கிட்டி
- லக்ஷ்மி சரவணகுமார்

- 24 hours ago
- 8 min read

மழைக்கு விரித்திருந்த அழுக்குக் கோணியின் அடியிலிருந்து மருண்டு, விருட்டென விலகி ஓடிய பூனையை மணிமாறன் ஆத்திரத்தோடு எட்டி உதைத்தான். தனது இடது காலில் அப்பூனை நகத்தால் கீறியிருந்த இடத்திலிருந்து கசிந்துகொண்டிருந்த குருதியை எரிச்சலோடு எச்சில் வைத்து துடைத்துக் கொண்டவன் பூனை ஓடிய திசைநோக்கி மோசமானதொரு வசையை உதிர்த்தான். உடைமாற்றிக் கொண்டு குடிசைக்குள் ஈரம் படாத இடமாகத் தேடித் துணிகளை விரித்துப் படுத்துக் கொண்டான். இந்த நீண்ட மழையின் குளிருக்கு அடைக்கலம் வேண்டி அவனைப்போலவே தப்பி வந்திருந்த அப்பூனை தூரத்திலிருந்து எழுப்பிய மியாவ் ஒலி மழைச் சத்தத்தில் அவனை எட்டாமல் போனது.
பரந்த இப்பூமிப்பந்தில் அவனுக்கென மிஞ்சியிருக்கும் ஒற்றைக்கொரு போக்கிடம் அந்த சின்னஞ்சிறிய குடிசைதான். பல வருடங்களுக்குமுன் அவன் சிறுவனாயிருக்கையில் அவனது அப்பா கட்டியிருந்த இந்தக் குடிசை காற்றிலும் மழையிலும் வெயிலுலும் நிறையவே சிதிலமடைந்திருந்தது. இந்த மழை அந்தக் குடிசைக்கென மிச்சமிருக்கும் உயிரையும் தன்னோடு கரைத்துக் கொண்டிருந்தது. கனவுகளும் லட்சியங்களும் இல்லாத சிறுவனாய் இந்தக் குடிசைக்கு முன்னால் விளையாண்டுத் திரிந்த அவனது கடந்தகாலம் எல்லோராலும் கைவிடப்பட்ட அவனது இந்தக் கொடும் தனிமையில் பெரும் சுமையென நிழலாடியது.
பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையிலிருந்தவன் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி வந்தபோது அவன் வளர்ந்த இந்த ஊரும் மனிதர்களும் அந்நியமாகியிருந்தனர். சதானந்தபுரத்தில் மட்டுமில்லாமல் சென்னைக்கு வெளியே இந்தப் பகுதியில் நிறைய வடநாட்டவர்களையே பார்க்க முடிந்தது கட்டிட வேலைகள் துவங்கி, சாலை போடுகிறவர்களாகவும், உணவங்களில் பணி செய்கிறவர்களாகவும் பெரும்பாலான இடங்களில் அவர்களே இருந்தனர். சோர்வான களைத்த முகங்கள். பல வருட அழுத்தங்களைச் சுமந்து திரியும் அவர்களைப் பார்க்கையில் மணிமாறனுக்குத் தன்னையே பார்ப்பது போலிருந்தது. அவனது வீட்டிற்கு அருகில் இரண்டு பீஹாரிகளின் குடும்பமும், நான்கு ஒரிஸாக்காரர்களின் குடும்பமும் வசித்து வந்தனர். முதல் நாள் இவன் வீட்டைத் தெரிந்தபோது நீண்டகாலமாகப் பழகியவர்கள் இவனை அடையாளம் கண்டு விலகிப் போனார்கள். அடுத்ததாக இருந்த பீஹாரி குடும்பம் தான் வீட்டைச் சுத்தம் செய்யவும் கூரையை சரி செய்யவும் உதவினர். ‘நாங்க வந்து ரொம்ப நாளா இந்த வீட்டுல யாரையும் பாக்கல, வெளியூர் போயிருந்தீங்களா?’ என அந்த பீஹாரி கேட்டார். ‘ஆமா’ என்றான் மணி. ‘நாங்க எல்லாம் எங்க ஊருல இருந்து எங்க வந்திருக்கோம் பிழைக்க, நீங்க இங்க இருந்து வெளியூர் போயிருக்கீங்க..’ என பீஹாரி சிரிக்க, மணிமாறனும் சிரித்தான்.
