top of page

ஹரிகிஷன் கவுலின் ‘ஞாயிறின் ஒளி’

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 6 days ago
  • 5 min read

ree

ஸ்ரீநகரில்  ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஹரிகிஷன் கவுல்  கஷ்மீரி  புனைவிலக்கியத்தில் தனித்துவமான எழுத்தாளர்.  எப்போதும் ஊடகங்களாலும் ராணுவத்தாலும் கண்கானிக்கப்படும் ஒரு நிலத்தில் வாழ்கிறவர்களது மனநிலை நிலையானதாக இருப்பதில்லை. வன்முறைக்கு நடுவே பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் கதைகள்  ஏதாவதொரு சார்புடனேயே இருக்கிறது. கஷ்மீர் மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வன்முறை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதல்ல.   மிக நீண்ட வரலாறும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட கஷ்மீரி மக்கள் கடந்த நூறு வருடங்களில் தங்களது அடையாளங்களை இழந்து வருகிறார்கள். இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள அந்த பிரதேசத்து மக்களின் அடிப்படை உரிமைகள் படுகொலை செய்யப்பட்டு ஏதிலிகளாக  அவர்கள் வெவ்வேறு நிலங்களை நோக்கி தப்பிச் செல்கிறார்கள்.


போர் தின்ற நிலங்களிலிருந்து எழுதப்படும் கதைகளில் நீண்ட கால அழுத்தத்தினால உருவான ஏமாற்றங்களும், தோல்வியுணர்ச்சியும் அதனோடு எப்படியேனும் வாழ்ந்துவிடவேண்டுமென்கிற நம்பிக்கையின் சிறு கீற்றையும் பார்க்க முடியும். லாரி த்ராப்லேயின் ஆரஞ்சு பழத் தோட்டம் என்னும் நாவலில் மத்திய கிழக்கில் யுத்த நிலத்தில் வாழும் இரண்டு சிறுவர்களின் கதை சொல்லப்படுகிறது. இரட்டையர்களான அவர்களில் ஒருவன் எதிரிகளின் ஆயுதத் தளவாடத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிர்த் தியாகம் செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரனுக்குப் பதிலாக அவனுடைய இன்னொரு சகோதரன் யாருக்கும் தெரியாமல் உயிர்த் தியாகம் செய்கிறான். மதம், அரச பயங்கரவாதம், படுகொலைகள் இவையெல்லாவற்றையும் தாண்டி வாழ்வின் மீது இரண்டு சிறுவர்களுக்கு இருக்கும் பேரன்பு நம்மை சிலிர்க்க வைத்துவிடும்.


இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து காஷ்மீர் முற்றிலும் வேறானது. நிலவியல் அமைப்பிலும் கலாச்சார ரீதியிலும் பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.  இந்து இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையே நீண்ட காலமாக விதைக்கப்பட்ட வெறுப்பின் காரணமாக சக மனிதர்களின் மீது நம்பிக்கையற்றவர்களாக அந்த மக்கள்  பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். யுத்த நிலத்திலிருந்து தப்பிக்க முடியாமல் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மரணச் செய்தி பழகிப்போய்விட்ட ஒன்று. இன்னொருபுறம் அங்கு ராணுவத்திற்கு இருக்கும் அளவுகடந்த அதிகாரம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுபடுத்தும் அளவிற்கு தீவிரமானது. வெடிக்கக் காத்திருகும் துப்பாக்கி முனையில்தான் தங்களது அன்றாட வேலைகளை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.


வருடத்தில் பெரும்பாலான காலங்களில் வீசும் கடும் குளிருடனும்,  எப்போதும் உள்ளுக்குள் உறைந்துபோன அச்சத்துடனும் வாழும் ஒரு தாய் தில்லியில் இருக்கும் தனது மகன் வீட்டிற்கு ஓய்வை கழிக்க வருகிறார். மிதமான வெப்பமும் அமைதியான பெருநகரச் சூழலுமாக தில்லி வேறு உலகமாக இருக்கிறது அவளுக்கு.   கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கு அழைத்துவரப்பட்டவளாகவே அவள் இந்த புதிய சூழலை எதிர்கொள்கிறாள். பெரிய சம்பவங்கள், திருப்பங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எழுதப்பட்ட இந்தக் கதை அந்தத் தாயின் மனவோட்டத்திலேயே வளர்கிறது. இரண்டு மகன்களில் ஒருவன் நன்கு படித்த நல்ல வேலையில் சேர்ந்து தில்லியில் வசதியான ஒரு வாழ்க்கை வாழ்கிறான். சாணக்யபுரி என்பது அன்றைய தில்லியில் அரசு அலுவலகர்களும் முக்கியப் பிரமுகர்களும் வசிக்கக் கூடிய பகுதி. இன்னொரு மகன் பெரிய படிப்போ நல்ல வேலையோ இல்லாமல் ஸ்ரீநகரில் சிரமமான வாழ்வை மேற்கொள்கிறான். இந்த இரண்டு மகன்களின் நடவடிக்கைகள் குறித்தும் அந்தத் தாய் சிந்திப்பதை இரண்டு உலகங்களைக் குறித்த சிந்தனைகளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.


