top of page

“வா மனமே, கங்கை யமுனையின் கரைக்குச் செல்வோம்.” ( கபீர்)

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 6 minutes ago
  • 5 min read


 

ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆம்பர்க்ரீஸ் என்ற பெயரில் எழுதத்துவங்கி என்னைப்போலவே அந்த நாவலும் பல்வேறு அலைச்சல்களையும் அடிகளையும் வாங்கி இப்பொழுது தன்னைத்தானே  எழுதிக்கொண்டிருக்கிறது. வேறு பெயரில் வெளிவரும். அந்த நாவலில் வரும் நாயகன் தனது தந்தையின் மரணத்திற்குப்பின் கடும் மனக்குழப்பங்களுக்கு உள்ளாகிறான். வாழ்நாள் முழுக்க அவருக்கு எதிரான கருத்துகளை மட்டுமே பேசுவேன் என்பதில் உறுதியாக இருந்தவனுக்குள் ஏதோ நிகழ்ந்து அந்தக் குழப்பம் பயணம் செய்யச் சொல்லி தூண்டுகிறது.  ஆன் தி ரோட் நாவலில் தனது தந்தையின் மரணத்திற்குப்பிறகு அமெரிக்காவின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு அதன் நாயகன் பயணிக்கும்போதுதான் அவன் தன்னை முழுமையாகத் தெரிந்துகொள்கிறான். இதுவும் அப்படியான ஒரு பயணம் தான். இந்தப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கும்போது வாரணாசியின் வீதிகளையும் அந்த வீதிகளின் இரைச்சல்களையும் வாசனைகளையும் என்னால் நெருக்கமாக உணரமுடிந்தது. அந்த நகரம் ஏன் இத்தனை உயிர்ப்போடு இருக்கிறது என யோசிக்கிறேன்.


2008-ல் முதன்முறையாக  வாரணாசியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது அந்த நகரத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் எதுவும் இல்லை, நானொரு சாதாரண பயணி. எல்லா நகரங்களையும் பார்ப்பது போலவே  வாரணாசியையும் பார்க்கச் சென்றிருந்தேன். கங்கையின்  படித்துறகள், கோயில்கள், சாலைகள், மயானங்கள் என  கண்களுக்குக் கிடைத்தவற்றை மனதுக்குள் எடுத்துக்கொண்டு திரும்பினேன். அந்தப் பயண அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதுதான். ஆனால் சில நகரங்களைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறபோது அந்த நகரம் மாய உருவமென நம்மைத் தொடர்ந்து வருமென்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.  நாம் கவனிக்காத நேரங்களில் நம்முடைய நினைவுகளுக்குள்  உயிர்ப்பெற்றுவிடும். அப்படியான சக்தி வாரணாசிக்குண்டு. வசீகரமானதொரு வாசனையாகவோ அபூர்வமானதொரு ஒமுகமாகவோ  சில சமயம் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று மனதுக்குள் எழும் ஒரு காட்சியாகவோ  வாரணாசியின் நினைவு எழுந்து விடும். பல்லாயிரம் ஆண்டுகளாக உறங்காத ஒரு நகரத்திற்கு மனிதர்களை வசீகரிக்கும் சக்தி இல்லாமல் போனால்தான் ஆச்சர்யம்.


2012-ல் இரண்டாவதுமுறை  பயணத்தின் போது  ஐந்து நாட்கள் அங்கு இருக்க முடிந்தது. முதல் பயணத்தைவிட  கூடுதலாக இரண்டு நாட்கள் இருந்தும் அந்த நகரம் எனக்கு  புரியாததாகவே இருந்தது. நாம் அதிகமாகப் பார்க்கப் பார்க்க அது இன்னும் ஆழமாகிக்கொண்டே சென்ற ஒரு விசித்திரத்தை அப்போதுதான் கவனித்தேன்.  அந்தப் பயணத்திற்குப்பின் வந்துதான் மயானகாண்டம் கதையை எழுதினேன். நாடகத்தில் அரிச்சந்திரனாக வேஷம் கட்டும் நடிகன் அரிச்சந்திரனாகவே உருமாறி கங்கைக் கரைக்கு வந்து சேரும் கதையது. அந்தக் கதையில் வரும் வேஷக்காரன் யாரோ அல்ல, அது நானேதான்.