அந்த வீதியிலும், ஊரிலும் சிறுவயது முதல் அவனோடு பழகியவர்கள் இவனை எதிர்கொண்டு பார்க்கிறபோது குறைந்தபட்சம் ஒரு புன்னகையைப் பகிர்ந்துகொள்வதைக் கூட தவிர்த்தனர். மனிதர்களை அவர்களது பிழைகளின் வழியாக மதிப்பிடத் துவங்கினால் இங்கு ஒவ்வொருவருமே தனித்திருக்க வேண்டியவர்கள்தான் என்கிற யதார்த்தம் புரியாமல் ஊர்க்காரர்கள் அவனை விட்டு ஒதுங்கினார்கள். சிறை வாழ்வின் தனிமை அவனது கடந்த காலத்தோடு அவனை முடிச்சிட்டு வைத்திருந்தது.
குடிசைக்குள் சொட்டிக் கொண்டிருந்த மழைநீர் விழுமிடமெல்லாம் சிறிய பாத்திரங்களை வைத்திருந்தான். பாத்திரத்தில் நீர் சொட்டும் சத்தம் மழையின் சத்தத்தை விடவும் அதிதீமாயிருந்தது. குடிசையின் இன்னொரு ஓரத்தில் கம்பளி விரித்து உடலைக் குறிக்கிப் படுத்திருந்தவனுக்கு பிற்பகல் வாங்கிய ப்ரெட் ஆம்லெட்டின் ஒரு துண்டு மீதமிருந்தது நினைவிற்கு வந்தது. நள்ளிரவிற்கு மேல் வரும் பசிக்கு அதைச் சாப்பிடலாமென படுத்திருந்தவன் இருட்டில் பாத்திரங்கள் உருட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். அந்தப் பூனை, அவன் மிச்சம் வைத்திருந்த ப்ரெட் ஆம்லெட்டை தின்று கொண்டிருந்தது. இவனது அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்தபோது இருளில் அந்தப் பூனையின் கண்கள் அபூர்வ வெளிச்சத்தோடு ஒளிர்ந்தன. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மியாவ் என ஒருமுறை ஈனஸ்வரத்தில் கத்த, தூக்கம் கலைந்த ஆத்திரத்தில் அதை விரட்டினான். பயந்து ஓடிவிடும் என்ற அவனது கணிப்பைப் பொய்யாக்கும் விதமாய் அது அவன் மேல் பாய்ந்தது. கைகளில் பூனையின் நகங்கள் கீறிவிட்ட ஆத்திரத்தில் அப்பூனையை கழுத்துடன் பிடித்து தூர வீசினான்.
கீழே விழுந்த பூனை அதே வேகத்தில் எழுந்து ஒரு சிறுத்தையின் தீவிரத்தோடு அவனைப் பார்த்து சீறியது. இருளில் அதன் கண்களில் தெரிந்த ரெளத்திரம் அக்னிக் குமிழ்களாய் ஜ்வலித்ததைக் கவனித்த மணிக்கு அந்த அக்னி பத்துப் பதினைந்து வருடங்களுக்குமுன் தனது கண்களில் தெரிந்த அதே அக்னிக் குமிழை நினைவுபடுத்த அவசரமாக வாரிச் சுருட்டி எழுந்து பூனையை நெருங்கினான். இருவரது கால்களிலும் வேட்டைக்கான ஆயத்தங்கள் தெரிந்தபோதும் அந்த அகால வேளையில் அவனோடு மல்லுக்கட்ட விரும்பாத பூனை குடிசையின் மூங்கில் கதவு வழியாய்த் தாவிக் குதித்துச் சென்றது… "சனியன், மனுசப்பயதான் நம்மள டார்ச்ச்சர் பன்றான்னா இதும் உசுர வாங்குது… ச்சை .." என்றபடியே கம்பளியை மீண்டும் ஒருமுறை சரி செய்து கொண்டு படுத்தான். பூனையின் வாயில் அகப்பட்டு எஞ்சி ஆங்காங்கு சிதறியிருந்த பிரட் ஆம்லெட்டின் சிதறல்களிலிருந்து அது கெட்டுப் போனதற்கான வாடை எழும்பியது.
