top of page

ரெண்டாம் ஆட்டம் நாவலிலிருந்து சிறிய பகுதி

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 12 minutes ago
  • 6 min read

ree

29   ஜெகதி


            வறண்ட நிலத்தில் பூக்கும் மலர்களுக்குத் தனித்துவமான வசீகரமுண்டு.  ஜெகதி அப்படியானதொரு மலர். எதிரிலிருப்பவர்களைத்  பார்வையாலேயே வீழ்த்திவிடும் விசேஷமான கண்களை கடவுள் அவளுக்குப் பரிசளித்திருந்தார். சராசரி பெண்களை விட சற்றே உயரமும் இறுகிய உடலும் கொண்ட அவள் மதுரைக்குக் குடிவந்தது 2012 ம் வாக்கில்தான்.  ராமநாதபுரத்திற்கு அருகில் பாண்டியூரைச் சொந்த ஊராகக் கொண்டவள் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வந்தாள். மலேசியா சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்குப் பெண்களை அனுப்புவதாக  சொல்லிக் கொண்டாலும் குருவிகள் மூலமாக சிங்கப்பூரிலிருந்து தங்கம் எடுத்து வருவதே அவளுக்குப் பிரதான தொழில்.  பொதுவாக குருவிகளை திருச்சியிலிருந்து மளிகை சாமான்கள் எடுத்துச் செல்லவும் சிங்கப்பூரிலிந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்து வருவதற்காகவும் தான் பயன்படுத்துவார்கள். இதில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்ட ஆட்கள்தான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.


            ஜெகதியின் அப்பா சிங்கப்பூரில் சில வருடங்கள் வேலை செய்தவர்,  ’இந்த வறக்காட்டுல பொழப்பு தழப்பு இல்லாம கெடக்கற பிள்ளைகள சிங்கப்பூர் பக்கமா வேலைக்கு அனுப்பி வைக்கலாம். அங்க நம்மாளுகளுக்கும் வீட்டு வேலைக்கி நம்பிக்கையான பொம்பளைக தேவைப்படுது. ஆளுக்கு இவ்ளோனு நம்மளுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்.”  அவரது வழிகாட்டுதலில்தான் ஜெகதி  ஏஜென்ஸியைத் துவக்கினாள். சீமக் கருவேலை அடர்ந்த ராமநாதபுரத்தின் வறண்ட மண்ணில் பிழைப்பிற்கு வழியின்றி ஏதாவதொரு ஊருக்குச் சென்று கிடைக்கிற வேலையைச் செய்ய ஆட்கள் பேயாய் அலைந்தார்கள். வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதற்கென நிறைய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.


நம்பிக்கையான ஏஜென்ஸிகளால் மட்டுமே தொடர்ந்து இந்தத் தொழிலைச் செய்ய முடியும். ஜெகதி அந்த நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்து இருந்தாள். சரியான ஆட்களிடம் வேலைக்கு அனுப்புவது, வேலைக்குச் செல்லும் பெண்ணின் குடும்பத்தினருடன் நல்லவிதமாக உறவைப் பேணுவதென திறமையாகச் செயல்பட்டாள். இயல்பிலேயே மனிதர்களை அவர்களின் குணங்களோடு ஏற்றுக்கொள்ளும் வழக்கம் கொண்டவள் என்பதால் யாருக்கும் குறைநிறை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதில் கவனமாய் இருப்பாள். எதிர்பாராதவிதமாய் அவளது அப்பா இறந்துவிட குடும்பப் பொறுப்புகளைத் தனித்துப் பார்த்துக் கொள்ளவேண்டிய நெருக்கடி உருவானது.  தேவைகள் தான் மனிதனை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னகர்த்திக் கொண்டேயிருக்கிறது.


அவளைப்போல் ராம்நாட்டில் ஏஜென்ஸி நடத்தியவர்கள் சிங்கப்பூருக்கு குருவிகளையும் அனுப்பிக் கொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டவள், குருவிகள் மூலமாய்  கரன்சிகளை எடுத்துச் செல்லும் வேலையைத் துவங்கினாள். இதில் நல்ல கமிஷன் உண்டு, ரிஸ்க்கும் குறைவு என்பதால் நிறையபேர் இந்த வேலைக்குக் கிடைத்தார்கள்.  சிங்கப்பூருக்குள் நுழையும் ஒருவர் எவ்வளவு பணம் வேண்டுமானாலு எடுத்துச் செல்லலாம் என்பதால் வெவ்வேறு நாட்டுக் கரன்சிகளை எடுத்துக் கொண்டு குருவிகள் பயணிக்கத் துவங்கினர்.  


