top of page

அதுலானந்த கோஷ்வாமியின் ‘முரடன்’

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 15 minutes ago
  • 4 min read

’ஒரு யானைக் கொல்லப்படும் போது அதன்  காடும் அழிக்கப்படுகிறது.’ 

-       லஷ்மி சரவணகுமாரின் சிறுகதையிலிருந்து.

ree

 

விலங்குகளில் யானை ஓர் அரசன். எனது சிறு வயது முதல் யானைகளின் மீது பெருங்காதலுண்டு. வீதியில் பாகனின் கட்டுப்பாட்டில் அழைத்துவரப்படும் யானையில் கருணை மிக்க கண்களைக் கண்டு உறங்க முடியாமல் கிடந்திருக்கிறேன். நிலவாழ் உயிரினங்களில் பிரம்மாண்டமான அந்த மிருகத்தை மனிதன் பிச்சையெடுப்பதற்காக பழக்கப்படுத்தியதுதான் பரிணாமத்தில் நிகழ்ந்த மாபெரும் அவமானம். ஒரு யானை தன் நினைவுகளில் பெருங்காட்டை சுமந்தலைகிறது.  இயல்பிலேயே கூட்டமாக வாழ பழக்கப்பட்ட அந்த ஜீவனை மனிதர்கள் சுற்றுலா பயணிகளைத் தூக்கிச் செல்லவும், கோவில்களில் அலங்காரத்திற்கு நிற்க வைக்கவும், வீதி வீதியாக அழைத்துச் சென்று பிச்சையெடுக்க வைக்கவும் ஏன் பழக்குகிறார்கள். ஒரு அரசன் பிச்சையெடுக்கும் சித்திரத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?   சூழலியல் இயக்கத்தில் யானைகள் தான் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.


நாளொன்றுக்கு நாற்பது கிலோமீட்டர் நடக்கக் கூடிய யானைகளின் சாணத்திலிருந்து புதிய செடிகள் முளைக்கின்றன. ஒரு காடு வளமாக இருப்பதற்கு யானைகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த பூமி ஆரோக்கியமாக சுவாசிக்க காடு முக்கியமென்றால் அந்தக் காடு அதன் பசுமையை இழக்காமல் இருக்க யானைகளும் முக்கியம்.

விலங்குகளின் மீதும் இயற்கையின் மீதும் மனிதர்கள் நிகழ்த்தும் வன்முறைகள்  ஏராளம்.  மனிதர்களின் பேராசை காரணமாக காடுகள் வேகமாக அழிக்கப்படுவதோடு, மிருகங்களும் கொல்லப்படுகின்றன.  தந்தத்தில் செய்யும் அலங்காரப் பொருட்களுக்காக காட்டில் யானைகள் கொல்லப்படுகின்றன. இந்தியா, மியான்மர், தாய்லாந்து, இலங்கை   மற்றும் ஆப்பிரிக்காவின் ஏராளமான நாடுகளிலும் யானை வேட்டை இன்றளவும் நடந்து வருகிறது.


மனிதனின் பேராசை காரணமாக காடுகள் திருத்தப்பட்டு சொகுசு விடுதிகள் கட்டப்படுவதும், சுற்றுலா காரணங்களுக்காக மிருகங்கள் துரத்தப்படுவதும் மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது நாடுகளில் ஒரு செடி கொடியைக் கூட பாதுகாப்பாக வைத்திருக்க மெனக்கெடுவார்கள். ஆனால் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் அவர்களுக்கு யானை சவாரி செய்ய வேண்டும். அவர்களது ஒப்பனைப் பொருட்களுக்காக இந்தோனேஷிய காடுகளில் குரங்குகள் கொல்லப்பட வேண்டும். அவர்களது வீட்டு மேசை கட்டில்களுக்கு ஆசிய காடுகள் அழிக்கப்பட வேண்டும்.  இவ்வளவையும் தயக்கமின்றி செய்யக்கூடிய இவர்கள் தான் மூன்றாம் உலக நாடுகளில் சூழலியல் குறித்த வகுப்பெடுப்பார்கள்.


