top of page

ஃபனா

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 2 days ago
  • 2 min read

நேற்று பின்னிரவு வேலைகளுக்கு நடுவே  நூருல் ஹஸன் என்பவர் எழுதிய நூர் என்ற  நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நூர் என்ற சொல்லின் மீது எனக்கு என்றென்றைக்குமான ப்ரேமை உண்டு. என் முதல் காதலியின் பெயர். காதலென்று சொல்லுக்கு பொருளே தெரியாத வயதில் வந்ததாலோ என்னவோ அந்த விருப்பம் அழகானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கிறது.

இந்த நூலில் அந்த இளைஞன் தனது வாழ்வில் எவ்வாறு ஓர் இறை அனுபவத்தை அடைந்தேன் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாது. க்கிறார் ஆனால் இறையனுபவத்தை எந்த ஆச்சர்யங்களும் இல்லாமல் சராசரி தருனங்களில் கூட கண்டடையமுடியும் என்பதற்கு உதாரணமாக சில இடங்களைத் தொட்டிருந்தார்.  


தற்செயலாக ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கும் ஒரு புத்தகத்தின் வழியாக தனது ஊரைச் சேர்ந்த சூஃபி ஞானியை அறிந்துகொள்ளும் இடம், கல்லூரியில் நடக்கும் விபத்தில் நண்பர்கள் மூன்று பேர் இறப்பிற்குப் பின்னால் வாழ்வின் மீதான கேள்விகள் வரும் இடம் என சில பகுதிகளை சிறப்பாக எழுதியிருக்கிறார். மனிதன் தனது அன்றாட வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் தன்னைக் கடந்து இன்னொரு இருப்பை உணர்வது எப்படி நிகழ்கிறது என்பதே அது. இறை அனுபவம் என்பது எப்போதும்  அற்புதமாகவோ, திடீர் வெளிப்பாடாகவோ  நிகழ்வதில்லை. சில நேரங்களில் அது மிகச் சாதாரணமான ஒரு தருணத்தில், நாம் நம்மையே மறந்துவிடும் கணத்தில் வருகிறது.  


இந்த நூலை வாசித்துக்கொண்டிருந்த போது நான் ரூஹ் எழுதிய நட்களையும் கடந்த வருடம் பார்க்க நேர்ந்த Bab’Aziz: The Prince That Contemplated His Soul  என்ற திரைப்படமும்  நினைவுக்கு வந்தது. சூஃபியிசத்தைப்  பற்றி நேரடியாகப் பேசாமல், ஒரு வயதான தர்வேஷும் அவருடைய பேத்தியும் பாலைவனத்தில் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக அந்தத் திரைப்படம் இறை அனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதுகூட தெளிவாகத் தெரியாது. ஆனால்  தொடர்ந்து நடக்கிறார்கள். அந்த நடைதான் சூஃபி ஆன்மீகத்தின் மிக அழகான உருவகம் என்று எனக்குத் தோன்றுகிறது. இறைவனைத் தேடிச் செல்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் பயணத்தில்  நாம் தேடுவது இறைவன் எங்கே இருக்கிறார் என்பதல்ல; நம்முடைய “நான்” எங்கே போய்விட்டது என்பதுதான்.



சூஃபித்துவத்தில்  ‘ஃபனா’ என்று ஒரு சொல் இருக்கிறது. தன்முனைப்பு கரைந்து போதல். “நான்” என்ற அகங்காரம் தன்னுடைய மையத்தை இழத்தல். அதன் பிறகு வரும் ‘பகா’ என்பது உலகத்தை விட்டு விலகுவது அல்ல; அந்த “நான்” கரைந்த பிறகும் உலகத்திற்குள் தொடர்ந்து வாழ்வது. இதை ஒரு தத்துவமாக வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்விலும்,  கலைப்படைப்பின் உருவாக்கத்திலும் அது எவ்வாறு நிகழ்கிறது என்பதே  சுவாரஸ்யமானது.

