பெருங்கனவின் திளைப்பில்
- லக்ஷ்மி சரவணகுமார்

- 4 minutes ago
- 8 min read

எல்லா பயணங்களிலும் மிகச் சிறந்த பகுதி வீடு திரும்புதல் தான். ஒரு பயணத்தில் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள், எதிர்கொள்ளும் அனுபவங்கள் அதிலுள்ள மகிழ்ச்சியை அந்தத் தருணத்தில் நாம் முழுமையாக உணர்வதை விட நினைத்துப் பார்த்துக் கொள்ளும்போது பன்மடங்காகிறது. அதிலும் நீண்ட பயணமென்பதால் கடந்துபோன ஒவ்வொரு தருணத்தையும் நினைத்துப் பார்க்க நிறைய அவகாசமிருந்தது.
விஷ்ணுபுரம் நிகழ்வில் இதற்கு முன்னால் நான் ஜெயமோகனின் மணிவிழாவில் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறேன். அதற்குப் பிறகு நியூயார்க்கில் நடந்த வாழும் தமிழ் இலக்கிய நிகழ்விற்கு வந்திருக்கிறேன். வழக்கமாக இலக்கிய அமைப்புகள் துவங்கப்பட்ட சில வருடங்கள் தீவிரமாக செயல்படும், பின்பு சில காலங்களில் மெல்ல மெல்ல அதன் சோபையிழந்து அதன் செயல்பாடுகள் முற்றாக நின்றுவிடும். மாறாக விஷ்ணுபுரம் அமைப்பு ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை தாண்டி தங்களது செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது எப்படி என்கிற வியப்பு எனக்கு எப்போதுமுண்டு. இந்த இரு நாள் நிகழ்வில் அதற்கான பதிலைக் கண்டடைய முடிந்தது. ஒன்று அசாத்தியமான ஒழுங்கு, இரண்டு சரியான திட்டமிடல், அடுத்ததாக ஒருங்கிணைப்பாளர் எல்லோரிடமும் இருக்கும் தலைமைப் பண்பு. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக எழுத்தாளர்களிடமும் இலக்கியத்தின் மீதும் அவர்களுக்கு இருக்கும் மகத்தான காதல்.
நவீன தமிழ் இலக்கியத்தின் மீது இத்தனை தீவிரமான அர்ப்பணிப்பும், காதலும் கொண்ட பெருங்கூட்டத்தைப் பார்க்கிறபோது ஒரு எழுத்தாளனாக மன நிறைவடைகிறேன். செயல்களோடு அவர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து எல்லா எழுத்தாளர்களையும் கவனமாக வாசிப்பதையும் குறிப்பிட வேண்டும்.
கடந்த வருடத்தில் ஒரு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் நியூயார்க்கில் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம் நீங்களும் அதில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டபோது அந்த நிகழ்ச்சியின் மாதிரி வடிவம் எப்படி இருக்கும்? எத்தனை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளப் போகிறார்கள் என ஏராளமான எண்ணங்கள் எனக்கிருந்தன. அதன் பிறகு முதலில் விஸாவிற்கு விண்ணப்பித்த சில எழுத்தாளர்களுக்கு மறுக்கப்பட்டபோது இந்தப் பணி அத்தனை எளிதானதல்ல என்பது தெரிந்தது. ஒருபுறம் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வதற்கான விஸா நெருக்கடி, இன்னொரு புறம் அசாதாரணமான அரசியல் சூழல். பெரும் போராட்டங்களுக்கு நடுவில் விஸா வேலைகள் நடந்தன.