இந்தியாவில் யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களில் அஸ்ஸாமும் கேரளாவும் முதன்மையான இடத்தில் இருக்கின்றன. நான் இந்த இரண்டு மாநிலங்களிலுமே யானைகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பிரம்மாண்டம் உங்கள் வாழ்நாளில் மறக்கக் கூடியதல்ல. யானைகள் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றனவோ அங்கெல்லாம் அவை  மக்களால் தெய்வத்திற்கு சமமாகப் பார்க்கப்படுகிறது.  எனில் யானைகளை   வேட்டையாடுவது யார்? அஸ்ஸாமிலும் கேரளாவிலும் நடந்த யானை வேட்டைகளைக் கணக்கிட்டால் நாம் ரத்தக்கண்ணீர் வடிக்க நேரும். 


இந்திய இலக்கியத்தில் நாய் பூனைகளுக்குப் பிறகு அதிகமாக புனைவுகளில் எழுதப்பட்ட மிருகம் யானையாகத்தான் இருக்கும். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு யானை  ஆதர்ஷமான விலங்காக இருக்கிறது.  நானும் சில சிறுகதைகள் எழுதியிருப்பதோடு கானகன், பன்றிவேட்டை என நாவல்களிலும் யானைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதுலானந்த கோஸ்வாமியின் முரடனும் மதம் பிடித்ததாகச் சொல்லப்படும் ஒரு யானையைப் பற்றின கதைதான்.


இலங்கையின் பிரபலமான ஹசல பெரஹர திருவிழாவைத் தொடர்ந்து நான்கு வருடங்கள் பார்த்திருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும். அதில் நாயக அம்சத்தோடு வரும் யானையின் மீது புத்தரின் உடமைகள் எடுத்து வரப்படும். இந்தத் திருவிழாவிற்காக வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைத்து வரப்படும் யானைகள் திருவிழா முடிந்ததும் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றன. யானை எத்தனை பிரம்மாண்டமானதோ அத்தனை நட்பானதும் கூட. எந்தப் புள்ளியில் யானைகளுக்கு மதம் பிடிக்கின்றன? காடுகள் திருத்தப்படுவதுதான் காரணமாக யானைகள் தங்களது நீராதரங்களை இழக்கின்றன. திசை மறந்து வெவ்வேறு வழிகளில் சுற்றி மின் கம்பங்களில் அடிபட்டு இறக்கின்றன. இந்த அப்பாவி மிருகத்தின் மீது சொல்லொண்ணா வன்முறைகளை செலுத்தும் மனிதர்கள் அது பொறுமையிழக்கும் போது உடனே கொல்ல முடிவெடுத்து விடுகிறார்கள்.  


மதம் பிடித்ததாகச் சொல்லப்பட்ட யானையை யாருமே பார்த்திருக்கவில்லை. காட்டில் இங்கு இருக்கலாம் அங்கு இருக்கலாமென யூகங்களின் மூலமாக வெவ்வேறு கதைகளை உருவாக்குகிறார்கள். இந்தக் கதைகள் அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் அச்சமாக மாறுகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஊருக்குள் இறங்கி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அந்த யானையை வேட்டையாடிக் கொல்ல ஊர்க்காரர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.  இந்த செய்திகளை எல்லாம் கேட்கும் கஜாலா மற்றவர்களைப் போலவே அச்சப்படுகிறான். காட்டில் கரிமூட்டம் போட்டு பிழைக்கும் எளிய மனிதன் அவன். இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டி விறகுகளை வைத்து புகைமூட்டம் போட்டுவிட்டு வந்தவனுக்கு யானை அந்தப் பள்ளத்தை சிதைத்துவிடுமோ என்று அச்சம்.


