top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

லஷ்மி சரவணகுமாரின் "ரூஹ்" புத்தகம் பற்றிய அறிமுகம் / அஹமத்



ஓய்ந்து போன ஓர் புயலின் முடிவில் எஞ்சியிருக்கும் கனத்த மௌனத்தை தாங்கிய மாலைப் பொழுதில் தான் ரூஹ் எனும் இந்நாவலை வாசிக்க தொடங்கினேன். ரூஹை எங்கிருந்து தொடங்குவது, யாரிடமிருந்து தொடங்குவது அல்லது யாரிடமிருந்து தொடர்வது, யாருக்கு கடத்துவது என்ற கேள்விகள் மூலம் ஜன்னத்தின் ஸ்பரிசம் மிக்க கரங்களை பிடித்தவாறு ஒருவாறாக மாறியிருந்த ஜோதியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த ராபியைப் போலவே பேச வார்த்தைகளற்று நிற்கிறேன்.


மனிதர்களின் கசடுகளை எப்போதுமே சுமந்து நிற்கும் நிலத்தை கடல் என்றைக்குமே விமர்சனத்தோடுதான் நோக்குகிறது. நிலப்பரப்பின் அதீத பாவங்களுக்காகத்தான் கடல் அவர்களை அணுகுவதில்லை.., மாறாக ஆர்ப்பரிக்கிறது. இக்கதையில் வரும் அஹ்மதும், ஜோதியும் தங்களது அவமானங்களை, வலிகளை, இயலாமைகளை, பேராசைகளை, தீர்த்துவிட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் பட்ட கடன்களை எல்லாவற்றையும் இந்நிலப்பரப்பிலிருந்து விலகி கடலுக்குத்தான் ஒப்புக் கொடுத்தார்கள். கடலின் உப்பிற்கு எல்லாவற்றையும் கரைக்கும் அதீத திறன் இருக்கிறது.


அவை எந்தபாரபட்சமும் இன்றி அவற்றை கரைத்து அஹமதை போல , ஜோதியைப் போல கரைத்து காற்றில் இரண்டறக் கலக்க வைத்துவிடுகிறது..

எனக்கும் நீருக்குமான தொடர்பு அல்லது பரிச்சயம் என் சிறு பிராயத்திலிருந்தே தொடங்கிய ஒன்று. அவை எனை கழுவி சுத்தப்படுத்தியிருக்கிறது. என் உயிரின் கடைசிக்கு முந்தைய மூச்சை இந்நீர் அறியும். மற்றொரு முறை கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த என்னை பலவந்தமாக பிடித்து தள்ளியதும் இந்நீர்தான். என் அவமானங்களை , வலிகளை, கஷ்டங்களை , இயலாமைகளை எல்லாம் இந்நீரோடும், பின் இரவின் பிரார்த்தனைகளோடு மட்டுமே நான் பகிர்ந்திருக்கிறேன்.


பிரார்த்தனைகளின் போதோ, நீருக்கு அடியிலோ எனது புலம்பல்கள் அரங்கேறும் போது பின் இரவின் இருளில் கருணையெனும் சிறகு எனை அணைத்துக் கொள்வதாய் உணர்ந்து கொள்வேன். நீரின் அடியில் புனித மிக்க ஓர் ஊற்று பீறிடெத்து எனை கழுவி விடுவதாய் நினைத்துக் கொள்வேன். அதன் பின்பான தீர்க்கமான அமைதியை மிகவும் நேசிக்க துவங்குவேன். இப்படித்தான் நீரும்.., நானும்.


பெரும் வலிகளோடு வரும் மனிதர்களுக்கு ராபியா தனது கரங்களை அவர்களது தலையின் மேல் வைத்து பிரார்த்திக்கும் போது ஜோதிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

மாலுமியான அஹ்மதின் சாகசங்களும், நேர்த்தியான பயணங்களும், முதிர்ந்த அனுபவங்களும் எனக்கு Road to Makkah எனும் நூலில் அதன் ஆசிரியர் லியோ போல்டுவில் எனும் முஹம்மது அஸதை நினைவுக்கு கொண்டு வந்தன.


