இயக்குனர் ஷங்கருடன் ஒரு உரையாடல்.
- லக்ஷ்மி சரவணகுமார்

- 7 days ago
- 8 min read

1. 2.0 படத்திற்கான கரு எங்கிருந்து, எப்போது உருவானது?
ஒவ்வொரு படத்தின் கதைக்குமான ஆரம்பப்புள்ளி எனக்கு சுவாரஸ்யமானது. நாம் தேடிக் கொண்டிருப்பது நம்மைத் தேடிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்களே அப்படித்தான் பல சமயங்களில் கதைகளும் உருவாகின்றன. ஐ படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளின்போது சிலக் காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி மறைந்த வண்ணமிருந்தன. நெடுஞ்சாலை முழுக்க செல்ஃபோன்கள் ஒரு ஆற்றைப் போல் ஓடும் காட்சி முதலில் மனதில் உதித்தது. அதைத் தொடர்ந்து ஒரு நீச்சல்குளத்தில் அதன் சுவர் முழுக்கவும், நீருக்கடியிலும் முழுக்க செல்ஃபோன்கள் ஆக்ரமித்திருக்க அவை ஒரே நேரத்தில் ஒளிர்கின்றன. நீச்சல்குளத்தில் குதிக்கும் ஒருவன் நீந்த ஒளிர்ந்து கொண்டிருக்கும் செல்ஃபோன்கள் அவனை சடாரென வளைத்துப் பிடிக்கின்றன என்று காட்சி தோன்றியது. செல்ஃபோன்கள் கூட்டமாகச் சேர்ந்து மனிதர்களைக் கொல்லும் இந்தக் காட்சிகளைக் குறித்து யோசித்தபோதுதான் ஸ்வார்ம் இண்டலிஜென்ஸ் என்கிற விஷயத்தோடு இவை ஒத்துப்போவது புரிந்தது. கொலைப்பேசி என்ற பெயரில்தான் முதலில் அந்தக் கதை வளர்ந்தது. ஸ்வார்ம் இண்டலிஜன்ஸை மையமாகக் கொண்டு செல்ஃபோன்கள் ஒரு பெரும் சக்தியாக எழுகிறதென்றால் அதனை அழிக்க அதேபோலொரு ஸ்வார்ம் இண்டலிஜன்ஸ் தேவையென்பது புரிந்தது. செல்ஃபோன்களைப் போலவே கூட்டமாகச் சேர்ந்து ஒரு பெரும் சக்தியாக மாறக்கூடிய அம்சமாய் ரோபோக்கள் தெரிந்தன. இந்த இரண்டு அசாத்தியமான சக்திகளையும் இணைக்கும் புள்ளிகளை ஒருங்கிணைத்தபோது 2.0 விற்கான கதை உருவாகத் துவங்கியது. செல்ஃபோன்கள் ஒரு எதிர்சக்தியாக மாறுவதற்கான காரணங்களை விவாதித்தபோது சிட்டுக்குருவிகள் பெருமளவில் கதிர்வீச்சால் அழிந்துபோன செய்திகளை வாசித்ததெல்லாம் நினைவிற்கு வந்தன. கதையை உருவாக்க இரண்டு புள்ளிகளாக செல்ஃபோன்களும் ரோபோக்களுமிருக்க ஆன்மாவாக அழிந்து கொண்டிருக்கும் பறவைகளை நேசிக்கும் ஒருவன் கிடைத்தான்.
இவ்விடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட மார்வெல் படங்களின் வளர்ச்சியையும் நான் கவனித்து வந்திருக்கிறேன். இதற்கு முந்தைய சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கிருந்த வரவேற்பை விடவும் அதிகமான வரவேற்பு இந்தப் படங்களுக்கு உருவாகியுள்ளது. மார்வெல் படங்களுக்கு உலகம் முழுக்க பெரும் ரசிகப்பட்டாளம் உருவாகியிருப்பதோடு நம் ஊரிலும் மக்கள் குடும்பத்தோடு ரசிக்கின்றனர். போஸ்டர்கள், பொம்மைகளென எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்துவிட்ட மார்வெல் ஹீரோக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர்களாய் மாறியிருக்கிறார்கள். அதிலும் இந்தப் படங்கள் 3 டியில் உருவாகும்போது முற்றிலும் புதுமையான காட்சியனுபவங்களைத் தருகிறது. நம் ஊர்க் கதைகளை நம் நாயகர்களை சூப்பர் ஹீரோக்களாக்கி மார்வல் சீரிஸுக்கு இணையான ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினேன். இதனாலேயேதான் கதையை யோசிக்கும்போதே முற்றிலும் புதிய காட்சியனுபவத்தையும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு திரைப்படமாக இதை யோசித்தேன். காட்சியனுபவத்தோடு படத்தின் ஒலியமைப்பும் தனித்துவமாய் இருக்க வேண்டுமென தீர்மானித்துவிட்டதால் 4டி எஸ்.ஆர்.எல் என்ற ஒலியமைப்பு உருவானது.
