top of page

கொமோரா நாவலிலிருந்து சிறிய பகுதி

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 2 days ago
  • 9 min read

ree

Children village - 1

 

எல்லாம் இங்கிருந்து துவங்கியதுதான். வன்மம், ஏமாற்றம், பசியென எல்லாவற்றுக்கும் பால்யத்திலேயே பழக்கப்படுத்தின சூன்யப்பேழை அந்த விடுதி.  இன்னொரு வயிற்றுக்குக் கூடுதலாக உணவைத் தேடுவதன் சிரமத்திலிருந்த கதிரின் அம்மா தனக்குத் தெரிந்தவர்களின் மூலமாய் இந்த விடுதியில் கொண்டு வந்து சேர்த்தாள்.  கதிர் அப்பாவை வெறுக்கத்துவங்கியதும் இங்கிருந்துதான். வீட்டிற்கு பொறுப்பாய் அந்த மனிதர் இருந்திருந்தால் இவன் சபிக்கப்பட்ட இந்த விடுதிக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. 


சுற்றிலும் ஐந்தாறு கிலோமீட்டர்களுக்கு பரந்த பனங்காடு.  இன்னொரு புறம் சவுக்கு மரங்களும் அடர்ந்த கருவேலங்காடுகளும் நிறைந்திருக்க, காட்டின் நடுவில் பதிமூன்று வீடுகள் தான் விடுதி. வீடற்ற குழந்தைகளின் தனிமை எத்தனை துயரமானதென்பதை இங்கு வருவதற்கு முன்பாக கதிர் அறிந்திருக்கவில்லை. உலகின் அத்தனை சந்தோசங்களையும் தன்னிடமிருந்து யாரோ பறித்துக் கொண்டதுபோல் மாறிப்போனான். ஒவ்வொரு வீட்டிற்கும் பதினைந்து குழந்தைகள், ஒரு பெண் பொறுப்பாளர்.  பல காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட உயரமான கல்வீடுகள், ஓட்டுக்கூரை. நீண்ட தாழ்வாரத்தின் இடது புற அறை ஆண் குழந்தைகளுக்கும் வலதுபுற அறை பெண் குழந்தைகளுக்குமாய் ஒதுக்கப்பட்டிருக்கும். 


வெகுதூரங்களில் இருக்கும் தங்கள் வீடுகளையும் உறவுகளையும் நினைத்து ஏங்கும் குழந்தைகள் அதைத் தவிர்த்து வேறு எல்லாவற்றைக் குறித்தும் சிந்திக்கவும் பேசவும் அனுமதிகப்பட்டிருந்தார்கள்.  நீண்ட பகல்களும் அதைவிட நீண்ட இரவுகளும் சூழ்ந்த அந்த தனி உலகத்தில் எல்லோருக்கும் பாதுகாவலனாய் இயேசு கிறிஸ்து இருந்தார். பிரார்த்தனைகளின் வழியாக மட்டுமே கர்த்தரைக் கண்டடைய முடியுமென்று நம்பவைக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பாகவும் “இயேசு தேவனே, என் ஜீவனே, ஏழைப் பிள்ளைகள் எங்கள் வாழ்வை காத்திடுவாய். ஆமென்” என பிரார்த்தனை செய்யத் தவறுவதில்லை. கிடைத்தற்கரிய எல்லாமே அவர்களுக்கு கர்த்தரின் ஆசிர்வதிக்கப்பட்ட உணவுதான்.


கதிர் அங்கு வந்த நாளில்  கோடை மழை  பெய்தது.  சாலையிலிருந்த முக்கியக்  கதவிலிருந்து விடுதிக்குள் செல்லும் நீண்ட மண்சாலயின் இருபுறமும் அடர்ந்திருக்கும் வேப்ப மரங்கள் மழை நீரில் நனைந்ததில் அடர்த்தியான பச்சை வாசனையை பரப்பியிருந்தது.  ஐந்தாவது வீட்டில் இவனுக்கு இடம் ஒதுக்கியிருந்தார்கள். ”என் பாடே பெரும்பாடா இருக்கு சிஸ்டர். இவன வெச்சு எந்த வேலைக்கும் போக முடியல. இவன் பொறந்தப்போகூட இவங்கப்பன் வந்து எட்டிப் பாக்கல. ஒத்த ஆளா ராட்டக் கம்பெனி ல நூல் நூத்துக்கிட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்கேன். இங்க இருந்தான்னா இவன் வயித்துக்காச்சும் பிரச்சன இல்லாமப் போகும்.   நீங்கதான் பாத்துக்கனும்.” என ரோஸி ஆண்ட்டியின் கைகளில் இவனை ஒப்படைத்தபோது கதிர் அம்மாவை மட்டுமல்ல உலகையே வெறுத்தான்.