பறவை  தன் ரெக்கைகளை விரித்துப் பறக்கத் துவங்கியபின் எல்லா எல்லைகளையும் கடந்து செல்லவே விரும்புகிறது. வேலைக்காக   தன்னைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமானபோது ஜெகதி  இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தாள். கரன்சி மாற்றுவது, திருச்சி வழியாக மளிகை சாமான்கள் எடுத்துச் செல்வது இவையெல்லாவற்றையும் விட தங்கம் எடுத்து வருவதில் நல்ல லாபமிருந்ததை அனுபவம் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. ’எக்கா இன்னும் இருவது வருஷம் கழிச்சுப் பாரு உலகத்தோட மார்க்கெட் தங்கத்த சுத்திதான் இருக்கும். இன்னிக்கி பெட்ரோல்க்கு இருக்க மவுஸெல்லாம் குறஞ்சு தங்கம் இந்த உலகத்த ரூல் பண்ணப் போகுது. சைனாவும் ஜப்பானும் கணக்கு வழக்கில்லாமல் தங்கத்த பதுக்கிட்டு இருக்கானுங்க. ஏன் தெரியுமா? எதிர்காலத்துல அமெரிக்கக்காரன வீழ்த்தப்போற ஆயுதம் இந்தத் தங்கம்தான்.  நாம இப்பயே சுதாரிச்சம்னா நல்லா காசு பாக்கலாம்.” தங்கத்திற்குப் பின்னாலிருக்கும் எதிர்காலத்தை ஜெகதியின் தம்பி அவளுக்கு உணர்த்தினான்.


‘ஆனா இது லேசான வேலையில்லடா சுரேசு… கஸ்டமஸ் ல மாட்டினம்னா இத்தன வருஷம் சம்பாதிச்சதெல்லாம் போயிரும்.’


‘கஷ்டம் பாத்தா காரியம் நடக்குமா?  நாம மொதல்ல அங்க இருந்து  குருவிங்க மூலமா செயின் மோதிரமா எடுத்துட்டு வருவோம். லைன் பிடிபடவும் பிஸ்கட் எடுக்கலாம்.’

‘அங்க நம்மளுக்கு நம்பிக்கையான ஆளுக வேணுமேடா?’


‘அத நான் பாத்துக்கறேன். நம்மளுக்கு க்ரடிட் ல நக குடுக்க அங்க தெரிஞ்ச கட இருக்கு. நாம அப்பப்ப மொத்தமா பணம் குடுத்தா போதும். உண்டியல் காசு மாத்தற ஏஜெண்ட் நம்பிக்கையானவன் அவன் பயக மூலமா நகைய குடுத்துவிடச் சொல்லுவும். அதும் இல்லாம எடுத்துட்டு வரப்போறது நம்ம குருவிங்க தான.?”


“சரி டா இதச் செய்றதால குருவிங்களுக்கு என்ன லாபம்?’


“அட லூசு. நகைக்கான பில்ல சிங்கப்பூர் கஸ்டம்ஸ்ல காட்டினா 7 பெர்சண்டேஜ் ஜி.எஸ்.டி காசு கெடச்சிடும். அது நம்ம குருவிங்களுக்கு ரெண்டு ட்ரிப் போயிட்டு வர்ற காசு. நம்மளவிட அவய்ங்களுக்குத்தான் இதுல லாபம்.’


எல்லா வகையிலும் சந்தேகம் தீர்ந்தபிறகுதான் ஜெகதி  சுரேஷின் யோசனைக்கு ஒத்துக்கொண்டாள்.  தங்கம் அதுவரையிலான அவர்களின் தொழிலை வேறு இடத்திற்கு நகர்த்தியது. எல்லீஸ் நகரில் சின்னதாய்த் துவங்கப்பட்ட அந்த அலுவலகம் குறுகிய காலத்திலேயே பரபரப்பானது. தினமும் மளிகை சாமான்களோடும் கரன்சிகளோடும் குருவிகள் பறக்கத் துவங்கினார்கள். சீங்கப்பூரில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு தங்க நகைகளோடு  திரும்புவார்கள்.