2. 2.0 லைக்காவின் தயாரிப்பில் உருவாக நேர்ந்த பயணத்தைக் குறிப்பிடுங்கள்.
ஐ படத்தின் உருவாக்கத்தின் போது லைகா நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கித் தரச்சொல்லிக் கேட்டிருந்தனர். முதலில் ரஜினிகாந்தை வைத்து ஈரோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப்படம் உருவாவதாக இருந்தது. பட்ஜெட் மற்றும் கால அளவு உட்பட சில பிரச்சனைகளால் அவர்களோடு இணைந்து செயல்பட முடியவில்லை. அப்போது இருந்த ரஜினி ஸாரின் உடல்நிலைக்கு 2.0 ரோபாட்டாக நடிக்க மிகவும் சிரமமாக இருக்குமென்பதால் அந்தத் திரைப்படத்தை பாலிவுட்டில் ஆமீர்கானை வைத்து உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து ஒரு வருடம் பயணித்து சில காரணங்களால் அதனையும் கைவிடநேர்ந்தது. இதனிடையில் ரஜினி ஸார் லிங்காவில் நடித்திருந்ததால் அவர் 20 வில் நடிக்க முடுயும் நான் தயார் என்றார். இதேவேளையில் லைகா நிறுவனத்தினர் மறுபடியும் ஒரு திரைப்படம் இயக்க என்னோடு பேச்சுவார்த்தை நடத்தியபொதுதான் லண்டன் சென்று தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு முழு கதையையும் சொல்லிவிட்டு வந்தேன். புதிய முயற்சிகளை கையில் எடுக்கும்போது அதிலிருக்கும் சவால்களை தயாரிப்பாளர் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தேன்.
3. பக்ஷிராஜன் கதாப்பாத்திரம் எவ்வாறு உருவானது?
ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவிகள் தினம் வருகையில் செல்ஃபோன்களின் பயன்பாட்டினால் சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதை செய்திகளாக வாசித்துக் கடக்கிறோம். இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறதோவென சமீபத்திய வருடங்களில் நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சூழலியல் சீர்கேடு குறித்து உலகம் தாமதமாக விழித்துக் கொண்டிருப்பதோடு இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எல்லா நாட்டு அரசாங்கங்களும் வலியுறுத்துக் கொண்டிருக்கின்றன. உலகம் மனிதர்களுக்கு மட்டுமேயானதல்ல என்ற வலுவான கருத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டுமென முடிவுசெய்தேன். இயற்கையின் சுழற்சியில் பறவைகளின் பங்களிப்பைக் குறித்து வாசித்துத் தெரிந்துகொண்டபோது மலைப்பாக இருந்தது.
பால்யத்தில் நான் வளர்ந்த தி நகர் ஒரு ஒட்டுக்குடித்தன நாட்களின் நினைவுகள் இப்போதும் பசுமையாய் இருக்கின்றன. குட்டி குட்டியாய் இருக்கும் வீடுகள், அந்த வீடுகளுக்கிடையிலிருக்கும் சின்ன இடத்தில் என் அம்மா அவரைக்கொடி, மல்லிகைப்பந்தல், பொன்னாங்கன்னி கீரை. நெல்லிக்காய் மரம் இவற்றையெல்லாம் வைத்து பராமரித்து வந்தார். பசுமை இருக்குமிடங்களில் பறவைகளும் இருக்கும். அதிகாலையில் அங்கு குருவிகளின் கீச்சொலிகளைக் கேட்டுதான் வளர்ந்தேன். குருவிகள் ஜன்னல் வழியே நுழைந்து மின்விசிறைஅ=யைச் சுற்றுவதும் அதில் கூடுகட்டுவதும் குருவி சத்தம் கேட்டு போர்வை விலக்கிப் பாத்திருக்கிறேன். அதைத்தான் சிறுவயது பக்ஷிராஜன் காட்சியாக படத்தில் வைத்திருந்தேன். கீச்சொலிகள் கேட்டு விடிந்த அதிகாலைகள் எல்லாம் இப்போது ஆசிர்வதிக்கப்பட்டவை போல் தோன்றுகின்றன. இன்று மனிதர்களின் செவிகளை இரைச்சல்களே ஆக்ரமித்திருக்கின்றன. மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகளென இயற்கையோடு இருந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே துண்டித்துக் கொண்டுவிட்டனர். மனிதர்களின் நுகர்வு வெறியால் மரங்கள் அழிந்து போயிருப்பதோடு அளவுக்கதிகமான செல்ஃபோன்களின் பயன்பாட்டால் குருவிகளும் அழிந்துபோய்விட்டன.
