சந்தோஷ் எச்சிக்கானத்தின் ‘பிரியாணி’
- லக்ஷ்மி சரவணகுமார்

- 12 minutes ago
- 4 min read
“Close to a billion people – one-eighth of the world’s population – still live in hunger. Each year 2 million children die through malnutrition. This is happening at a time when doctors in Britain are warning of the spread of obesity. We are eating too much while others starve.” – Jonathan Sacks

இந்த நூற்றாண்டின் மாபெரும் முரண் யாதெனில் ஒரு புறம் பசியின் கொடுமையால் ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறட்து. இன்னொரு புறம் வளர்ந்த நாடுகளில் மிதமிஞ்சிய உணவுப் பழக்கங்கள் காரணமாக புதிய நோய்கள் உருவாகின்றன. முதலாளித்துவத்தில், பசி என்பது தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த முதலாளிகளால் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம். இது அவர்களைக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய நிர்பந்திக்கிறது, இதனால் தொழிலாளர் ஒழுக்கம் உறுதி செய்யப்படுகிறது. என காரல் மார்க்ஸ் குறிப்பிடுவது எல்லா நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடிய உண்மையாக இருக்கிறது.
நாம் வசிக்கும் இந்த தேசம் இரண்டு தேசங்களாக இருக்கிறது. எப்படி வளர்ந்த நாடுகளில் மிதமிஞ்சிய உணவுப் பழக்கம் ஒரு பிரச்சனையாக இருக்கிறதோ அப்படி இங்கே ஒரு வர்க்கத்தினர் மிதமிஞ்சி எல்லாவற்றையும் நுகர்பவர்களாகவும் இன்னொரு வர்க்கத்தினர் தமது ஒரு வேளை உணவுக்கு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து ஏதிலிகளாக உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படி ஏதிலிகளாக இடம் பெயர்கிறவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் ஏராளம். யாரோ எங்கோ செய்யும் குற்றங்களுக்கெல்லாம் எல்லோரின் விரல்களும் முதலில் நீள்வது இவர்களை நோக்கித்தான். அதிகார வர்க்கமும், ஊடகங்களும் தங்களது சந்தேகப் பார்வைகளை இவர்களின் மீது நிரந்தரமாக வைத்திருப்பதால் தமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்குக் கூட பலசமயங்களில் இவர்களால் முடியாமல் போகிறது.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அரசியல் புலத்தில் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில் வடக்கிலிருந்து தெற்கை நோக்கை இடம் பெயர்ந்தவர்களே அதிகம். வறுமை, இனக்குழுப் போராட்டங்கள், சமநிலையற்ற அரசியல் சூழல் என ஏராளமான காரணங்களால் அடிப்படை வசதிகளே இல்லாமல் பல்லாண்டுகளாக போராடியவர்கள் தப்பித்தால் போதுமென்கிற நெருக்கடிகளோடு ரயிலேறி விடுகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் உழைப்புக் கூலிகளாக வந்திருக்கும் இட இந்தியர்களைக் கணக்கெடுத்தால் ஒரு கோடி பேருக்கும் குறையாமல் இருப்பார்கள். இந்திய விடுதலையின் போது நிகழ்ந்த இடப்பெயர்ச்சியை விடவும் பிரம்மாண்டமானது இது. இந்த இடப்பெயர்ச்சி பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பெரும் விளைவுகளை இன்னும் சில வருடங்களில் உருவாக்கக் கூடும்.
சந்தோஷ் எச்சிக்கானத்தின் பிரியாணி என்னும் இந்தக் கதையை நான் நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். நான் அடிக்கடி வாசிப்பதுமுண்டு.
யதார்த்தவாத கதைகள் காலாவதியாகிவிட்டன என்றொரு நம்பிக்கை பொதுவாக இலக்கியப் புலத்தில் உண்டு. அந்த நம்பிக்கைகளை பொய்யாக்கும்படியான கதையிது. உலகம் முழுமைக்கும் பொருந்திப் போகக் கூடிய அடிப்படையான பிரச்சனையைப் பேசக்கூடிய இந்தக் கதை நேரடியான மொழியில் சொல்லப்பட்டுள்ளது. மிகக் குறைவான விவரணைகள், கதைக்கு துளியும் அலங்கார தோரணை வந்துவிடாத அளவிற்கு அந்த விவரணைகளும் ஓரிரு இடங்களில் மட்டுமே வருகின்றன. கதையின் ஆதாரப் பிரச்சனை இதுதான் என்பதை அதன் இறுதிப் பகுதி வரை வெளிப்படுத்தாமல் கதாப்பாத்திரங்களின் வழியாக வெவ்வேறு யூகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இறுதிப் பகுதியில் கதையின் முரணை நாம் தெரிந்துகொள்ளும் போது நமக்குள் ஏதோவொன்று வெடித்துச் சிதறிவிடுகிறது.