போர் பதற்றம் காரணமாக மிகக் குறுகிய பயணமாக அமைத்துக் கொண்டோம். மார்ச் 31 இரவு கிளம்பி தில்லி ரோம் வழியாக ஒரு குழுவும், மும்பை ரோம் வழியாக இன்னொரு குழுவும், ஹாங்காங் வழியாக மூன்றாவது குழுவும் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றோம். மார்ச் 1 மாலை நியூயார்க்கை அடைந்தபோது அட்லாண்டிக் கடலின் குளிர் காற்று எங்களை அணைத்துக் கொண்டது. விஷ்ணுபுரம் நண்பர்கள் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். குடிவரவில் வரிசையில் நிற்கும் போதே அடுத்த விமானத்தில் சிங்கபூரிலிருந்து வந்த அழகுநிலாவும் இணந்து கொண்டார். இவ்விடத்தில் ரசக்குறைவான ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டும். தில்லி குடிவரவில் என்னிடம் விசாரித்த அதிகாரி நீ பீ ஆரா அலல்து விஸா வைத்திருக்கிறாயா என்று கேட்டார். விஸா என்ரதும் எதற்காக அமெரிக்கா செல்கிறாய் எனக் கேட்டார். நான் எழுத்தாளன், மாநாட்டிற்காக நியூயார்க் செல்கிறேன் என்று சொன்னதும் என்னை முறைத்துவிட்டு இரண்டு நிமிடம் எனது கடவுச் சீட்டு ஒரிஜினலா டூப்ளிகேட்டா என சுரண்டிப் பார்த்துவிடு வேண்டா வெறுப்பாக அனுமதி கொடுத்தார். மாறாக அமெரிக்க குடிவரவில் என் பாஸ்போட்டோடு அனுமதிக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு எழுத்தாளர் என்று சொன்னதும் முப்பது வினாடிகளில் அனுமதிக்கான உத்தரவைக் கொடுத்தார்.

என்னோடு வந்த பத்து பேருக்கும் பத்து நிமிடங்களுக்குள் குடிவரவு முடிந்தது.
விமான நிலையத்திலிருந்து அறை இருக்கும் நியூ ஜெர்ஸிக்கு செல்லும் வழியில் மார்டின் ஸ்கார்ஸேசையும், வுடி ஆலனையும் நினைத்துக் கொண்டேன். நண்பர் இளங்கோ விமான நிலையத்தின் வெளியே நின்று ஊட்டிக்கு வந்த மாதிரி இருக்குல்ல மாப்ள என்று சொன்ன அவல நகைச்சுவையை குறிப்பிடாமல் போனால் பாவம் செய்தவனாகிவிடுவேன்.
நாங்கள் அறையை வந்தடைந்தபோது குளிர் அடர்ந்து எங்கள் உடலோடு நெருங்கிய ஒன்றாகிவிட்டிருந்தது. ஹோட்டலுக்கு அருகிலேயே ஹட்சன் நதி. அதன் ஒரு எல்லையில் நியூயார்க் இன்னொரு எல்லையில் நாங்கள் சிறிய நடை சென்றோம். காரணமே தேவைப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தோம். சத்தமாக சிரித்துக் கொண்டோம். மறக்காமல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விஷ்னுபுரம் நண்பர்கள் வந்துவிட்டிருந்தனர். கொரியாவிலிருந்து சதீஷ் வந்திருந்தார். திருவிழாவிற்கு வரும் உறவுக்காரர்களைப் போல் பெரும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் சூழத் துவங்கியது. லண்டனிலிருந்து பங்கேற்பாளராக எழுத்தாளர் கிரிதரனும் அடுத்தாண்டு வாழும் தமிழ் நிகழ்வின் ஒருங்கிணைப்பார்களான அரவிந்த் மற்றும் தீபாவும் வந்திருந்தனர்.
இரண்டாவது நாள் கடுங்குளிரில் சுதந்திர தேவி சிலையைப் பார்க்க பயணித்தோம். முதல் நாள் வந்தது துவங்கி பேச்சு சத்தம் ஓயவில்லை. இதில் முக்கியமானது அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் இலக்கியத்தைத் தவிற வேறு கிசுகிசுக்கள் எதுவும் இல்லாத ஆரோக்கியமான உரையாடல். அன்று இரவு உணவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் உடையாடியபடியே சாப்பிட்டோம். ராலே ராஜன் அவர்களோடும் சிஜோ அவர்களோடும் நல்லதொரு உரையாடல். அவர்கள் அமெரிக்க பூர்வகுடி மக்களின் திருவிழாக்கள் பற்றி விரிவாகச் சொல்ல நான் வடகிழக்கு இந்தியாவில் நிகசும் திருவிழாக்களைக் குறிப்பிட்டுப் பேசினேன். இசை, ஆடை பழக்கவழக்கங்களில் இருந்த ஒற்றுமைளை அறிந்து வியந்தோம்.