இன்னொரு புறம் கதிர்வீச்சுகளால் தான் குருவிகள் அழிகின்றன என்பது அறிவியல் பூர்வமான உண்மையில்லை என்றொரு கருத்தையும் சிலர் முன்வைத்ததை வாசித்திருந்தேன். அந்த நேரத்தில்தான் இதில் ஆய்வு செய்திருந்த ஒருவரின் பி.ஹெச்.டி ஆய்வறிக்கை கிடைத்தது. தனது ஆய்வில் அவர் கதிரியக்கத்தால் குருவிகள் சாவது உண்மைதான் என்பதை விலாவாரியாக எழுதியிருப்பதோடு அறிவியல் பூர்வமாய் நிரூபிக்க முடியாமல் இருப்பதன் சிக்கல்களையும் குறிப்பிட்டிருந்தார். குருவிகளுக்காகவும் பறவைகளுக்காகவும் வருத்தப்படக்கூடிய முதல் நபர் பறவையியல் ஆய்வாளர்கள்தான். இந்தியாவின் முக்கியமான பறவையியல் ஆய்வாளர் குறித்த தேடலில் சலீம் அலியைத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு அந்த பறவையியல் ஆய்வாளரைச் சுற்றி கதை வளரத் துவங்கியது.
இந்தியன் படத்திற்கான கதை உருவானபோது முதலில் வயதான ஒரு கிழவர் லஞ்சம் வாங்குகிறவர்களை எல்லாம் கொலை செய்கிறார் என்கிற புள்ளியிலிருந்துதான் துவங்கியது. லஞ்சம் வாங்குகிறவர்களின் மீது யாருக்கு அதிகமான கோவம் வரக்கூடுமென கேள்விக்கு விடைதேடியபோது, இந்த தேசத்திற்காக போராடினார்களோ அவர்களுக்குத்தான் இருக்குமென்ற அடுத்த புள்ளி கிடைத்தது. இப்படி ஒரு கேள்விக்கான பதிலைக் கண்டடைந்து அந்தப் பதிலிலிருந்து இன்னொரு கேள்வியை உருவாக்கி தொடர்ந்து பயணித்த பிறகுதான் இந்தியன் தாத்தா உருவானார். 2.0 வில் பக்ஷிராஜன் பரிணமித்ததும் இப்படியாகத்தான். உருவானதும் இப்படியாகத்தான். இந்தக் கதையில் பக்ஷிராஜனின் பிறப்பே தனித்துவமானது, பிறந்து சில நிமிடங்களில் இறந்துவிடும் குழந்தையின் இதயத்தில் ஜன்னல் வழியாய் பறவையொன்று தன் அலகால் தட்டி எழுப்பி அவனுக்கு உயிர் கொடுக்கும். இதனாலேயே சிறுவயது முதல் அவன் பறவைகளோடு நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பான். பறவையியல் ஆய்வாளனாகவும் மாறுவான். பறவையியல் ஆய்வாளன் இறந்த பிறகு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடிய சூப்பர் பவராக மாறுகிறான்.
4 . பக்ஷிராஜனை எதிர்க்க சிட்டி ரோபோ எவ்வாறு கதைக்குள் வந்தது? அடிப்படையில் பக்ஷிராஜனும் ஒரு நாயகன், அவரை முன்னிலைப்படுத்தி மட்டுமே ஒரு திரைப்படம் எடுத்திருக்க முடியும். பக்ஷிராஜனின் செயல்களில் அதற்கான நியாயங்களும் மிகுந்திருக்கின்றன. இதனால் அவரை அழிக்க வரும் சிட்டி ரோபாவிற்கு அதைவிடவும் கூடுதலான நியாயங்களை உருவாக்க வேண்டும். இந்த முரண்பாட்டை எவ்வாறு திரைக்கதையாக்கினீர்கள்?
