நீலப்படம்
- லக்ஷ்மி சரவணகுமார்

- Mar 6
- 1 min read

நாவலை வாங்க கையிலெடுக்கும் போதே ஒருசில உதடுகளில் நமட்டுச்சிரிப்புடன் குரூர பார்வைக்கு உள்ளாக வேண்டியதாயிற்று அங்கிருந்தே லக்ஷ்மி சரவணகுமார், ஆனந்தியின் மனோநிலையை என்னுள் திணித்துவிட்டார்.அதிலிருந்து ஆனந்தியின் கோபம் ஒன்றும் இயல்பற்றதாய் தோன்றியதில்லை.
நீலப்பட நாவல் பி க்ரேட் பட நடிகையான ஆனந்தியின் கடந்தகால கொடூரமான பக்கங்களுடன் தொடங்கி சிறுமிகள் மீதிழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை எனும் மைய தளத்துள் வியாபிக்கிறது (my point of view).ல.ச.கு வின் பிற நாவல்களை போல இதற்கான விமர்சனங்களையும் வரவேற்புகளையும் பெரியளவில் வாசகர் வட்டத்திலிருந்து நானறிந்த வரை காணவில்லை.ஒரு வேளை பகிராமல் விட்டிருக்ககூடும் ஆனால் நீலப்படம் முன்வைக்கும் கரு காத்திரமானது.இதையொட்டிய வருடங்களின் பின் வெளிவந்த ஒரு சிலபடங்களில் கூட இவ்வாறான கருத்து சிறியளவில் முன்வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான படைப்புக்கள் வரவேற்கவேண்டியவை.
ஆனந்தி கடந்தகால நினைவுகளை அசைபோடுவதிலிருந்து ஆரம்பிக்கும் கதை.ஆனந்தி தன் இறந்து போன அம்மாவுக்கு எழுதும் கடிதம்,தன் சிறுவயதில் சுவைத்த வயதுக்கு மீறிய வலிகளையும் ஆனந்தியின் அம்மா எனும் மூன்றாம் கதாப்பாத்திரத்தின் வாழ்வியலையும் கண்முன் ஓடவிடுகின்றது.
அதிலும்,
"பழைய அப்பாவை இனி எவ்வாறு அழைப்பது" என்ற கேள்வியும்
"அடுத்த பிறப்பில் நான் உன் காதலனாய் பிறக்கவேண்டும்.நீ பார்த்திராத அனுபவித்திராத மகத்தான காதலை உணரச்செய்யும் காதலனாய்! வேறு எந்த உயிர்களை விடவும் உன்னை அதீதமாய் காதலிக்கிறேன் அம்மா"
எனும் வரிகளில் ஆனந்தி தன் இயலாமையை வெளிப்படுத்தும் போது, நாவலோட்டத்தில் செல்லும் நமக்கு கண்ணீரையும் நெஞ்சில் வலியையும் விட்டுசெல்லும்.நிகழ்காலத்திற்கு வந்த பின் ஆனந்தி ஏற்கனவே அறிமுகமான பாபுவிடம் நட்புகொள்கிறாள்.
விடுபட்டிருந்த திரைப்பட பணிகளை தயாரிப்பாளராக பாபுவோடு சேர்ந்து தொடங்குகிறாள்.முன்னமே காதல் கொண்டிருந்த ஜோபியையும் துணையியக்குனராக சேர்க்கிறாள்.தன்கதைக்கு பொருத்தமான சிறுமியை பாபு அறிமுகம் செய்ய சத்யா எனும் பேரில் அவளை கொண்டாடுகிறாள்.சத்யாவை தன் மறுபிறவியாகவே நினைக்கிறாள்,எல்லை கடந்து நேசிக்கிறாள்!உரிமை கொண்டாடுகிறாள்! பாபு,சிறுமிகள் குறிப்பாக தனக்குரிமையான சத்யா மீதிழைத்த கொடுமையை அறிந்த ஆனந்தி என்ன செய்கிறாள்! என்ற பட்சத்தில் ஆனந்தியின் இடத்தில் சமூகத்தை நீதி வழங்கும் நிலையில் விட்டு விட்டு நகர்கிறார் ல.ச.கு.முடிவு ஆனந்தியின் கையில்!
அவற்றுக்கும்மேல் ஆனந்தியின் நிலையிலிருந்து ஆசிரியர் எழுப்பும் கேள்விகள் வாசகர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் வெற்றிடமாக விடப்பட்டுள்ளன.
அத்தோடு ஆனந்தி எனும் பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படும் வாழ்வியல்!பெண்ணியக் கருத்துக்களுக்குள்ளே கதை உயிரோட்டம் பெறுகிறது.
நீங்களும் அவற்றை தேடி கண்டுபிடியுங்கள்!
"பல சமயங்களில் நம் தவறுகளை சரிசெய்யும் பொறுப்பை பிரபஞ்சமே பாரத்துக்கொண்டுவிடுகிறது.மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் அதற்கு ஒத்திசைவது தான்" என்று ஒரு சமயம் ஆனந்தி கூறிய வார்த்தைகளில் ஏனோ இன்றைய சமூக நிலைக்கான பதில் இருப்பதாக தென்படுகிறது!
27 மார்ச் 2020



