top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கதையாகும் தருணங்கள்.




ஒரு எழுத்தாளன் எங்கிருந்தெல்லாம் தனக்கான கதையை எடுத்துக் கொள்கிறான்?  ஒரு கதையைக் கண்டடையும் தருணம் என்பது திட்டமிட்டு நிகழ்கிறதா அல்லது தற்செயலாக நிகழக்கூடியதா? தொடர் வாசிப்பு, பயணம், வாழ்வனுபவம் இவையெல்லாம் தாண்டி வேறென்னவெல்லாம் ஒரு எழுத்தாளன் கதையைக் கண்டடையக் காரணமாய் இருக்கிறது.?  உம்பர்டோ ஈகோவின் கட்டுரைகள் அடங்கிய ‘நான் எப்படி எழுதுகிறேன்’ என்ற நூலை தமிழில் பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலில் ஈகோ தனது எழுத்து அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்.  முதலில் துவக்கப் பள்ளி காலத்தில்  கதைகள் எழுதியவர் பின்பு புனைவு எழுதுவதை நிறுத்திவிடுகிறார். கவிதைகள் கட்டுரைகள் என்று எழுதியவர்  தனது நாற்பத்தி ஆறாவது வயதில் முதல் நாவலான நேம் ஆஃப் த ரோஸை எழுதும் மனநிலைக்கு உந்துதல் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார்.


பொதுவாக எழுத்தாளர்களின் புனைவிலக்கிய பயணமென்பது அவர்களின் இருபதுகளில் துவங்கி தொடர்ந்து இயங்குவதாக இருக்கும். சிலர் நடுவில் சில காலம் இடைவெளி எடுத்துக்கொண்டாலும் அது இத்தனை நீண்டகாலத்திற்கானதாக இருப்பதில்லை. 


கதையாகும் தருணங்கள் குறித்த எனது கேள்வி நேம் ஆஃப் த ரோஸ் நாவலை எழுதுவதற்கான உந்துதலை ஈகோ எங்கிருந்து பெற்றிருப்பார் என யோசிக்க வைத்தது. வாழ்க்கை தந்த நெருக்கடிகள் தான் என அவரே குறிப்பிட்டிருந்தாலும் அது வெறுமனே வாழ்க்கை தந்த நெருக்கடியாக மட்டுமே இல்லையென நம்புகிறேன்.


புதிய ஊர்களுக்குப் பயணிக்கையில் அந்த ஊரின் வீதிகளை அறிந்துகொள்வதிலும் அந்த ஊரில் என்னவிதமான பெயர்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன என்பதைக் குறித்து தெரிந்துகொள்வதிலும் எனக்கு ஆர்வமுண்டு. பெரிதாக காரணமில்லை. பெரும் கூட்டமான வீதிகளில் கடந்து செல்லும் புதிய மனித முகங்களுக்கு நானே அந்தப் பெயரைச் சூட்டிப் பார்த்துக் கொள்வதும் நான் பார்த்த ஏதோ ஒரு வீதியில் எந்த வீட்டில் அந்த மனிதர் வாழலாமென கற்பனையாக நான் அந்த மனிதர்களுக்கு ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்ள முயல்வேன். அவர்கள் என்ன வேலை செய்யலாம், அவர்கள் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கலாம் என ஒரு முழுமையானதொரு வாழ்வை ஒரு துளியும் அறிமுகமில்லாத சில நொடிகள் மட்டுமே பார்த்த மனிதர்களைக் கொண்டு உருவாக்குவது தனிமையில் எனக்கு விருப்பமான விளையாட்டு.


