எழுத்தாளனுக்கு அரசியல் நிலைப்பாடு இருக்கலாமா?
- லக்ஷ்மி சரவணகுமார்

- 12 minutes ago
- 3 min read

ஃப்ரான்ஸ் ஃபனானின் நூலுக்கு ஜான் பால் சார்த்தர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் முன்னுரை எழுதியிருப்பார். காலனிய அரசியல் குறித்த பெரும் விவாதங்களை உருவாக்கிய அந்த முன்னுரை எல்லா காலத்திற்கும் முக்கியமானது. 1960 களில் ஆப்பிரிக்க நாடுகளின் ஐரோப்பிய காலனியத்திற்கு எதிரான போராட்டங்களின் குரலாக அந்தக் கட்டுரையை மதிப்பிட வேண்டும்.
காலனியம் என்பது வன்முறையானது, அதனால் அதற்கு எதிரான போராட்டங்களும் வன்முறையின் வடிவில் தான் வெளிப்படும் என தெரிவிக்கும் சார்த்தரின் அந்தக் கட்டுரை வன்முறை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியவர்களும் உண்டு. ஆனால் சார்த்தர் ஒருபோதும் தனது அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர் அல்ல.
நேரடியாகவோ மறைமுகமாகவோ எழுத்தாளன் அரசியல்வயப்பட்டவன் தான். எனது படைப்பு செயல்பாட்டின் அடிப்படை நோக்கம் மனிதர்களைப் பேசுவது, உண்மையைப் பேசுவது, அழகியலைப் பேசுவது, வரலாறைப் பேசுவது என எப்படிக் கூறினாலும் அவை எல்லாமே அரசியலின் ஒரு பகுதியாகவே வெளிப்படும். எந்த உண்மையைப் பேச விழைகிறேன் என்பதும் எந்த வரலாறை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்பதிலும் அரசியல் மட்டுமே இருக்கிறது.
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்த விவாதங்களும் அக்கறையும் 80 களுக்குப் பிறகுதான் வலுவாக வெளிப்படத் துவங்கியது. கட்சி சார்ந்த எழுத்துகளும் பிரச்சார இலக்கியமும் நீண்ட காலமாகவே தமிழில் இருந்தாலும் கோட்பாடுகள் குறித்த உரையாடலும் புதிய குரல்களுக்கான வாய்ப்புகளும் உருவாக நமக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. மார்க்சிய இயக்க இலக்கிய அமைப்புகளும், திராவிட கழகமும் அடிப்படையான வாசிப்பை தமிழ் சமூகத்தில் துவங்கி வைத்தது. சிறிய கிராமங்களில் உருவாக்கப்பட்ட இந்த இயக்கங்களின் வாசகசாலைக்கு முக்கியமான பங்குண்டு. கட்சியாகவும் கருத்தாகவும் பார்த்துக் கொண்டிருந்த அரசியலை நூன்மையாக அதன் பல்வேறு வகைமைகளை அடையாளப்படுத்தியதின் துவக்கம் நிறப்பிரிகை இதழின் வழியாக நிகழ்ந்தது.
உடல், அடையாளம், நிலம், நினைவுகள் என தனித்து கவனிக்கப்பட்டபோது தமிழ் இலக்கியம் முன்னைவிடவும் பரந்து விரிந்த தளத்திற்கு நகர்ந்தது. நீண்டகாலமாக இங்கு உரைந்து கிடந்த மையச் சிந்தனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் வழியாக அதிகாரப் பகிரல் முதன்மையானதாக முன்வைக்கப்பட்டது. சிற்றிதழ் இயக்கங்கள் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய கொடையென இந்தச் செயல்பாட்டைச் சொல்ல வேண்டும். சமூகத்தின் உட்புற அமைப்புகளில் புதைந்திருக்கும் வெவ்வேறு சிக்கல்களை பேசுவதற்கான சாத்தியங்கள் உருவானபோது புனைவிற்கான மொழி மாறத்துவங்கியது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும், பொருளாதார மற்றும் உடல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டவர்களும் தங்களது கதைகளை எழுதியபோது அதுவரை அவர்களைக் குறித்து எழுதப்பட்டவற்றிலிருந்த புரிதல் குறைபாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது அதுவரை பிற சமூகத்தினர் காட்டிய கருணை என்பதும் தீண்டாமையின் நுட்பமான வடிவம் தான். எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுதலை பெறவேண்டுமென்கிற குரல் இங்கு அதிகரித்தது.