ஜெகதியும் சுரேஷும் நம்பிக்கையான குருவிகளைத் தங்களோடு வைத்துக் கொண்டார்கள். பயணத்தை சரியாகத் திட்டமிட்டார்கள்.  எந்த நாள் எந்த விமானத்தில் பயணிக்க வேண்டுமென்கிற தெளிவுதான் இதில் முக்கியமானது. விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் விவகாரமான ஆட்கள் பணியிலிருக்கும் போது பயணத்தைத் தவிர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்காகவே  கஸ்டம்ஸ் ஆஃபிசர்களின் பணிநேர அட்டவனை ஒன்றைத் தயாரித்து தன் ஆட்கள் எல்லோரிடமும் கொடுத்திருந்தாள். அந்தக் காலண்டரை குருவிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பதுண்டு. இந்த அக்கறையினாலேயே அவளது குருவிகள் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் பொருட்களை எடுத்து வந்தனர்.


தொழில் நன்கு பழக்கமானதால் சுரேஷுக்கும் ஜெகதிக்கும் அதன் மேலிருந்த பயம் போனது. பிஸ்கட்டுகளை எடுத்து வரலாமென முடிவெடுத்தார்கள்.  பயம் விலகுகையில் ஆபத்து சூழுமென்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. சிங்கப்பூரிலிருந்து  தங்கக்கட்டிகள் எடுத்து வருவதென்பது சிரமமான காரியம்.  நான்கு மணிநேரம் தங்கக் கட்டிகளைக் குதத்தில் வைத்து எடுத்து வரமுயன்றால் மரணத்தில்கூட முடியலாம். இப்படி குதத்தில் வைத்து தங்கக் கட்டிகள் எடுத்து வருவதை ராக்கெட் என்று சொல்கிறார்கள். ஜெகதி இந்த ராக்கெட்டிற்காக கொழும்பில் ஆட்களைப் பிடித்தாள்.  கொழும்பு விமானநிலையத்தில் ஏஜெண்ட் தங்கக் கட்டிகளைச் சேர்த்துவிடுவான். அங்கிருந்து நாற்பத்தைந்து நிமிடம்  விமானப் பயணம்.  விமான நிலையத்தில் இறங்கும்போதே வண்டி தயாராகக் காத்திருக்கும். அருகிலிருக்கும்  விடுதிக்குச் சென்று உடனடியாக தங்கத்தை வெளியில் எடுத்துவிடலாம்.  கொஞ்சம் பிசகினாலும் உயிருக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய இந்தச் செயலைச் செய்ய ஒருவரும் துணிந்து முன்வரவில்லை. இவ்வளவு தங்கத்தைக் கடத்துவது கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டால் அதனால் ஏற்படும் விளைவும் மோசமானதான் இருக்குமென்பதால் குருவிகள் தயங்கினார்கள்.


’யாரையும் நம்பி பிரயோஜனமில்லக்கா, நானே எடுத்துட்டு வர்றேன்..’ சுரேஷ் துணிச்சலாக அந்த முடிவெடுத்தான். இதுவொரு சூதாட்டம். ஆனால் ஆபத்துகள் நிறைந்த சூதாட்டம்.  இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே கொழும்பு சென்று தங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டவன் முந்தைய நாள் இரவு இனிமா குடுத்து வயிற்றை சுத்தம் செய்தான். அதன்பிறகு பயணம் முடியும் வரையிலும் கொஞ்சமாக திரவ உணவு மட்டுமே. ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை குதத்தில் அடைத்துக் கொள்வது எத்தனை சிரமமான காரியமென்பதை முதல்முறையாகச் செய்து பார்த்தபோதுதான் அவனால் புரிந்து கொள்ளமுடிந்தது.  


புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திருச்சி விமானநிலையத்தில் அவ்வளவாக நெருக்கடி இருக்காதென்பதால் அன்றைய தினம் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருச்சி வரும் குருவிகளோடு கொழும்பில் சுரேஷ் இணைந்து கொண்டான். பயணத்திற்காக விமானத்தில் ஏறி உட்கார்ந்தபோது அவனுக்கு குதத்திற்குள் வலி அதிகமாகி குருதி கசிவது போலிருந்தது. உடனிருந்த குருவிக்கு அவன் நிலைமை புரிந்தது. ‘தம்பி எதுவா இருந்தாலும் பொறுத்துக்கங்க. அவசரப்பட்டு கக்கூசுக்கு மட்டும் போயிராதிங்க.’ என பதற்றத்தோடு எச்சரித்துக் கொண்டே இருந்தார். வலி தெரியாமலிருக்க சுரேஷ் கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.  வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகி தலைக்குள் எதிரொலிக்கத் துவங்கியபோது அவனால் தாங்க முடியவில்லை. சத்தம் வராதபடி அனத்தத் துவங்கினான்.


பணிப்பெண் வந்து கொடுத்த உணவையும் தண்ணீரையும் வேண்டாமென்று சொன்னதால் சந்தேகத்தோடு பார்த்துச் சென்றாள். விமானம் திருச்சியில் தரையிறங்கி எல்லோரும் இறங்கியபோதே அவனுக்கு வலியில் மயக்கம் கூடிவிட்டது. குருவிகள் எப்படியாவது அவனை வெளியே கூட்டிச் சென்றுவிடவேண்டுமென பதற்றத்தோடு வேகமாய் நடந்தார்கள். குடிவரவுச் சோதனை முடிந்து வெளியேறும் போதே சுரேஷ் மயங்கிவிழ அருகில் நின்றால் தமக்கும் ஆபத்தென்பதைப் புரிந்து குருவிகள் அவசரமாகக் கடந்து சென்றார்கள்.

 

 

 

30

            எல்லா முயற்சிகளும் வெற்றிகளில் முடிவதில்லை. தோல்வியடையும் முயற்சிகள் சில சமயங்களில் பெரும் இழப்புகளில்தான் முடிகின்றன. குருவிகள் மூலமாய் சுரேஷ் கஸ்டம்ஸில் மாட்டிக் கொண்ட செய்தி கிடைத்தபோது ஜெகதி நொறுங்கிப் போனாள்.

‘செகதி, நாங்கதான் மொதல்லயே சொன்னம்ல இது லேசான காரியமில்லன்னு. செயினு மோதிரம்னு எடுத்துக்கிட்டு வாரதெல்லாம்  கஸ்டம்ஸ்காரனுக்கு மேட்டரே இல்ல. ஆனா கிலோ கணக்குல பிஸ்கட்டோட மாட்டினா முழுசா சாப்ட்றுவானுங்க. பொருளும் வராது. பெண்டிங் ல இருக்க பழைய கேஸுல எல்லாம் பேர சேத்துருவானுங்க. அவய்ங்க  சுரேஷ டார்கெட் பண்ணி சோலிய முடிக்கிறதுக்குள்ள யாரையாச்சும் புடிச்சு சரிக்கட்டப் பாரு..’


இத்தனை காலம் அவர்கள் விளையாடிய விளையாட்டு ஆபத்தில்லாதது. இந்த விளையாட்டின் முதல் நாளிலேயே தன் தம்பியை இழந்துவிடுவமோ பதறிப்போய் தனக்குத் தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டுச் சென்றாள்.  பிரச்சனை வராதவரைதான் இந்தத் தொழிலில் சக முதலாளிகள் உதவ முடியும். பிரச்சனைகளைத் தனியாகத்தான் சமாளிக்க வேண்டும். இரண்டு மூன்று வருடங்கள் உயிரைக் கொடுத்து சம்பாதித்தையெல்லாம் ஒரு நாளில் இழந்து நின்றவர்கள் அனேகம் . ஜெகதிக்கு தான் சம்பாதித்ததை இழப்பதில் வருத்தமில்லை, ஆனால் தம்பியைப் பாதுகாக்க வேண்டும். தெரிந்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லோரையும் அணுகிப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.  அவளிடம் குருவியாக இருக்கும் சேது அண்ணன் தான் ‘கோட்டச்சாமின்னு ஒரு ஆளு இருக்காரும்மா, இந்தப் பிரச்சனைல உனக்கு உதவி பண்ணக்கூடிய சக்தி அந்தாளுக்கு மட்டுந்தான் இருக்கு.’ என ஒரு வழிகாட்டினார்.


‘யாருண்ணே அவரு போலிஸா? கஸ்டம்ஸா?”