கட்டுப்பாடுகளுக்கும் கண்கானிப்புகளுக்கும் நடுவில் போராட்டமான வாழ்க்கையை வாழும் ஒருவன் தனது மகனுக்கான காலுறைகளைக் கூட வாழமுடியாத அளவிற்கு சிரமப்படுகிறான்.  இளைய மகனது வீட்டில் ப்ரஷ்ஷர் குக்கரும், வாஷிங் மெஷினும் வீட்டிற்குத் தேவையான எல்லா வகையான ஆடம்பர பொருட்களும் இருக்கின்றன. அவன் அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வருகிறான். தனது சொந்த நிலத்திலிருந்து முதல் முறையாக வேறு ஊருக்கு வந்திருக்கும் அவளுக்கு இந்த புதிய ஊரின் அமைதியும் நடவடிக்கைகளும் ஆச்சர்யமளிக்கின்றன. மனிதர்களே இல்லையோ என ஐயப்படும்படியான இந்த அமைதியில் ஓய்வற்று சிந்திக்கும் மனதின் சத்தம் எத்தனை மூர்க்கமானது? காலை உறங்கி எழுகையில் பிரகாசமான சூரிய வெளிச்சத்தைக் கண்டு அவள் மகிழ்ச்சியடைவதை புதிய நிலத்திற்கு வந்து சேர்ந்ததன் அடையாளமாக மட்டுமில்லாமல் புதிய நம்பிக்கையையும் வாழ்வையும் அவள் விரும்புவதாக எடுத்துக்கொள்ளலாம்.


கதை முழுக்க சூரியவெளிச்சத்திற்கும் கதகதப்பிற்கும் ஏங்கும் ஒரு கஷ்மீரிப் பெண்ணின் சித்திரம் நமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில் தனது ஊரிலிருந்தும் கசப்பான நினைவுகளிலிருந்தும் துண்டித்துக் கொள்ள விரும்புகிறவளாகவும் ஆனால் அவற்றிலிருந்து மீளமுடியாதவளாகவும் அந்தப் பெண் இருக்கிறாள்.  ஒரு வகையில் தனது அடையாளங்களை இழக்க விரும்பாத அவளது பிடிவாதம் தான்  தனது மருமகள் செய்யும் சின்ன சின்ன செயல்களில் கூட குற்றம் கண்டுபிடிக்க வைக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும்  தனித்த நடைமுறைகள் உண்டு. கணவன் மனைவி மட்டுமே சேர்ந்து உருவாக்கும் குடும்பத்தில்  எத்தனை நெருக்கமான உறவினர்களோ நண்பர்களோ வந்தாலும் அவர்கள் மூன்றாம் நபர் தான். மனிதர்கள் தங்களது இயல்பிற்குத் தகுந்தபடியான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  பெற்றோர்களுக்கு பெரும்பாலும் தொந்தரவாக இருப்பது வீடு தங்களுக்குப் பிடித்தமானதாக இல்லை என்பதுதான்.


சொந்த ஊர்களிலிருந்து நகரங்களுக்கு வரும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். சிலர் ஒரே நகரிலிருந்தும் தனித்தனியாக இருப்பார்கள். மகனோ, மகளோ ஒரு வயதிற்குப்பின் தங்களது பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற ஏமாற்றத்தைப் பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.  குறிப்பாக பெண்களுக்கு.  தங்களது அதிகாரத்தின் அதிகபட்ச சாத்தியங்களை அவர்கள் கண்டுகொள்வது வீட்டில்தான், இதனாலேயே அதனைக் கைவிட அவர்கள் தயாராக இருப்பதில்லை. இந்த சமையற்கட்டில் என்னால் சமைக்க இயலாது, வீட்டில் இந்தப் பொருள் இங்கு இருக்க வேண்டுமென மகன் வீட்டிற்கோ, மகள் வீட்டிற்கோ வரும்போது தனது கட்டளைகளுக்கு அந்த வீட்டை மாற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.  ஓரிரு நாட்களுக்கு இந்த அதிகார மனநிலை வேலை செய்யலாம், ஆனால் நீடிக்காது. மகளோ மருமகளோ தனது வீட்டில் இன்னொருவரின் அதிகாரத்தை அனுமதிப்பதில்லை.