ஏப்ரல் 3 ம் தேதி அதிகாலையிலும் நல்ல குளிர். எங்கள் யார்க்கும் ஜெட் லாக் இல்லை. உற்சாகமாக கிளம்பி விழா நடந்த அரங்கத்திற்குச் சென்றோம். மீண்டும் பேச்சு சப்தம், சிரிப்புசத்தம் காதுகளில் நிறையத் துவங்கியது.
திட்டபடி சரியான நேரத்திற்கு ( ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல்) துவக்க விழா ஆரம்பித்தபோது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அடுத்த இரண்டு நாட்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றின தெளிவான சித்திரம் ஒன்று கிடைத்தது.
வெவ்வேறு தலைப்புகளில் பத்து அமர்வுகள். ஒவ்வொரு அமர்விலும் இரண்டு தமிழ் எழுத்தாளர்களோடு ஒரு அமெரிக்க எழுத்தாளர். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அமர்வுகள் நடந்தன. இயல்பாகவே தமிழ் எழுத்தாளர்களுக்கு மொழி சார்ந்து தயக்கங்களும் தாழ்வுணர்ச்சிகளும் உண்டு. ஆங்கிலத்தில் பேசும் அமர்வுகளில் நம்மை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்வதென்கிற தயக்கத்தில் சரளமாக உரையாடத் தயங்குவார்கள். அப்படி இருக்கையில் ஒரே மேடையில் அமெரிக்க எழுத்தாளரோடு அமரப்போகிறோம் என்கிறபோது ஒரு கூச்சவுணர்வு வரும். நான் இதனை நேர்மறையாக எடுத்துக் கொண்டேன். நான் எனக்குத்தகுதியான மேடையில் அமர்ந்திருக்கிறேன். தமிழ் பிரபா என்னை விடவும் அசாத்தியமான தன்னம்பிக்கையோடு அந்த மேடையோடு கையாண்டார்.

சற்றேறக்குறைய எல்லா எழுத்தாளர்களும் நண்பர்கள், எல்லோருடைய அமர்விலும் இருக்க வேண்டும். ஆனால் பிராக்டிக்கலாக சாத்தியமில்லை. அதனால் அரை மணி நேரத்திற்கு ஒரு அமர்வு என முதல் தளத்திற்கும் மூன்றாவது தளத்திற்கும் ஓடிக் கொண்டிண்டிருந்தேன். முதல் அமர்வில் சயந்தனும் அஜிதனும் இருவரும் கேள்விகளை எதிர்கொண்ட விதமும் அவர்களது பதிலும் முக்கியமானது. சயந்தனது உரையில் யாழ்ப்பாண நூலக எரிப்பின் நினைவுகளைக் குறித்த பகுதி முக்கியமானது. அடுத்த நாள் தனது அமர்வில் ரம்யா அதனை ஒட்டி தனது கருத்துக்களையும் பகிர்ந்தார். அதே வேளையில் கா.ந.சு அரங்கில் கிரிதரனும் சுனிலும உரையாடினர். அவர்களது கடைசி கேள்வி வந்த சுற்றுக்கு நான் வந்ததால் முதலில் பேசியதைக் கேட்க முடியவில்லை.
