top of page

நாவல் என்பது கூட்டு நினைவுகளின் தொகுப்பு : அலேன் மபாங்குவின் முள்ளம்பன்றியின் தன் வரலாற்றுக் குறிப்பு.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 7 minutes ago
  • 3 min read

ரமேஷ் ப்ரேதன் ஒரு நேர்காணல் இப்படிச் சொல்வார் ‘ஒரு நாவல் அளவுக்கு எழுதும் செய்திகளை ஒரு சிறுகதையிலும், ஒரு சிறுகதையளவிற்கு எழுதும் செய்திகளை கவிதையிலும் பல்லாயிரம் பக்கங்கள் நீளக்கூடிய கதைகளை சிறிய நாவலிலும் எழுதிப் பார்க்க வேண்டும். அதுதான் எழுத்தாளன் மொழியில் நிகழ்த்தும் சாகசம்.’


அலேன் மபாங்குவின் இந்த நாவல்  ஆப்பிரிக்காவின் வாய்மொழிக் கதைகளையும் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் மையமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பல நூறு பக்கங்களுக்கு விரிய சாத்தியமுள்ள இந்தக் கதையை நுணுகி நுணுகி பட்டு நூலை நெய்வதுபோல் நெய்திருக்கிறார்.


ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ரகசிய இச்சைகளையும் இருண்மைகளையும் வெளிப்படுத்தக் கூடிய இரட்டை உடல் ஒன்று இருப்பதாக ஆப்பிரிக்க மக்கள் நம்புகிறார்கள். மனித குலத்தின் பெரும்பாலான யுத்தங்களும் வன்முறைகளும் நம்பிக்கைகளுக்கு எதிரான முரண்களால் நிகழ்ந்தவைதான். இந்த நாவலில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் வசிக்கும் கிபாந்தி என்ற மனிதனின் ரகசிய உடலான ஓர் முள்ளம் பன்றி அவனது இறப்பிற்குப்பின் அவனும் தானும் எவ்வாறு இரட்டையர்களாகப் பிறெப்பெடுத்தோம், அவனது தனிப்பட்ட நலன்களுக்காக எத்தனை மனிதர்களைக் கொலை செய்ய நேர்ந்தது என்பதை அவனது மரணத்திற்குப்பின் இரவு முழுக்க ஒரு மரத்திடம் கதையாகச் சொல்கிறது.


கதை சொல்லி மனிதனாக இல்லாமல் போவதால் அதிகாரம் என்கிற ஒற்றைத்தன்மை இல்லாமல் வானை நிமிர்ந்து பார்க்க முடியாத அந்த முள்ளம் பன்றி எல்லாவற்றையும் தனது கண்களின் வழியாகவேப் பார்த்துச் சொல்கிறது. வெறுமனே தங்களது நம்பிக்கைகள், சடங்குகள் அதன் பின்னால் இருக்கும் வன்முறைகளை மட்டும் பதிவு செய்யாமல் காலனியத்திற்குப் பின் அந்த சடங்குகள் காட்சிப்படுத்தப்படுவதற்குப் பின்னால் இருந்த வேடிக்கைகளையும் கேலி செய்கிறது. அலேன் மபாங்குவின் கதை சொல்லல் முறையிலிருக்கும் கச்சிதமும் வசீகரமும் நமக்கு வெவ்வேறு விதமான வாசிப்பு சாத்தியங்களை உருவாக்குகிறது.


நேற்றைய தினம் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது வலைப்பக்கத்தில் பின் நவீனத்துவம் குறித்த எழுதிய பதிவொன்றிலிருந்து சில வரிகளைக் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.


”ஒரு பிரதி எழுதப்பட்டவுடனேயே அதை எழுதிய ஆசிரியருக்கோ அல்லது உண்மையான வாழ்க்கைக்கோ சொந்தமானதல்ல என்று ஆகி விடுகிறது.

அர்த்தம் என்பது மொழியின் அமைப்பு (structure), மற்றும் வாசகரின் அர்த்த உருவாக்கம் மற்றும் புரிந்து கொள்ளல் மூலமாக உருவாகிறது. பிரதியை எதார்த்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதன் மூலமாக அல்ல. 


எனவே, ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை நிஜமான மனிதருடன் அடையாளப்படுத்துவது readerly projection தானே தவிர பிரதியின் உண்மை அல்ல.  அப்படிப்பட்ட வாசக அத்துமீறலுக்கு பிரதியோ பிரதியை உருவாக்கிய எழுத்தாளரோ பொறுப்பாக முடியாது. 

நாவல் வாழ்க்கையின் கண்ணாடி அல்ல; அது ஒரு மொழியியல் நிகழ்வு (linguistic event) மட்டுமே.


வாசகர்கள் கதாபாத்திரங்களை நிஜ மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினால், அவர்கள் ரொலாந் பார்த் சொல்வது போல படு சராசரி வாசகர்களே ஆவர்.”


இந்த பத்தியிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மபாங்குவின் இந்த நாவலுக்குப் பொருந்தும். முள்ளம் பன்றியின் சாட்சியம் அனேக இடங்களில் மனநலம் பிறழ்ந்தவரின் சாட்சியத்தைப் போல் விரிகிறது. மனிதர்கள் விலங்குகள் ஆறுகள், மரங்கள் தாவரங்களென எல்லாவற்றைக் குறித்தும் பிரத்யேகமான அவதானிப்புகள்  இந்த நாவலில் உண்டு.

