவனிக்கும் பக்குவம் கனிந்திருந்தது. இனி தோல்விக்கு இடமில்லை, வெறுப்பும் குரோதமுமு மட்டுமல்ல ஒரு மனிதனின் தலைக்கனமும் அவனை அழிக்கும் என்கிற யதார்த்தத்தை மனம் ஏற்றுக்கொண்டது. தனது எதிர்ப்பை நியாயமான முறையில் வெளிப்படுத்தி இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வந்திருக்கப் போவதில்லை. இந்தத் துறையில் ஒரு படத்தை இயக்குவதற்கு வாய்ப்புத் தேடி அலையும் லட்சத்தில் ஒருவனுக்கே வாய்ப்பு கிடைக்கிறது. அந்தக் கர்வத்திற்கான மரியாதை கிடைத்த வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்வதுதானென உறுதிகொண்டான்.



அவர்கள் விமான நிலையத்தின் வாசலுக்கு வந்தபோது காத்மாண்டுவின் இளவெயில் அந்தப் பகுதியெங்கும் நிரம்பியிருந்தது. வெரோனிகா அவன் பயணப்பையை எடுக்க உதவினாள். வழியனுப்புதலுக்கான வாசல் வரை அவனுக்குத் துணையாக லஷ்மணும் வெரோனிகாவும் வந்தார்கள். பயணிகள் அவசரமாய் அவனைக் கடந்து சென்றனர். வழியனுப்ப வந்தவர்களில் சிலர் சந்தோசத்தின் கண்ணீர்த் துளிகளோடும் சிலர் பிரிவின் துயரப்பிய கண்ணீரோடும் கையசைத்துக் கொண்டிருந்தனர். கண்ணாடிக் கதவுகளை நெருங்கியபோது சசி மலர்ந்த முகத்தோடு அவர்களுக்கு விடை கொடுத்தான். முதல் முறையாக பார்த்தபோது இருந்த அதே மலர்ச்சியோடு வெரோனிகா,

“ ஒவ்வொரு பயணத்துக்குமான அர்த்தமும் அந்தப் பயணம் முடியற இடத்துலதான் துவங்குது ஷசி. உன்னயப் பத்தி உனக்குத் தெரியாத உண்மை என்னன்னா நீ நல்லவன், திறமையானவன், போராடத் தெரிஞ்சவன். ஆனா கோவத்த குறச்சுக்கோ. நிறைய ட்ராவல் பண்ணு, அந்த அனுபவத்த எடுத்துக்கோ.”

சசி ஆமோதித்து தலையாட்டினான்.

“இன்னொருமுற இங்க வரனும் சசி. நானும் எங்க வீட்ல எல்லோருமே நீ திரும்பவும் வரனும்னு விரும்பறோம்.”

லஷ்மண் அவனுக்கு கை கொடுத்துவிட்டு அவன் மனைவி தந்தனுப்பிய பரிசுப் பொருட்களைக் கொடுத்தான். கூட்டைத் தாண்டி பறக்கப் பழகும்போதுதான் உலகம் எல்லா மனிதர்களுக்கும் தோள்கொடுக்க காத்திருக்கிறதென்கிற உண்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சின்னஞ்சிறிய கூண்டிற்குள் அடைந்து கிடந்து துயரில் உழன்று கொண்டிருப்பதை விடவும் அதைக் கடந்துவிடுதல் எளிது.

“மனிதன் நிறைய அலைந்து திரிய வேண்டுமெனபதற்காகத்தான் கடவுள் கால்களைத் தந்திருக்கிறாரென” வெரோனிகா சொன்ன வார்த்தைகள் இப்போது அவன் மனக்கதவுகளை முழுமையாய்த் திறந்துவிட்டிருந்தன.

“அடுத்து எங்கன்னு முடிவு பண்ணிட்டியா வெரோனிகா?”

ஆர்வமாகக் கேட்டான்.

“ம்ம்ம்… அனேகமா சிங்கப்பூர். 400, ஆர்ச்சர்ட் ரோட். ஏன் ஷசி, ஸ்ட்ரிப்பிங் பாக்கனுமா?” அவள் கேலியாக சிரிக்க

“ச்ச ச்ச… சும்மா கேட்டேன்.”

என்றான்.

”சரி ஊருக்குப் போனதுக்கு அப்றம் உன் தயாரிப்பாளர நேர்ல பாத்து பேசு. எல்லாக் கோவமும் மனுஷனுக்கு ரெண்டு நாள்தான். அதுக்கு அப்றம் இருக்கறதெல்லாம் யார் முதல்ல வந்து பேசறதுன்னு இருக்கற ஈகோ.”

“உண்மதான் வெரோனிகா. ஆனா இப்போ தயாரிப்பாளர பாக்கறத விடவும் முக்கியமான சில வேலைகள் இருக்கு அதச் செய்யனும்னு நினைக்கிறேன்.”

என்றவனை அவள் ஆச்சர்யமாகப் பார்க்க,

”சொந்த ஊருக்குப்போயி அம்மாவையும் அக்காவையும் பாக்கனும். சின்ன வயசு ஃப்ரண்ட்ஸ், அப்பறம் அப்பா வேல செஞ்ச தோட்டம்னு நான் விலகி வந்த எல்லாத்தையும் ஒரு தடவ நெருக்கமா போய் பாக்கனும்னு நெனைக்கிறேன்.”

என்று சிரித்தான்.

வெரோணிகா அவன் மனதைப் புரிந்து கொண்டு அவனை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டபின் சந்தோசமாய் விடை கொடுத்தாள்.



111 views

Recent Posts

See All

Fake

bottom of page