பெரும்பாலான திரைப்படங்கள் Black is black , white is white என்றுதான் கதாப்பாத்திரங்களை அணுகுகின்றன. பக்ஷிராஜனை நான் உருவாக்கியபோது Why not grey? என்றொரு கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஒரு தனித்துவமான கதாப்பாத்திரம்தான் தனித்துவமான கதை உருவாக அடிப்படை. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமேயல்ல என்று சொல்கிறவனுக்கு இந்த க்ரே தன்மை பொருத்தமானதாகத் தோன்றியது. கிறிஸ்டோஃபர் நோலனின் படங்களில் பிரதான கதாப்பாத்திரங்களுக்கு ஒரு க்ரே தன்மை இருப்பதை நாம் பார்த்திருக்கிறொம். டார்க் நைட் படத்தில் ஜோக்கர் கொடூரமான வில்லன் என்றாலும் அவன் தன்னளவில் சரியான நியாயங்களைக் கொண்டிருக்கிறான். அவனது அணுகுறைதான் மனித குலத்தை அழிக்கக் கூடியதாய் இருக்கின்றன.
வழக்கமான எதிர்க்கதாப்பாத்திரங்களில் இருந்து ஜோக்கர் தனித்துத் தெரியக் காரணம் இந்த க்ரே ஷேடோதான். 2.0 வில் பக்ஷிராஜன் உயிரோடு இருக்கும் காலத்தில் அமைதியான வழியில்தான் போராடுகிறார். அதனால் எந்தப் பயனும் இல்லாமல் போகும்போது வெறுப்பு கோவம் எல்லாம் சேர்ந்துதான் இறப்பிற்குப்பின் ஓர் அசுர சக்தியாக அவரை மாற்றுகிறது. இந்தப் படத்தில் பெரும்பாலான இடங்களில் பார்வையாளர்களுக்கு பக்ஷிராஜன் பக்கமாகவே நிற்கத் தோன்றும். இயற்கையின் மீதான அவரது காதல், மனித வாழ்வில் பறவைகளுக்கும் பங்குண்டு என்கிற அக்கறை என எல்லா விதத்திலும் பக்ஷிராஜன் பார்வையாளர்களுக்கானவர். ஆனால் அவரது கோவமும் அதன் விளைவாக அவர் செய்யும் அசுரத்தனமான செயல்களும் தான் அவரை அழிக்க காரணமாகின்றன. நல்ல மனிதர்களுக்குள்ளிருக்கும் தீமை என்கிற முரண் தான் இந்தக் கதையை எழுத என்னைத் தூண்டியபடியே இருந்தது. இறுதிக் காட்சியில் வசீகரன் குறிப்பிடுவதுபோல் ‘பக்ஷிராஜன் சொன்ன அத்தனை விஷயங்களும் சரியானவையே, ஆனால் அதைச் சொல்ல அவர் இறந்தபின்பு தேர்ந்தமுறைதான் விதம்தான் தவறானது.’ நன்மைக்குள்ளிருக்கும் தீமை தீமைக்குள்ளிருக்கும் நன்மை என்றொரு கருத்தாக்கம் உண்டு. எல்லா நன்மைக்குள்ளும் சின்னதொரு தீமையும் எல்லா தீமைக்குள்ளும் சின்னதொரு நன்மையும் சேர்ந்தே இருக்கின்றன. பக்ஷிராஜன் நன்மைக்குள் ஒளிந்திருக்கும் தீமையின் வடிவம்.
