top of page

பன்றி வேட்டை நாவலுக்கு வந்த ஒரு வாசிப்புக் குறிப்பு.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 22 hours ago
  • 4 min read

ree

எல்லா வேட்டைகளின் முடிவையும் காடு தான் தீர்மானிக்கிறது என்று இந்த புத்தகத்தின் அட்டை படத்தில் தெரிவித்திருக்கிறார். வேட்டையில் தொடங்கி வேட்டையில் முடிவடைகிறது இந்த கதைக்களம்.


நாவலை வாசிக்க வாசிக்க ஒருவேளை இந்த நாவல் திரைப்படமாக வெளிவந்தால் எப்படி இருக்கும் என்று பல காட்சிகளை நான் கற்பனை செய்து பார்த்தேன். எழுத்தின் மூலமாகவே வனத்தை நமக்கு காட்டுகிறார் எழுத்தாளர். ஒரு வேட்டைக்காரனின் துப்பாக்கியை வர்ணிக்கும் விதமே நாமும் வேட்டையாடலாமோ என்கிற ஆசையை தூண்டுகிறது.


வனத்தில் வேட்டைக்கு செல்வதென்றால் மிகவும் எளிதான காரியம் அல்ல என்பதை இந்த நாவல் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பல்வேறு இடர்பாடுகளை கடந்துதான் ஒரு வெற்றி மிகுந்த வேட்டை முடிவடைகிறது. வேட்டையாடுவதில் ஒன்று வேட்டையாடப்படும் விலங்கு உயிரிழக்கும் இல்லையெனில் வேட்டையாடுபவனின் உயிர் இழப்பு ஏற்படும்.


 கதைக்களம் 1970 இல் நடப்பது போல் இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் நிலவிய சமுதாய கட்டமைப்பு, நிலவுடைமை முறை, ஜமீன் ஆட்சி முறை, ஜமீனில் அடிமைகளாக சிக்கி தவிக்கும் மக்கள், அதிகாரத்துக்கு எதிராக போராடத் துணியும் மக்கள், என பலவற்றை இந்த நாவல் மூலமாக ஆசிரியர் நமக்கு காட்டி இருக்கிறார்.

நாவலின் முக்கால்வாசி பக்கங்கள் வனத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. அந்த பகுதிகளை வாசிக்கும் பொழுதெல்லாம் வனத்தினுடைய அமைதியை உணர்ந்து கொள்ள முடிகிறது. மயிலின் அகவல் கேட்கிறது, யானையின் பிளிறல் கேட்கிறது, எண்ணற்ற விலங்குகளின் இருப்பை அந்தப் பக்கங்களில் நாம் உணரலாம்.

முக்கியமாக வனத்தையே நம்பி இருக்கக்கூடிய ஒரு மக்களைப் பற்றி பேசி இருக்கிறார். களவு போன தங்களின் தெய்வத்தை அவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றனர்.


 ஒட்டுமொத்த ஊரையும் ஜமீன் கட்டுப்படுத்துகிறது. வீரணன் ஜமீன் மற்றும் அவருடைய மகன் கண்ணன் இருவரும் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு பல்வேறு வகையான அட்டூழியங்களை அந்த ஊர் முழுவதும் செய்கின்றனர். கண்ணில் படும் பெண்களை எல்லாம் சுவைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான் கண்ணன்.

நாவலில் ஒரு கட்டத்தில் அந்த அடிமை மக்கள் எப்பொழுது எழுந்து வருவார்கள் எப்போது அரண்மனையை எதிர்த்துப் பேசுவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படுகிறது. மிகவும் குறைவான கதாபாத்திரங்களே நாவலில் வலம் வருகிறார்கள். அரண்மனையை சார்ந்து இருக்கக்கூடிய அடிமைகள் தங்களுக்குள்ளே பல வகையான சக்திகள் வைத்திருந்தாலும் தக்க சமயத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிமைகள் எல்லாரும் அந்த அரண்மனையினுடைய வேலையாட்கள்தான். ஆனால் மீனுக்காக காத்திருக்கும் கொக்கை போல அரண்மனை வாசிகளை பழிவாங்க காத்திருக்கின்றனர்.


 கண்ணனும் வீரணுனும் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் சொல்லில் அடங்காதவை. வீரணனை விட கண்ணன் ஒரு படி அதிகபடியான தவறான எண்ணம் கொண்டவனாக வலம் வருகிறான். அதிகாரத்துக்கு வர துடிக்கிறான். அதற்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்ல முடிவெடுக்கிறான்.

