top of page

மஹாஸ்வேதா தேவியின் திரெளபதி

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 16 minutes ago
  • 5 min read

 

"I have always believed that real history is made by ordinary people.... The reason and inspiration for my writing are those people who are exploited and used and yet do not accept defeat."  


-       மஹாஸ்வேதா தேவி   

ree

சுதந்திரத்திற்குப் பின்பும் இந்திய கிராமங்கள் பன்னையார்களாலும் நிலக்கிழார்களாலும் கட்டுப்படுத்தப்பட்டன. குறிப்பாக, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நிலமற்ற உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களுக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக பெரும் எழுச்சியோடு 1967 ம் வருடம் நக்சல்பாரி இயக்கம் துவங்கப்பட்டது. பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்த வனப்பகுதிகளில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் வேகமாக வளர்ந்தன. 


நக்சலைட் இயக்கத்தின் எழுச்சியானது பழங்குடிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்ததோடு அவர்களுக்கான விடுதலைக்கும் வழிவகுத்தது. இந்த எழுச்சியைத் தீவிரமாக ஒடுக்க முனைந்த அதிகார வர்க்கம் துணை ராணுவத்தினரையும் சிறப்புக் காவல் படையினரையும் வனங்களுக்குள் அனுப்பினார்கள். போராட்டக் குழுக்கள் சிதறடிக்கப்பட்டனர்,  வேட்டையாடப்பட்டனர், பலர் காணாமலாக்கப்பட்டனர். ஆனால் மேற்கு வங்கத்தில் துவங்கிய இந்த இயக்கம்  நாடு முழுக்க பரவியது.


நக்சலைட் இயக்கத்தின் தேவையானது எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல் நலிந்து கிடைந்த பழங்குடி மக்களுக்கு முக்கியமானது. வனங்களோடு பல்லாயிர வருட பிணைப்பு கொண்ட அம்மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து    துரத்தப்பட்டதோடு   அவர்களது நிலங்களும் தெய்வங்களும் பறிக்கப்பட்டன.  தங்களது பண்பாட்டு அடையாளங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆயுதமேந்திய பழங்குடிகளின் போராட்டமென்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் நிகழ்வு.  

நக்சல் இயக்கத்தினர் குறித்து இந்திய ஊடகங்கள் பொத்தாம் பொதுவாக பயங்கரவாதிகள் என்கிற பிரச்சாரத்தை நீண்டகாலமாக செய்து வருகிறது. அரசியல் உரிமைகளுக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடுவதை எந்த அரசாங்கமும் அனுமதிப்பதில்லை. மார்க்சிய அறிஞர் பாலகோபாலின் ஒரு கட்டுரையில் வாசித்த முக்கியமான சில வரிகளை இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.


’அதிகாரத்திற்கு சில சின்னங்கள் உள்ளன.  அந்தச் சின்னங்கள்தான் அதிகாரத்தைக் குறிக்கின்றன. சின்னமே அதிகாரம் என்கிற அளவிற்கு அவை நம்பகத்தன்மையைப் பெறுகின்றன. எந்தவொரு அதிகாரமும் ஒரு வரலாற்று போக்கில் உருவாகிறது, எனவே அந்த வரலாற்று போக்கில் தோன்றும்  உயரிய விழுமியங்கள் மற்றும் பண்புகள் அந்த அதிகாரப் பண்பாட்டில் இடம் பெறுகின்றன. அவற்றோடு அதிகாரம் என்பதற்கு எங்கும் நிறைந்திருக்கும் ஒடுக்குமுறைப் பண்பும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பிரத்யேகமாய் இருக்கும் இழிவான அம்சங்களும் அந்த பண்பாட்டில் இருக்கும். ஆனால் பொதுவாக பண்பாட்டின் உயர்ந்த விழுமியங்கள் அல்ல, இழிவான விழுமியங்கள்தான் அதன் சின்னங்களாக அமையும். ஏனெனில் மேலாதிக்கம் அடிப்படையில் ஜனநாயகமற்றதாக இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.