பெருங்களத்தூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்களுக்கு ஆள் பிடித்துத் தரும் ஏஜென்ட்டான ராஜாஜியை இரண்டொரு தினங்களுக்கு முன் தற்செயலாக பார்த்த மணி தனக்கொரு வேலை ஏற்பாடு செய்யும்படி கேட்டிருந்தான். இருபது வருடங்களுக்கு முன் வெளியூரிலிருந்து வந்த ராஜாஜிக்கு மணிமாறன்தான் ஒரு டெய்லர் கடையில் வேலை வாங்கி தந்தான். ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்த மணி ஒரு முக்கிய கட்சியின் உள்ளூர்ப் பொறுப்பிலிருந்தான். கட்சி வேலைகளில் அவன் காட்டிய ஈடுபாடு காரணமாய் மக்களிடையே நல்ல மதிப்பிருந்தது. தன்னிடம் உதவியென்று வந்தவர்களுக்கு யோசிக்காமல் உதவி செய்யும் இயல்புடைய மணிமாறனுக்கு அதே இயல்புதான் அவனை சிறைக்கும் அனுப்பப் போகிறது என்பது அன்று புரியவில்லை.
சண்முகம் டெய்லர் ஷாப்பை "ராஜாஜி மென்ஸ் ஸ்பெஷலிஸ்ட் டெய்லர்ஸ்" என்று மாற்றும் அளவிற்கு ராஜாஜி வளர்ந்திருந்தான். நீண்ட காலத்திற்குப்பின் மணிமாறனை பார்த்தாலும் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு, " எப்டிணே இருக்க, எப்ப வந்த" என்று ஆறுதலாகப் பேசினான். மணிமாறனுக்கு மனமும் உடலும் கூசிப்போனது. யாருக்கும் தன்னை அடையாளம் தெரியாமலிருப்பது வருத்தமாக இருந்தது போய் இப்பொழுது அது மிகவும் தேவையாக இருந்தது. "என்னண்ணே ஒரு மாதிரி பாக்குற..என்னதான் இன்னிக்கு நான் வளர்ந்துட்டாலும் ஒனக்கு நான் அதே பழைய ராஜாஜிதான்.” என்று சிரித்தான். ”எனக்கு ஏதாச்சும் வேல இருந்தா சொல்லு ராஜா. மார்க்கெட்ல அங்க இங்கன்னு கேட்டேன்.. ஒருத்தனும் வேல குடுக்க மாட்டேங்குறான்...” என்று விரக்தியுடன் மணி கேட்க ‘இதுக்கு ஏண்ணே கூச்சப்படற… நான் பாத்துக்கறேன்..’ என ராஜாஜி நம்பிக்கையளித்தான்.
அவனது கண்களில் தெரிந்த கருணை நிஜமா போலியா? தன்மீதான ஏளனமாக இருந்திருக்குமா என பலவாறாக யோசனைகள் இவனுக்கு. அப்படி யோசிக்கும் பொழுதெல்லாம் கசப்பின் சுவை மனதில் கூடிவிடுவதை தவிர்க்கமுடியவில்லை. "இந்த யோசனை எல்லாம் அப்ப இருந்திருந்தா என் வாழ்க்க இப்பிடி ஆகி இருக்காதுல்ல…’ அவனுக்குள்ளிருந்த இன்னொரு மனிதன் தூங்கவிடாமல் செய்யும் சாத்தானின் குரலை எழுப்பினான்.
2
பணிரெண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் அது. சதானந்தபுரத்திலிருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் இயங்கிக் கொண்டிருந்த சிறிய தொழிற்சாலையில் வள்ளி வேலை செய்துகொண்டிருந்தாள். மணியோடு திருமணம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் குழந்தைகள் இல்லாதபோதும் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. கேலியும் கிண்டலும் நிரம்பிய அவர்கள் வாழ்க்கை அசோக்கின் வருகையினால் சீர் குலையத் துவங்கியது. அவனது ஷேர் ஆட்டோவில் தான் வள்ளி தினமும் வேலைக்குச் சென்று வந்தாள். முதல் சில நாட்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டவர்கள் விரைவிலேயே நெருங்கிப் பழகத் துவங்கிவிட்டிருந்தனர். கட்சி வேலைகளுக்காக அடிக்கடி வெளியூர் சென்று கொண்டிருந்த மணி இல்லாத நேரங்களில் அசோக் அவளைத் தேடி வீட்டிற்கு வரத் துவங்கினான்.