அடுத்ததாக ஒரு அமர்வில் ஜெயமோகன், டேமியன், சுசித்ரா மூவரும் உரையாற்ற இன்னொரு அரங்கில் பெருந்தேவி ரெமிதா கரீம் மூவருக்குமான அமர்வு. எழுத்தாளனுக்கு இருக்கும் பெருங்கனவுகள் எப்படி அவனை முன்னோக்கி உந்துகின்றன என்பதை ஜெ விரிவாகப் பேசினார். பகடிக்கும் குறைவில்லை. ஜெயமோகன் அமர்வை ஒருங்கிணைத்த மேகனா குமார் சிறப்பாக தது பங்களிப்பை செய்தார். அவர் மட்டுமில்லை, இந்த இரண்டு நாட்களில் அரங்குகளை ஒருங்கிணைத்த அத்தனை பேருமே மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். தங்கள் அமர்விற்கு வரும் எழுத்தாளர்களின் நூல்கள வாசித்திருந்தார்கள். எஸ்.செந்தில்குமாரின் அமர்வை ஒருங்கிணைத்த நிவேதா அவரது நாவல்களிலிருந்து வெவ்வேறு இடங்களை எடுத்துப் பேசியபோது செந்தில்குமார் நெகிழ்ந்துபோனார்.
அடுத்ததாக கவிதை அமர்வில் இளங்கோ கிருஷ்ணனும் வெய்யிலும் அவர்களோடு விவேக் நாராயண்னும் கலந்துகொள்ள, பெண்ணெழுத்து குறித்த இன்னொரு அமர்வில் அ.வெண்ணிலா சந்திரா தங்கராஜ் பத்மா மூவரும் கலந்துகொண்டனர். கவிதையின் அழகியல் குறித்த தனது முதல் பதிலிலேயே இளங்கோ கிருஷ்ணனின் மேதமை வெளிப்பட்டது. வெய்யில் தன்னை அரசியல் கவிஞன் எனக் குறிப்பிட்டதற்கான நியாயத்தினை செய்தார். மற்ற அமர்வில் வெண்னிலா சந்திரா இருவரது நிதானம் மற்றும் அழுத்தமான பதில்கள் எல்லோரையும் கவர்ந்தது.

அமர்வுகளுக்கு நடுவிலும் உணவு மற்றும் தேநீர் இடைவெளியின் போதும் ஒரு மாய உருவம் அவ்வப்போது நிதானமாக வந்து பின்பு திடீரென காணாமல் போனது. முதல் நாள் மாலை வேளை அந்த உருவமான காலம் செல்வத்தை நானும் சயந்தனும் நிறுத்தி ஏராளமான கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டோம். முடிவில் வாழும் தமிழ் என்ற அந்தச் சொல்லின் தமிழ்நாட்டின் உரிமையை எனக்கும் சுவிஸ் உரிமையை சயந்தனுக்கும் செல்வம் அண்ணன் ஒப்புக் கொண்டார். அவரது மகள் கஸ்தூரி அதற்கு சாட்சி.
இலக்கிய நிகழ்வுகள் சோர்வளிக்கக் கூடியதாக இருப்பதாலேயே புதிய ஆட்கள் வருவதில்லை . அப்படியே வந்தாலும் ஒரு சில கூட்டங்களோடு தப்பி விடுவார்கள். மாறாக இத்தனை காத்திரமான உரையாடலும் களிப்பும் பிரவாகமெடுக்கும் இலக்கிய அமர்வுகள் புதிய தலைமுறையை இலக்கியத்தை நோக்கி வரச்செய்யும். வட அமெரிக்க தமிழ் சங்கத்தைச் சேர்ந்த பாலா விஸ்வநாதன், சுபா , பாஸ்டன் பாலா, அரவிந்தன் கன்னையன், ராமலஷ்மி இவர்களோடு இன்னும் சிலரும் இரண்டு நாள் அமர்வுகளில் கலந்துகொண்டார்கள். அரங்கத்திற்கு நேர் எதிரே நியூயார்க் நகரின் மத்திய பூங்கா. அந்த நகரின் அற்புதங்களில் ஒன்று. செரி மலர்கள் பூக்கத் துவங்கியிருக்கும் பருவமென்பதால் பூங்காவில் நுழைந்தபோதே மனம் பூரித்தது.