அரச அதிகாரத்தில் மக்கள் நலனுடன் தொடர்புடைய எத்தனை விழுமியங்கள் இருந்தபோதிலும், பலப்பிரயோகமே அதற்கு சின்னமாக ஆகிறது. இராணுவ சீருடையே அதன் சின்னமாகிறது. ஆணாதிக்கத்தின் விழுமியமான ‘ஆண்மை’ என்பது துணிச்சலைக் காட்டிலும் முரட்டுத்தனம் மற்றும் ஊர்மேயுதலே என அதிகமாக வரையறுக்கப்படுகிறது. பிராமணீயம்  முதன்மை ஆண்மைப் பண்பு ( பிரதம புருஷார்த்தம் ) பற்றி என்ன சொன்னாலும் பிறரை இழிவாகப் பார்க்கும் அகங்காரமும், வறட்டுப் புலமையும் அதன் முக்கியப் பண்புகளாகும். நிலப்பிரபுத்துவ அதிகாரம் எவ்வளவு கலைகளைப் பராமரித்தாலும், என் சொல்லுக்கு மறுப்பில்லை எனும் சர்வாதிகார மனோபாவம் தான் அதற்கு அடையாளம்.’   


நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பின்னால்  இந்த அரசுக்கு கேள்வி கேட்கத் துணிச்சலற்ற ஒரு அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டுமென்கிற தேவையிருந்தது.  அப்படி அதிகாரத்தினால்  மூளைச் சலவைச் செய்யப்பட்ட மக்களை அரசியல் படுத்துவதே நக்சல் இயக்கத்தின் முதன்மையான நோக்கம். ஒருவர்  தனது அடிப்படை உரிமைகளைத் தெரிந்து கொண்டு அதற்காக போராட வேண்டியதன் அவசியத்தை நக்சல் இயக்கம் கற்றுக் கொடுத்தது. ராணுவம் எப்படி அதிகாரத்தின் சின்னமாக பார்க்கப்பட்டதோ அதேபோல் கைகளை உயர்த்தி எதிர்ப்புக் குரல் கொடுக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் விடுதலையின் சின்னமாகப் பார்க்கப்பட்டார்கள்.


நக்சல் இயக்கத்தின் எழுச்சி மிக்க காலத்தில் கலைஞர்களும் பத்திரிக்கையாளர்களுமே பெரும் தூண்களாக அந்த இயக்கத்தினரோடும் பாதிக்கப்பட்ட மக்களோடும் நின்றனர். மஹாஸ்வேதா தேவி அப்படியான ஒருவர்

தான் நம்புகிற கருத்திற்காகவும் தத்துவத்திற்காகவும்   ஒரு கலைஞன் எல்லாக் காலங்களிலும் உறுதியோடு நிற்கவேண்டும். பிரபலத்தன்மையும் புகழும் பெரும்பாலான கலைஞர்களின் செயல்பாடுகளை மாற்றிவிடுகின்ற சூழலில் தனது இறுதிக் காலம் வரையிலும் தான் நம்பியவற்றை உறுதியாக எழுதியதோடு  பழங்குடி மக்களுக்காக  போராடியவர் எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி.


ree

பிரச்சாரத் தன்மை கொண்ட கதைகள், யதார்த்த வகை எழுத்தில்  அவருக்கு முக்கியமானதொரு இடமுண்டு என அவரை இலக்கிய விமர்சர்கள் குறுகிய வட்டத்தில் சுருக்குவதுண்டு. ஆனால் அவர் உருவாக்கிய அழகியல் என்பது இந்திய புனைவிலக்கியத்தில் அபூர்வமானது. வன்முறைக்கு  புதியதொரு நிறத்தையும் புரிதலையும் முன்வைத்ததோடு  பெண்ணுடல் குறித்து வெகு காலம் வரையிலும் இருந்த சித்திரங்களுக்கு நேரெதிரானதொன்றை அவரது கதைகள் வெளிப்படுத்தின. நல்ல இலக்கியத்தில் பிரச்சாரம் இருக்கக் கூடாதென எந்த சட்டமும் இல்லை.  