அக்கம் பக்கத்து வீடுகளில் அவர்களது உறவு கிசுகிசுக்கப்பட்டதை சில நாட்களிலேயே மணியும் தெரிந்துகொண்டான். ‘எல்லாரும் ஒரு மாதிரி பேசறாங்க… என்ன செஞ்சுட்டு இருக்க நீயி…’ என அவளைக் கண்டித்தபோது ‘இந்தா ஊர்ல இருக்கவன் ஆயிரம் சொல்லுவான். நீ நம்பிடுவியா? அந்தப் புள்ள எனக்குத் தம்பி மாதிரி…’ என ஆத்திரப்பட்டாள். எல்லோருடனும் இயல்பாக சிரித்துப் பேசும் அவளது குணம் தெரிந்ததால் மணியும் அதற்குமேல் பொருட்படுத்தியிருக்கவில்லை. அந்த வருட தீபாவளிக்கு துப்பாக்கித் திரைப்படம் வெளியாகி ஊர் உலகமேக் கொண்டாடிக் கொண்டிருந்தது. மணி குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் வள்ளியோடு படம் பார்க்கச் சென்றபோது பின் வரிசையில் அசோக்கும் இருப்பதைக் கவனித்தான். தன் மனைவியின் மீதான சந்தேகத்தின் முதல் விதை அப்போதுதான் விழுந்தது. ஓரிரு நாட்களிலேயே அந்த உறவை அவன் உறுதி செய்துகொண்டபோது முதலில் ஆத்திரம் கொண்டான். தனது அலைபேசியை அணைத்துவிட்டு மூக்குமுட்ட குடித்தவன் வீட்டையொட்டி இருந்த மலையடிவாரத்தில் சென்று உறங்கிவிட்டான்.
அடுத்தநாள் விழித்தபோது எந்தக் குழப்பமும் இல்லை. விருப்பமில்லாத பெண்ணோடு ஒரே வீட்டில் இருக்கக்கூடாதென முடிவு செய்தவன் ‘வள்ளி, எனக்கு எல்லாம் தெரியும்.. நீ என்னய ஏமாத்தறதா நெனச்சிக்கிட்டு ஒன்னயும் ஏமாத்திக்காத… அந்தப் பயலப் புடிச்சிருக்குல… கெளம்பு நீ அவன் கூடயே போயிரு…’ என்றான். வள்ளி அழவோ சண்டையிடவோ இல்லை. ‘ஆமா அவனப் புடிச்சிருக்கு. அதுக்காக அவன்கூட என்னால போயி வாழ முடியாது. இந்த உடம்புக்கு அவன் வேணும். அப்பிடி வேணுங்கறப்போ அவன்கிட்ட போயிக்குவேன். ஆனா உங்கூட தான் இருப்பேன். நீதான் எனக்குப் புருஷன்.; என அழுத்தமாகச் சொன்னாள். ஏற்கனவே குழம்பிப் போயிருந்தவனுக்கு அவளது பதில் ஆத்திரமூட்டியது. ‘ஏய் என்னாடி பைத்தியக்காரக் கூதி மாதிரி பேசிட்டு இருக்க. புருஷனும் வேணும்… மேட்டருக்கு இன்னொருத்தனும் வேணும்னா என்னாடி அர்த்தம்… ச்சீய்…’ எனக் கத்தினான். ‘ஏன் ஊருல எத்தன ஆம்பள இப்பிடி இருக்கான்… அவனுக்கெல்லாம் நியாயம்னா எனக்கும் இது நியாயம் தான்.’ என்றாள். ஓங்கி அறைந்தவன் ‘த்தா ஒன் மொகரையப் பாக்கவே புடிக்கல எனக்கு..’ என திட்டிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.
பிற்பகல் அலைபேசியில் அழைத்தவள் ‘சோறாக்கி வெச்சிருக்கேன் வந்து சாப்பிட்டுப் போ…’ எனச் சொன்னாள். வீட்டிற்குப் போக மனமில்லாமல் கண்ணில் பட்ட முதல் பேருந்திலேறி வடலூருக்குச் சென்றான். முழு இரவும் அடுத்த நாள் பகலும் தருமசாலையிலேயேக் கிடந்தவன் அமைதியாக தன்னை வருத்திக் கொண்டான். வள்ளியின் அழைப்புகளைத் தவிர்த்தான். இரண்டு நாட்களுக்குப்பின் வீடு திரும்பிய போது குடும்ப வாழ்க்கையின் மீது அவனுக்கு முற்றிலுமாக பற்றுதல் இல்லாமல் போனது. இருட்டிய நேரமாக அந்த வீதிக்குள் அவன் நுழைந்தபோது ஒரு ஆணும் பெண்ணும் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டது.