பக்ஷிராஜனின் கதை மட்டுமே ஒரு திரைப்படத்திற்கான முழுமையான கதையாக எனக்கு திரண்டுவரவில்லை. ஆனால் ஸ்வார்ம் இண்டலிஜன்ஸ் என்கிற கான்செப்ட் வந்தபோது சிட்டி ரோபோ இந்தக் கதைக்குள் வந்தது. கதையாக உருவாகும் போதே பக்ஷிராஜனின் எதிர்நிலையில் சிட்டி ரோபோ இணைந்த போதுதான் முழுமையான கதையாக உணரமுடிந்தது. பக்ஷிராஜன் என்னும் ஒற்றைப் புள்ளியில் இல்லாத நிறைவு ஸ்வார்ம் இண்டலிஜன்ஸ், ஆரா, சிட்டி ரோபோ என வெவ்வேறு புள்ளிகள் இணையும்போது வந்தது. அவ்வளவு பேரைக் கொலை செய்யும் பக்ஷி இறுதியில் 3.0 ஒரு பறவையின் கழுத்தை நெறித்துவிடுவேன் என மிரட்டும்போது சரண்டராகிறார். அந்தக் கதாப்பாத்திரம் அப்படித்தான். இங்கு நன்மை தீமை என்பதைத் தாண்டி சூழல் ஒரு முக்கியமான காரணியாய் அமைகிறது. நாம் ஆசையாக ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறோம், அதற்கு வெறி பிடித்துவிடும் பட்சத்தில் அதனை கொலை செய்யத்தான் நேரிடுகிறது. பக்ஷிராஜனும் அப்படித்தான். அவரது நோக்கத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது, அவர் தனியாக ஜெயித்தாரா இல்லையா என்பதைக் காட்டிலும் அவர் கதாப்பாத்திரத்தின் வழியாக நான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்டேனா என்பதைப் பார்க்கிறேன். என் வேலையை சரியாக செய்திருப்பதாகவே தோன்றுகிறது. இறுதிக் காட்சியில் வசீகரனே பக்ஷியின் கருத்துகளை எடுத்துச் சொல்கிறார். குறைந்தபட்சம் பறவைகளுக்கு கொஞ்சம் நீராவது வைத்தால் மனம் விசாலப்படும் என்கிறார். இங்கு மனிதர்கள் இருக்க வேண்டுமானால் பறவைகளும் இருக்க வேண்டுமென்கிற பக்ஷியின் கருத்து உயிர்ப்போடு இருக்கிறது. கதாப்பாத்திரத்தை அல்ல கருத்தை தொடர்வதே முக்கியமானது. நிஜ வாழ்க்கையிலும் நல்லவர்கள் தோற்பதுதான் யதார்த்தம்.
5. இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் எவ்வாறு உள்ளே வந்தார்?
இயக்குநர் வசந்தபாலன் தான் காரணம். ஜெயமோகன் அறிவியல் புனைகதைகளும் எழுதியிருப்பதாக பாலன் சொல்லித் தெரிந்து கொண்டேன். அதன்பின் ஜெயமோகனைச் சந்தித்து உரையாடும்போது அவருக்கு அறிவியல் குறித்த நல்ல புரிதலிருந்ததைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ப்ளாஃஷ்பேக் காட்சிகளை அவர் எழுதித் தந்தபோது அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடிந்தது. படத்தில் பேசப்படும் ஆரா என்னும் கருத்தாக்கத்தை அவர்தான் என்னிடம் குறிப்பிட்டு இந்தக் கதைக்கு இந்தக் கருத்தாக்கம் பொருத்தமாயிருக்கும் என்று சொன்னார்.
6 . கதையம்சம் என்பதைத் தாண்டி காட்சியனுபவமாக இந்தத் திரைப்படத்தை மாற்றவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எதனால் உருவானது?
காதலன் வெளிவந்தபோது ஜெண்டில்மேனில் இருந்தது போன்ற வலிமையான கதையம்சம் இல்லை என்பதை ஒரு குறையாக எழுதினார்கள். ஒவ்வொருவருக்குமான ரசனை என்பது அனுபவம் மற்றும் புரிதல் சார்ந்தது. திரைப்படங்கள் குறித்த கருத்தாக்கங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. திரைப்படத்திற்கான கதையம்சம் ஒரு பக்கத்திலோ நூறு பக்கத்திலோ ஏன் ஆயிரம் பக்கத்திலோ கூட இருக்கலாம், இயக்குநரின் தேர்வு என்ன என்பதுதான் முக்கியமானது. ஒற்றை வரி செய்தியைக் கூட மிகப்பெரிய திரைப்படமாக மாற்ற முடியும். அந்த ஒற்றைவரிச் செய்தி திரைக்கதையில் என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறதென்பதும் அதனை எவ்வாறு நாம் காட்சிகளாக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியமானது.
உதாரணத்திற்கு ஸ்பீல்பெர்க்கின் டூயல் படத்தை எடுத்துக் கொள்வோம். நெடுஞ்சாலையில் செல்லும் ட்ரக் அதைத் தொடர்ந்து வரும் கார் இந்த இரண்டையும் ஓட்டுகிறவர்களின் ஈகோதான் மொத்த படமும். கதையென்று முன்பின்னாக எதையும் வைத்திருக்க மாட்டார். ஆனால் இந்தப் படம் ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பானதாய் இருக்கும். இன்னொரு புறம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஏராளமான கதைகளைக் கொண்ட பிரம்மாண்டமான நாவல். ஒரு திரைப்படத்திற்கான கதை நமக்கு டூயல் போல் ஒற்றை வரியிலும் இருக்கலாம், அல்லது லார்ட் தி ரிங்ஸ் போல் ஏராளமான கதைகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். இதை எப்படி திரையனுபவமாக மாற்றுகிறோம் என்பதுதான் சுவாரஸ்யம். இது ஒவ்வொரு படத்திற்கும் வேறுபடக்கூடியது.