திரெளபதி என்ற இந்தச் சிறுகதை  மஹாஸ்வேதா தேவியின் பெரும்பாலானக் கதையைப் போலவே பழங்குடியினப் பெண்ணைப் பற்றியதுதான். தோப்தி என்ற சந்தால் இனப் பழங்குடி பெண்ணும் அவளது கணவனும் ஒரு பன்னையாரிடம் கொத்தடிமையாக இருக்கிறார்கள். அவர்களது நிலம் பிடுங்கப்பட்டு கிராமத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள். தோப்தியும் அவளது கணவரும்  தங்களது பன்னையாரைக் கொலை செய்துவிட்டு தப்பித்து நக்சல்களோடு இணைந்துகொள்கிறார்கள்.  அவர்களைப் போலவே ஆயிரக்கணக்கான பழங்குடிகள் நிலமிழந்து உரிமையிழந்து வெவ்வேறு இடங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்தார்கள். அந்த மக்களைத் திரட்டி பன்னையார்களைக் கொலை செய்யும் நக்சல் இயக்கம் விடுதலையடைந்த பழங்குடி மக்களோடு இணைந்து வெவ்வேறு இடங்களுக்குப் போராடச் செல்கிறார்கள்.


ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் நீண்டகாலமாக தோப்தியும் அவளது கணவனும் தப்பித்து வருகிறார்கள். ஒருமுறை துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் கொல்லப்படும்போது பிணங்களுக்கு நடுவில் இறந்தவர்களைப் போல் கிடந்து இவர்கள் இருவர் மட்டும் தப்பித்து விடுகிறார்கள். எழுத்தறிவற்ற இந்த பழங்குடிகளுக்கு எத்தனை துணிச்சலும் அறிவும் இருக்கக் கூடுமென அதிகாரிகள் எரிச்சலுறுகிறார்கள். கையில் கிடைக்கிற பழங்குடிகளையும் நக்சல்களையும் துன்புறுத்தி இவர்களது இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளத் துடிக்கிறார்கள். தோப்தியின் கணவன் பிடிபட்டுக் கொல்லப்படுகிறான். இறுதியாக தோப்தியையும் ராணுவம் சுற்றி வளைக்கிறது. விசாரணைக்காக பிடித்து வரப்படும் அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் கதையின் இறுதிப் பகுதி.


இந்தக் கதை நமக்கு வெவ்வேறு விதமான வாசிப்பு சாத்தியங்களைத் தருகின்றன. முதலாவதாக இந்தக் கதை  நேரடியான ஒரு அரசியல் பிரகடனம். எதிர்ப்பின் அழகியலுக்கு முக்கியமானதொரு உதாரணமாக இதனை நாம் குறிப்பிட முடியும். அரச அதிகாரத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்டவளின் குரலாகவும் ஆணுடலின்  அதிகாரத்திற்கு எதிரான பெண்ணுடலின் எதிர்ப்பாகவும் அணுகலாம்.  அடுத்ததாக காலம் காலமாக நம்பப்படும் ஒரு தொன்மத்திற்கு  புதிய அர்த்தங்களைக் கொடுப்பதன் மூலம்  ஆதிக்க சமூகத்திற்கு இருக்கும் பண்பாட்டு புரிதலிலிருந்து ஒடுக்கப்பட்டவனின் பண்பாட்டுப் புரிதல் எவ்வாறு வேறுபடுகிறது என்கிற படிப்பினை கிடைக்கிறது.  மஹாபாரதத்தில் வரும் திரெளபதி அவமானப்படுத்தப்படும் போது அவளைக் காக்க கிருஷ்ணன் வருகிறார். ஆணின் வீரம் மட்டுமே விதந்தோதப்படும் புராணத்தினைப் போல் இல்லாமல் இங்கு திரெளபதி தன்னுடலை எவரும் அவமானப்படுத்த வியலாது என எதிர்த்து நிற்கையில் அவளது விடுதலைக்கு அவளே பொறுப்பாகிறாள். பெண்ணுடல் குறித்த புனிதங்களை மட்டுமே கேட்டுப் பழகியவர்களால் தோப்தியின் தீரமிக்க குரலை சகித்துக் கொள்ள முடியாது.


