மேடைக்கு வந்த காகங்கள் - OMNIA
- லக்ஷ்மி சரவணகுமார்

- 1 day ago
- 4 min read

இசையின் எந்த அடிப்படைகளும் தெரியாத தற்குறி நான். ஆனால் ரசனையின் பெயரில் நிறையக் கேட்பதுண்டு. நண்பர்கள் பரிந்துரைப்பதன் வழியாகக் கேட்பது பின் அந்த இசைக்குழுவின் விருப்பமானவர்கள் யாரெனத் தேடிப்பிடித்து அவர்கள் சொல்கிற குழுவையும் கேட்பது. இப்படித்தான் எனக்கு விருப்பமான ஒரு சிறிய வரிசையை வைத்திருக்கிறேன். 2012 ம் வருடம் அப்படி தற்செயலாக கேட்டுப் பிடித்துப்போன இசைக்குழுதான் OMNIA. எனது பழைய முகநூல் கணக்கில் அந்தக் குழுவின் பாடல்களைக் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். நான் எழுதிய பதிவுகளின் வழியாக உந்தப்பட்ட நண்பர் வளன் அந்த இசைக்குழுவைக் குறித்து ஒரு இணைய இதழில் கட்டுரை எழுதி இருக்கிறார்.
Omnia-வின் PaganFolk ஆல்பத்தை முதன்முதலாகக் கேட்டபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது, நான் முதல்முறையாகக் கேட்பதுபோல் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக எனது நினைவுகளுக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. மனிதன் இன்னும் இயற்கையிலிருந்து பிரிக்கப்படாத ஒரு காலத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் அருகே உட்கார்ந்திருப்பது போல உணர்வை அந்த ஆல்பம் கொடுத்தது. நம் நினைவில் ஒரு காடும் குகையும் இருக்குமில்லையா? அந்தக் காட்டையும் அதன் இருளையும் நாம் உணரமுடியும். மது அருந்திய காலத்தில் நான் அடிக்கடி கேட்கும் மிகச் சில ஆல்பங்களில் இதுவும் ஒன்று.
Omnia-வைப் பற்றிக் குறிப்பிட 'folk music' என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இல்லை என்று தோன்றுகிறது. அவர்கள் வாசிப்பது பழைய ஐரோப்பிய இசை மரபுகளின் ஒலிகளை மட்டும் அல்ல. மனிதன் இயற்கையோடு கொண்டிருந்த மிகப் பழைய உறவின் நினைவுகளை தேடுகிறார்கள். Celtic இசை, medieval இசை, pagan மரபுகள், பல்வேறு நாட்டுப்புற இசைக்கருவிகள், சடங்குகளின் rhythm — இவை எல்லாமே அலங்காரங்களாக இல்லாமல் அவற்றின் வழியாக பழைய மனிதனை மீண்டும் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அதனால்தான் PaganFolk எனக்கு இவ்வளவு முக்கியமான ஆல்பமாக இருக்கிறது.
நாம் அந்த ஆல்பத்தைக் கேட்கும்போது இசையை மட்டும் இல்லாமல் காற்றையும் கேட்கிறோம், மரங்களின் உரசலையும் , தொலைவில் இசைக்கப்படும் பறையின் ஒலியையும் கேட்கிறோம். ஒரு கிராமத்தின் எல்லைக்கு வெளியே, இரவு நேரத்தில் நடைபெறும் ஒரு சடங்கின் அழைப்பைப் போல சில பாடல்கள் இருக்கும். அந்த இசையில் நாகரிகம் உருவாகிவிட்டதற்குப் பின் மனிதன் இழந்துவிட்ட ஏதோ ஒன்று இருக்கிறது.கேட்கிறோ எழுத்தாளனாக என்னை ஈர்ப்பது அந்த 'இழந்துபோன ஒன்றுதான். ஒரு கதையை எழுதும்போது நான் பெரும்பாலும் மனிதனுக்குள் உயிரோடு இருக்கும் பழைய இருளைத்தான் தேடுகிறேன். அவனுடைய பயம், காமம், வன்முறை, குற்ற உணர்வு, மரணம், இயற்கையின்மீது அவனுக்கிருக்கும் அச்சம் — இவை எல்லாமே நவீன மனிதனின் உடலுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் பழைய மனிதனின் தடங்கள். Omnia அந்தப் பழைய மனிதனை எனக்கு இசையின் வழியாக நினைவூட்டுகிறது.
