top of page

கடவுளென்னும் ஆத்ம நண்பன்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 10 hours ago
  • 1 min read

 

ree

17 E க்காக காத்திருக்கும் கடவுள்…

பயணச் சீட்டில்லாமல் மாநகரப் பேருந்தில்  பயணிப்பது சுவாரஸ்யம். நானும் திருமிகு கடவுளும் கொதிக்கும் ஒரு பிற்பகலில் பிராட்வே வரைச் செல்லும் 17 ஈ பேருந்தில் பயணத்திக் கொண்டிருந்தோம். மூர் மார்க்கெட்டில் பழைய வாட்சுகளை விற்கும் அவரின் முன்னால் காதலியைச் சந்திக்க வேண்டி அவ்வப்போது நாங்கள் செல்வது வழக்கம். அவருக்கு புன்னகையையும் எனக்கு முத்தங்களையும் தருமவள் முன்பு ஒரு குஷ்ட ரோகி. காதல் குறித்து எங்களில் யாருக்கும் தெளிவான தீர்மானங்களில்லை.ஆனாலும் காதலிப்பது எங்களின் ஆதர்ஸம். எத்தனையோ முறை பயணச்சீட்டு  எடுக்க எத்தனிக்கும் என்னைக் கண்டித்து எடுக்க வேண்டாமென்பார்.“எங்கூட வரும் போது நான் சொல்றத மட்டுந்தான் கேக்கனும்…” அவர் கோவப்படுகையில் எப்போதும் மிகுதியான ஒரு பெண் தன்மையே வெளிப்படும்… சமயங்களில் அவர் இப்படி நடந்து கொள்வதைப் பார்க்கையில் அந்தரங்கமாக என்னைத்தான் அவர் காதலிக்கிறாரோ என்று கூடத் தோன்றும். வழமை போல் எனது மதிய உணவு இடைவேளையில் அவருடன் பயனித்தேன்… வழக்கத்திற்கு மாறான கோவத்துடன் இருந்தவரிடம் காரணத்தை கேட்டுக் கொள்ளவில்லை. பழக்கதோசத்தில் பயணச்சீட்டும் எடுக்கவில்லை. எக்மோரில் நிறுத்திய பயணச் சீட்டு பரிசோதகரிடம் எங்களுக்காகவே காத்திருந்தது போன்ற வன்மம். 

”டிக்கட் எங்க?” 

“எடுக்கல?”

“ஏன் எடுக்கல?”

“எதுக்கு எடுக்கனும்?”

கடவுளின் திமிர்ப்பேச்சில் கோவமுற்ற பரிசோதகனின் முகம் மாறியது.  சொத்தென கடவுளின் மூஞ்சியில் ஒரு அறை… மூஞ்சி சிவந்து விட்டது.. திரும்பி என்னைப் பார்த்தார். என் பங்குக்கு நாலைந்து அறை…

“முட்டாப்பயலே நீ டிக்கட் எடுக்கறேன்னு சொன்னதாலதாண்டா நான் பேசாம இருந்தேன்…”

கடவுள் அந்த பரிசோதகரே பரவா இல்லையென 

“வேணும்னா என்னயக் கைது பண்ணிக்கங்க” என்றார். அவரின் சட்டைப் பை, கால் சட்டைப்பை எல்லாவற்றையும் தேடி ஒன்றும் இல்லை என்றானதும்

“என்ன வேல செய்ற?..”

“கடவுளா இருக்கேன்…”

“த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பா உனக்கு…? பேசாம சாமியாரா இரு… நல்ல வருமானம் வரும்…”

கடவுள் சிரித்தார்

“அசுக்கு புசுக்கு… நான் சும்மா இருக்காம எதாச்சும் நடிக கூட ஆசயா பேசுவேன்… அத படம் பிடிச்சு அப்பறம் என்னயத் துரத்தி துரத்தி அடிப்பிங்க…”

சுற்றி இருந்த எல்லோரும் இப்பொழுது மாறி மாறி அடித்தனர்…. அடுத்து வந்த பேருந்தில் ஓடிப்போய் ஏறிக்கொண்ட நான் நீண்ட நாளுக்குப் பின்  நிம்மதியாக பயனித்தேன்

 


2 . உறக்கமற்ற நள்ளிரவுகளும் – கடவுளென்னும் ஆத்மநண்பனும்

 

மது அருந்துவது ஒன்றும் மோசமான செயலில்லையென

எத்தனை முறை சொல்லியும் கேட்பதாய் இல்லை கடவுள்.

கேகே நகர் பிரபா ஒயின்ஸில் நானும் அவரும் அமர்ந்திருந்தோம்

மது அருந்துவதற்கென எனக்கு காரணங்களெதுவும் இல்லாததுபோல்

மறுப்பதற்கு அவருக்கும் காரணங்களில்லை

“உங்களுக்கு யார் மீதாவது வன்முறையை பிரயோக்கிக்கும் விருப்பமிருக்கிறதா?”

கடவுள் சிரித்தார்.

”நான் எல்லோரின் மீதும் வன்முறையை செலுத்தவே விரும்புகிறேன்,

அன்பு மனிதர்களை அதீத சோம்பேறிகளாக்கிவிட்டது. உணர்ச்சியற்றவர்களாக்கிவிட்டது.’

