top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கூசே முனியசாமி வீரப்பன்.

பல வருடங்களுக்கு முன் road to quantanamo என்றொரு டாக்கு ஃபிக்ஸன் திரைப்படத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். பாகிஸ்தனைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செல்கிறார்கள். அவர்களைக் கைது செய்யும் அமெரிக்க ராணுவத்தினர் அவர்கள் தீவிரவாத இயக்கத்தினரைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடுமென்கி சந்தேகத்தில் அமெரிக்காவின் மிகக் கொடூரமான சித்திரவதைகள் நிறைந்த குந்தனாமோ சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள். நீண்ட காலம் அந்தச் சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவிக்கும் மூவரும் விசாரணைக்குப்பின் ப்ரிட்டிஷ் குடிமக்கள் என்று தெரிந்தபின் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த மூன்றுபேரின்  ஒப்புதல் வாக்குமூலமாகத் துவங்கி சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடு கடும் அதிர்வுகளைத் தரக்கூடிய படமது.

இந்திய அளவில் மாற்று சினிமாவிற்கான முயற்சிகள் நீண்டகாலமாக இருந்துவந்தாலும்  அவை வெகுசன பார்வையாளர்களை பெரிதும் சென்றடையாமல் இருந்தது. ஆனந்த் பட்வர்த்தன் உருவாக்கிய ஆவணப்படங்கள் உலகின் எந்த முக்கிய ஆவணப்படங்களோடும் வைத்துப் பார்க்கக்கூடிய அளவிற்கு  சிறப்பானவை.   அவரது திரைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகள்  குறைவாக இருந்தது துரதிர்ஸ்டம். ராம் கே நாம் என்ற அவரது முக்கியமான ஒரு ஆவணப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  தமிழ்நாடு முழுக்க திரையிட்டுக் காட்டியதன் வழியாகவே அந்தப் படம் பரவலாக  இங்கு சென்றடைந்தது. சமீபத்திய ஓடிடி தளங்களின் வருகை வெகுசனத் திரைப்படங்களைப்போலவே மாற்று திரைப்பட முயற்சிகளுக்கும் பெரும் வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது. அந்த வகையில் zee 5  தளத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் வீரப்பன் தொடர் இந்திய அளவில் மிக முக்கியமானதொரு முயற்சி என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


டாக்கு ஃபிக்ஸன் திரைப்படங்கள் அல்லது தொடர்களில் அதன் நேரேஷன் முக்கியமானது. இந்தத் திரைப்படம் எதைக் குறித்தானது? அதனை எங்கிருந்து துவங்கி எவ்வாறு சொல்லப் போகிறேன் என்கிற தெளிவான நோக்கத்தையும் காட்சிப்படுத்துதலையும் நேரேஷன் என்று சொல்லலாம். ஒரு  வெகுசனத் திரைப்படத்தின் திரைக்கதையோடு இதனை ஒப்பிட முடியாது.  திரைக்கதையில் நேரேட்டர் தனது கருத்துக்களையும் தனது திரைப்படம் பேசவிழையும் கருத்துக்களையும் அழுத்தமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. அங்கு ஒரு கதை இயல்பாக நிகழ்ந்தாலே போதுமானது.  டாக்கு ஃபிக்ஸன் திரைப்படங்களில் ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்தளிக்கையில் எதனைச் சொல்ல வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டுமென்கிற நிறைய கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது. இந்தத் தொடர் எழுதப்பட்ட விதமும் இயக்கப்பட்ட விதமும் அற்புதமாக இருக்கிறது. பெரும்பாலான ஆவணப்படங்களையோ டாக்கு ஃபிக்ஸன்களையோ வெகுசனப் பார்வையாளர்கள் தவிர்க்க முக்கியமான காரணம் அந்தப் படங்களின் உருவாக்கங்களில் இருக்கும் குறைபாடுகள்தான். பல திரைப்படங்கள் திருமணத்திற்கு எடுக்கப்படும் காணொளிகளின் தரத்தில் இருப்பதால் மக்கள் சோர்வாகிவிடுவார்கள். மாறாக வீரப்பன் தொடரில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிகச் சிறப்பானவை.  ஒரு சிறப்பான வணிகத் திரைப்படத்தின் தரத்தில்  இந்தக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவு, கலை இயக்கம், இசைக்கோர்வை என எல்லாமே இந்தத் தொடருக்கு வலு சேர்த்திருக்கின்றன.