“ம்ஹூம்… மதுரை ல பெரிய கை. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து அரசியல் போக்குவரத்துன்னு தமிழ்நாட்ல இருக்க எல்லாப் பெரிய ஆளுங்களோடயும் நெருக்கம். அவரு நெனச்சா உடனே உன் தம்பிய மீட்ற முடியும்.”

“அப்போ உடனே கூட்டிப்போங்கண்ணே.”

சேது யோசித்தார்.


“செல்வம்னு எனக்குத் தெரிஞ்ச பையன் இருக்கான். அவந்தான் அவருக்கு எல்லாம். தம்பி மாதிரின்னு வெச்சுக்கயேன். அவன் கிட்டப் போவோம். அவன் உதவி பண்ணுவான்.”


பாதுகாப்பென நினைத்து வலைக்குள் சென்று புகுந்துகொள்ளும் மீன்கள் வலையிலிருக்கும் ஆபத்தை அறிவதில்லை. ஜெகதி மனிதர்களை நம்பினாள்.  ஆபத்துகளின் போது மனிதன் சக மனிதனுக்கு உதவுவதுதான் மனித இயல்பென்பது அவளது நம்பிக்கை, சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் மனிதனின் ஆதி குணமென்பதை யோசிக்குமளவிற்கு அவளுக்கு அவகாசம் இருந்திருக்கவில்லை. சேதுவும் ஜெகதியுமாகச் சேர்ந்து பழங்காநத்தத்திலிருந்த கோட்டைச்சாமியின் அலுவலகத்தில் செல்வத்தை   பார்த்தார்கள். பிரச்சனையின் வீர்யம் புரிந்ததால் செல்வம் உடனடியாக உதவ ஒத்துக்கொண்டான்.


“ஒரு காதுகுத்துக்காக திருமங்கலம் வரைக்கும் போயிருக்காப்ள. நீங்க போயிட்டு பொழுசாயமா வாங்க. நானும் அதுக்குள்ள அவர்கிட்ட மேட்டரச் சொல்லி வைக்கிறேன்.”

ஜெகதி அவசரமாய் அவனை மறித்து

“அதுவரைக்கும் பொறுக்க முடியாதுண்ணே… எங்களுக்குப் பெருசா யார் சப்போர்ட்டும் இல்ல, கஸ்டம்ஸ்ல ஒன்னுக்கு ரெண்டா இருக்க எல்லா கேஸையும் என் தம்பி மேல போட்டா அவன் வாழ்க்கையா நாசமாப் போயிரும். நாமளே திருமங்கலம் கெளம்புவோம்” என அவசரப்படுத்தினாள். அழுதுவடிந்து துயரம் அப்பியிருந்த ஜெகதியின் முகத்தைப் பார்த்து மறுக்கமுடியாமல் அவர்களை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டான். வழி முழுக்க அவள் எதுவும் பேசவில்லை, அழுகையை அடக்க முடியாத வலியை அவளது கண்களில் செல்வம் கண்டுகொண்டான்.


“சொந்த ஊரு எதும்மா?”

“இராம்நாட் பக்கத்துல பாண்டியூருண்ணே..”

“நல்லதாப் போச்சு. அண்ணனுக்கும் கமுதி தான் பூர்வீகம். ஒரே ஏரியாக்காரப் பிள்ளைன்னா உறுத்தா செய்வாப்ள.”

அவள் எதுவும் பேசவில்லை.


“ஒரு பொம்பளப் புள்ள கெத்தா இவ்ளோ பெரிய வேல பாக்கறன்னா கெட்டிக்காரிதாம்மா நீ..” என செல்வம் பெருமிதமாகச் சொன்னபோது மட்டும் லேசாக சிரித்துக் கொண்டாள்.


