top of page

நம் நண்பர்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம்?

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 13 hours ago
  • 2 min read

ree

சில வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம்.


சென்னையில் ஒரு தம்பியின் திருமணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக விமானத்தில் கிளம்பி மதுரையில் நடக்கும் எனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும். குறைவான உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவசரமாக விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமானத்திற்கான காத்திருப்பில் தற்செயலாக எனது ஊரைச் சேர்ந்த பால்யகால நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. என்னைவிட சில வருடங்கள் மூத்தவர் என்றாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியதால் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பழக்கம்.


நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கிறோம். பதினைந்து வருடங்கள் இருக்கலாம். ஆனால் உடடினடியாக அடையாளம் கண்டுகொண்டோம். அவர் கேட்ட முதல் கேள்வி...

‘எலேய் மெட்ராஸ்ல இருந்து மதுரைக்கு ஃப்ளைட் போற அளவுக்கு வசதி வந்துடுச்சா? சந்தோசம்டா...’ என சிரித்தார்....


அவர்கள் ஓரளவு வசதியான குடும்பம். நல்ல கல்லூரியில் படித்து நல்ல வேலையில் இருக்கிறார். நான் அப்போது சோற்றுக்கு சிங்கியடித்த குடும்பம். பார்க்காத வேலையில்லை. பணிரெண்டு மணி நேர வேலைக்கு நாற்பது ரூபாய் கூலி. ரைஸ் மில்லில் இரவு நேரங்களில் நெல்லை வேக வைத்து அதனை உலர வைப்பது. முதுகு ஒடியும் வேலை. ப்ளாஸ்டிக் கம்பெனி, ஒயின்ஷாப் பாரில் சர்வர் என என்ன வேலையெல்லாம் கிடைத்ததோ அந்த வேலையெல்லாம் செய்திருக்கிறேன். அவரது மனதில் என்னைப் பற்றி இருக்கும் சித்திரம் இன்னும் அதுதான். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் எப்படி கிழிந்த சட்டையோடு கிடந்தனோ அப்படியே இன்னும் இருப்பேன் என்கிற எண்ணம். எங்கிருந்து இந்த எண்ணம் ஒருவருக்கு வருகிறது?


நீண்ட காலத்திற்குப்பின் சந்திக்கும் பழைய நண்பரை உங்களைப் போலவே ஏன் வாழ்வில் அவருக்கும் சில நோக்கங்கள் லட்சியங்கள் இருக்கும் என்பது புரிவதில்லை. அல்லது உங்களைப் போல மற்றவர்களும் தங்களது தேவைகளுக்கு சம்பாதித்துக் கொள்ள முடியுமென்கிற எண்ணம் ஏற்படுவதில்லை.


இன்னொரு சம்பவம்....

திரைத்துறையில் பிரபலமாக இருந்த ஒருவர். ஒரு கதை விவாதத்திற்காக அழைத்திருந்தார். நான் அவரது அலுவலகத்திற்கு அருகில் சென்றதும் அலைபேசியில் அழைத்தேன். அவரது உதவியாளர் ஒருவர் வாசலில் வந்து அழைத்துப் போனார். தனது அறையில் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவர் என்னைப் பார்த்து ...வாங்க...’ என சிரித்தார். நானும் வணக்கம் வைத்தேன்.


பரவாயில்லயேங்க... ரைட்டர்ஸ் லாம் இப்ப ப்ராண்டட் ட்ரெஸ் தான் போட்றீங்க.... ஷூ போட்றீங்க... நல்ல ப்ராண்டட் வாட்ச் கட்டறீங்க. புத்தகமே விக்காட்டியும் நல்ல செல்வாக்குதான் போல... என கேலியாகச் சொன்னார்.


‘ஆமா தல... ராத்திரி பத்து மணிக்கு மேல கத்திய காட்றி வழி பன்றோம்... அந்தக் காசுலதான் இதெல்லாம்... என்னத்தையாச்சும் கருமத்த சினிமான்னு எடுத்து சம்பாதிக்கத் தெரியல... அதான் வழிப்பறி...’