இந்தியன் ஏராளமான மடிப்புகளைக் கொண்ட பெருங்கதை, ஆனால் ஜீன்ஸில் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னும் ஒற்றைவரிதான் கதை. 2.0 வைப் பொறுத்தவரை இன்னுமே சிறியதாக கதையை அமைக்க யோசித்திருந்தேன். பார்வையாளர்களுமே இரண்டு மணிநெரத்திற்கு படம் பார்க்கக் கூடிய மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மார்வல் படங்களைப் பார்க்கிறபோது இருக்கும் பரபரப்பான அனுபவம் இருக்கவேண்டுமென்பதுதான் என் விருப்பம்.
திரைப்படமென்பது கதை மட்டுமேயல்ல, அதையும் தாண்டி ஏராளாமன விஷயங்களை உள்ளடங்கிய வடிவம். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கதையை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான ஏராளமான வழிகளை முயற்சிக்கிறேன். 2.0 வில் 4டி ஒலிகளின் வழியாகக் கூட கதையின் அனுபவம் கடத்தப்படுகிறது. காட்சிகளில் ஒலிகள் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என யோசித்ததன் விழைவுதான் இந்தப் புதிய ஒலி.
7. சிவாஜி திரைப்படம் துவங்கி ரோபோ வரை உங்களது பல திரைப்படங்கள் 3 டியில் தயாராகிறது என்ற செய்திகள் வந்தபடி இருந்தன. இந்தத் திரைப்படத்தை 3டியில் எடுக்கலாமென எப்போது முடிவு செய்தீர்கள்? ஏன் முடிவு செய்தீர்கள்?
3டி காட்சிகளைத் திரையரங்கில் பார்க்கிறபோது பாவையாளர்கள் காட்சி நடக்கும் வெளியில் தாங்களும் ஒரு அங்கமாய் இருப்பதாகவே உணர்கிறார்கள். இதனாலேயே ஹாலிவுட்டில் சாகசப்படங்கள் அதிகமும் 3டியில் எடுக்கப்படுகின்றன. இந்தக் கதைக்கான முதல் சில காட்சிகள் மனதில் உதித்தபோதே அவற்றை 3டியில் தான் என் மனம் மிக நெருக்கமாய் உணர்ந்தது. நீச்சல் குளத்தில் ஒளிரும் செல்ஃபோன்கள் ஒரு மனிதனைக் கொலை செய்வதும், சாலையில் கூட்டமாய் செல்லும் செல்ஃபோன்கள் ஒரு விசையாக திரண்டு எழுவதும் அபாரமான கற்பனை. செல்ஃபோன்கள் கூட்டமாய் பறக்கின்றன என்னும் மர்மரேஷன் வடிவம் மனதில் உதித்தபோதே 3 டிக்கான தேவை இருப்பதையும் புரிந்து கொண்டேன். ஃபோன்கள் பறக்கின்றன, ஆட்களின் முன்னால் முகத்திற்கு அருகில் வந்து நிற்கின்றன, அதில் உயிர்ப்பெறும் குருவிகளைக் கண்டு எதிரிலிருப்பவன் அலறுகிறான் என காட்சிகள் விரிந்ததால் அங்கு 3டியின் பங்களிப்பு முக்கியமானதாய் மாறிவிட்டது.
எந்திரனின் க்ளைமேக்ஸ் காட்சிகளை மட்டும் 3டியில் காட்ட முடியுமா என முதலில் யோசித்தேன். அதற்காக திட்டமிட்டோம். பழைய திரைப்படங்களில் ஒரு பாதி கலர், ஒரு பாதி ப்ளாக் & வொய்ட் என்று எடுப்பது போல் ஒரு வடிவத்தை உருவாக்கலாமென்பதுதான் ஐடியா. ஆனால் அப்போது போதுமான நேரம் இல்லாததால் அதனைச் செய்ய முடியவில்லை.
