பன்றிவேட்டை இணையவழி உரையாடல் நிகழ்வு
- லக்ஷ்மி சரவணகுமார்

- 40 minutes ago
- 1 min read

நண்பர் சிறகனின் ஒருங்கிணைப்பில் பன்றி வேட்டை நாவலுக்கான இணையவழிக் கூட்டம் வரும் நவம்பர் 22 ம் தேதி மாலை 7 மணிக்கு இணைய வழியாக நடக்க இருக்கிறது.
இந்த உரையாடலில் எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, கார்த்திகைப்பாண்டியன், காதர்ஷா இவர்களோடு நானும் உரையாற்றுகிறான்.
நாவல் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்.
இந்த நாவலுக்கு நடத்தப்படும் முதல் அறிமுகக் கூட்டம்.
தமிழ் இலக்கியச் சூழலில் நூல்கள் வெளியிடுவதும் வாசிப்பதும் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த வாசிப்பு குறுகிய மனநிலை கொண்டதாக சுங்கத் துவங்குகிறது கடந்த தலைமுறை எழுத்தாளர்களிடம் ஒரு நல்ல பண்பு இருந்தது. ஒரு நூல் வெளியானால் அதைப் படித்துவிட்டு உரையாடுவார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால் 2010 ம் வருடத்திற்குப் பிறகு வந்த எழுத்தாளர்களை கவனிக்கையில் அவர்கள் எழுதத் துவங்கும் போதே தமக்கான ஒரு குழுவை உருவாக்கிக் கொள்வதிலும் தங்களை லாபி செய்து கொள்வதிலும் கவனமாக இருக்கிறார்கள்.
எந்த எழுத்தாளரை வாசிக்க வேண்டும், யாரைக் குறித்து பொதுவெளியில் பேச வேண்டும் எல்லாமே எழுத்தாளர்களுக்கு இருக்கும் பிரபலத்தன்மை, அரசியல் அல்லது வசதியான செல்வாக்கு இவைதான் தீர்மானிக்கின்றன. இந்தக் குழுவாதம் ஆரோக்கியமான உரையாடலை உருவாக்குவதற்குப் பதிலாக சில்லறை விவாதங்களுக்குள்ளேயெ முடிந்து போவதாக இருக்கிறது. இலக்கியவாதிகள் தங்களோடு இதை நிறுத்திக் கொள்வதில்லை. புதிதாக வாசிக்க வருகிறவர்களையும் தங்களது வலைக்குள் சிக்க வைக்கிறார்கள். அதனாலேயே இணையத்தில் பெருகி வரும் வாசிப்புக் குழுக்களுக்குள்ளும் இலக்கிய அரசியல் வேரூன்றி விட்டது.
பன்றிவேட்டை நாவல் வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இதுதான் முதல் அறிமுகக் கூட்டம். அந்த நூலைக் குறித்து இணையத்தில் ஓரிரு வாசிப்புக் குறிப்புகள் எழுதப்பட்டன. இப்படியானதொரு நிலை எனது நூலுக்கு என்றில்லை. பிரபலத்தன்மை இல்லாத எழுத்தாளர்களின் நூல்களுக்கு இதே நிலைதான். ஒரு நூல் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் கூட எழுதப்படலாம். ஆனால் வாசிக்கப்படமாலே போவது இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல.