ஞானிகளுக்கு பாக்தாதின் கலீபா அளித்த பட்டுத் துணிகளால் ஆன மரப்பேழையில் வைக்கப்பட்ட பொக்கிஷம் போல இக்கதையில் சில பொக்கிஷங்கள் உண்டு. அதனை பொக்கிஷமாகவே கருதி கடந்துவிட வேண்டும். ஜோதியைப் போல.., சிலபோது அன்வரைப் போல அல்லது அந்த ஆங்ரே கனோஜியைப் போல பலவந்தமாக திறந்து பார்க்க வேண்டுமென அடம்பிடித்தால் அது உங்களை வேறொரு மீள முடியாத துயரங்களுக்குள் அழைத்துச் செல்லும்.


ரூஹ் எனும் இந்நாவலின் முற்றுமுழுதான சிறப்பே பேரன்பு ஒன்றுதான். நிபந்தனைகளற்ற அப்பேரன்பு, நவீன அன்பின் வரையறுக்குள் அடக்கவே முடியாத ஓர் பேரன்பு, ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஓர் பேரன்பு. அது ராபியாவிலிருந்தே வெளிப்படுகிறது. ராபியா யார் என நீங்கள் வினவினால் அவள் ஒருவேளை பாதுஷா நாயகத்தின் பிரதிநியாக இருக்கலாம்.., அல்லது ராபியாவே கூட கருணையை படைத்து கருணை எனும் சிறகின் மூலம் உலக மக்களை அனைத்து கொள்ளும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லா வல்ல இறைவனின் பிரதிநிதியாக கூட இருக்கலாம். அன்பை பரிசளிக்கிற ஓர் ஆன்மாவைப் பற்றித்தான் ரூஹ் முழுக்க பேசுகிறது.


"ரூஹ்" தரும் அன்பு என்பதை அடைவதற்கான நெடும்பயணம் என்பது ரம்மியமானது. கட்டையனின் வழித்தடத்தை பிடித்து காடுகளுக்குள் பயணித்த ஓர் இரவு பயணித்தை பற்றி மட்டுமல்ல நான் குறிப்பிடுவது. பெருத்த அவமானங்களோடு, இழப்புகளோடு, இயலாமைகளோடு கால்கள் ஓடாய் தேய்ந்து , அலைந்து திரிந்து, வருத்திக் கொண்டு, உலகம் எனும் அற்பத்தை மறந்து சூரியன் மறையத் தொடங்கும் ஓர் மாலை வேளையில் கடலில் கரைந்து விடுகின்ற பொழுது கடலோடு சேர்ந்து நிலமும், வானும் நட்சத்திரங்களும், மீன்களும், நிலவும் சேர்ந்து ஒளிர்கின்ற பச்சை நிறம் தான் ரூஹ்.. அந்த பசுமையான நிறம் தான் ரூஹ்.


ரூஹின் ஆசிரியர் லஷ்மி சரவணகுமாரை கொமேரா நாவலின் வழியாக சிறிய அறிமுகம் உண்டு. கொமேரா உண்டுபண்ணிய , பேசிய , காட்சிப்படுத்திய மனிதர்களும், ஆன்மாக்களும், வலிகளும் வேறொரு தளம். அதனிலிருந்து அப்படியே ரூஹை அதுவும் இஸ்லாமிய கதைகளங்களை அவரால் எப்படி வரைய முடிந்தது என ஆச்சர்யபட்டு நிற்கிறேன். லஷ்மி சரவணக்குமாரின் தேடலும், முயற்சியும், இலக்கிய படைப்புகளையும் வெற்றியடைய வாழ்த்துக்களோடு பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன்.


"ரூஹிற்காக " உடன் இருந்து உழைத்த லஃபீஸ் நானா, நிஷா மன்சூர், அர்ஷியா உள்ளிட்ட தோழர் குழுமத்திற்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பேரன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் : ரூஹ்�ஆசிரியர் : லஷ்மி சரவணக்குமார்�பக்கங்கள் :189�விலை : ₹ 250�பதிப்பகம் : ஜீரோ டிகிரி பதிப்பகம்

7 views
bottom of page