‘மனிதர்கள் உண்மையை விரும்புவார்களானால் என்னை  அவர்கள் ஆமோதிக்க வேண்டும். என் இனத்தின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். நான் இதனை உரக்கச் சொல்வதற்கு மன்னிக்கவும். நான் இருக்கும் இடத்திலேயே  மரப்பட்டைகளைச் சுரண்டித்  திண்பதில் திருப்தியடைய மாட்டேன். ஒரு சோம்பேறியைப்போல் பொந்தில் பதுங்கிக் கிடப்பதில் திருப்தி இல்லை. இறந்து போன மிருகங்களின் எலும்புகளையும் ஒரு மரத்திலிருந்து விழுந்த கனிகளையும் தின்பதிலும் திருப்தியில்லை.’ என முள்ளம்பன்றி சொல்கிறது.


அடிப்படையில் மனிதன் தேவையற்ற எண்ணங்களால் முடங்கிக் கிடக்கிறான். இதன் நீட்சியாகவே பொறாமை கோபம் வஞ்சம் என ஏராளமான உணர்வுகளுக்கு ஆட்பட நேர்கிறது.


இந்த நாவலில் கிபாந்தி மனிதர்களோடு மிக எளிதாக முரண்படுகிறான், பகைமை கொள்கிறான். யார் மீதெல்லாம் பகைமை கொள்கிறானோ அவர்களைக் கொலை செய்வதற்கு தனது இருண்மையான முள்ளம் பன்றியை பணிக்கிறான். ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விழுங்க வேண்டுமானால் பொறாமை, கோபம், விரோதம், அவமதிப்பு, இகழ்வு போன்ற வலுவான காரணங்கள் வேண்டும். சத்தியமாகச் சொல்கிறேன் நாங்கள் இதுவரை எவரையும் விழுங்கியதில்லை.’ முள்ளம் பன்றி மனிதர்களிடம் இருக்கும் பொறாமை வஞ்சத்தின் தீவிரத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறது.


வாய்மொழிக் கதைகளிலின் வேர்களிலிருந்து முளைத்து வளர்ந்திருக்கும் நாவலை நாம் எந்த நிலத்திற்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.  வன்முறை உலகம் முழுமைக்கும் பொருந்திப் போகக்கூடிய விசித்திரமான ஒற்றுமை கொண்டது. லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா என எல்லா நிலங்களிலும் அதற்கென இருக்கும் ஆன்மா ஒன்றுதான். அதனால் தான் வாய்மொழிக் கதைகள் ஒரேவிதமான தியாகங்களையும் சாகசங்களையும் வன்முறைகளையும் கொண்டிருக்கின்றன.  


இந்த நாவலில் முள்ளம் பன்றிதான் பேசுகிறது, கிபாந்தியின் மரணத்திற்கு குற்றவுணர்ச்சி கொள்கிறது. ஆனால் அவன் அமைதியாகவே இருக்கிறான்.   ஒரு பிரதியில் மனிதர்களுக்குப் பதிலாக மற்றமையின் குரல்களின் வழியாக கதை சொல்லப்படும் போது அதன் மீதான விரிவான வாசிப்பு அவசியம்.  மேலும் கொலை செய்வதை ஒரு சடங்காகப் பார்ப்பதால் வன்முறை குறித்து நமக்கிருக்கும் எளிய நம்பிக்கைகளோடு இந்தப் பிரதியை அணுக முடியாது. ஒரு ஒப்பீட்டுக்காக மார்க்வெஸின் நூற்றாண்டுகால தனிமை நாவலோடு பொருத்திப் பார்தோமானால் கதைசொல்லல் முறையில் நிறைய அடிப்படை ஒற்றுமைகளை நாம் காண முடியும். இந்த நாவலில் கதை சொல்லியே  நாவலாசிரியர்கள் பொய்களைச் சொல்லக் கூடியவர்கள் என்று  உதாரனமாக சில பிரதிகளை முன்வைக்கிறார். அதில் மார்க்வெஸும் வருகிறார்.


முள்ளம் பன்றி நாவலில் அந்த நிலத்தின் நினைவுகள் பன்றியின் மூலமாக வெளிப்படுகிறது. நூற்றாண்டுகால தனிமையில் ஒரு குடும்பத்தின் நினைவாக அந்த ஊரின் நூற்றாண்டுகால கதை சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நிலத்தில் கொலை ஒரு சடங்காகப் பார்க்கப் படுகிறது. ஆவிகளும் சாபங்களும் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சற்றேறக்குறைய மார்க்வெஸின் நாவலிலும் இறந்தவர்கள் மீண்டும் மக்காந்தாவில் அலைகிறார்கள்.  இங்கு முள்ளம் பன்றியின் அழுத்தங்கள் கிபாந்தேயின் மரணத்திற்குப்பின்னால் ஒரே இரவில் வெடித்து விடுகிறது. மார்க்வெஸின் நாவலில் அது தலை தலைமுறையாக தொடர்கிறது.


நீண்டகால இனக்குழு யுத்தங்களும், காலனிய சுரண்டலும் நிகழ்ந்த  அந்த நிலத்தின் கதையை நேரடியாச் சொல்லும்போது ஆவணத்தன்மையே மிஞ்சும். ஒரு கதை சொல்லி அதிலிருந்து துண்டித்துக் கொண்டு உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் சொல்லும்போது அது வெவ்வேறு நிலங்களின் கூட்டு நினைவுகளைப் பிரதிபலிக்கக் கூடிய பிரதியாக மாறுகிறது. இந்த நாவலில் காங்கோ என்பதை மறந்துவிட்டு நமது  நிலத்தின் பின்னனியில் சாதிய மற்றும் மதவாதக் கொலைகளின் பின்னனியில் வாசிப்பதற்கான சாத்தியங்களும் உண்டு.  இந்த பன்முகத்தன்மையும் பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைக் கொண்ட திறப்பும் தான் இந்த நாவலை முக்கியத்துவமாக்குகிறது.


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page