 பிறகு 2015 ல் இன்னொரு முறையும்   2022-ல் ஒருமுறையுமாக அங்கு பயணித்திருக்கிறேன். நான்கு பயணங்கள். நான்கு காலங்கள். என் வாழ்க்கையின் நான்கு வெவ்வேறு  நிலைகள். ஒவ்வொரு முறையும் நான்  சென்றது அதே நகரத்திற்குத்தான், ஆனால் திரும்பி வந்தது வேறு வேறு மனிதனாக.  ஒரு நகரத்தைப் பற்றிய நம்முடைய அனுபவம் அந்த நகரத்தினால்  மட்டும் உருவாவதில்லை; நாம் எந்த வயதில், எந்தத் துயரத்துடன், எந்தக் கேள்வியுடன் அதன் வாசலைக் கடக்கிறோம் என்பதில்தான்   உருவாகிறது.


வாரணாசியை  அறிந்துகொள்ள   அதன் குறுகிய வீதிகளில் தொலைந்துபோக வேண்டும். அந்த ஜனக்கூட்டத்திற்குள் அலைந்து திரிவதுதான் அந்த நகரத்திற்குள் நுழைவதற்கான வாசல்.  இரண்டு பேர் எதிரெதிராக வந்தால் உடல்கள் உரசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தெருக்கள், சுவரை ஒட்டிச் செல்லும் பசுக்கள், மேலே ஒன்றோடொன்று சிக்கிக்கொண்ட மின்கம்பிகள், பழைய வீடுகளின் இருண்ட கதவுகள், திடீரென்று திறக்கும் ஒரு சிறிய கோயில், காற்றில் கலந்த சாம்பலின் வாசனை, பூக்களின் வாசனை, தெருவோர தேநீர்க்கடைகளில் பால் கொதிக்கும் வாசனை, எங்கிருந்தோ கேட்கும் மந்திர உச்சரிப்பு—இவை எல்லாமே சேர்ந்து ஒரு நகரத்தை உருவாக்குவதில்லை; ஒரு காலத்தை உருவாக்குகின்றன. அந்தச் சந்துகளில் நடக்கும்போது நவீன காலத்தின் வேகம் உடைந்து போகிறது. நாம் எங்கே போகிறோம் என்பது  முக்கியமில்லாமல் போய், நடப்பதே போதுமானதாகிறது.


வாரணாசியில் காலம் நேர்கோட்டில் நகர்வதில்லை என்று  தோன்றும். கடந்த காலம் நிகழ்காலத்தின் தோளில் கைபோட்டு நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த  நம்பிக்கைகள்  இன்றைய மனிதனின் உடலுக்குள் இன்னும் உயிரோடு இருக்கிறது. புதிய கட்டிடத்தின் நிழலில் பழைய சடங்குகள்  நடக்கின்றன.  செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் இளைஞனைக் கடந்து ஒரு சடலம் செல்கையில் வாழ்க்கை தன்னுடைய எதிர்மறைகளை அங்கே மறைக்காமல் வைத்திருக்கிறது.


வாரணாசியில் எனக்கு பெரும்பாலும் பசி எடுப்பதில்லை.  அந்த நகரத்துக்குள் சென்றதும் உடல் தன்னுடைய வழக்கமான கோரிக்கைகளை  மறந்துவிடும் போல.  ஆனால் தேநீர் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அந்த நகரத்தின் தேநீருக்கு வேறு எங்கும் கிடைக்காத ஒரு சுவை இருக்கிறது என நான் எப்போதும் நினைப்பேன். அது தேநீரின் சுவை மட்டுமல்ல. அதிகாலையின் குளிர் அதில் இருக்கிறது; இரவின் விழிப்பு இருக்கிறது; கங்கையிலிருந்து வரும் ஈரம் இருக்கிறது; சாலையின் தூசி இருக்கிறது; அருகிலுள்ள கோயிலின் மணி ஓசை இருக்கிறது; மரணத்தின் நகரத்தின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் சாதாரணத்தன்மை இருக்கிறது. ஒரு சிறிய குவளையை கையில் வைத்துக்கொண்டு தேநீர் குடிக்கும் அந்த நேரங்களில், வாரணாசி என்னிடம் எந்தத் தத்துவத்தையும் பேசுவதில்லை. அதுவே அதன் தத்துவமாக இருக்கிறது. பெரிய உணவுகளும் பெரிய சடங்குகளும் தராத ஒரு அமைதியை அந்தச் சிறிய தேநீர் குவளை சில நேரங்களில் தருகிறது.