            திருமங்கலத்திற்கு வெளியே முத்தையா கோவிலில் காதுகுத்து முடிந்து ஆட்கள் பாதிக்கும் மேல் கிளம்பிவிட்டிருந்தனர். கோவிலிலிருந்து சற்றுதூரத்திலிருந்த குண்டாற்றை ஒட்டிய தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி விசேஷ வீட்டு ஆட்களுடன் மதுவருந்திக் கொண்டிருந்தான். போதையில் சிவப்பேறிய கண்களுகளோடு எதிர்பாராத விதமாய் செல்வத்தைப் பார்த்தவன் ‘என்னடா சொல்லாமக் கொள்ளாம வந்துட்ட? எதும் பிரச்சனையா?’ என எழுந்தான். “ஆமாண்ணே. நம்மளுக்கு வேண்டிய பிள்ள. இராம்நாட்தான். ஒரு பிரச்சனைன்னு வந்திருக்கு. நீதாண்ணே உடனே என்னன்னு பாக்கனும்” தோப்பிற்கு வெளியில் சேதுவோடு நின்றுகொண்டிருந்த ஜெகதியைக் காட்டினான். வெயில் அப்போதுதான் உச்சிக்கு ஏறத் துவங்கியிருதது. குடித்த மதுவின் வீர்யம் ஜெகதியைப் பார்த்த நொடியிலேயே கோட்டைக்குப் பல மடங்கு அதிகமானது. செல்வத்தோடு அவளை நோக்கி நடந்தான். அருகில் சென்றதும் அவள் வணக்கம் சொன்னாள். அருகிலிருந்த சேதுவைப் பார்த்து ‘நீங்க இந்தப் பிள்ளைக்கு என்ன வேணும்?’ எனக் கேட்டான். ‘சொந்தக்காரப் பிள்ளதாண்ணே.’  சேது பணிவாய்ச் சொன்னார். ஜெகதிக்குப் பொறுமையில்லை. தன் தம்பியின்  இக்கட்டான நிலையை அவனிடம் மடமடவென சொல்லிமுடித்தாள். கோட்டை அவள் மீதிருந்து கண்களை எடுக்க முடியாமல் உறைந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நீங்கதாங்க உதவி செய்யனும். காலத்துக்கும் நன்றியா இருப்போம்.’ ஜெகதி கையெடுத்துக் கும்பிட்டாள். கோட்டை சிரித்தான்.


“சும்மா நன்றியா இருக்கறதுல யாருக்கு என்னம்மா லாபம்?”

“அய்யோ காசு பிரச்சன இல்லங்க. என் சொத்த வித்துண்டாலும் நீங்க கேக்கற காசு குடுத்துடறேன்.”


கோட்டைக்கு வியர்த்துக் கொட்டியது. எரிச்சலோடு சட்டையை அவிழ்த்துத் தூக்கிப் போட்டான். சேதுவைப் பார்த்து ‘நீ கொஞ்சம் தூரமாப் போயி நில்லு’ என்றதும் சேது தயங்கியபடியே நகர்ந்தார். கோட்டை அவளை நெருங்கினான். ‘காசு பணத்துக்கு விழுகற ஆளுனு நெனச்சிடியா என்ன? உன்ன மாதிரி ஒருத்திக்கு முன்ன எத்தன கோடி குடுத்தாலும் தூசுக்கு சமானாம். நீ எங்கூட இருக்கறேன்னு சொல்லு. நாளைக்கிக் காலை ல உன் தம்பி வீட்ல இருப்பான்.” அவன் சொன்னதைக் கேட்டு செல்வம் அதிர்ந்து போனான்.  ஜெகதிக்கு உடல் எரிந்தது. ‘த்தூ என்ன ஆம்பளய்யா நீ? உதவி கேட்டு வந்தவள படுக்கக் கூப்டற?’ கோட்டை அவசரமாக அவளை மறித்து ‘ச்சீ ச்சீ என்னத்தா கேவலமா பேசற? பாக்கறவளோடல்லாம் படுக்கறவன்னு நெனச்சியா என்னய? எவளையும் கண்ணெடுத்துப் பாக்க மாட்டேன். அப்பிடி இருந்ததெல்லாம் உன்னய ஒருத்திகாகத்தானோ என்னவோ? உன்னயெல்லாம் சாகற வரைக்கும் என் பக்கத்துல வெச்சு அனுபவிக்கனும்” அவன் சிரிக்க, ஜெகதி ஆத்திரத்தோடு ‘உன் உதவியே எனக்குத் தேவையில்ல’ என விலகி நடந்தாள். கோட்டை உடலில் இருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே ‘அவசரப்படாத நான் சொன்னதக் கேட்டா உன் தம்பி காலை ல உயிரோட வருவான், இல்லப் பொணமாத்தான் வருவான்.’ என சத்தமாய்ச் சொல்ல, அவள் அப்படியே உறைந்துபோனாள். தன்னைமீறி கண்ணீர் பெருக்கெடுத்தது.

           

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page