அதனால்தான் PaganFolk எனக்கு வெறும் 'பிடித்த ஆல்பம்' அல்ல. அது ஒரு மனநிலைக்கு அழைத்துச் செல்லும் கதவு. அந்தக் கதவு திறந்தவுடன் இன்னொரு உலகம் வருகிறது. அங்கேதான் Edgar Allan Poe-வின் The Raven எனக்கு நினைவுக்கு வருகிறது. “The Raven” ஒரு பறவையைப் பற்றிய கவிதை என்பதல்ல. ஒரு மனிதனின் மனதுக்குள் மரணம் எப்படி ஒரு உருவமாக நுழைகிறது என்பதை பேசக்கூடியது. அந்தப் பாடல் துவங்கும் முன்பு , இரவின் நடுவில் கதவைத் தட்டும் ஒரு ஒலி. பின்னர் அறைக்குள் வரும் ஒரு காகம். அது பேசுவது ஒரே ஒரு வார்த்தை — Nevermore.
அந்த ஒரு வார்த்தை படிப்படியாக அந்த மனிதனுடைய முழு மனதையும் ஆக்கிரமிக்கிறது. ஆரம்பத்தில் அது ஒரு விசித்திரமான சம்பவம். பின்னர் அது ஒரு நினைவின் அடையாளமாகிறது. அதன் பிறகு அது இழந்த காதலின் குரலாகிறது. இறுதியில் அவனுடைய சொந்த மனத்தின் தீர்ப்பாக மாறுகிறது. Poe ஒரு supernatural கதையை எழுதவில்லை. மனித மனமே supernatural ஆக மாறும் தருணத்தை எழுதுகிறார்.
என் கதைகளிலும் நான் அடிக்கடி தேடுவது இதைத்தான். ஒரு சம்பவம் வெளியில் நடக்கிறது. ஆனால் அதன் உண்மையான கதை மனிதனுடைய உள்ளே நடக்கிறது. ஒரு காடு, ஒரு விலங்கு, ஒரு வீடு, ஒரு சாலை, ஒரு பெண், ஒரு இறந்த மனிதன் — இவை எதுவும் வெறும் கதாபாத்திரங்களாக இருக்க வேண்டியதில்லை. அவை மனிதனுக்குள்ளே இருக்கும் ஏதோ ஒன்றாக இருக்கலாம் அந்த வகையில் The Raven மிகவும் நெருக்கமான ஒரு படைப்பு.
அதே இருளை இன்னொரு மிகப்பெரிய வடிவத்தில் Shakespeare-ன் Macbeth-ல் பார்க்கிறேன்.
பல வருடங்களுக்குமுன் மேக்பத் எழுதப்பட்ட இரண்டு நூற்றாண்டுகளைக் கொண்டாடும் விதமாக என நினைக்கிறேன். யதார்த்தா ராஜன் மேக்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டத் திரைப்படங்களை திரையிட்டார். குரோஷோவாவின் த்ரோன் ஆஃப் ப்ளட், ரோமன் பொலன்ஸ்கியின் மேக்பத், ஆர்ஸன் வெல்ஸின் மேக்பத். என் வாழ்வில் மிக முக்கியமான தினங்களில் அதுவும் ஒன்று. எனக்கு இருபது வயதிருக்கலாம், மேக்பத்தை அப்போது படித்ததில்லை. ஆனால் அந்த மூன்று திரைப்படங்களும் என்னை உலுக்கிப்போட்டது. அந்தத் திரைப்படங்களை வெவ்வேறு தருணங்களில் திரும்பப் பார்க்கிறேன். மேக்பத்தையும் படிக்கிறேன்.
Macbeth ஒரு அரசியல் நாடகமாக மட்டும் ஒருபோதும் தோன்றியதில்லை. அதிகாரத்திற்கான ஆசை மனிதனுக்குள் எப்படி விஷமாக வளர்கிறது ன்பதுதான் அந்த நாடகத்தின் மையம் என்று நான் நினைக்கிறேன். ரெண்டாம் ஆட்டத்தில் ஜெகதியின் கதாப்பாத்திரம் லேடி மேக்பத்தின் நேரடியான பாதிப்பில் உருவானதுதான். இந்த இசைக்குழு மேக்பத்தையும் ஒரு பாடலாக உருவாக்கி இருக்கிறார்கள்.
