ஒன்றைப் புதிதாய்த் துவங்குதல்
- லக்ஷ்மி சரவணகுமார்
- 2 hours ago
- 3 min read

2025 மே மாதம் நான் எழுதி இயக்கியிருக்கும் லிங்கம் தொடர் வெளியாவதாக இருந்தது. பின்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போனது. ஆகஸ்ட் அக்டோபராகி பின்பு 2026 ஜனவரி என்றாகி இப்பொழுது ஏப்ரல் அல்லது மே மாதத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு முதல் பட இயக்குநருடைய மனநிலை இந்த காலகட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை சினிமாவில் இருக்கும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும்.
35 வயதில் ஒப்பந்தமாகி நாற்பது வயதை இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் எனக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடிகளும் எழுத்தாளரா அல்லது இயக்குநரா நாம் யார் ? எந்தப் பாதையில் தொடரப் போகிறோம் என அடையாளச் சிக்கலும் அலைக்கழிப்புகளும் ஏராளம். நல்வாய்ப்பாக கடந்த வருடம் மதுவருந்துவதை நிறுத்துவது என எடுத்து முடிவு சற்றே ஆறுதல் என்றாலும் இந்த மிக நீண்ட காத்திருப்பில் கடுமையான உளச்சிக்கல்களும் உறக்கமின்மையால் உண்டான சோர்வும் என்னை ஆக்ரமித்துவிட்டது. இத்தோடு உடல் நிலையிலும் சிறு சிறு தேய்மானங்கள் வந்துவிட்டதற்கான அறிகுறிகளை உணரமுடிந்தது.
என்னை எந்த ஒரு செயலையும் செய்யவிடாமல் எந்த ஒரு நபரையும் முழுமையாக நம்பச் செய்யாமல் தடுக்கும் எதிரி ஒருவர் இருக்கிறார். எனது மரியாதைக்குரிய அந்த எதிரியுடன் தான் வாழ்வின் பெரும்பாலான நேரங்களை செலவிடுகிறேன். அவர் என் மனசாட்சி.
வாழ்வின் பெரும்பாலான காலம் அனுபவித்த ஏமாற்றங்களும் தோல்விகளும் நிரந்தரமான ஒரு அவநம்பிக்கையைத் தந்திருக்கிறது. அதனாலேயே எந்தவொரு செயலையும் புதிதாகத் துவங்குவதற்கு நான் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் உளச்சோர்வு அதிகமானதால் ஏதாவதொன்றன் வழியாக தப்பித்துவிட முயற்சித்தேன். யோகா ஆசிரியர் செளந்தர் அவர்களைக் குறித்து வாசித்திருந்தேன். தற்செயலாக ரமேஷ் ப்ரேதன் அவர்களின் இறுதி நிகழ்வில் நண்பரும் எழுத்தாளருமான சித்ரனை சந்தித்தபோது அவர் உடனடியாக வகுப்பில் சேரச் சொல்லி வலியுறுத்தினார். அவர் செளந்தர் அவர்களின் வகுப்பிற்குச் சென்றுவந்தபின் அந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால் தனக்கு நிகழ்ந்த மாற்றங்களைச் சொல்லி இருந்தார்.
பிற்பாடு தமிழின் மிக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியும் ஆசானுமான அகரமுதல்வன் அவர்கள் ஒரு இலக்கிய நிகழ்வில் என்னை செளந்தர் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அடுத்த ஓரிரு நாட்களிலேயே நானும் கார்கியும் செளந்தர் அவர்களை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றோம்.