”தேவ்டியா மகனுகளா என்னய வீட்டுக்கு விடுங்கடா.. அடியேய் கறுத்த அவுசாரி முண்டா என்னய ஏண்டி பூட்டி வெச்சிருக்க வெளிய விட்றி. தேவுடியா…” என கதிர், அந்த சின்ன காலத்திற்குள் தான் பழகியிருந்த எல்லா கெட்ட வார்த்தைகளையும் அங்கிருந்தர்களை நோக்கி கத்திக் கொண்டிருந்தான். வளரத் துவங்கும் பூனையொன்று பசியில் கரையும் பாவனை அவன் அழுகுரலில். மண்ணில் விளையாடி அழுக்கான பிஞ்சுக்கரங்களால் வலுவான மரக்கதவுகளை பலங்கொண்டு மட்டும் ஓங்கி ஓங்கி தட்டிப்பார்த்தான். அவனுக்கான எந்தப் பதில்களையும் தராமல் அமைதியாய் சாத்தப்பட்டிருந்த கதவிற்குப் பின்னால் அதைவிடவும் அமைதியாய் ரோஸி ஆண்ட்டி இவன் தானே சாமாதானம் ஆகிவிட காத்திருந்தாள்.  களைத்து அழுத முகத்தோடு ஓய்ந்து அவன் உறங்கியபோது படுக்கையில் தனது ட்ரவுசரிலேயே சிறுநீர் கழித்திருந்தான். மாலை பள்ளி முடிந்து திரும்பிய அந்த வீட்டின் மற்ற சிறுவர்கள் முதல் நாளிலேயே அவனுக்கு மூத்திரக்குண்டி எனப் பெயர் வைத்தார்கள்.


ரோஸி ஆண்ட்டிதான் அவனைக் குளிப்பாட்டி சுத்தம் செய்தாள். அன்றைய இரவு முதல் முறையாக சாப்பாட்டிற்கு முன் பிரார்த்தனையில் உட்கார்ந்தபோது அவனைத்தவிர எல்லோரும் பிரார்த்தனை செய்தார்கள். விட்டுச் சென்ற அம்மாவின் ஏக்கமும், வீட்டின் நினைவுகளுமாய் ஏங்கிப்போய் சாப்பாட்டுத் தட்டைஇப் பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு ரோஸி ஆண்ட்டி ஊட்டிவிட்டாள். மலிவுவிலை அரிசிச் சோறு. சூடு குறைந்துபோனால் இரண்டு வாய் கூட சாப்பிட முடியாத அந்த சாப்பாட்டை குழந்தைகள் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பகல் முழுக்க சாப்பிடாததின் பசியில் அவன் பெரிய பெரிய உருண்டைகளாக அவள் ஊட்டிவிடுவதை விழுங்கிக் கொண்டான். அவனுக்கென உறங்க கதவை ஒட்டி சின்னதாய் இடம் ஒதுக்கியிருந்தார்கள். வெறுமனே விரிக்கப்பட்ட பாயில் உட்கார்ந்திருந்தான்.


அம்மா வாங்கி தந்துவிட்டுப்போயிருந்த புதிய பாயின் நறுமணம் அறையெங்கும் நிரம்பியிருந்தது வீட்டைச் சுற்றிலுமிருந்த வேப்பமரங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததால் அச்சுறுத்துவதாய் இருந்தது காற்றின் சத்தம். உறங்காமல் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை அழைத்து ரோஸி ஆண்ட்டி  தன்னுடன் உறங்க வைத்தாள். உறக்கமே இல்லாமல் ஜன்னல் வழியாய் இருள் சூழ்ந்திருந்த அந்த நீண்ட காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த  இரவை இரவென்று சொல்ல முடியாது, ஏனென்றால் அங்கே  நட்சத்திரங்கள் இல்லை. நிலவு இல்லை. வானம் இல்லை. அவனே இரவாகியிருந்தான். இரவில் நடுமாடும் பூச்சிகளாகவும், மிருகங்களாகவும், பறவைகளாகவும் ஆகியிருந்தான். அந்த கொடுமை மிக்க நினைவுகளில் இருந்து அவனை மீட்கும் விதமாய் ரோஸி ஆண்ட்டி தேவதைக் கதைகளை சொல்லத் துவங்கினாள். அப்போது அவனுக்கோ அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அந்த சிறுவன் அவன் வாழ்க்கை முழுக்க கேட்கும் எல்லா தேவதைக் கதைகளிலும் இனி அவளை மட்டுமே தேவதையாய் பார்க்கப் போகிறான் என்று. கர்த்தர் நிஜமா பொய்யா என்பதெல்லாம் தெரியாது, ஆனால் ரோஸி ஆண்ட்டி நிஜம். அன்பின் முழுமையான, ஆத்மார்த்தமான வடிவம் அவள். கர்த்தரை விடவும் உயிர்ப்பான நிஜம்.