நெருங்கிச் சென்றபோது வள்ளியை அவனது காதலன் அடித்து உதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். ‘த்தா… அந்த பொட்டதான் ஒன்னய எங்கூட போ சொல்லிட்டான்ல… அப்பறம் என்னாத்துக்குடி இங்கயே இருக்க… வான்னு கூப்ட்டா வரமாட்டியா…’ எனக் கேட்டபடியே உதைத்தான்.
‘வரமாட்டேன். எனக்கு என் புருசன் கூடதான் இருக்கனும்..’ என வள்ளி தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்தச் சண்டையை அருவருப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். வள்ளியின் நிலையைப் பார்த்ததும் ஆத்திரம் கொண்ட மணி குழி தோண்ட ஊன்றி வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக ஓடினான். ‘ங்கொம்மால என் வீட்டுல வெச்சு என் பொண்டாட்டிய அடிப்பியா நீயி..?’ என்றபடியே கம்பியால் ஓங்கி அடிக்க, அசோக் சரியான நேரத்தில் குனிந்துகொண்டான். கம்பி வீசிய வேகத்தில் அசோக்கைப் பிடித்திருந்த வள்ளியின் தலையில் ஓங்கி அடித்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. சில நொடிகளிலேயே வள்ளி ரத்தவெள்ளத்தில் இறந்து போனாள். அசோக் அந்த இடத்திலிருந்து ஓடிவிட, ஒரு நொடியில் இருண்டபோன தன் வாழ்க்கையை நினைத்துக் கதறியழுத மணி தன் மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டான்.
3
துக்கம் பசியை மீறிச் சென்றதால் தான் வாங்கி வந்திருந்த பிரிஞ்சி சாதத்தைப் பிரிக்க மனமின்றி அப்படியே விட்டுவிட்டான். குழப்பத்தால் வீழ்த்தப்பட்டிருந்தவனின் கவனத்தை வீட்டினுள்ளிருந்து வந்த பூனையின் சத்தம் திசைதிருப்பியது. இம்முறை அவன் எதையோ எதிர்பார்த்தவனாக வீட்டிற்குள் சென்றான். பூனை மீண்டும் அவனது உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கும் முயற்சியோடு தன் காலால் அதனை தட்டி உதைத்துக் கொண்டிருந்தது. ஒருவித அயர்ச்சியோடு அதனைப் பார்த்த மணி, ‘உனக்கு என்ன வேணும்? என் சோறு தான…. இந்தா நீயே திண்ணு..’ என சொல்லியபடி பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். அவனையும் உணவுப் பொட்டலத்தையும் பார்த்தபடியே பூனை தன் குட்டி நாக்கால் உடலை சுத்தம் செய்து கொண்டது. "உன்னுடன் போராடி உணவைப் பெறுவதில்தான் எனக்கு ஆனந்தம்" என்பது போல் உணவைத் தொடாமல் அமைதியாக ஒரு மூலையில் பூனை அமர்ந்துகொள்ள மணியும் எதுவும் செய்யாமல் படுத்துவிட்டான். நள்ளிரவில் ஒருமுறை உறக்கம் களைந்து எழுந்து பார்த்தான். உணவு அப்படியே இருக்க, பூனை தான் அமர்ந்திருந்த இடத்திலேயே ஒரு துறவியைப்போல் கண்மூடி உறங்கிக் கொண்டிருந்தது.