இந்திய அளவில் மிகப் பிரபலமான ஒருவரைக் குறித்த  இந்தத் தொடர் அவரைக் குறித்து இத்தனை காலம் பொதுவெளியிலிருந்த நிறைய கட்டுக்கதைகளுக்கான விடைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது. ஆறு எபிசோடுகளில் வெவ்வேறு இடங்களில் வீரப்பன் தான் வெவ்வேறு காலகட்டங்களில் செய்த கொலைகளை விவரிக்கிறார்.  சில இடங்களில் நடித்தும் காட்டுகிறார். அதில் ஒரு இடத்தில் கூட  இத்தனை கொலைகள் செய்தோமென்கிற குற்றவுணர்ச்சி இல்லை. எந்தப் பாவமும் அறியாது பனிரெண்டு வயது சிறுவனைக் கொன்றபோதும் கூட அந்தக் குற்றவுணர்ச்சி இல்லையென்பதை நாம் கவனிக்க வேண்டும். மாறாக தனது இளமைக் காலம் துவங்கி வேட்டையின் மீது தமக்கிருந்த ஆர்வத்தைக் குறித்துப் பேசுவதிலிருந்து அவரிடம் மிஞ்சியிருப்பது அதீதமான ஒரு சாகச உணர்வே… அந்த சாகச உணர்வுதான் மான் வேட்டையிலிருந்து யானை வேட்டைக்கும், சந்தனமர வேட்டைக்கும், மனித வேட்டைக்கும் அவரை நகர்த்தியிருக்கிறது.


இந்தத் தொடரில் சில இடங்களில் – குறிப்பாக இறுதிப் பகுதியில் சரணடைந்துவிட்டால் பூலான் தேவிக்கு பொதுமன்னிப்புக் கொடுக்கப்பட்டதைப்போல் வீரப்பனுக்கும் பொதுமன்னிப்புக் கொடுக்கப்படலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. வீரப்பனுமே தான் சில வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியேவந்து அரசியலில் போட்டியிடுவேன் என்று சொல்கிறார். வீரப்பனையும் பூலான் தேவியையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அரசியல்ரீதியாக அறமற்ற செயல். பூலான் தேவி செய்த கொலைகளில் எந்த சாகசத்தன்மையும் இல்லை. மாறாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக சொல்லொண்ணா துயரங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு ஒரே கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டு வாழவே முடியாத சித்திரவதைகளை எதிர்கொண்டவர்.  எந்த வகையிலும் தனக்கான நீதி கிடைக்கவே இல்லை என்றானபின் தனக்கான நீதியை தானே தேடிக்கொண்டவர். அவரது செய்ல்களுக்குப் பின்னாலிருந்த நியாயங்களை மக்களும் புரிந்துகொண்டதால் தான் அவரை பொதுவாழ்வில் மிகப்பெரிய உயரத்திற்குக் கொண்டு சென்றார்கள்.


‘மக்கள் எனக்கு ஓட்டுப் போடுவாங்க.’ என அழுத்தம் திருத்தமாக சொல்வதும் ‘வர்ற தேர்தல யாருக்கெல்லாம் ஓட்டுப் போடலாம், யாரெல்லாம் அரசியலுக்கு வரலாமென வீரப்பன் சொல்வதையெல்லாம் தான் சார்ந்த ஆதிக்க சாதியினருக்கு சொல்கிற செய்தியாகவே பார்க்க முடிகிறது. ( பூமில வாழ்ற தெய்வம் அய்யா ராமதாசுக்கு ஓட்டுப்போடு) என்று சொல்லும்போது அவர் குனிந்து வணங்குவதைக் கவனிக்க வேண்டும். வீரப்பனிடம் இருந்த ஆதிக்க சாதி மனோபாவத்தைக் குறிப்பிடும்படியான காட்சிகள் இந்தத் தொடரில் இல்லாதபோதும் அவரோடு இருந்தவர்கள் பல இடங்களில் பதிவு செய்திருப்பதை நாம் மறுக்கமுடியாது. வீரப்பன் மீது அரசியல் ரீதியிலான விவாதங்கள் வர முக்கியமான காரணம் காவிரி பிரச்சனைகளின் போது அவர் கர்நாடக காவல் நிலையங்களைத் தாக்கி காவலர்களைக் கொன்றதையும் கன்னட நடிகர் ராஜ்குமாரக் கடத்தி வைத்து அரசியல் பேரம் பேசியதையும் வைத்துதான்.  ராஜ்குமாரைக் கடத்தியபோது கர்நாடகத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்ந்த வன்முறைகளை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் சரியான நேரத்தில் ராஜ்குமார் பேசிய காணொளியை வெளியிடாமல் போயிருந்தால் அந்த வன்முறை பல நாட்களுக்குத் தொடர்ந்திருக்கும்.