இந்தக் கதையின் ஓரிடத்தில்

வெளி யுலகத்துப்‌ புத்தகப்படிப்பு, உள்ளுலக ஆர்வம்‌ மட்டுமே உள்ளவர்களை சுட்டுத்‌ தீர்த்துவிட முடியும்‌. அனால்‌ கையையே பேனாவாக பயன்படுத்துவோர்களை அவ்வளவு சுலபமாக தர்த்துக்கட்டி விட முடியாது. அகவே, ஆப்பரேஷன்‌ ஃபாரஸ்ட்‌ முடிவில்லாத ஒன்று.’  

என ஒரு அதிகாரி சொல்வதுபோல் வரும். காட்டை துப்பாக்கிகளின் துணையோடு அணுகிய ராணுவத்தினருக்கு இருந்த அறிவையும் துணிச்சலையும் விட காட்டையே தங்களுக்குத் துணையாக வைத்துக்கொண்டு போராடியவர்களின் வீரம் எத்தகையது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். மரபார்ந்த அறிவென ஒரு சொல் உண்டு. பழங்குடிகளுக்கு இயற்கையைக் குறித்தும் வனங்களைக் குறித்தும்  உள்ள ஞானத்தை வேறு எவரும் எளிதில் கற்றுவிட முடியாது. இந்தக் கதையில் தோப்தி காட்டை அறிந்து வைத்திருப்பதை விவரிக்கும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. முக்கியமாக நக்சல் இயக்கத்தினருக்குள் இருந்த தகவல் பரிமாற்றம் புரிதல் இவையெல்லாமே சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


‘இடுப்பில்‌ சுற்றிய துணியில்‌ சிளிதளவு சோற்றைக்‌ கட்டிக்கொண்டு மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள்‌ தோப்தி, முஸாயி டுடுவின்‌ மனைவி கொஞ்சம்‌ சோறு சமைத்துக்‌ கொடுத்திருந்தாள்‌. நடுநடுவே அவள்‌ இப்படிக்‌ கொடுப்பது வழக்கம்‌. வடித்த சோறு அறியவுடன்‌ அதை அப்படியே இடுப்புத்‌ துணியில்‌ முடிந்து கொண்டு நடப்பாள்‌ தோப்தி. நடந்து கொண்டே விரல்களால்‌ தலைமுடியைக்‌ கோதி பேன்‌ எடுத்து நசுக்கிக்‌ கொண்டிருப்பாள்‌. கொஞ்சம்‌ கெரோசின்‌ மட்டும்‌ கிடைத்தால்‌ தலையில்‌ தேய்த்து இப்பேன்களை அகற்றிவிட முடியும்‌. பிறகு தலையில்‌ சோடா உப்பைத்‌ தேய்த்து அலம்பிவிட முடியும்‌. அனால்‌ (இந்தத்‌ தேவிடியா மகனுக தண்ணி இருக்கிற இடத்துக்குப்‌ போற வழியெல்லாம்‌ பொறி வச்சிருக்கானுக. தண்ணீரில்‌ கெரோசின்‌ வாடையடித்தால்‌ அதை வைத்து மோப்பம்‌ பிடித்துத்‌ தேடிக்‌ கண்டுபிடித்து விடுவானுக!


கெனால்‌ டாக்ஸ்‌ கட்டிட்டு தண்ணி எடுத்துக்கிட்டுப்‌ போ?

”டாக்ஸ்‌ கட்டி தண்ணி எடுத்து என்ன பிரயோசனம்‌.


இதில்தான்‌ ஆரம்பித்தது சண்டை. வறட்சிக்‌ காலத்தில்‌ மனிதனின்‌ பொறுமை சுலபமாக தீப்பற்றிக்‌ கொள்கிறது. கிராமத்துப்‌ பையன்கள்‌ சதீஷ்‌, ஜுகல்‌, அந்தப்‌ பட்டணத்துப்‌ பையன்‌, அவன்‌ .பேரென்ன, ராணாவோ என்னவோ, அவன்‌ எல்லாரும்‌ சேர்ந்தார்கள்‌. “பண்ணைக்காரங்க, மஹாஜன்களை எல்லாம்‌ ஒதைக்கணும்‌. ஒண்ணும்‌ குடுக்க மாட்டான்‌. அவங்கள ஒழிச்சுக்‌ கட்டணும்‌. அது ஒண்ணுதான்‌ வழி.”


