வேத்ராஹி எழுதிய பால்காக்கும் நோனோவும்.
- லக்ஷ்மி சரவணகுமார்

- 3 days ago
- 3 min read

1948 வது வருடம் தான் டோக்ரி மொழியின் முதல் சிறுகதை நூல் வெளியாகியது. அதன்பிறகு குறிப்பிடத் தகுந்த புனைவெழுத்தாளர்கள் அந்த மொழியில் உருவாகி வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மிகக் குறைவான மக்கள் பேசக்கூடிய டோக்ரி மொழிக்கு நீண்ட பாரம்பர்யம் உண்டு. செழிப்பான வாய்மொழி இலக்கியங்களைக் கொண்ட டோக்ரி மொழி நவீன கதை சொல்லலலுக்கு மிக வேகமாய்த் தன்னை தகவமைத்து கொண்டது. அந்த நவீன கதை சொல்லிகளில் குறிப்பிடத்தகுந்தவர் வேத்ராஹி.
பால்காக்கும் நோனோவும் என்னும் இந்தக் கதை எளிமையானது. லடாக்கில் நீண்டகாலம் பணியிலிருந்த பால்காக்கிற்கு அவனது முதுமை காலத்தில் துணையாக நாய்க்குட்டியொன்றை லாமா பரிசளிக்கிறார். அது திபெத்திய இனத்தைச் சேர்ந்த நாய். கடும் குளிருக்குப் பழக்கப்பட்ட அந்த நாயோடு ஸ்ரீநகருக்கு இடம் பெயர்ந்து வருகிறார் பால்காக். எப்போதும் கலவரங்களும் ஊரடங்குகளும் நிறைந்த அந்த ஊரில் தன்னுடைய வாழ்வை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருக்கும் அவரால் தன்னுடைய நாயை நல்லமுறையில் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
போதாக்குறைக்கு இரண்டு மூன்று மாத ஊதியங்களும் கிடைக்காமல் போகிறது. ஸ்ரீநகரில் வன்முறைகள் அதிகமானதால் ஜம்முவில் இருக்கும் தனது மகன் கோபிநாத்தின் வீட்டிற்குச் செல்கிறார். தனது குட்டிநாய் நோனோவைத் தூக்கிக் கொண்டு அங்கு செல்லும் போது கோடைகாலம் உச்சத்திலிருக்கிறது.
குளிர் பிரதேசத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட அந்த நாய்க்குட்டியால் ஜம்முவின் வெக்கையை தாங்கமுடியவில்லை.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பெரும்பாலனவர்கள் வேலை வாய்ப்பின்றி சிரமப்படும் சூழலில் மனிதர்கள் உணவுக்கே போராடுகிறார்கள். இதில் நாய்க்குட்டியின் பசியாற வேண்டும். இன்னொரு புறம் வெப்பம் தாங்க முடியாமல் நோனோ வதங்கிப்போய் விடுகிறது. எதாவது செய்து அந்த நாய்க்குட்டியை மீட்டுவிடத் துடிக்கும் பால்காக் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை வாங்கிவந்து அதன் மீது வைத்தால் வெக்கை தணியுமோ என நினைக்கிறார். ஆனால் அதை வாங்கப் பணமில்லை. மருமகள் கொடுக்கும் ஒரு ரூபாயில் எழுபத்தைந்து பைசாவிற்கு காய்கறிகள் வாங்கிவிட்டு மீதமிருக்கும் முப்பது பைசாவில் சிறிய ஐஸ் கட்டியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீடு திரும்புவதற்கு முன்பாகவே பாதி கரைந்து போகும் அந்த ஐஸ் கட்டியால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போகிறது.