கதிர் விடுதிக்கு அனுப்பப்பட காரணமான சம்பவம் – 1


            மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தினடியில் மானூத்து சங்கிலி கருப்பு கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமம் ராசக்காபட்டி. கதிர் பிறந்ததில் இருந்து  வளரும் வரையிலுமான சில காலம் தாய்வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென அம்மா தனது சொந்த ஊருக்கே கூட்டிப்போனாள். அய்யா நாடககாரர் என்பதால் பெரும்பாலும் வீடு வருவதில்லை. மதுரையும் சுண்ணாம்புக்காரத் தெருவும்தான் அவருக்கு எல்லாம். வீட்டில் அண்ணனும் அம்மாவும் இருந்தார்கள். சாத்தூரில் ஒரு அக்காவும் அழகர்கோவிலில் இன்னொரு அக்காவும் வாக்கப்பட்டு போய்விட்டதால் வீடு அம்மாவுக்கும் இவனுக்கும் கொஞ்சம் தாராளமாகவே இடம் தந்திருந்தது. அம்மாவும் வயல் வேலைக்குப் போய்விடுவதால் அவனை பெரும்பாலும் பார்த்துக் கொண்டது பாட்டிதான். சாத்தூரிலிருக்கும் மகளின் வீட்டிற்கும் குமுளியிலிருந்த தனது தம்பி வீட்டிற்குமாய் மாறி மாறி சுற்றிக்கொண்டிருந்த பாட்டி இவனையும் தன்னோடு கூட்டிக்கொண்டு சுற்றியது. தாத்தா நாடகத்துக்காக ஒரு பக்கம் ஊர் சுற்ற, பாட்டி தம்பி வீட்டுக்கும் மகள் வீட்டுக்குமாய் சுற்றியதால் ஊரில் இவர்களை கூத்தாடிக் குடும்பமென்றார்கள்.


            நான்கு வயதுவரையிலும் அவனை அந்த ஊர் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ள, எங்கும் நெல் வயல்களும் கரும்பும் நிறைந்த அந்த பூமியே தனது நிலம், அங்கிருப்பவர்களே தனது உறவுகளென கதிரும் கொண்டாட்டமாய் வளர்ந்தான். அத்திபட்டி திருவிழா நெருங்கிக்கொண்டிருந்த நேரம், ஊரில் பெரிய வீடுகளுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். பேருந்து நிற்கும் விளக்கிலிருந்து ஊருக்குள் இரண்டு மைல்கள் நடந்தால் முதலில் வருவது காவக்காரக் குடும்பத்தின் வீடு. சாலையின் இருமறுங்கிலும் முதிர்ந்த புளிய மரங்கள். எல்லாக் காலத்திலும் பழங்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் அந்த மரங்களுக்கு ஒருபோதும் வயதாவதே இல்லை. அந்த மரங்களிலும் மரங்களில் சுற்றும் அணில்களிலும் காலை நேரத்தில் ஊரையே மயக்கத்திலிருந்து எழுப்பும் மயில்களிலும் தான்  அவனுக்கு பால்யத்தின் விடுபடாத எல்லா ரகசியங்களும் இருந்தன. காவக்கார மாமாவின் வீட்டிற்குப் பின்னால் பெரிய பெரிய குழிகளில் வெள்ளையடிப்பதற்காக சுண்ணாம்பை கொட்டி ஊர வைத்திருந்தார்கள். கொதிக்கும் சுண்ணாம்பு உடலில் பட்டால் நிகழும் விபரீதங்கள் குறித்து எதையும் அறிந்திராத கதிரும் அவன் வயதை ஒத்த உறவுக்கார சிறுவர் சிறுமியிரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டிகளில் இருந்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவனிலும் மூன்று மாதங்கள் மூத்தவளான அழகுத்தாய் தான் அந்தப் போட்டியை முதலில் அறிவித்தாள்.


“இந்த  சுண்ணாம்புக் குழிக்குள்ள யார் குதிக்கிறாங்களோ அவன்களத்தான்  நான் பெரியவளானதும் கட்டிக்குவேன்.” அவள் வாக்கு அந்த நேரத்தில் அங்கிருந்த பருவமடையாத அந்த சிறுவர்களுக்கு வேதவாக்கு. மூக்கம்மாள் அத்தையின் மூன்று குமாரத்திகளான அழகுத்தாய், சண்முகத்தாய்,மீனுத்தாய் என  முவரிலும் அழகுத்தாயே மூத்தவள்.  அழகானவளும் கூட. மற்ற சிறுவர்களுக்கு ஆசை இருந்தாலும் சுண்ணாம்பின் பின்விளைவுகள் குறித்த அச்சத்தில் பின்வாங்க, “ஏய் அழகு நான் குதிக்கிறேன். ஆனா நீ மட்டுமல்ல உன் தங்கச்சிங்களும் என்னயத்தான் கட்டிக்கனும். சரியா?” என பேரார்வத்தோடு இவன் கேட்டான். அழகுத்தாயும் சண்முகத்தாயும் சரியென்று சத்தியம் செய்தார்கள். மீனுத்தாயிக்கு அப்போதுதான் நடை பழகும் பருவமென்பதால் அவள் அன்று அங்கிருந்திருக்கவில்லை. சத்தியம் செய்து கொடுத்த மறுகனமே யோசிக்காமல் குழிக்குள் குதித்தவன் உயிர் போகும் வலியில் அலற, விளையாடிக் கொண்டிருந்த எல்லா சிறுவர்களும்  அங்கிருந்து ஓடிப்போனார்கள்.