பெருந்தேவியின் சிறுகதை நூல் குறித்து அவரோடு நிறைய உரையாடினேன். முதல் முறையாகச் சென்றாலும் திரைப்படங்களின் வழியாக என் மனதுக்கு மிக நெருக்கமான உணர்வை அந்தப் பூங்கா தந்தது. ஒரு போதும் உடன் வைத்துக் கொள்ள முடியாத ஒரு காதலியின் மீது தோன்றும் எண்ணங்களை எப்படிச் சொல்லலாம்? அப்படித்தான் அந்த பூங்காவும் நானும். 500 டேஸ் ஆஃப் சம்மரின் இறுதிக் காட்சியில் அவர்கள் இருவரும் அமர்ந்து உரையாடும் நாற்காலியைத் தேடினேன். குளிர் விலகி சூரியனின் இள வெளிச்சம் என்னைத் தழுவிக் கொண்டது. தமிழின் மக்ததான எழுத்தாளன் ஒருவனுக்குக் கிடைத்த ஆசிர்வாதமென் தலை தூக்கிப் பார்த்தபோது செரி மலர்கள் என்னைக் கண்டு முறுவலித்தன. நண்பர்கள் நிறைய படமெடுத்தார்கள்.

எனக்கு இரண்டாவது நாள் அமர்வு. முதல் நாள் அமர்வு முடிந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது ஜெயமோகன் எங்கள் மேசையில் வந்து அமர்ந்தார். சாப்பிட்டபடியே முதல் நாள் அமர்வுகள் குறித்து உரையாயாடினோம். அடுத்த நாள் காலை முதல் அமர்வு என்னுடையதென உறுதி செய்துகொண்டபின் மேடையில் பேசுகிறவர்களை பார்வையாளர் எப்படியெல்லாம் கவனச் சிதறல் கொள்ள வைக்கலாம் என்பதகான ஆலோசனைகளை அங்கிருந்த எலொலோருக்கும் ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு எதிரான அந்த சதியை முறியடிக்க வேண்டுமென்கிற பெரும் பொறுப்பு ஒன்று எனக்கு இருந்தது. அந்தக் கவலையோடு உரைக்குத் தயார்ப்படுத்திக் கொள்ள நினைத்தால் களைப்பில் அயர்ந்து உறங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலை சில குறிப்புகளை எடுத்துக் கொண்டேன். தமிழில் பேசுகிறவர்களின் உரையை உடனடியாக மொழி பெயர்க்க முடியாதென்பதால் முன்பே மொழி பெயர்ப்பு செய்து வைத்திருந்தார்கள். எனது அமர்வை ஒருங்கிணைத்த பாரதி கல்லூரி மாணவி. கலிஃபோர்னியில் இருந்து வந்திருந்தார். என்னைவிட சற்றுக் குறைவான பதற்றத்தில் இருந்தார். அவரது பெற்றோர் இருவரும் எங்கள் விருதுநகரைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியும் நான் தீர்மானித்த உரைக்கு வெளியில் தான் அதிகம் பேசுவேன் என்பதால் அதனையும் முன்பே பாரதியிடம் பேசிவிட்டேன். என்னோடு சரவணகார்த்திகேயனும் அமெரிக்காவின் முன்னனி பதிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரில் ஒருவரான ரோஹானும் இருந்தனர். இந்தியாவில் மாறிவரும் வாழ்க்கை முறை குறித்த அமர்வு. உணவு சார்ந்த பார்வையில் ரோஹானும், உறவுகள் சார்ந்த பார்வையில் சரவண கார்த்திகேயனும் அரசியல் வன்முறை, மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை குறித்த பார்வையில் நானும் உரையாற்றினோம். ஒவ்வொருவருக்கும் மூன்று கேள்விகள்.
பெருநகரில் உருவாகி வரும் புதிய விளிம்புநிலையினர் குறித்து கேள்விக்கு நகரங்கள் பொருள் உற்பத்தி மதிப்பு வாழ்விடம் இதைச் சார்ந்து எவ்வாறு மனிதர்களை புதிய தீண்டாமைக்கு உட்படுத்துகிறது என்பதை பாபாசாகேப் அம்பேத்கரின் சாதியை அழித்தொழித்தல் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியோடு இணைத்து விலாவாரியாக உரையாற்றினேன். நான் பேசி முடித்ததுமே எனக்கு அருகிலிருந்த ரோஹான் அதனை வியந்து பாராட்டினார்.