நமது குடும்ப அமைப்பு குழப்பமானது. அதிகாரம், சுயநலம், துரோகங்கள் என எல்லாமும் நிறைந்த கிடக்கும் இதைக் கட்டிக் காப்பதைத்தான் கலாச்சாரமான நம்பி வாழ்வின் பெரும்பாலான நாட்களைக் கழித்துவிடுகிறோம். வறுமைகளையும் தோல்விகளையும் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரங்களாகப் பார்க்கிறார்கள். அல்லது அவர்களது முதர்ந்த காலத்தில் பராமரிக்க வேண்டிய தாதிகளாகப் பார்க்கிறார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு தனிப்பட்டதொரு வாழ்க்கை இருக்கிறது என்பதைப் பற்றின கவலைகள் இருப்பதில்லை.


இந்த சுயநல எண்ணங்களை சுட்டிக் காட்டுகிறவன் சமூகவிரோதியாகிவிடுவான். அவன் இதற்கு அடிபணிய  வேண்டும், அந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அவர்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் செய்து, இவனும் குழந்தைகளைப் பெற்று ஒரு வயதிற்குப் பின் தனது பெற்றோரைப் போலவே மாற வேண்டும். ஒரு தலைமுறையிடமிருந்து குடும்ப வன்முறை அடுத்த தலைமுறைக்குக் கடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


இந்தக் கதையில் தாய்க்கு தன் இளைய மகன் நல்ல நிலையில்  இருக்கிறான் என்கிற மகிழ்ச்சியை விட தனது மூத்த மகனுக்கு இப்படி நடக்கவில்லையே என்கிற ஏக்கமே அதிகமாக இருக்கிறது. முதலில் தனது இளைய மருமகளின் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவளுக்கிருப்பது கசப்பான எண்ணங்கள் தான்.


தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கூட அந்த தாய்க்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் அண்டை அயலாருடன் பேசுவது, அவள் அணியும் ஆடைகள் எதுவும் இவளுக்குப் பிடிப்பதில்லை. ‘ஊரில் எதற்கும் வழியில்லாமல் இருந்தவள் இங்கு மினுக்கிக் கொண்டிருக்கிறாள்.’ என ஆத்திரப்படும் இடத்தில் இத்தனை வருடங்களில் தனது கணவன் தன்னை எங்குமே அழைத்துச் சென்றதில்லை என்கிற ஏமாற்றமும் இருக்கிறது. மகன் ஹரித்துவார் அழைத்துச் செல்வதாக சொல்லி இருக்கிறான். ஆனால் அதிலிருக்கும் மகிழ்ச்சியை விட தனக்குக் கிடைக்காததெல்லாம் தன் இளைய மருமகளுக்குக் கிடைக்கிறதே என்கிற பொறாமையுணர்ச்சி அதிகமிருக்கிறது.


முதியவர்கள் குடும்பத்தில் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் இடங்கள் நூதனமானவை. சமைத்த உணவைப் புறக்கணிப்பது, அண்டை அயலாரிடம் தங்களது கவலைகளைச் சொல்லி கண் கலங்குவது. தனது பிள்ளை நல்ல நிலையில் இருந்தாலும் தன்னை சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என புகார் செய்வது.  வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்னால் கிழிந்த உடைகளை அணிந்து யாரும் தன்னை சரியாகக் கவனித்துக் கொள்வதில்லை என்கிற தோற்றத்தை உருவாக்குவது என ஏராளமாகச் சொல்லலாம். இந்த வன்முறைகளை எப்படி நுட்பமாக இவர்களால் சிந்திக்க முடிகிறது என நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் ஒரு பிரச்சனைக்கு நாம் தீர்வு காண்பதற்கு முன்பாகவே மேலும் நான்கைந்து பிரச்சனைகளோடு தயாராக இருப்பார்கள். நூற்றில் எண்பது குடும்பங்களில் இந்த நிலைதான்.