வாரணாசியில் என்னை அதிகமாகத் தொந்தரவு செய்த இடம் மணிகர்ணிகா. மரணத்தை இவ்வளவு வெளிப்படையாக வாழ்க்கையின் நடுவில் வைத்திருக்கும் இடத்தை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. அங்கே மரணம் மறைக்கப்படுவதில்லை. சிதை எரிகிறது; அதன் அருகிலேயே வாழ்க்கை நகர்கிறது. கங்கை எதையும் வியப்புடன் பார்ப்பதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது இதையெல்லாம் பார்த்திருக்கிறது. நெருப்பு அணைகிறது, சாம்பல் நதியில் கலக்கிறது, அடுத்த சிதை தயாராகிறது.


கடந்த பயணத்திற்குப் பிறகு மணிகர்ணிகாவில் நான் எடுத்திருந்த ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தேன். சில காலத்திற்குப் பிறகு அதை மீண்டும் நினைத்துப் பார்த்தபோது, அந்தச் செயல் எனக்குள் ஒரு குற்ற உணர்வை உருவாக்கியது. நான் என்ன பதிவு செய்திருந்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். ஒரு மனிதனது வாழ்க்கையின் கடைசி நொடிகளை. அவன் இனி திரும்பி வரப்போவதில்லை. அவனுடைய உடல் நெருப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தினர் தங்கள் துயரத்தோடு அங்கே நிற்கிறார்கள். அந்தத் தருணம் அவர்களுக்குரியது; அந்த மனிதனுக்குரியது. எனக்கு அது ஒரு காட்சியாக மட்டுமே இருந்தது. கலைஞனாக நான் பார்க்கும் காட்சிகளை எல்லாம் என்னுடையதாக நினைத்துக்கொள்ளும் ஒரு ஆபத்து என்னுள் இருந்திருக்கிறது என்பதை  உணர்ந்தேன். அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். வீடியோவை மட்டும் அல்ல; மரணத்தையும் ஒரு நினைவுப் பொருளாகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்தும் கொஞ்சம் வெளியேறினேன். சிதையில் இருப்பது ஒரு மனிதனின் கடைசி நொடிகள். அந்த நொடிகள் நமக்குச் சொந்தமானவை அல்ல. அவற்றை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ, நம்முடைய கதையாகவோ எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அந்தக் கடைசி நொடிகளை கங்கா மாதாவிடம் கையளித்துவிட வேண்டும். அவ்வளவுதான். கங்கை அவற்றை எடுத்துச் செல்லட்டும். அந்தப் புரிதல் எனக்கு எந்தப் புத்தகத்திலிருந்தும் வரவில்லை. மணிகர்ணிகாவின் நெருப்பிலிருந்து வந்தது.


வாரணாசியிலிருந்து சாரநாத்துக்குச் செல்லும்போது நகரத்தின் சத்தம் கொஞ்சம் பின்வாங்குகிறது. அங்கே புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை நிகழ்த்திய நிலம் இருக்கிறது. வாரணாசியின் உடலில் மரணத்தின் வெப்பம் இருந்தால், சாரநாத்தில் ஒரு குளிர்ந்த சிந்தனை இருக்கும். துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்கத்திலிருந்து விடுதலை, அதற்கான பாதை—மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட கேள்விகள் இன்றும் நம்மை விட்டு விலகவில்லை.