கடவுள் மீது பாரத்தைப் போட்டுக்கொண்டு அவன் தனது கரிமூட்டத்தைப் பார்க்கச் செல்கிறான். எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்கிற நிம்மதியில் வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் போது ஒரு மிருகம் வேதனையில் அலறும் சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசையில் செல்பவன் யானையொன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.  ஊர்க்காரர்கள் சொன்ன அதே முரட்டு யானை. வேதனையில் துடிக்கும் அந்த மிருகத்தை அப்படியே விட்டுவிட மனமின்றி அவன் அதற்கு உதவி செய்ய நினைக்கிறான். யானை விழுந்து கிடக்கும் பள்ளத்தை ஒட்டியே ஒரு சாய்வு தளத்தை உருவாக்கி அதற்கு பிரத்யேகமாக ஒரு பாதையை அமைக்க முடிவு செய்கிறான். மூங்கிலை செதுக்கி வேலையைத் துவங்க நேரம் வேகமாக கடந்து செல்கிறது. பாதி வேலையிலேயே களைத்து உறங்கிவிடுபவனை யானை தன் துதிக்கையால் தட்டி எழுப்புகிறது. மீண்டும் எழுந்து வேலையைத் தொடர்பவன் தான் நினைத்தது போல் ஒரு பாதையை உருவாக்குவதற்குள் அடுத்தநாள் பொழுது விடிந்து விடுகிறது. அந்த பள்ளத்திலிருந்து யானை எழுந்துகொள்ள உதவுகிறான்.


அந்த ஜீவன் பள்ளத்திலிருந்து விடுபட்ட போதுதான் அதன் காலில் பெரிய காயம் இருப்பது தெரிகிறது. தந்தத்திற்காக வேட்டையாட வந்தவன் சுட்டிருக்க  வேண்டும். வேதனையில் நடக்க முடியாமல் சிரமப்படும் அதற்கு உதவ முடிவு செய்பவன் மூலிகைகளைத் தேடிச் செல்கிறான். திரும்பி வந்தது யானையின் காயத்திற்கு மருந்துபோடுகிறான். யானை தனது இயல்பிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனைத்தேடி வந்த வேட்டைக்காரர்கள் தூரத்திலிருந்து சுடுகிறார்கள். ஒரே நேரத்தில் வேட்டைக்காரனால் யானையும், அந்த யானையால் கஜாலாவும் கொல்லப்படுகிறார்கள். பத்து பக்கங்களுக்குள் முடிந்துவிடும் இந்தக் கதை துயர்மிக்க தருணத்தில் நம்மை உறையச் செய்வதோடு பாதி உண்மைகளை மட்டுமே கொண்டு நாம் ஒரு தீர்மானத்திற்கு வரக்கூடாது என்கிற உண்மையை உணர்த்துகிறது.


வடகிழக்கு இந்தியாவின் வாசலாக இருக்கக் கூடிய அஸ்ஸாம் தனித்த கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நிலம்.  கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரையிலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்த அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் இங்கும் நடந்ததுண்டு. இதனாலேயே அந்த மக்களின் வாழ்க்கை குறித்து வெளியுலகிற்கு குறைவான செய்திகளே  தெரிந்தன.  ஊடகங்களும் அரசும் என்னவிதமான செய்திகளை சொல்ல விரும்பியதோ அவை மட்டுமே சொல்லப்பட்டன. மனிதர்களின் மீதே இத்தனை குறுகிய கவனம் கொண்ட அரசு காடுகளைக் குறித்தும் மிருகங்கள் குறித்தும் என்னவிதமான எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் யூகிக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகான அஸ்ஸாமில் யானைகளும் காண்டாமிருகமும் பெருமளவில் வேட்டையாடப்பட்டன. ஒரு காலத்தில் செழித்திருந்த காண்டாமிருகங்கள் இன்று மிகவும் சிறிய அளவிலேயே வாழ்கின்றன. இதனால் இயற்கையாகவே அந்த மொழி எழுத்தாளர்களுக்கு தங்களது இயற்கையைக் குறித்த கவனம் அதிகமாக இருந்தது.


