அன்பின் பிரதிநிதிகள்
- லக்ஷ்மி சரவணகுமார்

- 20 hours ago
- 4 min read

Rental family திரைப்படம் குறித்து…
இரண்டு வருடங்களுக்கு முன் விம் வெண்டர்ஸின் பெர்ஃபெக்ட் டேஸ் திரைப்படம் பார்த்துவிட்டு அதிலிருந்து மீள எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. நமது மனங்களோடு தீவிரமாக உரையாடக்கூடிய அந்தத் திரைப்படம் வாழ்வின் அணுக்கமான தருணங்கள் அவ்வளவும் மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதில் இருப்பதைப் பேசும். ஒரு ஜென் கவிதையை வாசிப்பதற்கும் பயில்வதற்குமான வேறுபாடு எப்படியோ அப்படித்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கும் பயில்வதற்குமானது. ஒவ்வொரு காட்சியையும் எடுக்கப்பட்ட விதம் தாண்டி அதன் பின்னுள்ள அமைதியைத் தொடர்ந்து செல்வது முக்கியமானது. இரைச்சலான ஒரு சமூகத்தில் வாழ்ந்தபடி அமைதியைப் பயிலும்போது வாழ்வின் புதிய தரிசனங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
அந்தத் திரைப்படத்திற்குப்பின் அதே தீவிரத்தில் என்னைக் கட்டிப்போட்ட திரைப்படமாக Rental family ஐ குறிப்பிட வேண்டும். பெர்ஃபெக்ட் டேஸ் திரைப்படத்தில் உள்ளது போன்ற தியானத்தை ஒத்த அனுபவம் இதில் இல்லை. ஆனால் மனிதன் கூட்டத்திலிருந்தாலும் தனித்திருக்க சபிக்கப்பட்டவன் என்பதன் உண்மையை ஆழமாக வெளிப்படுத்துகிறது. சமநிலையற்ற பொருளாதார நெருக்கடிகள் உறவுகள் மீதும் எதிர்காலத்தின் மீதும் அவநம்பிக்கைகளை மட்டுமே விதைப்பதால் மனிதர்கள் தனித்து வாழ்கிறார்கள். அந்தத் தனிமையின் வினோத சுழலுக்குள்ளிருந்து தப்பிக்கவும் தங்களுக்கான தற்காலிக சந்தோசங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் உறவுகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?

அமெரிக்காவிலிருந்து கிளம்பி வந்து நடிகனாகும் கனவோடு ஜப்பானில் வசிக்கும் ஃபிலிப், ஒரு சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நம்பி திரைப்படங்களில் நடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். தற்செயலாக ஒரு இறுதி நிகழ்வில் அறிமுகமாகும் ஒருவர் மூலமாக உறவுகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளும் புதிய தொழில் வாய்ப்பு இருப்பதை அறிகிறான். அந்த இறுதி நிகழ்வே, ஜோடிக்கப்பட்ட ஒன்று. தனது இறப்பை காண விரும்பிய ஒருவன் எந்த உறவினர் எப்படி பேச வேண்டுமென விரும்புகிறானோ அப்படி பேச உறவினர்களாக ஒரு பெருங்கூட்டம் வந்து நடித்துவிட்டுச் செல்கிறது. வாழ்வின் போது மட்டுமல்ல, மரணத்திலும் தனிமை தொடர்கிறது என்பதன் அடையாளமாக இதனைப் பார்க்கலாம். நடிகனாக வாய்ப்புகள் கிடைக்கும் வரை இந்தப் புதிய தொழிலில் நடித்துப் பார்க்கலாம் என ஃபிலிப் முடிவு செய்கிறான்.
முதல் வேலையே ஒரு திருமணத்தில் மணமகனாக நடிக்க வேண்டும். அந்தப் பெண் தனது பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக திருமணம் நடப்பதைப் போல் ஒரு நாடகத்தை நடத்த, மணமகன் வேடம் நாயகனுக்கு. முதலில் ஒப்புக் கொண்டு பின் திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் குழப்பத்தில் விழுகிறான். அதிலிருந்து மீண்டு அந்த சடங்கில் அவனை நடிக்க வைக்க பெரும் போராட்டமே நடக்கிறது. ‘நீ இந்த நாடகத்தில் ஒரு பாத்திரம் மட்டுமே, ஒரு போதும் உன்னை உணர்வுகள் ரீதியாக அவர்களோடு பிணைத்துக் கொள்ளதே என அறிவுறுத்தப்பட்டபின் புதிய நம்பிக்கையோடு அடுத்தடுத்த வேலைகளை ஏற்றுக் கொள்கிறான்.