உலகம் முழுக்கவே எழுத்தாளர்களின் அரசியல் சார்பு கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விமர்சிக்கப்படவும் செய்கிறது. இருபது வருடங்களுக்கு முன் இந்தியா டுடே வில வந்த செய்தியென நினைவு. தன்னால் குடுமி வைத்துக் கொள்ள முடியவில்லை என அசோகமித்திரன் சொன்னதைக் குறித்து அப்பொழுது அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதே நேரம் க்ரிஷ் கார்னட் புகைப்பிடிக்கும் பொழுதெல்லாம் என்னை ஒரு ^&^*&*& ஆக உணர்கிறேன் என்று சொல்லி இருந்ததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்தியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சாதிய அபிமானம் கொண்டவர்கள் என்பதற்கான நீண்டநெடிய வரலாறு உண்டு. அசோகமித்திரனின் இந்த ஒரு கருத்தை மட்டும் கொண்டு அவரை குறிப்பிட்ட அடையாளத்திற்குள் வகைப்படுத்திவிடவும் கூடாது.
சமீபத்தில் அசோகமித்திரனின் ஒரு கட்டுரை வாசித்தேன். தல்ஸ்தாயின் புத்துயிர்ப்பு நாவல் எழுதப்பட்டதன் பின்னால் இருக்கும் கதை. இருபது பக்கங்கள் கொண்ட அந்தக் கட்டுரையிலிருந்து ஏராளமான செய்திகள் கிடைத்ததோடு நிறைய கேள்விகளும் எழுந்தன.
அரசியல் நிலைப்பாடு என்பதை நாம் என்னவாகப் புரிந்து வைத்திருக்கிறோம்? ஏதாவதோரு கட்சியை ஆதரிப்பதையும் அதன் பொருட்டு அந்தக் குறிப்பிட்ட கட்சியை எந்தவொரு கேள்விகளும் இல்லாமல் ஆதரிப்பதுமே அரசியல் நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது. ஒரு கட்சித் தொண்டனுக்கும் எழுத்தாளனுக்குமான வேறுபாடு முக்கியமானது. தனக்கு உவப்பில்லாத கருத்துகளை விமர்சனப் பூர்வமாகப் பார்க்க வேண்டியது எழுத்தாளனின் கடமை. கேள்வி கேட்பது ஒன்றே அவனது தகுதி. நாம் இந்தக் கட்டுரைக்கு வருவோம்.