            வெள்ளையடிக்கும் வேலைக்காக வந்திருந்த மானூத்து ஆட்கள் அவனைத் தூக்கிய போது கால்களில் இருந்து தோலும் சதையும் சுண்ணாம்போடு சேர்ந்து உருகி வழிந்தது. கிடைத்த வண்டியில் வைத்து  அவனைத் தூக்கிக் கொண்டுபோய் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில்  சேர்த்த நேரத்திற்கெல்லாம்  மயங்கிப்போய்விட்டிருந்தான்.  மருத்துவமனையின் வீச்சமும், கசப்புமிக்க மருந்துகளும் சிகிச்சையும் ஒரு நோயாளியை மேலும் நோயாளியாய் ஆக்குவதாகவே பெரும்பாலும் இருக்கிறது.  பத்து நாட்களுக்குப் பிறகும் அவன் காயங்கள் குணமாவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாமல் அங்கிருந்து கூட்டிப் போகச் சொல்லிவிட்டார்கள். காயத்திலிருந்து பரவும் நோய்க்கிருமிகள் சக குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளுமென்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது இனி ஒருநாளும் இந்தச் சிறுவன் எழுந்து நடமாட வாய்ப்பில்லையென  எல்லோரும் நம்பிக்கை இழந்திருந்தனர். அரசு மருத்துவமனை கைவிட்டாலும் அத்திபட்டி சண்முகம் வைத்தியர் கைவிடவில்லை.  அழுகி எப்பொழுதும் நாற்றமடிக்கும் அவன் காயங்களில் புழு வைக்கத் துவங்கிவிட்டது. அவர் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் அவனுக்கு சிகிச்சையளித்தார்.  தினமும் ஒரு பாண்ட்ஸ் பவுடர் டப்பா காலியாகும் படி காயத்தில் பவுடர் போட்டுவ்விட்டாலும்கூட  காயத்திலிருது வரும் வீச்சத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.  அவனைத் தன் வீட்டிலேயே தங்க வைத்து மருத்துவம் வைத்தியம் பார்க்கத் துவங்கிய பிறகு அவன் காயங்களில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. அத்திபட்டியில் அவரின் சித்த வைத்தியக் கூடமும் வீடும் சரியாக சாவடிக்கு எதிரிலிருந்ததால் அவரிடம் சிகிச்சைக்கு வருகிற பெரும்பாலானவர்கள் ஓய்வெடுக்கும் இடமாக அந்த சாவடிதான் மாறிப்போயிருந்தது.


தனக்கு ஒதுக்கபப்ட்ட இடத்திலிருந்து அங்கு வருகிறவர்களிடம் கதை பேசுவதும் சாவடியில் கிடப்பவர்களை வேடிக்கை பார்ப்பதும் தான் கதிரின் பொழுதுபோக்கு. அவன் காயங்கள் கொஞ்சம் குணமாகிய பிறகு வீட்டிற்குக் கூட்டிச் செல்ல அம்மா வந்தாள். “இவென் இவங்க அப்பனாட்டாம் தான் மயினி வரப்போறான் எனக்குப் பயமா இருக்கு” என அம்மா உடன் வந்த மூக்கம்மாள் அத்தையிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். கதிர் அம்மாவையும் அத்தையையும் விட்டுவிட்டு அவர்களோடு வந்திருந்த அழகுத்தாயையே பார்த்தான். நீண்ட நேரம் அழுதிருந்ததால் அவளின் முகம் வீங்கிப் போயிருந்தது. இவனுக்கு பிடிக்குமேயென வீட்டிலிருந்து பனியாரம் செய்து எடுத்து வந்திருந்தாள். வீட்டிற்குத் திரும்புகையில் “இவன இங்கியே வெச்சு இனியும் பாத்துக்க முடியுமான்னு தெரியல மயினி. நான் திருமங்கலம் போறேன். எங்கூட்டுக்காரருக்கு சொந்தக்காரங்க எல்லாம் அங்கதான் இருக்காங்க. எனக்காக இல்லாட்டியும் என் பிள்ளைக்காகவாச்சும் வரட்டுமே” eன அம்மா மூக்கம்மாள் அத்தையிடம் அழுதபோது கதிருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவன் கைவிரல்களை இறுகப்பற்றியிருந்த அழகுத்தாய் “யார் கிட்டயும் சொல்லாத. எத்தன வருஷம்  ஆனாலும் யார் என்ன சொன்னாலும் நான் சத்தியமா உன்னயத்தான் கட்டிக்குவேன். ” என கண் கலங்கினாள்.