வெளிநாட்டில் பல்லாண்டுகாலம் தொழில் செய்து சம்பாதித்த செல்வாக்கான ஹாஜியார் வீட்டு விசேஷம். அந்த வீட்டின் பிரம்மாண்டம் செல்வ செழிப்பு எல்லாம் சொல்லப்பட்டு சடாரெனத் திரும்பி ராமச்சந்திரன் என்கிற லேபர் ஏஜெண்ட் ஒருவர் நமக்கு அறிமுகமாகிறார். அவரது வாழ்க்கை இடப்பெயர்வால் என்னவாகியிருக்கிறது என்பதை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளும் முன்பாகவே கோபால் யாதாவ் கதைக்குள் வந்துவிடுகிறார்.

ஹாஜியாரின் உறவினர் அசன் பாய் ராமச்சந்திரனிடம் சொல்கிறான். பஞ்சாபிலிருந்து இந்த நிகழ்விற்காக ஒரு லோட் பாசுமதி அரிசு வந்திருக்கிறதென.. ஊர்க்காரர்கள் ஆச்சர்யப்பட்டதைப் போலவே லேபர் ஏஜெண்டும் ஆச்சர்யப்படுகிறான். பல கோடிகள் செலவு செய்து நடக்கும் அந்த திருமண வரவேற்பில் சிறிய வேலையொன்றிற்காக கோபால் யாதவ் அழைக்கப்படுகிறார். அசனார் அவரிடம் நூறு ரூபாய் சம்பளம் குறைத்துப் பேரம் பேசும் போது கோபால் யாதவைப் போலவே நமக்கும் ஏமாற்றமாக இருக்கிறது.
கோபால் யாதவும் அசனாரும் உரையாடிக் கொள்வதன் வழியாக நமக்கு கோபால் யாதவ் குறித்த விவரங்கள் கிடைக்கின்றன. பீஹாரில் ஒரு சிறிய கிராமத்தில் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தினமும் நூற்றி இருபது கிலோ நிலக்கரி மூட்டையை சைக்கிளில் தள்ளியபடி நாற்பது கிலோமீட்டர் நடப்பதுதான் கோபாலின் வேலை. அந்த வேலைக்கு வரும் கூலியில் கமிஷன், ரவுடி கட்டிங், போலிஸ் கட்டிங் எல்லாம் போக அவருக்கு மிஞ்சுவது பத்து ரூபாய். அவரது குடும்பத்திற்கு பசி நிரந்த விருந்தாளி. வீடுவரை பசி தாங்கமுடியாமல் கோபாலின் மனைவி சமைக்க வாங்கிய அரிசியை மென்றபடியே அவரோடு பயணிப்பதை எழுதியிருக்கும் இடம் மகத்தானது. ப்ரேம் சந்தின் கதையொன்றை வாசித்ததுபோல் அழுத்தமான வலியைக் கொடுத்தது. அவரது கதையைக் கேட்டபின் அசனார்’அங்க அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிட்டு இங்க இரநூத்தம்பது ரூவா பத்தலன்னு சொல்றியா? எனக் கேட்கிறார். இந்த ஆளிடம் நமது கஷ்டங்களைச் சொல்லி இருக்கக் கூடாதென ஏமாற்றத்தோடு கோபால் தலை குனிந்துகொள்கிறார்.
‘நமது வறுமையையும் பசியையும் இன்னொருவரிடம் பகிரும் போது எதிரிலிருப்பவரும் இதில் ஒரு துளியேனும் தெரிந்திருக்க வேண்டும், அல்லது அனுபவித்திருக்க வேண்டும். இல்லாது போனால் நாம் கோமாளியாகிவிடுவோம்’ என கதைசொல்லியின் பார்வையில் வரும் வரிகள் சமூக அடுக்குகள் குறித்த பெரும் படிப்பினையை நமக்குத் தருகிறது.
மலையாளிக்கு 600, தமிழனுக்கு 500, பீஹார்காரனுக்கு 250 இதுதான் இங்க முடி செஞ்சிருக்கற கூலி. இதையெல்லாம் மாத்த முடியாது என அசனால் கோபாலிடம் சொல்வது புலம் பெயர் தொழிலாளர்களின் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களுக்கான ஒரு சிறிய உதாரணம். அடிப்படை வசதிகளோ, பணி பாதுகாப்போ இல்லாமல் குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் இவர்களை ஒரு சமூகம் குற்றவாளிகளாகப் பார்க்குமானால் அதன் கையாலாகாத்தனத்தை என்னவென்று சொல்வது?