முதல் சந்திப்பிற்குப் பிறகு அடுத்த வாரத்திலேயே வகுப்பு துவங்கியது. ஆறு வாரங்கள், வாரத்தில் ஒரு நாள் வகுப்பு. மற்ற நாட்கள் வீட்டிலேயே பயிற்சியைத் தொடர்வது. நவம்பர் முதல் வாரத்தில் யோகாக் கற்றுக் கொள்ளத் துவங்கினோம். இப்பொழுது ஃபிப்ரவரி முதல் வாரம். ஓரிரு நாட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தொடர்ச்சியாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். உடலில் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கிறது என்பதைக் கவனிப்பதை விடவும் ஒன்றை என்னால் தொடர்ந்து செய்யமுடியுமென்கிற மன உறுதிதான் எனக்கு நிறைவாக இருக்கிறது.
எல்லாவற்றைக் குறித்தும் அதீதமாக யோசிப்பது. அல்லது கற்பனை செய்துகொள்வது அந்தக் கற்பனைகளின் வழியாக தற்காலிகமானதொரு மகிழ்ச்சியைப் பெறுவது, அல்லது துயரை அடைவது. இது எதுவுமே உண்மையில்லை என்கிற பிரக்ஞை இருந்தாலும் அந்த அதீத யோசனைகளின் மீது வரும் மயக்கம் நின்றபாடில்லை. ஒரு வகையில் புண்ணை சொரிந்து சுகம் காண்பது போன்ற குரூரம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வகையான அதீத சிந்தனைகளிலிருந்து வெளிவராமல் போனதால் அச்சவுணர்வு அதிகரிப்பதை உணர்ந்தேன். பயணங்களையும் மனிதர்களையும் குறைத்துக் கொண்டேன். பணத்தின் மீது திடீரென அதீதமான பற்று வந்தபோது அந்த பற்று எதிர்காலம் குறித்த அச்சத்தினால் விழைந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இது ஒரு புறமிருக்க, கடந்தகாலத்தின் துயர்களிலிருந்து விடுபட முடியாமையும் அதோடு எனது இயல்புகளால் நான் செய்ய நேர்ந்தவைகள் காரணமாக உண்டான குற்றவுணர்வும் ஏதோவொரு ஆழத்தை நோக்கி என்னை அழுத்திக் கொண்டிருந்தது. எளிதில் மீள முடியாத ஒரு சுழல் இந்த சிந்தனை. அச்சமும் குற்றவுணர்வும் சேரும் போது அந்த சுழல் நம்மை மீளமுடியாத எல்லையை நோக்கி தள்ளிவிடுகிறது. சற்றேறக்குறைய அந்தக் கடைசிப் புள்ளியில் தான் நான் யோகப் பயிற்சிகளைத் துவங்கினேன். உடலின் இயல்பையும் மனதிற்கும் உடலுக்கும் உள்ள ஆழமான தொடர்பையும் திரு செளந்தர் அவர்களிடம் உரையாடியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பயிற்சிக்கு முன்னாலும் அந்த பயிற்சி எதற்காக என்பதைக் குறித்து நீண்ட அறிமுகத்தைத் தந்த பின்னரே வகுப்புகளைத் துவங்குவார். இந்த பயிற்சி துவங்கியபோதுதான் உடலும் மனமும் என்னோடு பேசுவதை உற்றுக் கவனிக்கத் துவங்கினேன்.
எல்லாவற்றிற்கும் உடனடியான தீர்வுகளை எதிர்பார்ப்பது, அந்தத் தருணத்தில் நிகழ்வதைக் கவனிக்காமல் எதிர்கால வெற்றிகளில் அல்லது கடந்து கால தோல்விகளில் சிந்தனைகளைக் குவிப்பது இவை எல்லாமே தேவைக்கு அதிகமாக மனதில் தேங்கியிருப்பதைப் புரிந்துகொண்டேன். தனிமனித உறவுச் சிக்கல்களை மையப்படுத்தி நான் அடிக்கடி குறிப்பிடும் வாசகம் ஒன்றுண்டு. ’நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறவன் சுமைகளைக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.’ அதைப்போல் இந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொள்ள முயல்வது ‘அந்த தருணத்தில் வாழ்வது, முழுமையாக வாழ்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது.’