மறுநாள் அதிகாலையில் கிளம்பி ராஜாஜி கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தான். இன்னும் பனி விலகாத அந்த காலை வேளையில் ராஜாஜி தலையில் குரங்கு குல்லா அணிந்து கொண்டு கையில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டிருந்தான். "வாண்ணே… ஏன் லேட்டு? கொஞ்ச நேரத்துல வண்டி வந்துரும். நீ என்ன பண்ணனும்னா, கஸ்டமர்ஸ கூட்டிட்டு போய் நம்ம "மங்களா நகர்" பிளாட்ட சுத்தி காமிச்சுட்டு, இன்னிக்கு முழுசும் அவங்க கூட இருக்கனும். டீ, சாப்பாடு எல்லாம் அரேஞ்ச் பண்ணிருக்கு. அவங்களுக்கு எல்லாம் குடுத்துட்டு மதியத்துக்கு மேல அங்கருந்து கெளம்பி நேரா நம்ம கிள்ளி வளவன் அரிசி கடைக்கு அவங்கள கூட்டிட்டு வந்துரணும். முக்கியமா பக்கத்துல சுடுகாடு இருக்குற விசயம் கஸ்டமர்ஸுக்கு தெரிஞ்சுக்காமப் பாத்துக்கனும். அண்ணாச்சி மத்த விசயத்த பாத்துப்பாரு. வாரத்துக்கு ஆறு நாள் வேலை இருக்கும். செவ்வாய்க்கிழமை மட்டும் லீவு. டெய்லி பேட்டா கணக்குப் போட்டு நான் உனக்கு மாசம் முடிஞ்சதும் குடுத்துருவேன்" என்று ராஜாஜி விலாவரியாக அவனுக்கு வேலையை எடுத்துச் சொல்ல மணி கவனமாகக் கேட்டுக் கொண்டான். “அண்ணே அப்பப்ப சீரியல் நடிகையெல்லாம் ஷுட்டிங்கு வருவாங்க, ஜாலியா இருக்கும்…” என்று கண் சிமிட்டிய ராஜாஜியை அருவருப்பாக பார்த்தான் மணிமாறன். நாற்பத்தைந்து வயதுவரை எந்தவொரு அர்த்தமுமில்லாமல் வாழ்ந்து கழித்து விட்ட மணிக்கு இப்போது எதன் மீதும் பிடித்தமில்லாதிருந்தது.
"சென்னைக்கு மிக அருகில், விமான நிலையத்திலிருந்து பத்து நிமிட தொலைவில் உங்களுக்கான இல்லம். மங்களா நகரில் உங்களுக்கான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, உடனே வந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்" என புகழ்பெற்ற சீரியல் நடிகர்கள் பேருந்தின் தொலைகாட்சியில் பேசிக் கொண்டிருந்தனர். மங்களா நகரை பார்வையிட வந்தவர்களை ஏற்றிக்கொண்டு தனது முதல் நாள் வேலையைத் தொடங்கினான் மணிமாறன். நாள் முழுதும் நின்று கொண்டே அனைவருக்கும் மங்களா நகரின் அனைத்து பிளாட்டுகளையும் சுற்றிக் காண்பித்து அவர்களது எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, சிற்றுண்டி கொடுப்பது, கழிப்பறை அழைத்துச் செல்வது என எல்லா வேலைகளையும் அவன் தனியாக செய்ய வேண்டியிருந்தது.
வந்தவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர். தனது மகளுக்கு திருமணச் சீராகவோ, மகனின் எதிர்காலத்திற்காகவோ மனை வாங்க வந்திருந்த பெற்றோர்களின் அன்பும், புதுமண தம்பதியினரின் பூரிப்பும், சிறு குழந்தைகளின் குதூகலமும் மணிமாறனை நிலைகுலையச் செய்தன. தான் வாழ்வின் எந்த நிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்று புரியாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் முகம் கோணாமல் பதிலளித்தான். அவர்களை அண்ணாச்சியின் ஆஃபீஸில் இறக்கி விட்டபின் ராஜாஜியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தபோது உலகம் தன்னிடமிருந்த எல்லா மகிழ்ச்சியையும் பிடுங்கிக் கொண்ட உணர்வு பெரும் பாரமாய் அழுத்தியது.