வீரப்பன் பல இடங்களில் ஏழைகளுக்கு உதவுவேன், அநியாயத்தைத்  தட்டிக் கேப்பேன் என்று சொல்வதெல்லாம் அப்படியே எம்.ஜி.ஆர் ஃபார்முலா… மேலோட்டமாகப் பார்த்தால் எவ்வளவு தங்கமான மனிதன் என்று நினைக்கத் தோன்றும். சற்று அலசி ஆராய்ந்தோமானால் எந்த எம்.ஜி.ஆர் ஃபார்முலாவிற்குப் பின்னால் இருப்பதெல்லாம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு உத்திகள் என்பது புரியக்கூடும்.

தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த இருபத்தியிரண்டு காவலர்கள் கொல்லப்பட்டபிறகுதான் தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறை இணைந்து வீரப்பன் தேடுதல் வேட்டையைத் துவங்குகிறார்கள். அதன்பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் எல்லையோர பழங்குடி மக்கள் எதிர்கொண்ட இன்னல்களும் கொடுமைகளும் ஏராளமானவை. மிகப்பெரிய குற்றங்களைச் செய்த அந்த காவல்துறையினரில் ஒருவர் கூட இன்றளவிலும் தண்டிக்கப்படவில்லை என்கிற கசப்பான நிஜத்தை  இந்தத் தொடர் நமக்கு உணர்த்துகிறது.


அதிரடிப்படைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலத்தைப் பார்க்கும் நமக்கு நமது சமகாலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய வன்முறையை  எந்தக் கேள்விகளும் இல்லாமல் எத்தனை எளிதாகக் கடந்து போயிருக்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சி எழுகிறது. ஒரு புறம் தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைத் தேடித் தேடி கொலை செய்யும் வீரப்பன் இன்னொருபுறம் அவரைக் காட்டிக்கொடுக்கச் சொல்லி சித்திரவதை செய்யும் அதிரடிப்படைகள். நடுவில்  மாட்டிக்கொண்ட பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே நரகம். மான்புமிகு இதயதெய்வம் அம்மாவின் தூண்டுதலில் அவரது காவல்துறை வொர்க்‌ஷாப் என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களை கொடூரமாக சித்திரவதை செய்ததற்கு பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் அந்த அம்மாவின் கரங்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது.


ஒரு திரைப்படத்தையோ தொடரையோ பார்த்து முடிக்கிறபோது நமக்குள் எழும் ஏராளமான கேள்விகள்தான் அந்தத் தொடரின் அசலான வெற்றி. பேசப்பட்ட பிரச்சனைகளைக் குறித்து நமக்கிருக்கும் மேலோட்டமான பார்வைகளைக் களைந்து புதிய புரிதல்களைத் தரக்கூடும்படியாக எழுதப்பட வேண்டியது அவசியம். இந்தத் தொடர் அதனை சிறப்பாக செய்திருக்கிறது. கடந்த வருடம் murder in a courtroom என்றொரு டாக்கு ஃபிக்ஸன் தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. நாக்பூரில் ஒரு நீதிமன்றத்தில் வைத்து நாற்பது பெண்கள் சேர்ந்து ஒரு ரவுடியைக் கொலை செய்த சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்திய அளவில் மிகச் சிறப்பான டாக்கு ஃபிக்ஸன் தொடரென அதனைச் சொல்லலாம். அதன் முதல் காட்சி துவங்கி இறுதிப் பகுதி வரை மிகச் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு  நான் பார்த்து வியந்த தொடர் இந்த வீரப்பன்.  எழுத்து இயக்கம் என எல்லா வகையிலும் தமிழில் வெளியாகியிருக்கும் மிக முக்கியமான தொடர் இது. நண்பர் ஜெயச்சந்திர ஹஷ்மியோடு இணைந்து எழுதிய குழுவினருக்கும் சிறப்பாக இயக்கியிருக்கும் நண்பர் சரத்திற்கும் எனது வாழ்த்துகள்.

 

 

276 views

Comments


bottom of page