நீண்டகாலமாக யோகப் பயிற்சியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென சிந்தனையும் ஆர்வமும் இருந்தபோதும் எது என்னைத் தடுத்திருக்கிறது என்பதைக் குறித்து யோசித்துப் பார்க்கிறேன். ஒன்று தான். பயம். அந்த ஒற்றை உணர்வு மற்ற எல்லா உணர்வுகளையும் விட மிகுதியாய் ஆக்ரமித்து இருந்ததை தாமதமாக புரிந்துகொண்டிருக்கிறேன்.
எதனால் அந்தப் பயம் உருவாகியிருக்கலாம்? நிச்சயம் ஏதோவொரு காரணமாக மட்டும் இருக்க முடியாது. வயது, சரியாகச் செய்ய முடியுமா என்கிற தயக்கம், மற்றவர்கள் எப்படி பார்க்கப் போகிறார்கள் என்கிற கூச்ச சுபாவம், தொடர்ச்சியாக செய்வதிலுள்ள அயர்ச்சி இப்படி ஏராளமான காரணங்கள் இப்போது கண் முன் தெரிகின்றன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ’நான் புதிய செயல்களைத் துவங்குவது குறித்து அச்சப்படவில்லை, அந்தப் புதிய செயலில் என்னைத் தாழ்வாக உணர்ந்துவிடுவேனோ என்பதை நினைத்து அச்சப்பட்டிருக்கிறேன்.’ இப்பொழுது எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டுப் பார்க்கையில் இந்த யோகப் பயிற்சியைத் துவங்கியதில் மட்டுமல்ல பல காரியங்களை தள்ளிப்போடுவதற்கும் பின் வாங்கிச் செல்வதற்கும் இதுவே காரணமாக இருந்திருக்கிறது.
பயத்திலிருந்து விடுவித்துக் கொள்வது எல்லாவற்றையும் விட முக்கியமானதென நினைக்கிறேன். பயத்தின் வழியாகத்தான் அகங்காரம் உருவாகிறது. நான் என்கிற அகங்காரம் ஒரு வகையில் பயத்தை மறைத்துக் கொள்ள மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் வடிவம். இதனை என்னால் அனுபவப்பூர்வமாகச் சொல்ல முடியும். கடந்த காலத்தின் தோல்விகளை, அல்லது எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடந்துவிடுமோ என்பது குறித்து உருவாகும் சிந்தனைகளைக் குறித்து சிந்திப்பதை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தால் அந்த சிந்தனைகளுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விளங்குகிறது.
நான் என்பது முன்பும் பின்பும் இல்லை. அது இந்த நொடியில் இருக்கிறது. யோகப் பயிற்சிக் கற்றுக் கொண்ட உடனே இத்தனை மாற்றங்களும் நிகழ்ந்துவிடுமா எனக் கேட்கலாம். ஒரு பயிற்சியோ, தத்துவமோ ஏடிஎம் மெஷின் அல்ல, நீங்கள் அட்டையை நுழைத்ததும் தீர்வு கிடைக்க. அந்தப் பயிற்சியிலிருந்து ஒரு தேடல் விரிவடையும் போது நமக்குப் புதிய திறப்புகள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து செல்வதுதான் முக்கியம்.
குருவைக் கண்டடைதல் என்றொரு முக்கியமான கட்டுரையை 2024 ம் வருடம் எழுதியிருப்பேன். ( https://www.lakshmisaravanakumar.com/post/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2 )
அதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். எந்தவொரு காரியத்தையும் நீங்கள் புதிதாகத் துவங்க விரும்புகிறீர்கள் ஆனால் அதனை நீண்டகாலமாத் தள்ளிப்போடுகிறீர்கள் என்றால் இனியும் தாமதிக்காமல் அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் தருணத்திலேயே துல்லியமாக அதிலிருந்து வெளியேறும் வழியும் கிடைக்கும். தன்னை உணர்தலே விடுதலை.