8. 2.0 திரைப்படத்தைக் காணும்போது எனக்கு இரண்டு முக்கியமான சந்தேகங்கள் எழுந்தன. ஒன்று பகஷிராஜா கதாப்பாத்திரத்திற்கு அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பத்திரிக்கை செய்திகளில் வாசித்தது. அதன்பிறகு கமல் ஹாசன் இறுதியில் அக்ஷய்குமார் நடித்தார். “பொன்னுலகாளீரோ புவன முழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்” என்ற தமிழ்க் கவிதை வரிகளையும், மரபு சார்ந்த அவரது பற்றையும் பார்த்தபோது இதில் அர்னால் எப்படி பொருந்தியிருப்பார் என்று தோன்றியது?
இப்பொழுதும் 5ஜி அலைவரிசைகளுக்கான சோதனைகள் செய்ததில் சில நாடுகளில் நிறைய பறவைகள் செத்து விழுந்ததை செய்திகளில் வாசிக்கிறோம் . இந்தக் கதையில் உலகம் முழுமைக்கும் பொருந்திப்போகக் கூடிய ஒரு சர்வதேசத்தன்மை உண்டு. இனங்களைக் கடந்து மனித சமூகம் அத்தனைபேருக்குமான ஒரு செய்தியைச் சொல்ல விரும்பியபோது அதை உலகளவில் பிரபலமான ஒருவர் சொல்வது சிறப்பாயிருக்குமெனத் தோன்றியது. அர்னால்ட் உலகம் முழுக்க தெரிந்த ஒரு நடிகர் என்பதோடு சூழலியல் தொட்ர்பான நிறைய பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார். பாண்டிச்சேரியில் ஆரோவில் மாதிரியான இடத்தில் தங்கியிருக்கும் ஒரு ஐரோப்பியர் வெர்னர் ஃபாஸர் என்று பெயர் வைத்திருந்தோம். ஆரோவில் முழுக்கவே ஆர்கானிக் தொடர்பான ஆட்கள்தான். அதனால் அங்கு அர்னால்ட் பொருந்திப்போனார். புள்ளினங்கால் இருந்த இடத்தில் கீட்ஸின் கவிதைகள். நடிகர்கள் மாறியபோது அதற்கேற்றபடி திரைக்கதையிலும் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்து கொண்டோம்.
9. இந்தத் திரைப்படம் எந்திரனின் இரண்டாம் பாகமாக மாறியது எதனால்?
கதைக்குள் சிட்டி வந்தபோதே இது எந்திரனின் படத்தின் இரண்டாம் பாகமாக மாறிவிட்டது,
10. இந்தப் படம் வெளியான பிறகு வந்த ஆரா தத்துவம் என்பது அறிவியலில் நிரூபிக்கப்படாத ஒன்று என்பது மாதிரியான எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்.?
விமர்சகர்களுக்காக மட்டுமே நாம் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியாது. பெரும்பான்மையான ரசிகர்கள் என் படத்தை என்னவாய்ப் புரிந்து கொள்கிறார்கள் என்பதில் எப்போதும் கவனத்தோடு இருக்கிறேன். ஆரா கோட்பாடு இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமாக இருப்பதாகத்தான் படம் பார்த்த நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ஒரு புது வகையான சக்தி உருவாவதை ஹாலிவுட் படங்கள் ஆக்ஸிடெண்ட்டல் ஃபோர்ஸாக காட்டுவார்கள். ஸ்பைடர்மேன், ஹல்க், ஃப்ளாஷ் என ஏராளமான கேரக்டர்களை நாம் சொல்லலாம். அதுபோல் இருக்கக் கூடாதென்பதில் கதை எழுதும்போதே தெளிவாக இருந்தேன். ஆரா இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால் வெறுமனே பேய்ப்படம் என்று சொல்லியிருப்பார்கள். ஆரா என்று வைத்த போது ஒரு புதிய கோணம் கிடைத்தது. ஒரு பேய்ப் படமாக இதனை அணுக எனக்கு விருப்பமில்லை. பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி என்றுதான் இந்தக் கதையை அணுக நினைத்தேன். ஆராவைக் குறித்த ஆய்வுகளை வாசித்தபோது அது இந்திய மரபிற்கு மிக நெருக்கமாய் இருந்தது. மனிதர்கள், கடவுள், விலங்குகள் என எல்லாவற்றிற்கும் ஆராக்கள் இருக்கின்றன. அப்படியானால் பறவைகளுக்கும் ஆராக்கள் இருக்க வேண்டும் தானே? பக்ஷிராஜனின் ஆராவோடு இறந்துபோன பறவைகளின் ஆராக்களும் இணைந்து அவனொரு சக்தியாக உருவாகிறான் என்பது படத்தில் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது.