தன்னை மீறிக் கசிந்த கண்ணீர்த் துளிகளைப் பொடுபடுத்தாமல் தலையணையில் முகம் புதைத்து உறங்கிப் போனான். அவனது கடந்த காலம் கனவைப் போல் கண் முன்னால் விரிந்தது. ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் பல காட்சிகள் தோன்றி மறைந்தன. திடீரெனக் காலடியில் ஏதோ சுரண்டுவது போல் தோன்ற திடுக்கிட்டு எழுந்தவனை பார்த்து கத்தியது பூனை. அதன் கூரான பற்களுக்கு நடுவே குட்டிக் குட்டியாய் இப்போதுதான் அரிசி மணிப் பற்கள் வளரத் துவங்கியிருந்தன. மணிமாறன் பூனையை வெறித்துப் பார்த்தான். அது தொடர்ந்து கத்தியது. எழுந்து சட்டையை அணிந்து கொண்டவன் கதவைத் திறந்து பார்த்தபோது நேரம் நடு நிசியை கடந்திருந்தது. தெருவில் ஒன்றிரண்டு நாய்களைத் தவிர வேறு நடமாட்டம் இல்லை. மணிமாறன் பூனையை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டு வேகமாக நடந்தான். பூனை அவனது பிடியில் லாவகமாக அமர்ந்திருந்தது. வீட்டிலிருந்து அவன் நடையின் தூரம் அதிகரிக்க, பூனை அவசரமாய் உடலை அசைத்து அச்சத்தில் கத்தத் துவங்கியது… ‘இந்த ஊருல நிறைய வீடு இருக்கு… வேற எங்கியாச்சும் போ… இனிமே என் எடத்துக்கு வராத…’ என்றபடியே அதனை ஊரின் கடைசி எல்லையில் விட்டான்… கீழே குதித்து நின்ற பூனை ஒருமுறை அவனைப் பார்த்து துயர்மிக்க குரலில் கத்தியது. திரும்பிப் பார்க்காமல் வேகமாய் வீட்டை நோக்கி நடந்தவனின் நாசியை தாக்குவதுபோல் தூரத்திலிருந்து பிணம் எரியும் வாடை காற்றில் கலந்து வந்தது.
மறுநாள் மீண்டும் அதே வேலை. புதிய கஸ்டமர்கள். மங்களா நகர் மனைகளை வாங்க வந்தவர்களுக்கு மனைப் பகுதிகளை காண்பித்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு சிறுமி பூனை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். மணிமாறனுக்கு ஒரு நொடி தன் வீட்டிற்கு வந்த பூனையின் பிம்பம் தோன்றி மறைந்தது. அடுத்த நிமிடமே அவன் அதை மறந்தும் போனான். இரண்டு மூன்று நாட்கள் இயல்பாகவே கழிந்தன. அவனும் தூங்கி எழுந்து வேலைக்கு சென்று வீடு திரும்பினான். அப்படி திரும்புகையில் தன்னையுமறியாமல் தன் மனம் எதையோ தேடுவதை உணர்ந்த மணிமாறன் அது என்னவென்று புரியாமல் தவித்தான். அன்றிரவு திடீரென உறக்கம் கலைந்து எழுந்தவன் பூனை கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அங்கு பூனையில்லை. அடுத்தடுத்த நாட்களும் பூனையை நினைவுப்படுத்துவது போன்ற நிகழ்வுகள் நடந்தன. டீ கடையில் ப்ரெட் ஆம்லெட் வாங்கி வந்தவன் ஒரு துண்டை மீதம் வைத்து விட்டு உறங்கச் சென்றான். நடு இரவில் மெதுவாக கண்விழித்து அந்த பூனை வந்திருக்கிறதா எனப் பார்த்தான். அதன் குரல் கேட்கவில்லை. அதன் சுவடுகள் அடியோடு மறைந்து போயிருந்தன.
சில நாட்கள் கழித்து மங்களா நகருக்கு ஆட்களை அழைத்து சென்ற பொழுது வழியில் அவன் பூனையை விட்டு வந்த இடத்தைக் கடந்தபோது அவனையுமறியாமல் அவனது கால்கள் அத்திசையில் திரும்பின. வேலையை மறந்து அவன் பூனையைத் தேடியதைக் கண்டு அவனுடன் வந்தவர்கள் சந்தேகமாகப் பார்த்தனர். மனை பார்க்க வந்தவர்கள் மணிமாறன் தங்களுக்கு சரியாக சுற்றிக் காட்டவில்லை என்று கிள்ளி வளவனிடம் புகாரளித்தனர்.