அவர் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

ஒருவேளை மூன்றாவது சுற்று பிராந்தியையும் குடித்துவிட்டதால்

ஏற்பட்ட தைர்யமாய் இருக்கலாம்

நான் கடவுள் என்ன சொன்னாலும் மறுத்துவிடுவது என்னும் முடிவிலிருந்தேன்

“நீ தீர்வுகளுக்காக பேசவில்லை, திமிரில் பேசுகிறாய்…”

கடவுள் என்னை ஆணவம் பிடித்தவனென்றார்.

பக்கத்து டேபிளில் பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த பியர் பாட்டிலால்

அவர் மண்டையில் அடித்ததும்

செந்நிறப்பூக்கள் பொங்கி வழிந்தது

அத்தனை நேரமும் நிதானமாய்ப் பேசிக்கொண்டிருந்த கடவுள்

அழத் துவங்கிவிட்டார்.

வன்முறையை எல்லோரையும் விட அதீதமாய் நீயே பிரயோகிக்கிறாய் என்றார்.

அவர் குரலில் இருந்த வருத்தத்தில் உருகிப் போனேன்.

அவரின் குருதி பொங்கிய நெற்றியில் முத்தமிட்டேன்.

அணைத்துக் கொண்டேன்.

வா என் செல்லமே என போதை மிகுந்த குரலில் பாடினேன்….

நான் குடித்த மதுவின் வாசணை பொறுக்க மாட்டாமல்

அந்த மேசை முழுக்க வாந்தி எடுத்தார்.

கொஞ்சம் மதுவால் அவரின் வாயைக் கழுவிவிட்டு

ஒரு கோப்பை அருந்தக் குடுத்தேன்…

களைப்பை மீறின நிம்மதியில் புன்னகைத்தவர்

“இது ஆரஞ்சு பழச்சாறா?” என்றார்

நான் தேவ ரசம் என்றேன்.

அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து போனதை நினைவுபடுத்திய பரிசாரகனின் 

காலில் விழுந்தவர் 

இன்னொரு குவார்ட்டர் பிராந்தி வாங்கிக் குடித்துத் தீர்க்கும் வரை

போவதில்லையென பிடிவாதமாய் இருந்தார்.

அவர் மீது கொண்ட இரக்கத்தில் போலி மதுவைக் கொடுத்தவன்

இன்னொரு முறை இந்தப் பக்கம் வரக்கூடாதென எச்சரித்து அனுப்பி்னான்.

உற்சாகமாய் வந்தவர் தெரு முனையில் மங்கலாய் எரிந்து கொண்டிருந்த

சோடியம் விளக்கை கல்லால் எறிந்தார்.

மொத்த வீதியும் இருளாகிப் போனபின்

சந்தோசமாக என் தோளில் சாய்ந்து கொண்டார்.


3


 கடற்கரை கிராமங்களின் வழி என்னுடன் பயணித்த கடவுளுக்கு என்னால் வாங்கிக் கொடுக்க முடிந்ததெல்லாம் சற்று நீளமான சவரி முடி மட்டுந்தான்…


4

எல்லா அரசுப் பேருந்தின் கடைசி இருக்கையிலும்  

நீங்கள் பார்க்க முடிந்ததெல்லாம்

இந்த நகரத்தால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட கடவுள்களைத்தான்...


5

பர்கர் சாப்பிடுகிறவர்களின் விருப்பத்திற்கிணங்ககடவுள் கயிற்றின் மேல் நடந்து காட்டிக் கொண்டிருக்கிறார்.எப்போதோ காலாவதியாகிப் போன இந்த பழைய வித்தையைஇந்த மாநகரில் இன்னும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் அவருக்குஇன்றைய தேவை எல்லாம்ஒரு துண்டு சிக்கன் மட்டுமே.


6

இப்படியாக நானும் கடவுளும் ஒரு முடிவுக்கு வந்தோம்என்னை வெறுப்பதாக சொல்கிறவர்களை அவரும்அவரை வெறுப்பதாக சொல்கிறவர்களை நானும்தேடிப்போய் கொலை செய்வதெனஎனக்குக் கொலை செய்வது பற்றின திட்டமிடல்கள் எப்போதும் தெளிவாக உண்டு… ஆனால் கடவுளை வெறுக்கிறவர்களைக் கொல்லத்தான் மனமில்லை.  

ஆனால் அவர் வாக்களித்தபடி தனது கொலை படலத்தை துவங்கிவிட்டார்.முதல் கொலை செங்கல்பட்டில்….

இந்த மாநகரில் என்னை வெறுக்கிறவர்கள் இன்று முதல் எச்சரிகையாக இருக்கவும்…

என் கொலைப்பட்டியல் துவங்கிவ்விட்டதாவெனக் கேட்டவரிடம்

பொய்யாக ஆமென்று தலையாட்டினேன்

சந்தோசமாய் அணைத்துக் கொண்டு முத்தமிட்டார்

அவருக்கு எங்கு தெரியப்போகிறதுகடவுளை வெறுக்கிறவர்களை நான் கொல்ல வேண்டுமானால் என்னைத்தான் நான் முதலில் கொலை செய்ய வேண்டுமென.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page