சாரநாத் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தபோது அந்தக் காலம் இன்னும் நெருக்கமாகியது. அகழாய்வுகளில் இருந்து மீட்கப்பட்ட சிற்பங்கள், தூண்களின் எச்சங்கள், புத்தரின் உருவங்கள், அசோகர் காலத்தைச் சேர்ந்த நினைவுகள்—காலத்தல் உடைக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குள் இருந்த மனிதனின் தேடல் உடையாமல் இருந்தது. அங்கே அசோக சிங்கத்தூண் முன் நின்றபோது நீண்ட நேரம் எதுவும் பேசத் தோன்றவில்லை. அந்தச் சிங்கங்கள் கல்லால் செய்யப்பட்டவை; ஆனால் அவற்றின் பின்னால் ஒரு பேரரசின் வரலாறு இருந்தது, அரசியல் அதிகாரம் இருந்தது, வன்முறை இருந்தது, அதன்பின் தர்மத்தை நோக்கித் திரும்பிய ஒரு மனிதனின் மாற்றமும் இருந்தது.  அந்தச் சக்கரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கல்லை நாம் பார்ப்பதில்லை; கல் நம்மைப் பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது. தத்துவம் இப்படித்தான் சில சமயம் நம்மை ஆக்ரமிக்கிறது. ஒரு புத்தகத்தை மூடிவிட்டால் தத்துவத்திலிருந்து தப்பிவிடலாம். ஆனால் ஒரு இடம் நம்மைச் சுற்றிக்கொண்டால் அதிலிருந்து எங்கே போவது?


மரணம் தவிர்க்க முடியாதது என்பதை நாம் எல்லோரும் அறிவோம், நாம் நேசிப்பவர்கள் ஒருநாள் நம்மை விட்டுப் போவார்கள் என்பதையும் அறிவோம். ஆனால் அறிவுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு பெரிய இருள் இருக்கிறது. அந்த இருளுக்குள் வாரணாசி நம்மை அழைத்துச் செல்கிறது. மணிகர்ணிகாவில் நெருப்பைப் பார்க்கும்போது மரணம் ஒரு தத்துவக் கருத்தாக இல்லை. சாரநாத்தில் புத்தரின் துக்கத்தைப் பற்றிய சிந்தனையை எதிர்கொள்ளும்போது துயரம் ஒரு புத்தகச் சொல்லாக இல்லை. அவை உடலுக்குள் இறங்குகின்றன. அங்கேதான் தத்துவமும் ஆன்மீகமும் நம்மை ஆக்ரமிக்கத் தொடங்குகின்றன. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் சிறிய அறை திடீரென்று திறந்து, அதற்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் காற்று வந்து நிரம்புகிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போதும் இதே முரண்பாடு வேறு வடிவத்தில் தெரிகிறது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சடங்குகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து நிற்கும் நகரம்; இன்னொரு புறம் உலகத்தை அறிவின் வழியாகப் புரிந்துகொள்ள முயலும் இளம் மனங்கள். நூலகங்களுக்குள் திறக்கப்படும் புத்தகங்கள், வளாகத்தின் வழியாக நடக்கும் மாணவர்கள், எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் ஒரு தலைமுறை—இவற்றுக்குச் சில மைல்கள் அப்பால் கங்கை, சிதைகள், படித்துறைகள், மந்திரங்கள். அறிவும் நம்பிக்கையும், தத்துவமும் ஆன்மீகமும், வாழ்க்கையும் மரணமும் ஒன்றையொன்று மறுக்கும் இடமாக அல்லாமல் ஒரே நிலப்பரப்பில் இணைந்து வாழும் இடமாக வாரணாசி எனக்குத் தெரிகிறது.