 

சம்பவம் - 2


            அம்மாவின் நம்பிக்கையை கடவுள் உட்பட எல்லோரும் பொய்யாக்கி இருந்தனர். கடவுளின் கருணைக்கும் வக்கற்றவர்களாய்ப் போன அவர்களுக்கு சொந்தக்காரர்கள் பெரிதாக  ஆதரவு தரவில்லை. உறவு முறையிலிருந்த ஒருவர் தனது மரக்கடையை ஒட்டி சின்னதாக குடிசை போட்டுக்கொள்ள இடம் கொடுத்திருந்தார். புளிய மரங்களும் மயில்களும் இல்லாத இந்தப் புதிய இடம் அவனுக்கு எரிச்சலூட்டியது. எப்போதும் ஊருக்குப் போவதைக் குறித்து கேட்டே அம்மாவிடம் அழுது அடம் பிடித்தான். எல்லோராலும் கைவிடப்பட்ட ஆத்திரத்தை யாரிடம் காட்டுவதெனத் தெரியாமல்  கோவம் தீரும் மட்டும் இவனை அடித்துத் தீர்ப்பாள். அம்மாவின் உருவம் அவனுக்கு இரண்டு விதங்களில் மனப்பதிவாகியிருந்தது. ஒன்று எப்போதும் அழுது கொண்டிருப்பவள், அல்லது எப்போதும் கையில் கிடைக்கும் எதை வைத்தாவது தன்னை அடித்துக் கொண்டிருப்பவள். அவள் தன்னை அந்த வயதிற்குள் வதைத்ததற்கு பதிலாக அவளை வதைக்க வேண்டுமானால் கதிருக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது. அம்மா வேலைக்குப் போகையில் அவனை வீட்டிற்கு முன்னால் இருந்த ஒரு பட்டியக்கல்லில் கயிற்றோடு சேர்த்து கட்டிவிட்டுப் போய்விடுவாள்.


விறகுக்கடை வைத்திருந்த சிவனாண்டி மாமாவின் தங்கை சுமதி அத்தை அவனுக்கு பசிக்கிற நேரம் சோறூட்டி விடுவாள். மற்ற நேரங்களில் எல்லாம் பாவம் போல் போகிற வருகிறவர்களைப் பார்க்கும் அவனை சில நாட்களிலேயே எல்லோருக்கும் பிடித்துப் போனது. உலகின் சந்தோசங்களை காண கண்கள் முழுக்க கனவுகளோடு தவிக்கும் சிறுவனை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்? சிவனாண்டி மாமாவின் மகன்களான செபாஸ்டியனும், சந்திரனும், மகள் சகாயமும் புதிய நண்பர்களானார்கள். ஆனால் அவர்கள் யாரும் அழகுத்தாயைப் போலில்லை. அவளிடம் பார்க்க முடிந்த சிரிப்பையோ தொடும் போது ஏற்பட்ட பரவசத்தையோ இவர்கள் தந்திருக்கவில்லை. ஆனாலும் அவனைக் கட்டியிருந்த கயிற்றிலிருந்து அவர்கள் விடுவித்தார்கள். அவர்களை நம்பி அம்மா இயல்பாக விட்டுச்செல்லத் துவங்கினாள்.


            மரக்கடையின் இரும்பு படிகற்களை தராசின் ஒரு பக்கமும் இவனை இன்னொரு பக்கமும் வைத்து எடை பார்த்து விளையாடுவது அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டாய் இருந்தது. போதாக்குறைக்கு அங்கிருக்கும் டேப் ரிக்கார்டில் ஓயாமல் மோகன் பாடிக்கொண்டிருந்தார். அந்த கடைக்கு மட்டுமில்லாமல் அந்த வீதிக்கும், ஊருக்கும் சேர்த்து பாடும் தவிப்போடும் அக்கறையோடும் ஒருபோதும் ஓயாமல்  பாடியபடியே இருப்பார். சகாயமும் செபஸ்டியனும் டேப் ரிக்கார்டை பின் தொடர்ந்து பாடுவதில் வல்லவர்கள். ”நீ மட்டும் எப்பிடி மாமா இவ்ளோ சூப்பரா பாடற?” ஆர்வத்தில் செபஸ்டியனிடம் கதிர் ஒருமுறை கேட்டான். சகாயம்,  “கதிரு எங்கப்பா சின்ன வயசுல இருக்கையில எங்களுக்கு கழுதப்பால் குடிக்கக் குடுத்தாரு. அதனால தான் நாங்க நல்லா பாடறோம்.” என்று சொல்ல சந்திரனிடம் அடம் பிடித்து தனக்கும் கழுதைப்பால் வேண்டுமென்றான். கழுதைப் பால் கிடைக்காமல் போனால் அன்றே உலகம் அழிந்துவிடக்கூடும் என்னும் ஏக்கத்தோடு பகல் முழுக்க அழுதவனுக்கு எல்லோருமாக சமாதானம் சொன்னார்கள்.