வயதின் காரணமாய் தனித்து வாழும் ஒரு பழைய நடிகனைக் குறித்து கதை எழுத விரும்பும் எழுத்தாளனாகவும், தந்தையற்ற ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் அவன் நடிக்கும் பாத்திரங்களில் அவனையே அறியாமல் அவன் உணர்வுப்பூர்வமாக நெருங்கிவிடுகிறான். உண்மையில் நடிக்க அழைக்கிறவர்கள் மட்டுமல்ல, நடிக்கச் செல்கிறவர்களுக்கும் இல்லாத உறவுகளின் மீது பெரும் ஏக்கம் இருப்பதை இன்னொரு லேயராக இதில் காட்டியிருப்பார்கள். ஃபிலிப் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தக் குழந்தையைத் தனது குழந்தையாக நினைக்கத் துவங்கிவிடுகிறான். உணர்ச்சிகளை நிகழ்த்திக் காட்டுவதற்கும் அதன் ஒரு பகுதியாக மாறுவதற்குமான இடைவெளியைப் புரிந்துகொள்ளாமல் நிகழும் குழப்பங்களில் அவன் சிக்கி வெளியேறுகிறான்.
வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் மூலமாக கிடைக்கும் உறவுகளின் மீது ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் போது அது காயங்களையே கொடுகிறது. எத்தனை வயதானாலும் நாம் பக்குவப்பட்டவர்களாக நடிக்கலாம், ஆனால் பக்குவப்படுவதில்லை. சிலரை நாம் காயப்படுத்துவதும் சிலர் நம்மைக் காயப்படுத்துவதும் எல்லா வயதிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த உலகில் நான் யாருக்கு முக்கியமானவன் என்கிற கேள்வியிலிருந்து இறுதிக்காலம் வரை மனிதர்கள் விடுபடுவதில்லை.
நாம் எதிர்பாராமல் கிடைக்கும் அன்பு திடீரென மறைந்து போகும்போது எந்தப் புள்ளியில் நாம் தவறவிட்டோம் எனத் தெரியாமல் குழம்புகிறோம். அந்தக் குழப்பம் ஒரு சுழலாக நம்மைத் தொடர்ந்து அலைக்கழிக்கச் செய்கிறது. அன்பை கொடுக்கிறவர்கள் அதற்கான காரணத்தைச் சொல்லாதது போலவே விலகிப் போவதற்கான காரணத்தையும் சொல்வதில்லை.
இந்தத் திரைப்படத்தில் மனிதர்களுக்கு விருப்பமான உறவாக நடிக்கத் துவங்கும் போது இருக்கும் ஃபிலிப்பின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி அவன் வேறொரு மனிதனாகி விடுகிறான். அன்பு ஒரு மனிதனை இளமையோடு வைத்திருப்பது எத்தனை நிஜமோ குழப்பங்களும் கவலைகளும் முதுமையானவனாக்கி விடுவதும் உண்மை. இந்தத்திரைப்படம் பார்த்தபோது இப்படி ஒரு நிறுவனமே தேவைப்படாத அளவிற்கு சமூக ஊடகங்கள் ஏராளமான குமிழ்களை உருவாக்கி இருப்பதை நினைத்துப் பார்த்துக் கொள்கிறான். திடீர் நண்பர்கள், திடீர் காதல்கள், திடீர் உறவுகளென வருவதும்,நீயும் நானும் வேறல்ல என ஒன்றிப் பிணைவதும், பின்பு சில காலத்திலேயே உனக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லை எனப் பிரிந்து செல்வதும் இந்தக் காலகட்டத்தின் வினோதமான விளையாட்டு.
சிலருக்கு விர்ச்சுவலாக காமம் தேவைப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் விர்சுவலாக காதல், துணை, நண்பர்கள், உறவுகள் தேவைப்படுவதன் பின்னால் இருக்கும் காரணங்களை விளங்கிக் கொள்ளமுடியைல்லை. உனக்காகத்தான் நான், நீயில்லாமல் நான் இல்லை என்பதெல்லாம் இன்றைக்கு அதிகமாகப் புழங்கும் பொய்கள். சிறிய அன்பிற்காக பெரிய காயங்களை மனிதர்கள் சுமந்து திரிகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் எனது ஆசிரியர்களில் ஒருவரான யசுஜிரோ ஒசு டோக்யா ஸ்டோரி என்றொரு திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்தத் திரைப்படத்தினை நேரடியாக அதனோடு தொடர்பு படுத்திக் கொள்ள ஒரு காரணம் உண்டு. டோக்யோ ஸ்டோரியில் எல்லா உறவுகளும் நிஜம். ஆனால் பெருநகரில் வாழ்க்கைப் பாடுகளை சமாளிக்க முடியாமல் ஓடுகிறவர்களுக்கு அந்த உறவுகள் பெரும் சுமையாக இருக்கின்றன. கிராமத்திலிருந்து தனது பிள்ளைகளோடு சில காலம் தங்கி வாழலாம் என்கிற விருப்பத்தில் வருகிற முதி தம்பதிகள் வளர்ந்த பிறகு மனிதர்கள் உணர்ச்சிகளின் நெருக்கத்தையும் அணூக்கத்தையும் விரும்புவதில்லை என்கிற உண்மையைஅப் புரிந்துகொள்கிறார்கள். அந்தத் தம்பதிகளின் பிள்ளைகளில் ஒருவர் கூட பெற்றோர்களை தங்களோடு வைத்துப் பார்த்துக் கொள்ள விரும்பவில்லை. அதன் பின்னுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பெற்றோர்கள் எந்தவிதமான புகார்களும் இல்லாமல் மீண்டும் ஊருக்குத் திரும்புகிறார்கள். ஒவ்வொரு காட்சியும் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் இந்தத் திரைப்படம் காலத்தால் அழியாதது. அங்கு உறவுகளும் உண்மை, காயங்களும் உண்மை, இந்தத் திரைப்படத்தில் உறவுகள் தற்காலிகமானவை ஆனால் காயங்கள் உண்மையானவை.