மிக எளிமையான இந்தக் கதையில் நான் அதிகம் கவனித்தது மனிதர்களுக்கு பிற உயிரினங்களின் மீது கருணையில்லாமல் போகும் குணத்தைதான். இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்க்குட்டிகளை வளர்ப்பதை ஒரு ஆடம்பரமாக மாற்றியிருக்கிறார்கள். சென்னை திருச்சி மாதிரியான அதிக வெப்பமுள்ள ஊர்களில் ஹஸ்கி வகை நாய்க்குட்டிகள் வளர்க்கப்படுகின்றன. சைபீரிய காடுகளின் குளிரில் பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்து வரும் இந்த வகை நாயினங்கள் வெப்ப மண்டலப் பகுதியில் வளரும் போது எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். நாம் அந்த நாய்க்குட்டிகளின் மீது நிகழ்த்தும் வன்முறை மன்னிக்கவே முடியாதவொன்று. பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான தோழனாக இருந்தது நாய்கள் தான். பனி மலைகள் ஸ்லெட்ஜிங் செய்யவும், வீட்டுக் காவலுக்கும், வேட்டைப் பாதுகாவலனாகவும் நாய்கள் அதன் இனங்களைப் பொறுத்து பழக்கப்பட்டன.
இந்த நாய்கள் மனிதர்களுக்குத் துணைவர்களாக இருந்ததைத் தாண்டி எந்த நன்மைகளையும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் மனிதர்கள் தங்களது தேவைகள் முடிந்த உடனேயே இந்த அப்பாவி உயிர்களை கைவிட்டு விடுகிறார்கள்.
இந்தக் கதையில் நீண்ட விவரணைகளோ, உருவகங்களோ, மடிப்புகளோ எதுவுமில்லை. வாய்மொழிக் கதையின் வடிவத்தில் அதன் நீட்சியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த செய்தியை எவ்வளவு சொல்ல வேண்டுமென்கிற ஒழுங்கும் கச்சிதமும் வியக்க வைக்கிறது. கதையின் ஒரு சிறிய விவரத்தைக் கூட நாம் காட்சிபூர்வமாக உணரக்கூடிய அளவிற்கு நுட்பமும் கைகூடி வந்திருக்கிறது. நல்ல கதை சொல்லி தனது அனுபவங்களால் தான் கதைமொழியினை உருவாக்குகிறான். இந்தக் காட்சிப்பூர்வமான மொழியை எதிர்மறையாக விமர்சனம் செய்யும் போக்கு உண்டு. உண்மையில் கச்சிதமான காட்சியனுபவத்தை புனைவில் கொண்டுவருவது எளிதான காரியமல்ல.
சில மாதங்களுக்கு முன் போரூர் சிக்னலைத் தாண்டி சாலையோரத்தில் அவசரமாக வந்தது நின்ற ஒரு விலை உயர்ந்த காரிலிருந்து அவசரமாக ஒரு நாய்க்குட்டியை இறக்கிவிட்டு கார் விரைந்தது. அது டேஷ் இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி. நோயுற்றதால் அதனைப் பராமரித்தவர் அதனைக் கைவிட்டுவிட்டார். இந்த வகை நாய்க்குட்டிகள் உயரம் குறைவானவை. அதன் கால்கள் மிகச் சிறியதாக இருப்பதால் உடல் எடை அதிகரித்துவிட்டால் நடக்க சிரமப்படும். அந்த நாய்க்குட்டி வீட்டிலேயே வளர்க்கப்பட்டதால் சாலையின் இரைச்சல்களைக் கண்டு அஞ்சியது. எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல் தன்னை இறக்கிவிட்ட கார் சென்ற திசையைப் பார்த்துக் குரைத்தது. அருகிலிருந்த கடையிலிருந்த நான் விரைந்து சென்று அதனைத் தூக்கி வந்தேன். உடல் முழுக்க காயங்கள். சில மாதங்களுக்கு பதிமூன்று வருட காலம் எங்களோடு இருந்து மாரடைப்பு நோயால் இறந்து போன எங்கள் ஜெஸ்ஸி இதே இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி என்பதால் அதனைப் பார்த்ததும் மனம் பதைத்துவிட்டது.