முக்கியமாக பழனி என்கிற கதாபாத்திரத்தை கச்சிதமாக காய் நகர்த்தி கொன்று வீழ்த்தி விடுவான். தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டே இருக்கும் ஒரு அடிமைக்கு கோபம் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் பழனி கதாபாத்திரம். அரண்மனை வாசிகள் என்றும் பாராமல் நேருக்கு நேராக மோதி விடுவான்.


ஊரின் மையப் பகுதியிலேயே யாரும் தொட்டுக் கூட பார்க்காத, நேருக்கு நேராக பார்க்க பயப்படுகிற அரண்மனை வாசிகளோடு தன்னுடைய நியாயத்தை நிலை நிறுத்தி காட்டுவதற்கு போராடுகிறான்.


 பெண்ணாசை யாரை தான் விட்டது. இந்த நாவலிலும் இரண்டு நபர்கள் வருகிறார்கள் சொல்லப்போனால் அவர்கள் பெண் பித்தர்கள். ஊரில் அவர்கள் தொடாத பெண்களே இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகி விடுவார்கள். அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் அரண்மனை வாசிகளுக்கு ஆதரவாக இருப்பதினால் கையறுப்பு நிலையில் தவிக்கிறார்கள் அவர்கள் எல்லாரும்.

தங்கள் ஏற்படக்கூடிய அநீதியை எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாத அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். கேள்வி கேட்கும் நபர்களுக்கு ஊரின் மையப் பகுதியில் தண்டனை வழங்கப்படுகிறது. சாட்டையடியாக இருக்கும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஊரை வலம் வர வைப்பார்கள்.


இந்த கதை களம் முழுவதும் அரண்மனை வாசிகளை தக்க சமயம் பார்த்து பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியது. தங்களுடைய கடவுளை களவு கொடுத்துவிட்டு மீண்டும் வரும் கடவுளை எதிர்பார்த்து நிற்கும் மக்களைப் பற்றியது.

 நாவலின் தொடக்கம் ஒரு வேட்டைக்கு செல்வது போல் அமைகிறது. வேட்டைக்கு செல்லும் அனைவருக்கும் ஒரு ரகசியம் தெரிந்திருக்கிறது கண்ணனைத் தவிர. அந்த ரகசியத்தை காட்டில் வைத்து நிகழ்த்துவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மர்மமான ரகசியம் என்னவென்று அறிந்து கொள்ள நாம் நாவலை இறுதிவரை வாசிக்க வேண்டி இருக்கிறது.


மகனை கொள்ளை துடிக்கும் அப்பனையும் அப்பனை கொள்ள துடிக்கும் மகனையும் அதிகாரத்துக்கு வர துடிக்கும் மகனையும் அதிகாரத்துக்கு வந்து விட்டால் தன்னுடைய மதிப்பு குறைந்துவிடும் என பயப்படும் அப்பனையும் இந்த கதையில் நாம் பார்க்கலாம்.

வள்ளி என்கிற கதாபாத்திரம் தன்னுடைய காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறாள். தக்க சமயம் பார்த்து பழி வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்வாள் வள்ளி. தன்னுடைய கணவன் என்ன ஆனான் என்பதையே வள்ளி தெரிந்து கொண்டிருக்க மாட்டாள்.

 நாவலின் தொடக்கத்திலேயே ஒரு அரண்மனை என்றால் எப்படி இருக்கும்...? அந்த அரண்மனை வாசிகளுடைய அன்றாட நிகழ்வுகள் என்ன..? அவர்கள் நட்பு வட்டாரம் மற்றும் அதிகாரத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளின் வட்டாரம் எப்படி இருக்கும், அரண்மனையினுடைய வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என ஒரு அரண்மனையை நமக்கு மிகவும் சிறப்பாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.


அரண்மனைக்கும் அரண்மனைக்கு சொந்தமான ஏக்கரக்கணக்கான வனத்திற்கும் ஒரு ஒரு பகை இருக்கிறது. அந்த பகை அரண்மனையினுடைய முன்னாள் ஜமீனால் ஏற்படுகிறது. அந்தப் பகை எப்படி தீர்க்கப்படுகிறது, யாரால் தீர்க்கப்படுகிறது, அரண்மனைக்கும் வனத்திற்கும் இடையே இருக்கும் பகை முறிந்ததா இல்லையா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.


அரண்மனை என்றாலே தன்னுடைய மக்களை அடிமைகளாக என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த கதை நாவலில் வரக்கூடிய ஜமீன்கள்.