அடிப்படையில் இந்த மூன்று திரைப்படங்களிலும் இருக்கக் கூடிய கேள்வி குடும்பம் என்றால் என்ன? பெர்ஃபெக்ட் டேஸ் நாயகன் குடும்பம் உறவுகள் இவை இல்லாமலும் அமைதியானதொரு வாழ்வை வாழலாம் என்பதன் அடையாளமாக இருக்கிறான். எளிமையின் உச்சமான தரிசனம் இந்தத் திரைப்படத்தில் உண்டு. ரெண்டல் ஃபேமிலியில் மகிழ்ச்சியின் பொருட்டும் தேவைகளின் பொருட்டும் தற்காலிகமானதொரு குடும்பத்தை நாம் உருவாக்கிக் கொள்ளலாம், ஆனால் அங்கு காயங்களுக்கும் இடமுண்டு. டோக்யோ ஸ்டோரியில் சிதையும் குடும்ப அமைப்பில் அதனை பாதுகாப்பதில் நமது பங்கு எதுவுமில்லை என்பது வெளிப்படுகிறது. நம்மை யாரும் நேசிக்கவில்லை என்கிற புள்ளியிலிருந்து எனக்கு எந்த உறவு தேவையானதோ அதனை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும் என்கிற புள்ளிக்கு நகர்ந்து வந்திருப்பதில் பொருளாதார சூழல் வாய்ப்புகளை வேண்டுமானால் ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் முழுமையான விடுதலையை மனிதன் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறான் என்பது நிரூபணம் ஆகிறது.
இந்தத் திரைப்படம் எனக்கு இதன் நாயகனான ப்ரண்டன் ஃப்ரேசரின் தனிப்பட்ட வாழ்வோடு பிணைத்துப் பார்க்கத் தூண்டியது. Rental Familyயில் மனிதர்கள் உறவுகளை வாடகைக்கு எடுக்கிறார்கள். ஆனால் அந்த உறவுகள் அவர்களை காப்பாற்றவில்லை; அவை தற்காலிகமாக ஓர் வெற்றிடத்தை மூடுகின்றன.
இதே வெற்றிடத்தை தான் Brendan Fraser தனது வாழ்க்கையிலும், குறிப்பாக The Whale படத்திலும் சுமந்தார். அவர் நடித்த Charlie என்ற கதாபாத்திரம் உலகத்திலிருந்து விலகி, தனது மகளுடன் மீண்டும் இணைவதற்காக போராடும் போது, அது ஒரு உண்மையான உறவை தேடும் மனிதனின் வேதனையாக வெளிப்பட்டது. இங்கே ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. Rental Familyயில் உறவுகள் உருவாக்கப்படுகின்றன. The Whaleயில் உறவுகள் மீண்டும் பெறப்பட முயலப்படுகின்றன. ஆனால் இரண்டிலும் ஒரே கேள்வி, “நாம் உண்மையாக நேசிக்கப்படுகிறோமா, அல்லது அதைக் கற்பனை செய்கிறோமா?”
ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்கோடு இருந்த ப்ரண்டன் திடீரென பல்வேறு குற்றாச்சாட்டுகளால் ஒதுக்கப்படுகிறார். புகழின் உச்சத்திலிருந்த அந்தக் கலைஞனை இருபது வருடங்களுக்கும் மேல் ஸ்டுடியோக்கள் வாய்ப்பளிக்காமல் புறக்கணித்தன. நீண்ட காலத்திற்குப்பின் அவர் மீண்டும் நடித்த The Whale திரைப்படம் அவருக்கு ஆஸ்கர் விருதை வென்று கொடுத்தது. இதையெல்லாம் அவரோடு தொடர்புபடுத்திப பார்க்கும்போது, மனிதன் எதையும் இழக்கலாம் —ஆனால் அவனை யாராவது “உண்மையாக நேசிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் இழக்க முடியாது என்கிற யதார்த்தம் புலப்படுகிறது.