அடுத்ததாக கொமோரா நாவலை முன்வைத்து அரசியல் வன்முறையைக் குறித்து கேள்விக்கு கதையாடல்கள் எப்படி வன்முறையின் துவக்கமாக அமைகிறது என்பதையும் உலகம் முழுக்க அதன் காரணமாக நிகழும் வன்முறைகளையும் பேசியபோது நீண்ட நேரம் கைதட்டல் ஒலி கேட்டது. அடுத்ததாக ரூஹ் நாவலைக் குறித்த கேள்விக்கு பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக சிறுதையாடல்கலை வைக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டேன். எப்போதும் பெருங்கதையாடலின் பக்கமாக நின்று பேசும் ஜெயமோகன் எதிரில் அமர்ந்து எனது கருத்துகளை புன்னகையோடு ஆமோதித்தார். அமர்வு முடிந்தபோது யார் யாரோ வந்தது கை குலுக்கினார்கள், தழுவிக் கொண்டார்கள் எல்லோருக்கும் எனது உரை பிடித்திருந்ததை நினைத்து மகிழ்ந்தேன். சடாரென ஒரு நொடி நெகிழ்ச்சியில் கண்ணீர் திரண்டதை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டேன். என து உரையின் முக்கியத்துவத்தை சிலர் தனிப்பட்ட முறையில் ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டதை பிற்பாடு அவர் மூலமாக அறிந்துகொண்டேன். அரங்கத்தில் தனது அமர்வின் போதும் சரி, அரங்கிற்கு வெளியேயும் சரி எப்போதும் சிரித்த முகத்தோடு யுவன் பேசிக் கொண்டிருந்தார். எழுத்தாளர்களின் வசீகரம் அவர்களது ஞானமும் அமைதியும் தான் போல.
எனக்குப் பிறகான அமர்வில் ரம்யா , அழகுநிலா, கலைச்செல்வி மூவரும் கலந்துகொண்டார்கள். அமரவு முடிவது வரை பார்வையாளளைப் பார்ப்பதில்லை என்கிற கொள்கையோடு தலையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்ட ரம்யா தனது பதில்களை தெளிவாக எடுத்து வைத்ததோடு போகிற போக்கில் என்னையும் சரவணகார்த்திகேயனையும் ஒரு உதை விட்டுச் சென்றார். அமர்வுக்குப் பின் நாங்கள் இருவரும் உரையாடியது முக்கியமானது. சிங்கப்பூர் வாழ்க்கையிலிருந்து பெண் எழுத்தின் நிலை குறித்த அழகு நிலாவின் பார்வை மிகச் சிறப்பானவை. கலைச்செல்வி அஹிம்சையைக் குறித்துப் பேசியபோது கைதட்டி ஆராவாரம் செய்தேன். ருட்கர் பிரக்மெனின் மனிதகுலம் நூல் குறித்து பிற்பாடு அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.
உங்கள் கதைகளில் ஏன் இத்தனை வன்முறையும் என ரம்யா கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள் நான் ஒருபோதும் சிந்திக்காதது.
”வேறொரு நூற்றாண்டின் போர்க்களத்தில் ஓராயிரம் அம்புகளும் துரோகங்களும் துளைத்து குருதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நான் வெவ்வேறு நூற்றாண்டுகளில் விழித்தெழும் கனவுச் சுழலுக்குள் ஆட்பட்டவன்.
என் கதைகளில் ஏன் இத்தனை வன்முறை எனக் கேட்கிறாய். நான் கடந்த போர்க்களத்திற்குப் பின்னால் பல நூறு தலைமுறைக் கனவுச் சுழலில் சிக்கி உயிர்ப்பித்தும் மாண்டும் வந்திருக்கிறேன். நினைவுகளில் குருதி வற்றாநதியென ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு பெரும் பாய்ச்சலோடு சென்றுகொண்டிருக்கிறது.