இந்த இரண்டு பத்தியில் நமக்கு ஏராளமான செய்திகள் சொல்லப்படுகின்றன. அடிப்படைத் தேவையான தண்ணீரும் இல்லாமல் போகும் போதுதான் எதிர்ப்பைத் தவிர வேறு வழியே இல்லையென பழங்குடிகள் ஒன்று திரள்கிறார்கள். கிணறுகளிலும் குட்டைகளிலும் தண்ணீர் எடுப்பதற்குக் கூட மக்கள் வரி கட்ட வேண்டுமென்பது எத்தனை பெரிய துயரம்.  சமீபத்தில் வெளியான நரிவேட்டை என்னும் மலையாளத் திரைப்படத்தில் பழங்குடிகள் நீரெடுக்கும் குட்டையில் போலிஸ்காரர்கள் நஞ்சு கலக்கும் காட்சியை மனம் பதைத்தது.  ஒவ்வொரு மாநிலக் காவல்துறையும் பழங்குடிகளைத் துன்புறுத்த புதிய புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து பிற மாநில காவல்துறைக்கு பரிசளிப்பார்கள் போல.


இந்தக் கதையின் இறுதிப் பகுதி மகத்தானது.  ஏராளமான மொழிகளிகளில் மொழிபெயர்க்கப்படவும் பல நூறுமுறை நாடகமாக நிகழ்த்திப் பார்க்கவும் காரணமாக அமைந்தது இந்தப் பகுதிதான். ஒரு இலக்கிய படைப்பு அடிப்படையாக வாசிக்கிறவனை சிந்திக்கச் செய்யவும் கேள்வி கேட்கவும் தூண்ட வேண்டும். ஒரு வாசகனின் ரசணை படைப்பை வாசித்து நிறைவுகொள்வதிலோ திருப்திகொள்வதிலோ முடிந்துவிட்டால் அவன் அந்தப் படைப்பிலிருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை.  இத்தனை சிக்கலான அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் கொண்ட ஒரு நிலத்தில் எழுதுவதும் வாசிப்பதும் அரசியல் செயல்பாடு.  ஒரு கதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது நாடகமாக நிகழ்த்தப்படுகிறதென்றால் அதற்கான தேவை இன்னும் இருக்கிறது  அரசியல் சூழல் இன்னும் சீராகவில்லை, தங்களது உரிமைகளை இழந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை என்றுதானே அர்த்தம்.


அதிகாரத்தின் முன்னே கைகட்டிச் செல்வதையும் அவர்களிடம் அடிபட்டு மடிந்துபோவதையும் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த கதைகளுக்கு நடுவில் மஹாஸ்வேதா தேவியின் தோப்தி தனித்துத் தெரிகிறாள். மண்ட்டோவின் முஜைல் கதையின் இறுதிப் பகுதியில் தனது பெண்ணுறுப்பின் மீது வீசப்படும் துணியைத் தூக்கியெறியும் அவள் ‘இதை எடுத்துப் போ உனது மத அடையாளமான இந்தத் துணியால் எனது நிர்வாணத்தை மறைத்து எதுவும் ஆகப்போவதில்லை’ என சொல்வது எப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிடவும் முக்கியமானது தோப்தியின் குரல்.