            அண்ணாநகரில் தான் ஊருக்குப் பொதுவான வண்ணாந்துறை இருந்தது. அன்று மாலை சந்திரனும், சகாயமும் கதிரோடு கழுதைப்பால் வேட்டைக்காக கிளம்பிச் சென்றனர். வீட்டிலிருந்து பதினைந்து நிமிட தூரம். சரோஜா தோட்டத்திற்குள்ளாக புகுந்து அண்ணாநகரை அடைந்து போது சலவை செய்யப்பட்ட துணிகள் நீண்ட கொடிகளில்  காய்ந்து கொண்டிருந்தன. சில கழுதைகள் குப்பை மேய்ந்து கொண்டிருக்க, இன்னும் சில கழுதைகள் சலவை செய்யும் இடத்திற்கு பக்கத்திலிருந்தன. பால் கறந்து எடுக்க மூன்று பேரும் வீட்டிலிருந்து ஆளுக்கொரு சொம்பு எடுத்து வந்திருந்தார்கள். “டேய் எல்லாரும் ஒரே பக்கமா போக வேணாம். ஆளொக்கொரு பக்கமா போகலாம். யார் முதல்ல பால் கறக்கறாங்களோ ஓடி வந்து தகவல்  சொல்லனும்.” என சந்திரன் மாமா பொதுவான ஒப்பந்தம் போட்டுக்கொள்ள மற்ற இருவரும் சரியெனத் தலையாட்டிவிட்டு கழுதைகளைத் தேடி சென்றார்கள்.


கதிர் சற்றுத் தூரத்திலிருந்த இரண்டு கழுதைகளை நெருங்கியபோது இரண்டில் ஒன்று அவனைப் பார்த்ததும் ஓடிப்போனது. பழுப்பு நிறமான குட்டிக்கழுதை. அதன் கண்களில் இவனைக் கண்ட அச்சம். பெரிய கழுதையின் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அது இவனைத் திரும்பிப் பார்த்த பின்னாலும் பொருட்படுத்தாமல் மீண்டும் குப்பை மேய்ந்தது. கையிலிருந்த சொம்போடு கழுதைக்கு எங்கிருந்து பால் வரக்கூடுமென தீவிரமாக ஆராய்ந்தான். அதன் பின்னங்கால்களுக்கு நடுவில் மடி நீண்டிருக்க உற்சாகமாகி அருகில் சென்று உட்கார்ந்தான். சொம்பை கீழே வைத்துவிட்டு மடியில் கைவைத்து இழுத்தவனின் மாரில் கழுதை ஓங்கி உதைத்தது. அவனால் மூச்சுவிடவும் முடியவில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியவில்லை. அப்படியே கிடந்தவனை இன்னொருமுறை உதைத்தது. அதன் பிறகுதான் வலியில் கத்தினான். “மாமா … மாமா கழுத உதைக்குது மாமா..” என அவன் கத்திய சத்தம் கேட்டு சகாயம் தான் முதலில் ஓடிவந்தாள். அவனை பிடித்து கழுதையிடமிருந்து நகர்த்திப் போட்ட போதே நடந்ததைப் புரிந்துகொண்டவள் சத்தமாக சிரித்தாள். சந்திரனும் அதற்குள் ஓடிவர “எண்ணே இவன் பொம்பளக் கழுதைய விட்டுட்டு ஆம்பளக் கழுத குஞ்ச புடிச்சு பால் கறக்கப் போயிருக்காண்ணே.” என சிரிக்க, சந்திரனும் சிரித்துவிட்டான். “கிறுக்குக் கூதியானே… வலிக்கிதாடா.” என அவனைத் தோளில் தூக்கி வைக்க வலிக்கிதாவா? உயிர் போகுதுடா அவுசாரி மவனே…” என கதறியழுதான்.  கழுதை உதைத்த இடம் சிவந்து நான்கு  இஞ்ச் உயரத்திற்கு வீங்கிப் போனது.


            ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபின் எல்லோரும் அவனை ஒரு வேடிக்கைப் பொருளாய்  பார்த்துவிட்டுச் சென்றார்கள். இவன் இன்னும் என்னென்ன கிறுக்கத்தனங்களை எல்லாம் செய்யப்போகிறானோ என்னும் கலக்கம் அம்மாவிற்கு. வாயை மூடி சத்தமில்லாமல் அழுதாள். இருபது நாட்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையின் சுவர்களும் மூத்திர நாற்றமடித்த படுக்கையும் அவனின் சுவாசம் முழுக்க இடைவெளியின்றி சூழ்ந்தது. உடல்  குணமாக வேண்டி சிவனாண்டி மாமாதான் தினமும் குட்டிப் புறாக்களாக பிடித்து அதிலிருந்து சூப் எடுத்துக் கொடுத்தார். புறாக்களின் தியாகத்தால் வீக்கம் குறைந்து அவன் குணமானபோதும் கூட அழுவதை நிறுத்தவே இல்லை. “எலேய் அதான் வீக்கம்லாம் குறஞ்சிருச்சுல்ல இன்னும் எதுக்கு அழுதுட்டே இருக்க.” என அம்மா அப்பொழுதும் அவன் தலையில் அடித்தாள்.  “எனக்கு கழுதப்பால் வேணும்” என சத்தமாக கத்தினான். சுற்றி இருந்த மற்ற நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் சத்தமாக சிரிக்க, அம்மா அவனை ஓங்கி அறைந்து “பொச்சப் பொத்திக்கிடு படு. கழுதப்பாலு வேணுமாம்.” எனத் திட்டினாள். அடுத்த நாள் சிவனாண்டி மாமா சிரமப்பட்டு கழுதைப்பால் வாங்கிக் கொடுத்த பிறகுதான் அவனுக்கு மனமும் உடலும் சரியானது.