நான் எழுதுவது இன்றின் வன்முறையாக உனக்குத் தோன்றலாம். நான் எந்த நூற்றாண்டின் மனிதன் என்பதைப் புரிந்துகொள்ள என்னை வாசித்தால் மட்டும் போதாது. வா என்னோடு சமரிடு.
வாசிக்காமல் கடந்துபோக விரும்புவுவது உன் சுதந்திரம். வன்முறையின் கவுச்சியில் ஒரு துளி உனக்கும் வேண்டுமானால் எழுந்து வா.
ஒரு நிபந்தனை. மரணத்தை விளையாட்டென பல நூறு வருடங்களாக தொடர்ந்து நிகழ்த்தி வரும் என்னை எதிர்க்க என்னைப் போன்றே அழிவற்றதொரு வாளோடு வா. சவரக் கத்தியை எடுத்து வருவது என்னை அவமானப்படுத்துவதற்கு ஒப்பானது.
ஒன்றைப் புரிந்துகொள்... என் கைகளில் படர்ந்துள்ள குருதியை எத்தனை முறை கழுவினாலும் தீராமல் போனதால் தான் கதைகளில் கழுவிக் கொண்டிருக்கிறேன்.”
இப்படி உளக்கொந்தளிப்பான ஒரு நிலை எனக்குள் ஆழமாக அலைக்கழிக்க நான் வன்முறையைக் குறித்து இன்னும் தீவிரமாக சிந்திக்கத் துவங்கினேன். நண்பர்களுடனான உரையாடலும் மீண்டும் அதைச் சுற்றியே இருந்தது. நியூஜெர்ஸி சுபாவும், அரவிந்தன் கன்னையனும் எங்களில் பத்து பேரை டைம் ஸ்கொயருக்கு அழைத்துச் சென்றார்கள். தற்செயலாக ரயில் நிலையத்தில் சந்தித்துவிட்ட விஷ்னுபுரம் நண்பர்கள் இரண்டு பேர் எங்களோடு இணைந்துகொண்டனர். நிறைய நடந்தோம், நிறைய புகைப்படமெடுத்தொம், என் மனம் முழுக்க நான் எந்த நூற்றாண்டு மனிதன்? எனது வன்முறையின் நதிமூலம் எது என ஏராளமான குழப்பங்கள். என்னைப் போலவே உளக்கொந்தளிப்பு கொண்ட ஒருவரால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியும் என தோன்றியது. இந்த உலகில் அப்படி ஒருவர் இதுவரையிலும் இல்லை என்பது தான் நிஜம். ஆனால் இந்த நிலையில் என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். 2005 ம் வருடத்திற்குப்பின் எழுத வந்த தமிழ் எழுத்தாளர்களில் நான் முதன்மையான எழுத்தாளன். இந்த இரண்டு நாள் அமர்வுகளன் முடிவில் அதனை ஆழமாக உணர்ந்தேன்.

ரூஹ் வெளியானபோது ஏராளமான புதிய நணபர்கள் என்னைத் தேடி வந்தனர். அவர்களில் பெரும்பாலனவர்களோடு எனக்கு ஏன் தொடர்புகளை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது என பலமுறை நான் யோசித்ததுண்டு. ஒரு எழுத்தாளனை தேடி வரும் வாசகனை தக்கவைப்பது எழுத்தாளனின் வேலையல்ல, ஆனால் ஏதோவொரு வகையில் அவர்களோடு உரையாடலுக்கு முன்வர வேண்டும். நான் சந்திப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் உரையாடலுக்கும் வெளியில் இருந்துள்ளேன் என்பதை உணர்கிறேன்.
இதில் மிக முக்கியமான இருவரைக் குறிப்பிட வேண்டும். ஒருவர் ஆஸ்டின் செளந்தர், இன்னொருவர் மகேஸ்வரி. தொடர்ந்து பங்கேற்பாளர்களுடன் தொலைபேசியில் பேசி ஒவ்வொரு ஏற்பாடுகளையும் கவனமாக செய்து வந்தார்கள். நான் செயல்களின் மீது பெருமதிப்பு கொண்டவன். அதனாலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்போடு செயலாற்றுகிறவர்கள் மீது இயல்பாகவே அபாரமான மரியாதை வந்துவிடும். பயணத்திற்கு முன்பும் சரி, பயணத்தின் போதும் சரி, அத்தனை எழுத்தாளர்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டதோடு எல்லா அமர்வுகளிலும் நின்று ( நான் பலமுறை உட்காரச் சொல்லியும் உட்காராமல்) அத்தனை உரைகளையும் கேட்டவர் மகேஷ்வரி.