இந்தக் கதையில் யானைக்கு மதம் பிடித்ததை மட்டுமே பேசும் எவரும் அதற்கு ஏன் மதம் பிடித்தது என்கிற விவாதத்திற்குள் செல்லவில்லை.  காடுகள் அழிக்கப்படுவது குறித்த கவலைகளோ அக்கறைகளோ இல்லாத அவர்கள் தங்களது உயிரை காத்துக் கொள்வதை மட்டுமே யோசிக்கிறார்கள். காயம்பட்ட யானையின் வேதனையறியாமல் அதற்கு மதம் பிடித்துவிட்டதாக பரப்பப்படும் வதந்தி அந்த மிருகத்தைக் கொன்றுவிடுகிறது.  அந்த யானையைக் கொன்றது மக்களுக்கு இருந்த பயமல்ல, வேட்டைக்காரர்களுக்கு இருந்த பேராசை.


இந்தக் கதையில் யானை காட்டின் குறியீடாக வருகிறது. மனிதன் தனது பேராசைகளுக்காக இயற்கையை அழிக்கும் போது தன்னையே அழித்துக் கொள்ளத் துவங்குகிறான் என்கிற செய்தியை வெளிப்படுத்துகிறது. கஜாலா யானையைக் கண்டபின் அவனுக்கும் அந்த மிருகத்திற்கும் இடையிலான உரையாடல் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவனைக் கையாள்வதுபோல் அவன் யானையைக் கையாள்கிறான். அவன் சொல்லும் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு நாவலில் தனது பன்றியைத் தேடி காட்டிற்குள் செல்லும் மனிதன் அதனைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்கிறான் என உயிர்ப்போடு எழுதப்பட்டிருக்கும். இந்தக் கதையில் கஜாலா யானையோடு உரையாடும் இடங்கள் எனக்கு அந்த நாவலை நினைவுபடுத்தியது. அடுத்ததாக அவனுக்கு இருக்கும் இயற்கை குறித்த அறிவு. யானையை பள்ளத்திலிருந்து மீட்பதற்காக அவன் செய்யும் முயற்சிகளும், காயம்பட்ட காலில் வைத்தியம் பார்க்க மூலிகைகளைத் தேடி எடுத்து வருவதும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.


மனிதர்களுக்கு இயற்கையாகவே சில அறிதல் முறைகள் அமைந்துவிடும். நாம் காலப்போக்கில் அதனை மறந்துவிடுகிறோம். மரபான இந்த அறிவின் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. கிராமத்து மனிதர்களிடமிருந்து கஜாலாவை வேறுபடுத்திக் காட்டுவது இதுதான். உதவிக்கு எவரையும் அழைத்தால் அவர்கள் யானையைக் கொல்ல நினைப்பார்கள் என்பதை உறுதி செய்துதான் அவன் தனியாளாக உதவுகிறான். தன்னைப் புரிந்துகொண்ட மனிதனை யானையும் புரிந்துகொள்கிறது. அவர்கள் இருவருமே தங்களது பாதையில் பிரிந்து செல்ல இருந்த கடைசி நிமிடத்தில் தான் வேட்டைக்காரர்கள் வருகிறார்கள்.  இந்த வருகை ஆக இறுதியாய் மனிதர்களின் பேராசை மூர்க்கமான வேகத்தோடு வெல்லக்கூடியதாக இருப்பதைக் குறிக்கிறது.


ஒரு புனைவில் சொல்லப்படும் செய்திக்குப் பின்னால் அதை எழுதியவன் உள்ளார்ந்து ஏராளமான அர்த்தங்களை உணர்த்துகிறான். யானை கொல்லப்படும் இடத்தில் ஒரு காடும் அதன் நினைவுகளும் அழிக்கப்பட்டதான புரிதலும் வேதனையும் உருவாகக் கூடிய சாத்தியத்தை அமைத்ததுதான் இந்தக் கதையின் வெற்றி.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page