ரூஹ் எழுதப்பட்ட காலத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் அப்படியொரு தேடலுக்குள் இருந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது.  சூஃபித்துவத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற  முன்முடிவுகளோடு அதனை எழுதத் துவங்கவில்லை. ஒரு மனிதனுடைய தனிமை, அவனுடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையிலான பிரிவு, அவன் காண முடியாத ஏதோ ஒன்றை நோக்கி நகரும் ஏக்கம் ஆகியவற்றைத்தான் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால்  கதை என்னிடமிருந்து விலகி வேறு ஓர் இடத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எழுத்தாளன் கதையை எழுதுவதில்லை; கதைதான் எழுத்தாளனை எழுதுகிறது என்று சொல்லக்கூடிய நிலை வந்தது.


அதனால்தான் ‘ரூஹ்’ என்ற சொல் எனக்கு வெறும் ‘ஆன்மா’ என்ற பொருளில் மட்டும் இல்லை. மனிதனுடைய வெளிப்புற வாழ்க்கையைத் தாண்டி அவனுக்குள் இருக்கும் அந்த அறியப்படாத பகுதியின் பெயராக  இருந்தது. மனிதன் தனது ஆசைகள், பயங்கள், காதல், துயரம், உடல், அரசியல், நினைவுகள் இவற்றையெல்லாம் கடந்து இன்னும் என்னவாக இருக்கிறான் என்ற கேள்வி அதன் மையத்தில் இருந்தது.


எழுத்துக்கும் சூஃபி அனுபவத்துக்கும் இங்கே ஒரு விசித்திரமான ஒற்றுமை இருக்கிறது. எழுதும்போது “நான் எழுதுகிறேன்” என்ற உணர்வு அதிகமாக இருக்கும் வரை எழுத்து நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால்  அந்தக் கட்டுப்பாடு விலகும் தருணத்தில் கதை தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. ஒரு காட்சி நம்மால் உருவாக்கப்பட்டது போல இல்லாமல், ஏற்கெனவே எங்கோ இருந்ததை நாம் கண்டுபிடித்தது போலத் தோன்றுகிறது. அந்தத் தருணத்தில் எழுத்தாளனுடைய “நான்” கொஞ்சம் பின்னால் செல்கிறது. அந்த இடத்தில் தான் உண்மையான எழுத்து பிறக்கிறது என்று நான் நினைக்கிறேன்.


அதனால்தான் நேற்றிரவு வாசித்த அந்த  நூல் என்னை ரூஹ் எழுதப்பட்ட காலத்திற்குக் கொண்டு சென்றது. இறை அனுபவத்தை நாம் எப்போதும் பெரிய ஆன்மீகச் சம்பவங்களில்தான் தேடுகிறோம். ஆனால் சூஃபித்துவம் சொல்லும் உண்மை இன்னும் எளிமையானது. இறைவனை அடைவதல்ல; இறைவனைத் தேடிச் செல்லும் பாதையில் “நான்” என்ற உணர்வு மெதுவாகக் கரைந்து போவது. அந்தக் கரைதலுக்குப் பிறகு உலகத்திற்குள் மீண்டும் திரும்பி வாழ்வது.


ஒருவேளை ரூஹ் எழுதப்பட்ட அனுபவமும் அப்படித்தான். நான் ஒரு கதையை எழுதச் சென்றேன். ஆனால் அந்தக் கதையின் வழியாக என்னுள் இருந்த ஒரு கேள்வியைத் தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைக்க வேண்டியதுமில்லை. சில கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிட்டால் அவை முடிந்துவிடுகின்றன. சில கேள்விகள் நம்மை தொடர்ந்து நடக்க வைக்கின்றன. சூஃபியின் பயணமும்,  எழுத்தாளனின் பயணமும், அப்படிப்பட்ட ஒரு முடிவற்ற நடையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page