 

சம்பவம் – 3


விளையாட்டுத்தனத்தில் ருசி கண்ட குழந்தைகள் அதிலிருந்து அத்தனை எளிதில் தன்னைத் துண்டித்துக் கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாமே சுவாரஸ்யமானவை என்ற எண்ணம் வந்தபிறகு எப்போதும் புதிதாக ஏதாவதொன்றைச் செய்து பார்க்கும் ஆர்வம் மட்டுமே அவர்களிடமிருக்கும். கதிர் அந்த வயதிலிருந்த மற்ற குழந்தைகளை விடவும் முட்டாளாய் இருந்தான், அப்படி இருந்ததாலேயே புதிய சாகசங்களை  செய்ய தயங்காதவனாக இருந்தான். அவனுக்கு சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே சாகசமாய் இருந்ததால் தன்னை எப்போதும் சாகசக்காரனாகவே உணர்ந்தான். வெங்கடாத்திரி தெருவில் புஷ்பா அத்தை வீட்டில் குதிரை வண்டி வைத்திருந்தார்கள். ஊரிலிருந்த ஐந்தாறு குதிரை வண்டிகளில் இந்த வண்டிதான் கொஞ்சம் ஒய்யாரமானது.  இரண்டு கண்களும் மூடியிருக்கிற குதிரை எப்படி சரியாக சாலையை அடையாளம் கண்டுகொண்டு செல்கிறதென எப்பொழுதும் ஆச்சர்யமாய் இருக்கும். புஷ்பா அத்தையின் மகன் தான் தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்களாக அனுமன் ஜிம்மில் நடக்கும் திருமங்கலத்திற்கான ஆணழகன் போட்டியில் பட்டம் வென்றவர். உருண்டு திரண்ட  அவர் தோற்றத்திற்கு குதிரை வண்டி ஓட்டுவதைப் பார்க்க சிலிர்ப்பாக இருக்கும். அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு மெதுவாக ஓடும் குதிரையில் வால் சிலிர்த்து அதிர்வதையே பார்த்துக் கொண்டிருப்பான். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அடிக்கடி பூண்டு சாப்பிடும் அவரின் உடலில் இருந்து எப்போதும் பூண்டின் மணம் கசிந்துகொண்டே இருக்கும். குதிரை வாலாட்டாமல் சாதாரணமாக இருக்கிற நேரமெல்லாம் பின்னாலிருந்து காலால் குதிரையின் குண்டியில் உதைப்பான். அது பர்ர்ர்ரென கத்திவிட்டு மீண்டும் வாலை சிலிர்த்து ஆட்டும்.


”உனக்கு மட்டும் எப்பிடி மாமா கை கால்லாம் நல்லா அம்மிக்கல்லாட்டம் உருண்டு பெருசா இருக்கு.?” சவ்வாரி இல்லாத நேரங்களில் அவரின் கையில் தொங்கிக் கொண்டு கேப்பான். எல்லாவற்றைக் குறித்தும் கேள்வி கேட்கும் இவனை அவருக்குப் பிடிக்குமென்பதால் தினமும் ஜிம்மிற்கு செல்கிற நேரங்களில் அவனையும் கூட்டிச் செல்வார். அவர் உடற்பயிற்சி செய்யும் எல்லாவற்றையும் எடுத்து பயன்படுத்த முயற்சிப்பான், எதையுமே அவனால் தூக்க முடியாது. “நல்லா கறி மீனுன்னு திண்ணு உடம்புல சத்து வெச்சாதாண்டா இதெல்லாம் தூக்கி விளையாட முடியும்” அந்த மாமா சிரிப்பார்.


ஒரு  நாள் மாலை ஜிம்மில் அவர் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் குதிரை வண்டிக்கு காவலாக இருந்த கதிர் ‘இந்தக் குதிர கண்ணு இல்லாம எப்பிடி ரோட்டப் பாக்குது?’ என சந்தேகத்தோடு அதன் முன்னால் சென்று மூஞ்சியை நெருங்கிப் பார்த்தான். அதன் கண்களை மறைத்திருந்த தோல் கடிவாளத்தை பிரித்துப் பார்க்கலாமென்றால் எட்டவில்லை. கொஞ்சம் கால்களை எக்கி அதைப் பிரித்துப் பார்க்கப் போனவனை பின்னாலிருந்து ஒரு கை பிடித்து இழுத்து கீழே தள்ளியது. பணியாரக்கார பாட்டி. “ஏலேய் கூறுகெட்டவனே கழுதகிட்ட உத வாங்குனது பத்தாதா?” என அவள் கோவமாக கேட்க, கீழே விழுந்தவன் எழுந்து “இதுக்கு கண்ணே இல்ல எப்பிடி ரோட்டப் பாக்குதுன்னு தெரிஞ்சுக்கனும் எனக்கு, அதான் பாக்கப் போனேன்.” என அழுதான். “குதிர பொச்ச தொறந்து பாரு, கிறுக்கு பயலே. பேசாம வாடா.” என இழுத்துக் கொண்டுபோனாள்.