முதலில் ஒரு prophecy வருகிறது. பிறகு ஆசை வருகிறது. அந்த ஆசைக்கு மனைவியின் தூண்டுதல் சேர்கிறது. கொலை நடக்கிறது. அதன் பிறகு அதிகாரம் கிடைக்கிறது. ஆனால் அந்த அதிகாரத்தோடு அமைதி வருவதில்லை. மாறாக, கொன்றவர்களின் நிழல்கள் அவனைத் தொடர்ந்து வருகின்றன. Macbeth ஒரு கட்டத்தில் கொலை செய்வதைவிட மோசமான நிலைக்கு செல்கிறான், அவன் கொலை செய்யக்கூடிய மனிதனாக தன்னை ஏற்றுக்கொள்கிறான். மனிதர்கள் ஒரே நாளில் தீயவர்களாக மாறுவதில்லை. சிறிய சமரசங்கள், சிறிய பொய்கள், சிறிய வன்முறைகள், ஒரு சிறிய அதிகார ஆசை — இவை சேர்ந்து அவனுடைய உள்ளே இன்னொரு மனிதனை உருவாக்குகின்றன. ஒருநாள் அந்த மனிதன் அவனையே ஆளத் தொடங்குகிறான். ( இப்பொழுது இங்கு நீங்கள் நான் இயக்கிய லிங்கத்தையும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். )
Poe-வின் The Raven, Shakespeare-ன் Macbeth, Omnia-வின் PaganFolk — முதல் பார்வையில் இவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போலத் தோன்றலாம். ஒன்று கவிதை. ஒன்று நாடகம். இன்னொன்று இசை ஆல்பம். ஆனால் எனக்கு இவை மூன்றும் ஒரே இருண்ட நிலப்பரப்பில் நிற்கின்றன. அந்த நிலப்பரப்பில் மனிதன் இருக்கிறான். அவனைச் சுற்றி இருள் இருக்கிறது. அவன் கடந்த காலம் இருக்கிறது. இயற்கை இருக்கிறது. மரணம் இருக்கிறது. அவனுக்குள் அவனுக்கே தெரியாத இன்னொரு மனிதன் இருக்கிறான். Omnia அந்த உலகத்தை இசையின் வழியாகத் திறக்கிறது. Poe அந்த உலகத்தை ஒரு பறவையின் வழியாகத் திறக்கிறார். Shakespeare அந்த உலகத்தை அதிகாரத்தின் வழியாகத் திறக்கிறார். மூவரும் சொல்லும் விஷயம் ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்: மனிதன் தன்னிடமிருந்து தப்ப முடியாது.
PaganFolk கேட்கும்போது நான் நாகரிகத்திற்கு முன்பிருந்த மனிதனை நினைக்கிறேன். The Raven படிக்கும்போது மனிதனுடைய மனதுக்குள் உருவாகும் இருளை நினைக்கிறேன். Macbeth பார்க்கும்போது அந்த இருள் அதிகாரத்தோடு சேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறேன். இந்த மூன்றும் சேர்ந்து எனக்கு ஒரு எழுத்தாளனாக மிகவும் தேவையான ஒரு நினைவூட்டலைத் தருகின்றன. மனிதனை எழுத வேண்டுமெனில் அவன் வாழும் வீட்டை மட்டும் எழுதக்கூடாது. அவன் உள்ளே இன்னும் உயிரோடு இருக்கும் காடையும் எழுத வேண்டும்.
நாகரிகம் மனிதனுடைய உடலை மாற்றியிருக்கலாம். அவன் வீடுகளை மாற்றியிருக்கலாம். அவன் மொழியை மாற்றியிருக்கலாம். கடவுள்களைக்கூட மாற்றியிருக்கலாம். ஆனால் அவனுக்குள் இருக்கும் பழைய இருள் இன்னும் மாறவில்லை. இருளில் தான் கதைகள் பிறக்கின்றன. சில இரவுகளில் நான் கேட்கிறேன்.
அந்த ஆல்பம் தொடங்கும்போது அறை அப்படியேதான் இருக்கிறது. மேசை, நாற்காலி, புத்தகங்கள், சுவர், ஜன்னல் என எதுவும் மாறுவதில்லை. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அவை எல்லாம் மறைந்துவிடுகின்றன. நான் ஒரு காட்டின் விளிம்பில் நிற்கிறேன். எங்கோ தொலைவில் ஒரு பறை ஒலிக்கிறது. மரத்தின் கிளையில் ஒரு காகம் உட்கார்ந்திருக்கிறது.
அதற்கு அப்பால், இருளுக்குள், Macbeth தனியாக நடந்து செல்கிறான்.
அப்போது எனக்குத் தோன்றுகிறது — எழுத்து என்பது ஒருவேளை இதுதான்.
நாம் மறந்துவிட்ட உலகங்களுக்குள் மீண்டும் சென்று, அங்கே நம்முடைய சொந்த முகத்தைத் தேடுவது.
ஆல்பத்திணைக் கேட்பதற்கான இணைப்பு கீழே.