 

‘இரண்டு கைகளையும்‌ உயர்த்தி, வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தி காட்டின்‌ பக்கம்‌ திருப்பிக்‌ கொள்கிறாள்‌. பிறகு, உடல்‌, உயிர்‌, அவி மூன்றையும்‌ ஒருங்கே இணைத்து தனது சக்தியை எல்லாம்‌ ஒன்று திரட்டி “ஒ-” வென்று ஓலமிடுகிறாள்‌. ஒரு முறை, இரண்டு முறை, மூன்றாம்‌ ஓலம்‌ வெடித்தெழுந்தபோது ஜாட்கானி காட்டின்‌ விளிம்புகளிலிருந்த மரங்களில்‌ வசிக்கும்‌ பறவைகள்‌ உறக்கம்‌ கலைந்து சிறகடித்துக்கொண்டு பறக்கின்றன. ஓலத்தின்‌ எதிரொலி வெகுதூரம்‌ செல்கிறது.


திரெளபதியின்‌ கரிய உடல்‌ மேலும்‌ அருகில்‌ வருகிறது. அதிகாரிக்குப்‌ புரியாத அவேசத்துடன்‌ சிரித்துக்‌ குலுங்குகிறாள்‌. சிரிக்கச்‌ சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம்‌ பெருக்‌ கெடுக்கிறது.


அந்த ரத்தத்தை புறங்கையால்‌ துடைத்துக்‌ கொண்டு வானத்தைக்‌ கிழிக்கும்‌ பயங்கரக்‌ குரலில்‌ கேட்கிறாள்‌:

“துணி என்ன துணி... யாருக்கு வேணும்‌ துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும்‌. அனா என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால? சீ... நீ ஒரு அம்பிளயா...?”

நாலாபக்கமும்‌ பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின்‌ தூய வெள்ளை புஷ்‌ ஷர்ட்டின்‌ மேல்‌ ரத்தம்‌ கலந்த எச்சிலை :தூ...' என்று துப்புகிறாள்‌.


“நான்‌ பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிள இங்க யாருமில்ல. என்மேல்‌ துணியைப்போட எவனையும்‌ விட மாட்டேன்‌. அப்போ என்ன செய்வே? வா... என்னை கெளன்ட்டர்‌ பண்ணு... வா... கெளன்ட்டர்‌ பண்ணு...”


அருகில்‌ நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும்‌ அதிகாரியின்‌ மேல்‌ உரசுகிறாள்‌. தனது ஆயுளில்‌ முதல்முறையாக ஒரு நிராயதபாணியான டார்கெட்‌ முன்னால்‌ நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார்‌. அது ஒரு அமானுஷ்ய பயம்‌.’


இந்தக் கதையை எப்போது வாசித்தாலும் காடும் தோப்தியும் அழியாததொரு சித்திரமாக நமக்குள் உறைந்துபோகிறார்கள். அவளைக் காட்டின் உருவமாகவே நான் எண்ணுவதுண்டு. இந்தப் பகுதிக்காக முதலில் நான் மஹாஸ்வேதா தேவியின் ’ரவிக்கைக்குப் பின்னால் என்ன இருக்கிறது?’ என்னும் கதை  குறித்து தான் எழுத நினைத்தேன். ரவிக்கைக்குப் பின்னால் என்ன இருக்கிறது கதையில் ஒரு பத்திரிக்கையாளன் பழங்குடிப் பெண்ணின் மார்பைக் கண்டு வியந்துபோய் அதனைப் படமெடுத்துவிடுகிறான். அந்த ஒரு புகைப்படம் அவளது வாழ்வில் எதிர்கொள்ளும் எல்லா வன்முறைகளுக்குமான காரணியாகிவிடுகிறது. இரண்டுமே முக்கியமான கதைகள், இரண்டிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. ஆனால்  திரெளபதி என்கிற பெயர் இந்திய சமூகத்தில் உருவாக்கியிருக்கும் ஆயிரம் ஆயிரமாயிரம் கதைகளில் ஒன்றல்ல இந்த திரெளபதியின் கதை என்பதுதான் இதனைத் தேர்ந்தெடுக்கக் காரணம். வஞ்சிக்கப்பட்ட பழங்குடிப் பெண் தனது உடலையே  எதிர்ப்பின் ஆயுதமாக மாற்றுமிடத்தில்  ’பெண் பிறப்பால் உருவாவதில்லை, சமூகம் தான் அவளை உருவாக்குகிறது.’ என சிமோன் தி புவார் எழுதியதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.

 

 

 

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page