சரோஜா தோட்டத்திலிருந்த பத்து வீட்டுக்காரர்களுக்குமாக சேர்த்து உணவுத் தேவைகளுக்காக ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெரிய பெரிய அண்டாக்களில் நெல் அவிப்பது வழக்கம். எல்லோருமே பங்காளி முறையில் உள்ளவர்கள். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இருக்கும் அந்த வேலையை அம்மாவும் வேறு சிலரும் தான் கவனித்துக் கொண்டார்கள். ஜகன் மோகினி படம் வந்திருந்த நேரமது. கதிருக்கு வெள்ளை உடையனிந்த பேய்கள் எரியும் அடுப்பில் விறகுகளுக்குப் பதிலாக தமது கால்களை வைத்து எரித்துக் கொண்டிருந்தது பெரிய சாகசமாகப்பட என்றாவது ஒருநாள் செய்து பார்த்துவிட நினைத்தான். அந்தமுறை நெல் அவித்துக் கொண்டிருந்த நாளில் மாலை நேரம் அடுப்பில் எரிந்து முடிந்த விறகுகள் கங்குகளாக தணலாகி இருந்தது. வேலை செய்தி கொண்டிருந்த எல்லோரும் தேநீர் குடிப்பதற்காக  சென்றிருந்தனர். தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த கதிர் யாரும் கவனிக்காமல் கல் அடுப்பின் பக்கமாய் ஓடிவந்தான். தனது சாகசத்தை செய்து பார்க்க சரியான நேரமென்பதை உறுதிசெய்து கொண்டு அண்டாவிற்கு எதிரில் உட்கார்ந்து கால்களை அடுப்பிற்குள் நுழைத்தான். சில நொடிகள் தான் “அய்யோ அம்மா எரியுதே” என அவன் அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுக்க எதிரொலிக்க தேநீர் குடிக்க சென்றிருந்த எல்லோரும் ஓடிவந்தனர். ஏற்கனவே வெந்து தோல்கள் அழுகிப்போனதின் தடயங்களிருந்த கால்கள் மீண்டும் வெந்து போயின. அம்மாவிற்கு வந்த ஆத்திரத்தில் அவன் அழுகையையும் பொருட்படுத்தாமல் அடித்துத் துவைத்தாள். “இவ ஒரு வெளங்காத சிறுக்கி, பிள்ள கால் வெந்து போயி கெடக்கான், அடிச்சிட்டு இருக்கா பாரு.” என உடனிருந்தவர்கள் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.


அரசு மருத்துமனையின் வினோதமான நோயாளிகளின் பட்டியலில் அந்த  சின்னவயதிலேயே அவனும் சேர்ந்துவிடக் கூடாதென பயந்த அம்மா என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போயிருக்கையில் தான் தெருவிலிருந்த ஒரு டீச்சர் சொல்லி இந்த ஆதரவற்றோர்களுக்கான விடுதி குறித்து அறிந்துகொண்டாள். கால் சரியான சில நாட்களில் யோசிக்காமல் அவனை அங்கு சேர்த்துவிட்டாள். சில பிரிவுகள் அவனை பக்குவப்படுத்துமென பக்குவப்பட தேவையே இல்லாத வயதில் அவள் சேர்த்துவிட்டபோது இவனுக்கு ஆதரவாக பேச ஒருவருமில்லை. கண்டித்து வளார்க்கப்படும் குழந்தைகள் தான் இந்த உலகத்திற்கு லாயக்கானவர்களாய் இருப்பவர்களென அவனைச் சுற்றியிருந்த எல்லோரும் நினைக்க முக்கியமான காரணம், அவர்களில் பெரும்பாலனவர்களின் மண்டையை கதிர் கல்லால் அடித்து உடைத்திருக்கிறான். “இவங்கப்பனாட்டம் தாண்டி வரப்போறான். இவன கண்டிச்சு வளக்கனும்.” என அந்தத் தெருவில் சாபமிடாதவர்கள் இல்லை.  விளையாட்டுத்தனம், கண்கள் மறைக்கப்பட்ட குதிரை, அனுமன் ஜிம், தினமும் நான்கு பனியாரங்கள் திருடினாலும் அதைப் பொருட்படுத்தாத பாட்டி, நாளின் பாதி நேரம் விளையாடித் திரிந்த சிவனாண்டி மாமாவின் விறகுக்கடை எல்லாமும் ஒருநாள் சடாரென அவனிடமிருந்து விலகியபோது இந்த உலகத்தால் கைவிடப்பட்டவன் போல ஆகிப்போனான்.

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page