அந்த நாய்க்குட்டியின் உடல் முழுக்க காயங்கள். யாராவது ஒருவர் தன்னை ஆதரித்துக் கொள்ளமாட்டார்களா என மிரட்சியோடு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டில் நான் பூனைகள் வளர்ப்பதால் அந்த நாய்க்குட்டியை என்னோடு எடுத்துக்கொள்ள முடியாது. நண்பர்களிடம் கேட்கலாமென்றால் நோயுற்ற நாய்க்குட்டியைப் பராமரிக்க ஒருவரும் முன்வரப் போவதில்லை. தாம்பரத்திலிருக்கும் ஒரு ஷெல்டருக்கு அழைத்து எப்படியாவது அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொள்ளச் சொல்லி பேசினேன். நீண்ட நேரத்திற்குப்பின் அவர்கள் வந்து அந்தக் குட்டியை மீட்டுச் சென்றார்கள். அன்று முழுக்க என்னால் சாப்பிட முடியவில்லை.
மனிதர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை ஏன் கைவிடுகிறார்கள். அந்தக் குட்டி நாயோடு எத்தனைப் புகைப்படங்கள் எடுத்திருப்பார்க? எத்தனை நாட்கள் விளையாடியிருப்பார்கள்.? அந்த நினைவுகளை எல்லாம் ஒரு நொடியில் அழித்துவிட முடியுமா? நாய்க்குட்டிகளைக் கைவிடத் துணியும் மனிதர்களுக்கு தங்களது பெற்றோரையும் பிள்ளகளையும் கைவிட எத்தனை நேரம் ஆகப் போகிறது?
செல்லப்பிராணிகள் மீதான வன்முறை இன்று நாடு முழுக்க அதிகரித்து விட்டது.
தெருநாய்களைக் கொல்வதை ஒரு கோஷமாக முன்னெடுக்கிறவர்களைப் பார்க்கிற போது அச்சமாக இருக்கிறது. நாய்களின் இனப்பெருக்கத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியலை நாம் பேசித்தான் ஆகவேண்டும். ரேபிஸ் வகை நோய்களுக்கான மருந்துகளைச் சுற்றி பெரும் வியாபாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக சிலர் தனியார் நிறுவனங்கள் மிருகங்களின் மீது அக்கறை இருப்பதாக போலி வேஷம் போடுகின்றன. ஆனால் தனிமனிதர்கள் அப்படியல்ல. இந்தத் தெருநாய்கள் தானே சில வருடங்களுக்கு முன்னால் நம்மோடு விளையாடின. நாம் வைத்த மிச்ச உணவுகளை சாப்பிட்டுவிட்டு நமக்கு விசுவாசமாய் நம்மைச் சுற்றி வந்தன. பல வீதிகளில் புதிய மனிதர்களைக் கண்டால் குரைத்து நம்மை எச்சரிக்கையூட்டின. அந்த நாய்களைக் கட்டுக்குள் வைக்காமல் பார்த்துக் கொண்டது அரசின் தவறு.
நீதிமன்றம் முன் வந்து தெருநாய்களைக் கட்டுபடுத்தச் சொல்லி உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. கட்டுப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பெரும்பாலும் இந்த நாய்கள் கொல்லப்படுகின்றன. நாய்களின் மீது கருணையோடு நடந்துகொள்கிறவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். அவர்களின் மீது வன்முறை ஏவப்படுகிறது. தனது இனத்தைத் தவிர வேறு எந்த இனமும் முக்கியமில்லை என்று நினைப்பது பாசிசம். இன்றைக்கு அப்படி நினைப்பதைத்தான் நீதி என்று நம்புகிறோம். மனிதர்களுக்கும் முன்பாகவே இந்த மிருகங்களும் பூச்சிகளும் பறவைகளும் நாய்களும் பூனைகளும் வாழ்ந்து வருகின்றன.
இந்தப் பூமியில் நாம் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதைவிடவும் அதிகமாக இந்த பிராணிகளுக்கு உண்டு. மனிதர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்குமான பிணைப்பு குறையும் போது மனிதர்களிடம் காட்டு மிருகங்களின் குணம் அதுகரித்துவிடும். அவர்கள் தங்களது தேவைகள் மட்டுமே பிரதானம் என நினைப்பார்கள். இந்த எண்ணத்தோடு வளர்க்கப்படும் தலைமுறை தாங்கள் வளர்ந்தபின் இந்த வெறுப்பையும் வன்முறைகளையும் மனிதர்களிடம் காட்டுவார்கள். எல்லா உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்த மனிதர்களுக்கான அடையாளம்.