என்னைப் போல எத்தனை ஆயிரம் மனிதர்கள் வாரணாசிக்குள் நுழைந்திருப்பார்கள் என்று சில நேரங்களில் நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை காதல்கள் அந்த நகரத்தின் படித்துறைகளில்  முடிந்திருக்கும்; எத்தனை குடும்பங்கள் தங்களது உறவினர்களை கங்கையிடம் ஒப்படைத்திருப்பார்கள்; எத்தனை மனங்கள் கடவுளைத் தேடி அந்தச் சந்துகளில் அலைந்திருக்கும்; எத்தனை கலைஞர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு கதையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பியிருப்பார்கள்?  அந்த நகரம் எதையும் கணக்கிட்டு வைத்திருப்பதில்லை. அதற்கு நம்முடைய பெயர்களும் தேவையில்லை. அது மனிதர்களையும்  மரணங்களையும்  காதல்களையும்  பிரார்த்தனைகளையும்   பல்லாயிரம் ஆண்டுகளாக சுமந்துகொண்டிருக்கிறது.  நம்முடைய துயரம் நமக்கு மட்டுமே நிகழ்ந்ததென  நினைக்கும் அகங்காரத்தை அந்த நகரம்  கரைத்துவிடுகிறது. நம்முடைய கதை தனித்துவமானதாக இருந்தாலும், அது மனிதத் துயரத்தின் மிகப் பழைய ஆற்றில் கலந்துகொண்டிருக்கும் இன்னொரு சிறிய நீரோட்டம் என்பதை அது உணர்த்துகிறது.


அதனால்தான் ஒவ்வொரு முறையும் வாரணாசி எனக்குப் புதிதாக இருக்கிறது.  ஒரே நகரத்தின் முன் நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் என் உள்ளே வேறு ஒரு மனிதன் இருந்திருக்கிறான். ஒரு நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியும்; ஒரு மனிதனால் அதே நகரத்திற்குள் இரண்டாவது முறையாகவும் அதே மனிதனாக நுழைய முடியாது. வாரணாசியிலிருந்து நான் கொண்டுவந்தவற்றைவிட அங்கே விட்டுவந்தவைகள்தான் அதிகம் என இந்த நாவலை எழுதுகிற போது உணர்கிறேன்.  சில பயங்கள், சில அகங்காரங்கள்,  அவசரங்கள், எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்ற பிடிவாதம், எல்லாவற்றையும் கதையாக்க வேண்டும் என்ற கலைஞனின் பேராசை, ஒவ்வொரு கேள்விக்கும் உடனே பதில் வேண்டும் என்ற மனப்போக்கு இவற்றில் சிலவற்றை அந்த நகரம் எடுத்துக்கொண்டது. மீதியை கங்கை எடுத்துச் சென்றிருக்கலாம். அதனால்தான் மீண்டும் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. வாரணாசி என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பதால் அல்ல; நான் இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை என்பதால்.


நான் மீண்டும் அந்தச் சின்னச் சின்ன வீதிகளில் நடப்பேன். எங்காவது ஒரு கடையில் தேநீர் குடிப்பேன். அப்போது பசியிருக்காது. கங்கையின் கரையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பேன். மணிகர்ணிகாவைக் கடந்து செல்லும்போது இந்த முறை கேமராவை எடுக்காமல் இருக்கலாம். மரணம் என் கண்களுக்கு முன்னால் ஒரு காட்சியாக இல்லாமல், ஏற்கனவே என்னுடைய வாழ்க்கைக்குள்ளும் அமைதியாக நடந்துகொண்டிருக்கும்  உண்மையாகத் தெரிந்திருக்கலாம். சாரநாத்தில் மீண்டும் அந்தச் சிங்கங்களின் முன் நிற்பேன். சுழலும் தர்மசக்கரத்தைப் பார்ப்பேன். கல்லுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடங்கியிருக்கும் மனிதனின் கேள்வியை கேட்க முயல்வேன். எழுதப்பட்ட கதைகளையும் எழுதப்படாமல் போன கதைகளையும் நினைப்பேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நினைப்பேன். நம்முடைய மிக நெருக்கமான மனிதர்கள்கூட நமக்குள் அறியப்படாத நிலப்பரப்புகளாகவே இருக்கிறார்கள்; அந்த நிலப்பரப்புகளுக்குள் நுழைய சில சமயம் மரணம் தேவைப்படுகிறது, சில சமயம் ஒரு பயணம், சில சமயம் ஒரு நகரம்.  எனக்கு அப்படித்தான்  வாரணாசி. அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் புதிதாக இருக்கிறது. நான் அங்கே புதிதாகச் செல்கிறேன் என்பதல்ல; அந்த நகரத்தின் முன் நிற்கும் நான் புதிதாக இருக்கிறேன்.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page