இத்தனை ஆற்றல் கொண்ட ஒருவரை பார்ப்பது அபூர்வம். நான் எல்லோரையும் பெயர் சொல்லியோ அல்லது ஸார் மேடம் என மாரியாதையாக அழைப்பதை மட்டுமே விரும்புவேன். அபூர்வமாகவே ஒருவரை அண்ணா, அக்கா என்று கூப்பிடுவேன். மகேஷ்வரியை சந்திக்கும் முன்னர் வரை பெயர் சொல்லித்தான் அழைத்தேன். அங்கிருந்து கிளம்பியபோது அக்கா என்று அழைக்க விரும்பினேன். தம்பி என்றுதான் இனி கூப்பிட வேண்டுமென அவரிடம் சொல்லி இருக்கிறேன். மகேஷ்வரி ஒரு தூண் என்றால் இன்னொரு தூண் அவரது கணவர் பழனி. இந்த இரண்டு நாட்களில் எந்தத் திசையில் திரும்பினாலும் இவர்கள் இருவரையும் பார்க்கலாம். அரங்கத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி அவர்கள் கவனம் முழுக்க எழுத்தாளர்களை முகம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் இருந்தது.
இவர்களோடு ராதா, பாலாஜி, பத்மநாபன், விசு, சிஜோ, என இன்னும் ஏராளமான விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு நொடியும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் ஆக முக்கியமானது அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தோடு இந்த நிகழ்வில் கலந்துகொண்டது. இதனாலேயே ஒரு குடும்ப விழாவில் கலந்துகொண்டதைப் போல் அத்தனை நெருக்கம் உண்டானது. அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் வெளிப்பட்ட அசாத்தியமான உழைப்பும் ஈடுபாடும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் நிறைவு விழாவை ஒருங்கிணைத்த சித்தார்த்திடம் மேடையை எப்படிக் கையாள வேண்டுமென்கிற ஆளுமை வெளிப்பட்டது.
அடுத்து எழுத வேண்டிய படைப்புகள் குறித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் ஜெயமோகன் ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். பால்ஸாக் 51 வயதில் மரணிக்கும் போது 3 லட்சம் பக்கங்களை எழுதியிருந்தார். அதனை நான் முறியடிக்க நினைத்தேன் முடியவில்லை என. அந்த செய்தி எனக்கு முக்கியமானது. கிளம்புவதற்கு முன் மகிழ்வோடு எல்லோருக்கும் விடையளித்துவிட்டு அவரிடம் பேசியபோது அடுத்த ஆண்டு நிகழ்ச்சிக்கான திட்டங்களைக் குறித்து பேசத் துவங்கிவிட்டார். அவரது வேகத்திற்கு சற்றும் குறையாதவர்களாக விஷ்ணுபுரம் நண்பர்களும் இருந்தனர்.
விமானத்தில் ஏறியபின் ஜெயமோகனுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். ‘கணக்கிட்டுப் பார்த்ததில் இதுவரை 5000 பக்கங்கள் எழுதியிருக்கிஏன் ஜெ. 51 வயதைக் கடக்க இன்னும் பதினோறு வருடங்கள் இருக்கின்றன. மூன்று லட்சம் பக்கங்களை நோக்கிய பயணம் இந்த நிமிடம் முதல் துவங்குகிறதுதென. நான் முன்பே குறிப்பிட்டபடி பயணத்தின் முக்கிய அம்சம் வீடு திரும்புதல். இங்குதான் அடுத்த இலக்குகளுக்கான துவக்கம் எழுகிறது. அந்த எழுச்சி பயணத்தில் கண்டடைந்தது.