தல்ஸ்தாய் அன்னா கரீனினா எழுதிய பிறகு நீண்ட அமைதியில் இருக்கிறார். இயல்பாகவே அவரிடமிருக்கும் துறவுத் தன்மை இந்த நாவல் எழுதியபின் அதிகரித்துவிடுகிறது. அந்தக் காலகட்டத்தில் அவரது வழக்கறிஞர் நண்பர் ஒருவர் சொல்லும் ஒரு வழக்கு அவரை ஆழமாகத் தொந்தரவு செய்கிறது. ஆனால் அதனை அவர் எழுதவில்லை. தல்ஸ்தாய் தனது நாவல்கள் எதையும் நினைத்த மாத்திரத்தில் உடனே எழுதுவதில்லை. பலமுறை தடைப்பட்டு, பல்வேறு தாமதங்களுக்குப் பின்பாகத்தான் எழுதுவார். அன்னா கரீனினாவிற்குப் பின் நீண்டகாலம் எதுவுமே எழுதாமல் இருந்தவரை இந்த நாவல் எழுதத் தூண்டியது ஒரு சமூக இயக்கம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டுகோபார்ஸ் என்றொரு கலகக்கார அமைப்பு ரஷ்யாவில் தோன்றியது. விவசாயிகளும் தொழிலாளர்களும் உதிரி மனிதர்களும் நிறைந்த அந்த அமைப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. அந்த இயக்கம் மிக வேகமாக ரஷ்யாவில் பரவியது. சமாதான கிறிஸ்தவ இயக்கம் என வரையறுக்கப்பட்ட இந்த இயக்கத்தின் செல்வாக்கைக் கண்டு அஞ்சிய ருஷ்ய அரசு அவர்களை ஒடுக்கத் துவங்குகிறது. எழுத்தாளர்கள் கலைஞர்கள் என எல்லோரும் அந்த இயக்கத்தை ஆதரித்து எழுதுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வழிகளைத் தேடுகிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக நாடு கடத்த அரசு ஒப்புக் கொண்டாலும் எந்த நாடு அவர்களை அரவணைக்கும், பயணச் செலவுகளை யார் ஏற்றுக்கொள்வது என ஏராளமான சிக்கல்கள். இந்த சிக்கலைத் தீர்க்க தல்ஸ்தாய் நிதி திரட்ட முடிவு செய்கிறார்.
ஒரு புதிய தொடர்கதை எழுதுவதாக அறிவிக்கிறார். அடிப்படையில் பெரும் செல்வந்தரான தல்ஸ்தாய் தனது நாவல்கள் எதற்கும் மதிப்பூதியம் வாங்குவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்தமுறை தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டு தொடருக்கு வரும் மொத்த தொகையையும் டுகோபார்ஸ் இயக்கத்திற்குத் தருவதாக முடிவெடுக்கிறார்.
அந்தத் தொடர் ஒரே நேரத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் என்பதுதான் இந்த அறிவிப்பின் சுவாரஸ்யம். யோசித்துப் பாருங்கள் எந்தவித தொடர்பு சாதனங்களும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் ருஷ்ய மொழியில் வெளியாகும் நேரத்திலேயே மற்ற மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வரவேண்டும். பல குழப்பங்கங்களுக்கு நடுவே தொடர் வெளியாகத் துவங்குகிறது. சில நாடுகளில் நாங்கள்தான் அதிகாரப் பூர்வமான மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம் என ஒரே நேரத்தில் நான்கைந்து பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இதனால் ஃப்ரஞ்ச் ஆங்கிலம் என எல்லா இடத்திலும் குழப்பங்கள். இதற்கு நடுவே தல்ஸ்தாய் தனது ஒவ்வொரு பகுதியை அனுப்புவதிலும் ஏராளமான குழப்படிகள் செய்கிறார். பதிப்பிறகு அனுப்புவது, அனுப்பியபின் நிறுத்தி மீண்டும் திருத்தி எழுதுவது என செம்மையாக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இதனால் மற்ற மொழிகளுக்குச் செல்வதில் கடும் தாமதம் ஆகிறது.
இந்த தாமதத்தால் மொழிபெயர்ப்பிலும் கடும் குழப்பங்கள் வர, சில மொழிகளில் தல்ஸ்தாய் எழுதியதாகச் சொல்லி அவர்களே சில பகுதிகளை எழுதி வெளியிட்டு விடுகிறார்கள். இதனால் சட்ட சிக்கல்கள், வழக்குகள் என அந்தத் தொடர்கதை எழுதப்பட்ட காலம் முழுக்கவே சர்ச்சைகள் அவரைச் சுற்றி இருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த நாவலைத் துவங்கியதற்கான நோக்கம் நல்லபடியாகவே நடந்து முடிகிறது. டுகோபார்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோரை கனடா அரசாங்கம் ஆதரிக்கிறது. ஆனால் இத்தனைப் பரபரப்புகளுக்கு நடுவே எழுதப்பட்ட அந்த நாவல் பெரும் தோல்வியைச் சந்திக்கிறது.