’அண்ணே நீ ரொம்ப கேட்டன்னு தான் இந்த வேலைக்கு உன்னைய சொன்னேன்..நீ என்னடான்னா இப்டி பண்ற" என ராஜாஜி அவனிடம் கோவமாகக் கேட்க, "ஒண்ணுல்லடா… இன்னிக்கி என்னமோ மனசு சரியில்ல" என்று கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான். வழி நெடுகிலும் பூனையை தேடிக் கொண்டே வந்தான். தன் வீட்டைச் சுற்றி தேடினான். அது தென்படாது போன ஏமாற்றத்தில் மனம் கனத்துப் போனது. எதை தனது நிம்மதிக்கு கேடு விளைவிப்பதாக நினைத்தானோ அதே உயிருக்காக இன்று அவன் தவித்துக் கொண்டிருந்தான். அது நடந்து போன தடங்களைத் தேடினான். அதன் குரல் கேட்டாற் போல் பலமுறை எழுந்த போதும் அது இல்லாமல் போன வெறுமை மட்டுமே மிஞ்சியிருந்தது. எவ்வளவு கடிந்து கொண்டாலும் உரிமையோடு தன்னைச் சுற்றி வந்த அந்த ஜீவனை வெறுத்து விரட்ட எப்படித் தோன்றியது என்று தன்னைத்தானே பழித்தான். "எல்லோரும் கைவிட்டுச் சென்ற உன்னுடன் நான் மட்டும்தானே இருந்தேன். என்னை நீ ஏன் கைவிட்டாய்" என்று அந்த பூனை கேட்பது போலிருந்தது. "ஒரு வேளை அந்த பூனைக்கு எதாவது ஆபத்து நேர்ந்து மடிந்து போயிருந்தால்" என்று நினைத்த போதே அவன் கண்கள் கலங்கின. நெடுநாட்களுக்குப் பிறகு கோவில் ஒன்றை கடந்த பொழுது ஒரு நொடி நின்று கைக்கூப்பி வேண்டினான். "எங்கருந்தாலும் திரும்ப என்கிட்ட வந்துரு" என்று வேண்டினான்.
மறுநாள் காலை வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். வாசலில் மண் அடுப்பில் நெருப்பு மூட்டி அதில் தண்ணீர் சுட வைத்தான். அவன் குளிப்பதற்காக தயாரான போது ஒரு சத்தம் கேட்டு திரும்பினான். அங்கு பூனை நின்றிருந்தது. மிகவும் பலவீனமாக உடல் முழுதும் காயங்களுடன் வந்து நின்ற அதைப் பார்த்ததும் கலங்கிப் போனான். அதை வாரி அணைத்துக் கொள்ள நெருங்கியபோது அச்சத்தோடு அவனைப் பார்த்து சீறியது. அவசரமாக குடிசைக்குள் ஓடிப்போய் முந்தைய இரவு பூனைக்கென மிச்சம் வைத்திருந்த பிரட் ஆம்லெட்டை எடுத்து வந்து அதை நோக்கி நீட்டினான். சில நொடிகள் தயக்கத்தோடு அவனைப் பார்த்தபடியே நின்ற பூனை மெல்ல நடந்து வந்து பிரட் ஆம்லெட்டைக் கவ்விக் கொண்டது. நெற்றியிலும் முதுகிலுமிருந்த காயத்தை விரல்களால் அவன் தொட்டபோது பூனை உடலை சிலிர்த்தது. ஆனால் அவனிடமிருந்து விலகவில்லை. தொலைந்த மகிழ்வெல்லாம் திரும்ப கிடைத்தது போல் உணர்ந்தவன் அன்று உற்சாகமாக வேலைக்குச் சென்றான். வீடு திரும்புவதற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டதாக உணர்ந்தான். அன்று மாலை ப்ரெட் ஆம்லெட்டும், கோழிக் கறி துண்டங்களும் வாங்கி வந்தான். அதை பூனையின் முன் வைத்தான். நெடுநேரமாகியும் அது உணவைத் தொடவில்லை. சற்று யோசித்தவனாக, ப்ரெட் ஆம்லெட்டின் ஒரு துண்டை கையில் எடுத்தான். உடனே பாய்ந்து வந்து அதைப் பிடுங்கித் தின்றது. அவன் சிரித்தான். அவர்கள் இருவரின் விளையாட்டு தொடர்ந்தது. பிரட் ஆம்லெட்டை பாதியிலேயே விட்டுவிட்டு தலையை உயர்த்தி அவனது கண்களைப் பார்க்க, அவன் ஒரு கையால் அப்பூனையை வாரி எடுத்தான். மருண்ட கண்களால் தன்னை உற்று நோக்கிய அந்தப் பூனையை முத்தமிட்டவன் அதற்கு கிட்டி என பெயரிட்டான்