ஹாஜியாரின் வீட்டைக் குறித்த விவரணைகளில் வாசலிலிருந்து வீட்டுக்கு நடுவில் பெரும் தூரம் இருக்கிறது, அங்கு நான்காயிரம் பேர் கூடியிருக்கலாம் என்று சொல்லப்படும்போது அந்த வீட்டின் பிரம்மாண்டம் எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கோபால் கண்கள் விரிய அந்த வீட்டைப் பார்த்தபடி என்ன வேலையெனக் கேட்கிறார். ஒருவன் மண்வெட்டியையும் கடப்பாரையையும் கொடுத்து குழி தோண்ட வேண்டும் என்கிறான். தென்னை மரங்கள் நிரம்பிய ஓரிடத்தில் குழி தோண்டுவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் கோபாலைக் கண்கானிக்க ஒரு இளைஞன் வருகிறான். குழி எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சொல்லிவிட்டுச் செல்கிறான். காலையில் எடுத்துக் கொண்டு ஒரு வாய் உணவு வியர்வையாய் வெளியேறி பசியோடு குழி வெட்டி முடிக்கிறார். அந்த இளைஞன் வேலை எவ்வளவு தூரம் முடிந்திருக்கிறது எனப் பார்க்க வருகிறான். கோபாலிடம் அவர் எந்த ஊர் இங்கு வந்தது எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என விசாரிக்கிறான். அவரது ஊரை கூகிளில் தேடுகிறவன் அந்த ஊர் தற்போது பீஹாரில் இல்லை ஜார்கண்டில் இருக்கிறது என்பதைச் சொல்லும்போது கோபாலால் அதனை நம்ப முடியவில்லை. தன்னைப்போலவே தனது ஊரும் பீஹாரை விட்டு வெளியேறி விட்டது போல என நினைத்துக் கொள்கிறார்.
தங்களைப் போலவே பீஹாரிலிருந்தும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளியேறி விட்ட ஏராளமான மக்களை நினைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். பிழைப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியேறுகிறவனுக்குத் திரும்பி வரும்போது ஊரே இருப்பதில்லை என்றானால் அவன் எதற்காக திரும்ப வேண்டும். பழங்குடிகள் காடுகளிலிருந்து துரத்தப்பட்டபின் எல்லா நிலமுமே அவர்களுக்கு அந்நியமானதுதான். தலைக்கு மேல் வானமும் காலுக்குக் கீழ் பூமியும் மட்டுமே சொந்தமாகக் கொண்ட இம்மக்கள் தமது நிலங்களிலிருந்து நினைவுகளை மட்டுமே எடுத்துச் செல்கிறார்கள். அந்த நினைவுகளில் மகிழ்ச்சி சிறிதளவும் துயரங்கள் பெருமளவும் இருக்கின்றன. இலக்கியங்கள் சொல்வது போல் பொற்காலமென ஒன்று எந்த நிலத்திலும் எப்போதும் இருந்ததில்லை. நாம் அப்படி ஒன்று இருந்ததென நம்புகிறோம், அல்லது அப்படியொரு காலம் வருமென லட்சிய வேட்கை கொண்டிருக்கிறோம். ஏதிலிகளுக்கு கடந்தகாலமும் எதிர்காலமும் இல்லை.
குழியைத் தோண்டி முடித்த கோபால் யாதவ் அடுத்து என்ன செய்ய வேண்டுமெனக் கேட்கிறபோது இரண்டு பெரிய பேரல்களில் எச்சில் பிரியாணியைக் கொண்டு வந்து அந்தக் குழியில் கொட்டுகிறார்கள். பஞ்சாபிலிருந்து வந்த பாசுமதி அரிசி, வெளிநாடுகளிலிருந்து வந்த சமையல்காரர்கள் சமைத்த சுவையான உணவு. ஆனாலும் அங்கு மிஞ்சிப் போனவை. தனக்கு முன்னால் கொட்டப்பட்டதை எல்லாம் கோபால் நம்ப முடியாமல் பார்த்தபடி நிற்கிறார். ஹாஜியாரின் உறவினர் ‘அதுல நல்லா ஏறி மிதி பாய் என்கிறான். தயக்கத்தோடு கோபால் அந்த பிரியாணியின் மீது ஏறி மிதித்து அமுக்குகிறார். ‘ஒனக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னியே? என்ன செய்யுது? என அந்த இளைஞன் விசாரிக்க ‘செத்துப் போச்சு என்கிறார். ‘அடடா.. .எப்பிடி? என அவன் சாதாரணமாகக் கேட்க மண்ணைவாரி அந்தக் குழியை மூடியபடியே பசியில் என்கிறார் கோபால்.
கதாப்பாத்திரங்களின் இயல்பை மீறி எதுவும் நடந்துவிடவில்லை. கதை சொல்லி பசியிலிருந்து விடுதலை வேண்டுமென பிரச்சாரம் செய்யவில்லை. ஆனாலும் கூரிய வாளொன்றால் நம் இதயத்தைக் கிழிக்கிறது. இந்தக் கதை வாசித்தபின் ஒவ்வொரு முறை பிரியாணியைச் சாப்பிடும் போதும் பல பேரின் பசியும் ஒட்டிய வயிறுகளும் உங்களுக்கு நினைவுக்கு வரும்.