எந்த  வயதில் துவங்கியதென நினைவில்லை. ஆனால் வீட்டை விட்டு ஓடிப்போன  சிறுவயதிலிருந்தே இந்தப் பழக்கம் இருப்பது நினைவிருக்கிறது. ரில்கேவின் கடிதத்தில் ஓரிடத்தில் ‘வேறு எதுவுமே உங்களுக்கு எழுதுவதற்காக இல்லாமல் போனாலும் பசுமையானதொரு பால்யம் இருக்கிறது. அந்த நினைவுகளை முழுமையாக மீட்டெழுதுங்கள் என்று குறிப்பிடுகிறார். அப்படி பால்யத்தைத் திரும்பிப் பார்க்கையில் நான் கதைகளை கண்டடையும் முக்கியமானப் புள்ளியாக இந்த விளையாட்டையே பார்க்கிறேன். இங்கு இன்னொரு வசதியும் உண்டு. கற்பனையாகும் உருவாக்கும் இந்த சிறிய வாழ்வில்  அந்தக் கதாப்பாத்திரங்களுக்குள் வாழ்வதெல்லாம் நானாகவே இருக்கமுடிகிறது. ஒவ்வொரு கதைக்குள்ளும் வெவ்வேறு வாழ்க்கை.. எத்தனை விதமான வாழ்க்கை? எத்தனைவிதமான காதல்? எத்தனை விதமான புணர்ச்சி? எத்தனை விதமான ஞானம்? இந்த சாகசமே மீண்டும் மீண்டும் எழுதுவதற்கான உந்துதலைத் தருகிறது.


நான் உருவாக்கிக் கொண்ட இந்த விளையாட்டைப் போல் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கென பிரத்யேகமாக விளையாட்டுகளை வைத்திருக்கலாம். வாழ்விலிருந்துதான் கதை  எழுத வேண்டுமென்றால் இந்த பூஞ்சையான வாழ்க்கையை அதைவிடவும் பூஞ்சையாக நாம் மீண்டும் மீண்டும் பதிவு செய்வதில் என்ன சாகசமிருக்கிறது.  தன் முதுகைப் பார்த்துக்கொள்ள விரும்பாத சுவற்றின் நிழலைப்போல வாழ்க்கை எதையும் திரும்பிப் பார்க்க விரும்புவதில்லை.  பெரும் கடிகாரம் ஒன்றின் முள்ளைப்போல் சலிப்பாக அது ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒரே கடிகாரம் தான் அதே புள்ளிகள் தான். உறைந்து நிற்கும் காலத்தின் முன்னால் நாம் வாழ்வை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இதில் நீங்கள் கதையாக்கக் கூடிய தருணங்கள் என்பவை அபூர்வமானவையே…  ஒரு அபூர்வ தருணத்தில் நாம் என்ன எதிர்வினையாற்றுகிறோம் என்பதல்ல எதை உற்றுநோக்குகிறோம் என்பதே அந்த தருணத்தைப் புனைவாக்கும் சாத்தியத்தைத் தருகிறது.  


எழுதுவதை கூலிக்கு மாரடிக்கும் வேலையாக மாற்றிவிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில் எல்லாவற்றையும் உற்றுநோக்குவதற்கான அவகாசமற்றவனாய் ஒரு கலைஞன் உருமாறுவது துரதிர்ஸ்டவசமானது.  ஆடு புழுக்கைகளை வெளியேற்றுவதுபோல் ஒவ்வொரு வருடமும் சில புத்தகங்களை வெளியிட வேண்டுமென்கிற நெருக்கடியை யார் உருவாக்கியது?


ஒருபுறம் புத்தக வியாபாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை  மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயிர்மை போன்ற பிரபல பதிப்பகங்களின் நிலையே இதுதான் என்றால் உதிரியான பதிப்பகங்களை என்ன சொல்ல? இன்னொரு புறம் தொடர்ந்து நிறைய  நூல் வெளியிட வேண்டுமென்கிற வேட்கையும் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இணையத்தில் பார்த்த படிக்கிற எல்லாவற்றையும் அங்கங்கு இடம் மாற்றி தமிழில் மொழிபெயர்த்து மாதத்திற்கு இரண்டு புத்தகங்கள் வெளியிடுவதன் வழியாக இந்த மொழிக்கு என்னவிதமான பங்களிப்பை ஒருவர் செய்துவிட முடியும்?


நம்மைவிட சிறிய மக்கள்தொகை கொண்ட மொழிகளில் இருந்தெல்லாம் சிறந்த படைப்புகளும் படைப்பாளர்களும் வரும்போது இங்கு ஏன் அது நிகழ்வதில்லை என்கிற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அங்கு கூலிக்கு மாரடிக்கும் இதுபோன்ற வியாபார தந்திரங்களை அவர்கள் அறவே தவிர்க்கிறார்கள் என்பதுதான் முக்கியக் காரணம்.