ஏராளமான சினிமா பிரபலங்களும் திரைப்பட பதிவர்களும் மிகச் சிறந்த படமென சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்ததை நாம் கவனிக்க வேண்டும். தனுஷ் ‘இது ஒரிஜினலான மூவி’ என பதிவிட்டிருந்தார். கே.வி. ஆனந்த் மிகச் சிறந்த இந்தியப்படங்களில் ஒன்று’ என பதிவிட்டிருந்தார். இப்படி எத்தனையோ பேரின் பதிவுகளை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் பார்க்க வேண்டும். நிறைய பேர் எந்திரன் பார்த்த எதிர்பார்ப்பிலேயே பாடல்கள் இருக்கவேண்டுமென எதிர்பார்த்து வந்தனர். 2.0 வில் பாடல்களுக்கான இடமில்லை. இது வேறு விதமான காட்சியனுபவத்தைத் தரக்கூடிய படமென்பதை சில பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு திரைப்படத்தைப் பார்த்த எல்லோருக்கும் அதுகுறித்து அபிப்பிராயம் சொல்ல உரிமையுண்டுதான். ஆனால் படைப்பாளி மற்றவர்களின் அபிப்பிராயத்தில் மட்டுமே அக்கறை காட்டக் கூடாது. குறைகளை பற்றி எழுதியவர்கள் 5 சதவிகிதம் பேர்கள்தான் . மற்ற 95 சதவிகித பார்வையாளர்கள் நான் என்னவாய் நினைத்த படத்தை உருவாக்கினேனோ அப்படியே அதனைப் புரிந்து கொண்டு உள்வாங்கியிருக்கிறார்கள்.
11. ஜெண்டில்மேனில் சிக்கு புக்கு பாடலில் பிரபுதேவா கண்ணிலிருந்து அம்புவிடும் காட்சிக்காக துவங்கிய க்ராஃபிக்ஸ் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து இன்று 2.0 வில் முழு திரைப்படமும் க்ராஃபிக்ஸால் உருவாகக் கூடிய சூழல் வந்துள்ளது. எவ்வளவு தூரம் இதில் நீங்கள் நிறைவாய் உணர்கிறீர்கள் ? இந்திய பட்ஜெட்டிற்குள், நமது வியாபார எல்லைக்குள் இதை சாத்தியப்படுத்தியதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நிச்சயமாய் எனக்கு பெருமளவு திருப்திதான். ஒவ்வொரு திரைப்படம் உருவாகும் காலத்திலும் வாழ்க்கையில் புதிதாக நிறைய கற்றுக் கொள்கிறேன். 2.0 உருவானபோது நான் கற்றுக்கொண்டவை இதற்கு முன்னால் நான் இயக்கிய படங்களின் போது கற்றுக்கொண்டவைகளை விடவும் அதிகம். ஏராளமான கைகள் ஒருங்கிணைந்து அயராமல் உழைக்கும் போதுதான் இதுபோன்ற திரைப்படங்கள் சாத்தியமாகும். இந்தக் கூட்டுழைப்பில் சங்கடங்கள் வருத்தங்களென நிறைய எதிர்கொள்ள நேர்ந்தது. எதற்கும் கலங்காமல் உறுதியாய் நின்றதால் மட்டுமே இந்தப்படம் சாத்தியமாகியுள்ளது.
இதுபோன்ற திரைப்படங்கள் உருவாவதில் இருக்கும் சிக்கல்கள் சவால்கள் எல்லாவற்றையும் நான் கடந்து வந்திருக்கிறேன். இப்போது இதனை புத்தமாகப் பதிவு செய்யும்போது அடுத்த தலைமுறையினர் அந்தச் சவால்களை எளிமையாய்க் கடந்து செல்வதற்கான ஒரு பாதையை அமைத்துத் தருகிறோம் என்கிற சின்ன சந்தோசமுண்டு, எனக்குப் பின்னால் வருகிறவர்கள் நான் எதிர்கொண்ட சிக்கல்களையும் சவால்களையும் எளிதாக எதிர்கொண்டு கடக்கலாம். 2.0 எடுத்ததிலிருக்கும் அலாதியான நிறைவும் மகிழ்வும் இதனால்தான்.