 முக்கியமாக இந்த நாவலில் பேசப்பட வேண்டிய ஒன்று பன்றி வேட்டை. உண்மையில் பன்றியை வேட்டையாடும் காட்சிகளை வாசிக்கும் பொழுது பன்றி பன்றியாக தெரியவில்லை ஒரு சிங்கமாக தெரிகிறது ஒரு புலியாக தெரிகிறது. தன்னை தாக்கியவனை தாக்கியே தீர வேண்டும் என்கிற குறிக்கோளுடன் தாக்குவதற்கு முன்னேறி வருகிறது.


யானை, சிறுத்தை,புலியென வேட்டையாடிய ஜமீனால் ஒரு பன்றியை வேட்டையாட முடியாமல் போய்விடுகிறது. மேலும் பன்றி முட்டி மிகுந்த காயத்துக்கு ஆளாகி விடுகிறான் வீரணன் ஜமீன். நாவலின் இறுதிவரை ஜமீனால் ஒரு பன்றியை கூட வேட்டையாட முடியாமல் போய்விடுகிறது ஏனென்றால் பன்றி அங்க வசிக்கக்கூடிய ஒரு வனவாசிகளுக்கு தெய்வமாக விளங்குகிறது.


நாவலளுடைய இறுதிக்கட்டத்தில் இரண்டு பன்னிகள் சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு நபர்களை சமாளிக்கும் காட்சியை வாசிக்கும் பொழுது மிகவும் அற்புதமாக இருக்கும். ஒரு மரத்தினுடைய பொந்திலிருந்து இரண்டு பன்றிகளும் மூர்க்கமாக வெளிவரும் காட்சியை நாம் உணர்ந்து வாசித்தோமேயானால் அதை நன்கு உணரலாம்.

 நாவல் முழுக்க நாம் வனத்திலே பயணப்பட்டுக் கொண்டிருப்பது போலவே இருக்கும். வேட்டையாடுதல் என்பது இந்த கதை காலத்தினுடைய மிக முக்கியமான கரு. வேட்டையாடுதல் என்பது மிருகமாக இருக்கலாம் மனிதனாகவும் இருக்கலாம்.

இந்த நாவலில் இந்த இரண்டு வகையும் உண்டு. மிருகங்களை வேட்டையாடும் மிருககுணம் படைத்தவர்களையும் மனிதனை வேட்டையாடும் மிருககுணம் படைத்தவர்களையும் இந்த நாவலில் ஒரு சேர நாம் காணலாம்.


காட்டை நன்கு உணர்ந்த மனிதர்களால் இந்த காடு வலம் வரப்படுகிறது. பன்றி போட்டிருக்கும் விட்டையினுடைய சூட்டு தன்மையை பொறுத்து பன்றி எந்த வழியாக சென்றிருக்கும், பன்றி எவ்வளவு நேரத்திற்கு முன்பு சென்றிருக்கும், பன்றி நமக்கு அருகில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை எல்லாம் கணிக்க கூடிய நபர்கள் இந்த கதையில் வருகிறார்கள்.


நாவலில் ஒரு கட்டத்தில் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு சமயம் மிக சிறப்பாக இருந்தது. ஆனாலும் அந்த சமயத்திலும் அரண்மனை வாசிகள் அரண்மனை புத்தியை காட்டுபவர்கள் அடிமைகள் தங்களுடைய மனிதாபிமானத்தை காட்டுவார்கள்.


 மிக நல்ல வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்த எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ஒரு வனம் எப்படி இருக்கும் ஒரு வனத்தில் வேட்டையாடபடுகின்ற நிகழ்வு எப்படி இருக்கும், வேட்டையாடுவதில் தோல்வி ஏற்பட்டால் அந்த தோல்வி எப்பேர்ப்பட்ட விளைவை கொடுக்கும் போன்ற பல தகவல்கள் இந்த நாவலில் நிரம்பி இருக்கிறது.

ஒரு திரைப்படமாக எடுப்பதற்கு இந்த நாவல் மிகவும் பொருந்தி போகும். கதையை வாசிக்க வாசிக்க ஒரு சில பகுதிகளை காட்சிகளாக நம் கண் முன்னே விரித்து பார்க்கும்போது அவைகளை திரையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தோன்றுகிறது.


நாவலில் வரக்கூடிய ஒரு சில திருப்பங்கள் சற்றும் எதிர்பார்க்க முடியாததாக இருக்கிறது. அரண்மனையினால் ஊர் மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை இந்த நாவல் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


அனைவரும் வாசியுங்கள்

நன்றி

அன்புடன் வெ.கார்த்திக் வாசன்

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page