எனச் சொல்ல அவர் உடனே சுதாரித்துக் கொண்டு ‘அட சும்மா சொன்னேன் பாஸ் வாங்க உக்காருங்க....’ என்றார்.

நானும் வேண்டா வெறுப்பாக அமர்ந்தேன்...


அதன்பிறகு அன்று நடந்த உரையாடல் முழுக்க இதுபோன்ற சீண்டல்கள் தான்.

ஒரு எழுத்தாளரின் தோற்றம் குறித்து இவர்களுக்குள்ளிருக்கும் பிம்பங்கள் ஏன் இத்தனை கேவலமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் குடிகாரர்களாகவும், நாகரீகமற்றவர்களாகவும் இருப்பார்களென்கிற கற்பனை எத்தனை அருவருப்பானது...?

உச்சமாக அவரது உதவியாளர் ஒருவர் எனது நூலை வாசித்திருக்க வேண்டும். நான் கிளம்பும் போது என்னிடம் வந்து பேசினார்.


உங்க புத்தகம் படிச்சிருக்கேன் ஸார். எனக்கு உப்புநாய்கள் கானகன் ரெண்டும் பிடிக்கும்.... என சொல்லிக் கொண்டிருக்கையில் சிரித்துக் கொண்டே பின்னால் வந்த பிரமுகர் ‘பரவாயில்லயேடா மேட்டர் இருக்குன்னா புத்தகத்தத் தேடி படிச்சிடறிங்க..’ எனச் சொல்ல அந்த இளைஞனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நான் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி விட்டேன்.


உங்கள் திரைப்படப் பாடலில் ஐம்பது பெண்களை பாவாடை ஜாக்கெட்டோடு நடனமாட வைப்பதைவிடவா நான் ஆபாசத்தை எழுதிவிட்டேன்.

ஆபாச எழுத்தாளரோடு என்ன கதையை விவாதம் செய்ய அழைத்தீர்கள் ஐயா?

இப்படி சக மனிதர்களின் மீது ஏன் காழ்ப்புகளை சுமந்து கொண்டு அலைய வேண்டும்? அதுவும் உங்களோடு பழகிய நண்பர்களிடம்...


இன்னொரு சம்பவம். ஒரு இலக்கிய நிகழ்ச்சி. நண்பர்களாக பேசிக் கொண்டிருக்கையில் இஸ்மாயில் கதரேவைப் பற்றி பேச்சு வந்தது. நான் அவரது தி ஜெனரல் ஆஃப் டெட் ஆர்மி மற்றும் ப்ரோக்கன் ஏப்ரல் நாவல்களைக் குறித்து சொல்லிக் கொண்டிருக்க அருகிலிருந்த நண்பர் ‘நீ எப்ப இதையெல்லாம் படிச்ச? என்று கேட்டார். அந்தக் கேள்வி ஏன் வந்தது என இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை.


ஐயா நான் எந்த அலுவலகத்திலும் குமாஸ்தா வேலை பார்க்கவில்லை. அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இல்லை. தினமும் நான்கு மணி நேரங்களேனும் வாசிக்கிறேன். அதற்காக வாழ்க்கை முழுக்க பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஓரளவு சரிக்கட்டதான் திரைப்படங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் இங்குமே எனது பெரும்பாலான நேரங்களை வாசிக்கவே செலவிடுகிறேன். நான் என்ன வாசிக்கிறேன்... எனது அறிவு என்ன என்கிற எந்த முன்முடிவுகளுக்குள்ளும் யாரும் செல்லத் தகுதியில்லை. நான் என்ன கற்றுள்ளேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்... வெளிப்பார்வைக்கு உங்களுக்குத் தெரிந்த உங்களுக்கு அறிமுகமான நான் அப்படியே எல்லா காலத்திற்கும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.


நான் காட்டாறு... எப்போதும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டதில்லை. நானென்று இல்லை. எல்லோரும் தான். கற்றுக்கொள்ளவும் இன்னும் சற்றே மேம்பட்ட வாழ்வை வாழவும் தான் போராடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் கற்பனை கடந்த காலத்திலிருந்தால் உண்மையில் மாற வேண்டியது நீங்கள் தான்.... ?



 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page