காலம் வெகுமதியானது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதென்கிற கார்ப்ரேட் ஊக்கமொழிகளை எழுத்தாளர்களும் இன்றைக்கு மேடைகள் தோறும் பேசுவதையும் தொடர்ந்து எழுதுவதையும் கவனிக்கையில்  ஓடுவதுதான் முக்கியமென முன்னிறுத்துப்படுகிற இடத்தில் கலையைக் கற்றுக்கொள்வதற்கான இடமென்ன? எல்லாவற்றையும் இன்ஸ்டண்ட்டாக வாங்கிவிடுவதுபோல் கலையையும் வருங்காலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட்டுகளில் வாங்கிக் கொள்ளலாமா? காத்திருக்காத ஒருவனுக்கு கலை எப்படி வசப்படும்?  


நல்ல படைப்பு மோசமான படைப்பு என்கிற விவாதத்திற்குள் எல்லாம் செல்லாமல் ஒரு படைப்பிற்கான காத்திருப்பை மட்டுமே நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லாவற்றையும் செய்யமுடியுமென்றால் அங்கு சிந்தனைக்கு என்ன வேலை.


சக்கரத்தைக் கண்டுபிடித்ததற்குப் பிறகு மனிதன் வேகமாக இடம்பெயரத் துவங்கினான் என்பது மனித பரிணாமத்தில் முக்கியமானதென்றால் அந்த சக்கரத்தை உருவாக்க அவன் எத்தனை காலம் காத்திருந்தான் என்பது அதனைவிடவும் முக்கியமானதில்லையா? நீங்கள் ஒரு கதையை எழுதுகிறீர்கள், அது சரியாக வரவில்லை, மீண்டும் இன்னொரு கதையை எழுதுகிறீர்கள், அதுவும் சரியாக வரவில்லை, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் அன்றைக்கு என்ன ட்ரெண்டிங்கில் உள்ளதோ  அதனை எழுதுகிறீர்கள் அது பாராட்டப்படுகிறது. இப்பொழுது உங்கள் முன்னால் ஒரு குழப்பம் வருகிறது. நாம் காத்திருந்து எழுதிய கதைகள் தோல்வியடைய விளையாட்டாய் எழுதிய கதைகள் எல்லோராலும் வாசிக்கப்படுகிறது இனி நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது? இந்த இடத்திலிருந்தே நீங்கள் கதைக்கான தருணத்தை கைவிடுகிறீர்கள். அதன்பிறகு உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் செய்திகள் மட்டுந்தான்.


செய்திகளை கதையாக்க முடியாதா?  ஆக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு காத்திருப்பம் மெனக்கெடலும் தேவையானதாக இருக்கிறது. குற்றமும் தண்டனையும் என்னும் பெருநாவல் அன்றைய பீட்டர்ஸ்பர்க் நகரின் செய்தித் தாள்களில் வெளியான செய்திகளிலிருந்து உந்துதல் பெற்ற நாவல் தான். ஆனால் வெறும் செய்தி என்பதைத் தாண்டி தஸ்தாவ்ஸ்கி என்னும் கலைஞன் அன்றைக்கிருந்த வட்டிக்காரர்களின் கொடுமைகளையும் கடன் வாங்கி சீரழிந்த மக்களையும் உள்ளார்ந்து அறிந்துகொண்டதன் வழியாகவே குற்றமும் தண்டனையும் உருவானது.

நீங்கள் உங்கள் கதையைக் கண்டடையும் வழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் கொஞ்சம் காத்திருங்கள்.  ஒரு செய்தியோ நிகழ்வோ அதன் தருணத்தில் வாழ்ந்து பாருங்கள். முழுமையாக  ஒப்புக்கொடுங்கள். உங்கள் கதையின் வெற்றி தோல்விகளை  தீர்மானிக்கப் போவது வாசகர்களோ பிரபலத்தன்மையோ அல்ல, காலம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

271 views
bottom of page