காஷ்மீரில் யுத்தங்களுக்கு நடுவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பதை அறிகையில் எத்தகையச் சூழலில் வளர்ந்தாலும் சில அடிப்படை உணர்ச்சிகளிலிருந்து மனிதர்கள் விடுபடுவதே இல்லையோ எனத் தோன்ற வைக்கிறது. இந்தக் கதையில் அந்தத் தாய்க்கு எது உண்மை என்கிற குழப்பமும் தான் யார் என்கிற கேள்வியும் இருக்கிறது. சூரிய வெளிச்சம் தரும் கதகதப்பு ஆறுதல் போதுமெ குளிர் வதைக்கும் சொந்த ஊருக்கே செல்லலாம் என நினைப்பது அவளது சஞ்சலங்கள் கடந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதன் அடையாளம். படிப்பறிவல்லாத அப்பாவிப் பெண்ணாக சில இடங்களில் வெளிப்படுகிறாள். செல்வி கபூரை திருமதி கபூர் என்றே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை மகன் விளக்கியபிறகும் கூட தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை. நகரத்தில் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைக் குறித்து எதுவும் அறியாதவளாகவும் காஷ்மீரில் எதிரெதிராக நிற்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவில் ஒரு அலுவலகம் இருப்பதையும் அவளால் நம்பமுடியவில்லை. சுத்தமான இந்துவாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அவளுக்கு இஸ்லாமியர்கள் குறித்து இருக்கும் குறுகலான பார்வையும் நமக்குக் கிடைக்கிறது.


வெளிப்பார்வைக்கு அந்தப் பெண் அப்பாவியானவளாக இருக்கிறாள். கதாப்பாத்திரங்களோடு உரையாடுகையில் அவள் யாரென்பது வெளிப்படுவதில்லை. ஆனால் கதையை வாசிக்கிற நமக்கு அவளது எண்ணங்களின் வழியாக யாரென்பது தெரியவருகிறது. இப்படியானவர்களைத் தான் நாம் அதிகம் பார்க்கிறோம். நம்மோடுதான் இருக்கிறார்கள்.


பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையாகினும் எல்லாக் காலத்திற்கும் குடும்பச் சூழலில் பொருந்தக் கூடிய கதையாக இருக்கிறது.

ஹரிகிஷன் நாடகங்கள் எழுதக் கூடியவராகவும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதக் கூடியவராகவும் இருந்தவர். இதனால் அவரது கதாப்பாத்திர வடிவமைப்பு அழுத்தமானதாக இருப்பதோடு மனவோட்ட நடை கச்சிதமாக கைகூடி வருகிறது. உரையாடல்கள் மிகையின்றி இயல்பாகவும் கதையை மீறிச் செல்லாததாகவும் இருக்கிறது. முதல் வாசிப்பில் ஒரு குடும்பக் கதைக்கான எளிமையோடு தெரிந்தாலும் கதைக்குள் பேசப்பட்டிருக்கும் முரண்கள்  வெவ்வேறு விதமான பரிணாமங்கள் கொண்டதாக அமைந்துள்ளது.


நாம் மனிதர்களைக் குறைவாகவே அறிந்துகொள்கிறோம், ஆனால் நிறைய தெரிந்துகொண்டதைப் போல் பாவனை செய்கிறோம். இந்த பாவனைகளை உற்றுக் கவனிக்கும் போதுதான் ஒரு  எழுத்தாளன் சிற்ந்த கதைகளை எழுத முடியும். அப்படி எழுதப்படும் கதைக்கு அழுத்தமான முடிவு, திடீர்  திருப்பங்கள், அபாரமான துவக்கம் இது எதுவுமே தேவையில்லை.  எந்தக் கதாப்பாத்திரத்தின் கதையைச் சொல்ல விரும்புகிறோமோ அந்தச் சூழலுக்குள் எழுதுகிறவனும் வாசிக்கிறவனும் சந்திக்கும்படியான ஒரு புள்ளியை உருவாக்கிவிட்டால் போதும். கதை தன் போக்கில் நிகழும். எழுதுகிறவன் தவறவிடும் நுண்ணிய விவரங்களைக்கூட வாசிக்கிறவன் அனுமானித்துக் கொள்ள  முடியும்.


நல்ல சிறுகதைகள் வாசகனின் அறிவையும் நுண்ணுனர்வுகளையும் பொருட்படுத்த வேண்டும். அவன் உரையாட சிறிய இடைவெளியையும் அமைதியையும் கதைக்குள் உருவாக்கிக் கொடுத்துவிட்டால் அந்தக் கதையின் இன்னொரு பரிணாமத்தை வாசகன் கண்டடைவான். இந்தக் கண்டடைதல் தான் சிறுகதைக் கலையின் ஆகச் சிறந்த செயல். வாசிக்கிறவனை நிறைவடையச் செய்து மகிழ்ச்சியூட்டும் கதைகள்  விரைவிலேயே மறக்கப்படுகின்றன. அந்த நேரத்து இன்பத்தைத் தாண்டி அதில் ஒன்றுமில்லை.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page